நினைவில் கடலுள்ள மனிதி – எர்த்லிங் கெளசல்யா

-தினேஷ்

”என் கிரியாயூக்கியாகச் செயல்படுவது இந்த இயற்கையும், பிரபஞ்சமும்தான், கடலும்தான். இந்தப் பிரபஞ்சத்திலிருந்து கிடைக்கிற செய்தியை மக்களுக்குக் கடத்துகிற ஊடகமாகவே என்னை நான் கருதுகிறேன். நான் இந்த வாழ்க்கையை அனுபவித்து, அதிலிருந்து சில விஷயங்களை உள்வாங்கி, அதை என்னிலிருந்து வெளிப்படுத்துகிறேன். இதை என்னளவில் கலைச்செயல்பாடாகப் பார்க்கிறேன். எந்தவொரு கலையும், மனிதர்களை வெவ்வேறு பரிமாணங்களில் குணப்படுத்துகிற மருந்தேயாகும். காட்சியியல் ரீதியிலான பிம்பங்கள் இதில் அதிக வலிமையுடையது. அதனால்தான் எனக்கு மெளனப்படங்கள் மீது அதிக ஈர்ப்பு. முழுக்க முழுக்க மெளனப்படம் ஒன்றை இயக்கவேண்டும் என்ற ஆசையும் உண்டு” என்கிறார் எர்த்லிங் கெளசல்யா. 

ஆர்கிடெக்சர் படிக்கும்போதே எழுத ஆரம்பித்திருக்கிறார். எழுத்தே அவரை திரைப்படக் கலை நோக்கி நகர்த்தியிருக்கிறது. கலை எப்போதுமே அவருடன் வழித்துணையாக பயணித்து வருகிறது. இசையில் அதிக ஆர்வம். சிறுவயதில் க்ளாசிக்கல் இசை பயின்றிருக்கிறார். இப்போதுகூட, வெஸ்டர்ன் க்ளாசிக்கல், வயலின் கற்றுக்கொண்டிருக்கிறார். இசையும் புத்தகங்களும் கடலும் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதி. 

திரைக்கதை வடிவம் என்று தனித்து எதையும் பின்பற்றாமல், வாசிப்பதன் துணைகொண்டு ஒரு கதையை அமைத்து, திரைப்படமாக்குகிறார். சமூக வலைக்குள் சிக்காத பெண் கதாபாத்திரங்கள் இவருடையது. தன் படங்களுக்கு படத்தொகுப்பாளராகவும், கலை இயக்குனராகவும் இவரே செயல்படுகிறார். நண்பர்கள் இவரது பெரும்பலம். நிறைய பயணங்கள் மேற்கொள்கிறார். மலைகள், காடுகள், கடல்கள் என இயற்கையோடு நேரம் செலவழிக்கிறார். தன்னை, எந்த சமூக வலைதளங்களிலும் இணைத்துக்கொள்வதில்லை. இன்றுவரை தன் நண்பர்களுக்கு கடிதங்கள் வழி தன் அன்பையும், உணர்வையும் பகிர்ந்துகொள்கிறார். Reckless Perceptions என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
 சுயாதீன திரைக்கலைஞரான எர்த்லிங் கெளசல்யாவுடன், சுயாதீன திரைப்பயணம் குறித்து படச்சுருள் இதழுக்காக உரையாடியதிலிருந்து:


தொடர்ந்து ’இண்டி சினிமா’ சார்ந்து இயங்குகிற எண்ணமிருக்கிறதா? அல்லது, ’இண்டி சினிமா’ வழி, அந்த வெகுசன திரைப்பட ஊடகத்திற்குள் செல்ல நினைக்கிறீர்களா?
எங்கள் குழுவில் இருக்கிற நண்பர் ஸ்டான்சின் ரகுவுடன், மாவெரிக் தாஸ், இயற்கையார் ரமேஷ் இணைந்து, 2012இல் ’ஐநூறும் ஐந்தும்’ என்ற திரைப்படத்தை எடுத்து முடித்தோம். அப்படத்தைத் திரையரங்கில் வெளியிட மூன்று ஆண்டுகள் கடுமையாக முயற்சித்தோம். இறுதிவரை அது நடக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு படம் எடுக்கிறேனென்றால், அது மக்களைச் சென்று சேரவேண்டும். ‘ஐநூறும் ஐந்தும்’ என்பது தமிழ்ப்படம், அது எத்தனை சர்வதேச விருதுகள் வாங்கினாலும், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் பார்த்துப் பாராட்டினாலும், நம் ஊரில், நம் மக்கள் அப்படத்தைப் பார்க்காதபோது, அதை எப்படி எடுத்துக்கொள்வது? இறுதியில், அது பணத்தைப் பற்றியது என்பதால், அதைத் தொழிலாளர் தினமான மே 1, 2016 அன்று மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தோம்.
எனவே, வெகுசன ஊடகத்தில் இடம் கிடைத்தாலும், அதிலும் திரைப்படங்கள் எடுப்போம். அதே நேரம், சுயாதீன சினிமாவில் எல்லையற்ற சுதந்திரம் இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது.

