வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல்

ஷியாம் பெனகலின் பிறப்பும் வளர்ப்பும்
 
கர்நாடக மாநிலத்தின் ’தென் கன்னட’ மாவட்டத்தில் ’கொங்கனி’ மொழி பேசும் ’சரஸ்வத பிராம்மணர்கள்’அதிகம்! அப்படி ஒரு குடும்பத்தில் பிறந்து புதுதில்லியில் புகைப்படம் எடுப்பவராக வாழத் தொடங்கியவர் ’ஸ்ரீதர் பெனகல்’ என்பவர். 1916 முதல் 1920 வரை ஐந்தாண்டுகள் வெள்ளையர்களையும், அவர்களது குடும்ப நிகழ்வுகளையும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் ஆகியவற்றையும் புகைப்படங்கள் எடுத்துப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதும், சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிரதிகள் எடுத்துக் கொடுப்பதுமாகத் தொழில் புரிந்தவர் ஸ்ரீதர் பெனகல். ஆசஃப் அலி, அன்னிபெசன்ட் ஆகியோர் தொடங்கிய ’தன்னாட்சி’ (HOME - RULE) இயக்கத்தில் தம்மையும் இணைத்துக் கொண்ட அவர், பின்னர் காங்கிரஸ் கட்சியிலும், மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்டவராக மாறினார்.

புகைப்படக்காரராகப் பணியாற்றிய போதே புதுதில்லியில் திரையிடப்பட்ட தொடக்க கால மௌனப் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறார். அத்துடன், 16 எம்.எம். கேமரா மற்றும் 8 எம்.எம்.கேமரா ஆகியவற்றையும் விலைக்கு வாங்கித் தாமே அவற்றை இயக்கக் கற்றுக் கொண்டு, அந்தக் கேமராக்கள் மூலம் அசையும் படங்களையும் பிடித்து வந்திருக்கிறார்.

தினமும் காலையில் சிறிது நேரம் 'சர்க்கா'வில் நூல் நூற்று விட்டுத்தான் பணிக்குக் கிளம்புவாராம். அப்படிப்பட்டவரிடம் ஒருநாள் (1920ல்) ஒரு வெள்ளையர் இந்தியர்களைக் குறித்து ஏதோ இழிவாகப் பேசி விட, அதைப் பொறுக்க இயலாத ஸ்ரீதர் பெனகல் அந்த வெள்ளையரின் கன்னத்தில் அறைந்து விட்டாராம். விடுவார்களா வெள்ளையர்கள்?! ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்ய 'பிடிவாரன்ட்' ஏற்பாடு செய்து விட்டார்கள். அதை முன்னதாகவே தெரிந்து கொண்ட ஸ்ரீதர், தம்மிடமிருந்த புகைப்படக் கேமராக்கள், 16 எம்.எம். 8 எம்.எம், திரைப்பட (மௌனப்பட) கேமராக்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு எப்படியோ தில்லியை விட்டுத் தப்பித்து ஹைதராபாத் போய்ச் சேர்ந்திருக்கிறார்.

அப்போது ஹைதராபாத்தும் அதைச் சுற்றியுள்ள ஊர்களும் நிஜாம் ஆட்சிக்குட்பட்ட தனி சமஸ்தானமாக இருந்ததால், தில்லிக் காவல் துறையினர் அங்கு சென்று ஸ்ரீதரைக் கைது செய்ய இயலவில்லை. (தமிழ்நாட்டு பாரதியார், புதுச்சேரியில் சென்று வாழ்ந்தது போல) ஸ்ரீதர் பெனகல் ஹைதராபாத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'த்ரிமுல்கெரி' (TRIMULGHERRY) என்ற இடத்தில் வாழத் தொடங்கியிருக்கிறாார்.

Image result for shyam benegal parents
 
அங்கு வெள்ளையர்களின் படைப் பிரிவும் அவர்களது குடியிருப்பும், நிஜாமின் அனுமதியுடன் வைக்கப்பட்டிருந்ததால் (CANTONMENT) அங்கிருந்த வெள்ளையர், புகைப்படம் எடுத்துக் கொள்ள ஸ்ரீதர் பெனகலின் ஸ்டுடியோவுக்குத் தான் வருவார்களாம். அதனால் அவரது வருமானமும் வசதிகளும் பெருகியிருக்கின்றன.
 
திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த ஸ்ரீதர், தென்கன்னட மாவட்டத்தின் ஒரு சிற்றூரைச் சேர்ந்த சரஸ்வதி என்ற 14 வயது இளம் பெண்ணை 1921ல் மணந்து, ஹைதராபாத்துக்கு அழைத்து வந்தார். அவரது கிராமத்தில் பள்ளியில் படித்த ஒரே பெண் சரஸ்வதிதானாம்! இருவருக்கும் இடையே வயது வேறுபாடு அதிகம்.
 
அடுத்த ஆண்டு தொடங்கி, இரண்டாண்டுகளுக்கு ஒரு குழந்தை என்ற வகையில் அவர்களுக்குப் பத்துக் குழந்தைகள் பிறந்தனர். ஆறு பெண் குழந்தைகளும், நான்கு ஆண் குழந்தைகளும் கொண்ட அக்குடும்பத்தைப் பின்னர் ஷியாம் பெனகல் ஒரு 'கிளப்' என்று நகைச்சுவையாக வர்ணித்தது உண்டு. ஒவ்வொரு குழந்தை பிறந்ததும், அது பிறந்த முதல் நாளிலிருந்து, (அடுத்த குழந்தை பிறக்கும் வரை) தினசரி ஒரு புகைப்படமாக எடுத்துத் தள்ளுவாராம் ஸ்ரீதர் பெனகல். இப்படியாக அந்தப் பத்துக் குழந்தைகளின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் அவர்களது இல்லத்தில் குவிந்து கிடக்குமாம்! அத்துடன் அவரிடமிருந்த (கைகளால் இயக்க வேண்டிய) 16 எம்.எம். கேமராவில் வேறு தமது குடும்பத்தினரை 'ஷூட்' செய்து, அவற்றைப் பிரதியெடுத்து, திரையிட்டுக்காட்டுவாராம்! அதற்கு வசதியாக மூன்று லென்ஸ்கள் கொண்ட ஒரு புரொஜெக்டரும் வைத்திருந்தாராம்.
அதில் 16 எம்.எம்., 8 எம்.எம்., 9 1/2 எம்.எம். ஆகிய மூன்று வகைப் படங்களையும் மாட்டித் திரையிட முடியுமாம்!
 
ஸ்ரீதர் பெனகலுக்கு புகைப்படமெடுப்பது தவிர ஓவியம் வரைவதிலும் பிற நுண்கலைகளிலும் திறமையும் ஈடுபாடும் இருந்திருக்கிறது. அதனால் அவரது இல்லமே ஒரு பெரும் கலைக் கூடமாக இருந்திருக்கிற.

அவர் காந்தியவாதி மட்டுமல்லாது பல வகைகளில் முற்போக்குக் கருத்துக்கள் கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.
 
மேலும், வெள்ளையர்கள் கொண்டு வந்த கல்வி முறையில் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லாமலிருந்ததால், வழக்கமான பள்ளிப் படிப்பு மட்டும் தமது குழந்தைகளுக்குப் போதுமானதாக இருக்காது என்று கருதினார். ஆகவே அவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு கலையையோ கைத்தொழிலையோ கற்றுக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார். குழந்தைகள் தினந்தோறும் காலையில் இராட்டையில் நூல் நூற்க வேண்டுமென எதிர்பார்ப்பார். அவர்களும் அவ்வாறே நூற்று விட்டுத்தான் பள்ளிக்குப் போவார்கள். அவர்கள் நூற்ற நூலையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் கதர்க் கடையில் கொடுத்து அதற்குப் பதிலாக அவர்களுக்கு உடுத்திக் கொள்ள கதராடைகள் வாங்கி வருவாராம். (அந்த வகையில் ஷியாம் பெனகல் கல்லூரியில் சேரும் வரையில் கதர் வேஷ்டியும், கதர் சட்டையுமே அணிந்து வந்தாராம்). இயற்கையுடன் இயைந்து வாழ்வதெப்படி என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பாராம்.
 
ஷியாமின் ஓர் அண்ணனும் அக்காவும் ’ஹிந்துகுருகுலம்’ ஒன்றில் தங்கிப் படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களிருவரும் பாரம்பரியக் கல்வி முறையிலேயே பயின்றிருக்கின்றனர். அது ஹைதராபாத்தில் ’பேகம்பேட்’பகுதியில் இருந்தது. பிறகு அவர்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலக் கல்வி முறையில் உயர்கல்வி கற்றனர்.
 
