வலிய சிறகுள்ள பக்‌ஷி: இயக்குனர் பிஜு தாமோதரன் பேட்டியின் தொடர்ச்சி

-தமிழில்: தீஷா

உங்கள் முதல் படம் எப்படி அமைந்தது?

’சாய்ரா’ படத்திற்கான திரைக்கதையை 2000 ஆம் ஆண்டிலேயே எழுதியிருந்தேன். பின்பு அதைத் திரைப்படமாக்க நீண்ட காலம் முயற்சித்தேன். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2005-ஆம் ஆண்டில்தான் என் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்தது. நான் எழுதியவற்றை திரைப்படமாக உருவாக்க முடிந்தது.

Image may contain: 3 people, people smiling

பட உருவாக்கத்திற்கான பட்ஜெட் தொகைக்கு என்ன செய்தீர்கள்? ஏனெனில், இந்தச் சினிமாத்துறைக்கு நீங்கள் புதியவர், மேலும் உங்களுக்கு எந்த ஆதரவும் இல்லாதபொழுது, எப்படி உங்களால் முதல் படத்தை எடுக்க முடிந்தது?

முதல் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பது மிகவும் கடினம். திரைப்படப் பின்புலம் கொண்டிராத தயாரிப்பாளர்களைத் தேடியே நான் அலைந்தேன். இந்தப் படத்திற்காக நான் கிட்டத்தட்ட 60 தயாரிப்பாளர்களைச் சந்தித்திருக்கிறேன். அனைவருமே இந்தப் படத்தைத் தயாரிக்க மறுத்துவிட்டனர். 2004ஆம் ஆண்டு எனக்கு மருத்துவராக அரசுப் பணி கிடைத்தது. பின்பு நான் வாங்குகிற சம்பளத்திற்கான சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்து, தனிப்பட்ட வங்கிக்கடன் வாங்கி அதிலிருந்தே முதல் படத்தைத் துவங்கினேன். 

வங்கியில் எவ்வளவு கடன் வாங்கினீர்கள்?

ஒரு லட்சம் ரூபாய். அதனுடன் மூன்று லட்ச ரூபாய் நிதி திரட்டினேன். அத்தோடு, நான் சேமித்து வைத்திருந்த சிறிதளவு பணம் எனக்கு உதவியது. என் மனைவி, சில ஆபரணங்களை இதற்காகக் கொடுத்தார். எப்படியோ நாங்கள் கிட்டத்தட்ட ஆறு லட்ச ரூபாய் திரட்டிவிட்டோம். இது கொஞ்சம் பெரிய தொகைதான். எனவே, இதை முதலீடாகக் கொண்டு படப்பிடிப்பைத் துவங்கினோம். ஆனால், ஆறு லட்சம் எப்போது முடிந்ததோ, அப்போதே படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. அந்நேரத்தில் இன்னொரு நண்பர், எனது கேமராமேனிடம் இந்தப் படம் எந்த நிலையில் இருக்கிறது? என்பது குறித்து விசாரித்திருக்கிறார். ”நன்றாக வந்திருக்கிறது, ஆனால் பணப்பிரச்சினை காரணமாக பாதியிலேயே நிறுத்தியிருக்கிறோம்” என்று கேமராமேன் பதில் சொல்லியிருக்கிறார். பின்னர் அந்நண்பர் என்னைச் சந்தித்து, ”சரி! நாம் மீண்டும் படப்பிடிப்பைத் துவங்கலாம், மீதமுள்ள பணத்தை நான் தருகிறேன்.” என்றார். அவர் எங்களுக்குப் பத்து லட்ச ரூபாய் தந்ததால், எங்களால் மேற்கொண்டு படத்தை முடிக்க முடிந்தது. 

New Malayala Full Movies 2016 | Saira | Hd Movies | New Malayalam Action  Movies - YouTube

அவர் தொழில்முறை தயாரிப்பாளரா?

இல்லை, அவர் எங்களது நண்பர். இது அவரது முதல் படம். இதற்கு முன்பு அவர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டும் உருவாக்கியிருந்தார். 
எனவே, சுமார் பதினாறு லட்ச ரூபாய் தொகையை மட்டும் கொண்டு, முழு படத்தையும் எடுத்து முடித்துவிட்டீர்களல்லவா?
ஆம், அது சரிதான். 

இதில் நடித்த நடிகர்கள் பெரும்தொகையை சம்பளமாக வசூலித்தார்களா?

