கினோ 2.0: கதாபாத்திரங்களின் இடநிலை மாற்றம்

1.6 கதாபாத்திரங்களின் இடநிலை மாற்றம்

இரு கதாபாத்திரங்களையும் ஒரே சட்டகத்திற்குள் (ஃப்ரேமிற்குள்) வைத்துப் படம்பிடிக்கிறபொழுது, தீவிரமான உரையாடலில் ஈடுபட்டிருக்கிற அவ்விருவரின் உடல் மொழியையும், ஒருவருக்கொருவர் உடல் ரீதியாக பரிமாறிக்கொள்ளும் தகவல்களையும் அந்த ஒரே சட்டகத்திற்குள்ளேயே பார்த்துக்கொள்ள முடியும். இரு கதாபாத்திரங்கள் உணர்ச்சிரீதியில் சண்டையிட்டுக்கொள்கிறபொழுதோ, பேச்சு ரீதியிலான மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்பொழுதோ, அவ்விருவரையும் தனித்தனியாகக் காட்சிப்படுத்தி, காட்சியின் உணர்வைக் கடத்துவது ஒருவகை, அடுத்து, இடையில் எவ்வித வெட்டு(கட்)க்களும் இல்லாமல், ஒரே சட்டகத்திற்குள்ளேயே அவ்விருவருக்குமிடையே நிகழ்கிற மோதலைக் காட்சிப்படுத்துவது மற்றொருவகை. வாதம், முரண்பாட்டு ரீதியிலான பேச்சுகள், வாய்ச்சண்டை போன்றவற்றை இந்த இரண்டாவது வகையைப் பயன்படுத்தி, எப்படிப் படமாக்குவது என்பது குறித்துப் பார்க்கலாம். 

முதலில், இரு நடிகர்களும் ஒருவரையொருவர் பார்த்தவாறு, பேசிக்கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து இந்த ஷாட் துவங்குகிறது. நாம் ஆரம்பத்தில் பார்த்தபடி, இவ்விரு நடிகர்களும் (கதாபாத்திரங்களும்) ஒரே சட்டகத்திற்குள் இருப்பதனால், அவர்களின் உடல் மொழியை நம்மால் எளிதாகப் பார்க்க முடியும். அவர்கள் எந்தளவிற்குக் கோபமாக இருக்கிறார்கள்? என்பதையும், மற்றவர் அவரை எந்தளவிற்குச் சமாதானப்படுத்த முயல்கிறார்? என்பதையும் அவர்களது உடல் வெளிப்படுத்தும் செயல்களிலிருந்தும், அசைவுகளிலிருந்தும் நம்மால் கண்டுகொள்ள முடியும். அந்தளவில் இது மிகவும் உபயோகமான ஷாட்தான். ஆனால், இதிலுள்ள ஒரு குறை என்னவென்றால், இரு நடிகர்களும் ஒருவரையொருவர் பார்த்தவாறு நிற்பதால், அவர்களின் முக பாவனைகளை நம்மால், அவ்வளவு தெளிவாகப் பார்க்கமுடிவதில்லை. அதாவது இருவரது முழு முகங்களையும் நம்மால் காணமுடியவில்லை, ஒரு பாதிதான் காட்சியில் பதிவாகிறது. கோபம் அல்லது உணர்ச்சியின் தீவிரத்தை எந்தளவிற்குத் தன் உடல் வெளிப்படுத்துகிறதோ, அந்தளவிற்கு முகமும் வெளிப்படுத்துகிறது. எனவே, படம் பார்க்கிற பார்வையாளர்கள், அக்கதாபாத்திரங்களின் முகங்களையும், முக்கியமாக அவர்களின் கண்களையும் பார்க்க ஆவலோடு காத்திருப்பார்கள். 


