சார்பட்டா- பா. ரஞ்சித் பேசியதும் பேசாததும்

-அ. பகத்சிங்

பா.ரஞ்சித்தின் ”சார்பட்டா பரம்பரை” படம் வெளியாகி வரவேற்பு, அதீத வரவேற்பு, விமர்சனம், எதிர்ப்பு என பலவித கருத்து பரிமாற்றங்களை பார்க்க முடிகின்றது. ஒரு ”விளையாட்டை” மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெகுஜன சினிமா என்ற வகையில் மக்கள் வரவேற்பை பெற்றள்ளது எனலாம். ஒரு படமாக எடுக்கப்பட்ட விதம் குறித்து சினிமா வல்லுனர்கள் பலரும் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சினிமா என்பதற்கு அப்பால் ”மெட்ராஸ் பாக்சிங் பரம்பரைகள், எமர்ஜென்சி அரசியல், சமூக அரசியல்” என படத்தை பற்றி விவாதிக்க நிறைய இருக்கின்றது. பெரும்பாலான நண்பர்கள் தலித் அரசியல்-கலை-விளையாட்டு, எழுச்சி சார்ந்து இப்படத்தை அணுகுகிறார்கள். இப்பின்னணியில் சார்பட்டா பரம்பரை பற்றிய உண்மை வரலாற்று தேடலும், அதைப் படத்தில் வெளிப்படுத்திய விதம் பற்றிய விவாதமும் அவசியமான ஒன்றாகக் கருதுகிறேன்.


சார்பட்டா உண்மையில் யார் அடையாளம்??

சார்பெட்டா பெயருக்கான பொருளை அறிய பலரும் முற்படுகின்றனர். அதன் உண்மை பெயர் ”சதுர்சூரிய சார்பட்டா பரம்பரை”. அதாவது ”நான்கு திசைகளிலும் ஒளிபரப்பக்கூடிய சூரியக் குலமரபினர்” என்ற விளக்கத்தை புலவர் பா. வீரமணி அளிக்கின்றார். இது தவிர்த்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. அவை யாவும் பொருந்தக்கூடியதாக இல்லை எனலாம். இந்த குத்துச்சண்டை பாரம்பரியம் 1920கள் தொடங்கி 1980கள் வரை மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. இன்று சினிமாவிற்கு இருக்கும் அதே பிரபல்யயம் அன்று பாக்ஸிங் போட்டிகளுக்கு இருந்துள்ளது. அன்றைய மெட்ராசின் உழைக்கும் மக்கள் யாவரும் இதில் பங்கேற்றுள்ளனர். பட்டினவர்(மீனவர்), பறையர், வன்னியர், முதலியார், நாடார், இஸ்லாமியர் என பல சமுதாயத்தவர்களும் பங்காற்றியுள்ளனர். மெட்ராஸ் குத்துச்சண்டை களத்தில் கோலோச்சிய பரம்பரைகள் எதுவும் குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவையல்ல. பல்வேறு சமுதாயத்தினரும் இணைந்தே பயிற்சி எடுத்துள்ளனர்.  சார்பட்டா பரம்பரையிலும் பல சமுதாயத்தைச் சார்ந்த வீரர்கள் இருந்தாலும், வீழ்த்த முடியாத வீரர்களாக நீண்டகாலம் களத்தில் நின்றவர்கள் பெரும்பாலும் மீனவர்கள் தான். சார்பட்டா பரம்பரையின் மையம் இராயபுரம், பனைமரத்தொட்டி பகுதிதான். இன்றும் சென்னை பாக்சிங் வட்டாரத்தில் சார்பட்டா என்றால் அது மீனவர்களின் கோதா என்ற கருத்து பரவலாக கேட்க முடியும்.   மெட்ராஸ் பாக்ஸிங் களத்தில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியர் ஆங்கிலோ இந்திய வீரரான நாட் டெர்ரி. ஆப்ரோ-ஆங்கிலோ இந்திய கலப்பினத்தவறான டெர்ரி ஸ்டைல், கால் அசைவு (footwork), நுணுக்கம் ஆகியவற்றில் பெயர் பெற்றவர். டெர்ரியை முதன்முதலில் வீழ்த்தியவர் கித்தேரி முத்து எனும் மீனவர்தான். ஆங்கிலோ இந்திய குத்துச்சண்டை வீரரான நாட்டெர்ரியுடன் நடந்த போட்டியில் மேடையிலேயே அருணாச்சலம் அவர்கள் உயிரிழந்தார். அவரது வீர மரணத்திற்கு இரண்டு மாதங்கள் கழித்து டெர்ரியை கித்தேரி முத்து வீழ்த்தினார். இந்த போட்டிக்கு பிறகுதான் கித்தேரி முத்து மிகப் பிரபலம் அடைந்தார். 

