இரகசியங்கள் & பொய்கள்


-ரோஜர் எபெர்ட்

(1996-ஆம் ஆண்டில் கேன்ஸின் Palme d'Or விருது வென்ற சீக்ரெட்ஸ் & லைஸ் படத்திற்கு, ரோஜர் எபெர்டின் விமர்சனம்)

மைக் லே (Mike Leigh) திரைக்கதையை ‘வடிவமைக்கும்’ அந்தப் பிரபலமான முறையில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. அவர் முதலில் கதாபாத்திரங்களையும் சூழ்நிலைகளையும் கற்பனை செய்கிறார், பின்பு அந்தக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கேற்ற நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறார், அடுத்து உரையாடலும் கதைக்களமும் வடிவம் பெறக்கூடிய பட்டறைகளில் நடிகர்களுடன் இணைந்து செயல்படுகிறார், பட்டறைகளில் நடிகர்களுக்கு ஒரு காட்சியைக் கொடுத்து, அதில் நடிகர்களை நடிக்கவைத்து, அவர்கள் பேசுகிற உரையாடலையும், கதைக்களத்தையும் உள்வாங்கிக்கொண்ட பிறகுதான், அவர் திரைக்கதையையே எழுதத்துவங்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. முற்றிலும் உண்மை, ஆனால் இந்த வழிமுறைகளால் அவர் திரைக்கதையின் வலிமையை கீழிறக்குகிறார் என்று அர்த்தமல்ல; அவரது ”சீக்ரெட்ஸ் & லைஸ் - 1996” (Secrets & Lies) திரைப்படம், அவர் விரும்பியதைச் சரியாக அடையும்பொருட்டு, மிக நுணுக்கமான துல்லியத்துடன் செயல்படுகிறார் என்பதையும், மேலும் அவரை ஒரு ஃப்லிம் மேக்கராகவும் வெளிப்படுத்துகிறது. அவர் தனது நடிகர்களை ஒரு நாடக மேடையைப் போலவே திரையையும் பயன்படுத்தும்படி அழைக்கிறார், மிக நீண்ட நேரம் எந்தவித இடைவெட்டும் இல்லாமல் நகர்கிற அதிகக் கால அளவு கொண்ட ஷாட்களைப் பயன்படுத்துவதில் அவரது முறைக்கான ஊதியம் கிடைக்கிறது. சீக்ரெட்ஸ் அண்ட் லைஸ் படத்தில் அவ்விதம் அமைகிற இரு நீண்ட உரையாடல் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேடை நாடகங்களில் ஒரு காட்சி ஒரே முறையில் நடித்துக் காட்டப்படும். அதேபோன்ற முறையைத்தான் தன் படங்களிலும் சில இடங்களில் பயன்படுத்துகிறார். உணர்வுப்பூர்வமான காட்சி அல்லது உரையாடல் தருணங்களில் நடுவில் எந்தவித வெட்டும் இல்லாமல் முழுக் காட்சியும் நீள்கிறது. மைக் லே, தனது நடிகர்களை இந்த வகையான நாடக ஒழுங்கிற்கு பழக்கப்படுத்துகிறார்.

