செம்பேன் ஒஸ்மான் :  கலைஞன் நிரந்தரக் கலகக்காரன்

-யமுனா ராஜேந்திரன்

நான் நிஜத்தில் விரும்புவதெல்லாம், தனி மனிதரின் மனசாட்சிக்கு அறைகூவல் விடுவதுதான். நான் பலமாக நம்புகிறேன். மனித நடத்தையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தனிமனிதப் பார்வையாளரின் பிரச்னையைத் தூண்டமுடியும். தனிமனிதர்களின் ஒருங்கு திரண்ட பிரக்ஞை சமூக மாற்றச் செயல்போக்குக்கு உதவமுடியும். ஒரு கலைஞன் இரண்டு விஷயங்களைத் தவிர்க்க வேண்டுமென நான் நினைக்கிறேன். ஆசையை அவன் நிராகரிக்க வேண்டும், அந்த ஆசை அவனை இலாபநோக்குகொண்ட நடத்தைக்காரனாக்கும். அடுத்து நிராகரிக்கப்படவேண்டியது: ‘ஒரு புரட்சிகரப் படத்’ தைத் தயாரிப்பதன் மூலம் புரட்சியை உபதேசிப்பது. கருத்து பிரக்ஞையுள்ள பார்வையாளர்கள் வாயில் ஊட்டுவதற்கு தேவையின்றியே ஒரு உண்மையான கலைப்படைப்பின் ‘புரட்சிகரக் குணாம்சத்தைப் புரிந்து கொள்வார்கள். அந்த உணரும் நிமிடம் அவர்களோடு என்றென்றும் இருந்து கொண்டிருக்கும்.

செம்பேன் ஒஸ்மான் 

செம்பேனுக்கு இப்போது 83 வயதாகிறது. இந்தக் கிழட்டுச் சிங்கம்தான் இன்றளவும் ஆப்பிரிக்கச் சினிமாவின் கோபக்கார இளைஞனாக கொதித்துக் கொண்டிருப்பவர். தனது மக்களின் அடிமைத்தனத்தை சகிக்காதவர். அதிகாரத்தை எதிர்த்து நிற்பவர். கலகக்காரன். உஸ்மான் செம்பேன் ஆப்பிரிக்க சினிமாவின் முதல் கலைஞன். அவருக்குப் பின்வந்த அமைத்து ஆப்பிரிக்க சினிமா இயக்குனர்களுக்கும் ஆதர்சமாகத் திகழ்கிற கலகக்காரன். உலக சினிமாவில் இடிபோல் நுழைந்து ஆதிக்கவேர்களை அசைத்துக் கொண்டுள்ளவன். 1963இல் இவரது முதல் குறும்படம் ‘ஸெங்காய் ராஜ்யம்’ (The Songhai Empire / Z’Empire (Gulewaar)) எனும் திரைப்படம் வெளிவந்தது. இந்த 11 சிருஷ்டிகளில் 5 படங்கள் குறும்படங்கள். 6 படங்கள் முழுநீளக் கதைப்படங்கள். நான் பார்த்தவை 1963இல் வெளியான 20 நிமிடப் படமான போரம் வீதி (Borom Street) எனும் குறும்படம் மற்றும் 6 முழுநீளப் படங்கள் :

1.மணிஆர்டர் (The Money Order / Mondabi) 105 நிமிஷங்கள் (1968)
2.இடிக் கடவுள் (The God of Thunder Emitai) 95 நிமிடங்கள் (1971)
3.சாபம் (Xala)) 116 நிமிடங்கள் (1974)
4.செட்டோ (Ceddo)) 120 நிமிடங்கள் (1976)
5.தியாராயோ முகாம் (Cam de thiaroye) 120 நிமிடங்கள் (1988)
6.குலேவார் (Gulewaar) 120 நிமிடங்கள் (1992)

6 படங்களே 2006 வரையிலுமான அவரது முழுநீளக் கதைப் படங்கள். இவை 

அனைத்துமே ஆப்பிரிக்கத் திரைக்காவியங்கள். 1991ஆம் ஆண்டு பிரிட்டீஸ் தொலைக்காட்சி நிறுவனம் Africa on Films என்கிற நிகழ்ச்சியையும், 1992 ஆம் ஆண்டு சேனல் நான்கு தொலைக்காட்சி நிறுவனம் Africa on Films எனும் நிகழ்சியையும் வழங்கியது. அச்சமயத்தில் அவருடைய Xala மற்றும் Ceddo தவிர்த்த நான்கு படங்கள் திரையிடப்பட்டது. Xala படத்தின் வீடியோப் பிரதி அவ்விழாவை ஒட்டியும் செம்பேன் உஸ்மான் கலந்துகொள்ளும் கருத்தரங்கையொட்டி அவரைச் சிறப்பிக்குமுகமாகவும் வெளியிடப்பட்டது.

ஆப்பிரிக்காவை பூர்வீக கறுப்பு ஆப்பிரிக்கா என்றும் மரபான இஸ்லாமிய பழுப்பு ஆப்பிரிக்கா என்றும் பிரிக்கலாம். எகிப்து / அல்ஜீரிய / டுனீசியா / மொராக்கோ போன்றவை இஸ்லாமிய ஆப்பிரிக்கா. செனிகல் / எதியோப்பியா / மாலி / பர்கினோபாசோ / நைஜீரியா / எத்தியோப்பியர் போன்றவை கறுப்பு ஆப்பிரிக்கா. நெக்டூமா போன்றவர்கள் முன்வைத்த Pan Africanism, செடார்செங்கார் போன்றவர்கள் முன்வைத்துப் பேசிய கலாச்சாரக் கருத்துருவான Negritude போன்றவை கறுப்பு ஆப்பிரிக்கா கலாச்சார அரசியல் சார்ந்த சித்தாந்தப் போக்குகள்.

செம்பேன், கறுப்பு ஆப்பிரிக்க மரபில் வந்தவர். செனிகல் நாட்டைச் சேர்ந்தவர். 1923 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் தெற்கு செனிகலில் பிறந்தவர். தெற்கு செனிகல் பஞ்சமும் பட்டினியும் வறட்சியும் நிறைந்த விவசாயிகளின் பிரதேசம். தாக்கர் (Dakar) செனிகலின் தலைநகர். செம்பேன் சிறுவனாக இருந்தபோது இவரது தாய் தந்தையர் மணவிலக்குப் பெற்றனர். தனது தந்தை, பாட்டி, அவரது உறவினர்களோடு கழிந்தது அவரது இளமைப்பருவம். 12 வயதில் பள்ளிக்குச் சென்றார் செம்பேன். அது பிரெஞ்சுப் பள்ளிக்கூடம். தனது 14வது வயதில் பள்ளிக்கூடம் பிடிக்காமல் அதை விட்டு வெளியேறி கார் மெக்கானிக்காக வேலை செய்தார். பிற்பாடு தச்சராகவும், மீனவனாகவும் தொழில் செய்தார். அவர் தனது பெரும்பாலான நேரத்தை தொழில் முறையில்லாத நாடகக்  குழுக்களோடும், உள்ளூர் வுலப் (Wolof) மொழி கதை சொல்லிகளோடும் (Griots) கழித்தார். மாலை வகுப்புகளில் கலந்து கொண்டார்.

தனது 19வது வயதில் இரண்டாம் உலகப் போரில் பிரெஞ்சு ராணுவத்துக்காக 4 ஆண்டுகள் ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் போரிட்டார். 1947/48 இல் 6 மாதம் நடைபெற்ற தாக்கர் / நைஜர் கூட்டு ரெயில்வே வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தார். அக்காலகட்டத்தைய அனுபவங்களே பின் அவரது முதல் நூலாக / Gods Bits of
Wood வெளிவந்தது. 1948ஆம் ஆண்டு கட்டணமின்றி பிரெஞ்சுக் கப்பலில் ஒளிந்திருந்து பிரான்சுக்குப் போனார் செம்பேன். ஸிட்யுன் (Citwen) கார் கம்பெனியில் தொழிலாளியானார். மூன்று மாதம் பின் மார்ஸீல் பெயர்ந்த அவர் அங்கு தீவிரமான அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். செனிகல் தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் இணை அமைப்பான தொழிலாளர்களின் பொதுக்கூட்டமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

செம்பேன் அடிப்படையில் அரசியல் செயல்பாட்டாளர் / தொழிற்சங்கவாதி / இலக்கியவாதி, 1956இல் அவரது The
Black Docker நூல் வந்தது. தொடர்ந்து Mandapi / Caddo / Xala போன்ற நாவல்கள் வெளிவந்தது. இச்சமயத்தில் பரந்துபட்ட அளவில் கல்வியறிவற்ற மனிதர்களோடு உரையாடுவதற்கு இன்னும் கூடுதல் பொருத்தமான சாதனம் சினிமா. அவர் ‘ஸொங்காய் சாம்ராஜ்யம்’ குறும்படத்தைத் தயாரித்தார். தொடர்ந்து ‘போரம் வீதி’ வெளியானது. ‘போரம் வீதி’ தான் முதன்முதலாக தொழில்நுட்பத் தேர்ச்சியுடன் உருவாக்கப்பட்ட முதல் திரைப்படமாக / குறும்படமாக இன்றளவும் இருக்கிறது. அதன் நீளம் 20 நிமிடங்கள் மட்டுமே. அது குறுங்காவியம். 