 நாற்பதுகளில் தொடங்கி ஐம்பதுகள் வரை கித்தேரி முத்து வீழ்த்தப்படாத வீரராக இருந்துள்ளார். சார்பட்டா பரம்பரையின் புகழைத் தூக்கி நிறுத்தி பரவலாக அறியப்பட்டவராக கித்தேரி முத்து இருந்துள்ளார். அவரது குத்துசண்டை திறனை பாராட்டி ஆல்பர்ட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ”திராவிட வீரன்” என்ற பட்டத்தை (1946) தந்தை பெரியார் அவருக்கு சூட்டினார். அண்ணாத்துரை அவர்கள் கித்தேரி முத்துவை வாழ்த்திப் பேசினார். திராவிட இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் எம்.ஆர்.இராதா, பாரதிதாசன் போன்றவர்கள் கித்தேரி முத்துவை நேரில் வந்து சந்திப்பார்களாம். இருவரும் குத்துச்சண்டை ரசிகர்கள் என்பதால் கித்தேரி முத்துவிடம் நல்ல நட்பினை கொண்டிருந்தனர் என்ற தகவலை புலவர் பா. வீரமணி அவர்கள் பதிவு செய்திருக்கிறார். 


கித்தேரி முத்துவுக்கு பிறகு மீண்டும் டெர்ரியை வீழ்த்தியது ஜென்டில்மேன் பாக்ஸர் என்று பெயர் பெற்ற ”டாமிகன்னர்” சுந்தர்ராஜன் அவர்கள். டாமிகன் என்பது இயந்திர துப்பாக்கி வருவதற்கு முன்பு இருந்த கைதுப்பாக்கி வகை. சுந்தரராஜன் அவர்களின் குத்துகள் டாமிகன்னில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைப் போல் வேகமாக வரும் என்பதால் அப்பெயரை அவருக்கு சூட்டியுள்ளனர். இன்றைக்கு வடசென்னை பகுதியில் இருந்து குத்துச்சண்டை விளையாட்டு மூலம் அரசு வேலைகளில் பணிபுரியும் பலருக்கும் குத்துச்சண்டை கற்க தூண்டுகோலாக இருந்தவர் சுந்தரராஜன் அவர்கள் என்றால் மிகையல்ல. அவரது சந்ததியினர் இப்போதும் ராயபுரம் பகுதியில் குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகின்றனர். அதே போன்று கித்தேரி முத்து அவர்களின் மகன்கள் அன்பு முத்து, அருமை முத்து ஆகியோர் காசிமேடு ஜீவா நகர் பகுதியில் boxing club வைத்திருந்தனர். தற்போது அவரது பேரன் ஸ்டீபன் கித்தேரி முத்துவின் பெயரிலேயே இலவச பாக்ஸிங் பயிற்சி அளித்து வருகின்றார். 