திரைப்படங்களுக்கு திரையரங்க வெளியீடு மட்டுமே சாத்தியம் என்றிருந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. உங்களது அண்மைய திரைப்படமான ‘அஷ்வமித்ரா’ கூட, தற்போது நீஸ்ட்ரீம் (Neestream) எனும் ஓடிடி இணையத்தில் பார்க்கக் கிடைக்கிறது. இதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதலாம். ஆனால், ஆரம்பகாலத்தில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்கள் சுயாதீன திரைப்படங்களுக்குக் கொடுத்த வரவேற்பு இப்போது இல்லை. இந்த ஓடிடி தளங்களும், தற்போது வெகுசன திரைப்படங்களுக்கே அதிமுக்கியத்துவம் தருகின்றன. ’நீஸ்ட்ரீம்’ போன்ற புதிய ஓடிடி தளங்களை அணுகமுடிந்த நம்மால், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களை அணுகமுடிவதில்லை. இச்சூழலை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

’ஐநூறும் ஐந்தும்’ என்ற படத்தை, மக்கள் பார்க்கவேண்டும் என்று கருதி, அப்படியே யூட்யூபில் பதிவேற்றம் செய்தோம். ’நீஸ்ட்ரீம்’ முதலில் மலையாளத் திரைப்படங்களை மட்டும்தான் வாங்கிக்கொண்டிருந்தார்கள். சமீபமாகத்தான் தமிழ்த்திரைப்படங்களுக்கும் கதவைத் திறந்திருக்கின்றனர். எடுத்து முடித்த திரைப்படம், நம் கணினியிலேயே இருப்பதற்குப் பதிலாக, இதுபோன்ற தளங்களில் வெளியிடப்படுவதும், அதை மக்கள் பார்ப்பதும், நல்ல முயற்சி. 

’அஷ்வமித்ரா’ படத்தை வெளியிட, அமேசான் ப்ரைமை சென்ற வருடம் அணுகினோம். அவர்களிடமிருந்து வித்தியாசமான பதில் வந்தது. ‘திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால்தான் நாங்கள் அதைப் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்வோம்’ என்றனர். அந்நேரத்தில் கொரானோவினால் அனைத்துத் திரையரங்கங்களும் மூடப்பட்டிருந்தன. எப்படி படத்தைத் திரையரங்கில் வெளியிட முடியும்? 

ஆரம்பத்தில், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் எல்லாம், சுயாதீனமாகத் திரைப்படம் எடுப்பவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று வந்தவர்கள்தான். ஆனால், இன்று அவர்களே, படம் எப்படியிருக்கிறது? என்று அதன் உள்ளடக்கத்தைப் பார்க்காமல், வியாபார நோக்கில், இதுபோன்ற காரணங்களைச் சொல்கின்றனர். அந்த வகையில் ’நீஸ்ட்ரீம்’ திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்கு, கதைக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவே பார்க்கிறேன். அது, சுயாதீன திரைக்கலைஞர்களுக்கு ஆறுதலாக அமைகிறது.

சுயாதீன கலைஞர்களுக்கு, பணம் என்பதையெல்லாம் கடந்து, அவர்களுக்குக் கிடைத்த குழு மிக முக்கியமான அம்சம். உங்களது Accessible horizon filmsலிருந்து பதினெட்டிற்கும் மேற்பட்ட படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இவையனைத்திலும் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, எழுத்து, இயக்கம் என ஒரு குறிப்பிட்ட நபர்களே தொடர்ந்து இயங்குகின்றனர். இதில் ஒருவர் திரைப்படம் இயக்கும்பொழுது, மற்றவர்கள் அவருக்கு உதவுகின்றனர். இத்தகைய குழு ஒத்துணர்வுடன்தான் உங்களால் அடுத்தடுத்து படங்கள் எடுக்க முடிகிறது. இத்தகைய குழு அமைந்த விதம் குறித்து?

எங்கள் குழுவில் நான்கு பேர்கள் இருக்கிறோம். மாவெரிக் தாஸ், இயற்கையார் ரமேஷ், ஸ்டான்சின் ரகு மற்றும் நான். நாங்கள் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். ஆரம்ப காலங்களில் ஒன்றாக இணைந்து குறும்படங்கள் எடுத்தோம். தெருவோரக் குழந்தைகள், ரிக்‌ஷாக்காரர்கள் பற்றியெல்லாம் குறும்படங்கள், ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறோம். திரைப்பட ஆர்வமும், சமூகத்தின் மீதான பார்வையும்தான் எங்களை ஒன்றிணைத்தது. பின்னர் எடுத்த படங்களைத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவது, திரைப்பட விழாக்களை நோக்கி பயணிப்பது என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருந்தது. 2005லிருந்து இந்தக் குழு அப்படியே இருக்கிறது. இன்றுவரை இணைந்து செயல்படுகிறோம். எங்கள் படங்களில், யதார்த்தமான ஒளியில் படம்பிடித்தல், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், கதையை மையப்படுத்துதல் இருக்கும். 

அடுத்து, கதை சார்ந்த உதவியாகயிருந்தாலும், ஒளிப்பதிவு, ஒலி என எந்தத் தொழில்நுட்ப விஷயங்களாகயிருந்தாலும், எங்களுக்குள்ளேயே செய்துகொள்வதால், படப்பிடிப்பு செலவு பாதியாகக் குறைந்துவிடுகிறது. எங்களில் ஒருவருக்கொருவர் சம்பளம் கொடுத்துக்கொள்வதில்லை. பட்ஜெட் செலவு குறைவதால், தொடர்ந்து படங்களும் எடுக்கமுடிகிறது. எங்கள் படங்களுக்கு நாங்கள் நிறைய DIY (Do It Yourself) உபகரணங்கள் செய்திருக்கிறோம். ஐநூறும் ஐந்தும் திரைப்படத்திற்காக நாங்களே சொந்தமாக ட்ராக் டாலி, டேபிள் டாப் டாலி, சோல்டர் ரிக், லைட்டிங் ஏற்பாடுகளைச் செய்துகொண்டோம் மற்றும் முக்கியமாக, புதுச்சேரியில் இதுகுறித்து, இலவசமாகவும் சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். எங்கள் வலைப்பதிவில் சுயாதீன திரைப்படத் தயாரிப்பு பற்றி விரிவாக எழுதியுள்ளோம். 

இணைப்பு:
http://acchor.blogspot.com/search/label/Independent%20film 

சுயாதீன கலைஞர்களுக்கு இருக்கிற மிகப்பெரிய பிரச்சினை பொருளாதாரம்தான். ஒருவருக்கொருவர் சம்பளம் கொடுத்துக்கொள்வதில்லை என்றாலும், பொருளாதாரத் தேவையை எப்படிப் பூர்த்தி செய்வது என்ற மிகப்பெரும் கேள்வியிருக்கிறது. உங்கள் குழு இதை எப்படி எதிர்கொள்கிறது?