செனிகல் நாடு 75 லட்சம் மக்களைக் கொண்ட சிறியநாடு. மூன்று இனமக்கள் இருக்கிறார்கள். Wolof, Serar மற்றும் Pulaar இனத்துக்கு மட்டுமே மொழி இருக்கிறது. ஜனத்தொகையில் முக்கால் பங்கு மக்கள் வுலப் மக்களே. ஜனத்தொகையில் பெரும்பாலோர் பின்பற்றுவது முஸ்லீம் மதம். 10 சதம் கிறிஸ்து நம்பிக்கைகளையும் பிற மாரபார்ந்த ஆப்பிரிக்க நம்பிக்கைகளையும் பின்பற்றும் மக்கள். பிரெஞ்சு மொழியே அரசுமொழி / அதிகாரபூர்வமான ஆட்சிமொழி. ஜனாதிபதி ஆட்சிமுறை. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பல்கட்சி பங்கெடுப்பு ((limited multy Party Participation). மூன்று கட்சிகள். 1. தாராளவாத ஜனநாயக கட்சியான செனிகல் ஜனநாயக கட்சி 2. மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியான ஆப்பிரிக்க சுதந்திரக் கட்சி 3. சமூக ஜனநாயகக் கட்சியான செடார் செங்கார் தோற்றுவித்த செனிகல் சொசலிஸ்ட் கட்சி. செடார் செங்காரின் இக்கட்சி ஜெர்மனி சோசலிஸ்ட் கட்சியின் தலைமையிலான சோசலிஸ்ட் இண்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புகளைப் பேணியது. பிரிட்டிஷ் லேபர் கட்சியும் இந்திய பிரஜா சோசலிஸ்ட் கட்சியும் (லோகியா / ஜார்ஜ் பெர்னான்டஸ்) இத்தகைய உறவுகளைக் கொண்டவைகள். 1976ஆம் ஆண்டு செனிகல் அரசியல் சட்டத்தின்படி செங்காரின் கட்சியான சோசலிஸ்ட் கட்சி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி. 1976ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சியிலிருப்பது செங்காரின் கட்சியே. செடார் செங்கார் உலக அளவில் அறியப்பட்ட கவிஞர். சிந்தனையாளர். சமூக ஜனநாயகவாதியான இவரது பொருளாதாரக் கொள்கைகள் ஆப்பிரிக்க மக்களுக்கு வேரழிவைவே கொண்டு வந்தன. செடார் செங்காருக்கும் உஸ்மான் செம்பேனுக்கும் அரசியல் அடிப்படையில் கலை / சினிமா / மொழி பற்றி திவிரமான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன.

ஆப்பிரிக்காவைப் புரிந்து கொள்ளவும் செம்பென் படங்களைப் புரிந்து கொள்ளவும் அதன் காட்சியமைப்புகள் சினிமாப் பிரதியில் (Cinema Text) உள்ள அர்த்தங்களை சரியாக விளங்கிக் கொள்ளவும் கட்டாயமாக ஆப்பிரிக்கா / செனிகல் பற்றிய வரலாற்றுப் புரிதல்கள் நமக்கு நிச்சயம் தேவை. ஐரோப்பிய சிந்தனையால் அரிக்கப்பட்டிருக்கும் நம் சிந்தனைக்கு மிக அவசியமானது இது. ஸத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி மற்றும் அவரது கிராமம் பற்றிய படங்களோடும் (அஸானி ஸங்கீத்) ஒப்பிட்டு சர்வதேசீயப் பத்திரிகைகளில் நிறைய எழுதப்பட்டுள்ளது. காரணம் இருவரும் எடுத்துக் கொள்ளும் கிராமங்கள் காலனியாதிக்கத்துக்குப் பின்னான கிராமங்கள்தான். ஆனால் ரேயினுடைய அணுகுமுறையும் ஒஸ்மேன் செம்பேனுடைய அணுகுமுறையும் முற்றிலும் வித்யாசமானவை. ரேயினுடையது கட்டுப்பட்ட மத்தியதர வர்க்க உணர்ச்சி வெளிப்பாடு. செம்பேனுடையது வெடித்தெழும் கலகக் குரல். போராடும் மனிதனின் குரல்.


செம்பேன் படங்களை இந்தியச் சூழலில் வைத்துச் சிந்திப்பதற்கான காரணங்கள் நிறைய இருக்கிறது. இந்திய அரசியலில் மகாத்மா காந்தி / சச்சிதானந்தன் போன்றவர்கள் வலியுறுத்தும் Multidimensional/poly phonic /பன்முகம்/ பலகுரல் போன்ற எல்லாவற்றையும் இவர் படங்கள் முன்வைத்துச் சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன். காரணம் மூன்றாக உலகச் சிந்தனாவாரிகளாக நமது கலை / அழகியல் மதிப்பீடுகள், கெட்டிதட்டிய மதிப்பீடுகள், வலியுறுத்தப்படும் மதிப்பீடுகள், ஐரோப்பிய மதிப்பீடுகள்தான். செம்பேன் படங்கள் சொல்லும் மதிப்பீடுகள், அதனது சினிமா மொழி ஐரோப்பிய மதிப்பீடுகள் / மொழி சார்ந்தது அல்ல. அவரது படங்களில் உள்ள மொழி ஆப்பிரிக்க சொல்லியின் (Griots) மொழி.

இவை கருதியே அவர் படங்களின் / மனிதர்களின் உலக்குள் நுழைவதற்கு முன்னால் முன்னோட்டமாக சில விசயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. ஆப்பிரிக்க விவசாய உற்பத்தி அமைப்பானது கூட்டுறவுத்தன்மை கொண்டது. ஆகவே சோசலிசம் ஏற்கனவே ஆப்பிரிக்க உற்பத்தி உறவில் இருக்கிறது. புதிதாகக் கட்டமைக்க வேண்டியது இல்லை என்றார் செங்கார். ஆனால் அந்தக் கூட்டுறவு ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்திக்கு, சொற்பக் கூலி உழைப்பை வழங்குவதாக அமைந்தது. (This collectivism has served mainly to provide cheep labour for export oriented again there) வேர்கடலைக் கொட்டையையும் பருத்தியையும் ஏற்றுமதி செய்வதை மையமாகக் கொண்ட இந்த விவசாய உற்பத்தியை பிரெஞ்சுக்காரர்களே கட்டுப்படுத்தினர். தேசத்தில் 82 சதம் தொழிலை அவர்களே கட்டுப்படுத்தினர். இதுவன்றி செனிகல் தலைநகர் தாக்கரில் வரியற்ற (duty free) பிரதேசத்தையும் வெளிநாட்டவருக்குத் திறந்தார் செங்கார். செடார் செங்காரின் ஆட்சிமுறை சோவியத் / கிழக்கு ஐரோப்பிய ஒற்றைக் கட்சி ஆட்சி முறையின் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தன. IMF உலக வங்கி போன்றன பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இஸ்லாமிய மதமே அதிகாரத்துவம் வாய்ந்த மதமாக இருக்கிறது. பிரெஞ்சு மொழியே இருக்கிறது. காலனியாதிக்க காலத்திய பிரெஞ்சு அதிகாரவர்க்கமே இன்று பின்காலனித்துவ செனிகலின் ஆளும் வர்க்கத்திற்கு அறிவுரை தரும் வர்க்கமாக இருக்கிறது. இதுதான் இன்றைய செனிகல். செனிகல் நாடு பூர்வீகக் கலாச்சரத்தை ஆப்பிரிக்க நாகரீகத்தை தமது பூர்வீகக் கடவுளர்களைக் கொண்டிருந்த நாடு.

18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்க மக்களின் கலாச்சாரத்தை பொருளாதாரக் கட்டமைப்புக்களை நிர்மூலமாக்கியபடி நுழைந்து பிரெஞ்சுக்காலனி ஆதிக்கமும் தொடர்ந்து, கிறிஸ்தவமும் அதைத் தொடர்ந்து, இஸ்லாம் மதமும். இஸ்லாமிய மதம் ஆப்பிரிக்க பூர்வகுடி அரசுகளை மதத்தின் பிரச்சாரம் கொண்டு அழித்தது. இஸ்லாம் / கிறிஸ்தவ மதங்களுக்கு இடையிலான ஆதிக்கத்தில் தமது சொந்தக் கலச்சாரத்தை, தெய்வங்களை, மரபுகளை, உறவுகளை இழந்தார்கள், ஆப்பிரிக்க மக்கள். ஆப்பிரிக்க மக்களின் மீது காலனியாதிக்க கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஆதிக்கம் கவிழ்ந்ததெனில் இந்தியாவில் தொல் கலாச்சாரம் கொண்ட 38 கோடி தீண்டத்தகாத ஒடுக்கப்பட்ட மக்களின் மீது இந்து மதம் தனது ஆதிக்கத்தை வைத்திருக்கின்றது. கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்து மதத்திற்கு கொஞ்சமும் குறைந்த ஆதிக்க நம்பிக்கைகள் அல்ல. செம்பேன் உஸ்மான் படங்கள் இந்த நிலைப்பாட்டைத்தான் மேற்கொள்கின்றன. இவ்வாறான ஆப்பிரிக்க/உலகச் சூழலில்தான் உஸ்மான் செம்பேனின் சினிமா நுழைகிறது. உஸ்மான் செம்பேனின் படைப்புலகம் இதுதான். காலனியாதிக்கம்/ நவகாலனியம்/ மதங்களின் அதிகாரம்/ இழந்து விட்ட தொல்மரபு/ ஆதிக்க அரசுகள்/ அரசுகளை எதிர்த்த தனிமனிதர்கள் மக்களின் தொடர்ந்த கலகம். இதுவே உஸ்மான் செம்பேனின் படைப்புலகம்..... 

மூன்று ஆப்பிரிக்கத் திரைக்காவியங்கள்

அவரது முதல் குறும்படமான ‘ஸாங்காய் ராஜ்யம்’ (1963) மாலி நாட்டு அரசாங்கத்துக்காக தயாரிக்கப்பட்டது. அப்படம் இதுவரை வெளியிடப்படவில்லை. அடுத்து அவர் கொடுத்த ‘போரம் வீதி’ (Borom Street) குறும்படம். ஒரு கட்டைவண்டி ஓட்டுநரின் ஒருநாள் அனுபவத்தைச் சொல்லுபவை. செனிகல் தலைநகரத்தில் ஒரு பயணியால் வண்டியோட்டி ஏமாற்றப்படுவதையும் இறுதியில் நகர போலீஸினால் வண்டி கைப்பற்றப்பட்டு வண்டியோட்டி வெறுங்கையோடு வீடு திரும்புவது பற்றியுமான கதை அது. 1970 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட Taw குறும்படம் தாக்கர் நகரத்தில் வேலையற்ற இளைஞன் பற்றியது. Niyae படம் செய்தியும் இசையும் கலந்த, செயல்களை, சிலவேளை வலியுறத்திய, சிலவேளை பாத்திரங்களை நேரடியாக விவரித்த குறும்படம். 1966ஆம் ஆண்டு வெளிவந்த கறுப்பு பெண் (Black Girl) படம் ஆப்பிரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்குக்குமான உறவைச் சொல்வது. 

