ஹாலிவுட்டுக்கு எதிராக மூன்றாம் உலக நாடுகளின் படங்கள்!

வண்ணமயமாகத் துவங்கியது கேரளாவின் ஒன்பதாவது அகில உலகத் திரைப்பட விழா. நிஷாகந்தி திறந்தவெளி அரங்கில் திரை நட்சத்திரம் காவ்யா மாதவன் ‘பத்ரதீபம்’ ஏந்திவர கேரள முதல்வர் உம்மன் சாண்டி பாரம்பரிய விளக்கை ஏற்றி விழாவைத் துவங்கி வைத்தார். “பொழுதுபோக்கு வரியைப் பாதியாகக் குறைத்தது; திரைப்படக் கலைஞர்களுக்கான ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது; புதுமையான இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தை அவர்களுக்காக அறிமுகப்படுத்தியது இந்த அரசு” என்ற முதல்வர், “திரைப்படக் கலைஞர்களையும், நல்ல திரைப்படங்களையும் ஊக்குவிக்க இந்தியாவிலேயே முதன்முதலாக ‘சலசித்ர அகாதமி’ எனும் அமைப்பை உருவாக்கிய பெருமை கேரள அரசையே சாரும்” என்றார். அது அப்பட்டமான உண்மை. விழாவுக்கு வந்திருந்த ஷ்யாம் பெனகல் ஒரு மலையாள இதழுக்குப் பேட்டியளித்தபோது இப்படிச் சொன்னார்: “இந்தியத் திரைப்படங்களில் ஒரு புதிய அலை உருவாகக் காரணமாக இருந்தவர்களில் நானும் ஒருவன் என்று நிறைய பேர் என்னைக் குறிப்பிடுகிறார்கள். அது உண்மையல்ல. அப்படி ஒரு புதிய அலையை கேரளாவைச் சேர்ந்த அடூர் கோபாலகிருஷ்ணன் உட்பட நிறையபேர், எழுதுபதுகளில், பிராந்திய மொழிப் படங்களில் கொண்டு வந்தார்கள்.”

முன்னாள் இந்திய சர்வதேசப் படவிழாவின் இயக்குனர் மாலதி சகாய், “திரைப்பட விழாக்கள் ஒரு பண்பாட்டு அடையாளம் கான் மற்றும் பெர்லினில் நடைபெறும் பெரிய பட விழாக்களைப் போலவே உள்ளூரில் நடைபெறும் படவிழாக்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை” என்று குற்ப்பிட்டது இந்த திரைப்பட விழாவுக்குச் சரியாகப் பொருந்தும்.
ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற பிரபல நடிகை ஷபானா ஆஸ்மி, “திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்காகத்தான் சென்சார் போர்டு உருவாக்கப்பட்டது.

ஆனால், தற்போது அது அரசின் கைகளில் இயக்குனர்களின் கற்பனைத் திறனை முடக்கி குறிப்பிட்ட சில விஷயங்களைப் பற்றிப் பேசவெவெ விடாமல் செய்கிறது. சென்சார் போர்டும் அதன் உறுப்பினர்களும் அரசியல் பின்னணியின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதை நிரூபிப்பது மாதிரி அவர்களின் தீர்ப்பு படங்களில் பிரதிபலிக்கிறது. இது கண்டிக்கத் தக்கது. சமீபத்தில் மும்பையில் நடந்த ஆவணப்பட விழாவில் வெளிநாட்டுப் படங்களை சென்சார் செய்யாமல் திரையிட அனுமதித்தார்கள்.

ஆனால் இந்தியப் படங்கள் முழுக்க முழுக்க சென்சார் செய்யப்பட்டன. இம்மாதிரியான பட விழாக்களில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தீவிரமாக விவாதிக்க வேண்டும்.” என்று சென்சார் போர்டை ஒரு பிடிபிடித்தார். 