  

 சார்பட்டா பரம்பரையில் புகழ்பெற்ற மற்றொரு பாக்சர் ஆறுமுகம் அவர்கள். தான் பங்கேற்ற 120 போட்டிகளில் 100 போட்டிகளில் நாக்அவுட் செய்து சாதனை படைத்தவர். இவரைத் தொடர்ந்து பாக்சர் வடிவேல், செல்வராஜ் என சார்பெட்டா பரம்பரையில் பங்களிப்பு செலுத்திய மீனவர்களின் பட்டியல் மிக நீளமானது எனலாம். உலக குத்துச்சண்டை வீரர் முகமது அலி சென்னை வந்தபோது, நேரு ஸ்டேடியத்தில் நடந்த காட்சி போட்டியில் அவருடன் மேடை ஏறி சண்டையிட்டவரும் பனைமரத்தொட்டியை சார்ந்த பாக்ஸர் பாபு என்ற மீனவர்தான்.

மீனவர்களை தவிர்த்து பிற சமுதாயத்தினரும் சார்பட்டா பரம்பரையில் பங்களித்துள்ளனர். அதில் அருணாச்சலம், அந்தோணி ஜோசப் ஆகியோர் முதன்மையானவர்கள். அருணாச்சலம் கித்தேரி முத்துவின் சமகாலத்தவர். அவருக்கு அந்தோணி ஜோசப், மாசி, ஜெயவேல், டி.ஜி. தியாகராஜன் போன்ற பலரும் பங்களிப்பு செலுத்தியுள்ளனர். இப்போதும் ராயபுரம், சென்னை துறைமுகம் சுற்றியுள்ள பகுதி சேர்ந்த பெரியவர்கள் பலரும் பாக்சர் அருணாச்சலம் அவர்களைப் பற்றி பேசக் கேட்கலாம். ராயபுரம் பனைமரத்தொட்டியில் தொடங்கிய பரம்பரை திருவொற்றியூர், எண்ணூர் மீஞ்சூர், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, கவாங்கரை என சென்னையை சுற்றி பல இடங்களுக்கு பரவியுள்ளன.  


படத்தில்…
இப்படி சார்பட்டா பரம்பரை மீனவர்களின் அடையாளமாக இருக்கையில், அப்பெயரிலேயே வரும் படத்தில் ஏன் முறையாக பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பானது, நியாயமானது அல்லவா?? 

ரங்கன் வாத்தியாரை தணிகா சிறுமைபடுத்தும் போது,

”வாத்தியார் எப்பேர்பட்ட ஆளு தெரியுமா. டெர்ரியையே நாக்அவுட் பண்ணி பரம்பரை மானத்தை காப்பாத்துனாரு” என்று கபிலன் தனது வாத்தியார் ரங்கனின் பெருமையைச் சொல்லி பொங்கி எழுவார். உண்மை வரலாற்றில் டெர்ரியை வீழ்த்தியது ராயபுரத்தைச் சார்ந்த கித்தேரி முத்து எனும் போது அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன??     மற்றொரு காட்சியில் வரும் பெயர் பலகையில்

”சார்பட்டா பரம்பரை-வாத்தியார் திராவிட வீரன் வியாசார்பாடி ரங்கன்என எழுதப்பட்டு இருக்கும். கித்தேரி முத்துவின் அடையாளமான

”திராவிட வீரன என்ற பட்டத்தை படத்தில் குறிப்பிட்டு இருக்கும் போது, ”இராயபுரம்” என்று குறிப்பிடாமல் ”வியாசார்பாடி“ என்று குறிப்பிட வேண்டிய காரணம் என்ன? இராயபுரம் என்று சொன்னால் அது மீனவரை குறிக்கும் என்பதாலா?? சார்பெட்டா பரம்பரை செயல்பட்ட காலம் முதல் அதில் முக்கிய பங்களிப்பு செலுத்திய மீனவர்களை அடையாளமற்று விலக்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன? படத்தில் வரும் பீடி ராயப்பன் கதாபாத்திரம் கூட சார்பட்டா பரம்பரைக்கு தொடர்பே இல்லாமல் ஏதோ கடலிலேயே வாழ்பவர் போல காட்டியுள்ளனர். அவரை சார்பட்டா பரம்பரையோடு இணைக்கவில்லை. அக்கதாபாத்திரத்தில் நடித்த பாக்ஸர் கஜேந்திரன் அவர்களே ஒரு இணையதளப் பேட்டியில், ”சார்பட்டா பரம்பரை என்றாலே அது மீனவர் தான்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர்தான் சார்பட்டா படத்திற்கு பாக்ஸிக் தொடர்பான நுணுக்கங்களோடு காட்சிகள் அமைக்க உதவியவர்.


