திரைக்கதை – புலப்படாத எழுத்து : ப்ரைன் மெக்டொனால்ட்
- by தமிழில்-தீஷா
- 01 October 2020
தமிழில்: தீஷா
மற்றும் இதன் காரணமாக,
இதுதான், இப்போது உங்கள் இரண்டாவது ஆக்ட். நீங்கள் திரைச்சீலையை முதன்முதலில் இறக்கும்பொழுது, அதுவே உங்கள் முதல் ஆக்டின் முடிவு எனக்கொள்ளலாம். சரி, முதல் ஆக்ட் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. எனில், இப்போது நாம் இரண்டாவது ஆக்டில் என்ன பார்க்கப்போகிறோம்? இந்த இரண்டாவது ஆக்ட் என்பது, உங்கள் முதல் ஆக்டின் விளைவாக என்ன நடக்கிறது? என்பதை ஆராய்வதற்கான நேரம் – எல்லாமே காரணம் – மற்றும் – விளைவு (cause-and-effect) என்பதன் அடிப்படையில் இயங்க வேண்டும்.
இதை நாம் ஒரு எளிய உதாரணத்தின் மூலமாகப் பார்க்கலாம். முதல் ஆக்டின் முடிவில், உங்கள் கதாபாத்திரத்திற்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது என்றால், இந்த இரண்டாவது ஆக்டில், அவர் அந்த புற்றுநோயை எவ்விதம் எதிர்கொண்டார் என்பதும், அல்லது அக்குடும்பம் அவரின் புற்றுநோயை எவ்விதம் கையாளுகிறார்கள் என்பது பற்றியதாக அமையும். அவர்கள், அந்நபருக்குப் புற்றுநோய் இல்லை என்று நம்ப மறுக்கிறார்களா? அல்லது அந்நபரைக் கைவிட்டு, படுக்கையில் கிடத்தி, அவரின் இறப்பிற்காகக் காத்திருக்கிறார்களா? அல்லது அவர்கள் அதை எதிர்த்துப் போராடுகிறார்களா? வாழ்க்கையில், அவர் இன்னும் கூடுதலாக சில நாட்கள் வாழவேண்டி, அதற்கான முயற்சிகளைச் செய்கிறார்களா? அவர் இதுவரை எம்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்று கேள்வியெழுப்பி, இறப்பதற்குமுன் உபயோகமான வாழ்வை வாழவேண்டும் என்றெண்ணி அதற்கான வேலைகளைச் செய்கிறார்களா? இறப்பதற்கு முன் அவருக்குள்ள ஆசைகளைப் பூர்த்திசெய்ய நினைக்கிறார்களா? இதையெல்லாம் இரண்டாவது ஆக்டில் பார்க்கலாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்நபரோ, அவரைச் சுற்றியுள்ளவர்களோ எவ்விதமான எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதுதான் இரண்டாவது ஆக்டின் களம்.
கதாபாத்திரம் என்ன செய்தாலும், அது முதல் ஆக்டின் திரைச்சீலை விழுந்த சம்பவத்திற்கான எதிர்வினையாகவே இருக்க வேண்டும்.
இதன் காரணமாக,
இந்த இரண்டாம் ஆக்ட், பெரும்பாலும் மிக நீண்ட கால அளவு கொண்டதாகவே இருக்கும், இது உங்கள் கதையின் உடலைப் போன்றது. 120 பக்கங்கள் கொண்ட ஒரு திரைக்கதையை மூன்று ஆக்ட் என்று பிரித்தால், முதல் மற்றும் மூன்றாவது ஆக்ட், தலா முப்பது முப்பது பக்கங்கள் என அறுபது பக்கங்களை எடுத்துக்கொள்ளும், ஆனால், அதுவே இரண்டாவது பக்கம் மட்டுமே தனியாக அறுபது பக்கங்களை எடுத்துக்கொள்கிறது. இந்த இரண்டாவது ஆக்ட், கதையில் மற்ற ஆக்ட்-களோடு ஒப்பிட பெரியதாக உள்ளது.
