பெத்ரோ அல்மதோவரின் படைப்புலகம்

வேறுபட்ட பாலியல்புகள் பற்றி முதலில் நாம் வித்தியாசபபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும். 1.ஆணுக்கும் பெண்ணின்பாலும் அல்லது பெண்ணுக்கு ஆணின்பாலுமுள்ள பாலுறவு நாட்டத்தை ஹெட்டரோ செக்சுவல் அல்லது நேரடி பாலுறவு என்கிறார்கள். 2.பெண்ணுக்குப் பெண்ணின் மீதும் ஆணுக்கு ஆணின் மீதும் உள்ள பாலுறவு நாட்;டத்தை லெஸ்பியன் எனவும் கே எனவும் அல்லது சமப்பாலுறவு எனவும் குறிப்பிடுகிறார்கள். 3. பெண்ணாக இருந்து ஆணுணர்வு கொள்பவரையும், ஆணாக இருந்து பெண்ணாக உணர்பவரையும் டிரான்ஸ் செக்சுவல் அல்லது வேற்றுப்பாலுறவு உணர்வு கொண்டவர்கள் என்கிறார்கள். 4. மருத்துவ சிகிச்சை மூலம் பிறப்புறுப்புகளை மாற்றிக்கொண்டு மாறுபட்ட பால்மாற்றம் அடைபவர்களை டிரான்ஸ் ஜென்டர் அல்லது பாலியல்பு மாற்றம் செய்தோர் என்கிறார்கள். 4. திருநங்கைகளை யுனக் என்கிறார்கள். 5.இதுவன்றி சமப்பாலுறவாளராகவும் இருந்து கொண்டு வேறுபட்ட பாலிரனோடு உறவு கொள்வோரும் உண்டு. இவர்களை இருபால் உறவினர் அல்லது பை செக்வல் என அழைப்பர். இந்த வேறுபட்ட பாலுறவுகளில்; சமப்பாலுறவாளர்கள் மத்தியில் ஆண்மாதிரிகளும் பெண்மாதிரிகளும் உண்டு.


இவற்றுள் நேரடியிலான ஆண் பெண் - எதிர்பாலுறவு - பொதுவாக எல்லாச் சமூகங்களிலும் 'இயல்பான' பாலுறவு எனக் கருதப்படுகிறது. இதற்கான காரணமாக உயிர் மறுஉற்பதமதியின் ஆதாரமாக இந்த பாலுறவு இருக்கின்றது. பிற பாலுறவுகள் அனைத்தும் 'இயல்புக்கு மாறானதாக' மரபான பெரும்பான்மைச் சமூகம் கருதுகிறது. இயல்புக்கு மாறானதாக இவை கருதப்படுவதால், மதங்கள் நேரடியிலான பாலுறவையே வலியுறுத்துவதால் பிற வகையிலான பாலுறவுகள் அனைத்தும் சமூக விரோதமாக, குடும்பம் எனும் அமைப்பைக் குலைப்பதாக, உயிர் மறுஉற்பத்தியை மறுப்பதாக பெரும்பாலுமான நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தது. சோசலிஷ நாடுகள், முதலாளித்துவ நாடுகள் என அல்லாமல் அனைத்து மத அடிப்படிபடைவாத நாடுகளிலும் இவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்கள். வெகுஜன சமூகங்களில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களாக, அங்கீகரிக்கப்படாதவர்களாக இருந்து வந்தார்கள்.

