My Son Is Gay : தமிழில் முக்கியமான உரையாடல்களை ஏற்படுத்துகிற சுயாதீன குயர் திரைப்படம். 

-கல்யாண்

நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் சமபாலீர்ப்பாளர்களை கேலியே செய்திருக்கிறது.மிகச் சொற்பப்படங்களே அங்குமிங்குமாக சமபாலீர்ப்பாளர்களை சிறிய கதாபாத்திரங்களாக வைத்து இருந்தாலும் அவையும் எந்தவித புரிதலும் இல்லாமல் தவறாகவே அனுகப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கும் சூழலில் 2017 இல் வெளியான லோகேஷ் குமார் இயக்கிய "My Son Is Gay" திரைப்படம் சமபாலீர்ப்பை சித்தரித்த சுயாதீன தமிழ் திரைப்படம். 2013 'லிருந்தே இந்த படத்திற்கான வேலை தொடங்கப்பட்டு பின்பு பல காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் மிக முக்கிய காரணம் படத்தின் முதலீடு. எல்லா சுயாதீன கலைஞர்களுக்கும் வரும் தலையாய பிரச்சனை இதுவே. பிறகு கூட்டு தயாரிப்பு முறை (கிரவுட்ஃபுண்டிங்) மூலமாக 11 லட்சம் ரூபாய் பணம் திரட்டியுள்ளனர். அந்தப் பணம் படத்தின் பட்ஜெட்டிற்கு போதுமானதாக இல்லாததால் படத்தை தொடங்க முடியாமல் இருந்துள்ளனர். பணம் கொடுத்தவர்கள் என்ன ஆனது என்று கேட்க ஓரளவிற்கு மேல் அந்த அழுத்தம் தாங்க முடியாமல் முழு பணத்தையும் கொடுத்தவர்களுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். அதன் பிறகு இயக்குநர் தன் நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் படம் சார்ந்து பேசி தயாரிப்பாளர்களை திரட்ட முயற்சித்துள்ளார். இறுதியாக முகநூல் மூலமாக அமெரிக்காவை சேர்ந்த அணில் சக்சேனா, சிரில் டீசூசா என்ற இருவர் இணைந்து படத்தை தயாரிக்க முன் வந்துள்ளனர். அவர்கள் எந்த நிபந்தனையுமின்றி இது குயர் மக்களின் வாழ்வை காட்டும் படம், இவர்கள் இதை சுயாதீன படமாக எடுக்க முயற்சிக்கிறார்கள் என்ற இரு காரணங்களுக்காக மட்டுமே தயாரிக்க முன்வந்துள்ளனர்.


பின்பு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனுபமா பல உதவிகளை செய்துள்ளார். அவரும் ஒரு இணை தயாரிப்பாளராக இணைந்து பெரும் வலு சேர்த்துள்ளார். அவர் மூலமே கிஷோர், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி போன்ற நடிகர்களும் படத்தில் இணைந்துள்ளனர். பெரும்பாலான நடிகர்கள் பணம் வாங்காமலோ அல்லது குறைந்த பணம் பெற்றுக் கொண்டோ தான் படத்தில் நடித்துள்ளனர். இப்படி ஒட்டுமொத்தமாக பெரும் கூட்டு முயற்சியிலேயே சுயாதீன படங்கள் உருவாகிறது. ஒரு சுயாதீன திரைப்படம் மற்ற வணிகப் படங்களை போல எல்லா வசதிகளையும் கொண்டு உருவாவது அல்ல. பெரும் உழைப்பையும் அரசியலையும் கொண்டு உருவாக்கப்படுவது.