இங்கு ‘இதன் காரணமாக’ எனும் குறிப்பு, இரண்டு முறை வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஏனெனில், இந்த இரண்டாம் ஆக்ட், பெரியளவிலானது என்பதால், இந்த ஆக்ட் பொதுவாக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இந்த பிளவை ஃபுல்க்ரம் (ஆதாரமுனை) என்று அழைக்க விரும்புகிறேன். ஏனெனில், இந்த இரண்டாம் செயல் மிக நீளமாக இருப்பதால், பார்வையாளர்களின் கவனத்தை முழுதுமாக இந்த இரண்டாம் செயலுக்குள் தக்கவைத்திருப்பதும், தொடர்ந்து அவர்களைக் கதைக்குள் இருத்தி வைத்திருப்பதும் கடினம். இந்த இரண்டாம் ஆக்டின் நீளம் காரணமாக, பார்வையாளர்களை கதைக்குள் மூழ்கடிப்பது சிக்கலாக உள்ளது. எனவேதான், இந்த இரண்டாம் ஆக்டினை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறோம்.
பில்லி வைல்டரின் செவ்வியல் திரைப்படமான, டபுள் இண்டெம்னிட்டியில் (Double Indemnity), ஒரு பெண்ணும், அவள் காதலனும் இணைந்து, அந்தப் பெண்ணின் கணவனை, அவனது காப்பீட்டுத் தொகையை அபகரிக்க வேண்டி கொல்லத் திட்டமிடுகின்றனர். இரண்டாம் ஆக்டின் முதல் பாதியில், அக்கணவனை எப்படிக் கொலைசெய்யலாம் என்று திட்டமிடுகிறார்கள். ஃபுல்க்ரமில், அவர்கள் தங்கள் கொலைத்திட்டத்தினை நிறைவேற்றுகிறார்கள், எனவே இப்போது இரண்டாம் ஆக்டின், இரண்டாம் பாதி ”அவர்கள் அந்தக் கொலைக் குற்றத்திலிருந்து தப்பிப்பார்களா?” என்பதில் கவனம் செலுத்துகிறது. இப்படியாகத்தான் இரண்டாம் ஆக்ட், இரண்டு பாதியாகப் பிரிக்கப்படுகிறது. இது சுவாரஸ்யமான கதை சொல்லலுக்கு வழிவகுக்கக்கூடிய காரணியாக அமைகிறது.
புற்றுநோய் கண்டறியப்பட்ட நம் முந்தைய கதாபாத்திரத்திற்குத் திரும்புவோம். அவர் புற்றுநோய் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டவுடன், வாழ்க்கையின் பிடிப்புகளிலிருந்து விலகி, அவரைப் பராமரிப்பவர்களையே கூட அந்நியப்படுத்தத் துவங்குகிறார், சிகிச்சைகளைப் புறக்கணிக்கிறார் என்று சொல்லலாம். இந்த ஃபுல்க்ரம் புள்ளியில் ஏதோ ஒரு சம்பவம் நடக்கிறது, அது அவரிடத்தில் தொடர்ந்து வாழ்வதற்கான ஆசையை மனதில் வரவழைக்கிறது. இந்த புற்றுநோய் குணப்படுத்த முடியாது என்ற நிலையிலிருந்து பின்வாங்கி, அதைக் குணப்படுத்தத் தேவையான சிகிச்சை முறைகளை ஆராயத் துவங்குகிறார்.
இறுதியாக…
இது உங்கள் மூன்றாவது ஆக்ட். மூன்றாவது ஆக்டிற்கான திரைச்சீலை “மேலே செல்லும்” தருணம்தான், கதை முடிவை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக அமைகிறது. உதாரணத்திற்கு, காவலர்களை மையப்படுத்திய கதையில், இது பெரியதொரு மர்ம முடிச்சினை அவிழ்க்கக் கிடைக்கும் துருப்புச் சீட்டாக இருக்கலாம், மேலும் இது துப்பறியும் நபரை கொலையாளியின் பாதைக்கு இட்டுச்செல்கிறது. இந்த நிகழ்வு, அது எதுவாக இருந்தாலும், உங்கள் கதையின் க்ளைமாக்ஸிற்கு வழிவகுக்கும் சங்கிலித்தொடர் சம்பவங்களின் ஆரம்பமாக அமைகிறது.