தனியாக எடிட்டிங் ப்ராஜக்ட்ஸ், ரைட்டிங் ப்ராஜக்ட்ஸ் எடுத்து வேலை செய்வோம். நான், அமெரிக்காவில் ஒரு பள்ளியில் (School for Designing a Society) வேலையும் செய்துவருகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக, கோவிட் சூழ்நிலையால் என்னால் அமெரிக்காவிற்குச் செல்லமுடியவில்லை. அந்தப் பள்ளிக்கும் ‘ஃப்லிம்மேக்கிங்’ சார்ந்த வேலைகள் செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன். 

இயற்கை விவசாயமும் செய்கிறோம். சுற்றுச்சூழல் மற்றும் அன்னை பூமியைப் பற்றி நாம் விழிப்புடன் இருந்தால் மட்டுமே, நாம் மற்ற உயிரினங்களுடன் இணக்கமான, ஒரு முழுமையான, அமைதியான வாழ்க்கையை வாழமுடியும். பூமியில் உள்ள மற்ற உயிரினங்களைப் பற்றியும் நாம் கவனம்கொண்டிருக்க வேண்டும். தாய் பூமி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, அனைத்து உயிர்களுக்குமானது. 

படத்தொகுப்பை நீங்களே கவனித்துக்கொள்கிறீர்கள். அதேபோல, ஆர்ட் டைரக்‌ஷன் சார்ந்தும் ஈடுபடுகிறீர்கள் அல்லவா?

ஆர்கிடெக்சர் படித்ததால், இயல்பாகவே ஆர்ட் டைரக்‌ஷன் மீதும் ஆர்வம். ஒரு கதை சொல்கிறோம் என்றால், கதை நிகழும் களத்தில் சுற்றியிருக்கிற பொருட்களும், கதையை வெளிப்படுத்துவதுபோல அமைய வேண்டும். ஆர்ட் டைரக்‌ஷனையும் நான் கதை சொல்லலின் மிக முக்கியமான பகுதியாகத்தான் பார்க்கிறேன்.

உங்கள் எழுத்தில், லிவிங் ஸ்மைல் வித்யா நடித்த, ‘பொம்பள பொம்பளையா இருக்கணும்’ என்ற குறும்படத்தில், தமிழ் வெகுசன சினிமாக்கள், பெண்களை மோசமாகச் சித்தரிக்கும் விதம் குறித்தும், ஆணாதிக்கப் பார்வை குறித்தும் விவாதம் இடம்பெற்றிருக்கும். இந்த விவாதத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்திச் செல்வதுபோல, படைப்பு சார்ந்து வேறு ஏதேனும் முயற்சிகள் நடந்தனவா?

எங்களது Accessible Horizon Filmsலிருந்து, இது சார்ந்து ஒரு ஆவணப்படம் (Objectification of women in media) எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். இதிலும் முக்கியமாக பெண்களை வைத்து எடுக்கப்படுகிற குத்துப்பாடல்களிலிருந்துதான் இதை ஆரம்பிக்க வேண்டும் என்று வேலைகளைத் துவங்கினோம். இதற்கான களப்பணிகளில், உலகெங்கிலும் உள்ள முப்பத்தைந்து பெண்களுடன் பேட்டி எடுத்தேன். அவர்கள் எங்கிருந்தாலும், பெண்கள் தங்கள் பாதுகாப்பு உணர்வு, body shaming, Objectification பற்றிப் பேசத்துவங்குகையில் பல அதிரவைக்கும் உண்மைகள் வெளிவரத்துவங்கின. ஒவ்வொரு பேட்டியின்போதும், இந்த ஆவணப்படத்திற்கான களம் விரிவாகிக் கொண்டே போவதை உணர்ந்தேன். இந்திய தேசிய அளவில் பெண்களின் சித்தரிப்பு, ஆணாதிக்கச் சமுதாய அமைப்பு, திரைப்படங்களில் பெண்களைக் குறிக்கிற மொழி எப்படியிருக்கிறது? ’பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று ஆண்கள் பாடமெடுப்பது போன்ற காட்சிகள், அதை இந்த பொதுப்புத்தி சமூகமும் எந்த எதிர்வினையுமின்றி ஏற்றுக்கொண்ட செயல்பாடு, பெண்களை மட்டும் ‘அது, இது’ என்று குறிக்கும் மொழியாடல், என இவையனைத்து சார்ந்தும் தகவல்களைத் திரட்டினோம். முக்கியமாக, சிறு குழந்தைகள், சினிமா பாடல்களைப் பாடுகிறபோது, அதில் வருகிற விரசமான வரிகள், அதற்கு அவர்கள் கொடுக்கிற முக பாவனைகள், எனச் சுட்டிக்காட்டுவதற்கு எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. இந்த ஆவணப்படத்தின் நோக்கம் பெரிதாகிக்கொண்டே போனதால், நான் தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டேன். ஒரு முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு விரைவில் பட வேலைகள் துவங்கும். 
’பால் புதுமையினர்’ தொடர்பான படங்களில் ‘அந்தாதி’ முக்கிய இடம்பிடிக்கிறது. அதில், ஆன்மாவிற்கு பால் பேதம் கிடையாது (Soul has no gender) என்ற வரி குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. அத்தோடு, இரு காதலர்கள் அல்லது பால் புதுமையினர் என்றால், அவர்களைப் பற்றி யோசிக்கிறபோது முதலில் நினைவிற்கு வருவது, அவர்களது உடல் சார்ந்த ஈர்ப்புதான். ஆனால், அதைக் கடந்து அவர்கள் ஒருவருக்கொருவர் உணர்வு சார்ந்து எவ்வளவு அந்நியோன்யமாக இருக்கிறார்கள், எப்படி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மிகப்பொருத்தமான இணையர்களாக வாழ்கிறார்கள், என்பதையெல்லாம் சொற்களாக அல்லாமல், காட்சி வழி மிக அழகாகவே வெளிப்படுத்தியிருக்கிற குறும்படம் ‘அந்தாதி’. அதுமட்டுமல்லாமல், குறுகிய பட்ஜெட்டில், குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, சொற்ப லொகேஷன்களில், நேர்த்தியான குறும்படம் எடுப்பதற்கு உதாரணமாகவும் இதனைச் சுட்டிக்காட்டலாம். ஏனெனில், இரண்டே கதாபாத்திரங்கள், ஒரேயொரு அறை, குறைந்த வெளிச்சம், இதற்குள் மனித உணர்வுகளை மையப்படுத்திய ஒரு கதை. ’அந்தாதி’ குறும்பட அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.

