கினோ 2.0: கோடுகளைத் தாண்டுதல்


-க்றிஸ்டோபர் கென்வொர்தி

படப்பிடிப்பில் உரையாடல் காட்சிகளை எப்படிப் படம்பிடிப்பது என்பது குறித்து தொடர்ந்து பார்த்துவருகிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த இதழில் உரையாடலின்பொழுதே எல்லைகளைக் கடத்தல் மற்றும் தடைகளுக்கிடையே இரு கதாபாத்திரங்கள் பேசுகிற தொனியைப் படம்பிடிக்கிற முறைகள் குறித்துப் பார்ப்போம். 

1.4 கோடுகளைத் தாண்டுதல்

காட்சியில் கதாபாத்திரங்கள் எந்த இடத்தில் நிற்கிறார்கள்? எங்கிருந்து பேசுகிறார்கள்? அவர்களுக்கு அருகில் யார் இருக்கிறார்கள்? போன்ற தகவல்களெல்லாம் பார்வையாளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் வழக்கமாகவே இயக்குனர் அதிகக் கவனம் செலுத்துகிறார். காட்சியில் ஒரு இடத்தில் கதாபாத்திரங்கள் நிற்கிற நிலையை அறிந்துகொண்டால்தான் பார்வையாளர்களால் குழப்பங்கள் ஏதுமின்றி படத்தைத் தொடர்ந்து பார்க்கமுடியும். எனவேதான், காட்சியின் துவக்கத்தில் பெரும்பாலும் மாஸ்டர் ஷாட் கொண்டு கதையை ஆரம்பிக்கிறோம். மாஸ்டர் ஷாட்டில்தான், அந்தச் சுற்றுப்புறமும், கதாபாத்திரங்களின் நிலையும் பதிவாகும். இதன்பின்னரே, உரையாடும் கதாபாத்திரங்களின் அண்மைக்காட்சிகளைப் படம்பிடிக்கச் செல்கிறோம். 

ஒரு காட்சியின் ஜியோகிராஃபியை (புவியியல் சார்ந்த விவரங்களை) நீங்கள் தெளிவாக நிறுவும்பொழுது கதாபாத்திரங்கள் எல்லோரும் எங்கிருக்கிறார்கள்? யார் யாருடன் பேசுகிறார்கள்? என்பதையெல்லாம் பார்வையாளர்கள் சுலபமாக கிரஹித்துக்கொள்வார்கள். ஒரு காட்சியைப் பார்வையாளர்களுக்குத் தெளிவாக உணர்த்த வேண்டும் என்ற இந்தத் தேவையிலிருந்து, கேமராவை எந்த இடத்தில் வைக்க வேண்டும்? அதற்கெனவும் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தேமேயென நீங்கள் நினைத்ததுபோல எந்த இடத்தில் வேண்டுமானாலும் கேமராவை வைத்து காட்சியைப் படம்பிடிக்கலாம் என்று நினைத்துச் செயல்பட்டால் இதன் மூலம் பார்வையாளர்களுக்கு குழப்பமே எழும். இதனைத் தவிர்க்க, காட்சியில் ஒரு இடத்தில் கேமராவை வைப்பதற்கு முன்னால், அதற்கென உள்ள சில நியதிகளையும் விதிமுறைகளையும் பின்பற்றியாக வேண்டிய தேவையுள்ளது. 180 டிகிரி விதிமுறை என்பது அவற்றுள் ஒன்று. இங்கு நாம் அதைப் பற்றிப் பார்க்கப்போவதில்லை. விதிமுறைகளை மீறுதல் குறித்துப் பார்க்கலாம். ஆம், திறம்படக் கையாண்டால் எந்த விதிமுறைகளையும் உடைத்துவிட முடியும். அடுத்து சினிமா உருவாக்கத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான விஷயம், கதைக்குத் தேவையாயின் எந்த விதிமுறைகளையும் மீறலாம். இப்படியாகச் சரியான நேரத்தில் நீங்கள் மிகக் கவனமாக இந்த விதிகளை மீறுவதன் மூலம், காட்சியின் மோதல் (முரண்பாடு) உணர்வினை இன்னும் கூட்டலாம். 

