காதலிப்போம்! சுதந்திரமாக காதலிப்போம்: இந்திய குயர் சினிமா, "I AM OMAR" சுயாதீன சினிமா பற்றிய நோக்கு. 

-கல்யாண்

இந்தியாவில் குயர் மக்களுக்கான படங்கள் மிக குறைவாகவே வந்துள்ளது. ஆனால் எதார்த்தத்தில் நம் வாழ்வில் பல குயர் மக்களை சந்திக்கிறோம்,உரையாடுகிறோம், நட்புக்கொள்கிறோம். சமபாலீர்ப்பு, ஈர்பாலீர்ப்பு கொள்வதும், திருநர்களாக பிறப்பதும் மிகவும் இயற்கையானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றிய கதைகள் மட்டும், அவர்களின் வாழ்வு மட்டும் மிக குறைவாக பதிவு செய்யப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பதிவு செய்வது என்றால் அந்த சமூகத்தின் உண்மை கதைகளை பதிவு செய்வது என்பதாக சொல்கிறேன். ஆனால் இங்கே பல படங்களில் குயர் மக்களை கேலி கூத்தாக்கி, மிக மோசமான சித்தரிப்புகளாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த சித்தரிப்புகளை பார்த்து எங்களில் பலர் ஆழ்ந்த மன சோர்வுக்கு தள்ளப்பட்டுள்ளோம். அவை எங்கள் வாழ்வில், குறிப்பாக சிறு வயதில் பள்ளி நாட்களில் பெரும் புல்லி(bully) களை அனுபவிக்க வைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட மக்களை தொடர்ந்து புல்லி(bully) செய்து உருவாக்கிய காட்சிகளை பார்த்து சிரித்து மகிழ்ச்சி கொண்ட இழிவான மக்கள் கூட்டமாக இருந்துள்ளோம் என்பதை நினைத்து இப்போதாவது வெட்கப்படவேண்டும். அறிவார்ந்த இயக்குநர்களாக கருதப்பட்ட பலரும் இதற்கு விதிவிலக்கல்ல.


எல்லாவற்றையும் ஹாலிவுட்டுடன் ஒப்பீடு செய்யும் இந்திய திரைப்படத்துறை, குயர் படங்கள் என்ற அடிப்படையில் ஒப்பிடு செய்யவே முடியாத அளவுக்கு பின்தங்கியுள்ளது. ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தை பற்றிய கதையை, அந்த சமூகத்திலுள்ள ஒருவரால் கண்டிப்பாக மிக வலிமையாக சொல்ல முடியும். அதற்காக குயர் மக்கள் பற்றிய கதைகளை அவர்கள் மட்டும் தான் எடுக்க வேண்டும், மற்றவர்கள் அந்த கதைகளை படமாக எடுக்க தேவையில்லை என்று அர்த்தமில்லை. நம் வாழ்வில் தினம் தினம் சந்திக்கும், நட்புக்கொள்ளும் மக்களின் கதைகளை பதிவு செய்வது படைப்பாளிகளின் கடமை. ஆனால் குயர் மக்கள் பற்றிய புரிதலுடன் கதைகளை உருவாக்க வேண்டும். பலருடைய வாழ்வை கதையாக எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக அதில் குயர் மக்கள் ஒரு கதாப்பாத்திரமாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் நம் திரைப்பட கதைகளில் மட்டும் எப்படி அவர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர். 

