பொலான்ஸ்கியின் திரைத்தடங்கள்

ஒரு படைப்பாளியின் படைப்புலகத்தில் முழுக்க வியாபித்திருப்பது கற்பனை பிராணவாயு மட்டுமல்ல, ஆழ்மன உணர்வு, பாலியகால பாதிப்புகள் என்கின்ற கரியமில வாயுக்களும் அதில் கலந்திருக்கின்றன. அதனால்தான் பெரும்பாலான படைப்புகள் யதார்த்த உணர்வுகொண்டு கிட்டத்தட்ட நம்பகத் தன்மையையும் கொண்டிருப்பவையாக மின்னுகின்றன. உயர்ந்து நிற்கின்ற படைப்பாளர்கள் எல்லோருமே பால்ய காலத்தில் பஞ்சு மெத்தைகளிலும், பட்டுக் கம்பளத்திலும் படுத்துப் புரண்டவர்கள் அல்லர். ஈவிரக்கமற்ற கொடூரமான சமூகச் சூழலில் புரண்டு உழன்று அவை ஏற்படுத்திய காயங்களின் தழும்புகள், கீறல்கள் அந்தப் படைப்பாளி கையில் கேமராவைப் பிடிக்கையில் முன்னால் வந்து நிற்கின்றன. என்னதான் மேற்பூச்சுத் தன்மை, ஆடம்பரத்தோடு அவன் அடையாளம் காணப்பட்டாலும், அவனுக்குள் கொழுந்து விட்டெறிந்துக் கொண்டிருக்கும் அந்தப் பால்யகால படுபயங்கர சூழலை முன்னிருத்தி அவன் தன் சுயவிருப்பத்தைத் திருப்திப்படுத்த வேண்டி தன் வாழ்நாளில் தன் கலையுலக வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் தான்பட்ட அவஸ்தைகளை வேறு ஒரு ரூபத்தில், பிம்பத்தில் படம்பிடிக்காமலும் விடுவதில்லை. தன்னுடைய அடிப்படை பாதையிலிருந்து சற்றே விலகிச் சென்று பிறிதொரு ஈர்ப்புத்தன்மை மிக்க படைப்பை படைப்பாளன் நல்குகையில் இதனை அடிப்படையாகிக் கொண்டு படைப்பாளனிடமிருந்து வெளிவருகிற வார்த்தைகள் இந்த உண்மையை உணர்த்தி விடுகின்றன.
உலகத் திரைபடங்களோடு ஓரளவு உறவு கொண்டிருக்கிற உலகத்தர ரசிகர்களுக்கு உலகத் திரைப்படங்களோடு ஓரளவு உறவு கொண்டிருக்கிற உலகத்தர ரசிகர்களுக்கு ரோமன்


பொலான்ஸ்கியைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. உலகத்தர சினிமா ரசிகர்களிலேயே வெறும் உலகத்

தரமான சினிமா ரசிகர்கள். மூன்றாம் உலக நாட்டு திரைப்படங்களின் ரசிகர்கள் என்ற ஒரு இரு பிரிவு

உண்டு. இதில் இரண்டாம் ரக ரசிகர்களிடம் பொலான்ஸ்கியைப் பற்றி பேசினால் முகம் திருப்பிக்

கொள்வார்கள். அத்தகைய அந்தஸ்தில் இருப்பவர் பொலான்ஸ்கி. பொலான்ஸ்கி இன்னொரு ஆல்பர்ட்

ஹிட்ச்காக் என்று சொல்லப்பட்டாலும், ஹிட்ச்காக் திரையில் தொடாத பலதரப்பட்ட விஷயங்களை இவர்

தொட்டிருக்கிறார் என்பது இருக்குள்ள இன்னொரு சிறப்பம்சமாகும்.

முரண்களும் அரண்களும் நிறைந்த உலகில் ஒரு சாதாரண மனிதனின் ஒழுக்க மீறல்களை, கதைகளை

மறைக்க நகைச்சுவை, விறுவிறுப்புடன் கதைக் கூறுகிற உத்தி இருவருக்குமே கைவந்த கலையாகும்.