21கிராம்ஸ் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். இந்த உரையாடல் காட்சி ஒருவேளை மரபார்ந்த முறையில் படமாக்கப்பட்டிருந்தால், உரையாடலில் ஈடுபட்டிருக்கிற கதாபாத்திரங்களை ஒரு பக்கத்தில் இருந்து மட்டுமே கேமரா காட்சிப்படுத்தியிருக்கும். ஆனால், வழக்கமாகப் படம்பிடிக்கும் உரையாடல் உத்திகளை 21கிராம்ஸ் பின்பற்றவில்லை. அதற்குப் பதிலாக கேமரா ஒரு வெட்டுடன்(கட்) எதிர்ப்பக்கத்திற்கு மாறுகிறது. இது காட்சியில் மோதல் உணர்வை, திகிலை, சஸ்பென்ஸை சட்டென உயர்த்துகிறது. இதுதான் க்ராஸிங் லைன் அதாவது கோட்டைத் தாண்டுதல், அல்லது எல்லையைக் கடத்தல் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் இயக்குனர்கள் இந்த எல்லையைக் கடக்க வேண்டாம் என்றே அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் சரியான முறையில் இந்த விதிமுறையை மீறாவிட்டால், கதாபாத்திரங்களின் நிற்கும் நிலை சார்ந்தும், இருப்பிடம் சார்ந்தும் பார்வையாளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். 


இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையே ஒரு எல்லைக் கோட்டினை கற்பனை செய்துகொள்ளுங்கள் (இந்நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டிருப்பவர்களாகவும் இருக்கலாம்). சாதாரண சூழ்நிலைகளில், அந்த எல்லைக் கோட்டின் ஒரு பக்கத்தில்தான் கேமராவை வைத்துப் படம்பிடிப்பார்கள். ஆனால், 21கிராம்ஸைப் பொறுத்தவரையில், இங்கே முதல் வெட்டுடன் கேமரா அந்தப் பெண்ணின் வலது தோள்பட்டை பக்கத்திலிருந்து இடது தோள்பட்டை பக்கத்திற்கு மாறுகிறது. அடுத்த வெட்டில், கேமரா அவளது இடது தோள்பட்டையிலிருந்து காட்சிகளைப் படம்பிடிக்கிறது. 


படத்தில் முழுக் காட்சியையும் நீங்கள் பார்த்தால், நடிகர்கள் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்தும் பேசாமல், ஒருவரையொருவர் நேரடியாகப் பார்க்காமல் நடந்துகொண்டேயிருப்பது தெரியும். காட்சியில் ஒருவரையொருவர் எதிர்கொள்வதில்லை. அதேநேரத்தில் கேமரா ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொரு கதாபாத்திரத்திற்கு பான்(pan) செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் இந்த எல்லைக் கோட்டைத் தாண்டும்பொழுது, காட்சியில் வெட்டுகள் நிகழும். இந்தக் காட்சியின் ஒட்டுமொத்த உணர்வு என்பது திசைதிருப்புதல் என்பதே! கதையின்படி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாத மனநிலை வாய்த்திருக்கிறது. எனவே, தன் முகத்தை அடுத்தவர் பார்வையிலிருந்து திசைதிருப்பிக் கொள்கின்றனர். அதே நேரத்தில் இவர்களுக்கிடையே உரையாடலும் தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. 

இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று பார்வையாளர்களாகிய நாம் முற்றிலுமாக இந்தக் காட்சியால் திசைதிருப்பப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனால், அவ்விருவரும் ஒரு சாதாரண உரையாடலை முன்னெடுக்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாத நிலையிலிருந்தும், கேமரா மற்றும் கதாபாத்திரங்களின் அந்த நிலையான நகர்வுகளிலிருந்தும் மாற்றங்களிலிருந்தும் ஒரு சங்கடமான அமைதியற்ற உணர்வு உண்டாகின்றது. இது வாக்குவாதத்தின் உணர்ச்சியை நன்றாகப் பிடித்துவைத்திருக்கிறது. எனவே அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதும், அவர்களுக்கிடையே நிலவுகிற அந்த முகம்கொடுத்துப் பேசமுடியாத சங்கடமான உணர்வு பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகிறது. 