Figure மைக் லே

1943-ல் பிறந்த மைக் லே, தனது முதல் திரைப்படம் ”ப்ளீக் மொமண்ட்ஸ் (Bleak Moments)” 1971-ல் எடுத்தார். 1988ஆம் ஆண்டில் அவர் தனது இரண்டாவது திரைப்படமான ”ஹை ஹோப்ஸ் (High Hopes)”-ஐ உருவாக்கினார். இடையில், அவர் தொலைக்காட்சி மற்றும் தியேட்டருக்காக தொடர்ந்து பணியாற்றினார், இடைப்பட்ட காலத்தில், ஒரு படத்திற்கான முதலீட்டை அவரால் பெறமுடியவில்லை, ஏனெனில் தயாரிப்பாளர்கள் அவரிடமிருந்து ஒரு ஸ்கிரிப்டை எதிர்பார்த்தனர், ஆனால், நிச்சயமாக அவரிடம் ஸ்கிரிப்ட் என்ற ஒன்று இல்லை. அவரது ”ப்ளீக் மொமண்ட்ஸ்” திரைப்படத்தைப் பார்த்தபோது, நான் ஒரு சிறந்த இயக்குனரின் தலைசிறந்த படைப்பைப் பார்க்கிறேன் என்று தெரிந்துகொண்டேன், மேலும் சன் – டைம்ஸுக்கு அப்படம் குறித்த ஒரு நீண்ட மதிப்புரையையும் எழுதினேன். இது படத்தின் முதல் விமர்சனமாக மாறியது; இங்கிலாந்தில் உள்ள வீட்டில் மைக் லே புறக்கணிக்கப்பட்டார். இரண்டு திரைப்படங்களுக்கு இடையிலான இந்த பதினேழு ஆண்டு கால இடைவெளியில், அவர் இயல்பாக, உள்ளுணர்வால் தொடங்கியதை முழு நிறைவாக்கினார்; முயற்சிக்கும் சூழ்நிலைகளில் அதிருப்தி அடைந்தவர்களின் துயர உருவப்படங்கள் மற்றும் நோயியலின் எல்லைகளில் இருக்கும் சமூக சூழ்நிலைகளின் சங்கடம், போன்றவை அவரது படங்களில் இருந்தன.

அவர் சில கதாபாத்திரங்களைக் கேலிச்சித்திரங்களாக உருவாக்கினாலும், அவரது வேலையில் ஒரு பாதுகாப்பு வலையைப் போல செயல்படும் ஒரு இரக்க குணம் இருக்கிறது. ஒரு காட்சியில் மூலையில் தோன்றும் கதாபாத்திரங்கள், படத்தின் போக்கில் அது படம் முழுவதும் வட்டமிடும் வழியைக் கொண்டுள்ளன. இந்த உண்மையை, ”சீக்ரெட்ஸ் & லைஸ்” படத்தில், சிந்தியா பர்லேயாக(Cynthia Purley) நடித்த, பிரெண்டா பிளெத்தின் (Brenda Blethyn) நடிப்பின் மூலம் உணரலாம். அவர் ஒரு தொழிற்சாலைத் தொழிலாளி, அவர் பிறந்த சிறிய வரிசை வீட்டைச் சுற்றி நடக்கும் சம்பவங்களால் அதிருப்தியடைகிறார். அவரது 20 வயது மகள் ரோக்ஸானைக் கூட விரக்தியுடன் பார்க்கிறார். சிந்தியா ஒரு அப்பட்டமான சோகம் மற்றும் கவலையின் தொகுப்பாகப் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறார். ஆனால், அவரது மோசமான கனவு நனவாகும்பொழுது, அவர் தனது பழைய நிலையிலிருந்து முற்றிலும் மாற்றம்கொள்கிறார்.


Figure சிந்தியா பர்லே
இவருக்கு ஹார்டென்ஸ் கம்பெர்பாட்சிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும்போது அந்தக் கொடுங்கனவு நனவாகும் நிகழ்வு நிகழ்கிறது. சிந்தியா 16 வயதிலேயே திருமணமாகிவிட்டார், பெற்ற குழந்தையின் முகத்தைப் பார்க்காமலேயே, அக்குழந்தையைப் பிறர் தத்தெடுத்துக்கொள்ளும் பொருட்டு விட்டுவிடுகிறார். படத்தில் ஹார்டென்ஸாக நடித்திருப்பவர், மரியென் ழான் – பாப்டிஸ்ட் (Marianne Jean-Baptiste). ஹார்டென்ஸ், 20-களின் பிற்பகுதியில் இருக்கும் ஒரு கருப்பின பெண், மேலும் இவர் ஒரு கண்சிகிச்சை மருத்துவர். தனது வளர்ப்புத் தாயின் மரணத்திற்குப் பிறகு, தன்னைப் பெற்றெடுத்த தாயைத் தேடிக் கண்டடைய முடிவு செய்கிறார். சிந்தியாவின் முதல் குழந்தை பற்றிய நீண்ட கால ரகசியம் அச்சுறுத்தப்படுகிறது. இந்த ரகசியத்தை சிந்தியா மட்டுமல்ல, அவரது தம்பி மாரிஸ் (திமோதி ஸ்பால் - Timothy Spall), மற்றும் அவரது மனைவி மோனிகா (ஃப்லிஸ் லோகன் - Phyllis Logan) ஆகியோரும் பாதுகாத்துள்ளனர்.