’ஃபுல் ஸ்டாப்’ எனது முதல் படம். ’அந்தாதி’ எனது இரண்டாவது படம். இரு முரண்பட்ட குணநலன் கொண்ட கதாபாத்திரங்கள், ஆதியும் அந்தமும் போல பண்பில் எதிர்த்துருவங்களாக இருந்தாலும், அவர்களால் எப்படி நேர்மறையையும், எதிர்மறையையும் சமன்செய்து மகிழ்ச்சியான வாழ்வை வாழமுடிகிறது என்பதைப் பற்றிய படம். எப்போதும் காதலிப்பது எளிது ஆனால் வெறுப்பது மிகவும் கடினம். இது மிக எளிது. பின்னர் நாம் வித்தியசங்களைப் பாராட்டலாம். 

இரு நபர்கள் காதலிக்கிறார்கள், அதில் ஒருவர் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார், அதை மற்றவர் எதிர்கொண்டு, அவரை ஆற்றுப்படுத்துகிறார், ஒருவரது குறை, நிறை பூர்த்திசெய்யப்பட்டு சமநிலையான வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள் என்பதாகக் கதையமைத்தேன். படம் எடுத்து முடித்து, பொதுவெளியில் பகிர்கிறபோதுகூட, “இது பால்புதுமையினர் தொடர்பான படம் / LGBTQ படம்” என்ற எந்த அடைமொழியும் கொடுக்கவில்லை. பிற்பாடு, இதே பால்புதுமையின நண்பர்கள் படம் பார்த்து, ‘LGBT’ என்று குறிப்பிடுகிறபோது, இன்னும் நிறைய மக்களுக்கு இந்தப் படம் போய்ச்சேரும், அத்தோடு, இதனோடு தொடர்பில்லாத வேறு பார்வையாளர்களும் பார்க்கக்கூடும் என்று சொன்னதன்பேரில், அச்சொல்லை இணைத்துக்கொண்டோம். அதற்கு முன்புவரை, “அந்தாதி, மலையாளக் குறும்படம்’ என்று மட்டும்தானிருந்தது.

Anthadhi (End-Beginning) - Award-Winning LGBT Malayalam Short Film | Chinnu  Kuruvilla | Sethu Parv - YouTube

இந்தக் குறும்படத்திற்கு ’தேவகி வாரியர் மெமோரியல் விருது’ FOR WOMEN EMPOWERMENT கிடைத்தது. யூட்யூபில் இதுவரை பதினோரு லட்சம் பார்வையாளர்கள் இப்படத்தைப் பார்த்திருக்கின்றனர். மும்பை LGBTQ KASHISH திரைப்பட விழா உறுப்பினர்கள், இப்படத்தை இணையத்தில் பார்த்துவிட்டு, என்னை அணுகி, இந்தத் திரைப்பட விழாவிற்கு படத்தை அனுப்பச் சொல்லிக் கேட்டனர். இதேபோல, அமெரிக்கா, இந்தியா என பல திரைப்பட விழாக்கள், நாங்கள் விண்ணப்பிக்காமல், அவர்களாகவே எங்களை அணுகி, படத்தை அனுப்பச் சொல்லிக் கேட்டனர். 

இந்தச் சமுதாயக் கட்டமைப்பினாலும், இதற்கு முந்தைய தலைமுறையின் பழைமைவாதக் கருத்துக்களாலும், பாதிக்கப்படுகிற, இக்கால இளந்தலைமுறை யுவதிகளின் போராட்டங்களே அந்தாதி. 

நான் எழுதுவதற்கு கடலம்மாதான் உந்துசக்தி. கடலம்மா என் வாழ்வின் ஒரு அங்கம். தினந்தோறும் வங்கக்கடலைப் பார்க்கிறேன். அவள் துணையோடு எழுதுவேன். காகிதங்களில்தான் அடித்துத் திருத்தி எழுதுவேன். இக்குறும்படத்தில் கூட, ஒரு பெண்ணின் பாலியல் அனுமதியைப் பற்றிய புத்தகமாக ‘நியோக தர்மா’வைக் குறிப்பிட்டிருப்பேன். 

பத்தொன்பது நிமிட கால அளவு கொண்ட இக்குறும்படத்தை, ஒரே இரவில் எடுத்துமுடித்திருக்கிறீர்களல்லவா?

ஆம், சூரியன் மறைந்து இருள் வரத்துவங்கியதும், படப்பிடிப்பை ஆரம்பித்தோம். அதிகாலை மூன்று மணிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 

சுயாதீனப் படம் என்பதால், அதிக செலவு வந்துவிடக்கூடாது என்றெண்ணி, ஒத்திகைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவோம். ஒத்திகைகள் தன்னிறைவு பெற்ற பிறகுதான், படப்பிடிப்பிற்குச் செல்வோம். எனவே, ஒன்று அல்லது இரண்டு டேக்குகளில், தேவையான காட்சி கிடைத்துவிடும். 

இரு கதாபாத்திரங்கள் என்பதால், ஓவர் ஷோல்டர்ஸ் ஷாட்ஸ் இருக்கிறது. கேமராவின் கோணமும் மாறுகிறது. இத்தனையையும் பூர்த்தி செய்து, ஒரே இரவிற்குள் படத்தை எடுத்து முடிப்பது என்றால், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தியிருக்கிறீர்களல்லவா?