செனிகல் நாட்டு இளம்பெண்ணொருத்தி ஒரு பிரெஞ்சுக் குடும்பத்துக்கு வேலையாளாகப் போகிறாள். முதலில் கனவுகளைக் கொண்டிருக்கும் அவள் நடைமுறையில் தான் ஒரு மனுசியாக நடத்தப்படாததைச் சகிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது பற்றியது இப்படம். The money
order படம் பிரெஞ்சு மொழியிலும் வுலப் மொழியிலும் தனித்தனியே உருவாக்கப்பட்டது. பாரிஸ் நகரில் வாழும் உறவினர் ஒருவர் செனிகலில் வாழும் தனது சொந்தக்காரருக்கு கையகப்படுத்த அனுப்பப்படும் பிரெஞ்சு ராணுவத்துக்கும், கிராம மக்களுக்கும் ஏற்படும் அவமானகரமான நிகழ்ச்சியை எள்ளலுடன் சொல்லும் படம் இது. 1972 இல் வெளியான Emitai படம் இரண்டாம் உலகப் போர்க்கால கட்டத்தில் செனிகலில் இருக்கும் ஒரு குக்கிராமத்துக்குச் சென்று அம்மக்களிடம் இருக்கும் அரிசி மற்றும் உணவுப் பொருட்களை கையகப்படுத்த அனுப்பப்படும் பிரெஞ்சு ராணுவத்துக்கும், கிராம மக்களின் கடவுள் நம்பிக்கைகளையும் பிரெஞ்சு ராணுவத்தின் வன்முறையின் குரூரத்தையும் சித்தரிக்கும் படம். தியாராமுகாம் (Camp Thiyara) 1944 இல் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. 

ஜெர்மன்/இத்தாலிய பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போராடிய ஆப்பிரிக்கர்கள் பிரெஞ்சு அரசுக்கெதிராக கலகத்தில் ஈடுபடும் வேளையிலேயே முகாம் இக்கொலைக்களம் ஆகிறது.

நான் பார்த்திருக்கிற 1 குறும்படம் 6 முழுநீளப் படங்களில் அதிகமாகப் பேசப்படும் படங்கள், சர்வதேசிய விமர்சகர்களால் காலனியாதிக்க சாபத்திற்கு (Xala) எதிரான படங்கள் என்று குறிப்பிடப்படும் படங்கள் 4 படங்கள். அப்படங்கள் Camp Thiayara, Xala, ceddo, Gulewaar போன்றன. இப்படங்களிலும் இன்றளவிலும் உஸ்மான் படங்களில் மிகச் சிறந்ததெனவும், என்றென்றைக்குமான ஆப்பிரிக்கத் திரைக்காவியங்களில் ஒன்றெனவும் குறிப்பிடப்படும் படம் Ceddo. Ceddo என்றால் வெளியாள்/outsider என்று அர்த்தம் கொள்ளலாம். 

Xala/Ceddo/Gulewaar மூன்று படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. Xala சாபம் படம் காலனியாதிக்கத்திற்குப் பிந்திய ஆப்பிரிக்க அறிவுஜீவிகளின் ஆண்மையற்ற தன்மையை (Impotency) பேசுகிறது. Ceddo (வெளியாள்) படம் இஸ்லாம்/கிறித்தவ/காலனிய ஆதிக்கம் ஆப்பிரிக்காவில் நிலைகொண்டதைப் பேசுகிறது. Gulewaar என்பது கதாநாயகனின் பெயர். மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலனவற்றிற்கும் பொதுவானதும் / இந்திய தமிழக நிலைமைக்கு மிக அருகிணதுமான சித்திரம் பற்றியே இம்மூன்று படங்கள் பற்றியதுதான். 

திரைப்படங்கள் வெளியான காலவரிசைப் படியிலேயே மூன்று படங்களையும் பார்ப்போம். சாபம் (Xala) 1979ல் வெளியானது. வெளியாள் (Ceddo) 1976ல் வெளியானது. குலேவார் (Gulewaar) 1992 ஆம் ஆண்டு வெளியானது. இம்மூன்று படங்களில் எதுவுமே பிரெஞ்சு மொரியில் எடுக்கப்பட்ட படங்களல்ல. வெனிகலின் பிரதான மொழியான வுலப் (Wolof) மொழியில் எடுக்கப்பட்டது. படங்களில் பிரெஞ்சுக்காரர்கள் பிரெஞ்சு மொழி பேசுகிறார்கள். செனிகல் மக்கள் வுலப் மொழியையும் பிற இரண்டு சிறுபான்மை மொழியையும் பேசுகிறார்கள். கறுப்பு அதிகாரவர்க்கத்தினர் பிரெஞ்சு மொழி பேசினர். நான் பார்த்த படங்களில் ஆங்கில ஸப்டைட்டில்கள் இருந்தன. மேன்மேலும் படத்தைப் புரிந்துகொள்ள ஆப்பிரிக்க கலாச்சாரம் சினிமா தொடர்பான புத்தகங்களும் பல்வேறு விமர்சனங்களும் செம்பேன் உஸ்மேனின் பல்வேறு நேர்முகங்களும் எனக்கு உதவியாயிருந்தன.

ஆரம்பத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியுடன் படம் எடுத்த செம்பேன், அவரது கதைத் தேர்வு, கதை சொல்லல் போன்றவற்றில் அதிகார வர்க்கத்தினர் தலையிடத் தொடங்கியதால், பிரெஞ்சு அரசாங்க உதவியை செம்பேன் முழுக்க நிராகரித்து விட்டார். முழுக்க முழுக்க தனது மக்களையும் தனது நாட்டையுமே இப்போது அவர் சார்ந்து நிற்கிறார். பல்வேறு இடதுசார் நிறுவனங்களும் கலைப்படத் தொலைக்காட்சி நிறுவனங்கள், உலகத் திரைப்பட விழாக்குழுக்கள் போன்றவையே தற்போது அவருக்கு படங்கள் வெளிக்கொணர உதவுகின்றன. அவ்வாறு வெளியான காத்திரமான படங்களே இம்மூன்றும். செனிகல் மக்களுக்குள் இப்போது நுழைவோம்.


சாபம் / XALA



1960 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 செனிகல் அரசியல் ரீதியாக பிரெஞ்சுக் காலனியாதிக்கதிதிலிருந்து விடுதலை பெற்றது. செனிகல் வர்த்தகக் கூட்டமைப்பு (Senegal chamber of Commerce) உடனடியாக செனிகல் ஆப்பிரிக்கப் பிரஜைகளால் எடுத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கிறது அரசு. படம் தொடங்குகிறது. வர்த்தகக் கூட்டமைப்புகள் அலுவலகத்துள் ஆப்பிரிக்க வியாபாரிகள் நுழைகிறார்கள். பிரெஞ்சு அரசுச் சின்னங்கள், அரசுத் தலைவர் படங்கள் வெளியே கொண்டுபோகப் படுகிறது. ஆப்பிரிக்கர்கள் அலுவலகத்தை பொறுப்பெடுக்கிறார்கள். பிரெஞ்சுக்காரர்கள் மௌனமாக விழிக்கறார்கள். போலீஸ் பாதுகாப்புடன் எங்கோ போய்விட்டு மறுபடி அலுவலகத்துக்குள் நுழையும் அவர்கள் ஆப்பிரிக்க வியாபாரிகள் மேஜையில் ஒவ்வொருவரின் முன்னும் ஒரு சூட்கேஸ் வைக்கிறார்கள். பெட்டி நிறைய பணம். ஆப்பிரிக்க பிஸினஸ்மேன் முகமெல்லாம் சந்தோஷம். நிறைவுடன் தலையாட்டிக் கொள்கிறார்கள்.
 

இப்போது பிரெஞ்சுக்காரர்கள் ஆப்பிரிக்க பிஸினஸ்மென்களின் ஆலோசகர்கள் (Advisors) ஆகிவிட்டார்கள். அமைச்சர் அறிவிக்கிறார்: ‘நாம் சோசலிசத்தைத் தேர்ந்து கொண்டுவிட்டோம். சேர்ந்து நின்று உழைப்போம்’. அதே கூட்டத்தில் ஒரு வியாபாரப் பிரமுகரான எல். ஹஜீத்தின் மூன்றாவது திருமணத்துக்கான அழைப்பு அனைவருக்கும் விடுக்கப்படுகிறது. ஹஜீத்தான் கதையின் நாயகன். ஊரில் பெரிய புள்ளி. ஆளும் கட்சியில் செல்வாக்கு மிக்கவர். அரசு உணவுக் கழகத்தின் (National Food corpn.) உத்தியோகபூர்வ விநியோகஸ்தர். பிரெஞ்சு ஊற்று நீரான Evian தண்ணீரைத்தான் குடிப்பார். தினமும் இரண்டு லிட்டர் குடிப்பதாகச் சொல்கிறார். அவருக்கு மத்தியதர வயதைக் கடந்த முதிய பருவம். ஏற்கனவே அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன் ஒரு மகளும். இரண்டாம் மனைவிக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள். எல்லோரும் வளர்ந்த பிள்ளைகள். அவருக்குத்தான் மூன்றாவது திருமணம். காரணம்? அவர்களது மரபு அங்கீகரிக்கிறது. மதம் அங்கீகரிக்கிறது. மூன்றாவது திருமணம் செய்வது அவருக்கு பெருமைகள் மரியாதையின் பாற்பட்டது. புதிய பிஸினஸ்மேன் அவர்.


