கதாபாத்திரங்களின் கலைடாஸ்கோப் – சார்பட்டா

-ஸ்டாலின் சரவணன்

தமிழ்த் திரைப்படங்களில் தியாகம், கோபம், வைராக்கியம், கண்டிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களே அதிகம். பெரும்பாலான படங்களில் ஒன்றிரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே கவனத்தைக் கோரும். கே.பாலச்சந்தரின் பெண் கதாபாத்திரங்கள் தனித்துவமான புதிரானவையாக அமைந்து இன்றளவும் விவாதிக்கப்படுகின்றன. பராசக்தி, உதிரிப் பூக்கள், முள்ளும் மலரும் போன்ற படங்களில் வந்த வலுவான ஆண் கதாபாத்திரங்கள் காலம் கடந்து வாழ்கின்றன. ஆனால் ஒரு திரைப்படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களுமே கவனத்தைக் கோரக்கூடிய வகையில் திரைக்கதையை அமைப்பதில் மெட்ராஸ் திரைப்படத்தில் காட்டிய முனைப்புக்கு மேல் சார்பட்டாவில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். சிறு கதாபாத்திரங்கள்கூட மனதில் தங்கிவிடும் ஆச்சரியத்தை வெகு அழகாகத் திரையில் நிகழ்த்தியுள்ளார்.

எம்.குமரன், பூலோகம் போன்ற திரைப்படங்களில் குத்துச்சண்டையின் மையம் நாயக வழிபாட்டோடு அணுகப்பட்டது. அதே விளையாட்டை நில, இன வரைவியலோடு சார்பட்டா மிகநுட்பமாகத் தந்துள்ளது. ஆங்கிலேயர்கள் மூலமாக அறிமுகமான இந்த பாக்சிங் விளையாட்டு சென்னையின் எளிய மக்களோடு கலந்துபோன வரலாற்றை, சார்பட்டா, இடியப்ப பரம்பரைகளுக்குள் காலம் காலமாக இருந்த பகைமிகுந்த கதையின் வழி இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

சாதி, வர்க்கம், அரசியல், சமூக வாழ்க்கை எனப் பல்வேறு இழைகளைக் கொண்ட கதை. வர்க்கம் மிகக் குறைவாகவே பேசப்படும் இத்திரைப்படத்தில் சாதிய இழைகளும் மேலோட்டமாகவே பேசப்பட்டுள்ளன. ஆனாலும் அது கதையின் மையத்தில் வருவதால் முக்கியமானதாகவே இருக்கிறது. சமூகத்தில் சாதிய ரீதியாகப் பின் தங்கி இருக்கும் நாயகனுக்கு இந்த விளையாட்டு என்ன தருகிறது என்பதையும், அவன் முன்னேறுவதற்கு இருக்கும் தடைகளையும்தொட்டுக் காட்டியிருக்கிறது திரைக்கதை.
படம் முழுவதும் குத்துச்சண்டையை முன்னிறுத்தியே நகர்கிறது. ஒரு விளையாட்டை அதன் நுணுக்கங்கள் சிதையாமல் காட்டியுள்ள பொறுப்புணர்ச்சிதான் படத்தை மிளிர வைக்கிறது. இம்மி பிசகாத பாதையில் படத்தை இயக்குநர் வழிநடத்தியுள்ளார். இறுதியில் கதாநாயகன் தான் வெல்லப்போகிறான் என்பது, பார்வையாளர்களுக்குத் தெரிந்தே இருந்தாலும் அவர்களின் சுவாரஸ்யம் குறையாத வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நேரடியான எதிர்மறைக் கதாபாத்திரங்கள் இல்லை எனலாம். இரு பரம்பரைகளுக்கிடையே விளையாட்டில் இருக்கும் பகை, அதன் ஊடாக சார்பட்டா பரம்பரைக்குள்ளேயே விரவி இருக்கும் உள் அரசியல் இவைகளே படத்தை வழிநடத்துகின்றன.


