கினோ 2.0 க்றிஸ்டோபர் கென்வொர்தி: பதற்றத்தை அதிகரித்தல்

-தமிழில்: தீஷா

அத்தியாயம் – 2: பதற்றத்தை அதிகரித்தல்

2.7 ஒரு கதாபாத்திரத்தின்மீது கவனம் செலுத்துதல்

இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு, சற்று தீவிரமடைகிறது. ஆரம்பத்தில் இரு கதாபாத்திரங்களையும் ஃப்ரேமில் காண்பித்துக்கொண்டிருந்த கேமரா, உரையாடலின் தீவிரத்திற்கேற்ப மெல்ல முன்னோக்கி நகர்ந்து, இருவரில் ஒரு கதாபாத்திரத்தின் மீது கவனத்தைக் குவிக்கிறது. இப்படிச் செய்வது, உரையாடலில் அதிகரித்து வரும் பதற்றத்தைக் குறிப்பதற்கான ஒரு வழியாக அமைகிறது.

Figure 4 Magnolia. Directed by Paul Thomas Anderson. New Line Cinema, 1999.

Magnolia திரைப்படத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிற இந்த சிங்கிள் ஷாட்டைக் கவனியுங்கள். ஆரம்பத்தில் கேமரா, பேசிக்கொண்டிருக்கும் இருவரையுமே காண்பிக்கிறது. முதல் ஃப்ரேமில் கிட்டத்தட்ட வொய்ட் ஷாட் போல அவர்களிடமிருந்து விலகியிருந்த கேமராவானது, அடுத்த ஃப்ரேமில் டூ ஷாட்ஸ் போல நெருங்கி வந்திருக்கிறது. இரண்டாவது ஃப்ரேமில் வலப்பக்கம் உள்ள மையக்கதாபாத்திரம் ஆர்வத்துடன் பேசுகிறது. இதிலிருந்து உரையாடலின் தீவிரம் அதிகரிப்பதை உணர்ந்துகொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால், உரையாடலின் ஆழம் கூடக்கூட, கேமரா அதற்கேற்ப கதாபாத்திரத்திரங்களை மெல்ல மெல்ல நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. உரையாடலின் ரிதத்திற்கேற்ப கேமரா இயங்குகிறது. இறுதியாக, இந்த உரையாடலில் வலப்பக்கம் உள்ள மையக்கதாபாத்திரம், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. அல்லது, அருகிலிருந்த நபர் பேசியதிலிருந்து ஏதோ தீவிர சிந்தனைக்கு உள்ளாகியிருக்கிறது. இதைக் கவனப்படுத்த கேமராவானது, தனது முழு ஃபோகஸையும், வலது பக்கத்திலிருக்கிற மையக்கதாபாத்திரம் மீது குவிக்கிறது. இந்த மூன்றாவது ஃப்ரேமை, முழுவதுமாக அந்த ஒரு கதாபாத்திரமே ஆக்கிரமித்துக்கொள்கிறது.

நீங்கள், இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு, படத்தில் காட்டப்பட்டிருக்கிற இரு கதாபாத்திரங்களும், மதுவிடுதியில் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். அடுத்து, இருவருமே கேமராவைப் பார்த்தபடி அமர்ந்திருக்கின்றனர். ஆகவே, உரையாடலின்போது, ஒரே ஷாட்டில், இரு கதாபாத்திரங்களிலிருந்து ஒரு கதாபாத்திரத்தின்மீது கவனத்தைக் குவிக்கிற, இந்த டெக்னிக் சரியாக வேலை செய்கிறது. அவர்கள் இருவரும் ஒரு பூங்கா பெஞ்சில் அமர்ந்திருந்தாலும், இந்த டெக்னிக் எடுபடும். ஆனால், அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து உரையாடுவதற்கான, நம்பத்தகுந்த காரணத்தை நீங்கள்தான் கண்டறிய வேண்டும். பொதுவாக ஒருவர் முகம் பார்த்து பேசுவதற்குத்தான் விருப்பப்படுவோம். சில சந்தர்ப்பங்களில்தான், இப்படி, இருவரும் பக்கவாட்டில் அமர்ந்து, முன்னோக்கிப் பார்த்தபடி பேசக்கூடிய வாய்ப்புகள் அமையும். எனவே, காட்சி எங்கு நடக்கிறது என்பதை நீங்கள் கவனித்துப் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை, இவ்விருவரும் ஒரு வீட்டினுள் அமர்ந்து, இப்படி கேமராவைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கற்பனை செய்துபாருங்கள். இது யதார்த்தத்திற்கு மாறான ஒன்றாக இருக்கும். அதுவே, பூங்காவிலோ, மது விடுதியிலோ அருகருகே அமர்ந்து பேசுவதற்கான சூழல் அதிகமென்பதால், அங்கு வைத்து எடுக்கப்படுகிற இதுபோன்ற காட்சி (டெக்னிக்), துருத்தித் தெரியாமல் இயல்பானவொன்றாக பரிணாமம் கொள்கிறது.