சமபாலீர்ப்பாளர்கள் தங்கள் பாலினம் பாலீர்ப்பு சார்ந்து எல்லாவற்றையும் பொதுவாக வெளிப்படுத்தி வாழ தொடங்குவதற்கு பெயர் "Coming out" என்று சொல்கிறோம். எல்லா சமபாலீர்ப்பாளர்களின் வாழ்விலும் போராட்டமான ஒரு பகுதி இது. அவர்கள் எப்போது "Coming out" ஆகிறார்கள் என்பதை பொருத்து அவர்கள் வாழ்வு பல திருப்பங்களை காண்கிறது. சிறுவயதில், திருமணத்திற்குப் பின்பு, குழந்தை பிறந்த பின்பு என 90 வயதுக்கு பின்பு கூட "Coming out" ஆனவர்கள் உள்ளனர். ஒவ்வொரு சமபாலீர்ப்பாளர்களிடமும் அவர்கள் "Coming out" ஆன பெரும் கதை இருக்கும். அந்தக் கதைகளே ஒடுக்கப்படும் சமூகம் எப்படி வீரியமாக தங்கள் அடையாளங்களை விட்டுக் கொடுக்காமல் மேலெழுந்து வரும் என்பதற்கான உண்மை சான்றுகள். 


அதே போல் எல்லா குயர் மக்களும் "coming out" ஆக வேண்டும் என்பது கட்டாய விதியல்ல. அது அவரவர் விருப்பம் சார்ந்தது. Cis- heterosexual எவரும் நான் எதிர் பாலினத்தவர் மீது தான் ஈர்க்கப்படுகிறேன் என்று இந்த சமூகத்திடம் சொல்வதில்லை. எவரும் அவர்களிடம் கேள்விகளும் கேட்பதில்லை. நாங்கள் மட்டும் ஏன் எல்லோரிடமும் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி எதிர்பாலீர்ப்பு இயல்போ, அதே போல் சமபாலீர்ப்பும் இயல்பே. எங்களை பற்றி தெரிய வேண்டுமென்றால் எங்களுடன் பழகி தெரிந்துக் கொள்ளட்டும். எல்லோரிடமும் சென்று தன் பாலீர்ப்பு பாலினம் பற்றி சொல்வது பலருக்கு விருப்பம் இருக்காது. அது நியாயமும் இல்லை.
 
சமபாலீர்ப்பாளர்கள் வாழ்வின் மிக போராட்டமான பகுதியான "coming out" பகுதியை இந்த படம் கதையாக கொண்டு காட்சிப்படுத்தியுள்ளது‌. அதிலும் குறிப்பாக இந்த படம் காட்சிப் படுத்துகிற மையம், மகனாகிய வருண் தன் அம்மாவாகிய லக்ஷ்மியிடம் தான் ஒரு Gay என்பதை சொல்லி, இது மிக இயல்பானது என்பதை புரிய வைக்க நினைக்கிறான். அவனை ஏற்றுக் கொள்ளாத லக்ஷ்மி பேரன்பு கொண்டு வளர்த்த தன் மகனை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறாள். அம்மா மகனுக்கு இடையில் நடக்கும் உணர்வு போராட்டமே " My Son Is Gay" திரைப்படத்தின் முக்கிய பகுதி.
 
 கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஓர் ரம்யமான வீட்டில் லக்ஷ்மி, அவளின் மகன் வருண், அவளின் தம்பி கோபியின் மகன் ரோஹித் ஆகியோர் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். கடற்கரையில் குளித்துவிட்டு வருவதாக சொல்லி சென்ற வருணின் அப்பா கடைசிவரை திரும்பவில்லை. ஆனால் அவர் இறக்கவில்லை, என்றாவது ஒரு நாள் வருவார் என்ற நம்பிக்கையில் லக்ஷ்மி வாழ்கிறாள். ரோஹித்தின் அப்பா கோபி ஆர்மியில் வேலை செய்வதால், அம்மா இல்லாத தன் மகனை அக்காவிடமே வளர்க்க விட்டுவிட்டான். லக்ஷ்மி இருவரையும் சிறுவயதிலிருந்து தனியாளாக வளர்த்து வருகிறாள். வருண் தனக்கு ஆண்கள் மேல் ஈர்ப்பு வருவதை தெரிந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஆரம்பத்தில் தன்னிடம் ஏதோ பிரச்சனை உள்ளதாக நினைத்து உளவியல் ஆலோசனை பெற உளவியலாளர் ( Psychologist) டாக்டர் ராமை பார்க்க செல்கிறான். டாக்டர் ராமே வருணிற்கு LGBTQ பற்றிய புரிதலை கொடுத்து, ஒரு ஆணிற்கு பெண் மேல் ஈர்ப்பு வருவது எவ்வளவு இயல்போ அதே அளவுக்கு ஆணுக்கு ஆண் மேலும் பெண்ணுக்கு பெண் மேலும் ஈர்ப்பு வருவது இயல்பு என்பதை புரியவைக்கிறார். மேலும் LGBTQ community' உடன் தொடர்பில் இருக்குமாறு கூறி, கார்த்திக் என்பவரை சந்திக்குமாறு கூறுகிறார். அவனை சந்தித்த பிறகுதான் கார்த்திக் ராமின் மகன் என்பது வருணிற்கு தெரிகிறது. வருண் கார்த்திக்கின் வீட்டிற்கு செல்கிறான், அவன் அம்மா உமாவுடன் நன்கு பழகுகிறான். கார்த்திக்கிடமும் அவன் குடும்பத்திடமும் நெருங்கிய பிறகு அவனுக்கு தைரியம் வருகிறது. கார்த்திக்கை ஏற்றுக்கொண்டது போலவே நம்மையும் நம் வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறான்.


