போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தெரிந்துகொள்வோம்

திரைப்படம் எழுத்து மேசையில் உருவாகி எடிட்டிங் மேசையில் முடிவடைகிறது. Wong kar wai போன்ற இயக்குனர்கள் எடிட்டிங்கில் தான் ஒரு படத்தை உருப்பெற வைக்கிறார்கள். எனவே, திரைப்பட உருவாக்கத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் மிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டிய ஒன்று. பல இயக்குனர்கள், திரைப்பட முன் தயாரிப்புத் திட்டத்தின்பொழுது சாசுவதமாக உள்ளனர். ப்ரீ-புரொடக்‌ஷன் என்பது, உங்கள் கதையை அனைவரும் ஏற்றுக்கொள்ளச் செய்யவும், முதலீட்டாளர்களைச் சம்மதிக்க வைத்து படப்பிடிப்பைத் துவங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய இடமாக இருக்கிறது. ப்ரீ-புரொடக்‌ஷனில் பலரையும் சமாதானப்படுத்த வேண்டியுள்ளது. உங்கள் கதை சார்ந்த விளக்கங்களை, மதிப்பைப் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். பின்னர், உங்கள் கதையை அடுத்தக் கட்டத்திற்கு, திரைப்படமாக நகர்த்துவதற்கு நடிகர்களின் சம்மதம், நிதிநிலை தொடர்பான சாதகமான அம்சங்கள், பிற தொழில்நுட்பக் குழுவினரின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு, தயாரிப்பாளருடனான ஒப்பந்தம் என அனைத்திற்கும், கதவிற்கு வெளியே காத்திருக்கும் நொடிகள், நகம் கடித்தபடியே நகர்ந்துகொண்டிருக்கும் காத்திருப்பு வேலைகள் பதட்டத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். இத்தகைய சம்மதங்கள் எல்லாம் கிடைத்துவிட்டால், நிச்சயமாக, உங்கள் கதைக்கு ஒரு திருப்பு முனை கிடைத்து, படப்பிடிப்பு எனும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. 

உண்மையான ப்ரீ-புரொடக்‌ஷன் என்பது, திரைக்கதையை உருவாக்குவதற்கு, மேம்படுத்துவதற்கு, நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, உடன் பணியாற்ற தொழில்நுட்பக் கலைஞர்களை நியமிப்பதற்கு, குழுவைப் பாதுகாப்பதற்கு என பணத்தைச் செலவழிப்பது. இதில் அதிகமான பணம் செலவாவதற்கு வாய்ப்புகள் இல்லை. அடுத்த முக்கியமான விஷயம், நிதிநிலை என்பதை வைத்துப் பார்க்கிறபொழுது, முன் தயாரிப்புப் பணிகள் கடினமானதும் அல்ல.

இரண்டாம் கட்டம். புரொடக்‌ஷன் – நிதி ஆதாரம் கிடைத்தபிறகு படப்பிடிப்பு துவங்குகிறது. இது குறிப்பிட்ட படத்தினைப் பொறுத்து, படப்பிடிப்பு காலமும் மாறும். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடப்பதாக இருந்தால், அல்லது புகழ்பெற்ற நடிகர்களின் கால்-ஷீட்டைப் பொறுத்து படப்பிடிப்புக் காலம் இரண்டு, மூன்று ஷெட்யூல்களாகப் பிரிக்கப்படும். ஒரு ஷெட்யூலுக்கும், அடுத்த ஷெட்யூலுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி தரப்படும். 

 ஒரு படம் எடுக்க முப்பது நாட்கள் ஆகிறது என்றால், அதில் ஒவ்வொரு நாளும், படப்பிடிப்புக் குழுவை ஒருங்கிணைத்து, நடிகர்களை வரவழைத்து, அவர்களைக் காட்டிலும் இயக்குனராக நீங்கள் தினமும் 14-18 மணிநேரம் அதிகாலையிலிருந்து அந்தி சாயும் நேரம் வரையில் கடுமையாக உழைக்க வேண்டும். இதுதான் உடலையும், மனத்தையும் கடினமான வேலைகளுக்கு உட்படுத்த வேண்டிய இடம். சோர்வு, பளு, அயர்ச்சி என பலவற்றைக் கடக்க வேண்டியிருக்கும். இயக்குனராக நீங்கள், உங்கள் குழுவை சோம்பலுக்கு இடம்தராமல், ஊக்கத்தோடு நகர்த்திச்செல்ல வேண்டும்.