ஆம். இரண்டு கேமராக்கள் பயன்படுத்தினோம். ஒத்திகையின்போது, செல்போனை வைத்து, காட்சி எப்படி வந்திருக்கிறது, என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பெடுத்துக்கொண்டோம். 

’களைவு’ உங்கள் எழுத்திலும், ஸ்டான்சின் ரகு எழுத்திலும் உருவான குறும்படம். பதினேழு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பார்த்திருக்கின்றனர். அத்தோடு, அதுவரை எதிர்மறைக் கதாபாத்திரங்களிலும், வில்லத்தனமான வேடங்களிலும் நடித்துவந்த ஹரீஷ் உத்தமன் ‘களைவு’ படத்தில் நடித்திருக்கிறார். ‘அஷ்வமித்ரா’வில் அந்த வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு, மென்மையான உருவம் கொடுத்திருக்கிறீர்கள். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

ஒரு நடிகருக்கு எல்லாவிதமான கதையிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கும். ‘களைவு’ குறும்படத்திற்காக, ஸ்டான்சின் ரகு, ஹரீஷ் உத்தமனை அணுகும்போது, அவர் மறுப்பேதும் சொல்லாமல், இண்டி ஃப்லிம், குறும்படம் என்றவுடன் ஆர்வமாகத் தன்னையும் இந்த முயற்சியில் இணைத்துக்கொண்டார். வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட ஒன்றாகத்தான், அவருக்கு, எங்களது ‘களைவு’ மற்றும் ‘ஆழ்கடல்’ போன்ற குறும்படங்கள் அமைந்திருந்தன. 

லட்சுமி ப்ரியா, செம்மலர் அன்னம், ஹரிஷ் உத்தமன் போன்ற பலர், வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்கள் கொடுக்கிறபோது, அதை ஆர்வமாக வரவேற்கின்றனர். இல்லையேல், அவர்களும் இந்த மைய நீரோட்டத்தில் இணைந்து, காணாமல் போய்விடுகின்றனர். 


தகப்பனை இழந்த குழந்தை யாருடனும் பேசாமல் மெளனித்திருக்கிறது. அந்தக் குழந்தையைப் பேச வைப்பதற்காக வருகிற அருணை, அந்தக் குழந்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பின்பு படிப்படியாக, அவர்களுக்கிடையே அன்பு பரிமாறப்படுகிறது. மித்ரா எனும் அந்தக் குழந்தை, அருணை ஏற்றுக்கொள்கிறது. அவனுடன் பேசத்துவங்குகிறது, இதுதான் ‘அஷ்வமித்ரா’வின் கதை. வயதானவர்களை நடிக்க வைப்பது சற்று எளிது. அதுவே, குழந்தையிடம், காட்சியைச் சொல்லி, எப்படி நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் புரியவைத்து, திரைப்படமெடுப்பது சவாலான காரியம். குழந்தையிடம் நடிப்பை வாங்கிய உங்களது அனுபவம் எப்படியிருந்தது?


அந்தக் குழந்தையின் அம்மா, தாரா, கேரளாவின் சிறந்த நாடக நடிகர். அப்பா எழிலரசன் ஒரு ஆர்டிஸ்ட். இருவருமே கலையோடு தொடர்புடைய பணியில் இருப்பதால், குழந்தைக்குள்ளும் இயல்பாகவே கலை சார்ந்த ஈடுபாடு இருந்திருக்கிறது. இப்படத்திற்காக ஒரு மூன்று, நான்கு குழந்தைகள் வரை ஆடிஷன் செய்து பார்த்தேன். அதில் சிலர் கேமரா வைத்ததும் வெட்கப்பட்டனர். பின்னர், தாரிதாவின் பெற்றோரைச் சந்தித்து, விபரங்களைச் சொன்னேன். அவர்கள் சம்மதத்துடன் தொடர்ந்து இரு வாரங்கள், மாலையில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது தாரிதாவுடன் நேரம் செலவிடுவேன். அவளுக்குக் கதைகள் சொல்வேன். அவள் பேசுவதைக் கேட்பேன். இருவரும் சேர்ந்து ஓவியங்கள் வரைவோம். என்னையும் ஒரு தோழியாக அவள் ஏற்றுக்கொண்டாள். ஒத்திகை நடக்கிறபோது, ஹரீஷும், தாரிதாவும் நெருங்கிப் பழகினர். தாரிதாவிற்கு ஹரீஷிடம் பழகுவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. வெகு சீக்கிரமாகவே, ஹரீஷோடு ஒட்டிக்கொண்டாள். 

ஆனால், கதைப்படி, ஹரீஷும், தாரிதாவும் ஆரம்பத்தில் பேசவே கூடாது. எனவே, தாரிதாவை அழைத்து, ’இனிமேல் நீ அவருடன் பேசக்கூடாது, அவரைப் பார்க்கக்கூடாது’ என்று சொல்லிப் புரியவைத்தோம். யோசித்த குழந்தை, பிறகு சரியென தலையாட்டியது. சொன்னால் நம்பமாட்டீர்கள். படப்பிடிப்பின் போது, தாரிதாவிற்கு அருகேயே இரண்டு கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அவள் திரும்பி ஹரீஷைப் பார்க்கவே மாட்டாள். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாகயிருந்தது. ஐந்தே வயதேயான அந்தக் குழந்தையை, பிறவி நடிகர் போலவே உணர்ந்தேன். நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே செய்தாள். நான் அவளது நம்பிக்கையைப் பெற்றபின்னர், என்னுடனேயேதான் இருப்பாள். ஒவ்வொரு மாலையும் படப்பிடிப்பு முடிந்ததும், நான்கு கதைகள் சொல்ல வேண்டும், அவளுடன் முக ஓவியங்கள் வரைய வேண்டும் என்று கோரிக்கைகள் வைப்பாள். அதையும் நிறைவேற்றுவோம். ஆனால், படப்பிடிப்பில் ஆக்‌ஷன் சொன்னபிறகு, கட் சொல்லும் வரையில், மித்ரா எனும் கதாபாத்திரமாகவே இருப்பாள். கேமராவையோ, மற்றவரையோ திரும்பிக்கூடப் பார்க்காமல், நான் என்ன சொன்னேனோ, அதை அப்படியே செய்து முடித்தாள். 