உண்மையில் தொழில்நுட்பக் கலைஞர்கள் எனக்கும், இந்தப் படத்திற்கும் உதவி செய்யக்கூடியவர்களாகவே இருந்தனர். அவர்கள் இந்தத் திரைப்படம் பற்றி புரிந்துகொண்டதாலும், இந்தப் படத்தை எடுக்க நான் எவ்வளவுதூரம் சிரமப்படுகிறேன் என்பதை நன்றாகவே அறிந்திருந்ததாலும், பணம் ஏதும் கேட்டு என்னை நிர்ப்பந்திக்கவில்லை. கேமரா வாடகை, ஆய்வக கட்டணங்கள், என இதுபோன்றவற்றிற்கான செலவுகளை மட்டுமே நாங்கள் ஏற்கவேண்டியிருந்தது. 

பிரபல நடிகர் நெடுமுடி வேணு பற்றி?

2000ஆம் ஆவது ஆண்டில், நான் இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தபிறகு, அவரிடம் அந்த ஸ்கிரிப்டைக் கொடுத்தேன். படித்த பிறகு, அவர் என்னிடம், ”இது போன்ற படத்திற்கான பட்ஜெட் மற்றும் நிதியாதாரத்தை மனதில் வைத்து இதைச் சொல்கிறேன், உங்களைப் போன்ற ஒரு நபர் இந்தப் பட உருவாக்கத்திற்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்து, இதை ஒரு திரைப்படமாக வெளிக்கொண்டுவருவது மிகவும் கடினம். ஆனால், இதுவொரு நல்ல படம், எனவே அதில் நான் நடிக்கிறேன்” என்றார். நாங்கள் படம் ஆரம்பித்தபிறகு, அவர் எங்களிடமிருந்து எந்தத் தொகையும் பெற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவர் படப்பிடிப்புத் தளங்களில் உதவிகரமாக இருப்பதற்காகத் தனது காரையும் கொடுத்திருந்தார். எனவே, அவர் எங்களுக்கு மிகவும் உறுதுணையாகத்தான் இருந்தார். 

Nedumudi Venu | Nedumudi Venu MBIFL2019

அவர் அத்தகைய மூத்த நடிகர் அல்லவா!

ஆம். பின்னர் ஒரு நேர்காணலில் அவர் இந்த திரைக்கதையைப் படிக்கும்போது அதில் ஒரு தீப்பொறியைக் கண்டதாகக் கூறினார். 
அவர் உங்கள் பெரும்பாலான படங்களில் ஒரு பகுதியாகவே இருக்கிறார். 

ஆம்!

’சாய்ரா’விலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்? க்றிஸ்டோபர் நோலன் சொல்வதைப் போல நீங்கள் முதல் படம் எடுக்கிறபொழுது, அதிலிருந்து நீங்கள் நிறையவே கற்றுக்கொள்கிறீர்கள், அதன்பிறகு அதுபோல் நடப்பதில்லை. 

அந்நேரத்தில் எங்களிடத்தில் மிகுந்த தன்னம்பிக்கை இருந்தது. நாம் ஸ்கிரிப்டில் போதிய கவனம் செலுத்தி, அதில் நம்பிக்கையுடன் இருந்தால், இப்போது வருகிற திரைப்படங்களைக் காட்டிலும் வித்தியாசமானதொரு திரைப்படத்தை நாம் உருவாக்குவோம் என்ற நம்பிக்கையும் இருந்ததால், அதைச் செய்வோம், எந்த பிரச்சினையும் இல்லை. நாம் எவ்வளவு நேரம் காத்திருந்தாலும், இறுதியில் அதைச் செய்துமுடிப்போம் என்ற நம்பிக்கை இருந்தது.

உங்கள் மூன்றாவது திரைப்படமான ‘வீட்டிலெக்குல்ல வழி’ (”Veettilekkulla Vazhi” (The Way Home)),அதில் உங்கள் மகன் கோவர்த்தன் நடித்துள்ளாரல்லவா?

ஆம்

”வீட்டிலெக்குல்ல வழி” மற்றும் “ராமன்” ஆகிய இரு திரைப்படங்களும் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டற்கான காரணம் என்ன?