ஒரு தனி மனிதனுக்கு அவனின் பெற்றோரும் நண்பர்களுமே முக்கியமான நபர்கள். அவர்கள் புரிந்து கொண்டாலே மற்றவர்களை எளிதாக கடந்து விடலாம். வருணும் அதையே ஆசைப்படுகிறான். முதலில் தன் நண்பர்களிடம் சொல்ல முயற்சி செய்கிறான். ஆனால் ஒருவரிடமும் அவனால் சொல்ல முடியவில்லை. நண்பர்களிடம் சொல்ல முடியாத போது அம்மாவிடம் சொல்ல மிகவும் பயப்படுகிறான். வருண் மற்றும் கார்த்திக்கின் வற்புறுத்தலால், கார்த்திக் அம்மா லக்ஷ்மியிடம் வருணின் பாலீர்ப்பை பற்றி சொல்கிறாள். அதை லக்ஷ்மியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன் கனவுகளை எல்லாம் அவன் உடைத்து விட்டதாக நினைக்கிறாள். மேலும் இது வெளியே இருப்பவர்களுக்கோ, தன் பள்ளி ஆசிரியர்களுக்கோ தெரிந்தால் தன் குடும்பத்துக்கு அசிங்கம் என நினைக்கிறாள். அவனை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறாள். வருண் கார்த்திக்கின் வீட்டிலேயே தங்குகிறான். வருணிற்கும் கார்த்திக்கிற்கும் இடையில் காதல் உருவாகிறது. இருவரும் ஒரே அறையில் தான் தூங்குகிறார்கள்‌. அவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாலும் தன் அம்மாவின் அன்பிற்கு அவன் ஏங்குகிறான். இந்த நேரத்தில் கோபி ஆர்மியிலிருந்து ஊருக்கு வருகிறார். பல நாட்களுக்கு வருண் பற்றி கோபிக்கு தெரிய வராமல் லக்ஷ்மி மறைத்து வைக்கிறாள். ஒருநாள் ரோகித் தன் அப்பா கோபியிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லி விடுகிறான். ஆனால் தன் தம்பி சொல்லியும் லக்ஷ்மி ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். இப்படி நடக்கும் எனத் தெரிந்திருந்தால் வருணை கருவிலேயே கலைத்து இருப்பேன் எனக் கூறுகிறாள். இதைக்கேட்டு கோபம்கொண்ட கோபி, அவளிடம் என்ன பேசியும் அவள் புரிந்துக் கொள்ள தயாராக இல்லாததால் ரோகித்தையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். லக்ஷ்மி யாரும் இல்லாமல் தனித்து விடப்படுகிறாள். இறுதியில் அவள் வருணை ஏற்றுக் கொண்டாளா? இல்லை வேறு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை. ஒரு நல்ல படத்திற்கு அதன் முடிவு எப்படி உள்ளது என்பது மிக முக்கியம். இந்தப் படத்தின் இறுதிக் காட்சி எழுதப்பட்ட விதமும் காட்சி அமைக்கப்பட்ட விதமும் அருமை. கடைசி ஷாட்டில் மழையில் நனைந்தபடி மஞ்சள் விளக்கொளியில் லக்ஷ்மி நடந்து வருவதை படம் பார்த்த எவராலும் மறக்க முடியாது.

