லா ஹெயின் : கலகத்தின் அழகியல் யமுனா ராஜேந்திரன், அம்சவள்ளி உரையாடல்

-அம்சவள்ளி

அம்சவள்ளி: 1995ஆம் ஆண்டு மாத்யூ கஸோவிட்ஸ்(Mathieu Kassovitz) இயக்கத்தில் வெளியான திரைப்படம் லா ஹெய்ன். காவல்துறை, எளிய மக்களின்மீது எவ்விதமான ஒடுக்குமுறைகளை நிகழ்த்துகிறது? அதுவும் வேறொரு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களின் உரிமைகளை மறுத்து, சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதை கதைக்களனாகக் கொண்டிருக்கிறது லாஹெய்ன். பாரீஸில் நடக்கிற இக்கதை, போராட்டத்திற்குப் பின்பான, மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்திருக்கிறது. சமூக ஆர்வலராகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்கிற மாத்யூ கஸோவிட்ஸ் தனது இருபத்தாறாம் வயதில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்குப் பிற்பாடு, அதிக பொருட்செலவில் படங்களை எடுத்திருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில், யதார்த்தக் கதைக்களனுக்கு மத்தியில் சுயாதீன முறையில் எடுக்கப்பட்ட இக்கறுப்பு – வெள்ளைப் படம், திரைப்பட விமர்சகர்களாலும், பார்வையாளர்களாலும் இன்றளவும் கவனப்படுத்தப்படுகிறது. இப்படத்திற்காக, கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை மாத்யூ கஸோவிட்ஸ் பெற்றார். சமீபத்தில் 2014ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தையொட்டி, லாஹெய்ன் பாகம் 2 எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது, எனவும் சொல்லியிருக்கிறார். அரசியல் பிரக்ஞையோடு மாத்யூ கஸோவிட்ஸ் எடுத்திருக்கும் லாஹெய்ன் அவரது முதல்படம். 

LA HAINE (remastered) - Officiële NL trailer - YouTube

யமுனா: பிரான்சில் அறுபதுகளில், கஹியர்து (cahiers du cinema) தலைமுறையைச் சார்ந்த கோதார்த், த்ரூபோ போன்றோர் அரசியல் பிரக்ஞையோடு படங்கள் எடுத்தனர். இதற்கு முக்கியமான காரணம், மிகப்பெரிய அரசியல் எழுச்சிகளும் கொந்தளிப்புகளும் அந்தக் காலகட்டத்தில் நிலவிக்கொண்டிருந்தன. ஒன்று, சோவியத் யூனியன் தொடர்பான விமர்சனங்கள் பரவலாக வந்தன. வியட்னாம் யுத்தமும் அந்தக் காலத்தில் நடந்துகொண்டிருந்தது. மாணவர் தொழிலாளர் எழுச்சியும் அப்போதுதான் நடந்தது. சோஷியலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்த வன்முறை இது தொடர்பான விஷயங்களை, அதிகமான படைப்பாளிகளும், திரைப்பட இயக்குனர்களும் பதிவுசெய்யவேண்டியிருந்தது. சார்த்தருக்கும் காம்யூவிற்கும் இடையே, அல்ஜீரிய போராட்டத்தை வைத்துதான் மிகப்பெரிய முரண்பாடுகள் எழுந்தன. சார்த்தரின் படைப்புகளில், அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் தொடர்பான விஷயங்கள், நிறைய இடம்பெற்றன. இந்நிலைப்பாடு, 60,70களில் இருந்த எல்லா கலைஞர்கள் மத்தியிலும் இருந்தது. தேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்த வன்முறைகள், அந்தக்காலத்திலிருந்த வியட்னாம் போராட்டம் போன்ற உக்கிரமான விஷயங்களெலாம், எழுபதுக்குப் பிற்பாடு, எண்பது காலகட்டங்களில் மாறுகிறது. அப்போது, புலம்பெயர்தல் சார்ந்த பிரச்சினைகள்தான் மிகமுக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. குறிப்பாக, பழைய காலனிய நாடுகளிலிருந்து, பிரான்சிற்குக் குடிபெயர்ந்த, சிறுபான்மையின மக்களின் புலம்பெயர் பிரச்சினைகள் முக்கியமான ஒன்று. உலகில், பல்வேறு உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்பட்ட மக்களும் பிரான்சிற்குள் அகதிகளாக உள்ளே வருகிறார்கள். 

Mathieu Kassovitz responds to Booba after his attack on Instagram - World  Today News
Figure 1 Mathieu Kassovitz

லாஹெய்ன் படத்தில் மூன்றுவிதமான புலம்பெயர் மக்கள் இருக்கிறார்கள். ஒருவர் யூதர், மற்றவர் ஆப்பிரிக்கர், மூன்றாமவர் இஸ்லாமியர். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யூதர்கள் அறுபதுலட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஐரோப்பா தொடர்ந்து, அந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. யூதர்கள் அப்படியாக அங்கும் குடிபெயர்ந்து வாழ்ந்துவருகின்றனர். ஐரோப்பாவில் யூதர்கள் வலிமையான பொருளாதார பிரசன்னத்தைக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் என்பது ஆப்பிரிக்க நாடுகளிலும், வட ஆப்பிரிக்க நாடுகள் என்று சொல்லப்படுகிற இஸ்லாமிய நாடுகளிலும், அல்ஜீரியா, மொராக்கோ போன்ற நாடுகளும் காலனியாதிக்கத்தைக் கொண்டிருந்தது. இந்தக் காலனியாதிக்க நாடுகளில் கூலி உழைப்புத் தொழிலாளிகளாகயிருந்தவர்கள், அந்த நாடுகளிலிருந்து நிறைய பேர் பிரான்சிற்கு வந்தார்கள். காலனியாதிக்கத்திற்குப் பின்பாகக்கூட, அந்நாட்டின் தொடர்பின் காரணமாக, நிறையபேர் பிரான்சைத் தேடி வந்தார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் எழுதப்பட்ட, காலனியாதிக்க காலத்திற்கும், அதற்குப் பின்பான இலக்கியங்களில் , இந்த ஏகாதிபத்தியத்தினுடைய, பிரான்சினுடைய ஊடாட்டம் இருப்பதை நாம் தொடர்ந்து பார்க்க முடியும். அப்படித்தான், புலம்பெயர் பிரச்சினைகள் இங்கு வரும்போது, புலம்பெயர் மக்கள் பல பழைய நினைவுகளோடுதான் வருகிறார்கள். அல்ஜீரியாவில் கடுமையான ஒடுக்குமுறை, அதற்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடந்தது. மொராக்கோவில் நடந்த வன்முறைகளுக்கு எதிராக, அந்தப் பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அதைப்போலவே, ஆப்பிரிக்க நாடுகளிலும் நடந்தது. பிரான்சிற்கு எதிராக மிகப்பெரிய அரசியல் இயக்கங்கள் நடந்திருக்கின்றன. செம்பேன் உஸ்மேனின் நாவல்கள், திரைப்படங்களில் பார்த்தீர்களென்றால், பிரான்ஸ் தொடர்பான கடுமையான விமர்சனங்களை நாம் பார்க்கமுடியும். 

 இந்த பழைய நினைவுகளோடும், கோபத்தோடும்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து இங்கு புலம்பெயர்கிறார்கள். ஜெர்மனியர்களாலும், மேற்கத்தியர்களாலும் ஒதுக்கப்பட்ட யூதர்கள். அதேபோல, காலனியாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, நிறவெறியால் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்கள், இஸ்லாமிய மக்கள்தான் பிரான்சிற்கு வருகிறார்கள். இது ஒரு புறம். இன்னொரு புறம், இவர்கள் வந்தபிறகு, அந்நாட்டோடு இணைந்து செயலாற்றுவதற்கு, அந்த அரசாங்கம் என்ன முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். அதில், அவர்களுக்குக் கல்வி கற்பிப்பது, அதற்கான முன்னுரிமை கொடுப்பது மிக அடிப்படையானது. அடுத்து, அவர்கள் குடியிருப்பதற்கான வீடு, முறையான குடியேற்ற அனுமதியும் வழங்கப்பட வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, அவர்கள் தங்குவதற்கு, நகரங்களுக்கு வெளியில் சேரிகளைப் போல, தனியான குடியிருப்புகளை அமைக்கிறார்கள். அதுபோன்ற கட்டிடத் தொகுப்புகளில்தான், புலம்பெயர் மக்களை, பிரதான சமூகத்திலிருந்து விலக்கி குடியேற்றுகிறார்கள். அந்த இளைஞர்களிடம், கல்வியின்மை, வேலையின்மை மிக முக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன. இந்த இரண்டு கண்ணோட்டங்களிலுமிருந்துதான், நாம் இப்படத்தை அணுகவேண்டும். 


