கிம் கி தக்: சினிமாவில் புதிய அலை

 தமிழில்: தீஷா

நாம் சுற்றுச்சூழலை அழித்தால்,
நமக்கு ஒரு  சமுதாயம் இருக்காது
-     மார்கரெட் மீட்

கலையைத் தன் ஆயுதமாகக் கொண்டவர்கள் இந்தச் சமூகத்தின் மீது, கருத்துச் சுதந்திரத்தின் மீது, இயற்கையின் மீது இழைக்கப்படுகிற கொடுமைகளை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும். அவர்களே கலைஞர்கள். 
 
வேறெந்த ஊடகங்களைக் காட்டிலும் சினிமா பொதுமக்களோடு உரையாடக் கூடிய அசாத்திய திறமைகளைக் கொண்டிருக்கிறது. ”சினிமா ஒரு கலை வடிவம்”, இது மக்களுக்கான ஊடகம், மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கான ஊடகம்  என்று சொன்னபோதிலும், பொழுதுபோக்கு என்ற கட்டமைப்பிற்குள் அதனை அழுத்தி மூச்சுத்திணறச் செய்கின்றனர். உலக சினிமா என்ற வகைப்படுத்தப்படுகிற பிறமொழி சினிமாக்களில் நம்மைக் கவர்கிற வகையில் சினிமாக்கள் வருகிறபொழுது இங்கும் கொண்டாடுகிறோம். அதுபோல சினிமாக்கள் வருவதில்லையே என்று நொந்துகொள்கிறோம். ஒரு சிலரோ அதில் மேலும் முன்னேற முயற்சிக்கின்றனர். தாங்கள் நினைக்கிற ஒரு சினிமாவை எடுக்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் கைக்கொள்வது என்னவோ, வணிக சினிமா நிர்ணயித்து வைத்திருக்கிற அதே பாணி தான். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குனர், ஒரு நாள் படப்பிடிப்பிற்கான செலவு என்று பட்ஜெட் போட்டுக்கொண்டிருப்பார்கள். முடிவில் பணம் என்ற ஒற்றை மையத்திற்கு வந்து தன் பயணத்தை நிறுத்திக்கொள்கிறார்கள்.

ஆனால், கலைஞர்கள் அவ்வாறு இருப்பதில்லை. ஜாஃபர் பனாஹியின் படங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடைவிதித்தபொழுது, அவர் கேக்-கில் பென் டிரைவை மறைத்து வைத்து திரைப்பட விழாவிற்கு தன் படத்தை அனுப்பினார். மக்மல்பஃப் அடக்குமுறைகளுக்கு மத்தியில் படங்கள்  எடுத்தார். மேலும் கலைஞன் என்பவன் தன் கருத்தை எப்படிச் சொல்வது என்ற முறையில் சிந்திக்கிறபொழுது, அதே கருத்தை எப்படி வெவ்வேறு வடிவங்களில் புரியவைக்கலாம் என்றும் சிந்திக்க வேண்டும். தாஜ்மஹால் பற்றி புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிறபொழுது  புகைப்படக் கலைஞர் ரகு ராய், தாஜ்மஹாலை நேரடியாக எடுக்காமல், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று வெவ்வேறு கோணங்களில் அந்தத் தாஜ்மஹால் எவ்விதம் காட்சியளிக்கிறது, என்பதைக் கவனித்து புகைப்படங்கள் எடுத்தார். அதனால், அவர் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் தனித்துவத்துடன் நின்றன.
எனவே, ஒரு பிரச்சினை சார்ந்து அப்படியே அதைக் கதைக்குள் வைப்பது எல்லோரும் செய்யக்கூடிய செயல். ஆனால், அதை வெவ்வேறு கோணங்களில் அணுகி, அதைக் கலாபூர்வமாக உருவாக்குவது கலைஞர்களின் செயல்பாடு.  