மூத்த மனைவிக்கு அவர் மணம் முடிப்பதில் உடன்பாடு இல்லையானாலும் எதிர்க்க முடியவில்லை. இரண்டாவது மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதை நேரடியாகவே முகத்திலடித்தாற்போல் சொல்லிவிடுகிறாள். இரண்டு மனைவிகளையும் கூட்டிக் கொண்டு திருமணத்திற்கு வருகிறார் ஹஜீத். புதிய எஜமானர் அவர். மூன்றாம் மனைவி சின்னஞ்சிறு பெண். மீறினால் 14 வயதும் கூட இருக்காது. திருமணத்தின் மீது ஏதும் சாபம் விழுந்து விடாமலிருக்க மாவிடிக்கும் உருளை மீது மாப்பிள்ளையை அமரச் சொல்கிறார் புதிய மாமியார். மாப்பிள்ளை அந்த மூடப்பழக்கத்தை மேற்கத்திய அறிவின்படி மறுத்து விடுகிறார்.

விருந்து முடிகிறது. முதலிரவு. பிரச்சினை அங்குதான் வருகிறது. மணப்பெண்ணுக்கு அடங்கிப் போகும்படி, கூப்பிட்டபோது போய் படுக்கும்படி அறிவுரை சொல்கிறாள் தாய். அறை மூடப்படுகிறது. அடுத்த நாள் திருஷ்டி கழிப்பதற்காக கோழியை தலை திருகிக் கொல்ல படுக்கையறைக்குப் போகிறார்கள் இருபெண்கள். தான் கன்னி கழியவில்லை என்கிறாள் புதுமணப்பெண். அருகில் உள்ளங்கைளில் முகம் புதைத்தபடி ஹஜீத். தனக்கு குறி விறைக்கவில்லை (erection) என்கிறார் ஹஜீத். பிரச்சினை வந்துவிட்டது. யாரோ சாபம் (Xala) கொடுத்து  விட்டார்கள். உருளைச்சடங்கு இல்லாததால் சாபம் என்கிறாள் மாமி. இரண்டாவது மனைவி சாபம் கொடுத்துவிட்டாள் என்கிறார்கள் மற்றவர்கள். விறைக்க மாட்டாதவனை ஏசுகிறார்கள் பெண்கள். கேவலமாகப் பேசுகிறார்கள்.

குறி விரைக்க வேண்டுமே? குறி விறைக்க என்ன வழி? (சிரிப்பு வருகிறது? பொறுங்கள். சிரிக்க இன்னும் நிறைய இருக்கிறது.) அமைச்சருக்கு அவசரமாகப் போன் போடும்படி தன் அலுவலகப் பெண்ணிடம் சொல்கிறார். தனது உணவுக் கிடங்குக்கு வந்த ஹஜீத். அமைச்சர் அவசர அவசரமாக வருகிறார். என்ன பிரச்சினை என்கிறார். உணவு விநியோகத்தில் ஏதேனும் பிரச்சினையா? குறி விரைக்கவில்லை. உடனே அதற்கு ஏதேனும் வழி கண்டுபிடிக்க வேண்டும். யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியே சத்தம். அழுக்குப் பிச்சைக்காரர்கள் தெருவிலமர்ந்து பாட்டுப்பாடி தொந்தரவு கொடுக்கிறார்கள். அமைச்சர் போலீசைக் கூப்பிட்டு ஒரு வேன் கொண்டுவரச் சொல்கிறார். பிரெஞ்சு அதிகாரி கம்பீரமாக வழிகாட்ட வந்த போலீஸ்வேன் பிச்சைக்காரர்களை ஏற்றுகிறது. அவர்களோடு கூடவே ‘வுலப்’ மொழி பத்திரிக்கை விற்கும் பையனும் ஒரு விவசாயியும் கைது செய்யப்படுகிறார்கள். விவசாயி ஏன்? விவசாயி வறண்ட தனது கிராமத்தில் விளைந்த சொற்ப பயிர்களை விற்று, நகரத்தில் வந்து உணவுப்பொருள் வாங்க வந்தவன். அவனிடம் ஏமாற்றி காசு திருடிப் போய்விட்டான் ஒரு கனவான். அதைச் சொல்லிக் கொண்டிருக்கையில் வந்த போலீஸ் கூட்டத்தோடு அவனையும் ஏற்றுகிறது.

குறி சொல்பவனிடம் போவோம். குறி விறைக்க மந்திரம் சொல்வான். அமைச்சரும் பிரமுகரும் போக, குறி சொல்பவன் இடுப்பில் நடுவளையம், கழுத்தில் நடுவளையம், கையில் நடுவளையம் போட்டுக் கொண்டு புணர்ச்சிக்குப் போ என்கிறான். போதாதற்கு வாயில் எதையோ மந்திரத் துணியைக் கௌவிக்கொண்டு நாய் மாதிரி ஊர்ந்து ஊர்ந்து ஊளையிட்டு மனைவியிடம் போ என்கிறான். இரவு படுக்கையறையில் ஒரே அலறல். புணர்ச்சி சந்தோஷம் அல்ல. பயந்த சிறுமியின் கூச்சல். கிழட்டுப் பயலை ஏளனமாகப் பார்த்து கை நொடிக்கிறார்கள் பெண்கள். இதற்குள் ஹஜீத்துக்கு குறி விரைக்காத சாபம் என்கிற விஷயம் ஊரெல்லாம் தெரிந்து விடுகிறது. ஊரெல்லாம் ஒரே பேச்சு. அமைச்சர் மந்திரம் பலிக்கவில்லை. ஹஜீத்தின் கார் டிரைவர் சொல்லும் குறிக்காரனிடம் போகிறார்கள். நீட்டிய தனது கால்களுக்கிடையில் படுக்கவைத்து மந்திரம் சொல்லி சாபம் தீர்ந்தது என்கிறான் குறிசொல்லி. ஹஜீத் எம்பிக் குதிக்கிறார். குறி விறைத்துக் கொண்டது. ஆஹா என்ன சந்தோஷம். துள்ளல் பாடலுடன் மெர்ஸிடஸ் கார் நகருக்குத் திரும்புகிறது.

வேகமாக மனைவியை நோக்கிப் போகிறார் ஹஜீத். சனி பிடித்தது. கெட்டநாள். அன்று அவர் மனைவிக்கு மாதவிலக்கு நாள். வெறுத்து இரண்டாம் மனைவியின் பாத்ரூமுக்குள் திடீரென்று நுழைந்து விடுகிறார். குறிகாரனுக்கு கொடுத்த செக் பணமாகாமல் திரும்புகிறது. பல்லேறு வியாபாரிகளுக்குக் கொடுத்த செக் பணமாகவில்லை. பேங்க் செக்குகளை திருப்பி அனுப்பிவிட்டது. சேம்பர் ஆப் காமர்ஸில் ஒரே கூச்சல். அமைச்சர் உடனடியாக அவசரக் கூட்டம் கூட்டுகிறார். ஹஜீத் அமைச்சரைப் பார்க்கப்போக, அமைச்சர் ஹஜீத்தைப் பேங்க் மானேஜர் ஹஜீத்தின் கணக்கு வழக்குகளில் அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 100 டன் அரிசிக்கு கணக்கு இல்லை என்பதைக் காண்பிக்கிறார். ஹஜீத் தெருவுக்குத் தெரு விநியோகக் கடை வைப்பது பற்றிய புதிய திட்டத்தோடு வநிதிருக்கிறார். குறி விரைப்பது எப்படி இருக்கிறது என்கிறார் மானேஜர். முழங்கையை மடக்கியவாறு சந்தோசப்பட்டு எழுகிறார் ஹஜீத். ஹஜீத் சேம்பர் ஆப் காமர்ஸ் கூட்டத்துக்குப் போக வேண்டும். கூட்டம். அமைச்சர். பிஸினஸ் மேன்கள் 100 அரிசியை விற்று மூன்றாம் திருமணம் என்று குற்றம் சாட்டி அவரை விலக்குவதற்குத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். 

ஹஜீத் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது. ‘நாம் எல்லோரும் அயோக்கியர்கள், பொய்யர்கள், சுரண்டல்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள், மக்களை ஏமாற்றியவர்கள்’ என்கிறார் ஹஜீத். அதுவரை வுலப் மொழியே பேசாதவர், அம்மொழியில் கெட்டவார்த்தைகள் பேசுகிறார். கனவான்களுக்குக் கோபம் வருகிறது. கெட்ட வார்த்தைகள் பிரெஞ்சு அதிகாரபூர்வ மொழியில் ஜனநாயகப் பூர்வமாகப் பேசப்பட வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. அதன்படி பிரெஞ்சுக் கெட்ட வார்த்தைகள் வீசப்படுகிறது. ஹஜீத் வெளியேற்றப்படுகிறார். கழுத்தைப் பிடித்து தள்ளாத குறை. கைப்பெட்டியைக் கூட பிடுங்கிக் கொள்கிறார்கள். ஹஜீத்துக்கு மாற்றாக புதுக் கனவான் உள்ளே நுழைகிறார். இக்கனவான் அப்பாவி விவசாயியின் பணத்தைத் திருடி கோட்டு சூட்டு டை கட்டிய புதுக்கனவான். புதிய பிஸினஸ்மேன்.

ஹஜீத் உணவுக் கிடங்குக்கு வருகிறார். அரசாங்கத்திலிருந்து போலீசுடன் ஆட்கள் வந்து கடை சீல் வைக்கப்பட்டு மெர்ஸிடஸ் கார் உருட்டிக் கொண்டு போகப்படுகிறது. அதேவேளை இரண்டாம் மனைவி குழந்தை குட்டிகளோடு வீட்டைக் காலி செய்துகொண்டு தன் தாய் தந்தையிடம் திரும்புகிறாள். மூன்றாம் மனைவிக்குக் கொடுத்த திருமண உடைகள் திரும்ப அவரிடமே திருப்பித் தரப்படுகிறது. செக் வாங்கிய குறிக்காரனுக்கு பணம் வராததால் குறி விறைக்காத சாபத்தை திரும்பவும் ஹஜீத்திடமே தந்துவிட்டுப் போய்விடுகிறான். ஹஜீத்துக்கு வியாபாரம் போய், அதிகாரம் போய் இரண்டு மனைவிகளும் போய் குறி விறைக்காத சாபம் திரும்ப வந்துவிட்டது. விசயம் என்னவென்றால் ஹஜீத்தின் டிரைவரிடம் கேட்கும் பிச்சைக்காரர்களில் ஒருவன் தன்னால் சுலபமாக சாபத்தைப் போக்க முடியும் என்கிறான்.