இந்தக் காட்சி எடுக்கும்போது, இரு கதாபாத்திரங்களும் யதார்த்தமாக இருக்கவேண்டுமென்பதால், அவர்கள் இருவரும் அவ்வப்போது ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளலாம். ஒரு இயக்குனராக, அவ்விரு நடிகர்களும் எப்போது ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான குறிப்புகளை நீங்கள் தரலாம். ஆனால், கவனமிருக்கட்டும். உரையாடலின்போது, அவர்கள் ஒருவரையொருவர் சற்று நேரம் பார்த்துக்கொள்ளலாமே தவிர, மீதி பெரும்பாதி, அவர்களின் முகங்கள் கேமராவை நோக்கியதாகத்தான் இருக்கவேண்டும். இவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, அல்லது ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்கிறபோது, அவர் பலவிதமான உணர்வுகளுக்கு உள்ளாகிறார். மேலும், இந்த நுட்பமே, உரையாடலின் தீவிரம், மையக்கதாபாத்திரத்தை எந்தளவிற்குப் பாதிக்கிறது என்பதை உணர்த்துவதற்கான கேமரா நகர்வுதான். ஆகவே, பார்வையாளர்கள், அந்த இரு கதாபாத்திரங்களின் (நடிகர்களின்) முகங்களையும், அவற்றின்வழி வெளிப்படும் உணர்வுகளையும் பார்க்க விரும்புகின்றனர். எனவே, இரு கதாபாத்திரங்களின் முகங்களும் பெரும்பாலும் முன்னோக்கி இருப்பது, பார்வையாளர்களுக்கு, அவர்களின் உணர்வுகளைக் கடத்த உதவுகிறது. 
நீங்கள் இந்தக் காட்சியைப் படம்பிடிக்க, பொருத்தமான ஒரு லாங் லென்ஸைப் பயன்படுத்தாவிட்டால், ஃப்ரேமில் தோன்றும் கதாபாத்திரங்கள் மிகவும் சிறியதாகத் தோன்றும். லாங் லென்ஸைப் பயன்படுத்துவதில் உள்ள சவால் என்னவென்றால், கேமராவை முன்னோக்கி நகர்த்தும்போது, கதாபாத்திரங்கள் மீதுள்ள ஃபோகஸைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பது கடினம். எனவே, மிக மென்மையாகவும், மெதுவாகவும் நகரக்கூடிய dolly Movement உங்களுக்குத் தேவைப்படும்.

கேமரா மெல்ல முன்னகர்ந்து வந்து, மையக்கதாபாத்திரத்தின் முக உணர்வுகளைப் பதிவு செய்கிறது. கேமரா நகர்வு இறுதிப் புள்ளியை அடைந்து விட்டது, எனினும் உரையாடல் தொடர்கிறது. இங்கு, கேமராவானது மையக்கதாபாத்திரத்தின் முக உணர்வுகளைப் பதிவு செய்கிற அதேவேளையில், ஃப்ரேமிற்கு வெளியேயுள்ள மற்றொரு கதாபாத்திரத்தின் பேச்சும் சிறிது நேரம் தொடர்ந்து கேட்கக்கூடியதாகயிருக்கும். அந்தப் பேச்சிற்கேற்ப, மையக்கதாபாத்திரத்தின் முக உணர்விலும் மாறுபாடுகள் நிகழும். இருப்பினும், நீங்கள் இதே ஃப்ரேமில் அதிக நேரம் காட்சியைத் தொடரவேண்டாம். நீங்கள் காட்சியை முடிக்க வேண்டும் அல்லது வேறு கேமரா கோணத்திற்கு மாற வேண்டும். 
கொடுக்கப்பட்டுள்ள Magnolia உதாரணத்தில், கேமரா நகர்வு இறுதிப் புள்ளியை அடைந்தவுடன், வேறொரு கோணத்திற்கு மாறுகிறது. மையக்கதாபாத்திரம் எழுந்துகொள்கிறது. அங்கிருந்து அந்த உரையாடல் நீள்வதுபோல படமாக்கப்பட்டிருக்கிறது. 

தொடரும்...