கினோ 2.0: இரகசிய உரையாடல்


தமிழில்: தீஷா

2.5 இரகசிய உரையாடல்

உங்கள் கதாபாத்திரங்கள் ஒரு ரகசிய உரையாடலை மேற்கொள்ளும்போது, அவர்கள் பேசுவதைத் திரையில் நேரடியாகக் காட்டாமல், கேமராவிலும் பெரிதாக எவ்வித இயக்கத்தையும் மேற்கொள்ளாமல், கதாபாத்திரங்களை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் வைத்துக் காட்சிப்படுத்தும்பொழுது, காட்சிரீதியாகவும் உணர்வுரீதியாகவும் திரைமொழியில் நீங்கள் சிறந்த பலனை அடையமுடியும். 

இங்கே உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ள பிம்பங்களில், அந்த காட்சி நடக்கக்கூடிய இடம்/சூழலைப் பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்த ஒரு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இது கேலரியின் பரந்த, திறந்தவெளிப் பகுதியைக் காட்டுகிறது, மேலும் இங்கு நடிகர்கள் ஒருவரையொருவர் பார்க்காமலேயே அந்த இடத்திற்குள் நகர்கின்றனர். 

அவர்கள் பேசுகின்றனர், ஆனால் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதில்லை. ஆனால், ஒருவரை நோக்கி மற்றவரின் தலையானது சற்றே திரும்பியுள்ளது. இங்கு முதன்மையாக, அவர்களுக்குப் பின்னால் அமைக்கப்பட்ட கேமராக்களின் நிலையிலிருந்து, பேசிக்கொண்டிருக்கிற அக்கதாபாத்திரங்களின் முகங்களைக் காட்சிப்படுத்துகிறோம். கேமரா, கதாபாத்திரங்களின் பின்புறத்திலிருந்து வைக்கப்பட்டிருப்பதால், முகங்கள் முழுமையாகத் தெரியவில்லை. ஒரு பாதி மட்டுமே தெரிகிறது. மேலும், இந்த முழு காட்சியிலும் கதாபாத்திரங்களின் பார்வை முன்னோக்கியதாகத்தான் உள்ளது, இதன் காரணமாகவும் பார்வையாளர்களால் அவர்களின் முகங்களைக் காணமுடியாது. எனவே அவர்கள் பேசுகிற இரகசியம் எனும் உணர்வு, உரையாடலின் ஆழம் இன்னும் அதிகரிக்கிறது. 

இந்த நுட்பம் நன்றாக வேலை செய்வதற்கு, நீங்கள் நடிகர்களின் முகங்களைக் காட்ட வேண்டும், ஆனால், உங்களுக்கு அதாவது இந்தக் காட்சிக்கு தேவைப்பட்டதைவிட, கேமராவை நோக்கித் திருப்ப முயற்சிக்கும் ஒரு நடிகரிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், நடிகர்களின் மற்றும் கேமராக்களின் சிறுசிறு அசைவும், இயக்கமும் கூட, பார்வையாளர்களிடம் சென்றுசேர வேண்டிய காட்சியின் உணர்வில் மிகப்பெரிய தாக்கத்தைச் செலுத்தும். பெரும்பாலான நடிகர்கள், காட்சிக்கு என்ன வேண்டுமோ, அதைத் தகுந்த அளவில் கொடுக்க நினைப்பார்கள், ஏனெனில் அவர்கள் அந்தக் காட்சிக்கு மதிப்பளிக்கிறார்கள், ஒரு காட்சியில் நடிக்கிற கதாபாத்திரம்தான் தெரியவேண்டுமேயொழிய, நடிகரின் முகம் தெரியவேண்டுமென அவர்கள் நினைக்கமாட்டார்கள். இருந்தாலும்கூட, தனது முதுகுக்குப் பின்புறமாக கேமராவை வைத்துக்கொண்டு தொடர்ந்து நடிப்பது கடினம், எனவே யதேச்சையாக அவர் கேமராவை நோக்கித் தலையைத் திருப்பக்கூடும், அது ஷாட்டில் இடம்பெறும். இங்கு அந்த முகம் முழுமையாகத் தெரியாமல், ஒரு பக்கவாட்டில் மட்டும் தெரிந்தாலே போதும்: பேச்சு தொடர்ந்துகொண்டிருக்கும்பொழுதும், அவர் ஏதோவொரு ரகசியத்தை மறைபொருளாக வைத்திருப்பதுபோல இருக்கவேண்டும் என்பதே காட்சியின் நோக்கம் என்று உங்கள் நடிகருக்கு நினைவூட்டுங்கள். 