இத்தகைய வேறுபட்ட பாலுறவுகள் இயற்கைக்கு அல்லது இயல்பக்கு மாறானது அல்ல இயல்பானதுதான் என்று கண்டுகொண்டதும், அது ஒரு அடிப்படை உரிமை என அங்கீகரிக்கப்பட்டதும்தான் இவர்களது வாழ்வில் நேர்ந்த மிகப்பெரும் மாற்றம். வாத்திகன் சமப்பாலுறவாளர்களை அனுமதித்தது. இன்று அவர்கள் பாதிரிகளாக இருக்கிறார்கள். சமப்பாலுறவு திருமணங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. சமப்பாலுறவாளர்கள் இன்று குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளலாம். ஸ்பெர்ம் டோனர்கள் மூலம், சோதனைக்குழாய் கருத்தரிப்புகள் மூலம், வாடகைத் தாய்மார்கள் மூலம் இன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். பாலுறப்பு மாற்றுச் சிகிச்சை என்பது இன்று மருத்துவத்துறையில் மிகச் சாதாரணமாக இடம்பெறுகிறது. மரபான இலக்கியங்களிலும் குகை ஓவியங்களிலும் சிற்பங்களிலும் வேறுபட்ட பாலுறவுகள் பன்னூறு ஆண்டுகளாக வழமையில் இருந்து வந்திருக்கின்றன என்பது இன்று நடைமுறைச் சான்றுகளாக இருக்கின்றன. 

இவ்வாறு வேறுபட்ட பாலியல்பு கொண்டிருப்பதற்காக எவரும் குற்றமனம் கொள்ள, வருத்தப்பட, வெட்கப்பட ஏதும் இல்லை. இது ஒரு அடிப்படை உரிமை. இது அவர் தம் அடையாளம். இது தண்டிகாகபாபடலாகாது. இது கொண்டாட்டத்திற்கு உரியது. ஆக, இந்த வேறுபட்ட பாலுறவுகள் என்பான ஒதுக்கப்பட்டு தண்டனைக்குரியதானது இயல்பல்லாதது எனும் நிலையிலிருந்து, இது இளல்பானது, எமது அடிப்படை எரழமை, எமது அடையாளம், எமது கொண்டாட்டத்திற்கு உரியது என்று மாறி வந்திருக்கும் இந்த வரலாற்றுச் செயல்போக்குதான் இவர்தம் வரலாறாகவும் ஆகிறது. 

ஐரோப்பிய திரைப்பட இயக்குனர்களில் தனது எல்லாப் படங்களிலும் பாலுறவின் பல்வேறு பரிமாணங்களை, அதனது தீவிர எல்லைகளைப் பேசியவர் ஸ்பானிய இயக்குனரான பெத்ரோ அல்மதோவர். பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டவர்கள், திருநங்கைகள், பாலுறவுத் தொழிலாளர்கள், ஆண் பெண் சமப்பாலுறவாளர்கள், தமது பாலியல்பை அறுவைச் சிகிச்சையின் மூலம் மாற்றிக் கொண்டவர்கள் என இவரது படங்களின் பாத்திரங்கள் அனைத்துமே சமூகத்தின் ஓர நிலையிலுள்ளவர்கள் பற்றியதாகவே இருந்தன. இந்த ஓரநிலைப் பாலியல்பு கொண்டவர்களுக்கிடையில் உள்ள பிரத்யேகமான பிரச்சினைகளையும், மையநீரோட்ட சமூகத்தில் இவர்கள் ஊடாட்டம் கொள்ளும்போது எழும் பிரச்சினைகளையும் இவரது படங்கள் சித்தரித்தன. அநேகமாகப் பாலுறவு வன்முறை பற்றிப் பேசாத, சமப்பாலுறவு சித்திரிப்புப் பற்றி ஒரு காட்சியிலேனும் பேசாத இவரது படங்களே இல்லை எனலாம்.

ஸ்பானிய பாசிஸ்ட்டான பிராங்கோ ஆட்சி அதிகாரத்தின்கீழ் ஸ்பானிய திரைப்படக் கல்லூரி மூடப்படுகிறது. திரைப்படம் பயிலச்சென்ற அல்மதோவர் பழைய பொருட்களை வாங்கி விற்கும் வேலை செய்துகொண்டு அதீத பாலுறவுக் குறும்புகள் கொண்ட குறும்;படங்கள் உருவாக்குகிறார். 16 எம்எம்மில் எடுத்து 35 எம்மம்முக்கு மாறறப்பட்ட இவரது முதல் திரைப்படம் 'பெப்பி, லூசி, பாம்' 1980 ஆம் ஆண்டு வெளியாகிறது. போலீஸ்காரனால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அவனை பழிவாங்க அலையும் ஒரு பெண், ஒரு சமப்பாலுறலுப் பாடகி, ஆண்பெருமித உணர்வு கொண்ட ஒரு பெண் என மூன்று வகைப் பெண்களின் வாழ்வு குறித்தது அந்தப்படம். 