சிந்தியா உடைந்து அழுகிறாள், ஹார்டென்ஸ் பேசிக்கொண்டிருந்த தொலைபேசி ரிசீவரைத் தொங்கவிட்டுவிட்டு கண்ணீர் சிந்துகிறாள். ஹெர்டென்ஸ் திரும்பவும் தொலைபேசியில் அழைக்கிறாள். சிந்தியா பயத்துடன், தன்னைச் சந்திக்க ஒப்புக்கொள்கிறார். முதலில் தன் மகள் கறுப்பாக இருப்பதை அவளால் நம்பமுடியவில்லை: ”ஏதோ, தவறு நடந்துள்ளது, அன்பே, ஏன், என்னைப் பார்க்க வேண்டும்?”. அவர் தத்தெடுப்பு ஆவணங்களை முதன்முதலில் பார்த்தபோது, ஹார்டென்ஸும் கூட ஏதோ தவறு இருப்பதாகவே நினைத்தார்: “இங்கே என் அம்மா வெள்ளையினத்தவர் என்று அந்த ஆவணம் கூறுகிறது.” ஹார்டென்ஸும் சிந்தியாவும் ஒரு கப் தேநீருக்காக ஒரு ஓட்டலுக்குச் செல்கிறார்கள், இங்கே, தான் நடுவில் இடைவெட்டில்லாத மிக நீண்ட கால அளவு கொண்ட முதல் (ஒரே ஷாட்) காட்சி அரங்கேறுகிறது. கேமராச் சட்டகம், medium two-shot-ல் இருந்து ஒருபோதும் நகரவில்லை. மேலும் சட்டகத்தினுள் இந்த இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. தான் ஒருபோதும் கறுப்பின மனிதனுடன் இரவைக் கழிக்கவில்லை (உறவுகொள்ளவில்லை) என்று சிந்தியா கூறுகிறார். (எனக்கு அப்படி ஏதோவொன்றுதான் நினைவில் இருக்கிறது, இல்லையா?) பின்னர் அவர் முகம் மாறுகிறது. நினைவகத்தில் புதைக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வருகின்றன. உண்மை புரிகிறது. அவள் துடிக்க ஆரம்பிக்கிறாள்.
Figure ஹெர்டோன்ஸ் & சிந்தியா