இந்தப் படத்தில் இரண்டு குடும்பங்கள் காட்டப்படுகிறது. வருணின் குடும்பம், கார்த்திக்கின் குடும்பம். சமபாலீர்ப்பாளர்களை ஏற்றுக்கொள்ளாத குடும்பம், ஏற்றுக்கொண்ட குடும்பம். இரண்டு குடும்பங்களையும் இயக்குனர் ஜக்ஸ்ட்டபோஸ் ( Juxtapose) செய்கிறார். சமபாலீர்ப்பு இயல்பானது என்பதை புரிந்துகொண்டு தன் பிள்ளைகளை ஏற்றுக்கொண்டால் எப்படி மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை காட்சிப்படுத்தியுள்ளார்.

லக்ஷ்மி ஒரு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராகவும் இருக்கிறார்‌. அவளால் சமபாலீர்ப்பு இயல்பானது எனும் மனித வாழ்வின் அடிப்படையை கூட புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் பள்ளி கூடத்தில் வேலை செய்யும் அதிகம் படிக்காத ஒரு ஆயாவால் இதை சிறிய அளவாவது புரிந்துக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. படித்தவர்களுக்கு எல்லாவற்றைப் பற்றியும் அறிவு இருக்கும் என்ற கூற்று கேள்விக்குட்படுத்தப் படுகிறது. இதை நாம் வாழ்விலும் பல நேரங்களில் உணர்ந்திருக்கலாம்.

இந்தப் படத்தில் நிறைய முக்கியமான உரையாடல்கள் உள்ளன. லக்ஷ்மி ஃபேன்ஸி டிரஸ் போட்டி( Fancy dress competition) தொடர்பாக தன் பள்ளி மாணவனின் அப்பாவிடம் பேசும்பொழுது "பையனுக்கு ஏன் சார் பொண்ணு மாதிரி டிரஸ் போடுறீங்க. நீங்களே உங்க பையனை ஜோக்கர் ஆகிடுவீங்க போல. பொண்ணு மாதிரி டிரஸ் போட்டா கிண்டல் பண்ணுவாங்க பரவாயில்லையா. ஆர்மி மேன் இல்லனா பாக்ஸர் மாதிரி டிரஸ் போடுங்க" என்று கூறுகிறாள். இது பெரும்பான்மையான மக்களிடம் இருக்கும் மனநிலை. ஆண்கள் உடை, பெண்கள் உடை எனப் பிரித்து வைத்து, அதை மாற்றி அணிந்தால் கேலி செய்வது. அதிலும் குறிப்பாக ஆண்கள், பெண்களின் உடையை போட்டு ஒருநாள் கூட இந்தியாவில் நிம்மதியாக வெளியே சென்று வர முடியாது. ஒரு மனிதன் தான் என்ன அணிய வேண்டும், அவனை எந்த பாலினமாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதை அவன் விருப்பத்திற்கேற்ப அவனே முடிவு செய்வான். அந்த அடிப்படை உரிமை கூட ஒருவனுக்கு இல்லையா. இப்போது face app பயன்படுத்தி தங்கள் பாலினத்தை மாற்றி பதிவிடுபவர்கள் உண்மையில் தங்களின் நண்பர்களில் ஒரு ஆண் தீடிரென பெண்ணை போல உடை அலங்காரம் செய்து வந்தால் எவ்வாறு அவரை எதிர்க்கொள்வீர்கள் என்று சுயபரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை ஏதோ காரணங்கள் வைத்து கேலி செய்து ஒடுக்க துடிக்கும் உங்களின் அழுக்கு படிந்த மனங்கள் உங்களையே காரி துப்பும்.

கார்த்திக் அம்மா, கார்த்திக், வருண் மூவருக்கும் இடையில் நடக்கும் ஒரு உரையாடலில் கார்த்திக் அம்மா தன் மகனைப் பார்த்து அவனுக்கு வரப்போகும் பையன் ரொம்ப கஷ்டப் படுவான் என்று கூறுகிறாள். இந்த வசனம் அவள் தன் மகனை எந்த அளவுக்கு ஏற்றுக் கொண்டாள் என்பதை காட்டுகிறது. அவனை கிண்டல் செய்வதற்காக கூறும்போது கூட அவனை ஒரு பையனோடு தொடர்பு படுத்தியே கூறுகிறாள். சமபாலீர்ப்பாளர்களின் பெற்றோர்கள் இந்த அளவிற்கு தன் பிள்ளைகளை புரிந்து கொள்வது மிக அவசியமானது.