Image result for kerala film festival old

கேரளப்பட விழாவில் இடம்பெற்ற திரைப்படங்களில் பத்து சதவீதம் மட்டுமே பெண்கள் இயக்கிய திரைப்படங்கள். ஃபிரெஞ்ச் இயக்குனர் நாத்லி ச்மிட் பட விழாவிற்கு வந்திருந்தார். அவர் எடுத்த படங்கள் அனைத்தும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பவை. அதனாலேயே ஃபிரான்சில் ஒரு காட்டில் வாழ்வது மாதிரி வாழ்கிறார். “ஃப்ரான்சில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தளராமல் அப்படியே இருக்கின்றன. பெண்களுக்கு அங்கே தனித்துவம் இருக்கிறது என்றாலும் பெண் கணவனாலும் தந்தையாலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறாள்.” ஃபிரான்ஸில் வசிக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கல் வேலைக்குப் போகும் பெண்கள். 1970-களில் வலுவான பெண்ணிய இயக்கம் ஃபிரான்சில் இருந்தது. தற்போது அத்தகைய இயக்கங்கள் மொத்தமாகக் காணமல் போய்விட்டன. ஃபிரான்ஸ் பெண்களுக்கு காடு. அங்கு அன்பான வாழ்க்கை என்பது இல்லவே இல்லை” என்கிறார் நாதலி. 

கேரளப்பட விழாவில் திரையிடுவதற்காக வந்திருந்தார் ஈரானியப் படமான ‘ஆல்பம்’ படத்தின் இயக்குனர் ரெசா ஹைதர்நெஜாத். பத்திரிக்கையாளர் சந்திப்பில், “இந்திய மக்கள் எப்பொழுதும் சினிமாவுடன் பிஸியாக இருக்கிறார்கள். நான் இங்கு வந்தபோதுதான் அதை நேரில் பார்த்தேன். இந்தியர்கள் சினிமாவை மிகவும் விரும்புகிறார்கள். அதேபோல், உலகின் எந்த மூலையிலிருந்து நல்ல திரைப்படம் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். சத்யஜித் ரேயின் திரைப்படங்களை என்னால் மறக்கமுடியாது. அதுபோன்ற படங்களை எடுப்பதை இந்தியா தொடர்ந்து செய்யும் என நம்புகிறேன். ஈரானில் வருட த்திற்கு அறுபது படங்களுக்கு மேல் தயாரிக்கப்படுகின்றன. அவை பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே தயாரிக்கப்படுபவை. அவற்றில் இரண்டு அல்லது மூன்று நல்ல படங்களைத் தந்தாலே பெரிய விஷயம். புரட்சிக்குப் பிறகு ஈரானியப் படங்களில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அது நல்ல மாற்றமாக இருப்பது தான் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.” என்றார். 

விழாவின் முக்கியமான ஒரு அம்சம் ஹாலிவுட் படங்களுக்கு எதிராகயிருந்த உணர்வுகள்தான். “சீனா, ஈரான் ஆகிய இரு நாடுகளுமே அமெரிக்கத் திரைப்டங்களைத் திரையிடுவதில்ல்லை. இந்தியாவும் அமெரிக்கப் படங்களைத் திரையிடுவதைத் தடைசெய்ய வேண்டும்” என்றார் கனடா தயாரிப்பாளர் ராக் டெமார்ஸ். “நமது திரையரங்குகளை அந்நியப் படங்கள் ஆக்கிரமிப்பதையும் அவை வசூல் ரீதியாகப் பெருவெற்றியடைவதையும் எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது. அப்படங்களின் பின்னணியிலுள்ள தத்துவார்த்தம் நமது மக்களின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் முழுக்க முழுக்க எதிரானவை. மில்லியன் கணக்கான இலத்தீன் அமெரிக்க மக்களுக்கு இலத்தின் அமெரிக்கப் படங்களைப் பார்க்கும்படியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஒரு இந்தியப் படத்தைப் பார்க்க முடிவதில்லை. மூன்றாம் உலக நாடுகளின் படத்தைப் பார்க்க முடிவதில்லை. நமது திரையரங்குகள் பன்னாட்டு படங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.” என்றார் சிலி நாட்டைச் சேர்ந்த படத் தயாரிப்பாளர் மைக்கேல் லிட்டின்.