உலக சினிமா, உலக இயக்குனர்கள் என்றெல்லாம் நிர்ணயித்து வைத்திருக்கிறோமே, அவர்கள் நமக்கு சினிமா எப்படியெல்லாம் உருவாக்கப்படலாம் என்ற வழிகாட்டுதலையும் கூடவே வகுத்துக்கொடுக்கிறார்கள். இன்றைய இளம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் கிம் கி தக் ஒரு கவர்ச்சிகரமான பெயர். எவரும் அதுவரை பயணப்படாத, வாழ்வின் கசடுகள் கொட்டிக்கிடக்கிற பாதைக்குள் கிம் கி தக் பயணத்ததன் காரணமாகவோ, அவர் ஒவ்வொரு படத்திலும் கையாள்கிற கவிதை தோய்ந்த சினிமா படிமங்களும் இளைஞர்களையும், ஏன் சினிமாவை விரும்பும் எவரையும் அதிகமாக ஈர்க்கிறது.

STOP (Korean Movie - 2015) - 스톱 @ HanCinema :: The Korean Movie and Drama  Database

  ’
பணம்’ என்ற ஒரு விஷயம் தான் உங்கள் படைப்பிற்கு தடையாக இருந்தால், அதையே ஒரு ஆக்கப்பூர்வமான விஷயமாக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள் என்பதை கிம் தனது ‘ஸ்டாப்’ என்ற திரைப்படத்தின் மூலமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், ஏன் லைட்டிங்க் டெக்னீசியன் கூட இந்தப் படத்திற்கு இல்லை. எல்லாவற்றை கிம் கி தக்கே கவனித்துக்கொண்டார். அவர் காலையில் எழுந்து, படப்பிடிப்பு நடக்க வேண்டிய இடத்திற்கு வந்து இன்றைக்கு எந்த காட்சி எடுக்க வேண்டுமோ அதற்குரிய பொருட்களையெல்லாம் தகுந்த விதத்தில் அமைப்பார், எப்படி கேமரா இருக்க வேண்டும், வெளிச்சம் போன்றவற்றையெல்லாம் கவனித்தில் கொண்டு பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்துக்கொள்வார். பின்பு மதியமாக அந்தக் காட்சி எடுக்கப்படும். இவரே கதையையும், திரைக்கதையையும் எழுதியிருப்பதோடு ஒளிப்பதிவாளராகவும் இருக்கிறார். எனவே, ஒரு காட்சியை ஒளிப்பதிவாளரிடம் விவாதிக்கிற நேரம் இவருக்கு மிச்சப்படுகிறது. நடிகர்களையும் கூட குறைவான எண்ணிக்கையிலேயே அமைத்துக்கொண்டார். அவர்கள் படத்தில் பயன்படுத்துகிற ஆடைகளை அவர்களே கொண்டுவந்தனர். காஸ்ட்யூம் டிசைனர் வேலையும் முடிந்தது. அடுத்து, படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடம்? அதற்கு அந்நடிகர்களின் வீட்டையே பயன்படுத்திக்கொண்டார் கிம் கி தக். 10,000 டாலருக்கும் குறைவாக செலவழித்து இந்தப் படப்பிடிப்பை நடத்தி, கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.
Stop (Kim Ki-Duk) - AsianWiki

ஆனால், நீங்கள் படம் பிடிக்க செய்கிற முயற்சிகள் எல்லாம், படம் பார்க்கிறபொழுது பார்வையாளர்களுக்கு அது உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். அந்தக் கலை கிம் கி தக்கிற்கு தெரிந்திருக்கிறது. ‘STOP’ திரைப்படம் மனித இயல்பில் ஒரு ஆழ்ந்த பார்வையை வெளிப்படுத்தாமல் போகலாம், அதுவே மீண்டும் கிம் கி தக்கை சிறந்த இயக்குனராக மீண்டும் அடையாளப்படுத்தியிருக்கிறது. எனினும் சில விமர்சகர்கள் இந்தப் படம் கற்றுக்குட்டித்தனமாக இருப்பதாகவும், துல்லியமில்லாமல் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தங்கள் கருத்துக்களை கறாராக முன்வைத்தனர்.

ஆனால், அணு ஆலை எதிர்ப்பு திரைப்படம், தென்கொரிய அமைப்பிற்கு வெளியே ஒரு மாற்றுத் திரைப்படத் தயாரிப்பைக் கட்டமைப்பதற்கான முயற்சியில்  கிம் நிற்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. தென் கொரியாவில் பெரிய மூன்று திரைப்பட விநியோகஸ்தர்கள்தான், முக்கால்வீத திரையரங்கங்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார்கள். ஒரு படம் மக்களைச் சென்றடைவது, புகழ் பெறுவது, கவனிக்கச் செய்வது எல்லாமே அந்த மூன்று விநியோகஸ்தர்களின் கைகளில்தான் இருக்கிறது. அம்மூன்று பேரில் ஒருவரிடமிருந்தாவது ஆதரவு கிடைக்காமல், ஒரு கொரிய திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெற வாய்ப்பே இல்லை.
 
