எனது முதல் அனுபவம் - எம்.கே.தியாகராஜ பாகவதர்

சென்னை அடையாறு செல்லும் மார்க்கத்தில் ‘நெப்டியூன் ஸ்டூடியோ’ என்று கம்பீரமாக இப்போது நிற்கிறதல்லவா, அந்த இடத்தில் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு மீனாசி சினிடோன் என்ற ஸ்டூடியோ இருந்தது.

இப்போது இருப்பதைப் போன்று கொட்டகைகளோ, அழகான புல்வெளி யோகனித்தனியான காரியாலயங்களோ அப்போது இல்லை. அதற்குப் பதில் வானம் பார்த்த நிலையில் ஒரு பெரிய நிலப்பரப்புதான் இருந்தது.

அந்த இடத்திலே திடீரென்று ஒரு நாள் பெரிய அரண்மனை எழுந்தது. வானுலகத்திலிருந்து. அர்ஜூனன் இறங்கி வந்தான். அரண்மனையில் அவனுக்காகக் காத்திருந்த சுபத்திரை ஆவலோடு அர்ஜூனனை வரவேற்றாள்.

‘சோம சேகரா’ என்ற பாட்டைப் பாடிக்கொண்டே அர்ஜூனன் சுபத்திரையிடம் வந்தான்.

ரசிகர்களுக்கு நான் ஏதோ கதை சொல்வதாகத் தோன்றும்! ஒரு விதத்தில் அது உண்மையும் கூட, வாழ்க்கையில் ஏற்படும் ருசிகரமான சம்பவங்கள் எல்லாம் கதைகள் தானே! என்னுடைய படவுலக வாழ்க்கையில் முதன்முதலாக நடந்த சம்பவம் எனக்கு ஒரு சுவைமிக்க நிகழ்ச்சியாகத்தானே இருக்கவேண்டும்!

மேலே நான் அர்ஜூனன் சுபத்திரையைப் பார்க்க வருவதாகச் சொன்ன கட்டமிருக்கிறதே, அதுதான் நான் படவுலகில் நுழைந்து முதன் முதலாக நடித்த காட்சி பவளக்கொடி படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு நான் அர்ஜூனனாக அதில் வருவது நினைவிருக்கலாம். 

நான் படத்திற்காக பாடிய முதல் பாட்டும் அதுதான். என்னுடன் சுந்தரம்மாள் என்ற பெண் சுபத்திரையாக நடித்தார்.

அந்தக் காலத்தில் இப்போது இருக்கும் வசதிகள் ஒன்றுகூடக் கிடையாது. காமிராவும் ஒலிப்பதிவு இயந்திரமும் தவிர, விளக்கிற்கோ போதுமான மின்சார வசதிகள் கிடையாது. இதனால் பட்டப்பகலில் சூரிய வெளிச்சம் இருக்கும்போதுதான் படப்பிடிப்பு நடக்கும். சூரியன் அஸ்தமனமாகுமுன்பே படப்பிடிப்பு நின்றுவிடும்.

சூரிய வெளிச்சத்தை ஸெட் டில் பரப்ப பெரியபெரிய தகடுகளை வைப்பார்கள்!

இந்த வகையில்தான் அந்தக் காலத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

நான் ‘பவளக்கொடி’யில் நைத்தபோது எனக்கு படவுலகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. 

“இதுதான் காமிரா” என்பார்கள். காமிராவைப் பற்றியோ, அது வேலை செய்யும் முறை பற்றியோ மற்றும் இதர விஷயங்களோ எனக்கு எதுவுமே தெரியாது.

ஆனால் அடுத்து நான் கல்கத்தாவிற்கு ‘சாரங்கதரா’ படத்திற்காகச் சென்றபோதுதான் படவுலகைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டேன்.

(1949-ல் பாகதவர் அளித்த பேட்டி ஒன்றில்….)


இசைவேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த மொத்த படங்கள் 14

1934ஆம் ஆண்டில் முதலாவது படம் “பவளக்கொடி” மீனாட்சி பிலிம்ஸ் தயாரிப்பு எம்.கே.டிக்கு ஜோடி எஸ்.டி.சுப்புலட்சுமி. இயக்குனர் கே.சுப்ரமணியம்.