இந்தப் படம் குயர் மக்கள்( LGBTQ) பற்றிய அடிப்படை புரிதலை ஏற்படுத்த முயல்கிறது. சமபாலீர்ப்பாளர்கள் பற்றி எதுவுமே தெரியாத நபர்கள் படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு புரிதல் ஏற்படும். அதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கண்டிப்பாக இயக்குநர் சிறப்பாக செய்துள்ளார். ஆனால் ஒரு சில குறைகளும் உள்ளது. குறிப்பாக படமாக்கப்பட்ட விதத்தில் பல கேள்விகள் எழுகிறது. 

உரையாடல்களை படமாக்கிய விதத்தில் பிரச்சனைகள் உள்ளது. ஒரு சில சீன்களில் கதாபாத்திரங்களின் வசனம் உரையாடல்களாக இல்லாமல் ஒரு விதமான பிரச்சார தன்மையோடு உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சில குளோசப் ஷாட்டுகளில் ( close up shot) அந்தக் கதாபாத்திரம் களத்தை விட்டு வெளியே வந்து நம்மிடம் உபதேசம் செய்வது போல் உள்ளது. இது எதார்த்தத்தை கெடுத்து படத்தைப் பார்ப்பவர்கள், திரையில் தெரிபவர்களின் வாழ்வினில் பயணிக்க தடையாக அமைகிறது. வருண் டாக்டரிடம் தனக்கு ஆண்கள் மேல் ஈர்ப்பு வருகிறது என்று சொல்லும் போதும், கார்த்திக் அம்மா லக்ஷ்மியிடம் வருண் Gay என்பதை சொல்லும் போதும், ரோகித் அவன் அப்பாவிடம் வருண் Gay என்பதை சொல்லும் போதும் என வருண் Gay என்று மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் பல இடங்களில் சொல்பவர்களின் வசனம் இல்லாமல் மியூட் செய்யப்பட்டு அல்லது பின்னிசை கொடுக்கப்பட்டுள்ளது. இதை இயக்குநர் வேண்டுமென்றே வாண்டடாக செய்துள்ளார். ஆனால் அந்த முறை சலிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் அவற்றை சொல்ல முடியாது என்றாலும் படத்தொகுப்பின் மூலம் வேறு விதமாக காட்சியை கடத்தியிருக்கலாம். இல்லை ஒருமுறையாவது வசனம் வைத்திருக்கலாம். இப்படி படமாக்கப்பட்ட விதத்தில் பல கேள்விகள் எழுகின்றதே தவிற இந்த படம் எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தில் ( Content) தெளிவாக உள்ளது. 

"சட்டத்திற்காக சமூகத்திற்காக பெற்ற பிள்ளையை தூக்கி எறிந்த ஒவ்வொரு தாய் தந்தையின் குற்ற உணர்ச்சியையும், பெற்றோர்களால் ஒதுக்கப்பட்ட பிள்ளைகளின் வலியையும், வார்த்தைகளால் சொல்ல இயலாது. பின்னொரு நாள் இவர்களின் உரிமைகள் மதிக்கப்படும், சட்டங்கள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையில்..." எனும் எதிர்பார்ப்போடு இறுதியில் இந்த வரிகளுடன் படம் முடிகிறது. சமபாலீர்ப்பாளர்கள் எப்போது "Coming out" என்ற ஒன்று தேவைப்படாமல் இயல்பாக தங்கள் வாழ்வை வாழ்கிறார்களோ அப்போது வரை நாம் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத, மற்றவர்களை கேலி செய்து ஒடுக்க துடிக்கும் வளர்ச்சி அடையாத மதிகெட்ட சமூகம்தான்.

நன்றி : பால்மணம் மின்னிதழ் (பால்மணம் மின்னிதழலில் வெளியான கட்டுரையை அதே எழுத்தாளர் ஒரு சில மாற்றங்களுடன் மறுவெளியீடு செய்துள்ளார்)