படத்தில் லைவ் செளண்ட் (Live Sound) பயன்படுத்தியிருக்கிறீர்கள். பெரிய லைட்டிங் உபகரணங்கள் அல்லாமல், இயற்கையான ஒளியிலேயே படம்பிடிக்கப்பட்டது போலவும் தெரிகிறது. ஆனால், இந்த யதார்த்தங்கள் மீது படத்தின் இசை ஆதிக்கம் செலுத்துவது போலவும் தோன்றியது. படம் முழுக்க, இடைவெளியில்லாமல், இசை நிரப்பப்பட்டிருப்பது எதனால்?

 ’சாருகேசி’ என்ற ராகம் துக்கத்தையும், மகிழ்ச்சியான உணர்வையும் ஒன்றாகக் கடத்தக்கூடியது. கடல் எப்படி இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக வருகிறதோ, அப்படியாக அந்த ராகத்தையும் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டுவர முயற்சி செய்தோம். சிலருக்கு அந்தப் பாணி பிடித்திருந்தது. ஒரு சிலர், இதைக் குறையாகவும் சொன்னார்கள். ஒரு கலவையான விமர்சனம்தான் படத்தின் இசைக்கு வந்திருக்கிறது.

படத்தில் அருண் கதாபாத்திரம், குழந்தையைத் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்களிடம் பேசுகிறபோது, திக்கித் திணறிப் பேசுவார். சரளமாகப் பேசுவதற்கே மிகவும் சிரமப்படுவார். ஆனால், குழந்தையிடம் மிக இயல்பாக, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பேசுகிறார். இத்தகைய கதாபாத்திர வார்ப்பு உருவான விதம்?

இதுபோன்றிருக்கிற சில நபர்களை நான் நிஜ வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலாக வேலைசெய்து வந்தபோது, இதுபோன்ற நபரைச் சந்தித்தேன். குழந்தைகளுடன் அத்தனை இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென அந்த வழியில், வயதானவர், நடுத்தர வயதினர் யாரேனும் வந்தால், சட்டென பேசுவதை நிறுத்திவிடுவார். குழந்தைகளைத் தவிர, அவரால் மற்ற யாருடனும் அவ்வளவு இயல்பாக உரையாட முடியாது. என்னுடன்கூட அவர் பேசியதில்லை. எனவே, இந்நபரை, அருண் கதாபாத்திரத்திற்கான தாக்கமாக எடுத்துக்கொண்டேன். சிறுவயதில், பெற்றோரால், அல்லது வயது வந்தவர்களால் அதிக சித்திரவதைக்கு ஆளானவர்கள், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலேயும், அந்தப் பயத்திலிருந்தும், தயக்கத்திலிருந்தும் மீள்வதில்லை. அவர்கள் பெரியவர்களுடன் உரையாடலை விரும்புவதில்லை. திக்கித் திணறித்தான் பேசுகின்றனர். அதுவே, குழந்தைகள் என்று வரும்போது, தன் உலகத்திலிருந்து ஒரு நபர் என நினைத்து, அவர்களுடன் எவ்வித தடங்கலும் இல்லாமல் பேசமுடிகிறது.

’பெண் உடம்பை வைத்து மிரட்டுதல்’ பற்றி ’என் உடம்பு’ எனும் குறும்படத்தையும் தற்போது எடுத்து முடித்திருக்கிறீர்களல்லவா?

ஆம், அதுவும் சிறப்பாகவே வந்திருகிறது. செம்மலர் அன்னம் மற்றும் ஆனந்தி ஜெயராமன் நடித்திருக்கின்றனர். பாலியல் அத்துமீறல்கள், பெண் உடலை மையப்படுத்தி பயமுறுத்துதல், மிரட்டுதல் என எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

 அஷ்வமித்ரா’வையே எடுத்துக்கொண்டாலும், ”தந்தையின் இறப்பால், பேசாமலிருக்கிற குழந்தையை, ஒருவன் பேசவைக்கிறான்” என்பதே ஒருவரிக் கதை. ஆனால், அதை அந்தக் கதாபாத்திரங்களின் ஆழத்தோடு நிகழ்த்திக்காட்ட 80 நிமிட கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்தக் குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொள்ளுதல், அவளைக் குணப்படுத்த வருகிற அருணின் மனநிலை, அவனது கடந்தகால பிரச்சினை, குழந்தையின் நம்பிக்கையை அருண் படிப்படியாகப் பெறுதல், இறுதியாக அருணின் காதில் மித்ரா முதல் வார்த்தைகளைப் பேசுவது, என இவையனைத்தையும் உணர்வாகக் கடத்த, இத்தகைய கால அவகாசம் தேவைப்படுகிறது. அதுவே, வெகுசன சினிமாவில், படத்தொகுப்பில் வேகவேகமான ’கட்’கள், வேகமாகக் கதை சொல்லுதல், காட்சிகளை நகர்த்துவதில் அவசரம், இவையெல்லாம் சேர்ந்து, அந்த உணர்வுகளை மழுங்கடித்து, வெறுமனே ஒரு சுவாரஸ்யமான படத்தைப் பார்த்தோம் என்ற அனுபவத்தை மட்டும் பார்வையாளர்கள் பெற்று, வீடு திரும்புகிற போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கலை, சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. சமூகம் கலையைப் பிரதிபலிக்கிறது. எதுவொன்றும், தாமதியாமல் உடனடியாக நடந்துவிட வேண்டும் என்ற அவசரம், மக்கள் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இந்த சமூக எதிர்பார்ப்பை, கலையும் பூர்த்திசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 