The International. Directed by Tom Tykwe


கதாபாத்திரங்கள் மற்றும் அந்தச் சூழலைப் பற்றி விவரிக்கிற, establishing shot மிகவும் பரந்த லென்ஸின் (wide lens) உதவியுடனும், மற்ற ஷாட்கள் லாங் லென்ஸைப் பயன்படுத்தியும் காட்சியாக்கப்படுகின்றன. இது ஒரு சட்டகத்தின் முன்பக்கத்தையும் (அதாவது நடிகரின் தோள்பட்டையையும்) மற்றும் பின்னணிச் சூழலையும் out of focus ஆக்குகிறது, இது காட்சிக்குள் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனிமைப்படுத்தி, முக்கியத்துவத்துடன் அடையாளப்படுத்துகிறது. உதாரணத்தில், முதலில் கொடுக்கப்பட்டிருக்கிற establishing shot தவிற, மற்ற இரு ஷாட்களையும் கவனியுங்கள். அதில் முதலில் அமர்ந்திருக்கும் நடிகரின் தோள்பட்டையும், பின்னணிச்சூழலும் மறைந்து, இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள மற்றொரு நடிகர் மீது மட்டுமே நம் கவனம் குவிகிறது. இதன்பொருள், எவ்வித கவனச்சிதறலுக்கும் ஆட்படாமல், அவர் பேசுகிற வார்த்தைகளின்மீது கவனம் குவிக்கிறோம். இந்த காட்சித்தோற்றத்தைப் பெற, நடிகரிடமிருந்து உங்கள் கேமராவை பின்னுக்குத் தள்ளி இழுத்து வரலாம், அல்லது ஒரு நடிகரின் தலை சட்டகத்தை நிரப்புவதன்மூலம், நீங்கள் ஒரு தற்செயலான க்ளோஸ் அப் ஷாட்டைப் பெறுவீர்கள். 

இதுபோன்ற ஒரு காட்சியில், அதிக கேமரா இயக்கங்கள் இல்லையென்றாலும், நடிகர்களின் தலையைச் சுற்றி, அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தைப் பற்றி சிறிது விழிப்புணர்வை ஏற்படுத்த, நீங்கள் சிறிது இடைவெளியை விட்டுச்செல்ல விரும்புகிறீர்கள். உங்கள் பார்வையாளர் காட்சி நடக்கிற இடம் பற்றிய விழிப்புணர்வை அடைந்திருப்பதும் அவசியம். உங்கள் பார்வையாளர் காட்சி நடக்கிற இருப்பிடத்தை மறந்துவிட்டால், ரகசியத்தின் தேவை இழந்துவிட்டது, எனவே நீங்கள் லாங் லென்ஸ்களைப் பயன்படுத்தும்பொழுது கூட, கதாபாத்திரங்களின் சுற்றுப்புறங்களையும் சட்டகத்திற்குள் கொண்டுவர, கேமராவை அவர்களிடமிருந்து போதுமான அளவு பின்னோக்கி எடுத்துச்செல்லுங்கள். 
2.6 இரு கதாபாத்திரங்களும் சட்டகத்தின் ஒரே பக்கத்தில்பொதுவாகவே, இருவர் பேசிக்கொள்கிற காட்சியைப் படம்பிடிப்பது என்றால், ஒருவர் சட்டகத்தின் வலப்புறம் இருந்தால், மற்றவர் சட்டகத்தின் இடப்புறம் இருப்பார். அவர்களது பார்வைக்கோணங்கள்தான் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும். கதாபாத்திரங்களிடம் எவ்வித நகர்வுமற்ற இந்த நிலையான உரையாடல் அமைப்பில், சட்டகத்தின் இடது புறமிருக்கும் கதாபாத்திரத்திடமிருந்து, சட்டகத்தின் வலதுபுறமிருக்கும் கதாபாத்திரத்திற்கு வெட்டுகிறீர்கள். அதேநேரம், இரு கதாபாத்திரங்களுமே சட்டகத்தின் ஒரே பக்கத்தில் இருப்பதுபோல காட்சியை நீங்கள் அமைப்பதன்மூலம், உரையாடலில் உள்ள பதற்றத்தை நீங்கள் இன்னும் அதிகப்படுத்தலாம். 

The Majestic படத்திலிருந்து உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ள இந்த காட்சிகள் இரு கதாபாத்திரங்களும் ஒருவருக்கொருவர் எப்படிப் பார்த்துக்கொள்கின்றன என்பதைக் காட்டுகின்றன, ஆனால், சட்டகத்தைச் சற்று உற்றுக் கவனித்தீர்களேயானால், வழக்கத்திற்கு மாறாக இரு கதாபாத்திரங்களுமே சட்டகத்தின் இடது புறத்திலேயே வைத்துக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம். கதாபாத்திரங்கள், மற்றும் கேமரா என்ற ஒவ்வொரு இயக்கத்திற்கும், அது சட்டகத்தில் எங்கு நிறுத்தப்படுகிறது, எப்படிக் காட்சிப்படுத்தப்படுகின்றன என எல்லாவற்றிற்கும் ஒரு தனி அர்த்தம் இருக்கிறது என்பதைப் பார்த்தோம். அப்படியெனில், இரு கதாபாத்திரங்களும் சட்டகத்தின் ஒரே பக்கத்தில் வைத்துக் காட்சிப்படுத்தக் காரணம் என்ன? இந்தக் காட்சி பார்ப்பதற்கு அசாதாரணமானது, மேலும் இது பார்வையாளர்களிடத்தில் ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்குகிறது. வழக்கத்திற்கு மாறாக, கதாபாத்திரங்களைக் காட்சிப்படுத்தும்பொழுதே, பார்வையாளர்கள் இதில் ஏதோ தொந்தரவு உள்ளது என்பதை உணர்ந்துகொள்வார்கள். அந்த உணர்வை நாம், நம் கதைசொல்லலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறோம். 