இதற்கடுத்தது ஒரு பின்னணி. இப்படி, சிக்கலுக்குள்ளாயிருக்கிற மக்களிலிருந்து தோன்றுகிற, அந்த இளைய தலைமுறை, காவல்துறையின் ஒடுக்குமுறைக்கும், தேடுதலுக்கும் ஆட்படுகிறார்கள். உதாரணத்திற்கு, மேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்காவிலும் வாகனங்களைச் சோதனையிட்டு, பயணிப்பவர்கள் ஏதேனும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா, வாகனத்திற்கு உரிமையிருக்கிறதா என்றெல்லாம் பரிசோதிக்கையில், அதிகமான கைதுகளுக்கு உள்ளாகிறவர்கள் பெரும்பாலும் இந்த புலம்பெயர் மக்கள்தான். குறிப்பாக, கறுப்பின மக்களும், இஸ்லாமிய மக்களும்தான் இந்தச் சோதனைகளுக்கு ஆளாகிறார்கள். மிக சமீபத்தில், காவலர் ஒருவர், முழுங்காலை வைத்து, கறுப்பினத்தவர் ஒருவரைக் கொலைசெய்த சம்பவம், உலகெங்கிலும் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் சார்ந்து விவாதத்திற்கு உள்ளானது. அதேபோல, சிவில் ரைட்ஸ் இயக்கங்களிலும் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. ஜெர்மனியில்கூட, மிருகக்காட்சி சாலையில், வனவிலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வேடிக்கை காட்டுவதுபோல, கறுப்பின மக்களை, கூண்டுகளில் அடைத்து, வெள்ளையர்களுக்குக் காட்சிப்பொருளாக்கினார்கள். இதெல்லாம் அண்மைய வரலாறு. 1940கள் வரை இது இருந்தது. இந்த அனுபவங்களோடு அந்த மக்கள் புலம்பெயர்ந்து வரும்போது, அடிக்கடி காவல்துறையினருக்கு எதிரான கலகங்கள் அங்கு நடக்கும். காவல்துறை அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்படும். அதைப்போலவே, கடைகளும் வாகனங்களும் அடித்து நொறுக்கப்படும். கலவரங்கள் மூன்று, நான்கு நாட்களுக்கு நீடிக்கும். பிரான்சின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், இதுபோன்ற கலவரங்கள் அடிக்கடி நடப்பதை நாம் பார்க்கமுடியும். இதனுடைய ஒரு அம்சமாகத்தான், சார்லி ஹெப்டோவில் முகமதின் புகைப்படத்தை இழிவாகச் சித்தரித்ததற்காக மிகப்பெரிய கலவரம் அந்நாட்டில் உருவானது. பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டார்கள். மிகப்பெரிய ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, கறுப்பின மக்களுக்கு எதிராக, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, அதைப் பயன்படுத்தினார்கள். ஆக, இதையும் மனதில் வைத்துதான் இந்தப் படத்தை நாம் பார்க்கவேண்டும். 


அம்சவள்ளி: இந்தப் படம் எப்படித் துவங்குகிறது என்று பார்ப்போம். ஒரு கலகம் நடந்து முடிந்துவிட்டது. அப்துல் ஏன் மருத்துவமனையில் சாகும்தருவாயில் இருக்கிறார் என்று பார்த்தீர்களேயானால், அவர் ஒரு காவல்நிலையத்தை எறித்துவிடுகிறார். அதிலிருந்து கலவரங்கள் வருகின்றன. கலவரம் நடந்துமுடிந்து, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதே சமகாலத்தில், ஒரு காவலரின் துப்பாக்கி, காணாமல் போகிறது. இந்தத் துப்பாக்கி, புலம்பெயர் சமூகத்தில் இருக்கிற, ஒரு யூத இளைஞனிடம் கிடைக்கிறது. கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது. 

யமுனா ராஜேந்திரன்: அப்துல், அந்தக் கலவரத்தினால் மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் இருக்கிறான். காவலரின் துப்பாக்கி யூத இளைஞனான வின்ஸின் கைகளில் கிடைக்கிறது. அவனது இரு நண்பர்கள் ஹ்யூபர்ட் ஒரு ஆப்பிரிக்கர் மற்றும் சையத் ஒரு இஸ்லாமியர். இந்த மூன்று இளைஞர்களைச் சுற்றித்தான் கதை நகர்கிறது. வின்ஸ் கொந்தளிப்பு மனநிலையில் இருக்கிறான். தன் நண்பனைக் காவல்துறையினர் கொன்றுவிட்டதால், பழிவாங்கும் நோக்கத்தில், தானும் ஒரு காவலரைக் கொன்றுவிட வேண்டும் என்பதுதான் அவனது இலக்கு. படத்தின் ஆரம்பத்தில், உண்மையில் அந்தக் கலவரம் நடந்தபோது இருந்த காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. அது முடிந்தபிறகுதான், கதை, இந்த மூன்று பேரின் கதையாக மாறுகிறது. 

வரலாறு முழுக்க நிகழ்ந்த பல்வேறு கலவரங்களை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து ஒரு புனைவுத்திரைப்படத்தை இயக்குனர் உருவாக்குகிறார். வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவங்களின் கூறுகளையும், இக்காட்சிகளுக்குள் பொருத்துகிறார். இக்கதையின் சாராம்சம் என்னவென்றால், காவல்துறையை அவர்கள் வெறுக்கிறார்கள். ஏனெனில், காவல்துறை, அவர்கள்மீது கடுமையான சித்திரவதைகளை ஏவுகிறது. வரலாறு முழுக்கவுமே, காவல்துறைக்கும், புலம்பெயர்ந்த மக்களுக்குமிடையே இருக்கிற இந்த வெறுப்பின் சாரம்தான் இந்தப் படத்திலும் காண்பிக்கப்படுகிறது. 

இதில், ஹ்யூபர்ட் எனும் ஆப்பிரிக்க இளைஞன், தான் நன்றாகப் படித்து, இந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேறி, ஒரு நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறார். சையத்தும் அடிப்படையில் வன்முறையை விரும்பாத இளைஞன். வின்ஸ் மட்டும், போதை மருந்து சார்ந்த காரியங்களில் ஈடுபடுவதால், அம்மாதிரியான வன்முறையான ஆட்களுடன் பழகுவதால், தானும் மூர்க்கமாக இருக்கிறார். துப்பாக்கியும் அவருக்குக் கிடைத்ததால், அவர் காவலர்களைப் பழிவாங்கவேண்டும் என்று நினைக்கிறார். உண்மையில், அந்த மூன்று பேரையுமே பார்த்தீர்களென்றால், அடிப்படையில் வன்முறையாளர்கள் அல்ல. ஆப்பிரிக்க இளைஞனும், இஸ்லாமிய இளைஞனும் எங்களுக்கு வன்முறை வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள். வின்ஸ் எனும் யூத இளைஞன் மட்டும் வன்முறையின் பக்கம் நிற்கிறான். அதற்கும் காரணம் என்னவென்றால், அப்துல், காவலர்களால் கொல்லப்பட்டதால், அதற்குப் பழிவாங்கும் எண்ணத்துடன்தான், வன்முறையின் பக்கம் நிற்கிறான். காவல்துறைக்கும் இளைஞர்களுக்குமிடையே வெறுப்புணர்வு இருக்கிறது என்பதைத்தான், பிரான்சின் வரலாறு நெடுகிலும் உள்ள இந்தப் பிரச்சினைகள் நமக்குக் காண்பிக்கின்றன. 