‘ஐநூறும் ஐந்தும்’ என்ற திரைப்படம், அந்தாலஜி அடிப்படையில் எடுத்தோம். ஒரு ஐநூறு ரூபாய், ஐந்து வெவ்வேறு நபர்களிடம் செல்கிறது. அந்த நபர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த ஐநூறு ரூபாயைச் செலவழிப்பதற்கான தேவை, வேறு வேறு விதமாக இருக்கும். இதுதான் கதை. இறுதியாக, புரட்சியாளர் ஒருவரிடம் அந்த ரூபாய் வருகிறது. ஆனால், அவர் பணத்தைப் பயன்படுத்த விரும்பாதவர். வாழ்வதற்குப் பணம் தேவையில்லை என்ற நிலைப்பாடு கொண்டிருப்பவர். இந்தக் கதையை வினியோகிப்பதற்கு மூன்று வருட காலம் முயன்றோம். அறுபது பேரிடமாவது படத்தைத் திரையிட்டுக் காண்பித்திருந்தோம். அவர்கள் அனைவரும் சொன்னது, தமிழ் சினிமாவில் அந்தாலஜி வேலைக்கு ஆகாது. மக்கள் விரும்பமாட்டார்கள். படம் ஓடாது என்றனர். ஆனால், இன்றைக்கு, ஓடிடி, திரையரங்கம் என எங்கிலும் அந்தாலஜி மட்டும்தான் எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இரண்டரை மணி நேரப் படங்களைப் பார்க்க மக்கள் தயாராகயில்லை. ஒரு கதையை எவ்வளவு விரைவாகச் சொல்லமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்லி முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். பெரிய இயக்குனர்கள் கூட, அந்தாலஜி எடுக்கின்றனர். அதே நேரத்தில், ‘அஷ்வமித்ரா’ போன்ற படத்தையும் மக்கள் பார்க்கின்றனர். எனவே, வினியோகத்தின் காரணமாகத்தான், அவசரகதியிலான படங்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால், பல ஜானர்களிலும், பலவிதமான உணர்வுநிலைக் கொண்ட படங்களும், மக்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறபோது, கதை நன்றாகயிருக்கும் பட்சத்தில் மக்கள் அதையும் பார்ப்பதற்குத் தயாராகவேயிருக்கின்றனர். 

நீங்கள் நினைக்கிற பாலின சமத்துவத்தை, உங்கள் பெண் கதாபாத்திரங்களும் பிரதிபலிக்கின்றன. பெண் என்றால் சமையலறையில் இருப்பது, கணவனுக்கு பணிவிடைகள் செய்வது, குழந்தைகளைப் பராமரிப்பது, குடும்பத்திற்கும், சமூகக் கட்டமைப்பிற்கும் கீழ்படிந்து நடப்பது போன்ற பாவனைகளை உங்கள் படங்களில் பார்க்கமுடிவதில்லை. ஒரு ஆணின் நிலையிலிருந்து பெண் கதாபாத்திரங்களை உருவாக்காமல், பெண்களே தாங்கள் விரும்பிய பெண் கதாபாத்திரங்களை உருவாக்கியதன் செயல்பாடாகவும் இதனைக் கருதலாம். சமூக வலைக்குள் சிக்காத அத்தகைய பெண் கதாபாத்திரங்கள் குறித்து?

பெண்கள் மட்டுமே பெண்களுக்கான விடுதலையைப் பேசவேண்டுமென்பதில்லை. பெண்ணை சமமாகக் கருதுகிற ஆண்களும் பேச வேண்டும். 
குழந்தையின் தந்தை, விளையாட்டாக, நைட்டி அணிந்து புகைப்படம் எடுத்தால் என்ன பிரச்சினை? இதில் என்ன தவறு இருக்கிறது? சமீபத்தில், ட்ராக் ARTRYST – A Fluid Affair ஒரு ஆவணப்படம் எடுத்திருந்தேன். இப்படம் ஒரு கலைஞன் மற்றும் Drag Performance என்று அழைக்கப்படுகிற அவனது கலையைப் பற்றியது. ஒரு கலைஞர் எவ்வாறு முழுமையாக தனது கலைவடிவத்திற்கு மாறுகிறார் என்பது இந்தப் படத்தின் மூலம் சித்தரிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில், ஆண்கள், பெண்களுக்கான உடையை அணிந்தும், பெண்கள், ஆண்களுக்கான உடையை அணிந்தும் நடனமாடுவார்கள். பால் புதுமையினர், திருநங்கை, திருநம்பியர் கூட இதில் கலந்துகொள்வார்கள். 


தமிழ்த் திரைப்படங்களில் கதாபாத்திர உருவாக்கத்தில் இன்னும் ஆழம் வேண்டும். சலங்கை ஒலி திரைப்படம் என்னை அதிகம் பாதித்த திரைப்படங்களில் ஒன்று. மிக நுட்பமான கதையை, ஆழமான கதாபாத்திரங்களை வைத்துப் படமாக்கியிருப்பார்கள். கலைக்காக கலையை உருவாக்குவதோடு, திரைப்படக் கலைஞர்கள், சமூக சிந்தனையோடும் படங்களை உருவாக்கவேண்டும். சமூக பொறுப்பையும் அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். ஜேம்ஸ் பால்ட்வின், art and social responsibility குறித்துச் சொல்கிறார். அவர் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். கலைக்கும், சமூகப் பொறுப்பிற்கும் இடையே மிக மெல்லிய கோடுதான் இருக்கிறது. முன்னெல்லாம் படங்களில் இயற்கையோடு உறவாடுவதுபோன்ற பாடல் காட்சிகள் நிறைய இருக்கும். நிழல்கள் படத்தில் ”இது ஒரு பொன்மாலைப் பொழுது”, முதல் வசந்தம் படத்தில், ’மானாட கொடி பூவாடும் ஒரு சோலை’ என்றிருக்கும், சாமுராய் படத்தில் ‘மூங்கில் காடுகளே’ பாடல். இப்போது, மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவை விளக்குவதுபோன்ற வரிகள் இல்லை மற்றும் இயற்கையுடன் உறவாடும் கதாபாத்திரங்களையும் அரிதாகவே பார்க்கிறோம். 