குயர் மக்கள் தங்களுடைய கதைகளை படமாக்குவதற்கான வெளி இன்னும் முழுவதுமாக அமையவில்லை. தொடர்ந்து தனித்துவிடப்பட்டு ஒடுக்கப்படும் ஒரு சமூகம், பல ஒடுக்குமுறைகளை தாண்டி உயிர் வாழ்வதற்கே பல சவால்களை ஏற்படுத்தும் இந்த சமூக வெளியில் எல்லாவற்றையும் எதிர்க்கொண்டு, எந்த வித சுயமரியாதையும் இல்லாத நம் சினிமா துறையில் பல கேலிகள் வலிகளுடன் வேலைப் பார்த்து, அவர்களின் கதைகளோடு வந்தால் அந்த கதைகள் ஓடாது என்று தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், எப்படி எங்களின் வாழ்க்கை படங்களாக உருவாக்கப்படும். காட்டினால் தானே ஓடுமா ஓடாதா என்று தெரியும். ஒரு குறிப்பிட்ட கதைகளை காட்டாமலே வைத்துக் கொண்டு ஓடாது ஓடாது என்று புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம். ஓடாது என்று நீங்கள் சொல்லும் காரணத்தை ஓட கூடாது என்பதாகவே நாங்கள் புரிந்துக் கொள்கிறோம். நிறைய சுதந்திரம் இருக்கும் பெரிய‌ இயக்குநர்களும், குயர் மக்களை தங்கள் கதைகளில் கதாப்பாத்திரமாக வைக்கமாட்டார்கள். வெறும் கேலிக்கூத்தாக்கி பணம் சம்பாதிக்கும் திட்டத்தையே மேற்க்கொள்வர். குயர் மக்களில் திரைப்படப் துறையில் இருப்பவர்கள் தங்கள் கதைகளை திரைக்கதையாக உருவாக்கி வந்தாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், எப்போது தான் நாம் நம் மக்களின் கதைகளை திரையில் பார்ப்பது. எவ்வளவு நாட்கள் தான் காலம் கனியட்டும் என்று‌ காத்துக்கொண்டிருப்பது. இருக்கா இல்லையா என்று தெரியாத பேய் கதைகளை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டிய நம் படைப்பாளிகள், ரத்தமும் சதையுமாக அவர்களின் முன்னே பல கதைகளோடு வாழ்ந்த ஒரு சமூகத்தின் கதைகளை பதிவு செய்யவேயில்லை. அதிலும் மிக இழிவான கேலிகளை மட்டுமே சித்தரித்தனர் எனும் போது மிக பெரிய கோவமும் வருத்தமும் ஏற்படுகிறது. அடுத்து வரும் இளம்‌ படைப்பாளிகள் கண்டிப்பாக குயர் மக்கள் பற்றிய கதைகளை பதிவு செய்ய வேண்டிய தேவை மிக அதிகமாக உள்ளது.


ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ஒரு சமூகம் எவ்வளவு அதிகமாக ஒடுக்கப்படுகிறதோ அதற்கு ஈடாக மிக வீரியமாக எழுச்சி பெறும். நாம் அதை தொடர்ந்து கண் கூடாக பார்த்து தான் வருகிறோம். தலித் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாவதுப் போல் நிறைய குயர் படங்களும் விரைவில் உருவாகும் என்பதில் நம்பிக்கைக் கொள்வோம். உருவாக்குவதில் நம் பங்கை செலுத்துவோம். தலித் திரைப்படங்களுக்கு தற்போது ஏற்ப்பட்டுள்ள சந்தை மதிப்பால் பல இயக்குநர்கள் அந்த கதைகளுக்கு தங்கள் பார்வைகளை செலுத்துகின்றனர். அதேபோல் குயர் படங்களுக்கும் ஒரு காலக்கட்டத்தில் சந்தை மதிப்பு உருவாகும். அப்போது இந்த பண முதலைகள் இளித்துக் கொண்டு குயர் மக்கள் பற்றிய கதைகளை தேடி வருவர். அப்போதாவது உண்மை பொருந்திய சுயமரியாதை உள்ள நல்ல கதைகளை நல்ல படங்களாக உருவாக்கினால் மகிழ்ச்சியே.

தற்போது நமக்கு மகிழ்ச்சி தரும் பெறும் செய்தி, தமிழில் பெண் சமப்பாலீர்ப்பை சித்தரித்த முதல் படமாக ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் இயக்கிய "கட்டுமரம்" என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. மெயின்ஸ்டிரிம் சினிமாவில் இயங்கி வரும் மிஷ்கின் இதில் நடித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் தற்போது திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டிருக்கின்றது. படம் அதிகாரபூர்வமாக வெளியான பிறகு கட்டுமரம் படத்தை பற்றி விவாதிப்போம்.


நாம் தற்போது 'ஓனிர்' இயக்கிய ஆந்தாலஜி படமான "I AM" என்ற படத்தைப் பற்றி இந்த கட்டுரை மூலம் விவாதிப்போம். இது ஒரு சுயாதீன திரைப்படம். இதில் வரும் நான்கு கதைகளும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஓனிர் இந்த படத்தை கூட்டு நிதி திரட்டல் ( crown funding) முறையில் தயாரித்துள்ளார். மக்களிடமிருந்து நிதிப் பெற்று அதன் மூலம் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் உபயோகப்படுத்திய வழிகளில் ஒன்று சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர். இதன் மூலம் இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலிருக்கும் 45 நகரங்களிலிருந்து 400 பேர் நிதியளித்துள்ளனர். அதில் 1 லட்சத்திற்கு மேல் நிதியளித்தவர்கள் இணைத் தயாரிப்பாளர்களாக ஆக்கப்பட்டு, அவர்களுக்கு படத்திலிருந்து வரும் லாபம் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. 1லட்சத்திற்கு கீழ் கொடுத்தவர்களின் பெயர்கள் படத்தின் ரோலிங் டைட்டிலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் கூட்டு நிதி திரட்டும் ( crowd funding) முறையில் நிதி திரட்டப்பட்டு திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படமாக உருவாகி பெரும் நம்பிக்கையளிக்கிறது. மேலும் இந்த படத்தில் வேலை செய்த பலர் சம்பளம் வாங்காமலும், தங்களால் இயன்ற நிதியை அளித்தும் உதவியுள்ளனர்.இயக்குநரான ஓனிர் கூட்டு நிதி திரட்டி தயாரிக்கும் முறை மூலம் மக்களையும் தம்முடைய திரைப்பட உருவாக்க செயல்முறையில் ஒரு அங்கமாக ஆக்கியுள்ளதை முக்கியமானதாக பார்க்கிறேன். 