இவைகளைக் கடந்து பொலான்ஸ்கியின் இன்னொரு உலகமும் உண்டு. அது எதிலுமே தீமையையே காணும்

பாங்கு. இதற்குக் காரணம் இவரின் குழந்தைப் பருவ பாதிப்பாகக்கூட இருக்கலாம். இதுதான்

உண்மையுங்கூட.

போலந்து நாட்டு யூத மற்றும் ரஷ்ய பிரஜைக்கு மிடையே பாரிஸில் 1933 ஆம் வருடம் பொலான்ஸ்கி பிறந்த

போது இருந்து வந்த உலகபோர்ச் சூழல், யூத இன அடக்கு முறைத்தனம் பொலான்ஸ்கியின் பெற்றோர்கள்

அகதி முகாமில் இருந்தபோது தந்தை உதவியுடன் பொலான்ஸ்கி தப்பித்து ஒரு கத்தோலிக்க

குடும்பத்தினரின் கண்காணிப்பின் கீழ் வாழ்ந்தார். இந்தச் சமயத்தில் கொடூரச் சமூகச் சூழலிலிருந்து சற்று

விடுபட்டதும் ஒரு பெரும் பொழுதுபோக்காக சினிமாக் கொட்டகைக்குப்போய் அடைபட்டுக் கொள்வது

என்பதே அவருக்கு ஒரு பெரும் பாதுகாப்பாக இருந்தது.

தாய் மரித்துவிட, தந்தை வேறு ஒரு திருமணம் புரிய இளமையை எட்டுகிற பொலான்ஸ்கி வீட்டை விட்டு

வெளியேறுகிறார். சொந்த பாதிப்புகளினூடே அவரின் சினிமா வேட்கை பிரகாசமாகியது.

பதினாறாம் வயதில் தந்தை இவரை ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்துவிட அங்கு செல்ல

மறுத்து1950இல் ஒரு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார், பொலான்ஸ்கி. இதனூடே நாடகங்களிலும்

பங்கேற்ற இவர் 1954இல் ஆண்ட்ரெஜ் வாஜ்டாவின் ' எ ஜெனரேஷன்' என்ற படத்தில் முதன் முதலாய் நடிக்கத்

தொடங்கினார். இதனையடுத்து 1957இல் அரசு திரைப்படப் பள்ளியில் இயக்குனர் படிப்பில் சேர்ந்து

அதனையும் முழுமைப் படுத்த முடியாமல் பாதியிலேயே கைவிட்டார். இவருடைய டைரக் ஷன் வாழ்க்கை

'ப்ரேக் அப் தி டேன்ஸ்' என்ற மாணவர் படத்தின் மூலம் ஆரம்பமானது. அடுத்த படமான 'டூ மென் அண்ட்

வார்ட்ரோப்' இவருக்கு ஐந்து சர்வதேச விருதுகளைப் பெற்றுத்தந்தது.

பொலான்ஸ்கியின் முதல் முழு நீளத் திரைப்படம் என்றால் அது 'நைப் இன் தி வாட்டர்'. இந்தப் படத்தின்

உந்துதலில் பேரில்தான் கே.பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு' உருவானது என்றும் கூறுவர் ஒரு படகில்

உதவியாளனாய் வருகிற ஒருவனுக்கும் படகில் பயணிக்கிற ஒரு சீமானின் மனைவிக்குமிடையே நடக்கிற

உறவாடலால் கொதித்தெழுந்த சீமான் அந்த உதவியாளனைக் கத்தியால் குத்திக் கொல்ல முயல்வது,

தப்பிப்பது என்பதான விஷயங்கள் அதில் அடக்கம். இரண்டாம் உலகப் போரைப் பற்றியதல்லாத முதல்

போலந்து படம் என்றும் இதைக் குறிப்பிட்டு கூறுவர். முழுக்க முழுக்க போலந்தில் எடுக்கப்பட்ட

பொலான்ஸ்கியின் ஒரே படம் இதுவெனலாம்.

இதற்குப்பின் இங்கிலாந்திற்குப் பயணமானார் பொலான்ஸ்கி. அங்கே அவர் இயக்கிய 'ரிபல்ஷன்' என்ற

உளவியல் சார்ந்த திகில்படம் வெற்றிப் படமாக அமையாவிட்டாலும் பின்னர் அவர் எடுத்த 'தி பியானிஸ்ட்'

என்ற படத்திற்கு அடுத்ததாக அவரின் 'ஃபேவரேட்' படமாய் இருப்பது 'ரிபல்ஷன்' தான்.