புத்தகங்கள்?

அருந்ததி ராயின் புத்தகங்கள் பிடிக்கும். கெளதம சித்தார்த்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ‘பொம்மக்கா’ படித்தேன். மிகச் சிறந்த கதைகள் அதில் இருந்தன. சிறு தெய்வங்கள் பற்றிய அந்தப் புத்தகத்தின் முதல் சிறுகதை ‘பொம்மக்கா’. அந்தக் கதை உலகத்திற்குள்ளேயே ஒரு மாதகாலம் வாழ்ந்தேன். தாங்கமுடியாமல், நேரடியாக அவரை எழுத்தாளர், கவிஞர் மனுஷியுடன் சந்திக்கச் சென்றுவிட்டேன். 

மரியா பொப்போவா என்ற பல்கேரியன் எழுத்தாளர், ப்ரெய்ன்பிக்கிங்ஸ் என்ற இணையதளத்தில், தான் படித்த புத்தகங்கள் குறித்து எழுதிவருகிறார். நான் அதைத் தொடர்ந்து படிப்பேன். அதில் குறிப்பிடுகிற புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கியும் விடுவேன். சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதி புத்தகம் வாங்குவதற்கே செலவாகிவிடும். முக்கியமாக கிராபிக்ஸ் நாவல்கள் அதிகம் விரும்பி வாசிக்கிற பழக்கம் இருக்கிறது. எனக்குப் பிடித்த புத்தகங்கள், எழுத்தாளர்கள், திரைப்படங்கள் பட்டியலை இறுதியில் இணைத்திருக்கிறேன்.
அடுத்த படம் குறித்து?

Ang lee பல ஜானர்களில் படங்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொன்றும் வித்தியாசமானது. எல்லாமே வெற்றிப்படங்களும் கூட. ஹல்க் (hulk) அவர் தான் எடுத்தார் என்று சொன்னால், ப்ரோக்பேக் மெளண்டன் (brokeback mountain) எடுத்த ஆங்க் லீயா, ஹல்க், க்ரோச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன், லைப் ஆஃப் பை எடுத்தார் என்று ஆச்சர்யமாகக் கேட்கத் தோன்றும். அப்படி நம்பமுடியாத அளவிற்கு, ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத வித்தியாசமான ஜானர்களில் படங்களை இயக்கியிருக்கிறார். அதுபோல, முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தில் அடுத்த படத்தில் எதிர்பார்க்கலாம். ஆனால், எந்த ஜானராக இருந்தாலும், கதையில் ஒரு நம்பிக்கையை விட்டுச்செல்வது, என் படங்களின் பாணியாக இருக்கும். 

FILMS

Capharnaüm - Nadine Labaki

Turtles can fly - Bahman Ghobadi

Sasi - Poo
Aval Appadithan - C. Rudraiah
K.Vishwanath - Salangai Oli
Iyarkai - S.P. Jananathan
Varumaiyin Niram Sivappu - K.Balachander

Ulladakkam – Writer - Cheriyan Kalpakavadi, Director - Kamal

Paheli - Writer, Vijayadan Detha ,Director, Amol Palekar
Guide - Writer - R.K Narayan, Director- Vijay Anand
Khamoshi, Safar - Asit Sen
Rudaali – Kalpana Lajmi
Lekin - Gulzar
Zakhm - Mahesh Bhatt

Motorcycle Diaries - Walter Salles

Dersu Uzala - Akira Kurosawa
The Return – Andrey Zvyaginstev
Jil Byl Pes – E. Nazarov

The Lives of Others – Florian Henckel von Donnersmarck
Hanna Arendt – Margarathe von Trotta

Birdy – William Wharton – Writer, Director – Alan Parker
Never Let me go - Kazuo Ishiguro, Writer. Director - Mark Romanek
To Kill a Mockingbird - Writer - Harper Lee, Director - Robert Mulligan
Charlie Chaplin - A King in New York

Kedi - Ceyda Torun
My Octopus Teacher - Pippa Ehrlich

I enjoy Black & White Noir Silent Films.

BOOKS (a very small list)
The Complete Calvin & Hobbes - Bill Watterson
Persepolis, Chicken with Plums - Marjane Satrapi
Master & Margarita - Mikhail Bulgakov
The Moral responsibility of the Artist, The Artist's Struggle for Integrity - James Baldwin
The God of Small Things - Arundhati Roy
Bommakka - Gauthama Siddharthan
Watchmen, V for Vendetta - Alan Moore
Paracuellos - Carlos Giménez
Habibi - Craig Thompson
Alone - Christophe Chabouté
Zahra's paradise - Amir & Khalid
We the Living – Ayn Rand
The Banality of Evil – Hanna Arendt
Kafkaesque – Peter Kuper
The Handmaid’s Tale – Margaret Atwood
The Park Bench – Christophe Chabouté
Arab of the Future – Riad Sattouf
Mother – Maxim Gorky
Footnotes in Gaza – Joe Sacco
Women who run with Wolves – Clarissa Pinkola Estés
The Arrival – Shaun Tan
Tales from the Inner City – Shaun Tan
Horton Hatches the Egg – Dr.Seuss
The Osbick Bird - Edward Gorey
A Velocity of Being – Maria Popova & several other authors.
The Giving Tree – Silverstein
Bertolt – Jacques Goldstyn


Poets
Subramanya Bharathiyar
Kabir
Rumi
Simone de Beauvoir
Maya Angelou
Walt Whitman
Rainer Maria Rilke
Audre Lorde
James Baldwin