தென் கொரியாவில் நீங்கள் பிரபலமாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் தேவைப்படுகின்றன; பெரும்பான்மையான முதலீடு, பெரிய விநியோகம், அடுத்து நன்கு அறியப்பட்ட நடிகர் அதில் நடிக்க வேண்டும். கிம் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறபொழுது, “நான் அந்த விஷயங்களிலிருந்தெல்லாம் வெளியேறி, வெகு தொலைவில் இருக்கிறேன்” என்கிறார். கலையை ஆதாரமாகக் கொண்டிருக்கிற கலைஞர்கள் சினிமாவிற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு போரை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

All 22 Kim Ki-duk Movies Ranked From Worst To Best | Taste Of Cinema -  Movie Reviews and Classic Movie Lists
 
திரைப்பட உருவாக்க முறைகள் மாறி வருகின்றன. ஒரு திரைப்படம் இப்படித்தான் உருவாக வேண்டும், இப்படித்தான் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற வரையறைகளும் சிதறுகிற காலத்தில் இருக்கிறோம். இதற்கு கிம் கி தக்கின் சினிமா அணுகுமுறையே ஒரு சான்று.த்திரைப்படத்தின் முதல் காட்சி, பூகம்பத்தால் பீடிக்கப்பட்டிருக்கிற ஒரு வீட்டை ஃபுகுசிமாவில் காட்சிப்படுத்துகிறது. அவ்வீட்டினுள் ஒரு ஆணும் பெண்ணும் வசித்து வருகின்றனர். அவர்கள் அந்தப் பூகம்பத்தால் எவ்விதம் பரிதவிக்கின்றனர், திகைக்கின்றனர் என்பதைக் காட்சிப்படுத்தியதோடு அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த காட்சியில் அருகிலிருக்கும் அணு சக்தி ஆலையிலிருந்து வெளிப்படுகிற புகைக்கூட்டங்களின் மீது அக்கறை காட்டியது கேமரா. ஒரு பக்கம் நிலநடுக்கம், மறுபக்கம் அணு உலையின் அச்சம் தரும் சூழல். அந்த இணையர்கள் அங்கேயிருப்பது பாதுகாப்பானதல்ல என்று அறிவுறுத்தப்படுவதால், டோக்கியோவில் ஒரு சிறிய இடத்தைத் தங்கள் வசிப்பிடத்திற்காகக் கண்டுபிடிக்கின்றனர். மிகி கர்ப்பமாக இருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட மர்மமான மனிதன் அலைபேசியில் அவளை அழைக்கிறான். கோட் ஷுட், டை என்று தோரணையாக இருக்கிற அம்மனிதன், உங்கள் குழந்தை விரைவில் சிதைந்துவிடும். அது ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை, எனவே, உங்களுக்கு கருக்கலைப்பு செய்வது மட்டுமே இப்போதிருக்கிற ஒரே வாய்ப்பு எனக் கூறுகிறான். மேலும், அவன் உங்களுக்கு உதவுவதற்காக “சிறப்பு குழு” ஒன்றும் இருப்பதாகத் தெரிவிக்கிறான்.

மிகி இணையத்தில் இறந்த கருவைப் பார்த்து பதறுகிறாள்.  மனதை உலுக்குகிற அந்த பிம்பம் மிகி-யை மிகவும் பாதிக்கிறது. பயந்து போகிறாள். கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கிறாள். ஆனால், அவரது கணவர் சபு, இதற்கு ஒத்துக்கொள்வதில்லை. மனைவியைக் கட்டிப்போட்டுவிட்டு புகுஷிமா பகுதிக்கு வருகிறார். அங்கு விலங்குகளையும், அவைகளின் குட்டிகளையும் புகைப்படங்கள் எடுக்கிறார். அதிலிருந்து கதிர்வீச்சால் இந்தக் குட்டிகள் பாதிப்படையவில்லை என்ற முடிவுக்கு வருகிறார். அவர் எடுத்த போட்டோக்களையெல்லாம் இதற்கான ஆதாரங்கள். ஒருமுறை அங்கு அவருக்கு எச்சரிக்கை செய்வதுபோன்ற ஒன்றை அங்கு கண்டுபிடிக்கிறார்.