உலக கமர்ஷியல் திரைப்பட இயக்குனர்களின் ஒரே கனவுத் தொழிற்சாலையாக இருக்கும் ஹாலிவுட்டில்

1968இல் இறங்கி 'ரோஸ்மேரிஸ் பேபி' என்ற அவரின் இயல்பான உளவியல் திகில் ரகப்படத்தை இயக்கி

அங்கேயும் ஒரு கால் பதித்தார்.

ஷேக்ஸ்பியரின் 'மேக்பத்' காவியத்தைத் திரைவடிவில் கொண்டு வந்தார் பொலான்ஸ்கி. இவரின் மனைவி

ஷெரான் டேட் கொடூரமாய்க் கொல்லப் பட்டத்தைத் தொடர்ந்து 'மேக்பத்' உருவானது. அவரின் சொந்த

இழப்பு. அதன் பாதிப்பு ' மேக்பத்' திரைத் தழுவலில் தென்பட்டது.

செக்ஸ் காமெடிக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உண்டு. இதனையும் பொலான்ஸ்கி விட்டு வைக்க

வில்லை. இத்தாலிக்குச் சென்று இந்த ரகப்படத்தை இயக்கினார். அடுத்து ஹாலிவுட்டுக்குத் திரும்பி 1947இல்

'சைனா டவுன் ' என்ற ஆஸ்கார் விருதுப் படத்தை இயக்கி உலக கவனத்தை ஈர்த்தார். 'தி டெனன்ட்' என்ற

அடுத்தப் படம் 1976இல் வெளியானது. இவ்வாறெல்லாம். சினிமா செய்திகளில் அடிப்பட்டுக்கொண்டிருந்த

பொலான்ஸ்கி 1977இல் இன்னொரு செய்தியிலும் அடிபாடலானார். ஹாலிவுட் பட வேலைகளின்போது

பதின்மூன்று வயதுமிக்க ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டார்.

அதனடிப்படையில் ஹாலிவுட் அரியாணையிலிருந்தும் புறந்தள்ளப் பட்டார். அங்கிருந்து வெளியேறி

ஏற்கனவே குடியுரிமைப் பெற்றிருந்த பிரான்சிற்குச் சென்று பாரிஸில் குடியேறினார். இரண்டாண்டுகள்

எந்தவொரு திரைப்பட பணியிலும் ஈடுபடாமல் இருந்து 1979இல் தாமஸ் ஹார்டியின் நாவலை தழுவி

மூன்றுமணி நேர 'டெஸ்' என்ற பெரும் பட்ஜெட் படத்தை எடுத்தார். இதுவும் கூட பொலான்ஸ்கிக்கு ஆஸ்கார்

அங்கீகாரத்தை அளித்தது. 'பைரேட்ஸ்' என்ற படம் 1986யிலும், ஹாரிசன் போர்டு நடித்த 'ப்ராண்டிக்' என்ற

திரில்லர் படம் 1988யிலும் செக்ஸ் திரில்லர் படமான 'பிட்டர் மூன்' 1992 யிலும் வெளியானது. பென்கிங்ஸ்லி

நடிக்க 1994இல் வெளியான 'டெத் அண்ட் தி மெய்டன்' மற்றும் 1999இல் வெளிவந்த 'கிலி ஏஞ்சல்' மற்றும் 'தி

நைன்த் கேட் ' ஆகிய படங்கள் பொலான்ஸ்கியின் மூன்றாவது மனைவியான இம்மானுவேல் சீக்னர் நடித்த

திரில்லர் படங்கள் என்பது குறிப்பிட்டுக் கூற வேண்டியவை யாகும்.