பிச்சைக்காரர்களுக்கு ஊர்வலம். தடியூன்றிகள். விவசாயி. வுலப் மொழி பத்திரிக்கை விற்பவன் என நீண்ட தூரம் நடந்து நடந்து ஒரு கண்ணாடி வீட்டுக்குள் வந்தமர்ந்து அவரவர் இஷ்டத்துக்கு பிரிட்ஜிலிருந்து குளிர்பானங்கள் எடுத்துக் குடிக்கிறார்கள். ஐஸ் கட்டிகள் சாப்பிடுகிறார்கள். ஒரே குதூகலம். பிச்சைக்காரர்களுக்கு இப்படியோரு இடம் எப்படி வந்தது? கதவு திறக்கிறது. ஹஜீத். அவர் முதல் மனைவி குழந்தைகள். ஹஜீத் அத்துமீறி வந்துவிட்டதாகச் சத்தம் போடுகிறார். வெளியேறுங்கள் என மிரட்டுகிறார். ஒரு பிச்சைக்காரன் பேசுகிறான். அந்தச் சாபம் குறி விறைக்காத சாபம் (Xala) தான் கொடுத்த சாபம்தான். அவன் முன்பு ஒரு விவசாயியாக இருந்தவன். ஹஜீத்தின் ஒன்றுவிட்ட தம்பி. ஹஜீத் அவனை ஏமாற்றி நிலங்களை அபகரித்துக் கொண்டு அவனைச் சீரழித்து பிச்சைக்காரனாக்கி விட்டான். ஆகவேதான் சாபம் கொடுத்துவிட்டான் பிச்சைக்காரனான சகோதரன். விமோசனம் உண்டா? உண்டு. கூடியிருக்கும் எல்லாப் பிச்சைக்காரர்களின் முன்னும் ஹஜீத் நிர்வாணமாக நிற்க வேண்டும். எல்லாப் பிச்சைக்காரர்களும் ஹஜீத்தின் உடலில் காறித் துப்ப வேண்டும். அப்படிக் காறித் துப்புகிற எச்சிலில் ஹஜீத்தின் சாபம் நீங்கும்.

ஹஜீத் மனைவி வேண்டாமென்கிறாள். போலீஸ் வந்து என்ன கலவரம் என்கிறது. ஒன்றுமில்லை இவர்கள் என் உறவினர்கள் என்கிறார் ஹஜீத். ஹஜீத் முடிவு செய்துவிட்டார். அவருக்கு குறி விறைக்க வேண்டும். சாபம் நீங்க வேண்டும். நிர்வாணமாக நிற்கும் ஹஜீத்தின் உடம்பின் மீது சுற்றிலும் நிற்கும் பிச்சைக்காரர்கள் காறித்துப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்......
வெளியாள்/ CEDDO

செட்டொ என்பது படத்தில் ஒருமக்கள் கூட்டத்திற்கு அடையாளமாகச் சொல்லப்படுகிறது. ஒரு ஆப்பிரிக்க குழுவாக அடையாளப்படுத்தப்படுகிறது. செட்டோ என்கிற இம்மக்கள் வெளியாட்கள். யாருக்கு வெளியாட்கள்? எதற்கு வெளியே இருப்பவர்கள்? காலனியாதிக்கத்திற்கு வெளியே இருப்பவர்கள். கிறிஸ்தவ மத ஆதிக்கத்துக்கு வெளியே இருப்பவர்கள். இஸ்லாமிய மத ஆதிக்கத்துக்கு வெளியே இருப்பவர்கள். இக்கதை 1871க்குப் பின் நிதழ்கிறது. அடிமை வியாபாரத்தின் முடிவைத் தொடர்ந்து, அதன் விளைவாக நிகழ்கிறது. செம்பேன் சொல்கிறபடி இக்கதை 18ஆம்/19ஆம் நூற்றாண்டுக்கு மட்டும் உரியதல்ல. இன்றைக்கும் யதார்த்தம் அதுதான். முழு ஆப்பிரிக்காவுக்கும் குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் அது பொருந்தும் என்கிறார் அவர்.

இக்கதையில் ஐந்து கதாபாத்திரங்கள் முக்கியமானவர்கள். அடிமை வியாபாரியான வெள்ளையர். கிறிஸ்தவ மதபோதகரான வெள்ளையர். சிவப்பு குல்லா அணிந்த முஸ்லீம் மதபோதகர். செட்டோ வீரன். ஆப்பிரிக்க இளவரசி. இந்த ஐந்து கதாபாத்திரங்களின் பின்னணியில் மக்கள் கூட்டம். கதை மேற்கு ஆப்பிரிக்க நாடொன்றில் நிகழ்கிறது. கதை தொடங்கும் போது விலங்கு பூட்டப்பட்ட நிலையில் நான்கைந்து ஆப்பிரிக்கர்கள் துப்பாக்கி பிடித்த நிலையிலான ஒரு ஆப்பிரிக்கனால் புழுதி வீசியடிக்க ஓட்டி வரப்படுகிறார்கள். வெள்ளையனொருவனிடம் அவர்களை விற்றுவிட்டு, மாற்றாக துப்பாக்கிகள் பொருட்களை வாங்கிச் செல்கிறான் ஆப்பிரிக்கன். காத்திருக்கும் பெண்கள் தம் விளைபொருட்களைக் கொடுத்துவிட்டு வெள்ளையனிடமிருந்து சோப்பு, திரவியம் போன்றவற்றை மாற்றாக வாங்கிச் செல்கிறார்கள்.


அந்த கிராமத்திற்கு அப்போதுதான் வந்திருக்கும் முஸ்லீம் போதகர் எல்லாம் வல்ல அல்லாவின் பெயரில் முழு கிராமத்தின் அதிகாரத்தின் அதிகாரத்துக்காக திட்டமிடுகிறார். பெரும்பாலான மக்கள் ஒன்று ஏற்கனவே கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள். அல்லது முஸ்லீம் நம்பிக்கைக்கு ஆட்பட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அந்த நாட்டுக்கு மன்னனானவர் முஸ்லீம் மதத்தினால் ஆகர்சிக்கப்பட்டிருக்கிறார். முஸ்லீம் போதரின் கருத்தின்படி, நான் கடவுளின் ஊழியன். தான் சொல்வது கடவுளின் புனிதக் கருத்துக்கள். தான் சொல்லுவதை நம்புபவன் புனிதன் நம்பாதவன்/கீழ்ப்படியாதவன் நாத்திகன். கடவுளின் எதிரி. கடவுளின் எதிரியை கடவுளின் கருத்துக்காகக் கொலையும் செய்யலாம்.

இளவரசியைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறான் செட்டோ வீரனொருவன். இளவரசியின் பெயர் தயர் (Diar)) அவளை ஏற்கனவே அவனறிவான். அவனுக்கு ஒருமுறை தாகம் தீர்க்க குடிநீர் கொடுத்தவள் அவள். அவளை எவரும் எதன் ஆதிக்கத்தின் கீழும் கொண்டு போய்விடுவது அவனுக்குச் சம்மதமில்லை. ஆப்பிரிக்காவின் அழகையெல்லாம் ஒட்டிக் கொண்டிருக்கும் புராதன தேவதை அவள். கடத்திக்கொண்டுபோன அவளுக்காக நிழல் பந்தல் கட்டி ஊஞ்சல் கட்டி இருத்தி வைக்கிறான். நிலத்தில் ஒரு கோதுகீறி அதனைக் கடக்கக் கூடாது எனக் கட்டளையிடுகிறான்.

செட்டோ ஒரு இனமல்ல. ஒரு மக்கள் கூட்டமல்ல. அது பல கலாச்சாரங்கள் நம்பிக்கைகள் மோதும் ஒரு நிலை. மரபார்ந்த ஆப்பிரிக்க கலாச்சார சின்னங்களைப் போற்றும் வட்டமும் கூட அதுதான். இதற்குள்தான் அடிமை வியாபாரி கிறிஸ்தவ போதகன் முஸ்லீம் இமாம் நுழைந்திருக்கிறார்கள். கடத்திக் கொண்டு போகப்பட்ட தன் மகளை/இளவரசியை மீட்க மன்னனிடம் எந்தத் திட்டமும் இல்லை. மன்னனது நம்பிக்கைகள் செட்டொ வீரனுக்கும் முஸ்லீம் இமாமுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

இமாமின் நோக்கம் தெளிவானது. மதத்தின் வழி அரசியல் ஆதிக்கம். கிறிஸ்தவ போதகனதும் வழி அதுவே. அடிமை வியாபாரி இருவருக்கும் இடையில் கலகம் தூண்டி ஆயுதம் விற்றுப் பிழைப்பவன். மன்னனின் சிந்தனையில் தெளிவில்லை. இளவரசியின் சமூகஸ்தானம் உறதியானதில்லை. அவள் முடிவெடுக்கிற நிலையில் ஆண்களின் சமூகம் அவளை விட்டு வைக்கவில்லை. இளவரசியை மீட்கச் செல்லும் இருவர் கொல்லப்படுகிறார்கள். இமாம் சதி செய்து மன்னனை பாம்பு கடிக்கச் செய்து திட்டமிட்டு மன்னனின் ஆசனத்தைக் கைப்பற்றுகிறான். அடுத்த விநாடியே கறுப்பு மக்கள் தலை மரிக்கப்பட்டு பலவந்தமாக முஸ்லீம் பெயர் மாற்றம் செய்யப்படுகிறார்கள்.