நீங்கள்கூட, லாஹெய்ன் பாகம் 2 எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதென, இயக்குனர் குறிப்பிட்டதாகச் சொன்னீர்களல்லவா? அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சார்லி ஹெப்டோ அலுவலகம் எரிக்கப்பட்டது, பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டது, அதற்குப் பிற்பாடாக, உலகத்திலிருக்கிற எல்லா நாடுகளும், இஸ்லாமிய மக்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் எதிராக, ஊர்வலத்தையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. அதற்குப் பிறகு, பிரான்ஸ் சமூகத்தில் அதிகமான வெறுப்புணர்வு, ராணுவத்தையும், காவல்துறையையும் முன்வைத்து, மக்ரோனின் அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. ஆக, அந்த வெறுப்பு, இன்று அதிகரித்திருக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். அதனால்தான், லாஹெய்ன் 2 எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறார். இந்தப் படத்தில் இப்படி பல வரலாற்றுச் சம்பவங்கள் இருக்கின்றன.   

இப்படத்தின் சாராம்சம், காலனியாதிக்கத்தின் கீழிருந்து வந்தவர்கள், நிறவெறி உணர்வினால் பாதிக்கப்பட்ட பின்புலத்திலிருந்து வந்தவர்கள், சொந்த ஊரிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்கள், தங்கள் பழைய நினைவுகளோடு, புதிய ஊரில் குடிபெயர்கிறவர்களை, இந்தப் புதிய சமூகத்தோடு இணைந்துகொள்ளும் வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தித்தரவில்லை. அவர்களை ஒடுக்கி, ஒதுக்கி, நகரத்திலிருந்து விலக்கி, காங்கரீட் கட்டிடங்களில் குடியமர்த்தி, தீண்டத்தகாதவர்களாகத்தான் அவர்களை வைத்திருக்கிறது. காவல்துறையிடம் வன்முறையும், வெறுப்புணர்வும் இருக்கிறது. ஸ்கின்ஹெட் தொடர்பான விவாதங்கள் வருகின்றன. அவர்கள்தான் நியோநாசிஸ்ட். அந்த நியோநாசிஸ்டுடன் காவல்துறையைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். 

அம்சவள்ளி: காவலர்களுக்கான சீருடையில் பாதிப்பேர் இருக்கிறார்கள். சாலைகளில், வெறும் காவலர்களுக்கான் இடுப்புப் பட்டைகளை மட்டும் அணிந்தபடி, சாதாரண உடைகளுடன் சிலர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில, காவலர்களுக்காக பயிற்சியெடுப்பவர்களும், தாங்களும் காவலர்கள் போன்ற பாவனையில் சுற்றித்திரிகின்றனர். காவல்துறை சீருடையணிந்தவர்களுக்கும், மற்றவர்களின் செயல்பாடுகளுக்குமே வித்தியாசங்கள் இருக்கின்றன. நீங்கள் சொன்னதுபோல, நியோநாசிஸ்ட், ஸ்கின்ஹெட்களின் செயல்பாடுகள் மிகவும் வன்முறையானதாகயிருக்கின்றன. இவர்களில் ஒருவர்தான், மிரட்டுவதற்காக வின்ஸின் தலையில் துப்பாக்கியை வைத்தவர், தவறுதலாகச் சுட்டுவிடுகிறார். வின்ஸ் இறந்துபோகிறான். காவல்துறைபோன்று செயல்படும் இவர்கள் யார்? இவர்களுக்கு ஏன் இவ்வளவு அதிகாரம் கொடுக்கப்படுகிறது?

யமுனா ராஜேந்திரன்: இதற்கு, இனவெறி தொடர்பான, ஐரோப்பியன் கட்டமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று நேரடியிலான இனவெறி. கறுப்பின மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் எதிராக, நேரடியான வெறுப்புணர்வை வெளிக்காட்டுகிறவர்கள். அவர்கள், பாசிஸ்டுகள், நாசிஸ்டுகள், என அதற்கான இயக்கங்கள் இருக்கின்றன. பிரான்சில் லே பென்னின் இயக்கம் அதுபோன்றது. அவர்கள் நேரடியாகவே இஸ்லாமிய மக்களை சித்திரவதைப்படுத்துவார்கள், அவர்கள் வாழ்க்கைக்கு இடையூறு செய்வார்கள், தெருக்களிலேயே அவர்களை அடிப்பார்கள். இன்னொரு முறை, நிறுவனமயப்பட்ட வன்முறை. அது என்னவென்றால், வெள்ளையின மேலாதிக்கம், இந்தியாவில் புத்தகங்களையெல்லாம் மாற்றி எழுதுகிறார்கள். பார்ப்பனர்கள்தான் மேன்மையானவர்கள், பார்ப்பனர்கள் மிகவும் உன்னதமானவர்கள், அம்பேத்கரின் புத்தகங்களிலேயேகூட, அவரது எழுத்துக்களில் பல்வேறு பக்கங்களை நிராகரித்து, தங்களுக்குச் சாதகமாக, குஜராத்தில் மீண்டும் பிரசுரிக்கின்றனர். தாங்கள் மேலானவர்கள் என்பதை நிரூபிக்க, இதனைச் செய்கின்றனர். இது ஸ்ட்ரக்சுரல் இன்ஸிட்யூஷனல் காஸ்டிசம் (Structural Institutional Casteism). அதுபோல, ஐரோப்பிய நாடுகளில், நிறுவனமயப்பட்ட இனவெறி இருக்கும். அது காவல்துறை அமைப்பில், கல்வித்துறை, அரசாங்க மட்டங்களில், வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்களில், மற்றும் வரலாற்றுப் புத்தகங்களிலும் இருக்கும். 

இதுதொடர்பாக, சமீபத்தில் நடந்த சிறு உதாரணத்தைச் சொல்கிறேன். Insurgent Empire by Priyamvada Gopal என ஒரு புத்தகம் வந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாசிசத்தை எதிர்கொள்வதற்கு, வின்செண்ட் சர்ச்சில் மிகப்பெரும் பாத்திரத்தை வகித்தார். ஆனால், அதேநேரத்தில், இந்தியர்கள் தொடர்பாக, மிக அவமானகரமான எண்ணத்தையே அவர் கொண்டிருந்தார். இந்தியர்கள் காட்டுமிராண்டிகள், இந்தியர்கள் அறிவற்றவர்கள் என்றெல்லாம் காலனியகாலத்தில் நிறைய பேசியிருக்கிறார் என்பது சம்பந்தமாக புத்தகம் எழுதப்பட்டது. வெர்ஸோ பதிப்பகம், அந்தப் புத்தகத்தை வெளியிட்டது. அப்புத்தகம் வெளியானதும், அது தொடர்பாக எந்தவித கருத்தரங்கங்களையும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தக்கூடாது என்று பிரச்சினைகள் வந்தன. காரணம் என்னவென்றால், இவ்வளவு பெரிய மேதைமையான, உத்தமமான மனிதனை, கேவலப்படுத்துவதற்காக இந்த கருத்தரங்கத்தை நடத்துகிறார்கள் என்று குற்றம் சுமத்தியது. ஆனால், உண்மை என்னவென்றால், இதுவெல்லாம் காலனியாதிக்கம் தொடர்பான வரலாற்றில் முக்கியமான விஷயங்கள்.


ஆக, இந்த நிறுவனமயப்பட்ட இனவெறி என்பது, எல்லா மட்டங்களிலும் இருப்பதுபோல, காவல்துறையிலும் இருக்கிறது. இது சம்பந்தப்பட்ட வழக்கு, பிரிட்டன் நாட்டிலும் வந்தது. அதாவது காவல்துறையில் இனவாதம் இருக்கிறது. காவல் அதிகாரிகள் இனபாகுபாட்டோடு செயல்படுகிறார்கள் என்ற வழக்கு விசாரணை நடந்தது. இந்த இனவெறிக் காவலர்கள், நியோநாசிஸ்டுகளோடு உறவுகொண்டிருக்கிறார்கள். இருவரும் இணைந்து வெறுப்பை, அகதிகள் மேல் பாவிக்கின்றனர்.