கதாபாத்திரம் எதிரேயிருப்பவரின் பார்வையைத் தவிர்த்து அலைபாய்கிறது என்று பார்த்தோம். ஏனென்றால், கதாபாத்திரம் தொடர்ந்து இயங்குகிறது. அப்படியெனில், காட்சியிலேயே கதாபாத்திரம் நகர்வதற்குண்டான தேவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் இந்தக் காட்சியமைப்பே செயற்கையாக மாறிவிடும். இந்தப் படத்தையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம், காட்சியின்படி அவர் லிஃப்டுக்காகக் காத்திருக்கிறார், எனவே அவர் திரும்பிப் பார்க்கவும், அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்காமல் தவிர்க்கவும், நகர்வதற்கும் ஒரு காரணம் கிடைத்திருக்கிறது. பார்வையாளர்கள் நம்பக்கூடிய வகையில், இயக்குனர் அந்நபரைத் திரும்பிப் பார்க்க வைக்க, ஒரு தகுந்த காரணம் கிடைத்துவிட்டது. 

அதேபோல, அந்தப் பெண்ணும், அந்த ஆணுக்குப் பின்னால் நிற்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அவனுக்கு முன்னால் அவள் செல்வதற்கு போதிய இடவசதி இல்லை, எனவே, அவனுக்குப் பின்னால் அந்தப் பெண் நிற்பது காட்சியிலேயே நியாயப்படுத்தப்படுகிறது. எனவே, இந்தக் காட்சியமைப்பு திணிக்கப்பட்டதுபோலவோ, உறுத்துவதுபோலவோ தோன்ற வாய்ப்பில்லை. இப்போது இவ்விரு கதாபாத்திரங்களுமே தன் நடவடிக்கைகளை இதுபோல அமைத்துக்கொள்ள தகுந்த காரணங்கள் கிடைத்துவிட்டன. இது இப்படத்தின் இயக்குனர் இனாரிதுவின் தனித்துவம். அதேபோல, நீங்களும் உங்கள் கதாபாத்திரங்கள் நிற்கும் மற்றும் நகரும் வழியை நியாயப்படுத்த எப்போதும் நல்ல காரணங்களைத் தேட வேண்டும். ஏனென்றால் இவைதான் காட்சியில் ஒரு யதார்த்த உணர்வைக் கொண்டுவருகின்றன. மேலும் நடிகர்கள் தங்கள் நடிப்பைத் தகுந்த விதத்தில் மேம்படுத்தி வழங்க, மிகவும் வசதியாக இருக்கும். முதலில் நடிகர்களுக்கு தான் எதற்காக இப்படி நகர்கிறேன் என்பதற்கான காரணங்கள் நியாயமாக இருந்தால்தான், அவரால் அக்கதாபாத்திரத்தோடும், காட்சியின் சூழலோடும் பொருந்திப்போய் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும். பின்பு கேமராவும் அந்த உணர்வைக் கடத்த தன் பங்கிற்கு ஒத்துழைக்கிறது.

இந்த உதாரணத்தில், கதாபாத்திரங்களின் நிலை மற்றும் அவர்களைப் படம்பிடிக்கிற கேமராக்களின் நிலையையும் தெரிந்துகொள்கிறோம். 


கதாபாத்திரங்கள் நகர்ந்துகொண்டே உரையாடுவதற்கு இடம் இல்லாதபொழுதும், அவர்களுக்கிடையேயான முரண்பாடுகளை உணர்த்த ஒரு குறுகிய இடத்திற்குள் அவ்விரு கதாபாத்திரங்களையும் வைத்திருங்கள். சிறிய இடம், நெருக்கலான இடம், ஆனால் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதைத் தவிர்க்கின்றனர் என்பதிலிருந்து அவர்களுக்கிடையேயான சங்கடங்கள் எனும் உணர்வு பார்வையாளர்களுக்கு எளிதாகக் கடத்தப்பட்டு, அவர்களை இன்னும் தீவிரத்தோடு தொடர்ந்து படத்தைப் பார்க்கச் செய்கிறது. 


தொடரும்….