புரொடக்‌ஷனின் பொழுது எல்லாமே ஒரே நேரத்தில் நடக்கிறது. நடிகர்கள், கேமரா, லைட்டிங்ஸ், பின்னணி பொருட்கள், அட்டவணை, தன்முனைப்பு, கட்டுக்கடங்காத கோபம், என இன்னபிறவும் இதில் சேர்கிறது. புரொடக்‌ஷன், வழக்கமாக மகிழ்ச்சியாகவும், ஊக்கத்தோடும், நடப்பதாக இருந்தாலும், அதைச் சரியாக நிர்வகிக்கத் தெரியாவிடில், உங்கள் வாழ்க்கையில் மிக மோசமான இரண்டு அல்லது மூன்று வாரங்களைச் செலவிட்டிருப்பதாகத் தோன்றக்கூடும். ஆனால், நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுகிறபொழுது, உங்களையும், கதையையும் திருப்திப்படுத்தக்கூடிய ஷாட்கள் கிடைக்கும். தொடர் முயற்சியுடன் செயலாற்றி உங்கள் படத்தை முடிக்கிறபொழுது, அனைவரும் தங்களுக்குள்ளான மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஒருவரையொருவர் கட்டியணைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். அனைவரும் வீட்டிற்குச் செல்கின்றனர். எனினும், படம் இன்னும் முழுவதுமாக முடிவடையவில்லை எனும் விஷயம் உங்களுக்குத் தெரிகிறது. தோராயமாக இரண்டு நாட்கள் ஓய்விற்குப் பின் மீண்டும் எழுகிறீர்கள். 
நீங்கள் எழுகிறபொழுது, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஃபுட்டேஜ்கள் நினைவுக்கு வருகின்றன. அவை, ஒரு படத்தின் கால அளவை விட அதிகமாக எடுக்கப்பட்டவையாக இருக்கும். பல டேக்குகள் எடுக்கப்பட்டிருக்கும். இவற்றை ஒருங்கிணைத்தால்தான் படம் நிறைவுபெறும். நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள். இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்? பதில், நிச்சயமாக எளிமையானது. இப்போது நீங்கள் போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகளைத் துவங்க வேண்டும்.

எனினும், இங்கு நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்பொழுதே, அன்றைக்கு எடுக்கப்பட்ட காட்சிகள், அன்றைக்கே படத்தொகுப்பாளர் வசம் ஒப்படைக்கு, படத்தொகுப்பு செய்யப்படுகின்றன. எனவே, படப்பிடிப்பு முடிந்தபின்பு, ஏற்கனவே படத்தொகுப்பு செய்து வைக்கப்பட்டிருப்பவற்றைப் பார்த்து, அதில் திருத்தங்களை மேற்கொண்டாலே போதுமானது. எனவே, முழுப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, பின்பு அனைத்தையும் படத்தொகுப்பாளருடன் அமர்ந்து படத்தொகுப்பு செய்கிறபொழுது, நேரமும், உழைப்பும் மிக அதிகளவில் தேவைப்படுகிறது. அத்தகைய சுமையை, இதுபோன்ற பணிகள் குறைக்கின்றன. போஸ்ட் புரொடக்‌ஷனில், படத்தொகுப்புதான் பிரதான இடம் பிடிக்கிறது என்றாலும், ஒலி வடிவமைப்பு, மிக்ஸிங், வி.எஃப்.எக்ஸ், டி.ஐ, கலர் கரெக்‌ஷன், பின்னணி இசை, டப்பிங்க், சிறப்பு சப்தம், என பல படிநிலைகள் உள்ளன. இவையனைத்தையும், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஃபுட்டேஜ்கள் ஒவ்வொரு நிலையாகக் கடந்துவருகிறபொழுதுதான் முழுமையான திரைப்படம் பார்வைக்குக் கிடைக்கிறது. 

போஸ்ட் – புரொடக்‌ஷன் எப்படியோ, தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலான மக்களை அச்சுறுத்தும் செயலின் பகுதியாக உள்ளது. ஆனால், நினைவில் வையுங்கள். போஸ்ட் புரொடக்‌ஷன் அவ்வளவு கடினமான பணி அல்ல. படப்பிடிப்பு அதாவது புரொடக்‌ஷன் தான் மிகவும் கடினமானது. முன் சொன்னதுபோல, ஒவ்வொரு படிநிலைகளாகக் கடக்கிறபொழுது, போஸ்ட் புரொடக்‌ஷன் என்பது சிரமமானதாக இருக்காது.