இந்தக் காட்சியை இவ்விரு பெண்களும் கொண்டுசெல்லும் விதம் கண்கவரும் வகையில் அமைகிறது. அவர்கள் அந்தக் காட்சிக்குரிய உண்மையான நேரத்தில் இருந்து செயல்படுகிறார்கள், அந்த இடத்திலேயே ஒரு புதிய உறவை உருவாக்குகிறார்கள், கண்சிகிச்சை மருத்துவராக இருக்கும் இந்த முதல் மகளின் உள் பரபரப்பை சிந்தியா உணர்கிறாள். இரண்டாவது மகள் ரோக்ஸேன் ஒரு தெரு துப்புறவாளர்.
திரைப்படத்தில், இந்த இரண்டு பெண்களின் காட்சிகள், ஒன்றாக மற்றும் தவிர்த்து, மொரிஸ் மற்றும் மோனிகா சம்பந்தப்பட்ட காட்சிகளுடன், குழந்தை இல்லாத, அவர்களுக்கிடையேயான உறவுநிலையுடன் இதுவும் ஒன்றிணைக்கப்படுகின்றன. மாரிஸ் தனது புகைப்பட ஸ்டுடியோவில் எடுக்கும் புகைப்படங்களுக்கு இயக்குனரால் ஒரு அசாதாரண அளவு திரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்குள் சுவாரஸ்யமானவர்கள்; போக்குவரத்து விபத்தில் முகத்தில் வடு ஏற்பட்ட ஒரு பெண், காப்பீட்டு நோக்கங்களுக்காக “முடிந்தவரை மோசமாக” புகைப்படம் எடுக்க விரும்புவதாகக் கூறுகிறார். பின்னர் மொரிஸ் வியாபாரத்தை விற்ற ஒரு குடிபோதை ஆசாமியின் வருகை உள்ளது. இந்தக் காட்சிகள் படத்தில் ஏன் உள்ளன? ”நான் மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன்” என்று ஸ்டுடியோவைத் துவங்கிய மொரிஸின் வெடிப்புநிலைக்கு, அவர்கள் அடித்தளம் அமைக்கின்றனர்.
Figure மொரிஸ் மற்றும் மோனிகா

ஒரு விசாலமான புதிய வீட்டில் வசிக்கும் மொரிஸ் மற்றும் மோனிகா, அவரது சகோதரியையும் மகளையும் மிக அரிதாகத்தான் பார்க்கின்றனர். ரோக்ஸானின் 21-ஆவது பிறந்தநாளுக்காக அவர்களை அழைக்க முடிவுசெய்கிறார்கள். சிந்தியா தனது மகளை, அவளது காதலனையும் உடன் அழைத்துவருமாறு வற்புறுத்துகிறாள்: “அவர் என் சூப் தயாரிப்பில் நின்றுகொண்டிருந்தால், நான் அவரை அறிய மாட்டேன்” என்கிறாள். பின்னர், சிந்தியா மாரிஸிக்குப் போன்செய்து, ”வேலையிலிருந்து ஒரு துணையை அழைத்துவர முடியுமா?” என்று கேட்கிறாள். இது ஹார்டென்ஸாக இருக்கும், அவர் ஒரு குடும்ப விழாவில் கலந்துகொள்வதில் பல சிரமங்கள் இருப்பதால், அவர் தயங்குகிறார்.

மாரிஸின் கொல்லைப்புறத்தில், ஒரு நெரிசலான சுற்று மேசையை மையமாகக் கொண்ட, இரண்டாவது மிக நீண்ட உரையாடல் காட்சி, படத்தில் வருகிறது. விருந்தினர்கள் நெருக்கமாக, கொஞ்சம் கஷ்டப்பட்டு தங்கள் இருக்கையில் அமர்கின்றனர், உணவு பரிமாறப்பட்டு, விருந்து நடக்கிறது. ஆனால், இதே காட்சியில் பதற்றமும் தெளிவாக உள்ளது. ஹார்டென்ஸ் பற்றிய ரகசியம் இன்னும் விவரிக்கப்படாததன் காரணமாக மட்டுமல்ல. மாரிஸை, தனது ‘இளைய சகோதரர்’ என்று வளர்த்த சிந்தியா, மோனிகாவை வெறுக்கிறார், அந்த வெறுப்புணர்வு மீண்டும் திரும்புகிறது. எப்போது பிரச்சினை வெடிக்கும் என்ற படபடப்பு அந்த சாப்பாட்டு மேசையைச் சுற்றியிருக்கிறது. ரோக்ஸேனுக்கு மாரிஸைப் பிடிக்காது. பால் (லீ ரோஸ் - Lee Ross – புகைப்படத்தில் வலது ஓரத்தில் வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்), ரோக்ஸேனின் காதலன், சிறிய முணுமுணுப்பு உரையாடலை மட்டுமே வெளிப்படுத்துகிறான், ஆனால், அவனை உன்னிப்பாகக் கவனியுங்கள்: அவன் பயந்துபோகிறான், அவனது கைகள் பிடுங்குகின்றன, அவன் தனது உணவை உண்ணும்பொழுது, கன்னங்கள் இழுக்கப்படுகின்றன. பிறகு, உள்ளே பிறந்த நாள் கேக்கைச் சுற்றிலும் அனைவரும் நின்றுகொண்டிருக்கும்பொழுது, சிந்தியா தனது ரகசியத்தை, அந்த அதிர்ச்சித் தகவலைப் போட்டு உடைக்கிறார்: ஹார்டென்ஸ் தனது மகள்.