உதாரணத்திற்கு, படத்தில் சையத் கைதுசெய்யப்பட்டு அழைத்துச்செல்லப்படுகையில், அவனை விடுதலை செய்வதற்காக, மற்ற இருவரும் காவல் அலுவலகத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய இடத்தில் இருப்பவர், இஸ்லாமிய காவல்துறை அதிகாரிதான். அவர் மொராக்கோவிலிருந்து வந்த காவலர். அவர், கைது செய்யப்பட்டவரை அழைத்துவருவதற்காக, அங்கிருந்து செல்கையில், இந்த இருவரையும் கடந்துசெல்கிற மற்ற காவலர்கள், இந்த அகதிகளைப் பார்க்கும் பார்வை, பலவிதமான அசூயை உணர்வுகளை வெளிப்படுத்தும் பாவனைகளை, ஸ்லோமோஷனிலும், நெருக்கமான க்ளோஸ் அப் காட்சிகளிலும் இயக்குனர் நமக்குக் காட்சிப்படுத்துகிறார். இங்கு நிலவுவதற்குப் பெயர்தான், நிறுவனமயப்பட்ட இனவெறி. இறுதியில், வின்ஸைக் கொலை செய்கிறவன் கூட, இனவெறி மனப்பான்மை கொண்ட காவலர்தான். இப்படியாக, நேரடியான வன்முறையும், நிறுவனமயப்பட்ட வன்முறையும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக, இந்தப் புலம்பெயர் மக்களைச் சித்திரவதைக்குள்ளாக்குகிறது என்பதுதான் படம் சொல்லவருகிற செய்தி. 


அம்சவள்ளி: ஆனால், இந்த மூன்று இளைஞர்களுடனுமே போதை மருந்துகள் ஏதோவொரு வகையில் தொடர்புடையதாகயிருக்கிறது. இதை எப்படி எடுத்துக்கொள்வது?

யமுனா ராஜேந்திரன்: வேலையில்லாதவர்களுக்கு, வேறு எந்தவிதமான வருமானமும் இல்லாதவர்களுக்கு, நிஜ உலகின் துன்பத்திலிருந்து விடுபட்டு, கனவுலகில் சஞ்சாரிக்க நினைப்பவர்களுக்கான போக்கிடமாக போதை வஸ்துகள் இருக்கின்றன. இந்த மூன்று இளைஞர்களுமே பதின்ம வயதில் இருப்பவர்கள். இந்த வயதில் இருப்பவர்கள் எல்லோருமே, ஒருவிதமான இரண்டுங்கெட்டான் மனநிலையில்தான் இருப்பார்கள். அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்கள், சரியான பொருளாதார உத்திரவாதங்கள், சரியான கல்வி, சரியான இருப்பிடம், சாப்பாடு போன்றவை கிடைக்க வழிசெய்யும்போது, அவர்களை ஓரளவிற்கு நெறிப்படுத்த முடியும். ஆனால், இது எதுவுமே இல்லாதவர்கள், உடனடியாகத் தங்கள் சந்தோஷத்திற்கு என்ன செய்ய முடியும்? உடனடியாக இந்தச் சமூகத்தோடு இணைந்துகொள்வதற்கு, கவலைகளை மறப்பதற்கு, யாரைத் தேடமுடியும்? எந்தவகையான மனிதர்களுக்கும், நண்பர்கள், உறவுகள், அவர்களுக்கென ஒரு கூட்டம் இருந்தே தீர வேண்டும். அதுதான் சமூக இணக்கம். அதுபோன்ற உறவுகளாக, இந்த மூவருக்கும் யார் இருக்கிறார்களென்றால், போதை மருந்து தொழிலில் ஈடுபடுகிறவர்கள்தான். அவர்கள், போதை மருந்து தொழிலைக் கூட, அறவுணர்வோடு பொருத்திப் பார்க்கவே மாட்டார்கள். அப்படிப் பார்க்கவும் முடியாது. ஏனெனில், அவர்களுக்கான வாழ்க்கை உருவாக்கப்படாதபோது, வாழ்வே பிரச்சினையாகயிருக்கிறபோது, இதெல்லாம் நீதியுணர்விற்கு எதிரானது என்ற பார்வையே அவர்களிடம் இருக்காது. அந்தப் பார்வையைக் கடந்திருப்பார்கள். இந்தப் புள்ளியிலிருந்துதான் வன்முறை தொடர்பான விஷயங்கள், போதை மருந்து தொடர்பான விஷயங்கள், சமூக மாற்றத்திற்கு எதிரான கலகங்களைப் பார்க்கவேண்டும். கோதார்த்தின் லா சைனீஸ் படத்தில்கூட, அந்த இளைஞர்கள் அதிகம் படிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், ஆனால், ஒரு மனிதனைக் கொலை செய்கிற விஷயத்தை, மிகச் சுலபமாக அணுகுகிறார்கள். அடுத்து, இளைஞர்களுக்கேயுரிய இன்னொரு தன்மை, போராட்ட குணம், சாகசத்தன்மை. எல்லா இளைஞர்களுக்கும் இந்தச் சாகசத்தின்பால் ஈர்ப்பு இருக்கும். முந்தைய தலைமுறை சொல்வதை இந்தத் தலைமுறை மறுதலிக்கும். பெற்றோரே, தன் மகனுக்கோ மகளுக்கோ அறிவுரை சொல்லும்போது, “நீங்கள் வாழ்ந்த காலம் வேறு, நாங்கள் வாழ்கிற காலம் வேறு” என்று, மூத்தோர்கள் சொல்வதை, இளையவர்கள் கேட்க மறுப்பார்கள், எதிர்ப்பார்கள். அதேநேரத்தில், இளைஞர்கள் வெகுளித்தனத்தோடும் இருப்பார்கள். லாஹெய்ன் படத்தில் இடம்பெறுகிற கார் திருட்டுக் காட்சியை நீங்கள் இந்தக் கோணத்திலிருந்து அணுகலாம். 

காரைத் திருடுவதை, அவர்கள் முன்கூட்டியே திட்டமிடவில்லை. அந்நேரத்தில் என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். மற்றபடி, அவர்களுக்குக் காரை எப்படி ஓட்டவேண்டும் என்பதுகூட தெரியாது. அந்நேரத்தில், மதுகுடித்துவிட்டு தள்ளாடியபடியிருக்கிற ஒருவர், அந்த இளைஞர்களோடு தோழமையாகிறார். காவலர்கள் இந்த குடிகாரரை ஒரு குற்றவாளியாகக் கருதாமல், காமெடியனாகப் பார்க்கிறது. குடித்துவிட்டு வந்தவர், அந்த இளைஞர்களின் செயலுக்கு ஆர்ப்பரிக்கிறார். இந்த வேடிக்கைத்தன்மைதான், காரைத் திருடுகிற அந்த இளைஞர்களிடமும் இருக்கிறது. அந்த வயதிற்கேயுரிய துடுக்குத்தனமும், சாகச விளையாட்டுமாகத்தான் இந்த விஷயங்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள். அதுவே, காவல்துறை, அவர்களைப் பிடித்துச் சென்று, சிறையில் வைத்து அடித்து, கொலை செய்தால், அது பின்பு பெரிய கலகமாக வெடிக்கும். இம்மாதிரியான நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. லாஹெய்னில் இருக்கிற முக்கியமான அம்சம், இளவயதுக்குரிய பழக்கவழக்கங்களை மிக அற்புதமாகச் சொல்லியிருக்கிறது. அவர்களுக்கு முறையான கல்வி கொடுக்கப்பட்டு, வேலை, இருப்பிட உத்திரவாதத்தையும் வழங்கினால், இச்சமூகத்தில் அவர்களும் மேன்மையடைந்த மக்களாக வருவார்கள். ஏன், அவர்கள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கிறார்கள்? இரவுகளில் சுற்றித்திரிகிறார்கள்? ஏன் அவர்கள் கலகம் செய்கிறார்கள்? ஏன் போதை மருந்துகளை விற்கிறார்கள்? இத்தனை கேள்விகளையும், மனிதநேயத்தின் அடிப்படையில் இப்படம் அணுகியிருக்கிறது. இதனால்தான், கஸோவிட்ஸின் தலைசிறந்த படமாக, லாஹெய்ன் இன்றும் கொண்டாடப்படுகிறது. வின்ஸ் ஒரு காங்க்ஸர் போல நடந்துகொண்டாலும், உண்மையில் அவர் காங்க்ஸ்டர் அல்ல. அவரால் எளிதில் ஒருவரைச் சுடமுடியாது. அதையே க்ளைமாக்ஸ் காட்சி உணர்த்துகிறது. லாஹெய்ன், அகதிகளின், இளைய சமுதாய வாழ்வைக் கச்சிதமாகப் பதிவுசெய்ததன் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.