செட்டோ மக்கள் சிலர் ஒன்றுகூடி ஆலோசனை செய்கிறார்கள். ஒன்று போராடி மடிவது அல்லது சமரசம் செய்து கொள்வது. ஒருசிலர் தமது மனைவி மக்களை வெள்ளை வியாபாரியிடம் அடகு வைத்து ஆயுதம் வாங்கலாம் என்கிறார்கள். இறுதியில் தம்மை இழக்க விரும்பாமல் அந்த இடத்திலிருந்தே வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்து சென்றுவிட பயணம் மேற்கொள்கிறார்கள். நள்ளிரவில் இவர்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து தீ வைத்து பெரும்பாலோரை சுட்டுக் கொல்கிறார்கள் இமாமால் தூண்டப்பட்டவர்கள்.

இப்போது முழுமக்கள் கூட்டமும் அரசு அதிகாரமும் இமாம் கையில் வந்துவிட்டது. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் தமக்கு உழைத்தவர்களின் மீதே ஆதிக்கம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டார் இமாம். இமாம் தனது ஆதிக்கத்தை வெகுவிரைவில் ஸ்தாபித்துக் கொள்ள கிறிஸ்தவ போதகர் ஏதும் செய்வதறியாது கனவு கண்டு கொண்டேயிருக்கிறார். ஆதிக்கம் முழுவதும் தன் கையில் வந்தவுடன் இமாம் இளவரசியை மீட்டுவந்து தான் மணந்து கொள்வதற்காக ஆட்களை அனுப்புகிறார். வந்த கையாட்கள் செட்டோ வீரனை சரமாரியாகச் சுட்டுக்கொன்று விட்டு இளவரசியை இழுத்துக்கொண்டு வருகிறார்கள். முழுக்கறுப்பு மக்களும் தலை மழிக்கப்பட்டு முஸ்லீம் பெயர் மாற்றப்பட்டு ஆயுதபாணிகள் சூழ அமர்ந்திருக்கிறார்கள். இமாம் எல்லோருக்கம் கட்டளையிட்டபடி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். சில ஆப்பிரிக்கர்கள் எதிர்ப்புணர்ச்சி இருந்தால் கூட நடைமுறையில் ஏதும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

இளவரசி குதிரையிலிருந்து இறங்கி மெல்ல மக்கள் கூட்டத்தைப் பார்த்தபடி நடந்து வருகிறாள். செட்டோ வீரனுக்கு தண்ணீர் கொடுத்த ஞாபகச் சிதறல் வந்து போகிறது. முழுமக்கள் கூட்டமும் வெறித்தபடி மரியாதையுடன் செய்வதறியாது அவள் நிர்க்கதியான நிலையைப் பார்த்து நிற்கிறது. ஆயுதபாணியான ஆப்பிரிக்கனொருவனிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்குகிறாள் இளவரசி. அதை இமாமின் நெஞ்சுக்குக் குறிவைத்து விசையை இழுக்கிறாள்... நாற்காலியோடு தொப்பி கழண்டுவிழ தலைகுப்புற மண்ணில் சரிகிறான் இமாம். முஸ்லீம் மதநம்பிக்கை வெறி உலுப்பப்படும்பொழுது தமது பூர்வீகச் சின்னங்களான தெய்வங்கள் உச்சியில் கொண்ட கொம்புகளை தீயிலிட்டுப் பொசுக்குகிறார்கள் ஆப்பிரிக்கர்கள். அந்த உச்சித் தெய்வம் தயரின் உருவம்தான். ஆப்பிரிக்க இளவரசிதான் ஆப்பிரிக்கத் தெய்வம். இளவரசி உண்மையில் ஆப்பிரிக்க கலாச்சாரத்தின் மறு உயிர்ப்பு.


பெண்கள்தான் இனி உறுதியான நிலைப்பாட்டோடு ஆப்பிரிக்காவில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய சக்கியாக இருப்பார்கள் என்பதற்கான பிம்பம்தான் ஆப்பிரிக்க இளவரசி தயர். அவள் துப்பாக்கி ஏந்தியபடி தீச்சண்யமான விழிகளுடன் நின்று கொண்டிருக்கிறாள்.... செட்டோ படம் செனிகல் உட்பட அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும் இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.


குலேவார்/Gulewaar


குலேவார் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். வெளிநாட்டு உதவிக்கு (Foreign Aid) எதிரான நடவடிக்கையாளர். முப்பதாண்டுகளாக வெளிநாடுகளிடம் கையேந்திக் கொண்டிருப்பது அவருக்கு, நாட்டுக்குத் தலைக்குனிவானதாக இருக்கிறது. பிச்சையெடுப்பவன் எப்போதும் தனது குடும்பத்தை கௌரவமாகக் கட்டியெழுப்ப நினைக்க மாட்டான் என்கிறார்.


முதல் காட்சியிலேயே அவர் சாவு பற்றிய செய்தியோடுதான் துவங்குகிறது. அவருக்கு மகன்கள் ஒருமகள் உண்டு. மூத்தமகன் பிரான்ஸில் இருப்பவன். பிரெஞ்சு பாஸ்போர்ட் வைத்திருப்பவன். மகள் செனிகல் தலைநகர் தாக்கரில் பதிவு செய்யப்பட்ட விபச்சாரியாக இருப்பவள். இளைய மகன் ஒரு கால் விளங்காதவன். இவர் செத்துப் போனதாகவும், அடிபட்ட உள்காயங்களுடன் இறந்ததாகவும் டாக்டர், இவரது மூத்த மகனிடம் சொல்லியிருக்கிறார். இளைய மகன் செய்தியை அம்மா அக்காவிடம் சொல்ல வீட்டுக்கு வருகிறான். மூத்தமகன் அப்பாவின் பிணத்தை வாங்க மார்ச்சுவரிக்குப் போகிறான். மார்ச்சுவரிக்குப் போகத்தான் தெரிகிறது தனது தந்தையின் பிணம் அங்கு இல்லையென. போலீஸ் நிலையம் சென்று புகார் செய்ய, அதிகாரி புறப்பட்டு மருத்துவமனை போய், செத்துப்போன இரண்டு பிணங்களில் மற்றொரு பிணத்திற்கு மாற்றாக இப்பிணம் எடுத்துச் செல்லப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது. பிணத்தைத் தேடி அதிகாரியும் மூத்த மகனும் ஒரு கிராமத்திற்குப் போகிறார்கள்.

சிக்கல் இங்குதான் எழுகிறது. அது முஸ்லீம் விவசாய கிராமம். அவர்கள் பிணம் என்று புதைத்த பிணம்தான் குலேவாருடையது. குலேவார் மதரீதியில் கத்தோலிக்கர். குலேவரின் இறுதிச் சடங்கு இலத்தீன் மொழியில் செய்யப்பட வேண்டும் என்பது அவரது இறுதி ஆசை. அக்கிராமத்தின் முஸ்லீம் ஊர்ப் பெரியவர் ஆளும் கட்சியில் பெரிய ஆள். அவ்வூரில் இருப்பவர்கள் பிணம் தங்களுடையது என்கிறார்கள். எக்காரணம் கொண்டும் பிணக்குழியைத் திறந்து பார்க்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். புதைத்தவன் வரவழைக்கப்பட்டு பிணத்தின் முகம் அடையாளம் பார்க்கப்பட்டதா எனக் கேட்க, இருளில் அது முடியவில்லை எனப் பதில் வருகிறது. மார்ச்சுவரி ரிப்போர்ட் தருவித்துப் பார்க்க அது குலேவாரின் ரிப்போர்ட் எனத் தெரிகிறது.

அப்போதும் அங்கிருக்கும் முஸ்லீம்கள் புதைகுழியை தோண்டிப் பார்க்க அனுமதிப்பதில்லை. கொலை விழும் என்கிறார்கள். பிணம் முஸ்லீம் இடுகாட்டில் இருப்பது குலேவரின் மனைவிக்குத் தெரிவிக்கப்படுகிறது. தனது இறுதிச் சடங்கு தனது கணவனுக்கு அருகில் ஒரு கத்தோலிக்கக் கல்லறையில் செய்யப்பட வேண்டும் என்கிறார் குலேவாரின் மனைவி. முஸ்லீம் மதபோதகரையும் மக்களையும் கிறிஸ்தவப் பாதிரியார் சந்தித்துப் பேசுவது என ஏற்பாடாகிறது. அக்கிராமத்திற்கு குலேவாரின் மனைவியுட்பட கிறிஸ்தவ கத்தோலிக்க மக்கள் வருகிறார்கள். இடுகாட்டில் அவர்கள் அமர்ந்திருக்க பாதிரி சிலருடன் கிராமத்துக்குள் செல்கிறார்.

கிறிஸ்தவர் ஆனால் என்ன? முஸ்லீம் சடங்குகளும் புதைகுழியும் புனிதம்தான் பிணம் அங்கேயே இருக்கட்டும். தோண்டிப் பார்க்க அனுமதிக்க முடியாது என்கின்றனர் முஸ்லீம்கள். முஸ்லீம் தலைவர் இமாம், அது சரியில்லை, பிணத்தைத் தரவேண்டும் என்கிறார். நாத்திகன் என்று அவரை ஏசுகிறார்கள் மதவாதிகள். குலேவரின் மகன் உங்கள் மதத்தை விட எங்கள் மதம் உயர்ந்ததுதான், ஒரு முஸ்லீமை கத்தோலிக்க கல்லறையில் புதைப்பீர்களா? எனக் கேட்கிறான். கலவரம் தொடங்கிவிட்டது. ஆயுதமேந்திய கூட்டம் அவனைச் சூழ்ந்து கொள்கிறது. போலீஸ் அதிகாரி துப்பாக்கியை நீட்டி, சுட்டு விடுவதாக மிரட்டி, பாதிரியையும் அவருடன் வந்தவர்களையும் விலகச் சொல்கிறார்.

