மகேந்திரன் தவம் கலைந்து....

‘சாசனம்’ திரைப்படத்தின் இறுதி கட்ட வேலையில் மூழ்கியிருந்த இயக்குனர் மகேந்திரனின் முகத்தில் சோர்வும் பரவசமும் ஒரு சேர படர்ந்திருந்தது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவரப்போகும் ‘சாசனம்’ அவருடைய ஒரு பத்து வயதைக் குறைத்திருந்தது. கன்னமும் கையுமாக அவ்வப்போது ஆழ்ந்த சிந்தனைக்குப் போய்விடும் இயக்குனரை ‘டைட்டில் கார்டு’ தயாராயிரிடுச்சுங்க, ‘அரவிந்த் சாமி டப்பிங்குக்கு வந்தாச்சு’ என்ற குரல்கள் பரபரப்பாக்குகின்றன. தேநீரும், சிகரெட்டுமாய் இளைப்பாறிய வேளைகளில் அவரை இடைமரித்ததிலிருந்து...

‘சாசனம்’ காலம் தாழ்ந்து வெளிவருவதைப் பற்றி என்ன உணர்கீறீர்கள்?

என்னை நேசிப்பர்வர்களோட என் ரசிகர்களோட பிரார்த்தனைகள்தான் இதைச் சாத்தியமாக்கியிருக்கு. சுய நினைவோடு மகேந்திரன் தூங்கிய கும்பகர்ண தூக்கம்தான் இந்த கால இடைவெளி, ஒருவித தவத் தூக்கம்னுகூட சொல்லலாம். தவம் முடிஞ்சு சாசனம் வருது. எல்லாருக்கும் வாழ்க்கையில் ‘இரண்டாவது இன்னிங்ஸ்’ என்று ஒன்று இருக்கு. இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். நடுவில் எவ்வளவோ நடந்து முடிந்து போச்சு. நானும் நிறையத் தவறுகளைச் செய்திருக்கிறேன். சரி தவறு என்பதே அவரவரை சார்ந்த முடிவு தானே. it is a relative term. எப்படியோ, இப்ப எல்லாச் சூழலும் கூடி வந்து படம் வெளிவருவது சந்தோஷம். என்னுடைய ராசியான எண்: 7. ஏழு வருஷம் கழிச்சு வந்தாலும், படம் நிச்சயம் பேசப்படும். ‘சாசனம்’ படம் தொடங்கியதை ஒட்டி சிலது நியாபகம் வருது. 1995யில் சென்னையில் ஒரு பெரிய கருத்தரங்கு நடந்தது. ‘நாம் என்ன மாதிரியான படங்களை மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறோம்’ என்பதுதான் தலைப்பு. மிருணாள் சென் போன்ற பெரிய இயக்குனர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். எனக்கு முன்னாடி எல்லோரும் தமிழ் சினிமாவை கிண்டல் செய்து பேசிக்கிட்டிருந்தாங்க. அடுத்து, நான் பேசும்போது மல்லாந்து படுத்து எச்சில் துப்புவதைப் போலத்தான் நம்ம தமிழ் சினிமாவை நாமே கிண்டல் செய்வது. உலகத் தரம்னு எதைத்தான் சொல்றாங்க? எப்படித் தான் சொல்றாங்கன்னு தெரியல. நம்ம தமிழிலேயும் நல்ல சினிமா இருக்குன்னு சொன்னேன். அதைக் கேட்டுட்டு அங்க வந்திருந்த தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்தின் (NFDC) மும்பை இயக்குனர் ‘நீங்க NDFCக்கு ஒரு படம் செய்யணும்’ என்றார். அந்தச் சமயத்தில் NDFCக்குப் படம் செய்யணும்னா அந்த நிதிக்கு ஈட்டுப் பாதுகாப்பு (collateral security) காட்டனும். அதனால, என்கிட்ட பணம், சொத்தெல்லாம் இல்லைன்னு சொன்னேன். அதிலிருந்து விதிவிலக்கு தர்றதா அன்றைய மும்பை NDFC இயக்குனர் உறுதிகொடுத்த அந்த நிமிடம் ‘சாசன’த்திற்கான விதை விழுந்தது. எழுத்தாளர் கந்தவர்னின் ‘சாசன’த்தைத் திரைக்கதை எழுதித் தந்தேன். 1996 இல் தேசிய விருதுகளுக்கு நடுவராகப் போனப்ப, இயக்குனர் ரிஷிகோஷ் முகர்ஜியைச் சந்திச்சேன். அவர் ‘சாசனத்தை’ படிச்சுட்டு “NDFC என்றாலே வறட்சியான படங்கள் மாதிரி ஆயிடுச்சு. கொஞ்சம் வியாபார வெற்றியும் வர்ற மாதிரியும் கதைகள் கொடுங்க. உங்க ‘உதிரிப்பூக்கள்’ போல எங்களுக்கொரு படம் வேணும்” என்றார். பொதுவா, NDFCக்கு ஒரு தடவை கதை கொடுக்குறவங்க, திரும்பப் போகத் தயங்குவாங்க. ஆனால், என் தகப்பன் மாதிரியான ரிஷிகோஷ் முகர்ஜியோட வார்த்தைகளுக்காகத் திரும்ப ‘சாசன’த்தோட கதையில் வேலை செஞ்சேன். கையில காலணா கிடையாது. செட்டிநாட்டு கலாசார மேன்மைதான் ‘சாசன’த்தோட கதை. ஆராய்ச்சிக்காக காரைக்குடி பக்கம் போகணும். என் மனைவியோட நகையெல்லாம் அடகு வச்சுதான் ‘சாசன’த்தோட திரைக்கதையில் வேலை செய்தேன். கண்ணதாசன் போன்ற என் நண்பர்கள் கிட்ட வாங்கின புத்தகங்கள் எல்லாம் உதவியா இருந்தது. ‘சாசன’த்தின் தொடக்க காலம் சிரமமாகவே இருந்தது. ‘சாசனம்’ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ என்றுகூட யோசிச்சிருக்கேன். நானும் மனுஷன்தானே!