அம்சவள்ளி: உண்மையாக, இந்தக் கலவரத்தில் பள்ளிகளைக் கொழுத்துவது, உடற்பயிற்சிக் கூடத்தை நாசமாக்குவது, இதையெல்லாம் செய்தது அகதிகள்தான் என்பதுபோலச் சொல்வார்கள். ஆனால், காவல்துறையின் அராஜகத்தினால்தான் அவையெல்லாம் எரிக்கப்பட்டிருக்கும். யாராலும் பள்ளிகளுக்குச் செல்லமுடியாது. ஹ்பர்டின் உடற்பயிற்சிக்கூடம் உடைக்கப்பட்டிருக்கும். குழந்தைகள் உட்பட, அனைவரும் அப்படியப்படியே அமர்ந்திருப்பார்கள். அகதிகள் வாழ்வுக்கென உருவாக்கிய உடைமைகளை இல்லாமலாக்குவது, அதை அந்த அரசின் காவல்துறையே செய்கிறது.

யமுனா ராஜேந்திரன்: கலகத்தில், திட்டமிட்டு, இந்த உடைமைகளை அடித்து உடைக்க வேண்டும் என்று நடப்பது கிடையாது. இது அந்த உச்சகட்ட கோபத்தில் நிகழ்கிற உடனடி விளைவு. தமிழ்நாட்டிலேயேகூட, தை எழுச்சி சம்பந்தமான விஷயங்களில், மெரினாவில் போரடிக்கொண்டிருந்த மாணவர்களோ, மக்களோ கலவரத்தை ஆரம்பிக்கவில்லை. இன்றைக்கு, அதற்கான ஆதாரங்களையெல்லாம் பார்த்தீர்களேயானால், காவல்துறையே தனது வாகனங்களுக்கு தீ வைக்கிறார்கள். ஆனந்தவிகடன் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் காவல்துறையின் இந்தச் செயல்களெல்லாம் காணொளிகளாக வெளியாகின்றன. கலகத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெயரால், அரசே இத்தகைய செயல்களைச் செய்கிறது. இதன்மூலம், சாமான்ய மக்களை, போராடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு எதிராகத் திருப்புகிற வேலையையே காவல்துறை செய்கிறது. உலகெங்கிலும் இந்த நிறுவனமயப்பட்ட வன்முறை நடக்கின்றன. அதேபோல, பா.ஜ.க பல இடங்களில் குண்டுவைத்துவிட்டு, இதை இஸ்லாமியர்கள் செய்தார்கள் என்று அவர்கள்மீது பழிபோடும். காந்தி கொலையையே எடுத்துக்கொள்ளுங்கள், கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டுதான், காந்தியைக் கொலைசெய்யச் செல்கிறான். இதன் பின்னணிக் காரணம், காந்தியைக் கொலைசெய்தது ஒரு இஸ்லாமியர் என்றதான ஒரு சித்திரத்தை உருவாக்க வேண்டும். ஒருவேளை, காந்தியை இஸ்லாமியர்தான் கொலை செய்தார், என்று வெளியில் செய்திகள் பரப்பப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? மிகப்பெரிய கலவரங்கள் நடந்திருக்கும். இந்துக்களும் முஸ்லீம்களும் அடித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொன்றொழித்திருப்பார்கள். இதனை உணர்ந்துதான், நேரு, முதலில், ”காந்தியைக் கொலை செய்தது ஒரு இந்து” என்ற உண்மையைச் சொல்கிறார். நாடு முழுவதும் கலவரம் செய்ய, கோட்சே மேற்கொண்ட வழிமுறையைத்தான் ஆர்.எஸ்.எஸ் இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறது. பெங்காலில் நடக்கிற ஒரு தேர்தலில், மம்தா கட்சியைத் தாக்குவதற்கும், சி.பி.எம்மைத் தாக்குவதற்கும், நாட்டு வெடிகுண்டு உருவாக்குகிறபோது, ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர் இறந்துபோனார். கலவரங்களை உருவாக்கி, அதன் மூலம், வெகுசன சமூகத்தின் பார்வையில், இஸ்லாமியர்களையும், போராட்டக்காரர்களையும் எதிர்மறையாகச் சித்தரிக்க முயன்றதன் விளைவு இது. 

படத்திற்கு வருவோம். அகதிகள் எல்லோருமே வெவ்வேறுவிதமான கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கென வேறுவேறு கடந்தகாலங்கள் உள்ளன. வேறுவேறுவிதமான உடல்மொழி வாயிலாக உரையாடுகிறார்கள். இந்த வித்தியாசங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தங்களுக்குள் சகோதரிகளையும், தாய்மார்களையும் வசைபாடியபடியே உரையாடுகிறார்கள். இது ஒரு கலாச்சாரத்தில் ஏற்புடையதாகவும், இன்னொரு கலாச்சாரத்தில் மிகவும் மோசமான செயலாகவும் பார்க்கப்படும். உதாரணத்திற்கு, தாய்வழிச் சமூகமாகயிருக்கிற ஆப்பிரிக்காவில், தாயை வசைச் சொற்களால் திட்டுவது, ஏற்புடையதல்ல. ஆனால், தந்தைவழிச் சமூகமான ஐரோப்பாவில் அது நண்பர்களுக்குள் இயல்பாக உரையாடிக்கொள்வது. இந்த நுட்பமான, கலாச்சார மாற்றங்களுக்கான குறியீடுகளும் இந்தப் படத்தில் இருக்கின்றன. அடிக்கடி தோன்றுகிற பசு தொடர்பான காட்சிகளும் அதுதான். அகதிகளின் மனநிலை, பதற்றம், அவர்களுக்கிடையிலான முரண்பாடுகள், காட்சிப்படுத்தப்படுகின்றன. அந்த அகதிகள் வாழ் கட்டிடமும், கல்வியின்மை, வேலையின்மை போன்ற விஷயங்களும், இவற்றிற்கு மேலாக, காவல்துறையின் ஒடுக்குமுறையும்தான் அவர்களை இணைக்கிறது. அவர்களுக்குள்ளான உடன்பாடுகள், முரண்பாடுகளும் விவாதிக்கப்படுகின்றன.