கூட்டம் இடுகாட்டிற்கு வருகிறது. கிராமத்திலும் இடுகாட்டிலும் பதட்டம். முஸ்லீம் புதைகுழிகளை கத்தோலிக்கர்கள் தோண்டப் போகிறார்கள் எனப் பீதிகொண்டு முஸ்லீம் மக்கள் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு இடுகாடு நோக்கி வருகிறார்கள். போலீஸ் அதிகாரி ரிசர்வ் போலீசுக்கு தகவல் அனுப்புகிறார். இமாம் ஓடோடி வருகிறார். கத்தோலிக்கப் பெரியவர் வருகிறார். எமது மக்களுக்கு என்னவாயிற்று? ஏன் இப்படி என்கிறார் இமாம். இதே கேள்வியை கத்தோலிக்கப் பெரியவரும் கேட்கிறார். பிணம் மாறிப் போனது விளக்கப்படுகிறது.

கிராம மக்களிடம் திரும்பிவரும் இமாம் பிணக்குழியை தோண்ட வேண்டும் என்றும், குலேவாரை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொல்கிறார். கிராமம் மறுக்கிறது. இமாம் தடைமீறிச் செல்கிறார். கூட்டம் தடுக்க இமாம் மண்வெட்டியால் அடிக்கிறார். இனி எவனாவது ஒரு அடி வைத்தால் I will screw his mother என்கிறார். மதநிந்தனை செய்துவிட்டதாக கூட்டம் அலைமோதுகிறது. அப்போது இந்த நகரத்து மேயரும் போலீஸ் கமிசனரும் வருகிறார்கள்.

பிரச்சினை போலீஸ் அதிகாரியால் விளக்கப்படுகிறது. வந்த மேயர் முஸ்லீம் அரசியல்வாதி. இக்கிராமத்தில் முஸ்லீம் வேர்கள் இருக்கிறது. பிணத்தைத் தோண்ட முடியாது என்கிறார். இதவரை பேசாமலிருந்த குலேவாரின் மூத்தமகன் பேசுகிறான்: எங்கேயிருக்கிறது முஸ்லீம் வேர்கள்? முஸ்லீம் கலாச்சாரம் நைல்நதி தீரத்தில் அல்லது ஏதேனும் ஆப்பிரிக்க நதியின் தீரத்தில் வேர் கொண்டதா? எங்கே இருக்கிறது மெக்கா? சவூதி அரேபியாவில். கிறித்தவம் எந்த ஆப்பிரிக்க நதி தீரத்தில் வேர் கொண்டது? எங்கேயிருக்கிறது ஜெருசலேம்? வேர்களைப் பற்றிப் பேசவேண்டாம். கத்தோலிக்கர்கள் முதலில் செனிகல் குடிமக்கள். முஸ்லீம்கள் செனிகல் குடிமக்கள். செனிகல் குடிமக்களுக்கிடையில் பேசித் தீர்வு காண்போம் என்கிறார்.

போலீஸ் கமிஷனர் மேயரைத் தனியே கூப்பிட்டுப் பேசகிறார். குலேவார் ஆளுங்கட்சியால் படுகொலை செய்யப்பட்டது மெல்ல மெல்ல வெளிவரத்துவங்கிவிட்டது. இந்த விஷயம் சர்வ தேசிய பத்திரிக்கை/தொடர்பு ஊடகங்களுக்குத் தெரிந்தால் அரசுக்குச் சிக்கல். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே கிராமத்தவர்களை சமாதானப்படுத்தி அனுப்புங்கள் என்கிறார். மேயர் கிராமத்து மக்களிடம் போகிறார்: பேசாமல் போங்கள். ரிசர்வ் போலீஸ் நிற்கிறது. உங்களுக்கு பாலும் சர்க்கரையும் அரிசியும் தேனும் வெளிநாட்டு உதவி வந்திருக்கிறது. உடனடியே அனுப்புவேன் என்கிறார். கூட்டம் மேயர் வாழ்க என ஆர்ப்பரித்துக் கொண்டே கலைகிறது. ரிசர்வ் போலீஸ் இரண்டு பக்கமும் மதநம்பிக்கையாளர் திகைத்து மௌனமாக நிற்க பிணம் இமாமினால் தோண்டப்படுகிறது. நாற்றம். எல்லா பிணமும் வெகமதியானதுதான் என மறுபடி தோண்டுகிறார் இமாம். பிணத்தின் முகம் இன்னும் சிதைந்து போகவில்லை. அது குலேவார்தான் முஸ்லீம்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.


பிணத்தை வைப்பதற்காக சவப்பெட்டி இமாமிடம் தரப்படுகிறது. இமாம் துணிகளை மட்டும் கேட்கிறார். ஆப்ரிக்க மக்கள் பூர்வீகமாகப் பயன்படுத்தும் பாடையில் வைத்து துணிமூடிக் கட்டி பிணம் கிறிஸ்தவப் பெரியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இமாம் நோக்கி கிறிஸ்தவப் பெரியவர் சொல்கிறார்: ‘நீங்கள் செய்த காரியம் மனித குலமே பெருமிதப்படத்தக்க காரியம்’. சவப்பெட்டி பயணம் தொடங்குகிறது. எதிரில் மேயரால் அனுப்பப்பட்ட வெளிநாட்டு உதவி உணவு, பால்பவுடர், மாவு போன்றன ஏற்றப்பட்ட வண்டி வருகிறது. சவ ஊர்வலத்தின் முன் வரும் குலேவாரின் மீதேறி மூட்டைகளை தரையில் சரித்து பொருட்களைப் புழுதியில் கொட்டுகிறார்கள். கிறிஸ்தவப் பாதிரியாரும் கிறிஸ்தவ இனப் பெரியவரும். அதைப் பாவம் எனத் தடுக்க குலேவாரின் மனைவி அதை நியாயம் என்கிறாள். மாணவர்கள் அனைத்தையும் புழுதியில் கொட்டுகிறார்கள். அவைகளை மிதித்தபடி கூட்டம் நகர்கிறது...

குலேவாரின் பிரசங்கம் ஒலிக்கிறது. “உதவிக்கு வெளிநாடுகளிடம் கையேந்திக் கொண்டிருப்பவனுக்கு தெரிந்ததெல்லாம் மூன்று வார்த்தைகள்தான். நன்றி நன்றி நன்றி. பிச்சையெடுப்பது கேவலமானது. தலைக் குனிவானது. பிச்சையெடுக்கிறவன் எப்போதும் தனது குடும்பத்தைக் கட்டியெழுப்ப மாட்டான்.”

இந்த மூன்று படங்களில் சாராம்சமாகவும் வெளிப்படையாகவும் இறுதியாகவும் தேர்ந்து கொள்ளக்கூடிய விதங்களையே நான் கொடுத்திருக்கிறேன். சொல்லப்பட்ட இந்த வாழ்வினூடே இந்தப் பிரச்சினையினூடே ஆயிரம் கிளை விவரங்கள் ஆயிரம் கிளைப்பிரச்சினைகள் விரிந்து கொண்டே போகின்றன. இந்தப் படங்களில் வருகிற எந்த மனிதர்களும் தட்டையான மனிதர்களோ ஒற்றைப்படை மனிதர்களோ அல்ல, முரண்பட்ட குழப்பமான சமூக மனிதர்களுக்குரிய முரண்பட்ட பிறழ்வுண்ட ஆளுமைகளையே இவர்கள் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனிதர்கள் என்கிற அளவில் இம்மனிதர்களின் செயல்கள் சமூக இயக்கத்தை சலனப்படுத்தி முன் ஏந்திச் செல்கிறது. சமூக இயக்கம் பற்றிய கலைஞனது தேர்வே மனிதர்களை அவர் உலகங்களைத் தேர்வதிலும் பாத்திரம் வகிக்கிறது. எவ்வளவு அசலாகவும் ஆழ்தளத்திலும் கலைஞன் சஞ்சரிக்கிறானோ அவனே அசல் முகத்துடனும் ஆழ்தளத்திலும்தான் அவனது மனிதர்கள் சுயாதீனமாகச் செயல்படுகிறார்கள். கலையின் சூட்சுமமும் இதுதான்.

சாபம் படத்தில் வரும் ஹஜீத் குற்றவுணர்வுள்ளவன். சபிக்கப்படுவதற்கு நிறைய காரணங்கள் கொண்டவன். அவனுக்கு சாபமீட்சி வேண்டும். தினமும் மூன்று லிட்டர் பிரெஞ்சு ஏவியன் தண்ணீர் குடிப்பவன், தனது பிரம்மைகள் அழிபட்டு சொந்த முகம் வருகிறபோது, வுலப் மொழியில் கெட்டவார்த்தை பேசுகிறான். இவனேதான் ஒருமுறை தன்மகள், தான் பிரெஞ்சில் பேச அவள் வுலப் மொழியில் பேச எரிந்து விழுந்தவன். தன் மீட்சிக்காக அவன் காறித்துப்பப்பட நிற்கிறான். தன் குற்றத் தண்டனைக்காகவும் அவன் காறித்துப்பப்பட நிற்கிறான். உண்மையில் அவனது Impotency சாபம். அவன் அசல் ஆப்பிரிக்கனும் அல்ல முழு பிரெஞ்சுக்காரனும் அல்ல. புதிய காலனிய மூளை அடிமையான கறுப்புப் பிரெஞ்சுக்காரன். நிலம் பறி கொடுத்த விவசாயிகளும், பணம் பறிகொடுத்த விவசாயினாலும் அங்கங்களைப் பறிகொடுத்த முடவர்களாலும், தன் மொழி ஆளுமையைப் பறிகொடுத்த வுலப் மொழி பத்திரிக்கையாளனாலும் காறித்துப்பப்பட வேண்டியவன்தான் அவன்.