Image result for post production jobs

உங்கள் திரைப்படத்தை முழுமையாக முடித்து வெளியிட, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இந்த பதின்மூன்று படிநிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும். மேலும் இவை, செய்யவேண்டிய பணிகளின் வரிசைகளின் அடிப்படையிலேயே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. படப்பிடிப்பில் செயலாற்றியது போல இங்கே நீங்கள் பதினெட்டு மணிநேரங்கள் உடல் உழைப்பைச் செலுத்த வேண்டியதில்லை. இயக்குனராக உங்கள் மிக முக்கியமான வேலை, ஒரு படைப்பை உயிர்ப்போடு வெளிக்கொண்டுவர, அதில் யார் யாரெல்லாம் பங்காற்றினால் சிறப்பாக இருக்குமோ, அவர்களை அடையாளங்கண்டு பணியில் அமர்த்தி அவர்களிடமிருந்து வேலை வாங்குவதேயாகும். போஸ்ட்புரொடக்‌ஷனின் பொழுதும், எடிட்டர், செளண்ட் இஞ்ஜினியர், ம்யூசிக் என நபர்களை அடையாளங்கண்டு, பணியமர்த்த வேண்டும். பின்பு, அவர்கள் செய்கிற பணிகளை மேற்பார்வையிட்டு, தன் படத்திற்கு என்ன வேண்டும் என்பதை அவர்களிடம் தெளிவாக வெளிப்படுத்தி, அவர்களிடம் வேலை வாங்க வேண்டும். பின்பு நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்களைச் சந்தித்து, அவர்கள் செய்து வைத்திருக்கிற வேலையைப் பார்வையிட்டு, அதில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் சொல்ல வேண்டும். நீங்கள் மனதில் நினைத்திருக்கிற உணர்வு, கதைக்குத் தேவையான உணர்ச்சி காட்சியில் வெளிப்படுகிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும். இதுதான், போஸ்ட் புரொடக்‌ஷனில் இயக்குனரின் வேலை. மீண்டும் சொல்கிறேன், போஸ்ட் புரொடக்‌ஷன், நீங்கள் நினைத்ததுபோல, அவ்வளவு கடினமான பணி அல்ல. 

போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ள 13 படிநிலைகள்:

எந்த ஃபார்மேட்டில் படத்தொகுப்பு செய்யப்படவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்தல்.

படத்தொகுப்பை இரண்டு வழிகளில் மேற்கொள்ளலாம். முதலில், பழமையான வழக்கம். அதாவது படச்சுருளில் படத்தொகுப்பினை மேற்கொள்வது. ஃப்லிமில் எடிட் செய்கிறபொழுது, அதற்குப் பயன்படுத்தக்கூடிய கருவிகளும் மாறுகின்றன. ஸ்டீன்பேக், மூவியாலா போன்ற இயந்திரங்கள்தான், ஃப்லிமில் படத்தொகுப்பு செய்யப்பயன்படுகின்றன. முழுக்கவும் கைகளாலே, ஒரு ஃப்லிமோடு மற்றொன்றைச் சேர்த்து, ஒட்டி இணைத்து, முழுப்படத்தையும் உருவாக்க வேண்டும். இன்றைக்கும் கூட வெகு சில படத்தொகுப்பாளர்கள், ஃப்லிமில் படத்தொகுப்பு செய்து வருகின்றனர். 

மற்றொன்று டிஜிட்டல் வழிமுறை. இது நவீனமானது. டிஜிட்டல் ஃபார்மேட்டில் ஃபுட்டேஜ்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கும். கணினியின் வாயிலாகவே படத்தொகுப்பு செய்யப்படுகிறது. இம்முறையில்தான் பெரும்பாலான படங்கள் படத்தொகுப்பு செய்யப்படுகின்றன. எனவே, இதில் வேலை செய்வதற்கான ஆட்கள் எளிதாகக் கிடைக்கின்றனர். 

