திரைக்கதை எழுதும் கலை - 1 - பிரைன் மெக்டொனால்ட்

Act-1-ல் துப்பாக்கியை வைத்தால், அதை நீங்கள் Act-3 ல் பயன்படுத்தியே ஆகவேண்டும்  
  • ஆண்டன் செகாவ்

மூன்றாவது Act-ல் ஏதாவது தவறுகள் நிகழ்ந்திருப்பின் அது உண்மையில் முதல் Act-ல் நிகழ்ந்ததே.
  • பில்லி வைல்டர்புலப்படாத எழுத்து (Invisible Ink) என்றால் என்ன?

என் நண்பனொருவன் மனிதகுல வரலாறு வகுப்பு எடுக்கும்பொழுது கேட்ட கதை:

மிகக்குறைந்த அல்லது முற்றிலும் நாகரீக உலகின் எந்தச் சுவடும் இல்லாத பழங்குடியின மக்களோடு மனிதகுல வரலாற்றாசிரியர் ஒருவரும் தங்கியிருந்தார். அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்த மக்களைப் பற்றியும் அவர்களின் வியக்கத்தகு தொழில் நுணுக்கத்தையும், அவர்கள் கடைப்பிடிக்கிற விஞ்ஞானத்தைப் பற்றியும் பிறரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்பினார். எனவே குறிப்புகள் எடுத்துக்கொண்டதோடு, அந்தக் குழுவின் தலைவரையும், அவரது மனைவியையும் தனது கேமராவில் புகைப்படம் எடுத்தார். பின்னர் சில நாட்கள் கழித்து தலைவரிடம் முழுவடிவம் பெற்ற அந்தப் புகைப்படங்களைக் காண்பித்தார். ஆனால், ஒரு காகிதத்தில் கறுப்பு, வெள்ளை, சாம்பல் வண்ணங்களில் திட்டுத் திட்டாக இருப்பதை அவரால் உள்வாங்கிக்கொள்ள முடிந்ததேயன்றி, அதற்குள் இருக்கும் தனது முகத்தை கண்டுபிடிக்கத் தெரியவில்லை. இருபரிமாண பிம்பத்தை, முப்பரிமாண பிம்ப அமைப்பாக மாற்றி ஏற்றுக்கொள்வதை அவர் எங்குமே கற்றிருக்கவில்லை. ஆனால், அவரே எப்படியாயினும் பத்தை பத்தையாக இருந்த புற்களைப் பார்த்து என்ன விலங்கு இது, குறுக்கு மறுக்காக இப்படி ஓடுகிறதே! என்றார். ஏன், நீங்களும் நானுமே கூட எத்தனை ஆண்டுகளுக்கு முன்பிருந்து புகைப்படங்களைப் பார்த்து அதில் தங்களை அடையாளங்கண்டு ஏற்றுக்கொள்கிற பக்குவத்தை எந்தவித இடர்ப்பாடும் இல்லாமல் அடைந்தோம்? என்பதை யோசித்துப் பாருங்கள். இப்போது, புகைப்படம் எடுத்து தான் எப்படி இருக்கிறோம் என்று பார்த்துக்கொள்வதில் நமக்கு எவ்வித சிரமங்களும் இருப்பதில்லை. 

கதையின் கட்டுமான அமைப்புமே கூட இதன்படிதான் வேலை செய்கிறது. எதைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்குமேயானால், உங்களால் அதை எளிமையாகவே பார்க்க முடியும். அது தெரியாதவர்களுக்கு கண்களுக்குப் புலப்படாமல் மறைந்துபோகிறது. 

மக்கள் கதைகளை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்று நான் அடிக்கடி கேட்கும்பொழுது, அவர்கள் உரையாடலைப் (வசனங்களை) பற்றிப் பேசுவதைக் கவனிக்கிறேன். ஒரு படத்திற்கான “ஸ்கிரிப்ட்” பற்றிப் பேசும்பொழுது, அவர்கள் பெரும்பாலும் அதில் இடம்பெற்றிருக்கிற உரையாடல் பகுதிகளைப் பற்றித்தான் பேசுகிறார்கள். அல்லது ஒரு புத்தகம் எவ்வளவு நன்றாக எழுதப்பட்டுள்ளது என்பதை அவர்கள் குறிப்பிடும்பொழுது, அதில் சொற்கள் எவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது, புத்தகத்தின் சொற்பிரயோகங்கள் எப்படியிருக்கின்றன – ஒரு வாக்கியத்தின் அழகு எப்படியுள்ளது, என அதைக்குறித்துதான் பேசுகிறார்கள். உதாரணமாக, ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களைப் பற்றி மக்கள் பேசும்பொழுது, அவர்கள் எப்போதும் அந்த மொழியின் அழகைப் பற்றித்தான் பேசுவார்கள். 