ஆனால் சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் முறையை நான் ஆதரிக்கவில்லை. சுயாதீன திரைப்படங்களில் இருக்கும் பெரும் பிரச்சனையாக நான் இதை பார்க்கிறேன். சம்பளம் இல்லாமல் ஒரு கலைஞன் வேலை செய்வதனால் அவனது அடிப்படை தேவைகளுக்கே பெரும் கஷ்டம் ஏற்படுகிறது. அதனால் அவன் வேறு வேலைக்கு செல்கிறான். வேறு வேலையில் இருந்துக் கொண்டே சரியான தூக்கம், தங்குமிடம், உணவு இல்லாமல் சினிமாவில் போராடுகிறான். பெரும் போராட்டத்திற்கு பிறகு ஒரு கட்டத்தில் தன்னுடைய எந்த தேவைகளையும் கவனிக்காமல் இருந்ததால் ஒரு வித வெறுமையும் ஏழ்மையும் அதிகமாகி முழுவதுமாக சினிமாவிலிருந்து வெளியேறி வேறு வேலைக்கு செல்கிறான். எல்லாவற்றையும் தாண்டி ஒருவனின் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்குவதே அவனை தொடர்ந்து இயங்க வைக்க உதவும். அது ஒரு சிறு தொகையாக இருந்தாலும் இயன்றதை கொடுப்பதே சரி. இலவசமாக வேலை வாங்குவது கண்டிப்பாக நியாயம் இல்லை.

"I AM" படத்திலுள்ள நான்கு கதைகளில், குயர் மக்களுக்கு நெருக்கமான "I AM OMAR" என்ற நான்காவது கதை பற்றி பார்ப்போம். மும்பையில் 2009'ஆம் வருடம் நவம்பர் மாத இரவொன்றில் ஜெய் காரில் வந்துக்கொண்டிருக்கும் பொழுது, ரோட்டில் நின்று ஒரு ஆணுடன் கைக்குலுக்கிக் கொண்டிருக்கும் ஓமரை பார்க்கிறான். உடனே காரை நிறுத்த சொல்லி ஓமரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு கார் கதவை திறந்து வெளியே வருகிறான். கதை சிறிது நாட்களுக்கு முன் நகர்ந்து ஓமரும் ஜெய்யும் டேட் ( date) செய்த இரவிற்கு செல்கிறது. ஒரு காஃபி ஷாப்பினுள் வரும் ஜெய்க்கு ஓமரை பார்த்தவுடன் புடித்துப்போக, அவன் டேபிளிக்கு பக்கத்திலேயே அமர்ந்து அவனுடன் பேச தொடங்குகிறான். அந்த உரையாடலில் ஃபிளர்ட்(flirt) செய்யத் தொடங்கி, ஓமருக்கும் ஆண்கள் மேல் ஈர்ப்பிருக்கிறதா, தன்னை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள முயல்கிறான். அந்த உரையாடல் அன்று இரவு டின்னெர் டேட்க்கு ( dinner date) கொண்டு செல்கிறது. இருவரும் ரெஸ்ட்டாரன்டில் ( restaurant) ஒருவர் மீது ஒருவருகிருக்கும் ஈர்ப்பை வெளிப்படுத்தி, அதன் தொடர்ச்சியாக அன்று இரவே காரில் ஒரு அழகான நைட் டிரைவ் ( night drive) செல்கின்றனர். அந்த அழகான இரவின் மடியில், கடற்கரை சாலையில் காரை நிறுத்தி, காரினுள்ளிருக்கும் குறைந்த ஒளியில் மெதுவாக முத்தமிட தொடங்கி தொடங்குகின்றனர். அப்போது திடிரென்று ஒரு போலீஸ் டார்ச்சை காரினுள் அடித்து கார் கதவை தட்டுகிறான். முதலில் ஓமர் பதறியடித்து கார் கதவை திறந்து வெளியே வருகிறான். ஜெய் பெரும் அதிர்ச்சியுடன் அவன் பின்னே வெளிவருகிறான். இரு ஆண்கள் ரொமான்ஸ் செய்ததை பார்த்த அந்த போலீஸ் மிக கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்தி திட்டி, அடித்து, பயமுறுத்தி, சட்டத்தை மீறியதால் கைது செய்யப் போவதாக மிரட்டுகிறான். மிகவும் பயந்த ஜெய்யிடம் 1 லட்சம் லஞ்சமாக கேட்கிறான். ஜெயினுடைய கார்டிலிருந்து பணத்தை எடுத்து வருவதற்காக ஓமர் ஏ.டி.எம்(ATM) செல்கிறான். ஓமர் இல்லாத அந்த இடைப்பட்ட நேரத்தில், அந்த போலீஸ் ஜெய்யை ரேப் செய்கிறான். ஜெய்யின் கார்டில் ஐம்பதாயிரம் தான் இருக்கிறது. இருபத்தைந்து ஆயிரத்திற்கு ஜெய்யின் ஃபோனையும், ஐந்தாயிரத்துக்கு ஓமரின் ஃபோனையும் பிடுங்கி கொள்கிறான். மீதமிருக்கும் இருபதாயிரத்துக்கு பதிலாக ஓமரை காவல் நிலையத்திற்கு பிடித்து செல்கிறான். கதை நிகழ் காலத்திற்கு வருகிறது. காரை விட்டு வெளியேறி ஓமரின் முன் வந்து நின்ற ஜெய், தான் அன்று இரவே என் அலுவலுக வக்கிலுடன் காவல் நிலையம் வந்ததாகவும், அங்கு ஓமர் இல்லை என்பதையும் கூறுகிறான். மேலும் அந்த போலீஸ் தன்னை அடையாளம் காண மறுத்ததையும் மற்றும் எல்லா போலீஸ்களும் கொச்சையாக பேசி சிரித்ததையும் கூறுகிறான். ஏன் காவல் நிலையத்தில் ஓமர் இல்லை என்பதே கதையின் முக்கியமான திருப்பம்.