சாசனத்தின் கதை என்ன?

சொத்து சாசனம், அரசியல் சாசனம் என்றெல்லாம் நிறைய இருந்தாலும், எழுதப்படாத சாசனம்னு இருக்கு. பிச்சைக்காரங்களைப் பார்த்தா காசு போடணும்கிறது எழுதப்படாத சாசனம். அம்மா, அப்பாவை திட்டினா நீதிமன்றத்துக்குப் போகமுடியுமா? அது ஒரு எழுதப் படாத சாசனம். அப்படியொரு எழுதப்படாத சாசனம்தான் கதை. கோவலன் கண்ணகியைத்தான் திரும்ப படைச்சிருக்கேன். அரவிந்த் சாமி, கௌதமி, ரஞ்சிதா நடிச்சிருக்காங்க. செட்டி நாட்டில் கல்யாணத்திற்காக அரண்மனை மாதிரி வீடுகளைப் பிரிச்சு வித்துறாங்க. இதைப் பார்த்தப்ப எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. வீட்டின் மகிமைக்காகப் படத்தில் திருமணமே செய்து கொள்ளாத சபீதா ஆனந்த் கதாபாத்திரம்தான் என் படத்தின் மையம். செட்டி நாட்டின் இன்னொரு வழக்கம் பிள்ளை போதல் (தத்துப் போதல்) அரவிந்த் சாமி தத்துப் போனவர். கௌதமி பாரம்பரியமான செட்டி நாட்டுப் பெண். பஞ்சம் பிழைக்க வரும் ரஞ்சிதாவுக்கும் அவள் அம்மாவுக்கும் அடைக்கலம் தருகிறார் அரவிந்த் சாமி இவர்களைச் சுற்றி நடப்பதுதான் சாசனம்.

புதிய தலைமுறை தமிழ் சினிமா பத்தி உங்கக் கருத்து?

இப்ப உள்ள இளைஞர்கள் சினிமாவில் வெற்றி பெறணும்னு நினைக்கிறாங்களே தவிர அதற்குரிய உரத்தை ஏற்றிக்கொள்ள மறுக்கறாங்க. இலக்கியம் படிக்கிறதில்லை. சமூகத்தை அவதானிக்கிறதில்லை. ஒரே ஒருகேள்வி, காதலைத் தவிர நமக்குச் சொல்றதுக்கும் வேற ஒன்னும் இல்லையா? சர்வதேச அரங்கில் தமிழ்ப்படங்களைப் பார்ப்பவர்கள் தமிழர்களுக்கு ஐ லவ் யூ சொல்றதைத் தவிர வேறு பிரச்சனையே இல்லை என்று நினைத்துக்கொண்டிருகிறார்கள். இரவில் நிர்வாணமாக இருப்பார்கள் கணவனும், மனைவியும், பகலில் மனைவி உடை மாத்தும்போது கணவன் வந்துட்டா அய்யய்யோ என்று பதறி கதவைச் சாத்துவாங்க. அது அழகு. வாழ்க்கையில் ஆழமான விஷயங்கள் இருக்கு. அதை விட்டுட்டு டூயட், குத்துப்பாட்டு என்று எடுப்பது சரியில்லை. கணவனும், மனைவியும் உடலுறவு வைத்துக் கொள்வதைக்கூட காட்சிக்குத் தேவைப்படும்போது அப்படியே காட்டுவதில் தவறில்லை. ஆனால் கையை வெட்டி, காலை வெட்டி, pelvic movements காட்டி, ஆபாசமாக நடனமாட விடுவது கோரம்.