இவையனைத்தும் “புலப்படும் மை” வடிவங்கள். புலப்படும் மை அதாவது visible ink என்பது வாசகரால் அல்லது பார்வையாளரால் உடனடியாகக் “கண்டுணரக்” கூடிய எழுத்தைக் குறிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்த புலப்படும் மை அடையாளப்படுத்துகிற விஷயங்கள் குறித்து எவர் வேண்டுமானாலும் எளிதாகப் பேசிவிடலாம். ஒரு திரைப்படம் பார்த்து முடித்தபின் அந்தப் படத்தில் வருகிற வசனங்களைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். எனவே, இதுதான் புலப்படும் மை. ஆனால், கதைசொல்லி செய்யும் ஒரே வெளிப்படையான எழுத்து, என்று அவர்கள் பெரும்பாலும் பக்கத்தில் உள்ள இந்த வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். 
ஆனால், ஒரு கதையில், நிகழ்வுகள் எவ்வாறு வரிசைப்படுத்தப்படுகின்றன என்பதும் எழுத்துதான். கதை சொல்பவரின் கருத்தை வெளிப்படுத்த, அதைச் சரியாக வாசகர்களுக்குக் கடத்த ஒரு கதையில் என்ன நிகழ்வுகள் ஏற்பட வேண்டும் என்பதும் எழுத்துதான். கதையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் மட்டும் ஏன் தனக்கென ஒரு தனித்துவமான பாதையில் நடக்கிறது என்பதும் எழுத்துதான். 

ஆனால், இவற்றைக் குறித்தெல்லாம் ஒரு மேம்போக்கான வாசகரோ, பார்வையாளரோ எளிதாக அடையாளங்கண்டு சொல்லிவிட முடியாது. எனவே, இது ”கண்ணுக்குத் தெரியாத எழுத்து/மை, அல்லது புலப்படாத மை (Invisible Ink)” என்றழைக்கப்படுகிறது. மீண்டும் சொல்கிறோம், கதையில் உள்ள இந்த விஷயங்களையெல்லாம் வாசகர், பார்வையாளர் அல்லது கேட்பவர், எளிதில் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் அவை “புலப்படாத எழுத்து” எனப்படுகிறது. ஆனால், கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், இந்தப் புலப்படாத எழுத்துதான், ஒரு கதையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால், அது அதற்குள் ஒரு கதையைக் கொண்டிருக்கிறது. புலப்படாத எழுத்து என்பது சொற்களின் மேற்பரப்பிற்குக் கீழே ஒரு அடுக்கில் எழுதுவது. பெரும்பாலான மக்கள் அதை ஒருபோதும் பார்க்க மாட்டார்கள், கவனிக்க மாட்டார்கள், ஆனால் அதை அவர்கள் உணர்வார்கள். நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுட்பத்தைக் கற்றுக்கொண்டுவிட்டால், உங்கள் வேலைப்பாடுகள் மெருகூற்றப்பட்டது போன்று தோன்றச்செய்யும், தொழில்முறை ரீதியான வெளிப்பாடு உங்கள் வேலைப்பாடுகளுக்குக் கிடைக்கும், மேலும் இது உங்கள் பார்வையாளர்களிடத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

உண்மையில், கதையை உருவாக்கும் கூறுகளையும், அவற்றை உங்கள் சொந்தப் படைப்புகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றியும்தான் இந்தப் புத்தகம் உங்களுக்குக் கற்பிக்கிறது. உங்களுக்கு மிகவும் பரிச்சயமான கதைகள் கூட, இந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க நீங்கள் இதுவரைப் பார்த்துணராத வழிகளில் அவற்றின் உள் செயல்பாடுகளை உங்களுக்கு அடையாளங்காட்டும். 

இந்தப் புத்தகத்தின் முடிவில், நீங்கள் புற்களில் பதிந்துள்ள காற்தடங்களைக் காண முடியும்.
 
தொடரும்…