முதல் சீனில் காரினுள் தன் நண்பணுடன் ஜெய் போனில் பேசிக் கொண்டு வரும் உரையாடல் மிக முக்கியமானவை. கதை 2009ல் நடக்கிறது. அந்த வருடம் தான் NAZ FOUNDATION டெல்லி உயர் நீதிமன்றத்தில் SECTION 377 ஐ ரத்து செய்ய வேண்டி போட்ட வழக்கின் தீர்ப்பு வந்தது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வில் ARTICLE 21, ARTICLE 14 மற்றும் ARTICLE 15 ஆகியவற்றை மேற்க்கோள் காட்டி SECTION 377 இவற்றிற்கு எதிராக உள்ளதை சுட்டிக் காட்டி, விருப்பத்துடன் சமப்பாலுறவு கொள்வது குற்றமில்லை என்ற தீர்ப்பை வழங்கியது. சமப்பாலீர்ப்பாளர்களை குற்றவாளிகளாக சித்தரித்த 377ற்க்கு எதிராக வந்த தீர்ப்பை குயர் மக்கள் கொண்டாடினர். டெல்லி உயர் நீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பின் பிறகு, சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக ஜெய் தன் நண்பனிடம் ஃபோனில் கூறும் வசனம் வருகிறது‌. இது மிக முக்கியமான வசனம். இந்த ஒரு வசனத்தை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டுமானால் SECTION 377 தொடர்பாக நடந்த பெரிய வரலாற்றையே தெரிந்துக்கொள்ள வேண்டும். முதலில் 1861 'ல் ஆங்கிலேய ஆட்சியில் தான் SECTION 377 கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பிறகு அதை எதிர்த்து 1991லிருந்து தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு 2009'ல் தான் சமப்பாலீர்ப்பாளர்களுக்கு ஆதரவான ஒரு தீர்ப்பு டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து வருகிறது. ஆனால் அந்த தீர்ப்பிலும் 377 ஐ மொத்தமாக அகற்றும் உருமை பாராளுமன்றத்திடமே உள்ளதாக கூறியுள்ளது. சமப்பாலீர்ப்பாளர்களுக்கு ஆதரவாக வந்த இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடப்படுகிறது. இறுதியாக செப்டம்பர் 2018ல் தான் section 377 முழுமையாக அகற்றப்பட்டு சமப்பாலுறவுக் கொள்வது குற்றமில்லை என்று தீர்ப்பு வருகிறது‌.