மிகி தனது மனதை மாற்றிக்கொள்கிறாள். அசுத்தமான பகுதிகளில் இறைச்சியை விற்றுக்கொண்டிருக்கும் டேக் என்பவருடன் இணைந்து டோக்கியோவின் மின்சார ஆற்றலைத் துண்டிக்கும் செயல்முறையில் மிக ஆழமாக ஈடுபடுகிறார் சபு.  மின்சாரத்தின் மீதான சார்புநிலை நாட்டின் பேரழிவிற்கு வித்திடும் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு மாசுபடுத்தாத காற்றுக்காக இந்த ஜோடி பயணிப்பது, இந்த உலகில் மனிதர்கள் இயற்கையின் அடிப்படை விஷயத்திற்காக, நியாயமாக கிடைக்க வேண்டிய பொருளுக்காக எவ்வளவு தூரம் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறது.  படம் நெடுகிலுமே இருத்தலுக்கான உழைப்பும் போராட்டுமுமே விரவிக்கிடக்கிறது.

Venice Review: South Korea Gets a Firm Critique (As Does the World) in Kim  Ki-Duk's 'One on One' | IndieWire

கிம் கி தக் எழுதி, படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிற இப்படம் முழுமையான ஜப்பானிய வசனங்களால் நிரப்பப்பட்டு, ஜப்பானிலேயே எடுக்கப்பட்ட படமாகவும் தோன்றுகிறது. 2015ல் வெளியான இப்படம் 85 நிமிட கால அளவு கொண்டிருக்கிறது. இந்தப் படம் முழுவதுமே கிம் கி தக்-கின் தொடு உணர்வை நம்மால் உணரமுடியும். இது படத்தில் கைகளாலேயே இயக்கி எடுக்கப்பட்ட கேமரா ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் இது வெளிப்படையாகவே உள்ளது. கிம் கி தக்-கின் சினிமா அணுகுமுறையை அடையாளப்படுத்துவது போல, அந்தக் கதையின் விளிம்புகளை, உச்சகட்டங்களை அப்படியே கரடுமுரடானதாகவே திரையில் காட்டுகிறார். எது வாழ்க்கையின் நிதர்சனமோ அதை மூடி மறைக்காமல், அதை அப்படியே வெளிப்படுத்துவது, கொடுமைகளுக்கு முலாம் பூசாமல் முகத்தில் அறைகிறார் போன்று அவற்றை அப்படியேக் காட்சிப்படுத்துவது, கிம் கி தக்கின் பாணி. இது பலருக்கு முகம் சுளிக்கக்கூடிய சம்பங்களாக இருக்கலாம். இவரது படம் எத்தனையோ திரைப்படத் திருவிழாக்களால் கொண்டாடப்பட்டாலும், “The Isle” போன்ற படங்களைப் பார்க்கச் சகிக்காமல், அந்தக் காட்சி ரீதியிலான தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் திரையரங்கிலிருந்து வெளியேறியவர்களும் இருக்கிறார்கள். ஒரு ஆண் கொத்தாக தூண்டில் முட்களை தன் தொண்டையில் மாட்டி இழுக்கும்பொழுது, சதையும் ரத்தமுமாக அவை வெளியே வந்து விழும், ஒரு பெண் தன் பிறப்புறுப்பில் அதேபோல தூண்டில் முட்களை நுழைத்து அப்படியே வெளியே இழுக்கும்பொழுது என்று இந்தத் தர்மசங்கடமான சூழ்நிலைகளைப் பார்க்க விருப்பமில்லாமல் திரையரங்கிலிருந்து வெளியே போனவர்களும், இது போன்ற கிம் கி தக்கின் காட்சிகளைச் சுட்டிக்காட்டி அவரை வசைபாடியவர்களும் அதே திரைப்பட விழாக்களுக்குள் இருந்தனர். இவரது Bad Guy(2001)  திரைப்படத்தில் பெண்களை மோசமாகச் சித்தரிப்பதாக கொரிய நாட்டினராலேயே அதிகமாக விமர்சிக்கப்பட்டவர் கிம் கி தக். ஆனால், அத்தகைய விமர்சனங்களையெல்லாம் எதிர்கொண்டுதான், spring summer fall winter and spring (2003), 3 Iron (2004) போன்ற படங்களை எடுத்தார். இதில் spring summer fall winter and spring அதிகப் புகழ் பெற்றது. வக்கிரமான காட்சிகள், பெண்ணுடல் வேட்டை, வன்முறை, ஹிம்சை போன்றன கிம் கி தக்கின் படங்களில் இருக்கும் என்பது போல மறுக்கமுடியாத மற்றொரு உண்மை அவரது படத்தில் காணப்படும் அமைதி. அந்த அமைதியை நீங்கள் spring summer fall winter and spring படத்தில் முழுமையாக அனுபவிக்கலாம்.