அம்சவள்ளி: எரிந்து முடிந்த கலவரத்திற்குள் செல்கிறார்கள். அப்துலை கைது செய்து போகிறபோது, இவர்களும், போலீசாருடன் நேரடியாக மோதுகிறார்கள். வாழ்கிற இடத்திலிருந்து பாரீசுக்கு பயணம் செய்கிறார்கள். இரவு முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், ஒரே நேரத்தில், எப்படி இவர்கள், இவ்வளவு பெரிய கலவரம் நடந்துமுடிந்த பிற்பாடு, துப்பாக்கியும் கைகளில் கிடைத்துவிட்ட பிறகும், போலீசைக் கொலைசெய்ய வேண்டும் என்று அலைந்துகொண்டிருக்கிற இந்தச் சூழலிலும் எப்படி நிதானமாகயிருக்கிறார்கள்? எப்படி இயல்பான மனிதர்களாகயிருக்கிறார்கள்? அடுத்து, கேமரா சார்ந்த தொழில்நுட்பம் இந்தக் கதையோடு எப்படி இணைந்து செயலாற்றுகிறது?
யமுனா ராஜேந்திரன்: இது அவர்களுக்கு முதல்முறை நிகழ்வதல்ல, தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிற விஷயம். இவர்கள் அன்றாட வாழ்வின் அம்சமாக, வன்முறையும், போதைமருந்து தொடர்பும், காவல்துறையை எதிர்கொள்வதும் நடக்கிறது. காவல்துறை, இவர்களை எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி பரிசோதிப்பார்கள். பிரச்சினைகள் செய்வார்கள். எனவே, இந்த அன்றாட வாழ்விற்கு மத்தியில், கலவரம் என்பது, சற்று கூடுதலாக நடந்த விஷயம் அவ்வளவுதான். அதனால்தான், கலவரம் முடிந்தபிறகும், அவர்கள் சாதாரணமாக நண்பர்களைச் சென்று சந்திக்கிறார்கள், அமர்ந்து பேசுகிறார்கள், ஊர் சுற்றுகிறார்கள். ஒளிப்பதிவையும், நீங்கள் இதற்குத் தகுந்தாற்போலத்தான் பாவிக்க முடியும். பரபரப்பான சம்பவங்களைச் சொல்வதற்காக, நீங்கள் ஃபாஸ்ட் கட்களைச் செய்யவேண்டும். அதேவேளையில், நிதானமான அன்றாட வாழ்வை வாழ்கிறார்கள் என்கிறபோது, அதற்கேற்ற நிதானத்தை, ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் கொண்டிருக்க வேண்டும். உதாரணத்திற்குக் கடைசிக் காட்சியைப் பாருங்கள். வின்ஸ், துப்பாக்கியை ’நீயே வைத்துக்கொள்’ என்று, ஆப்பிரிக்க நண்பரிடம் (ஹ்யூபர்ட்) கொடுத்துவிட்டுச் செல்கிறார். அந்தக் காட்சி மிக அமைதியாக இருக்கும். ஆனால், அதற்கடுத்த காட்சியில், உடனடியாக ஒரு கொலை நடக்கிறது. இதற்குத் தகுந்தாற்போலத்தான் கேமரா மூவ்மெண்ட்களும் கட்டமைக்கப்படுகிறது. ஒரேநேரத்தில் அந்தப் பகுதியில் வன்முறையும், அதன் உச்சமும் நடக்கிறது. அதற்கு மத்தியில் மூன்று அகதிகளின் வாழ்வாகவும் கதை இருக்கிறது. 

ஆக, இவர்கள் மூன்றுபேர், இவர்களுக்குள் நடக்கிற விவாதங்கள், இது தொடர்பான விஷயங்களைச் சொல்லும்போது, கேமரா மெதுவாக நகரும். அதேநேரத்தில் இவர்கள் வெளியுலகத்திற்குச் செல்லும்போது, வேறு நண்பர்களுடன் சஞ்சாரிக்கும்போது, காவல்துறையைச் சந்திக்கும்போது அல்லது காவல்துறையால் துரத்தப்படும்போது, அங்கு கேமராவின் இயக்கம் வேகமாகயிருக்கும். இந்த இரு உணர்வுநிலைகளையும் சமன்படுத்துவதுபோலத்தான், கேமரா மற்றும் படத்தொகுப்பு தொழில்நுட்பம் பாவிக்கப்படுகிறது. 

அம்சவள்ளி: காட்சியில் எந்தவொரு ஃப்ரேமும் தேவையில்லாததாக, அல்லது காட்சியின் பின்னணியில் வருகிற கட்டிடங்கள், ஓவியங்கள் கூட, ஏதோவொரு கருத்தைச் சொல்கின்றன. அப்படியாக, இந்த இரு மனிதர்களின் ஓவியங்கள் காட்சியில் வரக்காரணம் என்ன? அவர்கள் இந்த பாரீஸ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு?

La Haine 20 years on: what has changed? | Movies | The Guardian

யமுனா: பெளட்லியோர் மற்றவர் ரிம்பாட் (Baudelaire and Rimbaud). இருவருமே கவிஞர்கள். ரிம்பாட் பிரான்சில் பாரிஸ் கம்யூன், அதேபோல பிரெஞ்சுப் புரட்சி போன்றவற்றை அதிகமாக வரவேற்ற கவிஞன். பெளட்லியோர் இப்படியாக அடிநிலை மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய கவிஞன். இவ்விருவரது ஓவியங்களும்தான் பின்னணியில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் பாட்லியோரின் கவிதைத்தொகுப்பு, ஆழி பதிப்பகத்தால் தமிழில் நாகர்ஜூனன் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது. 

அம்சவள்ளி: இந்தப் படம் சார்ந்து, பார்வையாளர்களுக்கு இருக்கிற பெரிய கேள்வி, வின்ஸின் கனவிலும், நேரிலும் அவ்வப்போது தோன்றுகிற ’பசு’ எதைக் குறிக்கிறது?

யமுனா ராஜேந்திரன்: இதை இரண்டுவிதமாக எடுத்துக்கொள்ளலாம். இது பார்வையாளர்களாகிய நாம், நமது புரிதலிலிருந்து எடுத்துக்கொள்கிற ஒன்றுதானே தவிர, இதற்கு அந்தத் திரைப்படத்தில் பணியாற்றியவர்களோ, இயக்குனரோ எந்த விளக்கமும் தரவில்லை, தரவேண்டியதும் இல்லை. மூன்று அகதிகள் படத்தில் வருகிறார்கள். இதில், மையக்கதாபாத்திரம் என்றால், நாம் வின்ஸைத்தான் சொல்லவேண்டும். அவருடைய இஸ்ரேல் சார்ந்த உறவுகள், கலாச்சாரம் சார்ந்த குறிப்புகள் நிறைய இடங்களில் வந்துகொண்டேயிருக்கும். இதில் இரண்டு சந்தர்ப்பங்களில் அவர் பசுவைக் காண்கிறார். சையத் ஒருமுறை, வின்ஸைத் தேடிக்கொண்டு செல்லும்போது, நான் பசுவைக் கனவில் கண்டேன் என்று சொல்கிறார். அதேபோல, சதுக்கத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, அப்போதும் வின்ஸ் தன் கண்களுக்குப் பசு தெரிந்தது என்று சொல்கிறான். அங்கிருக்கிற மற்ற இருவரது கண்களுக்கும் பசு தெரிவதில்லை. படத்தில் தோன்றுகிற பசு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், யூதக் குறிப்புகளில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் பசுவைக் கொலை செய்து, அதை எரித்து, அதன் சாம்பலை, பிண வீடுகளுக்குச் சென்று வந்தவர், அல்லது பிணத்தைத் தூக்கிச் சென்றவர், தன்னைச் சுத்திகரித்துக்கொள்வதற்காக அதாவது தீட்டுக் கழிப்பதற்காக, அந்தச் சாம்பலை நீரில் கரைத்து, தன்னைக் கழுவிக்கொள்கிறார். இது யூதக் கலாச்சாரத்தில் இருக்கிற ஒரு பழக்கம். ஒரு வித்தியாசம், யூதக் கலாச்சாரக் குறிப்புகளிலிருப்பது சிவப்பு பசு. படத்தில் காட்டப்படுவது வெள்ளைப் பசு. 

ஆனால், படத்தில் பசு இரண்டுமுறை காட்டப்படுவதாலும், வின்ஸின் நண்பரான அப்துல் மருத்துவமனையில் இறந்துபோவதாலும், அந்த மரணத்திற்குப் பழிவாங்குவதற்காகத்தான் வின்ஸ் அலைகிறார், அந்த நண்பனின் மரணத்திற்காக அதிக துயருகிறார் என்பதால், அந்த மரணம் நிகழப்போகிறது, என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்துவதுபோல, தன் கனவில் இந்தப் பசுவைப் பார்க்கிறார். இறப்பை முன்கூட்டியே சொல்லும் ஒரு குறியீடாகத்தான் பசு திரும்பத் திரும்ப அவர் கண்களுக்குத் தோன்றுகிறது. இது ஒரு பார்வை.
மற்றது, இன்னொரு பார்வை என்னவென்றால், காவலர்களையும் பசுவையும் ஒப்புமைப்படுத்தி, காவலர்கள் அடிக்கடி, நகரசபைக் குடியிருப்புகளில் தோன்றுகிறார்கள், சோதனை செய்கிறார்கள், இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடும் விதத்திலும் பசுவைத் தோன்றவைத்திருக்கலாம். 