Image result for adoor gopalakrishnan

கேரள உலகப் பட விழாவில் அடுத்த முக்கிய விவாதம் டிஜிட்டல் சினிமா பற்றியது. ஈரானிய இயக்குனர் அப்பாஸ் கியோரஸ்தமி, “டிஜிட்டல் கேமராவில் படம் எடுப்பது செலவைக் குறைக்கும். ஆனால் ஃபிலிமில் படமெடுப்பது மாதிரியான தரத்தை டிஜிட்டலில் எதிர்பார்க்க முடியாது. படமெடுப்பவர்கள் போதுமான பணவசதி இருந்தால் 35 எம்.எம்.சினிமாவில் படம் பார்ப்பதைவிட டிஜிட்டல் படங்களைப் பார்ப்பதையே மக்கள் விரும்புவதாக நான் கூறுகிறேன்.” என்றார். 

விவாத அரங்கில் இத்தாலிய தூதரகத்தின் கலாசாரத்துறை இயக்குநர் டாக்டர். பாட்ரிஷியா ரெளஎக்கி இத்தாலியத் திரைப்படங்களின் தியாகராஜ பாகவதரான விட்டோரியா காஸ்மன் பற்றிப் பேசினார். கேள்வி நேரத்தின்போது அரங்கில் நிலவிய அசெளரியமான அமைதியைக் கிழித்துக்கொண்டு பின்னிருக்கையிலிருந்து எழுந்தது ஒரு குறும்புக்காரரின் குரல். ”சோனியா காந்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” அரங்கில் ஊசி விழுந்தால் கேட்கிற நிசப்தம். சில வினாடிகளுக்குப்பின் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாத முகத்துடனும் குரலுடனும் பாட்ரிஷியா, “நாம் விட்டோரியோ காஸ்மனைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்” என்றார். கூட்டத்தில் சிரிப்பலை.

‘பொந்தன்மாடா’ ,‘ஓர்மைகள் உண்டாயிரிக்கணம்’, ‘சூசன்னா’, ‘பாடம் ஒண்ணு: ஒரு விலாபம்’, ‘கதாவிசேஷம்’ போன்ற மலையாளத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல படங்களை இயக்கியவர் டி.வி.சந்திரன். சந்திரனின் படங்கள் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்புபவை. அவருடைய கதாபாத்திரங்கள் யதார்த்த வழியில் பயணிப்பவை, யதார்த்த மூச்சுக் காற்றை சுவாசிப்பவை. சந்திரன் பட விழாவில் விரும்பிப் பார்த்தவை கறுப்பு வெள்ளைப் படங்கள். “சினிமாவைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் அதிகமாக இருக்கும் ஒரு தேசத்தில் நான் ஒரு இயக்குனர் அவ்வளவுதான்” என்று அடக்கமாக சொல்லிக்கொள்ளும் சந்திரன், “ஒரு சாதாரண மனிதனின் கைதட்டல்தான் தனக்குப் பெருமை தருகிற விஷயம்” என்றார். “சினிமாவைப் பற்றி ஒன்றும் தெரியாத மக்கள் வாழும் இந்தியாவில் சினிமாவிற்காக தேசிய விருது வாங்குவது பெரிய விஷயமா?” என்பது அவரது கேள்வி. 

சினிமா விமர்சகரும் சினிமா வரலாற்றாசிரியருமான ஈவ்ஸ் தோராவால் ‘நெட்பேக்’ விருதுக்கான படத்தைத் தேர்வு செய்யும் நடுவர் குழு உறுப்பினர்களில் ஒருவர். கோவா பட விழாவையும் கேரளப் பட விழாவையும் ஒப்பிட்டுப் பேசிய தோராவால், “இயல்பான மற்றும் ஆழ்ந்த நோக்குடைய பார்வையாளர்கள்தான் இந்தப் பட விழாவின் பெரிய ப்ளஸ் பாய்ண்ட். ஆர்வமான மலையாள இளைஞர்களின் கூட்டம் ஒரு புது சோபையை விழாவுக்குத் தந்து விடுகிறது. கோவாவில் இந்த அம்சம் சுத்தமாகக் கிடையாது” என்றார். 

நன்றி: தீராநதி பிப்ரவரி 2005