Kim Ki-duk's Return

இவர் படத்திற்கென ஒரு சினிமா மொழி இருக்கிறது.  இவரது சமகாலத் திரைப்படப் படைப்பாளிகளைப் போல, கிம் கி தக் திரைப்பட உருவாக்கத்தைப் பற்றி எந்தவொரு முறையான பயிற்சியையும் பெற்றதில்லை. ஆனால், அதுவே அவருக்கு அனுகூலமாக அமைந்துவிட்டது. அப்படியே காட்சிப்படுத்துதல் ஒரு அழகியல் இருக்கிறது. மேலும், ஒரு சில வாரங்களில், ஏன் அதற்கும் குறைவான நாட்களை எடுத்துக்கொண்டு, மிகக் குறைவான பணத்தை முதலீடு செய்து, படப்பிடிப்பை முடித்து வெளியாகிற படங்களின் மூலம் உலகின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பிவிடுகிறார் கிம்.

Stop – படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்கள் நம்மிடம் ஒரு நீடித்த தாக்கத்தை, கருத்தை விட்டுச்செல்கிறார்கள். கிம் கி தக்கின் படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இது அனுமானிக்க முடிந்ததுதான். ஆனால், இம்முறை அதை வெளிப்படையாகக் காட்டவில்லை. கிம், திரைப்படத்தின் மையமாக நின்றுகொண்டு, சமுதாயத்தின் மீதான பார்வையை, தனது வடிவம், மற்றும் சொல்ல வேண்டிய பொருள், என்ற பாணியில் அணுகுயிருக்கிறார்.

கிம்-மின் திரைப்படங்கள் பெரும்பாலும் குறைந்த பட்ச உரையாடல்களையேக் கொண்டவை. மேலும் moebius (2013) போன்ற படங்கள் உரையாடலை முற்றிலுமாகக் கைவிட்டு, காட்சி ரீதியாக மட்டுமே கதை சொல்பவை. வசனங்களை நம்புவதற்குப் பதிலாக கதையை காட்சிகளின் வாயிலாக உணர்த்துவதையே முக்கியமான நோக்கமாக இந்தப் படம் கொண்டிருந்தது. 

கிம் கி தக்கின் முயற்சிகளைக் குறிப்பிடுவது ஒப்பீட்டளவில் மிகவும் எளிமையானது; அணு சக்தி ஆலைகள் வேண்டாம். நாம் அதிகப்படியாக மின்சக்தியை நாடியிருப்பதும் பிரச்சினையே. முடிந்தவரை அந்தச் சார்பு நிலையை குறைத்துக்கொள்ள வேண்டும். ஜப்பானிய, கொரிய, மற்றும் சர்வதேச பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு, இந்தக் கதையில் அணு சக்தி தொடர்பான ஒரு வாதத்தை முன்வைக்கிறார். விவாதிக்கிறார். அடுத்து வருகிற சந்ததியின் வருகையைக் கூட இந்த அணு ஆலைகள் எவ்வளவு கேள்விக்குள்ளானதாக மாற்றி வைத்திருக்கின்றன? என்று விளக்குகிறார்.  படம் பார்ப்பவர்களுடன் அணு சக்தி ஒரு குடும்பத்தில் எவ்விதமாகவெல்லாம் பாதிப்புகளைச் செலுத்தி, அலைக்கழிக்கிறது என்ற கருப்பொருளை வெளிப்படுத்தி, பார்வையாளர்களையும் அது குறித்து யோசிக்கச் சொல்கிறார். ஆனால், அதற்கும் அப்பால், அதன் பாதையில் வருகிற ஆழமான காட்சிகள், உண்மையில் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்க்கக்கூடியன.