இது எவ்வாறு இயங்குகிறது மற்றும் அது எதை வழிநடத்துகிறது என்பதையெல்லாம் படத்தின் தலைப்பே உள்ளடக்கியிருக்கிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இனரீதியான பாரபட்சம், அல்லது தவறான அபிப்ராயங்களுக்கான அறிகுறி என படத்தில் எதுவும் இல்லை; ரோக்ஸேன் தனக்கு ஒரு சகோதரி (half-sister) இருப்பதை புரிந்துகொள்வது என்பதே போதுமானது. இந்த அறிவிப்பின் அதிர்ச்சி அந்த அறைமுழுதும் பரவுகிறது, இது மற்ற குடும்ப ரகசியங்களையும், பொய்களையும் தளர்த்துகிறது.

மைக் லேயின் நுட்பமான துல்லியத்தன்மை குறித்து நான் என்ன சொல்கிறேன் என்பதற்கான விளக்கமாக இந்தக் காட்சியைக் கவனியுங்கள். ஒவ்வொரு கேமரா அமைவு, காட்சியைப் படமாக்க அவர் கேமராவின் நிலையையும், கதாபாத்திரத்தின் இடங்களையும் தேர்ந்தெடுக்கும் நுட்பம், ஒவ்வொரு அண்மைக்காட்சி (க்ளோஸ் அப்), ஒவ்வொரு அண்மைக்காட்சியின் அளவு மற்றும் நேரம், முழு படத்தொகுப்பு, காட்சியை சக்திவாய்ந்ததாக வெளிப்படுத்த துணைபுரிகின்றன. சோப் ஓபராவின் இசை, படத்தில் சில காட்சிகளில், சில நிமிடங்களுக்குக் கையாளப்படுகிறது மற்றும் ஒருபோதும் அந்த இசைத் தேர்வு கட்டாயமானதாகவோ, காட்சியோடு ஒன்றாமல் தன்னிச்சையாகத் துருத்தித் தெரிவதாகவோ தோன்றவில்லை.

பல மைக் லே படங்களில் காணப்படுகிற தந்திரமான விஷயம், நகைச்சுவைகளைச் செயலாக்குவது. ”லைஃப் இஸ் ஸ்வீட் (Life Is Sweet 1991)” மற்றும் ”டாப்ஸி – டர்வி (Topsy-Turvy – 1999)” போன்ற அவரது உற்சாகமான வகைப் படங்களில், அவர் நகைச்சுவையைக் கையாளும் பாங்கு தெளிவாகத் தெரிகிறது. இருண்மை நிறைந்த கதைக்கருக்களைக் கொண்ட அவரது படங்களில் கூட, அதாவது, ”ப்ளீக் மொமண்ட்ஸ்”, “ஹை ஹோப்ஸ்”, மற்றும் நிச்சயமாக ”வெரா ட்ரேக் (Vera Drake -2004)” போன்ற படங்களிலும் நகைச்சுவை உள்ளது, ஆனால், பெரும்பாலும் அடக்குமுறை மற்றும் நயவஞ்சகமான, ஒரு சமூக சூழ்நிலையில் அது பொருத்தமற்றதாக இருக்கும்போது, நகைச்சுவை உங்களைச் சிரிக்கத் தூண்டுகிறது. சில இயக்குனர்களுக்கு, கதைசொல்லும் வகைமையில் ஒரு சில காட்சிகளின் மீது தீராத காதல் இருக்கும். அது எப்படியோ தனது படங்களில் வெளிப்படுவதுண்டு. அல்லது, இயக்குனர்களே அதுபோன்ற காட்சிகளை தனது விருப்பத்தின்படி, படத்தில் பயன்படுத்துவார்கள். அதுபோல, மைக் லே-யின் விருப்பமான கருவிகளில் ஒன்று, ஒருவிதமான விருந்து நிகழ்வு, அனைத்து கதை இழைகளும் வெளிவரும் விதத்தில் இரவு உணவு அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்களின் ஒன்றுகூடல் கூட்டத்தை உருவாக்குவது. சில நேரங்களில் இது பெரும் அசெளகரியத்திற்கு ஆளாகின்றன.