கோயிலில் நிர்வாண சிலைகள் இருக்கு. ஆனா அதை ஏன் கோயிலில் வச்சாங்க. இவ்வளவுதான்டா, பார்த்துக்கோங்க என்று கோயிலில் தெய்வங்களை நிர்வாணமாக்கியிருந்தாங்க நம்ம முன்னோர்கள். அவர்கள் ஒன்னும் முட்டாள்களில்லை. இங்குக் கதையில்லாமல்கூட படம் எடுக்கிறார்கள். ஆனால் தொப்புள் இல்லாமல் படம் எடுகிறார்களா? ஆண் லுங்கியைத் தூக்கிக் காட்டுகிறான், பெண் பாவாடையைத் தூக்கி காட்டுகிறாள். மானக்கேடு.

இளைய தலைமுறை கதையில் கவனம் செலுத்த வேண்டும். படத்தை எடுப்பதைவிட, படத்திற்குத் திரைக்கதை எழுதுவதுதான் முக்கியம். ஒன்று ஸ்கிரிப்ட்டேபிள்; மற்றொன்று எடிட்டிங் டேபிள். ஷூட்டிங் என்பது வெறும் செயல்படுத்துவது. மட்டும்தான். ஒவ்வொரு பிரேமும் தோராயமாகப் பத்து ரூபாய் என்று வைத்துக் கொண்டால் 24 பிரேம் ஒரு விநாடி 6௦0 விநாடி/ஒரு நிமிஷம் என்று கணக்கிட்டால் எவ்வளவு செலவு சினிமாவுக்கு. அந்தப் பொறுப்பை எப்ப நாம உணர்வது?

1928இல் உங்கள் ‘ஊர்ப் பஞ்சாயத்து’ வந்தது, அதற்குப் பின் மறுபடியும் 1998இல் ‘சாசனம்’ தொடங்கி, இந்த ஆண்டு முடித்திருக்கிறீர்கள். ஏன் இந்த இடைவெளிகள்? சினிமாவுக்கு காலகட்டம் முக்கியமில்லையா?

தவறுதான். என்னால் யாரிடமும் வாய்ப்புக் கேட்டுப் போக முடியாது. ஏனோ எனக்கு சினிமா ஒரு தொழிலாக கைவரப் பெறவில்லை. சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள். வழிகாட்ட ஆளில்லை. ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’, ‘நண்டு’, ‘மெட்டி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்று ஒரு சில படங்களைச் செய்திருந்தாலும், இன்னும் என்னை யாரும் மறக்கவில்லை. தொடர்ந்து படங்கள் செய்யாமல் விட்டுவிட்டேன். யாரும் வந்து கதவைத் தட்டும்வரை நான் எதுவும் செய்யாமலும் இல்லை. என் கதைகளை எழுதிக்கொண்டு தான் இருந்தேன். எப்பொழுதும் தயார்நிலையில் இருப்பவன்தான் கலைஞன். ஆனால் யாரும் தேடி வரவில்லை. அவ்வளவுதான்.

ஆனால் வாழ்க்கையில் நான் நன்றி மறக்க மாட்டேன். நான் சாதித்துவிட்டேன் என்று சொல்வதே மடத்தனமான வாசகம். நம் உழைப்பை விட, நமக்குச் சந்தர்ப்பம் கொடுப்பவர்கள் வாழ்க்கையில் முக்கியமானவர்கள். சந்தர்பங்களை மனிதர்கள் வடிவத்தில் கடவுள் தந்தனுப்புகிறார். ‘நாடோடி மன்னன்’ தோல்வியடைந்திருந்தால் நான் இயக்குனர் ஆகியிருக்க மாட்டேன். எனக்கு அவ்வளவு முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அடுத்து கமலஹாசன். 
அடுத்ததாக ?

இன்னும் ஐந்து அற்புதமான படங்களைத் தந்துவிட வேண்டும் என்று நினைக்குறேன். ஒடுக்கப்பட்டவர்கள், தலித் மக்களைப்பற்றி ஒரே ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்று வேட்கையிருக்கிறது. அடுத்து இலங்கை நடுவில் கிளிநொச்சிக்குப் போயிருந்தேன். ஆதவன் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு நடிப்பு, திரைக்கதைப் பற்றிய வகுப்புகள் எடுத்தேன். மூன்று மாதம் தங்கியிருந்தபோது, நடிப்பு என்பது, திரைக்கதை என்பது என்று இரண்டு புத்தகங்களை எழுதினேன். அப்பறம் ‘1996’ என்ற முப்பது நிமிட குறும்படத்தையும் எடுத்துக் கொடுத்தேன். அந்தக் குறும்படம், கிட்டத்தட்ட 14 நாடுகளுக்கு, சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்றிருக்கிறது. மீண்டும் ஜனவரி முதல் வாரத்தில் இலங்கை செல்கிறேன். ‘கங்குமட்டை’ என்ற முழு நீளத் திரைப்படத்தைச் செய்வதாக இருக்கிறேன். ஆசைகள் அதிகம் இருக்கிறது. ஆண்டவன் அளந்து தானே வைத்திருப்பான்.