நாயகனுக்கு எதிர் போட்டியாளராக இருக்கும் ”இடியப்ப பரம்பரையின்” உண்மை பெயர் ”இடியப்ப நாயக்கர் பரம்பரை”. மற்றொரு புகழ்பெற்ற பரம்பரை ”எல்லப்பச்செட்டி பரம்பரை”. சினிமா வெகுஜன ஊடகம் என்பதால் எதிர்வரும் பிரச்சனைகளை தவிர்க்க சாதி பெயர்களை படத்தில் தவிர்த்திருக்கிறார்கள் என்று புரிந்துகொள்வோம். மறுபுறம், கதாநாயகன் கபிலனின் சாதிய பின்புலத்தை மட்டும் சரியாக அடையாளப்படுத்த தவறவில்லை. தலித் மக்கள் சார்ந்த கதை சொல்லல்தான் பா.ரஞ்சித்தின் பாணி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக கபிலனின் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற இயக்குநரின் மெனக்கெடல் ஏற்புடையது. அது அவருடைய இலக்கு. ஆனால், புறந்தள்ளப்பட்ட இனத்தின் சாதனை வரலாற்றை தெரிந்தே மறைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். அதை முறையாக பதிவு செய்வதின் மூலம் இயக்குநர் அரசியல் ரீதியாக எதை இழந்துவிடப் போகிறார். அரசியல் பிரதிநிதித்துவம், சமூக அரசியல் அணித்திரட்டல், கலை-இலக்கிய செயல்பாடுகள், கல்வி என அனைத்திலும் பின்தங்கி இருக்கும் ஒரு மீனவ சமூகத்தின் அடையாளத்தை திரிக்கவோ? புறக்கணிக்கவோ வேண்டிய அவசியம் என்ன? ரங்கன் கதாபாத்திரத்தை மீனவராக அடையாளப்படுத்துவதன் மூலம் படத்தின் கதைக்களம் இன்னும் ஈர்ப்புடையதாக மாறியிருக்கும். சமூக-அரசியல் ரீதியாகவும் இயல்பாக சகோதரத்துவத்தை வலியுறுத்தும் படைப்பாக அமைந்திருக்கும். இவ்வளவு சர்சைகளுக்கு மத்தியிலும் சார்பட்டா பரம்பரை படத்தை மீனவர்கள் கொண்டாடவே செய்கின்றனர். இன்னும் அதிக வரவேற்பையும் பெறுகிறது.விமர்சனத்திற்கு பிறகான எதிர்வினைகள்

”ஒரு பொழுபோக்கு சினிமாவுக்கு இவ்வளவு பெரிய விமர்சனம் அவசியமா?
”ரஞ்சித் எடுத்துள்ளது படம். வரலாற்று ஆவணம் அல்ல”
“நீங்கள் விரும்பும் படி வேண்டுமானால், நீங்கள்தான் பணம் போட்டு படம் எடுக்க வேண்டும்”
”இது ரஞ்சித் மீதான காழ்ப்புணர்வு! வன்மம்? ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒருவரின் வெற்றி பொறுத்துக்கொள்ள முடியாத எரிச்சல்”