ஆனால், இந்த இரண்டு பார்வையிலும், அப்துல் மரணமடையப் போவதை முன்கூட்டியே பசு, வின்ஸிற்கு உணர்த்துகிறது, என்பதுதான் நெருக்கமானதாக இருக்கிறது. ஏனெனில், இரண்டாவதில், பசுவை போலிசாருடன் ஒப்பிட்டால், போலீசாரின் வருகை என்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. எனவே, அதை மீண்டும் மீண்டும் நினைவுறுத்தவோ, அதைக் கனவில் கொண்டுவந்து எச்சரிக்கை செய்வதற்கென, எந்த விசேஷத் தன்மையும் கிடையாது. 

அம்சவள்ளி: ஒரு நாவலிலோ, புனை கதைகளிலோ, அல்லது இம்மாதிரியான திரைப்படங்களிலோ இதுபோன்ற குறியீட்டுப் படிமங்கள் வருவதற்கான தேவை?

யமுனா: ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள் வெவ்வேறு விதமாகச் சிந்திப்பதற்கு, அந்தப் பிம்பங்கள் வழி வெவ்வேறு வியாக்யானங்களைச் சென்றடைவதற்கான வெளி, எப்போதுமே படைப்புகளில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். எஸ்.பி.ஜனநாதனின் நேர்காணல் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். அவரது முதல் படமான ’இயற்கை’யில் பார்த்தீர்களேயானால், அந்தப் பெண், அந்த இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பார் என்பதற்காக, இரண்டுபேரின் பெயர்களையும் எழுதிப்போடுவார்கள். கடைசிவரைக்கும், அந்தக் காகிதத்தில் யார் பெயர் இருக்கிறது என்று தெரியாது. இறுதிக் காட்சியில், மருதுவின் கைகளிலிருந்து, அந்தக் குப்பி நழுவி கடலில் விழுகும். இது தொடர்பாக, இயக்குநர் என்ற முறையில் ஜனநாதனிடம், “அந்தக் காகிதத்தில் யார் பெயர் இருந்தது?” என்று கேட்கிறபோது, “எனக்கும் தெரியாது” என்றே சொல்கிறார். அதற்கு தான் வாசித்த நாவலென்றைச் சுட்டி, நாவலில் ஒரே பெயரில் இரண்டு பெண்கள். அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண் இறந்துபோகிறார். இறந்துபோன பெண் யார்? என்று நாவலாசிரியரிடம் வாசகர்கள் கேட்கிறார்கள். ”உண்மையில் எனக்கும் தெரியாது” என்று நாவலாசிரியர் சொல்கிறார். எழுத்தாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு இந்தச் சுதந்திரம் இருக்கிறது. 

எழுத்தாளர்கள் மனிதர்களைப் பார்த்துதானே கதைகள் எழுதுகிறார்கள். எனவே, இதுபோன்ற குறியீட்டுப் படிமங்கள், விடைதெரியாத கேள்விகள், அவர்களுக்குள்ளும் இருக்கிறது, இந்தச் சமூக வாழ்விற்குள்ளும் இருக்கிறது. மற்றொன்று, இதுபோன்ற கேள்விகள், படத்தை அசைபோட வைக்கும். சிந்திக்கவைக்கும். நாட்கள் கடந்தும் அந்தக் கேள்விகளைப் பற்றி யோசிக்கவைக்கும் சூட்சுமம்.

கழிவறையில் இருக்கும்போது, அகதி ஒருவர் வந்து இவர்களிடம் பேசுவார். தன் வாழ்வில் நடந்த கதையைச் சொல்வார். கான்செண்ட்ரேஷன் கேம்பிலிருந்து தப்பிக்க வேண்டும். இப்போது ஒரு ட்ரெயின் வரப்போகிறது. அதில் ஏறி பிழைத்துக்கொள்ள வேண்டும். அதேவேளையில், அவரது பேண்ட் இடுப்பில் நிற்காமல் நழுவிக்கொண்டு போகிறது. அவர் ட்ரெயினைப் பிடிக்க ஓடுகிறார். ஆனால், பேண்ட் இடையூறு செய்கிறது. இதில் அவர் ட்ரெயினில் ஏறினால், ஃபேண்டைத் தவறவிட வேண்டும், அல்லது ஃபேண்டைப் பிடித்துக்கொண்டிருந்தால், ட்ரெயினைத் தவறவிட வேண்டும். சுயமரியாதை அல்லது உயிர்பிழைத்தல் என இந்த இரண்டில் அவர் ஏதோவொன்றைத்தான் தேர்வுசெய்ய வேண்டும். உயிர்பிழைத்தல் என்பதில், ஃபேண்டைத் தவறவிட்டு அம்மணமாக நிற்பதற்கு அவர் விரும்பவில்லை. பிழைத்தலுக்கும், சுயமரியாதைக்கும் இடையேயான போரில், சுயமரியாதை வெற்றிபெறுகிறது. இந்த இரண்டகப்போக்கு மூன்று பேருக்குமே இருக்கிறது. வன்முறை தொடர்பாகவும், துப்பாக்கியால் கொல்வது தொடர்பாகவும்தான் தொடர்ந்து உரையாடலை மேற்கொள்கிறார்கள். இதைக் கேட்டுவிட்டுத்தான், அந்தப் பெரியவர் இந்தக் கதையை அவர்களுக்குச் சொல்கிறார். சையத்திற்கு, அவர் சொன்ன கதையின் அர்த்தம் புரியவில்லை. ஆனால், வின்ஸ் மற்றும் ஹபர்ட் புரிந்துகொண்டு அங்கிருந்து அமைதியாக நகர்கிறார்கள். 

படத்தில் பசு இடம்பெறுவது தொடர்பாக, திரையரங்குகளில் படம் முடிந்தபிறகு, பார்வையாளர்களிடையே பெரிய விவாதமே நடக்கிறது. கஸோவிட்ஸ் மிக முக்கியமான திரைப்பட இயக்குனர். அவர் போகிற போக்கில், சுவரோவியமாக ரிம்பாடைக் காண்பிக்கமாட்டார். நகரசபைக் கட்டிடங்களில், பெரிய பெரிய கட்டிடங்களின் சுவர்களில் ஓவியங்கள் இடம்பெறுவதென்பது, இன்றைக்கு, கலகக்காரர்களின் எதிர்ப்புணர்வின் ஒரு அம்சம். லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரத்தில் ப்ரைடா கொலா மற்றும் அவரது கணவரெல்லாம் மிகப்பெரிய ஆர்டிஸ்ட்களாக உருவானது, கிராஃபிட்டியில்தான். அதேபோல, ஆப்பிரிக்கக் கலாச்சாரத்திலும், ஆப்பிரிக்க அமெரிக்கக் கலாச்சாரத்திலும் ஹெர்லம் போன்ற இடங்களில் கிராஃபிட்டி என்பது எதிர்ப்புணர்வின் அடையாளம். இந்தியாவிலும் நீங்கள் தொடர்வண்டிகளில் பயணிக்கும்போது பார்த்தீர்களென்றால், இரயிலோரச் சுவர்களில் பல வண்ணங்களில் எழுதியிருப்பார்கள். அப்படித்தான் நகரசபைக் கட்டிடங்களில், அகதிக் குடியிருப்புகளில் இடம்பெறுகிற ரிம்பாட் மற்றும் பெளட்லியோரின் ஓவியங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. இப்படி படங்களில் குறியீடாக வருகிற விஷயங்கள் குறித்து, படம் முடிந்த பின்னரும் பார்வையாளர்கள் தேடுகிறார்கள். இதனால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும், இது நமக்கும் ஒரு கேள்வியாக எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கிற தேடுதலானது, மனிதர்கள் சம்பந்தமான உணர்வுகளை, உலகங்களை, கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வதற்கான அறிவை நமக்குத் தரும். 