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்வதுபோன்ற, பயணக்குறிப்பு பாணியில் இத்திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டேன். எனது முதல் படத்திற்குப் பிறகு, இந்தியாவின் முக்கிய பகுதிகள், அதன் அழகு மற்றும் நிலப்பரப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். ராஜஸ்தான், லடாக் போன்ற பகுதிகளில் படப்பிடிப்புகள் நடத்த எண்ணினேன். இரண்டுமே வெவ்வேறு தட்பவெப்ப நிலைகள் மற்றும் முற்றிலும் மாறுபட்ட நிலப்பரப்புகளைக் கொண்ட இடங்கள். இந்த முரண்பாட்டிற்காகவே நான் அந்த இடங்களைத் தேர்ந்தெடுத்தேன். 

உங்கள் திரைப்படங்களில் – பின்னணியில், காட்சி ரீதியில், பாடல்கள் மற்றும் இசையில் என பல கலாச்சாரங்களைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் முதல் திரைப்படமான ’சாய்ரா’வில் இந்தி கஜல்கள் மற்றும் ஆலப் இருந்தன.பின்னர் “வீட்டிலெக்குல்ல வழி”யில் மார்வாடி, லடாகி மற்றும் பஞ்சாபி பாடல்கள் இருந்தன. 

ஆம், அது சரிதான். நான் நாட்டுப்புறப் பாடல்களை எனது திரைப்படங்கள் வாயிலாக, இதுபோல பகிர்ந்துகொள்ளவே விரும்புகிறேன். ஏனெனில் அதுவே உண்மையான இசை. 

2015ஆம் ஆண்டு வெளியான ”வலிய சிறகுல்ல பக்‌ஷிகள்” (Valiya Chirakulla Pakshikal) படத்திற்கான கதை, நீண்ட நாட்களாகவே உங்கள் மனதில் இருந்ததா? 

ஆம், இருந்தது. இது கேரளாவில் நடந்த ஒரு உண்மையான நிகழ்வை (காசர்கோடு எண்டோசல்பன் – பேரழிவு மற்றும் அதன் பின்னான விளைவுகள்) அடிப்படையாகக் கொண்டது. இது கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் வருகிற பின்விளைவுகளைப் படித்துவந்தோம். அதுபற்றிய புகைப்படங்களையும் பார்த்தோம். இந்த விவகாரம் தொடர்பாக பல ஆவணப்படங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன. பல புத்தகங்கள் அது தொடர்பாக எழுதப்பட்டிருக்கின்றன. கலந்துரையாடல்கள் நடந்துள்ளன. மக்கள் இயக்கங்கள் அங்கு போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. வேலை நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இத்தனை வருடங்களுக்குப் பிறகும், இந்தப் பிரச்சினை சம்பந்தமாக எந்தவொரு திரைப்படமும் எடுக்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எனவே, அந்தக் கதைக்களனை வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இதைத் திட்டமிட்டேன். ஆனால், இதை ஒரு திரைப்படமாக உருவாக்குவது சவாலான பணியாகவே இருந்தது. எங்களுக்கு ஒரு கதை மற்றும் சில திரைப்பட அம்சங்களும் தேவைப்பட்டன. எனவே, அந்தக் கதை வடிவம் உருவாகும்வரை நான் காத்திருந்தேன். அது முடிந்ததும், நான் படத்திற்கான முன் – தயாரிப்புப் பணிகளையும், பின்னர் படப்பிடிப்பினையும் துவங்கினேன்.

Image may contain: 5 people

கேரளாவில் எண்டோசல்பன் காரணமாக இதுவரை எத்தனை மரணங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் இதனால் எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?

10,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இந்த எண்ணிக்கை 500க்கு அருகில்தான் இருக்கிறதென அரசாங்கம் கூறுகிறது. இதற்கு எதிராக வேலை நிறுத்தங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. 

மருந்து தெளிப்பு 24 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்நேரத்தில் சிவில் சமூகத்தின் எதிர்வினை என்னவாக இருந்தது? சமூக ஆர்வலர்களின் பணி என்னவாகயிருந்தது?
உண்மையில், அங்கு என்ன நடக்கிறதென்று ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது. இது மருத்துவம் தொடர்பான தெளிப்பு என்றும் முந்திரி பயிர்களின் வளர்ச்சிக்கானது என்றும்தான் அரசாங்கம் கூறியது. மக்களும் இதை நம்பினர். அவர்களுக்கு இதுவொரு பூச்சிக்கொல்லி என்பது தெரியாது. படிப்படியாக, இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரியப் பெரிய நோய்கள் வருவதைப் பார்த்தபிறகு, சில மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர், இதற்கு அந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பே காரணமாகயிருக்கலாம் என்று நினைத்தனர். எனவே அவர்கள் இதுதொடர்பாக விசாரிக்க ஆரம்பித்தனர். சிறிய அமைப்புகள் போராட்டத்திற்கு வந்து நின்றன. பின்னர் வேளாண் துறையில் பணிபுரிந்த பெண் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார், எனவே நீதிமன்றம் மேற்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு தடைவிதித்தது.