மகன்களை விட, மகள்கள் அதிகமாக நன்கு படிக்க வேண்டுமென எதிர்பார்ப்பாராம். ஏனெனில், மகன்கள் பள்ளிப் படிப்புக்குப் பிறகு தாங்களாகவே உழைத்து சம்பாதித்து மேல் படிப்பு படிக்க முடியும். ஆனால் பெண்களால் அவ்வாறு படிக்க முடியாதே என்று அவர் கருதியதால்தான்! ஆறு பெண் குழந்தைகளையும் கல்லூரியில் பயின்று பட்டம் பெறச் செய்திருக்கிறார்.
 
ஷியாம் பெனகல் தமது ஐந்தாவது வயதில் (அதாவது இரண்டாவது உலகப் போர் தொடங்கிய சில மாதங்களுக்குப் பின்) ”செயின்ட் ஆன் கான்வென்ட்” என்ற பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆறாம் வகுப்பை மட்டும் ”வெஸ்லி உயர்நிலைப்பள்ளி”யில் பயின்ற பிறகு, ஏழாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை ”மஹபூப் கல்லூரி உயர்நிலைப் பள்ளி”யில் பயின்று வெளிவந்தார்.
 
பின்னர், ”உஸ்மானியா பல்கலைக்கழகத்”தின் கீழிருந்த ”நிஜாம் கல்லூரி”யில் சேர்ந்து பொருளாதாரப் பாடத்தில் பட்டம் பெற்றார். கல்லூரி நாள்களில் பாடத்துடன், கற்பனைக் கதைகள், கவிதைகள், புதினங்கள் ஆகியவற்றைக் கற்பதிலும் ஷியாமுக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததால் கல்லூரி நூலகத்திலிருந்து பெரும்பான்மையான நூல்களைப் படித்து முடித்தார். பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியதுடன், கல்லூரியில் கொண்டு வரப்பட்ட ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மாணவர் சங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறார். அத்துடன் ஓவியம் வரைவதிலும் புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகுந்த திறமை கொண்டிருந்தார். மேலும் கல்லூரி நீச்சல் ’சாம்பியனாகவும்’ இருந்து வெளியூர்களில் நடந்த நீச்சல் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளும் பெற்றிருக்கிறார். எல்லாவற்றையும் விட முக்கியமாக, கல்லூரி விழாக்களில் ஆங்கில நாடகங்களை எழுதி, இயக்கி அவற்றில் நடித்துமிருக்கிறார். அத்துடன் டி.எஸ். எலியட் எழுதிய ”மர்டர் இன் த கதீட்ரல்” (MURDER IN THE CATHEDRAL) என்ற ஆங்கில நாடகத்தை, கல்லூரிக்கு வெளியிலும் தமது நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்து மேடையேற்றியிருக்கிறார்.
 
இதுபோன்ற அனுபவங்கள்தான் பின்னர் அவர் ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குனராகப் புகழ்பெற அடித்தளமாக இருந்திருக்கின்றன போலும்!
அவரது பள்ளி, கல்வி நாள்களில் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது என்பது 1945ல் தெளிவானவுடனேயே, வெள்ளையர்கள் ஒவ்வொரு குடும்பமாக இங்கிலாந்துக்குத் திரும்பத் தொடங்கினர். அவர்களது இராணுவ வீரர்களும் ஆங்காங்கிருந்த 'கன்டோன்மெண்ட்டு'களை மூடிவிட்டுப்
புறப்பட்டனர். இதனால், 'த்ரிமுல்கெரி'யில் இருந்த வெள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறினர். ஸ்ரீதர் பெனகலின் புகைப்பட ஸ்டுடியோவுக்கு வந்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் குறைந்ததால், ஸ்டுடியோவுக்கு வருமானமில்லாமல் போனது.
 
1946ல் ஸ்ரீதர் பெனகலின் சொந்த வீடு ஏலம் விடப்பட்டது. குடும்பத்தினர் அப்போதுதான் வறுமையின் கொடுமையை உணரத் தலைப்பட்டனர். பன்னிரண்டு வயதான ஷியாமுக்கு அது ஒரு பேரிடியாக இருந்தது. மூத்த சகோதரரின் வருமானத்தில் மட்டுமே பன்னிரண்டு நபர்கள் கொண்ட அக்குடும்பம் வாழ வேண்டியிருந்தது.
 