படத்தின் உணர்வு, Mood ஆகியவற்றைப் பொறுத்து, இதில் எந்த வடிவத்தில், படத்தொகுப்பு செய்யலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். எனினும், டிஜிட்டலைக் காட்டிலும், ஃப்லிமில் படத்தொகுப்பு செய்வது கூடுதல் பொருட்செலவைக் கொண்டுவரும்.

 படத்தொகுப்பாளரை பணியமர்த்தல்.

நீங்கள் இச்சினிமாத் துறைக்குப் புதியவராக இருந்தால், உங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளருக்கான பரிந்துரைகளைக் கேட்பதற்கு உகந்தவர். அவருக்கு படத்தொகுப்பாளர்கள் சார்ந்து நிச்சயம் பரிச்சயம் ஏற்பட்டிருக்கும். எனவே, பட்ஜெட்டிற்கு ஏற்ப, திறமையாகவும் செயல்படக்கூடிய எடிட்டரை அவர் அறிமுகப்படுத்தலாம். அல்லது, இணையத்திலோ, வேறு சில நண்பர்கள் மூலமாகவோ ஒரு எடிட்டரை நீங்கள் கண்டுபிடிக்கலாம். ஆனால், அவரிடம் வேலை வாங்கவேண்டியது உங்கள் பொறுப்பு.

ஒரு எடிட்டரின் வேலை Edit Decision List (EDL)-ஐ உருவாக்குவது. முதலில் எடிட்டர் ஸ்கிரிப்டினைப் படிக்கிறார், பின்பு நீங்கள் படப்பிடிப்பில் எடுத்திருக்கிற ஃபுட்டேஜ்களைப் பார்க்கிறார். ஸ்கிரிப்டையும், எடுக்கப்பட்ட ஃபுட்டேஜ்களின் காட்சிகளையும் ஒப்பிடுகிறார். இந்தத் தகவல்களிலிருந்து கதையைச் சிறந்ததாக வெளிக்கொண்டுவரும் கருத்தின் அடிப்படையில், எடிட் செய்யத் துவங்குகிறார். இந்த மிகப்பெரிய படைப்பாற்றல் பொறுப்பைக் கொண்டு, ஒரு புரொடக்‌ஷன், அதாவது படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே, ஒரு படத்தொகுப்பாளரைத் தேர்ந்தெடுப்பது அவசியமானது என்று வலியுறுத்துகிறேன். ஒரு சிறந்த படத்தொகுப்பாளர், இந்த ஸ்க்ரிப்டிற்கு என்ன மாதிரியான ஷாட்கள் பொருந்தும், இந்தக் காட்சியை இந்த ஷாட்டில், கோணத்தில் எடுத்தால் நன்றாகயிருக்கும் போன்ற ஆலோசனைகளை வழங்குவார். மேலும், போஸ்ட் புரொடக்‌ஷனில் வரக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்கும்பொருட்டு எப்படி படப்பிடிப்பு செய்ய வேண்டும், காட்சியமைக்க வேண்டும், என்பது குறித்தும், படப்பிடிப்பு துவங்கும் முன்பே அறிவுறுத்துவார்.

எனவே, பிற்பாடு நிகழப்போகிற போஸ்ட் புரொடக்‌ஷன் சார்ந்த பல பிரச்சினைகளிலிருந்து நம்மால் எடிட்டரின் உதவியோடு முன்கூட்டியே தப்பிக்கமுடிகிறது.

ஒரு முழு திரைப்படத்தைப் படத்தொகுப்பு செய்வதற்கான, சராசரியான கால அட்டவணை என்பது 8-லிருந்து 10 வாரங்கள் ஆகும். இந்நேரத்தில், உங்கள் எடிட்டர், உங்கள் படத்தின் பல்வேறு வரைவுகளை உருவாக்குகிறார். முதல் வரைவு, Rough Cut எனப்படுகிறது. அடுத்து, அதையே கொஞ்சம் கொஞ்சமாக செப்பனிடுவது. திருத்தங்கள் மேற்கொண்டு, திரைப்படத்தின் முழுமையான வடிவத்திற்கு அதனை மாற்றுவது. 

படத்தொகுப்பைப் பொறுத்தவரை இரண்டு வகையான முடிவுகள் உள்ளன: முதலில் காட்சியியல் ரீதியாக, அது சரியாக எடிட் செய்யப்பட்டிருக்க வேண்டும். காட்சிக்கோர்வைகள் சரியாக இணைந்தபின், அதைப் பார்க்கிற நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். அத்தோடு அந்தப் பிம்பங்களைப் பூட்ட வேண்டும். அதாவது Picture Lock. 