பொலான்ஸ்கியின் குழந்தைப் பருவ நாசி அடக்கு முறைச் சூழலை முன்னிருத்தி அந்தச் சூழலில்

உந்துதலைக் களமாய்க் கொண்டு 2002இல் இயக்கப்பட்ட 'தி பியானிஸ்ட்' மூன்று ஆஸ்கார் விருது

விருதினைப் பெற்றது. ஆஸ்கார் விருது அவர் படைப்பிற்குத்தானே தவிர அவருக்கு அல்ல என்பதை

உணர்த்தும் வகையில் சிறந்த இயக்குநருக்கான விருதினை அறிவிக்கையில் மேடையேறி பரிசினைப் பெற

பொலான்ஸ்கி மேடையேற முடியாத சூழலில் இருந்தார். காரணம் லாஸ் ஏஞ்செல்ஸைப் பொருத்தவரை

பொலான்ஸ்கி குற்றம் புரிந்து தப்பி ஓடியவரே . சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதைத் தழுவலுக்கான

விருதினை 'தி பியானிஸ்ட் ' பெற்றது.

நாசியின் யூத இனவெறியாட்ட கொடூரத்தைக் கண்ணுக்கு எதிரே பார்த்ததால் 'தி பியானிஸ்ட்' உருவாக,

இதனை இதோடு நிறுத்திக்கொள்ளாமல் தான் சின்னஞ்சிறு வயதில் உருண்டுப் புரண்ட வாழ்க்கைப்

போராட்டத்திற்கு இன்னும் கூடுதலாய் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில்

ஆங்கில இலக்கியங்களைப் படித்து தன் உள் ஆதங்கத்திற்கு இன்னொரு மருந்தாக சார்லஸ் டிக்கின்ஸின்

'ஆலிவர் டிவிஸ்ட்' என்ற காவியத்தை தன் வயப்படுத்தியுள்ளார் பொலான்ஸ்கி.


ரோமன் பொலான்ஸ்கியின் சமீபத்து படம் 'ஆலிவர் டிவிஸ்ட்' சார்லஸ் டிக்கின்ஸின் இந்தக் கதையே

இதுவரை பதினைந்து முறைக்கும் மேலாக டி.வி. சீரியலாகவும், திரைப்படமாகவும் எடுத்திருந்தும் ,

பொலான்ஸ்கி இதே கதையைத் திரும்பவும் எடுக்க முயன்றதன் காரணம் என்ன என்ற கேள்வி எழும் போது

அவர் ஏதோ அவரின் குழந்தைகளுக்காகத் தோன்றுகிறது. காரணம், இந்தக் கதையின் பின்னணி மற்றும்

இங்கிலாந்து நாட்டு வரலாறு அறியாத இன்றைய இளம் சந்ததியினர் இந்தக் கதையைப் பெரிதும்

விரும்புவர் என்பதே.

கதை நிகழும் காலம் 19ஆம் நூற்றாண்டு. பிழைப்பிற்காக லண்டன் வருபவர்கள் சந்தர்ப்ப சூழலால் எப்படித்

திருடர்களாக, போக்கிரிகளாக மாறிவிடுகிறார்கள் என்பது கதை.

கதை நாயகனான ஆலிவரின் ஒன்பதாம் வயது பிறந்த தினத்தில் ஒரு பணிக்கூடத்தில் கதை

ஆரம்பமாகிறது. போதிய உணவு அளிக்காததால் ஆலிவர் அங்கிருந்து வெளியேறுகிறான். கிட்டத்தட்ட

எழுவது கிலோ மீட்டர் தூரம் நடந்து லண்டன் நகரை அடைகிறான். அங்கே அவன் ஆர்ட்புல் டாட்ஜர்

என்பவரை சந்திக்கிறான் அவர் அவனை ஃபேகின் என்பவனிடம் அழைத்துச் செல்கிறார்.

ஃபேகினின் வேலை சிறுவர்களுக்கு பிக்பாக்கேட் அடிக்கக் கற்றுத் தருவது. ஃபேகினுக்கும் ஆலிவருக்குமிடையே ஆழமான நட்பு மலருகிறது. டெக்னிக்கலாகப் பார்க்கும்போது ஃபேகின் ஒரு கிரிமினலாக இருந்தாலும் இறுதியில் அந்தக் கதாபாத்திரத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படாத வகையில் செயல்பட்டுள்ளனர் கிங்ஸ்லியும் பொலான்ஸ்கியும். இந்தக் கதாபாத்திரத்தை ஒரு மனிதாபிமான கண் கொண்டுப் பார்த்திருக்கின்றனர். சிறுவர்களைச் சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படத் தூண்டினாலும், அதற்கு பயிற்சி அளித்தாலும், இவைகள் நமக்கு ஃபேகின் கதாபாத்திரத்தின் பால் ஏற்படுத்த வேண்டிய வெறுப்பை ஏற்படுத்தாது போகிறது. காரணம் வீதிகளில் கேட்பாரற்றுக் கிடக்கின்ற பிள்ளைகளை ஃபேகின் கையில் எடுக்காது விட்டிருந்தால் அவர்களின் முடிவு மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்திருக்கும். இந்த வகையிலாவது, இந்த ரீதியிலாவது ஃபேகின் கதாபாத்திரம் மனிதாபிமானத்துடன் செயல்படுவதை படம் உணர்த்துவதால் ஃபேகின் கதாபாத்திரம் தாழ்ந்துபோகாது உயர்ந்து போகிறது. ஃபேகின் மீது நமக்குப் பரிதாப உணர்வுதான் ஏற்படுகிறது.