வசனங்கள் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. இரு ஆண்கள் டேட்( date) செய்வது, காதலிப்பது, ரொமான்ஸ் செய்வது, கலவியில் ஈடுபடுவது என அனைத்தும் மிக இயற்கையானது மற்றும் இயல்பானது என்பதை காட்சிகள் தெளிவாக காட்டுகிறது. சினிமா என்பது காட்சி மொழியால் உருவாகும் கலை. இந்த படம் காட்சி மொழியில் தெளிவாக கையாளப்பட்டுள்ளது. கார் டோரை மூடி தொறக்கும் ஒரு கட்டில்( cut) ஃப்ளாஷ்பேக் ( flashback) சென்று வந்தது படத்தொகுப்பின் நேர்த்தியை காட்டுகிறது. மேலும் அந்த கட் படம் பார்ப்பவர்களை ஜெய்யுடன் அழைத்து சென்று கதையினுள்ளேயே இருக்க வைக்கிறது. ஓமரும் ஜெய்யும் டிரைவ் போகும் போது காரில் வரும் பாடல் வரிகள், அவர்கள் மனதிலிருக்கும் காதலை சுதந்திரமாக வெளிப்படுத்தட்டும், அவர்களால் எதையும் மறைக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. காரிலில் ஓடும் பாடலையும் தன் கதையின் உணர்வை வெளிப்படுத்த உபயோகப்படுத்தியது சினிமா பற்றிய இயக்குநரின் புரிதலை தெளிவுப்படுத்துகிறது. முழு படமும் இரவிலே எடுக்கப்பட்டுள்ளது. நம் கண்களால் பார்ப்பது போலவே மிக நேர்த்தியான ஒளியமைப்பு மற்றும் எல்லா ஷாட்டுகளும் ஹண்டெல்டாக ( handheld) எடுக்கப்பட்டது கதையின் இயல்பு தன்மையை அதிகரிக்கிறது. அந்த போலீஸ் ஜெய்யை பார்த்து

 "உன்னால் ஒரு பெண்ணுடன் படுக்க முடியாதா? 

நீங்களாம் நம்ம நாட்டு கலாச்சாரத்தையே கெடுக்குறீங்க. 

பார்த்த 3 மணி நேரத்தில் உன்னுடைய உடையை கழட்டுறியா?

 கூட படுக்க இவனுக்கு எவ்வளவு கொடுத்த?" என்றெல்லாம் பேசும் வசனங்கள், உங்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பும், தூங்கவிடாமல் செய்யும். இந்த வசனங்களே பெரும்பான்மையான மக்கள் சமப்பாலீர்ப்பாளர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கான சான்று. கடைசியாக ஜெய் நாம் இனிமேல் குற்றவாளிகள் இல்லையே என்று பேசும் வசனம் section 377 ரத்து செய்தது சமப்பாலீர்ப்பாளர்களுக்கு எவ்வளவு சுதந்திரத்தை தருகிறது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. 

ஒரு ஆணும் பெண்ணும் ஈர்க்கப்படுவதும், காதல் கொள்வது, காமம் கொள்வது எவ்வளவு இயல்போ அதே அளவுக்கு இயல்பு தான் ஒரு பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் ஈர்க்கப்படுவதும், காதல் கொள்வதும், காமம் கொள்வதும். மனிதர்கள் தோன்றிய காலத்திலிருந்தே சமப்பாலீர்ப்பாளர்கள் இருந்ததிற்கான சான்றுகளும் ஆய்வுகளும் ஏராளமாக இருக்கின்றன. புல்லி ( bully) செய்வதை நிறுத்திவிட்டு குயர் மக்களை அவர்களின் உலகத்தினுள் வந்து பாருங்கள். மிக இயல்பான கொண்டாட்டமான உலகமது. எல்லா காதலும் காதல் தான். இதில் உயர்ந்தவை தாழ்ந்தவை என எப்படி இந்த சீழ் பிடித்த சமூகம் பிரித்துப்பார்கிறது. காதல் தான் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான நேர்மறை சக்தி. அதை வெறுத்து என்ன செய்யப் போகிறோம். காதலிப்போம் ! 

பாலின பாகுபாடின்றி சுதந்திரமாக கொண்டாட்டமாக காதலிப்போம்!

நன்றி : பால்மணம் மின்னிதழ் (பால்மணம் மின்னிதழலில் வெளியான கட்டுரையை அதே எழுத்தாளர் ஒரு சில மாற்றங்களுடன் மறுவெளியீடு செய்துள்ளார்)