அடுத்த முடிவானது, ஒலி சார்ந்து. காட்சிகளைப் போலவே, ஒலியும் கோர்வையாக இருக்கிறதா?, என்பதைக் கவனிக்க வேண்டும். ஒலி காட்சியோடு இணைந்து வெளிப்பட்டு, கதைக்குப் பொருத்தமான தொடர்பைக் கொடுக்கையில் ஒரு வித மகிழ்ச்சி ஏற்படும். அத்தோடு அந்த ஒலித் தடத்தைப் பூட்ட வேண்டும். இது Sound Lock எனப்படுகிறது.

ஒலித் தொகுப்பாளரை நியமித்தல்.

படப்பிடிப்பு முடிந்து, இப்போது இரண்டு மாதங்கள் கழித்து, காட்சிப் பிம்பங்கள் மிகவும் இறுக்கமாகக் கோர்க்கப்பட்டுள்ளன. எனவே, இச்சமயத்தில் நீங்கள் ஒலியின் தோற்றத்தை, அந்தக் காட்சிப்பிம்பங்களுக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். எனவே, ஐந்திலிருந்து ஆறு வாரங்களுக்கு ஒரு ஒலித் தொகுப்பாளரையும், உதவியாளரையும் நியமிக்க வேண்டும். (அ) உரையாடல் தடங்களை வெட்டுதல். (ஆ) ஒலி விளைவுகளை மீளுருவாக்கம் செய்தல், மற்றும் (இ) படிநிலை 7-னை (Do re-recording/the mix) எளிதாக்குவதற்கான செயல்களை இங்கு மேற்கொள்ள வேண்டும்.  

Image result for post production jobs
ADR (Automatic Dialogue Replacement)

இங்கு அப்படி என்ன நடக்கிறது? ஒரு பெரிய அறையில் படிநிலை 2-லிருந்து கிடைக்கிற காட்சிப்பிம்பங்களைப் புரொஜக்டரின் வழியே ஒளிபரப்புவார்கள். அதில் தெளிவற்ற மற்றும் கூர்மையற்ற உரையாடல் வசனங்கள் வருகிற வேளையில் நடிகர்கள் திரும்ப வந்து, அதற்குரிய சொற்களைப் பேசுவார்கள். அடுத்து, திரையில் தெரிகிற நடிகரின் உதட்டசைவுக்கும், பின்னணியில் ஒலிக்கிற குரலுக்கும் ஒத்திசைவு ஏற்படாதபொழுது, அதையும் சரிசெய்யக்கூடிய இடமாக இதுவே இருக்கிறது.
பின்னணி சப்தங்கள்.

ADR அறைபோன்ற ஒன்றில் இச்செயல்முறை நடக்கிறது. ஆனால், இம்முறை நடிகர்களுக்குப் பதிலாக, சிறப்பு சப்தங்களை எழுப்பக்கூடிய கலைஞர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் Foley Artists என்றழைக்கப்படுகின்றனர். காட்சியில் ஒருவர் நடந்துவருகிறார் என்பதைக் காண்பிப்போம். ஆனால், அவர் நடந்து வருவதற்கேற்ப காலடி ஓசை பதிவுசெய்யப்படாமலிருக்கும். எனவே, இதைப் பார்க்கிற பார்வையாளர்களுக்குக் காட்சியில் ஏதோவொரு குறை இருப்பதாகவே தோன்றும். அல்லது, முழுமையான காட்சியின்பத்தை அவர்களால் அனுபவிக்க முடியாது. எனவே, அம்மாதிரியான காட்சிகளில் இந்தக் கலைஞர்களைக் கொண்டு, திரையில் வருகிற நடிகரின் காலடி சப்தத்திற்கு ஏற்ப, Foley Artist சப்தமெழுப்புவார். பின்பு, அது காட்சியோடு இணைக்கப்படும். இதுபோல, படத்தின் பின்னணியில் வரக்கூடிய சிறுசிறு சப்தங்கள், ஒலிகள் எல்லாம் இங்கேயே உருவாக்கப்பட்டு காட்சியோடு இணைக்கப்படும். 