Figure ப்ளீக் மொமண்ட்ஸ்

மைக் லேயின் புகழ்பெற்ற பிபிசி படமான ”அபிகாயில்ஸ் பார்ட்டி (Abigail's Party" (1977))” போலவே, ”ப்ளீக் மொமண்ட்ஸ்” இப்போது குறுந்தகடுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இரண்டிலும் சமூக மன உளைவுகள், சங்கடங்கள் தெளிவாக உள்ளன; நாம் சிரிக்க வேண்டுமா அல்லது ஒரு பிரச்சினையிலிருந்து வெளியேறி, அந்தச் சூழ்நிலையை வெல்ல வேண்டுமா? இந்த வகையான தேர்வின் மூலம் ஒரு திரைப்பட ஹிப்னாடிக் செய்ய முடியும். ”ப்ளீக் மொமண்ட்ஸ்” படத்தில் ஒரு நீட்டிக்கப்பட்ட காட்சியைக் கவனியுங்கள். கதாநாயகி, அழகான, கடுமையான மற்றும் மனம் விட்டுப் பழகாத பெண் (Ann Raitt), வலிமிகுந்த கூச்ச சுபாவமுள்ள ஆசிரியருடன் (Eric Allen), முதல் சந்திப்பிற்கு வெளியே செல்லும்போது நடக்கிற காட்சி அது. ஒரு சீன உணவகத்தில் அவர்கள் முடக்கப்படுவதிலும், ஒரு மேசைப் பணியாளருடன் அவர்களின் மோதலிலும், லே-யின் வாழ்க்கை அனைத்தும் காத்திருத்தலில் உள்ளது என நீங்கள் உணரமுடியும்.

”ப்ளீக் மொமண்ட்ஸ்” பற்றிய எனது விமர்சனத்தில், ”எந்தவொரு வழக்கமான வழியிலும், இது பொழுதுபோக்கு இல்லை. அதே வேளையில் இது ஒரு கணம் சலிப்பூட்டுவதாகவோ அல்லது பார்ப்பதற்கு கடினம் என்றும் சொல்லவில்லை; மாறாக, இப்படத்தைப் பார்க்காமல் இருப்பதும் சாத்தியமில்லை.” என்று எழுதினேன். இது அவருடைய படைப்புகளை அதிகம் விவரிக்கிறது. நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த, ஒரு திரைப்பட விழா திரையிடலில் ஒரு சக விமர்சகர் என்னிடம், ”நான் திரைக்குள் துளைக்கப்பட்டவனாக உணர்ந்தேன். என்னால் படம் பார்ப்பதை நிறுத்தமுடியவில்லை. ஆனால், என்னால் மீண்டும் அதில் ஒருபோதும் உட்கார முடியவில்லை.” என்றார்.

அப்போது நான் எழுதினேன், மைக் லே உருவாக்கும் இத்தகைய கண்கவர் மோகம், சினிமாவில் உள்ள எல்லாவற்றையும் (அல்லது வேறு எதையும்) போலல்லாது உள்ளது. ஏனென்றால், இவரது படங்கள் மிகவும் ஆழமாகச் சென்று, மனித நகைச்சுவையை அதன் கண்ணீருக்காக ஆராயும் வாய்ப்புகளையே தேர்ந்தெடுக்கின்றன.