எழுபதுகளில் உருவாகிய பின்-பிராங்கோ பாசிச எதிர்ப்புணர்வு, தெருவாழ்க்கை, ஃபங்க் கலாச்சாரம், பாலுறவு சுதந்திரம், எஸ்டாப்ளிஷ்மென்ட் மீதான கோபம் என்பது அவரது முதல் முழுநீளப் படத்தில் வெளிப்பட்டது. பாதிரியார் ஆவதற்காக அவர் பெற்ற கல்வி, எழுத்தறிவற்றவர்க்கு உதவிய அவரது தாயின் பரிவுணர்வு போன்றன அவரது பின்னையை படங்களில் இடம்பெற்ற கிறித்தவ நிறுவன விமர்சனம், விளம்புநிலை மக்களின்பாலான பரிவான பாரவை என்பதற்கான அடிப்படைகளாக அமைந்தன.
அவரது இரண்டாவது படம் 'த லாபரின்த் ஆப் பேஷன்' தீராத உடலுறவு வேட்கை கொண்ட ஒரு பெண்ணுக்கும் சமப்பாலுறவு நோக்கம் கொண்ட மத்தியக் கிழக்கு நாடொன்றின் இளவரசனுக்குமான மட்டுமீறிய பாலுறவை, விளைவான எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகளை பரிவுடன் விவாதிப்பதாக இருந்தது. அவரது மூன்றாவது படமான 'டார்க் ஹாபிட்ஸ்' கன்னியாஸ்திரிகளின் மறைக்கப்பட்ட பாலுறவு வாழ்வையும், கிறித்தவ நிறுவனத்தனால் பாவம் எனச் சொல்லப்பட்ட நடத்தைகளையும் குறித்ததாக இருந்தது. 

அவரது அடுத்த படமான 'மெட்டாடர்' ஒரு காளைச் சண்டைக்காரனுக்கும் கொலை நாட்டம் கொண்ட ஒரு பெண் வழக்குரைஞருக்கும் இடையிலான காதலுறவு பற்றியதாக இருந்தது. கொலை நாட்டமும் அதீத பாலுறுவு நிறைவேற்றமும் எனும் பிரச்சினை ஐரோப்பிய மரபில் பிரெஞ்சுத் தத்துவவாதியும் நாவலாசரியருமான டி சேட் முதல் இருந்து வரும் ஒரு பிரச்சினை. கீழைத்தேய மரபில் இதனை ஜப்பானிய இயக்குனரான நகீசா ஒசிமா தனது படங்களில் காட்டினார். 'டார்க் டிஷையர்' படத்தின் ஒரு வகையிலான தொடர்ச்சி என அல்மதோவரின் 'மெட்டாடர்' படத்தைச் சொல்ல வேண்டும்.

அவரது 'லா ஆப் டிசையர்' படம் ஒரு சமப்பாலுறவு திரைப்பட இய்க்குனருக்கும் ஆண்பால் பாலுறவு வேட்கையை வெளிப்படுத்தும் அவரது சகோதரிக்கும், பிறரைச் சித்திரவதை செய்து இன்பம் அடையும் ஒரு கொலைநாட்டம் கொண்ட ஆணுக்கும் இடையிலான முக்கோணக் காதலை அலசிய படமாக இருந்தது. இதுவரையிலான அல்மதோவர் படங்களில் இருந்து இந்தப்படம் தீர்மானகரமான ஒரு மாறுதலைக் கொண்டிருந்தது. இதுவரையிலான அல்மதோவரின் படங்களில் சமப்பாலுறவு, அடக்கபப்பட்ட வேட்கைகள், பாலியல் வல்லுறவுக்குப் பழிதீர்த்தல் தொடர்பான ஒரு ரகசியக் குற்றவுணர்வு இத்தகைய செயல்களில் டுபடுபவர்களிடம் இருந்தது. அவரது 'லா ஆப் டிசையரில்' இந்த விதமான குற்றவுணர்விலிருந்து விடுப்பட்டவர்களாக, அதனை அனுபவிப்பர்களாக இதனது கதாபாத்திரங்கள் வடிவம் பெறுகிறார்கள்.

இவரது 'த வுமன் ஆன்த வெர்ஜ் ஆப் எ பிரேக் டவுன்' மற்றும் 'டாக் டு ஹெர்' இவற்றினோடு 'ஆல் அபவுட் மை மதர்' போன்ற மூன்று படங்களும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மாபெரும் வெற்றி பெற்றன. இந்த மூன்று படங்களும் ஓர நிலையில் உள்ள அல்லது உறவை இழந்த பெண்களின் நிலைமையைப் பேசிய படங்களாக இருந்தன. 'பெண்களின் இயக்குனர்' என அல்மதோவர் பேசப்பட இந்தப் படங்களே காரணமாக அமைந்தன. காதலனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தன்னை மீட்டுக்; கொள்வது, மரணமுற்ற தனது மகன் இப்போது பெண்பால் மாறியவனான தனது பழைய காதலனுக்குப் பிறந்தவன் என அவனைத் தேடி அறிவிக்கும்  பெண்ணின் தேடல், புலன்களும் பிரக்ஞையும் செயலற்ற நிலையில் இருக்கும் பெண்களுடனான தமது உறவை அவர்தமை ஆற்றப்படுத்தும் செயலின் வழி நிரவும் ஆண்களின் உளநிலை என குடும்ப உறவுகளின் உன்னதம் பற்றியதாக இந்த மூன்று படங்களும் இருந்தன.

இவரது 'டை மி அப் டை மி டவன்' திரைபபடம் ஒரு மனநோயாளியால் கடத்தப்படும் ஒரு நீலப்பட நடிகையை அவர் தன்னைக் காதலிக்குமாறு வறு;புறுத்துவது குறித்தது. அவரது 'ஹை ஹீல்ஸ்' ஒரு பிரபலமான பாடகிக்கும் அவரது பத்திரிக்கையாளரான மகனுக்குமான உறவு குறித்தது. அவரது மகள் தனது காதலரை மணந்திருக்கிறாள் எனும் விஷயம் தாய் மகள் உறவை இன்னும் சிக்கலாக்குகிறது. அவரது 'கிகா' திரைப்படம் ஒரு ஒப்பனைக் கலைஞருக்கும் எப்போதும் உணர்ச்சிகரமான செய்தியைத் தேடித் திரியம் ஒரு தொலைக்காட்சிச் செய்திப் பெண்ணுக்குமான உறவு குறித்தது. பல பரிமாணங்களில் இந்தப் படத்தை நாம் ஆலிவர் ஸ்டோனின் 'நேச்சரல் பார்ன் கில்லர்ஸ்' படத்துடன் ஒப்பிட முடியம். அதில் வரைமுறையற்ற கொலைக் கலாச்சாரத்தை உணர்ச்சிகரமாகப் பரப்புவதாகத் தொலைக்காட்சி இருக்க, இதில் ஒரு பாலியல் வல்லுறவை உணர்ச்சிகரமாக விற்கிறவராக செய்தியாளர் இருக்கிறார். 

'தி பிளவர் ஆப் மை சீக்ரெட்' திரைப்படம்தான் அல்மதோவர் ஒரு குறிப்பிட்ட வலாற்று நிகழ்வை வைத்து எடுத்த படம் எனக் கோரத்தக்கது. பொஸ்னிய யுத்தத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஒரு மெலோடிராமா காதல் படம் இது. கணவனிடம் இருந்து பிரிந்து வாழும் ஒரு ரொமேன்டிக்; கதை எழுத்தாளருக்கும் ஒரு சமாதானப் படை வீரனுக்கும் ஆன உறவை முன்வைத்தது இப்படம். இவரது ஆரம்ப காலப் படங்களில் இருந்த இயர்புணர்வுகள் விலகிய படம் இது. ஒரு வகையில் அமெரிக்காவில் இவரது படங்கள் பெறுவெற்றி பெற்றதன்பின் இவருள் நேர்ந்த மாற்றத்தின் பகுதியாக ஆனது எனச் சொல்ல முடியம். 'த வுமன் ஆன் த வெர்ஜ் ஆப் பிரேக் டவுன்' இந்தப் பாணியின் துவக்கம் எனலாம். 

இந்தப் படத்திற்குப் பிற்பாடாக அல்மதோவரிடம், அவரது கதை சொல்லுதலில் திவிரமான மாற்றமொன்று எற்படுகிறது. பெண்களின் பார்வையில் நாடகீயமான உறவுச் சிக்கல்களைச் சொல்தாக இவரது படங்கள் மாற்றம் பெறுகிறது. தீர்மானமாக இநதப் பண்பு மெயின்ஸ்ட்ரீம் சினிமாவும் பரந்து பட்ட உலக அளவிலான பார்வையாளர் பரப்பும் அவரில் ஏற்படுத்திய பாதிப்பு எனலாம். என்றாலும், அவரது ஆரம்ப காலப்படங்களின் பாலுறவுச் சிக்கல்களும் ஓரநிலைப் பாலியல் கொண்டவர்களின் அதீத வேட்கைகளும் இணைந்ததொரு திரை வடிவத்தை இப்போது அவர் வந்தடைகிறார்.

இப்போது இவரது படங்கள் அமெரிக்க ஜானர் வகைப்படங்;களுக்குள்ளும் அடங்குகிறது. அவரது 'புரோக்கன் எம்பரேசஸ்' ஒரு ரொமேன்டிக் திரில்லர் என இனம் காணப்படுகிறது. ஒரு கண்தெரியாது போன திரை இயக்குனர். ஒரு பெரும் பணக்காரரது ஆசைநாயகியாக இருக்கும் நடிகை இருவருக்குமான காதலுறவு பற்றியது படம். இயக்குனரின் மனைவி பணக்காரருடன் சேர்ந்து தனது கணவனின் காதலியை கொலை செய்கிறாள். இதனை மகன் மறைக்கிறான். இறுதியில் இவை எதுவுமே தெரியாத நிலையில் தான் அழிந்துவிட்டது என நினைத்த தன் படச்சுருள் கிடைத்த நிலையில் சந்தோஷமடைகிறார் இயக்குனர்.

இதற்கு அடுத்ததாக அவர் உருவாக்கிய படம் 'தி ஸ்கின் ஐ லிவ் இன்;. தோலின் எரிகாயங்களைக் குணப்படுத்துதம் ஒரு மருத்துவர் தனது நோயாளியாக வரும் ஆணைப் பெண்ணாகப் பால் மாற்றம் செய்து அவளைக் கைதியாக வைத்து சதா வல்லுறவு செய்யும் ஒரு மருத்துவனது மனநிலை குறித்தது 'த ஸ்கின் ஐ லிவ் இன்' படம். அவரது அடுத்த படமான 'ஐ ஏம் சோ எக்சைடட்' முழுமையான ஒரு நகைச்சுவைப்படம். ஒரு விமானம் தரையில் இறங்குவதில கோளாறு. இந்தக் குறிப்பிட்ட சிக்கலான காலகட்டத்தில் விமான சிப்பந்திகளுக்கும் முதல்வகுப்பின் பணக்காரப் பயணிகளுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்தான் படம். இதில் சமப்பாலுறவை இயல்பாகக் கொண்ட விமானச் சிப்பந்திகளும் ஈடுபடுறார்கள். சமப்பாலுறவாளர்கள் மேறகத்திய சமூகங்களின் மெயின்ஸ்ட்ரம் சமூகத்தவராக ஆகிறார்கள் எனவும் இதனை வாசிக்கலாம். 

அல்மதோவரின் 'டார்க் ஹாபிட்ஸ் ' கன்னியாஸ்திரிகனின் அடக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பாலியல் வேட்கைகளைச் சொல்வது போலவே அவருடைய 'பேட் எஜூசேஷன'; பாதிரியார்கள் மத்தியல் இடம்பெறும் அடக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பாலியல் வேட்கைகளைச் சொல்வததாக ஆகிறது. தற்போது பால்மாறுபாட்டுக்கு உட்பட்ட ஒரு பெண், தான் இளைஞனாக இருந்தபோது பாதிரியாரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார். இந்தச் செயலுக்;குப் பாதிரியாரைப் பழிவாங்கும் போக்கிலான படம் இது, மடாலயங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் உலகெங்கிலும் சிறுவர்கள் பாலியல் வல்லுவுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது போலவே, கத்தோலிக்க கன்னியாஸ்திரி மடங்களிம் இத்கைய பாலியல் வல்லுறகள் இருந்தன என்பதை வட அயர்லாந்துப் படமான பீட்டர்முல்லான் இயக்கிய ' த மக்தலினா சிஸ்ட்டர்ஸ்' சொல்கிறது. 'ஜூலியட்' அவரது இருபதாவது படம். ஒரு பெண்ணின் இளம்-முதிய வயது அனுபவங்களின் குறித்;தது இந்தப்படம்.

எழுபதுகளின் மத்தியலிருந்து எண்பதுகளின் ஆரம்பம் வரையிலுமான அல்மதோவரின் ஒலியற்ற குறும்படங்கள் துவங்கி, அவரது இருபதாவது முழு நீளப்படமான ஜூலியட் வரையிலுமான படங்களில் வெளிப்படும் அவரது படைப்புலகு குறித்து சில பொதுவான வரையறைகளுக்கு நாம் வர முடியும். அவரது குறம்படங்கள் அதீதமான பாலுறவு நடத்தைகளைக் கொண்டாட்டமாக வைத்திருக்கின்றன. பொதுச் சமூகத்தின் நிராகரிப்பினால் தோன்றும் வலி, அதைக் கடத்தல் என்பதிலிருந்து அதனை வெளிப்படையாகக் கொண்டாடுதல், அதற்காகப் பெருமிதப்படல் என்பதாக அவரது வேறுபட்ட பாலுறவு சார்ந்த சித்தரிப்புகள் பரிமாணம் அடைகின்றன.

இத்தகைய பாலுறவுகள் எப்போதுமே குடும்பம் எனும் அமைப்பு, அதனது பாசம், அன்பு, பொறுப்புணர்வு என்பதற்கு அந்நியமானதாகவும்,பொறுத்தமற்றதாகவுமே பார்க்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த வெறுப்புணர்வுக்கு எதிராக இவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தினோடு கொள்ளும் முரணின்போதே இவர்களுக்கிடையில் எவ்வாறு இத்தனை வன்முறைகளுக்கிடையிலும் உளச் சிக்கல்களுக்கிடையிலும் உன்னதமான மானுட நேயம் செயல்படுகிறது என்பதனை இவரது படங்கள் சொல்கின்றன. 

இவர்களிடம் இயங்கும் - குறிப்பாகப் பெண்களிடம்- பழிவாங்கும் உணர்வின் பின்னான உடல் உளவியல் பதட்டங்களின் காரண காரியங்களை பொதுச் சமூக உறவுகளின் பின்னணியில் இவரது படங்கள் விசாரணை செய்கின்றன. அனைத்துக்கும் மேலாக மத நிறுவனங்கள் பாலியல் வேட்கைகளின் வெளியேற்றங்களை இயல்பான உணர்வாக ஒப்ப வேண்டும் என்பதனையும் குழந்தைகளை வல்லுறவுக்கு உட்படுத்தும் நடவடிக்கைளைச் விமர்சிப்பதன் வழி சுட்டிக்காட்டுகின்றன. இந்த வகையில் வேறுபட்ட பாலுறவுகளை திரையில் இயல்பான உறவுகளாகச் சாஸ்வதப்படுத்தியிருக்கிறார் அல்மதோவர்.