சார்லஸ் டிக்கின்ஸின் கதாபாத்திரத்திற்கு என்று சில முத்திரைகள் உண்டு. அவரின் துணைப் பாத்திர படைப்புகள் எல்லாம் பளிச்சென பிரதான பாத்திரங்களைத் தாங்கிப் பிடிப்பதாக இருக்கும். ஆனால், பொலான்ஸ்கி உருவாக்கிய ஆலிவர் டிவிஸ்ட்டில் துணைக் கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் எதிர் பார்த்த அளவில் சோபிக்காது போயின.

ஷேக்ஸ்பியரின் 'மேகபத்' தைத் தழுவி படம் எடுத்த போதே பொலான்ஸ்கி பல்வேறு சர்ச்சைக்குள்ளானார். அதைப் போலவே இந்த ஆலிவர் டிவிஸ்ட்டிலும், இதுவரை இந்தத் திரைக்கதாசிரியர்களும் ஆலிவர் டிவிஸ்ட்டிற்குக் கொடுக்காத சில மெருகூட்டுதல் களை வலியக்கொடுத்து பொலான்ஸ்கி பொல்லாப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள்.

பொலான்ஸ்கியின் ஆலிவர் டிவிஸ்ட்டின் இன்னொரு சிறப்பம்சம் பென் கிங்ஸ்லியின் மேக்கப். வழுக்கைத் தலை, பற்கள் இவைகள் ஃபேகின் கதாபாத்திற்குப் பொருத்தமானவையாய் அமைந்து விட்டன. அதோடு மட்டுமின்றி 19ஆம் நூற்றாண்டின் லண்டன் வீதியை செக்கொஸ்லோவாகியாவின் தலைநகரான பிராக்கில் செட்போட்டு முழுக்க முழுக்க அங்கையே சூட்டிங் எடுத்திருப்பதும் படத்தின் தத்ரூபத்திற்கு எடுத்துக்காட்டு.

சார்லஸ் டிக்கின்ஸின் நாவல் பலராலும் படிக்கப்பட்ட ஒன்று. அதோட டிக்கின்ஸ் இதை எழுதிய போது இருந்த சமூக சூழல் வேறு. அவர் அந்தக் கால சூழலை மனதில் கொண்டு கதாபாத்திரத்திற்கு அவர் வழங்கிய முடிவுகளை இன்றைய சமூக யதார்த்ததோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இவைகளை எல்லாம் பொலான்ஸ்கியின் ஆலிவர் டிவிஸ்ட்டிக் ஈர்ப்பை குறைந்துவிட்டன.

ரோமன் பொலான்ஸ்கியின் திரைப்பட வரலாற்றைக் காண்கையில் மூன்றாம் உலக திரைப்பட ரசிகர்கள், ஏன் இவர் பெயரைக்கூரியதும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள் எனத் தெரிகிறது. இருந்தாலும், ஆலிவர் ட்விஸ்ட் மூலம் பொலான்ஸ்கி தன் இன்னொரு பரிணாமத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அது: பொலான்ஸ்கியின் ஒரு சில படங்களே குடும்பப் பாங்கான படங்கள். அவைகளில் ஆலிவர் டிவிஸ்ட்டும் ஒன்று.

நன்றி: திரை மாத இதழ்
(இக்கட்டுரை ஆவணப்படுத்தும் நோக்குடன் பதிவிடப்படுகிறதே அன்றி வேறு எந்த வியாபார நோக்கமும் அல்ல)