 உடல் மொழி முக்கியமானதுதான், ஆனால், உண்மையில் கதாபாத்திரங்கள் என்ன சிந்தனையில் இருக்கின்றன? எவ்வளவு பதட்டமாக அல்லது கோபமாக இருக்கின்றன? எவ்விதமான உணர்வுநிலையில் இருக்கின்றன? என்பதை நாம் அவர்களின் கண்களைப் பார்த்து அறிந்துகொள்ள விரும்புகிறோம். வழக்கமாக இதுபோன்ற காட்சிகளில், உடனடியாக ஷாட் கட் செய்யப்பட்டு, க்ளோஸ் அப் ஷாட்டிற்கு மாறும். கதாபாத்திரங்களின் முகங்கள் க்ளோஸ் அப்பில் தெரியும். அதில் நாம் அவர்களின் உணர்வுகளைப் பார்க்கிறோம். ஆனால், நாம் முன்பே சொன்னபடி, இந்த ஷாட்டை எப்படிக் கட் செய்யாமல், காட்சியின் உணர்வை வெளிப்படுத்துவது என்பதைக் குறித்துதான் யோசிக்க வேண்டும்.

க்ளோஸ் அப் ஷாட்டிற்குக் கட் செய்யாமல், இதுபோன்ற மீடியம் ஷாட்டிலேயே கதாபாத்திரங்களின் முகங்களைக் காண்பிக்க, அதற்கேற்ற வகையில் கேமராவையும், நடிகர்களையும் நகர்த்தவேண்டிய புத்திசாலித்தனமான வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிற ஷாட்டைக் கவனியுங்கள், இதில் நடிகர்கள் இருவரும், ஒருவரையொருவர் பார்த்தபடி எதிரெதிரே நிற்கின்றனர், இதனால் அவர்களின் நடிப்பு வெளிப்பாடானது, பெரும்பாலும் அவர்களது குரல்களின் வாயிலாகவும், உடல் மொழியிலிருந்தும் வெளிப்படுவதாகவே அமைகிறது. நடிகர்களின் முகங்களைக் காட்சியில் காட்ட, இயக்குனர் அவ்விருவரையும் கேமராவை நோக்கி நடக்க வைக்கிறார், பிறகு, டாலி ஷாட் (dolly shot) மூலமாக, கேமராவில் அவ்விருவரையும் பக்கவாட்டிலிருந்து தொடர்கிறார். இந்த ஷாட்டில் மிக முக்கியமாகச் செய்யவேண்டியது, நடிகர்கள் கேமராவை நோக்கி நடக்கத்துவங்குவதற்கு முன்பு, தன் இடத்தை மாற்றிக்கொள்வதேயாகும். வலது பக்கமிருந்தவர், இடது பக்கமாகவும், இடது பக்கத்தில் இருந்தவர் வலது பக்கமாகவும் மாறி நடந்துவருகின்றனர். இன்னும் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள கொடுக்கப்பட்டுள்ள படங்களைக் கவனியுங்கள். 


Melinda and Melinda
. Directed by Woody Alle

ஃப்லிம்மேக்கிங்கைப் பொறுத்தவரை, ஷாட்டில் எந்தவொரு செயலும், காரணமின்றிச் செய்யப்படக்கூடாது. அது காட்சியின் அடர்த்தியைக் கெடுத்துவிடும். அதேநேரம், தகுந்த காரணங்களுக்காகச் சட்டகத்திற்குள் செய்யப்படுகிற சிறுசிறு மாற்றங்கள்கூட, அந்த ஷாட்டிற்கு மிகப்பெரிய அனுகூலத்தைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, இந்தக் கதாபாத்திரங்களின் இடநிலைp பரிமாற்றம், இரண்டு விஷயங்களுக்கு உதவுகின்றன. முதலாவதாக இது காட்சியியல் ரீதியிலான ஆர்வத்தையும், யதார்த்தத்தையும் கூட்டுகிறது, ஏனென்றால் நடிகர்கள் ஒரே நேர்கோட்டில் நகர்ந்துசெல்கிற ப்ளாஸ்டிக் தன்மையை விட, இந்த வழிமுறை மிகவும் ஆற்றல்மிக்கதாகத் தோன்றுகிறது. இரண்டாவதாக, ஒவ்வொரு நடிகருக்கும், அவன் அல்லது அவள் சட்டகத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு தருணத்தை அனுமதிக்க, இயக்குனருக்கு இதுவொரு வாய்ப்பை வழங்குகிறது. 