 இசை

முதலில், உங்கள் படத்தின் இசை சார்ந்து, நீங்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பார்த்துவிடுவோம். நீங்கள் உரிமைகளை வாங்கவில்லையெனில், எந்தவொரு பிரபலமான பாடலையும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், படம் வெளியான பிற்பாடு, இது பல சட்டச்சிக்கல்களைக் கொண்டுவரும். இணையத்தில் கிடைக்கிற இசை, ஏற்கனவே பலரால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாக இருக்கும். அடுத்து, இசைத் துணுக்குகளை இணையத்திலேயே விற்பனையும் செய்கின்றனர். அதுவும் கூட சற்று விலை அதிகமானதுதான். மேற்கொண்டு, அவற்றை அப்படியே வாங்கி உங்கள் படத்தில் பயன்படுத்த முடியாது. மேலும் அதில் சிற்சில திருத்தங்கள் செய்யவேண்டும். அதற்கு உங்களுக்கு ஒரு இசையமைப்பாளர் தேவைப்படுவார். மிக முக்கியமாக, அந்த இசைத்துண்டு, காட்சிக்குப் பொருத்தமாக அமைகிறதா? என்பது முக்கியம். முன்னர் வெளியிடப்பட்ட CD-ROM இசையைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவை மோசமான தரத்துடன், இருக்கும். போதுமான Quality இருக்காது. 

இதற்கு மாற்றாக, நீங்கள் செய்யவேண்டிய மிக எளிமையான வழிமுறை என்னவென்றால்: சொந்த ஸ்டூடியோவுடன் கூடிய இசைக்கலைஞரைப் பயன்படுத்துங்கள். அல்லது சிறு ஸ்டுடியோ-வை சில நாட்களுக்கு வாடகைக்கு எடுக்க வேண்டும். இங்கு உருவாகிற பாடல்கள் மற்றும் இசைக்கு உங்களுக்கு உரிமை உண்டு. கதைக்குத் தேவையான இசையை நீங்களே கேட்டுப்பெறலாம். 

ரீ-ரெக்கார்டிங் / மிக்ஸ்

இப்போது உங்களிடம் 20 லிருந்து 40 ஒலித் தடங்கள்(dialogue, ADR, Foley, music) இருக்கும். எது முதலில் வரவேண்டும், எந்த ஒலித் தடம், பிரதானமாக ஒலிக்க வேண்டும், எந்தக் காட்சியில் எந்த ஒலித்தடம் முக்கியத்துவம் பெற வேண்டும், என அதுசார்ந்த அடுக்குகளை உருவாக்க வேண்டும். காட்சியில் ஆழமான உணர்வை வெளிக்கொண்டுவரும் ஒலிகளை, அடுக்குகளாகப் பயன்படுத்த வேண்டும். இதுவே mix என்றழைக்கப்படுகிறது. 

M&E

Music & Effects. வெளிநாடுகளுக்கு உங்கள் படத்தின் உரிமைகளை விற்கப் போகிறீர்கள் என்றால், அவர்களுக்கு உரையாடல் வசனங்கள் கூடிய சவுண்ட் ட்ராக் தேவைப்படாது. ஏனெனில், அது உங்கள் சொந்த மொழியில் டப்பிங்க் செய்யப்பட்டிருக்கும். அதுவே, வெளிநாடுகளில் பிற மொழி பேசுபவர்கள் மத்தியில் இந்த மொழி புரியாது. எனவே, சப்-டைட்டில் போடுவார்கள். அதைக் காட்டிலும், பிற மொழியிலேயே டப்பிங்க் செய்து வெளியிடும்பொழுது, அதற்கென பார்வையாளர்கள் வரத்து அதிகரிக்கும் என படத்தின் உரிமையை வாங்குகிற தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் நினைப்பார்கள். அவர்களுக்கேற்ப நீங்கள் படத்தின் உரையாடல் ட்ராக்கினை எடுத்துவிட்டு, மீதி சவுண்ட் ட்ராக்குகளுடன் கூடிய படத்தை ஒப்படைக்க வேண்டும். படத்தின் உரிமையை வாங்குபவர்கள் இந்த M&E-ஐயும் எதிர்பார்ப்பார்கள். அதாவது Music & Effects மட்டும் இருப்பதைத்தான் M&E என்று சுருக்கமாக அழைக்கிறோம்.

தலைப்புகள்.