1935ஆம் ஆண்டில் இரண்டாவது படம் “நவீன சாரங்கதரா” முருகன் டாக்கீஸ் தயாரிப்பு எம்.கே.டிக்கு ஜோடி எஸ்.டி.சுப்புலட்சுமி. இயக்குனர் கே.சுப்ரமணியம்.

1936ஆம் ஆண்டில் மூன்றாவது படம் “சத்திய சீலன்” திருச்சி தியாகராஜா பிலிம்ஸ் தயாரிப்பு எம்.கே.டிக்கு ஜோடி எம்.எஸ்.தேவசேனா, இயக்குனர் பி.சம்பத்குமார்.

1937ஆம் ஆண்டில் நான்காவது படம்.
”சிந்தாமணி” ராயல் டாக்கீஸ் தயாரிப்பு எம்.கே.டிக்கு ஜோடி அஸ்வத்தம்மா. இயக்குனர் ஒய்.வி.ராவ்.

1937ஆம் ஆண்டில் ஐந்தாவது படம். “அம்பிகாபதி” சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரிப்பு எம்.கே.டிக்கு ஜோடி எம்.ஆர். சந்தானலட்சுமி. இயக்குனர் எல்லிஸ் ஆர்.டங்கன்.

1939ஆம் ஆண்டில் ஆறாவது படம், “திருநீலகண்டர்” தியாகராஜா பிலிம்ஸ் தயாரிப்பு. எம்.கே.டி.க்கு ஜோடி நெல்லை பாப்பா. இயக்குனர் ராஜா சாண்டோ.

1941ஆம் ஆண்டில் ஏழாவது படம் “அசோக் குமார்” முருகன் டாக்கீஸ் தயாரிப்பு. எம்.கே.டிக்கு ஜோடி குமுதினி. இயக்குனர் ராஜா சந்திரசேகர்.

1943ஆம் ஆண்டில் எட்டாவது படம். “சிவகவி” எம்.கே.டிக்கு ஜோடி எஸ்.ஜெயலட்சுமி, டி.ஆர். ராஜகுமாரி, இயக்குனர் ஸ்ரீராமுலு. பட்சிராஜா பிக்சர்ஸ் தயாரிப்பு.

1944ஆம் ஆண்டில் ஒன்பதாவது படம். “ஹரிதாஸ்” ராயல் டாக்கீஸ் தயாரிப்பு எம்.கே.டிக்கு ஜோடி என்.சி.வசந்தகோகிலம், எஸ்.ஜெயலக்‌ஷ்மி, டி.ஆர்.ராஜகுமாரி இயக்குனர் சுந்தரராவ் நட்கர்ணி. மூன்று தீபாவளி கொண்டாடியது. இந்தப் படத்தின் சாதனையை இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்க முடியவில்லை.

1948ஆம் ஆண்டில் பத்தாவது படம் “ராஜமுக்தி” நரேந்த்ரா பிக்சர்ஸ் தயாரிப்பு எம்.கே.டிக்கு ஜோடி பானுமதி, வி.என்.ஜானகி. இயக்குனர் ராஜா சந்திரசேகர்.

1952ஆம் ஆண்டு பதினோராவது படம் “அமரகவி” நாகூர்சினி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு. எம்.கே.டிக்கு ஜோடி பி.எஸ்.சரோஜா., டி.ஆர்.ராஜகுமாரி இயக்குநர் எப்.நாகூர். 

1952ஆம் ஆண்டு பன்னிரண்டாவது படம் “சியாமளா” யுவாபிக்சர்ஸ் தயாரிப்பு. எம்.கே.டிக்கு ஜோடி எஸ்.வரலட்சுமி இயக்குனர் பி.ஏ.சுப்பாராவ்.

1957ஆம் ஆண்டில் பதின்மூன்றாவது படம் “புதுவாழ்வு” சர்வோதயா பிக்சர்ஸ் தயாரிப்பு. எம்.கே.டிக்கு ஜோடி மாதுரிதேவி. இயக்குநர் எம்.கே.டி.

1960ஆம் ஆண்டில் பதினான்காவது படம் “சிவகாமி”.


நன்றி:எம்.கே.தியாகராஜ பாகவதர் 41-வது நினைவு மலர்