நாம் இதற்குமுன் பார்த்த உதாரணத்தையே இங்கும் எடுத்துக்கொள்ளலாம், புற்றுநோய் நோயாளி பலகட்ட போராட்டத்துக்குப் பின், இந்த நோயின் தீவிரத்தை தவிர்க்கமுடியாது என்பதோடு சமாதானம் செய்து, வரவிருக்கும் மரணத்தை ஏற்றுக்கொள்கிறார். ஒருவேளை அவர் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தவறவிட்ட தருணங்களை மீட்க முடிவெடுத்து, தனது நோய்க்கான மழுப்பலான சிகிச்சையைத் தேடுவதற்குப் பதிலாக, தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் நேரத்தைச் செலவிடத் துவங்குகிறார்.
அன்றிலிருந்து…
ஒன்று அல்லது இரு குறுகிய காட்சிகளுடன் உங்கள் க்ளைமேக்ஸைப் பின்தொடர்வது, படத்தின் கடைசி நிலை என்றழைக்கப்படுகிறது. ”இதற்குப் பிறகு அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்” இதுதான் காலங்காலமாக பழக்கத்தில் இருக்கிற படத்தின் கடைசி பிம்பம். உங்கள் க்ளைமேக்ஸைப் பின்தொடரும் செயலை நீங்கள் அதிகம் நீட்டிக்கக்கூடாது, இதற்குப் பிறகு உங்கள் கதாநாயகனின் வாழ்க்கை, பயணம் எப்படி அமையப்போகிறது என்பதை மட்டும் பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்தினால் போதும்.
நமது துரதிருஷ்டவசமான புற்றுநோய் நோயாளியின் விஷயத்தில், அவர் பிழைக்கப்போவதில்லை; ஆனால் மரணத்தை எதிர்கொள்ளும் அவரது முகத்திலுள்ள தைரியம், உயிர் பிழைத்தவர்களின் மத்தியில் எவ்வாறு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இங்கே காணலாம். (அல்லது) ஒருவேளை அவர் கலையின் மூலம் எவ்வாறு தொடர்ந்து வாழ்கிறார் என்பதைக் காட்சிப்படுத்தலாம். அல்லது இந்த மரணம் மற்றவர்களிடையே இருந்த பழைய போட்டிகளை முடிவுக்குக் கொண்டுவந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களை அன்போடு நடத்துவதைக் காட்டும்.
இத்தொடரைத் தொடர்ந்து படித்து வருகிற உங்களுக்கு ஒரு பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. அதாவது, இப்போது நீங்கள் செய்யவேண்டியது, இந்த ஒவ்வொரு படிகளையும் எழுதி, அதைத் தொடர்ந்து ஒரு வெற்றிடம் கொடுங்கள். மேலும், இந்த படிகளைப் பயன்படுத்தி, சில எளிமையான கதைகளை எழுத வேண்டும். கவனத்தில் கொள்ளுங்கள். முடிந்தவரை அவற்றை மிக எளிமையாக எழுதப் பழகுங்கள்.
இந்தப் பயிற்சிக்குப் பிறகு, நீங்கள் பார்ப்பது என்னவென்றால், நீங்கள் எழுதியது ஒரு கதையாக இருப்பதுபோல உணர்கிறீர்கள், ஆனால், அந்தக் கதைகளில் ஏதோவொரு குறை இருப்பதாகவும் உங்களுக்குத் தோன்றுகிறது. சில காரணங்களால் அந்தக் கதை ஆழமற்றிருக்கிறது. அந்தக் கதைகள் எளிதில் மறக்கப்பட்டுவிடும். இதைச் சரிசெய்வது மிக எளிது; இதைச் செய்வதற்கு உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு விஷயம் மட்டுமே! அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
-தொடரும்.