”உங்களைவிட படக்குழுவினருக்கு நிறைய தெரியும்இப்படியான எதிர்வினைகள் ஏராளம். இந்த எதிர்வினைகளின் உச்சம் எதுவென்றால் ”கவுண்டர் சினிமா, தேவர் சினிமா வந்த போதெல்லாம் விமர்சிக்காத நீங்கள், தலித் சினிமா வரும் போதுதான் கண் விழித்தீர்களா” என்பது போன்ற கேள்விகள்.   இவை அனைத்திற்கும் விரிவான பதிலை அளிக்க முடியும். பாவம் திறந்த மனதோடு உரையாடும் மனநிலையில் அவர்கள் யாரும் இல்லை. இது வரையிலான வரலாற்றை எதிர் விமர்சனம் என்ற ஆயுதம் கொண்டு மறைக்கப்பட்ட தங்கள் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ததின் மூலம் தனக்கான அரசியலை நிறுவிக்கொண்டதுதான் தலித் அரசியல். இப்படி ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்த்தெழுந்த பாரம்பரியத்தின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் பா.ரஞ்சித் இன்னொரு புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தின் வரலாற்றை மறைப்பது அரசியல் அறமல்ல. இதுவரையிலான தமிழ் சினிமாவை விமர்சித்தே ரஞ்சித் தனது கலைபயணத்தை நிறுவியுள்ளார். சென்னை மக்கள் ரவுடிகள் அல்ல என்பதையும், அவர்களின் வாழ்வியலைப் படமாக்குவதே தனது இலக்கு என்று தொடர்ந்து பேசிவருகின்றார். சென்னையின் மக்களான தலித்துகளைப் போலவே மீனவர் மீதான தப்பெண்ணமும் தொடர்கிறது. அதை மாற்ற கிடைத்த வாய்ப்பை ரஞ்சித் பயன்படுத்தவில்லை என்பதே எனது ஆதங்கம். விமர்சனத்தில் உள்ள நியாயத்தை உணராமல் சமூக-அரசியல்-இலக்கிய களத்தில் இருக்கும் சில நண்பர்களே கண்மூடித்தனமாக ”விடலைப் பருவ சினிமா ரசிகர்கள்” போல் பேசிவருவது நகைப்புக்குரியது. இதே கதைக் களத்தைக் கொண்டு வெளிவந்த “வடசென்னை” படத்தை வடசென்னை சார்ந்த பல எழுத்தாளர்களும், மீனவ பிரதிநிதிகளும், கள செயல்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சித்தனர். நானும் விமர்சித்து நீண்ட கட்டுரை ஒன்றை ”கருப்பர் கூட்டம்” இணையத்தில் பதிவு செய்தேன். அன்று இயக்குநர் வெற்றிமாறனை, ”இனிமே வடசென்னை பற்றி படமே எடுக்காதீங்க” என்று விமர்சித்து பேசிய பலரும், இன்று ரஞ்சித்தின் சார்பட்டாவை விமர்சனமின்றி ஆதரிக்கின்றனர். மொத்தத்தில் இவர்கள் எந்தவொரு கருத்தையும் நபரை வைத்தே முன்வைக்கிறார்கள், படைப்பை வைத்து அல்ல என்பது தெளிவாகின்றது.


வடசென்னை படத்திற்கு எதிராக மீனவர்கள் கண்டனக்குரல் எழுப்பிய மறுநாளே வெற்றிமாறன் விளக்கம் அளித்ததோடு, சில காட்சிகளையும் நீக்கினார். வெறும் சினிமாக்காரரான வெற்றிமாறன் தன் சமூகப்பொறுப்பை வெளிபடுத்தினார். தற்போது கித்தேரி முத்துவின் பேரன்கள் யூடியூபில் அளித்த பேட்டியில் ”எங்கள் தாத்தாவின் வரலாற்றை மறைத்தது பற்றி வருத்தம் இருந்தாலும், பாக்ஸிங்கின் முக்கியத்துவத்தைப் பேசியதால் படத்தைக் கொண்டாடவே செய்கிறோம். ரங்கன் கதாபாத்திரம் பற்றிய சர்ச்சையை விளக்கும் வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர். சகோதரத்துவத்துடன் முன்வைக்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை சமூக செயல்பாட்டளராகவும் இயங்கும் பா.ரஞ்சித் அவர்களுக்கு உள்ளது.