பொதுவாக ரஞ்சித் படங்களில் வலிமையானவையாகவும் தனித்துவத்துடனும் வடிவமைக்கப்படும் பெண் கதாபாத்திரங்கள் இந்தத் திரைப்படத்தில் அவ்வளவாக இல்லை. எழுபதுகளின் காலகட்டத்திற்கு ஏற்ப அவை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் பல படிகள் சறுக்கலாகவே அவை தெரிகின்றன. "பரம்பரைக்குள் ஏண்டா மானத்தைக் கொண்டுபோய் வெக்கிறீங்க?" என்று மாரியம்மா கேட்கும் கேள்வி முக்கியமானது, அது பல விஷயங்களுக்கு பதிலாகவும் அமைகிறது. ஆனால் இதுபோன்ற சில வசனங்கள், காட்சிகள் தவிர பெரும்பாலும் ஆண்மைய சிந்தனைக்குள் மாட்டிக்கொண்ட பெண்களாகவே அவர்கள் இருக்கின்றனர். ஆணுக்காக உருகுவதும் காத்திருப்பதுமான வழமையான மனநிலையை வெளிப்படுத்துகின்றனர்.

மாரியம்மா கேட்கும் கேள்வியை சற்று நிதானித்து யோசித்தால், பரம்பரை மானம், வென்ற பெருமிதம், பந்தயத்துக்கு வராதவன் கோழை, ஜெயித்தவன் வீரன் போன்ற கற்பிதங்களால் ஆண்கள் தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபட்டு வாழ்வையே சிதைத்துக் கொள்கின்றனர் என்றும், அதற்கான விலையைப் பெண்கள்தான் தரவேண்டியிருக்கிறது என்பதும் புரிய வருகிறது. மாடு பிடித்தலில் கிராமங்களில் நிலவும் வெற்று கௌரவங்களையும் போலிப் பெருமிதங்களையும் போலவேதான் இவையும் அமைந்துள்ளன. கிராமத்திற்கு பதிலாக நகரம் களமாகிறது. மாட்டுக்கு பதிலாக மனிதன் தன்னைத்தானே மூக்கணாங்கயிறோடு களம் இறக்கிக்கொள்கிறான். ஆண்மையச் சிந்தனை சண்டையை வழிநடத்துகிறது.

சண்டைக்காக வீரர்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்கின்றனர், குடும்பங்கள் சிதறுண்டு போகின்றன. ஏற்கனவே இதனால் கணவனை இழந்த பாக்கியம் எச்சரித்தது போலவே கபிலனும் விளையாட்டின்வழியாக வன்முறைக்குள்ளும் போதைக்குள்ளும் நுழைந்துவிடுகிறான். கபிலனின் அம்மாவாக வரும் பாக்கியம் எப்போதும் சிலுவையும் கையுமாகவே இருக்கிறாள். கணவன் போன பாதையில் மகன் போய்விடக்கூடாது என்று தொடர்ந்து பிரார்த்திக்கிறாள். ஒருகட்டத்தில் பாக்கியமே அவனை விளையாட்டுக்குள் நுழைய உற்சாகப்படுத்துகிறாள். போதையிலிருந்து விடுபட்டுத் தன் அடையாளத்தை மகன் மீட்டெடுக்க ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேண்டும். அதற்குக் கடுமையான ஒழுக்கத்தைக் கோரும் குத்துச்சண்டை ஒரு நல்ல பாதையாக இருக்கும் என்று அவள் நினைத்திருக்கலாம்.

குரு-சீடன் உறவு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏகலைவனாக மறைந்திருந்து ரங்கன் வாத்தியாரிடம் இருந்து குத்துச் சண்டையைக் கற்றுக் கொள்கிறான் நாயகன். அந்த சண்டை அவனுடைய அப்பாவிடமிருந்து இயல்பாகவேகூட அவனை வந்தடைந்திருக்கலாம். குரு-சீடன் உறவு ஒரு கட்டத்தில் தந்தை-மகன் உறவாக மாறுகிறது. கபிலன் கல்யாணத்தில் தாலி எடுத்துத் தரும் ரங்கன், மெல்ல அவன் வாழ்வுக்குள் தன் இடத்தில் வந்து அமர்கிறார். பாக்சிங் வளையத்தில் கபிலன் சோர்ந்துபோகும்போதும் கைகள் முறிந்து தடுமாறும்போதும் அவனைத் தூக்கி நிறுத்தும் ரங்கன், சீடன் என்பதையும் தாண்டி ஆதுரத்தோடு அவனை கவனித்துக் கொள்கிறார்.