இப்போது படத்திற்கான எடிட்டிங் முடிந்துவிட்டது. படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு கம்பெனி போன்ற விபரங்கள், நடித்துள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் விபரங்களையும் இத்தோடு இணைக்க வேண்டும். படம் முடிந்ததற்குப் பின்பாகவும், படத்திற்கு ஒத்துழைப்பு தந்து உதவிய கலைஞர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்கள் கொடுக்கப்படும். பின்பு இந்தத் தலைப்பு அட்டைகள் மாஸ்டர் ட்ராக்கோடு சேர்க்கப்படுகிறது.

 DCP-ஐப் பெறுதல். 

இப்போது முடிக்கப்பட்ட படம் Digital Cinema Package-ல் அதாவது DCP-யில்தான் சேமிக்கப்படுகிறது. படத்தின் இறுதி நகலை இது சேமித்துவைத்திருக்கும். இதிலிருந்தே படம் ஒளிபரப்பப்படுகிறது.

 உரையாடல் ஸ்க்ரிப்டைப் பெறுதல்.

வெளிநாட்டுப் படங்களுக்கு டப்பிங் செய்வதற்காக, அல்லது சப் டைட்டில் கொடுப்பதற்காக இந்த உரையாடல் ஸ்க்ரிப்ட் தேவைப்படுகிறது. பிற மொழிகளில் டப் செய்யப்படுகிறபொழுது எந்த இடத்தில், இந்த வசனப் பகுதி இடம்பெற வேண்டும் என்பதையெல்லாம் எளிதாகக் கண்டுகொள்ளவும், சப் – டைட்டிலை டைம் கோட் அடிப்படையில் விரைவாக செய்து முடிக்கவும், இந்த உரையாடல் ஸ்க்ரிப்ட் பயன்படுகிறது.

படத்தின் கருத்தை வலியுறுத்தும் பிம்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு காட்சி ஆயிரம் வார்த்தைகளுக்கு ஈடானது. பல பக்கங்களில் சொல்லிப் புரியவைக்க வேண்டியதை ஒரு பிம்பத்தின் வாயிலாக வெளிப்படுத்திவிட முடியும். விநியோகஸ்தர்கள், அந்தப் பிம்பத்தைப் பார்த்துதான் உங்கள் படத்தின்மீது முதல் ஈர்ப்பை ஏற்படுத்துவார்கள். திரைப்பட விழா நடத்துபவர்கள்/ பார்வையாளர்கள் அந்த பிம்பத்தை வைத்துதான், இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை அடைவார்கள். கிட்டத்தட்ட இது போஸ்டர் போன்றது. அத்தகைய கதையை வெளிப்படுத்தும் பிம்பத்தை, நீங்கள் உருவாக்க வேண்டும். அந்தப் பிம்பத்தில், படத்தின் தலைப்பு மற்றும் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள், நடிகர்களின் பெயர்கள் இருக்க வேண்டும். ஒரு போஸ்டரைப் பார்க்கும் மனிதருக்கு, அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துவதுபோன்று அந்தப் பிம்பம் வடிவமைக்கப்பட வேண்டும். அந்தப் பிம்பத்தை வைத்தே, உங்கள் படம் எதைப் பற்றியது? என்பதை அனுமானிக்க வேண்டும். இதுவும் அதிகமான படைப்பாற்றலைக் கோரும் கலைதான். 
ட்ரெய்லரை உருவாக்குதல்.

இது பிம்பத்திற்கு அடுத்ததான செயல்முறை. 90லிருந்து 120 நொடிகள் வரை ஓடக்கூடிய ட்ரெய்லர் ஒன்றை உருவாக்குங்கள். அது உங்கள் படத்தின் மனநிலையையும், உணர்வையும், களத்தையும் பற்றிப் பார்வையாளர்களுக்கு உணர்த்தும். உங்கள் ட்ரெய்லரின் வலிமையின் அடிப்படையில்தான், பெரும்பான்மையான விநியோக முடிவுகள், உரிமையை வாங்குதல் தீர்மானிக்கப்படுகிறது. 

https://nofilmschool.com/sites/default/files/styles/article_superwide/public/stagesofpostproductioncinemainfographic2.png?itok=4xjrL6tv

இப்போது உங்கள் படம் வெளியிடத் தயார்நிலையில் உள்ளது. 

நன்றி: Raindance