Valiya Chirakulla Pakshikal on Moviebuff.com

காசர்கோட் எண்டோசல்பன் – பேரழிவு பற்றி நாம் படிக்கும்பொழுது, எண்டோசல்பன் பாதிப்பில்லாதது என்று வாதிடும் சில கட்டுரைகளும் உள்ளன அல்லவா?

இதுபோன்ற பெரும்பாலான அறிக்கைகள், அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்கள் மூலமே பரப்பப்படுகின்றன.  அவர்கள் சில ஏஜென்சிகளை வேலைக்கு அமர்த்தி மற்றும் நிறுவனங்களின் உதவியுடன் இதுபோன்ற அறிக்கைகளைத் தயார் செய்கின்றனர். அவர்களது பெரும்பாலான ஆய்வுகள் ஒருபக்கச் சார்பானவை. சில தனிப்பட்ட நிறுவனங்கள் பக்கச்சார்பற்றவை. ஆனால் பூச்சிக்கொல்லி உரிமையாளர்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் எண்டோசல்பனுக்கு ஆதரவாக உள்ளன. பிரச்சினை என்னவென்றால், காசர்கோட்டில் சரியான அறிவியல் ஆய்வுகள் செய்யப்படவில்லை, மேலும் அவ்வாறு செய்வது அரசாங்கத்தின் கடமையேயாகும். 

நீங்கள் உங்களது திரைப்படத்தில் சினிமாட்டிக்கலாக அதிகம் பரிசோதனை முயற்சிகள் செய்யவில்லை, அதேபோல நடிப்பிலும் அதிக நாடகத்தன்மை இல்லை. காட்சி மற்றும் நடிப்பு குறித்த உங்கள் அணுகுமுறை என்ன?

 இந்தத் திரைப்படத்துறையில் பணிபுரியத் துவங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே, அதில் நான் மெலோட்ராமா செய்யப்போவதில்லை அல்லது இந்தச் சூழ்நிலையை நாடகமாக்கப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன், ஏனெனில் நாங்கள் உண்மையான மனிதர்களின் கதைகளைக் கையாள்கிறோம். எனவே, இதை நான் மிகவும் யதார்த்தமான முறையிலேயே படமாக்க விரும்புகிறேன். அங்கு நடக்கிற சம்பவம், வரலாறு மற்றும் அங்கிருந்த அனைத்து சூழ்நிலைகளையும் நான் தெளிவாகவே முன்வைக்கிறேன்.

பெரும்பாலும், நான் கதை சொல்லவே விரும்புகிறேன். இப்போது பரவலாக சினிமா என்று அடையாளப்படுத்துகிற ஒன்றோடு என் திரைப்படங்களும் இணைவதை நான் விரும்பவில்லை. இதுவே எனது அணுகுமுறை. நான் முன்பே நடிகர்களிடம் இதுகுறித்துப் பேசிவிடுவேன், நீங்கள் இந்நடிப்பை மிகவும் சாதாரண முறையில் செய்ய வேண்டும், மெலோடிராமடிக் முறை வேண்டாம், ஏனெனில் நாம் உண்மை மனிதர்களையே படப்பிடிப்பில் பிரதிபலிக்கிறோம். மேலும், உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுடன் படப்பிடிப்பு நடத்துகிறோம். நாங்கள் படப்பிடிப்பில் இருந்தபொழுது, நடிகர்களை பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாகவே உரையாட அனுமதித்தோம். அவர்கள் நமக்கு எதிர்வினை செய்தனர், சிரித்தனர், பேசினர். எங்கள் கதாபாத்திரங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று அவர்களோடு பேசுவதுபோலவே படப்பிடிப்பு நடத்தினோம். அதன்படி அவர்கள் என்ன சொன்னாலும், அதற்குத் தகுந்தபடி எங்கள் நடிகர்கள் எதிர்வினை செய்யவேண்டும். கேமராக்கள் வெறுமனே அவர்களைப் பின்தொடர்ந்தன. 

-தொடரும்