ரங்கன் கதாபாத்திரம் மிக நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்தப் படத்தின் கதாநாயகர் அவர்தான். அரசியல், சமூக, தொழில் நேர்மையுடன் இருக்கிறார். விளையாட்டு என்று வரும்போது மகனாக இருந்தாலும் பாசத்தை ஏறக்கட்டிவிட்டே அணுகுகிறார். சாதிய பாகுபாடு இன்றி விளையாட்டை மட்டும் முன்னிறுத்தி அதட்டலும் அன்புமாக தன் சீடர்களை உருவாக்குகிறார். இவரது பரந்துபட்ட மனப்பான்மைக்கு திரைப்படத்தில் முன்னிறுத்தப்படும் அவரது திராவிட சார்பும் காரணமாக இருக்கலாம். மருமகள் தன் கணவனுக்காகப் பரிந்து பேசுவதையும் கண்டும் காணாமல் கடந்து போகிறார். குடும்பப் பாசம் விளையாட்டுக்குள் வராத வண்ணம் அவர் அதை ஒரு எல்லைக்கோட்டுக்குள் நிறுத்திவிடுகிறார். இந்தக் கதாபாத்திரத்தில் பசுபதி அதகளம் செய்திருக்கிறார்.

குத்துச்சண்டையை ஒட்டிய கதை என்றாலும் சிறு சிறு காட்சிகளில் காதலும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ரங்கன் வாத்தியார் சிறையிலிருந்து விடுதலையாகி நெடுநாள் கழித்து வீட்டில் சாப்பிடும்போது, அவரது கால்விரல்களை அவரின் மனைவி லேசாக அழுத்திவிட்டுப் புன்னகைக்கிறார். அவர்களின் ஆண்டாண்டு காதலை அந்த ஒற்றைக் காட்சி மிளிர்வுடன் சொல்கிறது. வெற்றியின் மனைவியாக வரும் லட்சுமியின் கதாபாத்திரமும் நேர்த்தியானது. "இரவெல்லாம் புலம்புகிறார்" என்று கூடத்தில் போட்டுடைக்கும் அவள், தவறான வழியில் சம்பாதித்து அவன் நகை வாங்கித் தரும்போது "என்ன பண்ணனும்னு நினைச்ச, நீ என்ன செய்துட்டு இருக்க?" என்று அவனுடைய மனசாட்சியின் சார்பாகக் கேள்வி ஒன்றையும் உதிர்க்கிறாள்.


மாரியம்மா கணவனையே சார்ந்து இருக்கிறாள். மெட்ராஸ் திரைப்படத்தில் வரும் கலையரசி கதாபாத்திரத்தையொட்டி மாரியம்மாவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கணவனை அதட்டுவது, ஒரு நொடியாக இருந்தாலும் அவனுக்காக ஆயுதமேந்துவது, அவனைத் தூக்கி நிறுத்துவது என்று அவன் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் எப்போதும் அவள் உடனிருக்கிறாள். ஒரு கட்டத்தில் பயிற்சி, வீடு என்று இயந்திரமாக அவன் ஆகிபோகும்போது தன்னை அவன் கவனிக்கவில்லை என்பதை நினைவுபடுத்தி தன் தேவையைக் கேட்டுப் பெறுகிறாள். குடிசையில் இருந்தாலும் அவன் நிலையானவனாக இருக்கும்போது தன்னை அலங்கரித்துக்கொள்பவள், பொருளாதாரம் உயர்ந்தாலும் அவன் போதையில் தடுமாறத் தொடங்கியதும் நல்ல உடைகளையும் அலங்காரங்களையும் கைவிடுகிறாள். நுட்பமான காட்சியமைப்பு இது.

டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரம் தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிது. பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் இன்னுமொரு பாத்திரம் "டாடி"யாக வரும் ஜான் விஜய். இரண்டு கதாபாத்திரங்களும் படத்தில் அதிரிபுதிரியாகிவிடுகின்றனர். டான்ஸிங் ரோஸாக வரும் ஷபீர் கல்லரக்கலில் உடல்மொழியும் வட்டார வழக்கும் அற்புதத்தின் உச்சம். அதே போல ஒரு ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரம் தமிழ்ச்சூழலுக்குள் எப்படி இயங்குகிறது என்பதை மிக நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார்கள். கபிலனுடைய அப்பாவின் நண்பனான டாடி, கபிலனுக்கும் நண்பராக வருகிறார். ஏறக்குறைய சித்தப்பாவுக்கும் மகனுக்குமான நேசம், மரியாதை எல்லாம் கலந்த உறவு இது. குடும்பத்திலும் பொது இடங்களிலும் கபிலனுக்காக ஒலிக்கும் முதல் குரல் டாடியுடையதாகவே இருக்கிறது. கபிலனுக்குத் திருமணம் முடிவாகும் இடத்தில் நிச்சயம் செய்யப்பட்ட விளக்கைக் கபிலனின் அம்மா டாடி தம்பதியிடம் கொடுக்கிறார். அந்த ஒரு காட்சி பல விசயங்களைப் பேசிவிடுகிறது.

படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரம் என்று சொல்லப்போனால் அது ராமனின் மாமாவாக வரும் தணிகா. ஆதிக்க சாதி மனநிலை கொண்ட அவரால் கபிலனின் எழுச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதுவே கபிலனுக்குத் தடையாகவும் மாறுகிறது. அந்த சாதிய மனநிலையும் தன் அக்கா மகனின் இடம் பறிபோவதால் வரும் ஆத்திரமும் அவருக்குள் வன்மத்தை விதைக்கின்றன, அது கதையை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. கடைசி வரை அவர் மனம் மாறுவதில்லை, மனித மனத்துக்குள் இருக்கும் ஆதிக்க உணர்வை எதனாலும் மாற்றிவிடமுடியாது என்பதற்கான சான்றாக நிற்கிறார்.


ராமனும் டான்ஸிங் ரோஸும் சாதி, வர்க்கம் தாண்டி உண்மையான விளையாட்டு வீரர்களாக இருக்கின்றனர். வெற்றிபெறும் கபிலனை ராமன் பாராட்டத் தயங்குவதில்லை. ஒருவன் தோற்றாலும் நேர்மையாக விளையாடிவிட்டால் அவன் ஜெயித்துவிடுகிறான் என்ற ரீதியில் டான்ஸிங் ரோஸ் பேசும் வசனம் முக்கியமானது. இவர்களோடு ஒப்பிடும்போது வேம்புலியின் கதாபாத்திரம் வெறும் குத்துச்சண்டை இயந்திரமாகவே தெரிகிறது.

படத்தில் வரும் ஒரே குழப்பமான கதாபாத்திரம் வெற்றி. ஆனால், எளிதில் யூகிக்கமுடியாத அந்தத் தன்மையே பல நேரங்களில் ஆச்சரியத்தை விதைக்கிறது. படத்தின் முக்கியத் திருப்பங்களுக்கு வெற்றியின் திடீர் நடவடிக்கைகள் காரணமாக அமைகின்றன.

குத்துச்சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணியில் ஒலிக்கும் தங்கதுரையின் வடசென்னை வட்டார வர்ணனை ஆகியவை பார்வையாளனை குத்துச்சண்டை அரங்கிலேயே அமரச் செய்துவிடுகின்றன. உடை, போஸ்டர்கள், கட்டிடங்களில் தென்படும் ஓவியங்கள், நகைகள் போன்றவை காலகட்டத்தைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன. கபிலனுக்கு நிச்சயதார்த்தம் செய்யும் காட்சியில் யார் சாட்சியாக இந்த ஒப்பந்தம் நிகழ்கிறது என்று போடப்படும் பட்டியல் சுவாரஸ்யமாக இருக்கிறது. சிறு சிறு காட்சித் தெறிப்புகளிலும் வசனங்களிலும் கூட ஒரு நிலத்தின், காலகட்டத்தின் வரைவியலும் அரசியலும் பேசப்பட்டுள்ளது.


ஒரு சில முதன்மைக் கதாபாத்திரங்களே கதையை நகர்த்திச் செல்லும் திரைக்கதைகளுக்கு மத்தியில் சார்பட்டாவின் கதாபாத்திரங்கள் தனித்துவமானவை. அவற்றின் ஆழமும் நுணுக்கங்களும் ஒரு குத்துச்சண்டை பற்றிய வழமையான கதையைக் கூட சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றிவிடுகின்றன. படத்தின் எல்லா காட்சிகளிலுமே கதாபாத்திரங்களைப் பற்றி அறிவதற்கு ஏதோ ஒன்று இருந்துகொண்டேயிருக்கிறது. வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது பொதுவாகச் சொல்லப்படுவதுதான். ஆனால் அது திரைக்கதைகளில் வெளிப்படுவது அரிதானது. "நம்மைப் போன்றவர்கள் ஜெயிக்கணும்" என்று கபிலனின் வீட்டுக்கு வந்து அவனை உற்சாகப்படுத்தும் கௌதமன் உட்பட எல்லாருமே முக்கியமானவர்கள். அந்த வகையில் கதாபாத்திர வடிவமைப்பு நேர்த்தியில் சார்பட்டா நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல் முக்கியமானது