ஷாட்டைக் கட் செய்யாமலேயே, எந்த நடிகர் ஃப்ரேமில் கணிசமாகத் தெரியவேண்டும் என்பதை, அவர்களின் இடத்தை மாற்றுவதன்மூலமாகவே உணர்த்துகிறோம். ஷாட்டின் ஆரம்பத்தில் பெண், சட்டகத்தில் ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தால், ஷாட்டின் இறுதியில் ஆண், சட்டகத்தில் ஆதிக்கம் செலுத்துபவராகத் தோன்றுவார். இது, ஷாட்டைக் கட் செய்யாமல் நடக்கிறது. சட்டகத்தில் எந்தக் கதாபாத்திரம் பெரும்பான்மையாகத் தோன்றவேண்டும்? பார்வையாளர்கள் யாரைப் பார்க்க வேண்டும்? போன்றவற்றை இயக்குனரே தேர்ந்தெடுக்கிறார். எனவே, அவர், காட்சியின் உணர்விற்கேற்ப, நடிகர்களின் இடங்களை மாற்றியமைப்பார். 

இங்கே இந்த உதாரணத்தில், அவர்கள் முதலில் நடக்கத் துவங்கும்பொழுது, அந்தப் பெண்தான் கிட்டத்தட்ட நேரடியாக கேமராவை எதிர்கொள்கிறாள், எனவே, நாம் அந்தப் பெண் பேசுவதற்கு, இன்னும் தீவிரமாகச் செவிசாய்க்கிறோம். அந்தப் பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். பின்னர் அவர்கள் நடந்துவருகிறபொழுது, அவர்களைக் கேமரா பக்கவாட்டிலிருந்து படம்பிடிக்கிறது, அப்பொழுது அந்த ஆண், தனது முகத்தை அந்தப் பெண் பக்கமாகத் திருப்புகிறான், எனவே, இப்போது அந்த ஆண்தான் உரையாடலின் மையமாக இருக்கிறான். நம் கவனம் அவனுக்குத்தான் அதிகமாகக் குவிகிறது. 

இந்தக் காட்சியமைப்பு சட்டகத்தில் மிக அழகாக வெளிப்பட, கேமராவிற்கு அருகில் இருக்கக்கூடிய நடிகர், மற்ற நடிகருக்குச் சற்று பின்னால் நடந்துவர வேண்டும். அப்போதுதான், இருவருமே சட்டகத்திற்குள் இருப்பார்கள். அத்தோடு, யார் இந்த ஷாட்டின் மையம் என்பதும் தெரியவரும். கொடுக்கப்பட்ட உதாரணத்திலேயே பார்த்தீர்களானால், அந்தப் பெண் கேமராவிற்கு அருகில் இருக்கிறார், எனவே, அவர் அந்த ஆணுக்குச் சற்றுப் பின்னால் நடந்துவருவதுபோலப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறார். கேமராவும் அதுபோலக் காட்டுகிறது. இக்காட்சியில் நடிக்கிற நடிகர்களுக்கு, இது இயல்பற்றதாகத் தோன்றலாம், ஏனெனில், ஒருவர் மற்றவரோடு பேசிக்கொண்டுவருகையில், இருவரும் ஒரே அளவில் நடந்துவருவதற்குப் பதிலாக, ஒருவருக்குப் பின்னால் மற்றவர் நடந்துவருவது சற்று செயற்கைத்தன்மையுடன் இருப்பதாக நினைப்பார்கள், இது இயல்பாக இல்லை என்பார்கள், ஆனால், அதுதான் படமாக்கப்படும்பொழுது யதார்த்தமானதாக மாறுகிறது. 

இனி, இந்த ஷாட்டைப் படம்பிடிப்பதற்குத் தேவையான கேமரா இயக்கத்தையும், நடிகர்களின் நகர்வுகளையும் பார்க்கலாம். வெள்ளை அம்புக்குறி கேமராவின் இயக்கத்தையும், கருப்பு அம்புக்குறிகள் நடிகர்களின் நகர்வுகளையும் குறிக்கின்றன. உதாரணத்தில், நடிகர்கள் தங்கள் இடத்தை மாற்றிக்கொள்வது மிகத் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது.