குட்டி இளவரசன்

பிரெஞ்சு எழுத்தாளர் அன்டோயின் டி செயிண்ட் – எக்ஸுபரியின் நாவலான ‘குட்டி இளவரசன்’ 1943-ஆம் ஆண்டு வெளியானது. பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்றும், பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிற இப்புத்தகம், குழந்தைகளைப் புரிந்துகொள்ள பெரியவர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் என்றே சொல்ல வேண்டும். செவ்வியல் தரத்துடன் இன்றளவும் பல பிரதிகள் கடந்து விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.

பெரியவர்களால் ஒருபோதும் குழந்தைகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், பெரியவர்கள் அறிவின் துணையால் வாழ்கின்றனர். ஆனால் குழந்தைகள் மனதால் வாழ்கிறார்கள். நாம் அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாமும் குழந்தைகளாக வேண்டும். அப்போதுதான் யானையை விழுங்கியிருக்கிற மலைப்பாம்பை உங்களால் பார்க்க முடியும். இல்லையேல் வெறும் தொப்பிதான் உங்கள் கண்களுக்குத் தெரியும். 

இந்நாவலை அடிப்படையாக வைத்து அனிமேட்டிக் முறையில் 2015-ல் வெளியான படம் ‘தி லிட்டில் ப்ரின்ஸ்’. இது நவீன பிக்ஸர் பாணி சிஜி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டாப் மோஷன் முறையைப் பயன்படுத்தி குழந்தை பருவத்தின் மறந்துபோன அதிசயங்களை மீட்டெடுக்கிறது. எக்ஸுபரி விமான ஓட்டியாக இருந்தவர். இவர் எழுதிய குட்டி இளவரசன் கதையில், பாலைவனத்தில் பார்த்த குட்டி இளவரசனுக்கும் தனக்குமான உறவைப் பற்றி எழுதப்பட்டிருக்கும். இறுதியாக அந்தக் குட்டி இளவரசன் தனது குட்டிக் கிரஹத்துக்குச் செல்வதோடு கதை முடியும். அதற்கிடையில், அந்தக் குட்டி இளவரசன், வாழ்க்கை சார்ந்த சில தரிசனங்களைத் திறந்துவிட்டிருப்பான். அதே விமான ஓட்டி முதிய பருவத்தில் என்ன மாதிரியான நினைவுகளுடன், எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பார்? விமான ஓட்டி மட்டுமல்ல, அனைவரது வாழ்க்கை குறித்தும் சில புரிதல்களை விட்டுச்சென்ற குட்டி இளவரசன் உயிரோடு இருந்தால், இப்போது எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறான்? என்று ஆராய முனைந்திருக்கிறது, இந்த அனிமேட்டிக் சித்திரம்.

Image result for little prince animatic movie" 

குழந்தைகளைப் பெரியவர்களின் முதலீடுகளாகப் பார்க்கிறோம். தன் கனவை நிறைவேற்ற வந்தவர்கள் என்ற எண்ணத்தில் தனக்குள்ள நிறைவேறாத ஆசைகளை அவர்கள்மேல் திணிக்க நினைக்கிறோம். முதலில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதுதான் சரியான வாழ்க்கையா? பணத்தின் பின்னால் ஓடுவதும், வங்கிக்கணக்கில் லட்சங்களாகச் சேர்த்துவைப்பதும்தான் வாழ்க்கையா? என பெற்றோர்கள் யோசிப்பதில்லை. மாறாக, அதே கடிவாளம் போட்ட குதிரையாக, தன் குழந்தைகளையும் மாற்ற நினைக்கிறோம்.

சாப்பிட கால் மணி நேரம், படிக்க ஒரு மணி நேரம், வீட்டுப் பாடம் செய்ய ஒன்றரை மணி நேரம் என அவர்களை அந்த அட்டவணைகளுக்குள் அடைக்கிறோம். அத்தகைய சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட சிறுமிக்கும், அந்த வயதான விமான ஓட்டிக்கும் இடையேயான அன்புதான், அச்சிறுமியை குட்டி இளவரசனை நோக்கித் தேடி ஓடவைக்கிறது. 
குழந்தைகளுக்கு கற்பனைகள் மிக மிக முக்கியம். அவர்கள் கற்பனைகளில் வாழத்தான் ஆசைப்படுகிறார்கள். படத்திலும் அச்சிறுமிக்கு கற்பனைகளின் மீதான ஆர்வம் இருக்கிறது. அச்சிறுமிக்கு பக்கத்து வீட்டு தாத்தா மூலமாக ’குட்டி இளவரசன்’ கதை அறிமுகமாகிறது. அந்த விமானயோட்டி தாத்தா, சுற்றுப்புறத்திலேயே வித்தியாசமான வீட்டில் குடியிருக்கிறார். தன் வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்திருக்கிறார். அவர் இருக்கிற இடத்தில் பறவைகளும் வண்ணத்துப்பூச்சிகளும் சிறகடித்துப் பறக்கின்றன. குட்டி இளவரசனைப் பார்க்கும் ஆர்வத்தில் விமானத்தையும் சரிசெய்துகொண்டிருக்கிறார். இதெல்லாமே அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு விசித்திரமாகத் தெரிகிறது. ஆரம்பத்தில், சிறுமி தயங்கினாலும், குட்டி இளவரசனின் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கத் துவங்கியவுடன், அவளுக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. கதையைத் தொடர்ந்து படிக்கும் பொருட்டு, விமான ஓட்டியுடன் நட்பாகிறாள். இருவருக்குமிடையேயான அன்பு நாளுக்கு நாள் அதிகமாகிறது. 

ஒரு கட்டத்தில் அந்த விமான ஓட்டி எதிர்பாரா விபத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். எனவே, குட்டி இளவரசனைப் பார்க்க, இந்தச் சிறுமியே விமானத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். நாம் நினைத்திருப்போம். குட்டி இளவரசன் ஒரு நல்ல நிலைமையில் இருப்பானென்று, ஆனால் அவனோ எல்லோரையும் போல, தன்னுடைய சுயத்தை இழந்து, எஜமானனுக்கு அடிமையாக, அவனுக்குக் கீழ்படிந்து வேலைசெய்யும் ஒரு வேலையாளாக தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறான். சிறுமி அவனைப் பார்த்து, குட்டி இளவரசனாக அவனது கடந்தகால வாழ்க்கையைப் புரியவைக்க முயல்கிறாள். அவன் புரிந்துகொண்டானா? தன் வாழ்க்கையை மீட்டெடுத்துக்கொண்டானா?
என்பதுதான் மீதிக்கதை. 

Image result for little prince animatic movie"

இப்படத்தின் மையச்செய்தி என்னவென்றால், கண்களால் பார்த்தும் அறியமுடியாதபொழுது, ஒருவன் இதயத்தினால் மட்டுமே அதைச் சரியாகப் பார்க்க முடியும். உங்கள் கனவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. 

இப்படத்தின் இயக்குனர் மார்க் ஆஸ்போர்ன் (Mark Osborne), தனது மனைவியால் வழங்கப்பட்ட பின்னர், ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தைக் கல்லூரியில்தான் முதன்முதலில் படித்திருக்கிறார், அவருடன் அவர் அந்த நேரத்தில் நீண்ட தூர உறவில் இருந்தார். இது தனிப்பட்ட ரீதியில் அவருக்கொரு அர்த்தத்தை வழங்கியது. இதனால்தான் மூலக்கதையையும் இப்படத்தில் பாதுகாக்கும் பொருட்டு, ஒரு சிறுமியின் வாயிலாகக் கதையை நகர்த்தத் துவங்கினார். அசல் கதையையும் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் தன் கதையையும் சொல்லவேண்டும். இது ஒரு புத்திசாலித்தனமான நகர்வாக உள்ளது, எழுத்தாளர் செயிண்ட் எக்ஸுபரியின் தூண்டுதலில் உருவான ‘குட்டி இளவரசனின்’ அசல் அழகைப் பாதுகாக்கும் அதே வேளையில் ஒரு குழந்தையின் கண்கள்மூலம், அந்தக் குட்டி இளவரசனின் உலகிற்குள் நாம் செல்கிறோம். ஆஸ்கர் விருது பெற்ற ஹான்ஸ் ஸிம்மர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், இது படத்தின் உயரத்தை இன்னும் பன்மடங்கு உயர்த்துகிறது. தத்துவ நினைவூட்டல்களை மையமாக வைத்து இயங்குகிற இதுபோன்ற படங்கள், பார்வையாளர்களுக்கு நிச்சயம் சில நல்ல வாழ்க்கை சார்ந்த தத்துவங்களை விட்டுச் செல்லும், ‘தான் இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு யாரும் திருப்தியடைவதில்லை.” “இந்த உண்மையை மனிதர்கள் மறந்துவிட்டார்கள், ஆனால் நீங்கள் அதை மறந்துவிடக்கூடாது, நீங்கள் வழிநடத்தியதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.” “நட்பை எந்தக் கடைகளுக்கும் சென்று விலைக்கு வாங்கமுடியாது.” என, நம்மைத் துயர்களிலிருந்து மீட்டெடுக்கிற, சிந்திக்க வைக்கிற, கற்றுக்கொடுக்கிற சொற்களாக அவையுள்ளன. 

இயக்குனர் ஆஸ்போர்னின் கதை சிறுமி (மெக்கன்சி ஃபோய்) மீது கவனம் செலுத்துகிறது, அவர் குழந்தைகளுக்கேயுரிய அப்பாவித்தனத்தை, தன் அம்மாவின் கெடுபிடியால் இழக்கிறார். ஏனெனில் தன் தாய்க்கு, தன் குழந்தை பள்ளியில் வெற்றிபெற்ற மாணவியாகத் திகழ வேண்டுமென்பதுதான் ஆசையாக இருக்கிறது. அதனால் அவர், குழந்தைக்கு அலாரம் போல, விதவிதமான வேலைகளை வகுத்துத் தருகிறார். அந்த வேலைகளிலிருந்து சலிப்புத் தட்டித்தான் சிறுமி பக்கத்து வீட்டிலுள்ள விமான ஓட்டி தாத்தாவுடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறாள். குட்டி இளவரசனின் அறிமுகமும் கிடைக்கிறது. 

திரைப்படம் சார்ந்து கற்றுக்கொள்ள விரும்புவர்கள் அதிகமாக காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்வார்கள். ஆம், காமிக்ஸின் ஒவ்வொரு சட்டகமும், ஒரு திரைப்படத்திற்குத் தேவையான ஸ்டோரிபோர்ட் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படை அலகே, ஷாட் லிஸ்டில்தான் இருக்கிறது. எப்படி ஷாட்களை அடுக்கி, அதன் மூலம் தெளிவான ஒரு கதையைப் பார்வையாளர்களிடத்தில் சொல்கிறோம் என்பதில்தான் ஒரு இயக்குனரின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. கதாபாத்திரத்தைக் கச்சிதமாகப் படம்பிடிக்க சரியான வழி ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது இந்த காமிக்ஸ் உலகம் உங்களுக்காகத் திறந்துவிடுகின்றன. நிச்சயமாக, காட்சியமைப்பின் ஷாட் லிஸ்ட் வழிமுறைகளை காமிக்ஸ் திறந்துவிடும். கற்பனையையும் வளர்க்கும். அதேபோல, அனிமேட்டிக் படங்களை நாம் நடிப்பிற்கான கருவிகளாகக் கொள்ளலாம். 

ஏனெனில், நாம் திரையில் பார்ப்பது ஒரு பொம்மைதான். ஆனால், எப்படி அந்தப் பொம்மையை வைத்து, மனிதர்களின் முக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். ஒரு பொம்மையால் நம்மைச் சிரிக்க வைக்க முடிகிறது, அழ வைக்க முடிகிறது. அதற்குப் பின்னால் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இருக்கிறது. நடிப்பு என்பது மிக நுட்பமான வெளிப்பாடு என்பதை இந்த அனிமேட்டிக் படங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 

இனி, ’குட்டி இளவரசன்’ படத்திற்காக வரையப்பட்ட சில ஓவியங்களைப் பார்க்கலாம். 

நரியுடன் குட்டி இளவரசன்.

Netflix's The Little Prince

Netflix's The Little Prince

குட்டி இளவரசனால் ரோஜாவுடனும் நட்பாகப் பழக முடியும். 

Netflix's The Little Prince


விமான ஓட்டி மற்றும் சிறுமி

Netflix's The Little Prince

Netflix's The Little Prince

Netflix's The Little Prince

நன்றி: independent.co.uk