அம்சவள்ளி: ஒரு பேட்டியில் படிக்கும்போது எனக்குத் தெரியவந்த விஷயம். 1993இல் கஸோவிட்ஸ், இப்படத்திற்கான திரைக்கதை எழுத ஆரம்பிக்கிறார். 1993இல் ஜாரே என்ற இடத்தில் போலீசார் ஒருவர் மாகோமே என்ற நபரைத் தவறுதலாகச் சுட்டுக்கொன்று விடுகிறார். இதற்கு முன்பு 1991இல் இதுபோல போலீசார் தவறுதலாகச் சுடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று. எதிரேயிருப்பவரைப் பயமுறுத்தவேண்டும் என்று நினைத்து துப்பாக்கியை நீட்டி மிரட்டுகையில், தவறுதலாகச் சுடப்பட்டு இறந்துபோதல். லாஹெய்னின் இறுதிக் காட்சியிலும் வின்ஸ் இவ்வாறுதான் சுட்டுக்கொல்லப்படுகிறார். இந்த உண்மைச் சம்பவம், அப்படியே வின்ஸிற்கும் நடக்கிறதல்லவா! 

யமுனா: கலைப்படைப்போ, வாழ்க்கையோ, இரு பரிமாணங்களில் இருக்கும். ஒன்று திட்டமிட்டுச் செய்யப்படுகிற செயல்கள். இன்னொன்று தற்செயல்கள். வாழ்க்கை, திட்டுமிட்டுச் செய்யப்படும் செயல்களாலும் ஆனது, தற்செயல்களாலும் ஆனது. இந்த க்ளைமேக்ஸ் காட்சியில் இருக்கிற விஷயம் என்னவென்றால், நியோநாஜிக்களை நக்கல் செய்கிறபோது, அதனோடு தொடர்புபடுத்திக்கொள்கிற போலீசாரும் இவர்களைத் தேடி வருகிறார்கள். இது திட்டமிட்டது. 

எப்படி இது திட்டமிட்ட செயலாகிறது? மூன்று சாதாரண இளைஞர்கள். அவர்கள் கோபத்தில் ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்று விட்டிருக்கலாம்தானே! ஆனால், அப்படியல்லாமல், அவர்களைத் தேடிச்சென்று பிடித்து, சிறையிலடைத்து, அவர்களைச் சித்திரவதை செய்யவேண்டும் என்று உணர்வு, இது இனவெறி சிந்தனையுள்ளவர்களின் திட்டமிட்ட செயல்.  
இந்தத் திட்டமிட்ட நிகழ்வில் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டுவது என்ற விஷயமும், பயமுறுத்துவது என்பதும் திட்டமிட்டது. ஆனால், கொல்லவேண்டும் என்பது திட்டமிட்ட செயலாக இருக்கமுடியாது. ஏனெனில், கொன்றதன் பின்னால், அதற்கான விளைவுகள் வேறுவிதமாக இருக்கும். அரசிற்குப் பதில்சொல்ல வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரிய கலவரங்களை உண்டாக்கக்கூடியதாக இருக்கும். விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். தான் பணியிலிருந்து துரத்தப்படவும் நேரும். எனவே, போலீசார், வின்ஸைக் கொலைசெய்தது என்பது திட்டமிட்டதல்ல. தற்செயலானதாகவே இருக்கலாம். 

ஒரு சம்பவத்தில் எது திட்டமிட்ட செயல்? எது தற்செயல்? ஆனால், இந்தத் திட்டமிட்ட செயல்தான், அந்த தற்செயல் நிகழ்விற்கு இட்டுச்செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சொன்னதுபோல 1991, 1993 என இந்த இடைப்பட்ட காலத்திற்குள் நான்கு தற்செயல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஏன் திரும்பத் திரும்ப தற்செயல் மரண நிகழ்வுகள் நிகழ்கின்றன. போலீசாரை, இந்த தற்செயல் நிகழ்விற்கு இட்டுச்சென்றது என்ன? அதுதான் நிறுவனமயப்பட்ட, அமைப்புரீதியிலான இனவெறி. அடுத்தது, துப்பாக்கியைக் காட்டி, அவனை அடிபணியவைக்க வேண்டும், மண்டியிடவைக்க வேண்டுமென்ற உணர்வு. இந்த உணர்வுதான், உங்களுக்கு நிறுவனமயப்பட்ட வன்முறை, நிறவெறி, சித்திரவதைகள் போன்றவைகளுக்கு நகர்த்துகிறது. 

இதே தற்செயல் நிகழ்வுகளை, கலகத்தில் ஈடுபடுகிறவர்கள் மீதும், போராடுகிறவர்கள் மீதும் நடத்துகிற துப்பாக்கிச்சூட்டில் பலியாகிற உயிர்களுக்காகவும் சொல்லமுடியும். இந்த இளைஞர்களுக்கு நேர்ந்ததெல்லாம், அவர்கள் எதையும் திட்டமிட்டு நிகழ்த்தியதல்ல. அவர்களுக்கு வேறு தேர்வுகளே இல்லை. அதனால்தான் அவர்கள் அந்த தற்செயல் நிகழ்வுகளுக்குள் செல்கிறார்கள். ஆனால், அரச வன்முறை என்பது திட்டமிட்டது. அகதிகள் தங்களுக்குக்கீழ்தான் இருக்க வேண்டும், எதையும் எதிர்த்துப் போராடக்கூடாது, தாங்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று நினைப்பதன் விளைவுதான் இது. 

வின்ஸைச் சுட்டுக்கொன்ற பிறகு, சையத்திற்குக் க்ளோஸ் அப் செல்கிறபோது, சையத் சொல்கிற விஷயமும், இதற்கு முன்பு ஹ்யூபர்ட் சொன்ன விஷயமும் ஒன்றாகயிருப்பதை நாம் பார்க்கலாம். ”ஏற்கனவே எங்கள் நண்பனைக் கொலைசெய்துவிட்டார்கள். தங்களையும் குறிவைத்திருக்கிறார்கள். எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ, அதற்குள் சென்று வீழ்கிறோம்” என்றுதான் சையத்தின் க்ளோஸ் அப் சொல்கிறது. அடுத்து, ஹ்யூபர்டும், போலீசாரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் குறி பார்த்தபடி நிற்கின்றனர். துப்பாக்கிச் சப்தம் கேட்டதோடு திரை இருள்கிறது. யார் யாரைச் சுட்டார்கள்? என்று தெரியவில்லை. ஆனால், இச்சம்பவம் இன்னொரு கலவரத்திற்கு அடிகோலியிருக்கிறது என்ற செய்தியோடு படம் முடிகிறது. 

மூன்று அகதிகளின் வாழ்வை, குற்றவாளிகளை அணுகுவதுபோல அல்லாமல், ஒரு மனநல மருத்துவர், குழந்தைகளை அணுகுவதுபோல, இப்படம் அணுகியிருக்கிறது. நிறுவனமயப்பட்ட இனவெறியால், இந்த இளைஞர்கள், இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று படத்தின் இறுதியில் புரிகிறது. உண்மையில், படம் பார்த்து முடிந்தபிறகு, உங்களுக்கு ஏற்படுகிற மனோநிலை என்னவாகயிருக்கிறதென்று பாருங்கள். இந்த அரச வன்முறை தொடர்பான, பயங்கரமான கோபத்தில் நீங்கள் இருப்பீர்கள். காவல்துறை மீது கடுமையான கோபமிருக்கும். ஆனால், பழிவாங்கவேண்டுமென்று துப்பாக்கியோடு திரிகிற, போதை மருந்துகளுக்கு அடிமைகளாகயிருக்கிற, போதை வஸ்துக்களை விற்கிற, வேலையில்லாமல் திரிந்துகொண்டிருக்கிற, எந்தப் பொறுப்புமில்லாமல் சுற்றித்திரிகிற அந்த இளைஞர்கள் மீதோ, அந்த பதின்வயது பெண்கள்மீதோ, ஆண்கள் மீதோ, அகதிகள் மீதோ உங்களுக்கு எந்தக் கோபமும் வராது. பரிவுணர்வுதான் வரும். இதைத்தான் ஒரு கலைஞனாக மாத்யூ காஸ்டோவிட்ச் லாஹெய்னில் சாதித்திருக்கிறார்.