இந்தக் காட்சியில், ஒரு கதாபாத்திரம் இருக்கையில் அமர்ந்திருக்கிறது, மேலும் இந்தக் காட்சி முழுவதும் அந்தக் கேமரா அவரது தலை உயரத்தில் வைத்தே காட்சிப்படுத்தப்படுகிறது, ஏனெனில் அவர்தான், இந்தக் காட்சியின் (அல்லது திரைப்படத்திற்குமேகூட) மையக்கதாபாத்திரம். அதேநேரம், உரையாடல் காட்சிகளைப் படம்பிடிக்கையில், இரு கதாபாத்திரங்களுமே இருக்கையில் அமர்ந்திருப்பதுபோலவோ, அல்லது இரு கதாபாத்திரங்களுமே நின்றுகொண்டிருப்பது போலவோ வைத்து எடுக்கப்படுகிற ஷாட், இன்னும் நன்றாக வேலை செய்யும். 

இதுபோன்றதொரு காட்சி எடுக்கப்பட்டு, திரையில் பார்க்க சுவாரஸ்யமானதாக இருக்கலாம், ஆனால் இதில் கவனிக்கவேண்டிய ஒரு ஆபத்தும் இருக்கிறது. ஆம், வழக்கமாகவே, ஒரு உரையாடல் காட்சியில், ஒரு கதாபாத்திரம் சட்டகத்தின் இடதுபுறம் வைக்கப்பட்டால், மறு கதாபாத்திரம் சட்டகத்தின் வலதுபுறம் வரவேண்டும் என்றுதான் பார்வையாளர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் இங்கு ஒரு இயக்குனராக நீங்கள், அந்த விதியை மீறுகிறீர்கள், இத்தகைய விதிமீறல், பார்வையாளர்களை காட்சியின் உணர்வினை உள்வாங்குவதிலிருந்து சற்று திசைதிருப்பக்கூடிய அபாயம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இத்தகைய அசாதாரணமான சூழலை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தத்தான் இதுபோன்ற காட்சிகளையே அமைக்கிறோம், இந்த தடுமாற்றம் நீங்கள் எதிர்பார்த்ததுதான், ஆனால், காட்சி நடக்கிற இடத்திற்குள் கதாபாத்திரங்கள் எங்கே இருக்கிறார்கள்? யார் யாரைப் பார்க்கிறார்கள்? போன்ற விஷயங்களில் பார்வையாளர்கள் குழப்பமடைவதை நீங்கள் விரும்பவில்லை. எனவே, அதில் சற்று எச்சரிக்கையோடு செயல்பட்டு, காட்சியை அமைக்கவேண்டும்.

இந்த நுட்பம் ஒரு நியாயமான wide shot மூலமாகத் தொடங்குகிறது, இங்கே உதாரணத்தில் காட்டியுள்ளபடி, அறையில் பிரதான கதாபாத்திரம் எங்கு அமர்ந்திருக்கிறது, அவர் எந்தத் திசையில் பார்க்கிறார் என்பதை இந்த முதல் சட்டகமே தெளிவுபடுத்திவிடுகிறது. அந்த மையக்கதாபாத்திரம், நேரடியாக மற்றொரு கதாபாத்திரத்தைப் பார்க்கிற அந்தத் தருணம்தான், முதல் ஷாட்டைக் கட் செய்வதற்கான சரியான புள்ளி, அங்கிருந்து மற்றொரு கதாபாத்திரத்தை இரண்டாம் சட்டகத்தில் காட்சிப்படுத்த வேண்டும். 

இரண்டாவது கதாபாத்திரம் medium shot-ல் வைத்துக் காட்சிப்படுத்தப்படுகிறது, மேலும் எல்லோரும் (இரு கதாபாத்திரங்களுமே) சட்டகத்தின் ஒரே பகுதியைப் பகிர்ந்துகொண்டாலும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும். மூன்றாவது சட்டகத்தில், நீங்கள் மையக்கதாபாத்திரத்திடம் இன்னும் நெருக்கமாகச் செல்லமுடியும், இங்கு இயக்குனர் ஜிம் கேரியை medium-close shot-ல் வைத்துப் படம்பிடித்திருக்கிறார், மற்ற கதாபாத்திரம் இன்னும் அதே தொலைவில்தான் உள்ளது. மூன்று சட்டகங்களிலுமே, கேமராவிற்கும், கதாபாத்திரங்களுக்குமான நெருக்கத்தில் மாற்றங்கள் நிகழ்வதைப் பார்க்கலாம். எனினும், பார்வையாளர்களிடம் வழக்கத்திற்குமாறான, ஒரு அசாதரணமான உணர்வு, குழப்பமின்றி உருவாக்கப்படுகிறது.  

(

The Majes. Directed by Frank Darabont
தொடரும்…

.)ticr)