இப்படத்தன் முதல் மனைவி மிகச் சாதாரணமான ஆனால், தெளிவான மரபார்ந்த மனுசி. இரண்டாம் மனைவி தன்னளவில் கலகக்காரி. முதல் மனைவியின் மகள் அரசியல் ரீதியில் முதிர்ந்தவள். தனது தாயை மணவிலக்கு பெறச் சொல்கிறாள். தனது தந்தையின் ஆண்மையின்மைக் காரணங்கள் பற்றி அவருடனே பேச விழைகிறாள். காறித்துப்பப்பட வேண்டியவன் கற்றத் தண்டனையைப் பெற நிற்பவன் ஹஜீத் மட்டுமல்ல முழு காலனிய மூளை அடிமை வர்க்க அறிவுஜீவிகள்/வியாபார வர்க்கத்தினர்தான்.

’வெளியாள்’ படத்தில் வரும் இளவரசி தப்பிப்போக நினைக்கிறாள். அவன் இருவரைக் கொன்ற பின்னால் குளத்தில் மூழ்கி நீராடி அவனுக்கு குடிக்க நீர் கொடுக்கிறாள். திறந்த உடலுடன் தனது திமிர்ந்த மார்புகள் அலைய கண்கள் செறுக அவனைப் பார்த்து நடக்கிறாள். தவறுதலாக வைத்துவிட்ட விஷ அம்பையும் வில்லையும் அவனுக்கு எதிரே பாவிக்க நினைக்கிறாள். அவனும் அவளது தந்தையும் கொல்லப்படும்போது இமாமைச் சுட்டுக் கொல்கிறாள். தானும் தனது ஆளுமையும் தனது இருத்தலும் தனது விடுதலையும் மட்டுமே அவளை ஜீவிக்க வைக்கும் ஊற்று. அவள் நேசம், அவள் நேசம், அவள் எதிர்ப்பு, அவள் கட்டற்ற தன்மை, எல்லாமே அவள் வாழ்வின் பகுதிகள்தான். அவள் ஒரே சமயத்தில் விடுதலை விளையும் மானுடப் பெண். அதேவேளை முழு ஆப்பிரிக்காவினதும் மறுவிழிப்பு.

’குலேவார்’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பிரெஞ்சிலிருந்து வந்த மூத்த மகனுக்கு ஆரம்பத்தில் செனிகல் மீது மரியாதையேயில்லை. ஆனால் செனிகலின் அதிகாரவர்க்க அணுகுமுறை அவனை செனிகல் குடிமகன் என்பதற்கான அவசியத்தை உணர்த்துகிறது. அவனுக்கு வுலப் மொழி தெரியாது. பிரெஞ்சு மட்டுமே தெரியும். தனது சகோதரி விபச்சாரி என்பதால் ஏற்க மறுக்கும் அதேவேளை தன்தாயை தான் ஏற்பது பற்றி மௌனம் சாதித்து, தாயை தன் சகோதரியுடன் செல்லப் பணிக்கிறான். குலேவாரின் குடும்பத்தின் பணச்சுமையை மனைவிகூட அவரது அரசியல் நம்பிக்கைகளை ஏற்றால் கூட அவரால் பொருளாதார ரீதியில் வீட்டுக்குப் பயனில்லை என்பதையும் சொல்லிக் காட்டுகிறாள்.

குலேவாரின் அரசியல் நம்பிக்கைகள் தீவிரமாயினும் கூட அவர் இன்னொருத்தன் மனைவியோடு பெண்வேஷம் போட்டுச் சென்று குலவும் வேளையில் பிடிபட்டு நிர்வாணமாக ஓடிவந்ததை பின்நினைவுகளாகப் பேசுகிறார்கள் சக ஆசிரியர்கள். சின்னச்சின்னச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் விவரங்கள் படத்தில் தீவிரத்தன்மைக்குக் காரணமாகின்றன. சாவு வீட்டுச் சடங்குக்கு தம்பங்காக தரும் ஆட்டுக் குட்டிகள், கல்யாணச் சாபம் வராதிருக்க மாவிடிக்கும் உருளை, தனது கணவனின் துணிகளோடு தனிமையில் பேசும் மனைவி, சாபம் படத்தின் நிகழ்காலத்துக்கொப்ப உரத்துப் பேசும் கதை சொல்லி மாதிரியான சேவகன். சாபம் படம் தவிர 20ஆம் நூற்றாண்டுக் கதைப்படங்களான இரு படங்களில் கதை சொல்லியின் பிரசன்னம் இல்லை.. பன்முகத்தன்மை / பல்குரல் போன்றவை பின் நவீனத்துவ / பின் அமைப்பியல் / பின் மார்க்ஸீய அழகியல் அணுகுமுறையில் கலைஞனின் வாழ்வு பற்றிய ஆழ்ந்த விசாரணை மற்றும் தேர்வுக்கேற்பவே வெளிப்படும். 

இந்தப் பன்முகத்தன்மை / பல்குரல் அவர்கள் தேர்ந்துகொள்ளும், அவர்களை உறுத்தும் வாழ்வனுபவம் தேர்வு போன்றவற்றிலிருந்தே விரிவுபெறும். மூன்று படங்களிலும் கிறிஸ்துவ மதத்தின் மீதான விமர்சனமென்பது முஸ்லீம் மதத்தின் மீதான விமர்சனத்தைப் போலக் கடுமையானதாக இல்லை. காரணம் 75 சதவீதமான செனிகல் மக்கள் முஸ்லீம் மதத்தினர் 15 சதம் கிறிஸ்தவர் மிஞ்சிய 10 சதவீத மக்களே பூர்வீக ஆப்பிரிக்க மதங்களைக் கடைபிடிக்கிறார்கள். செம்பேன் உஸ்மேனைப் பொறுத்து பிரச்சினை வரலாற்றில் பின் திரும்பிப் போவது என்பதல்ல. சமூக வாழ்விலும் அரசியலிலும் மதத்தின் ஆதிக்கத்தையும் அதிகாரத்தின் மானுடவிரோதத் தன்மையும் கேள்விக்கு உள்ளாக்குவதுதான். ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பாலும் அரசியல் தலைவர்களை விடவும் அதிகார மையங்களைக் கொண்டவர்களாக மதகுருமார்கள் இருக்கிறார்கள்.



செம்பேனின் பெரும்பாலான படங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் தடைசெய்யப் படுகின்றன. ஆட்சியுள்ளவர்களை முதலாளித்துவவாதிகளை ஆதிக்க மதவாதிகளை விமர்சிப்பதுதான் அதன் காரணம் கம்யூனிஸ எதிர்ப்புப் படங்களையோ கத்தோலிக்க எதிர்ப்புப் படங்களையோ சேம்பேன் எடுப்பாரானால் ஒரு காட்சியும் வெட்டாமல் திரையிடுவார்கள் என்கிறார். செம்பேன் Xala படம் 11 இடங்களில் வெட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் Ceddo படம் கடைசியில் இமாமைக் கொல்லும் பெண் சித்தரிப்புக்காகவே தடை செய்யப்பட்டது. ஏனெனில் ஆப்பிரிக்க சமூகங்களில் பெண் சக்தி வாய்ந்த தன்னலமிக்க உயிர்ஜீவியாக அங்கீகரிக்கப்படவில்லை.

பெரும்பான்மை இந்து ஆதிக்கவாதிகள் சிறும்பான்மை முஸ்லீம் கிறிஸ்தவர்கள் உள்ள நிலையோடு இதை ஒப்பிட முடியாவிட்டாலும், அரசியல் ஆதிக்கம் பெறும் எந்த மதமும் மனித விரோதத் தனைமையையே கொண்டிருக்கும். உண்மையில் இடதுசாரிகள் மதத்திலிருந்து வடிவமைத்துக் கொள்ளக் கூடிய விடுதலைக் கோட்பாடுகள் மானுட விடுதலைத் தத்தவத்தோடோ, மதச்சார்பற்ற சிந்தனையினோடோ இணைந்து போகும் என்று தோன்றவில்லை. மதங்களை எவ்வகையிலும் பாதுகாத்து நிற்கிற கடமை இடதுசாரிக்கு இல்லை. மதத்தைப் புரிந்து கொண்டு மதங்களிலிருந்து தூரப்படுத்திக் கொள்வதே இன்றைய தேவை.

பன்முகத்தன்மை! பல்குரல் போன்ற நவீன இலக்கியக் கருத்தகங்கள் வர்க்க/சாதிய/இன அதிகார நிலைகளை முற்றிலும் கடந்து போய் விடமுடிவதில்லை. அதிகாரத்துக்குள்ளேயே தங்கிவிடும் பல்குரல்களும் உண்டு, அதை உடைத்துக் கொண்டு நகரும் பல்குரல்களும் உண்டு. செம்பேனின் மனிதர்கள் பல்முகங்களையும் பல்குரல்களையும் விலக்கிக்கொண்டு திரையினின்றும் இருளிலிருந்தும் இறங்கி தெருவில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநிறைய மனிதர்கள், கூச்சல், கோசங்கள், முத்தமிடும் சப்தம், பிணங்கள், ராணுவ வாகனங்கள், பிரசவ வேதனை, குழந்தைகள், ஆர்ப்பாட்டங்கள், விலக்கியபடி போய்க் கொண்டிருக்கிறார் செம்பேன்...செம்பேன் உஸ்மான் ஒரு மார்க்ஸியவாதி. பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராயிருந்தவர். தீவிர நாத்திகர். நூறாண்டு சினிமாவின் கறுப்புச் சிங்கம்.

கட்டுரைக்கான ஆதார புத்தகங்களும், விமர்சனங்களும், நேர்முகங்களும்

1.Ceddo: Screen Griots. The Art and Imagination of African Cinema
Programme Notes. NFT/Aug 1995.
2. African on Film: BBC Brochure march/April 1991.
3. Ousmane Sembene in cinema Astride Two cultures ray Armes:
California University Press 1987.
4. Film Frame: 15/16/17. 1981! Sembane Interview.
Film Frame: 7/8 1978: Sembene History
6. Xala: African 95. / Cannoisier Video Films / August 1995.
7. Africa on Africa Season 1992 / gulewarr / channel 4 London
8. Ceddo: A Revolution reborn through the efforts of womanwood.
Teshome Gabrial / Film Frame 15/16/17. 1981