Related image
 
 1947ல் நாடு விடுதலை பெற்றபோது ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய யூனியனில் சேர மறுத்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் ஹைதராபாத் இந்திய யூனியனில் சேரவேண்டுமென வலியுறுத்தி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர். ஷியாம் பெனகலும் அந்தப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். அதனால்தான் அவர் மூன்று பள்ளிகளில் மாறி மாறிக் கல்வி கற்க வேண்டியிருந்தது.
 
வறுமையிலும் செம்மை என்ற வகையில் ஷியாமும் அவரது சகோதர சகோதரிகளும் கல்வி கற்பதை மட்டும் நிறுத்தவில்லை.
மூத்த சகோதரரான சுதர்ஸன், கல்கத்தாவில் அவர்களது சிறிய தந்தையான பி.பி. பெனகலின் ஓவியக் கூடத்தில் பணியாற்றி அங்கு கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை அனுப்பி வந்தார். சுதர்ஸன் பெனகல் இடதுசாரிக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவரானார்.
 
மற்றொரு சித்தப்பாவான தினகர் பெனகல் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸின் 'இந்தியத்' தேசிய இராணுவத்தில் சேர்ந்து அன்றைய பர்மாவின் தலைநகரான ரங்கூனில் பணியாற்றி வந்தார். 1945ல் நேத்தாஜிமறைந்ததும், பர்மாவை ஜப்பானியர்களிடமிருந்து, ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதும், அங்கிருந்த 'இந்தியத் தேசிய இராணுவத்தை'ச் சேர்ந்தவர்கள் இந்திய நாட்டுக்குத் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள்.
 
அந்த வகையில் தினகர் பெனகலும் பர்மாவிலிருந்து கால்நடையாகவே நடந்து பல இன்னல்களுக்காளாகி 1946ல் கல்கத்தா வந்தடைந்தார். அவரை அடையாளம் கண்டு கொண்ட வெள்ளையர் அரசு, அவரைப் பம்பாய்க்குக் கொண்டு வந்து சிறையிலடைத்து, பிறகு ஐ.என்.ஏ. வீரர்களுடன் அவரையும் விசாரணை செய்தது.
 
1947 இந்தியா விடுதலையடைந்ததும், அவர்களனைவரும் விடுவிக்கப்பட்டதால் தினகர் பெனகல், ஹைதராபாத்துக்கு வந்து ஸ்ரீதர் பெனகல் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டார். அவர் மிகவும் உடல் நலம் குன்றியிருந்ததால், எந்தப் பணியும் ஆற்ற முடியாமல் இருந்தார். ஆனால்அவர்தான் ஷியாம் மீது ஓர் அறிவார்ந்த பாதிப்பை ஏற்படுத்தினார். இலக்கியம், திரைப்படம், வானியல் & அவருக்கிருந்த ஈடுபாடும் புலமையும் ஷியாமைக் கவர்ந்தன. அத்துறைகள் குறித்து ஏராளமான நூல்களையும் அவர் கொண்டு வந்திருந்ததால், அவற்றை எல்லாம் ஷியாமுக்கு அவரது தம்பி சதானந்தத்துக்கும் கொடுத்துப் படிக்கச் செய்தார். அத்துடன் அவர்களை வீட்டின் அருகில் இருந்த 'காரிசன்' என்ற திரையரங்குக் கூட்டிச் செல்வார். அதனால் அமெரிக்க மற்றும் இங்கிலாந்துத் திரைப்படங்களைக் காணும் வாய்ப்பு ஷியாமுக்குக் கிடைத்தது. (அவரது தந்தையான ஸ்ரீதரோ, தமத குழந்தைகள் ஆங்கிலப் படங்களைக் காண அனுமதித்ததில்லை. 'பிரபாத் ஸ்டுடியோஸ்' மற்றும் 'நியூ தியேட்டர்ஸ்' நிறுவனங்கள் தயாரித்த மராத்தி மற்றும் இந்தி (சமூகப் படங்களை மட்டுமே பார்க்க அனுமதிப்பார்).
 
தினகர் பெனகலின் மற்றொரு சகோதரரான ரமேஷ், நேத்தாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்ததுடன், ஜப்பானுக்குச் சென்று அங்கு விமானம் ஓட்டவும் கற்றுக் கொண்டார். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானில் இருந்த அவர், நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்டதற்கு மறுநாள் ஓர் ஜப்பானிய விமானத்தில் நாகசாகி நகரின் மேலே பறந்து, அந்நகரின் அழிவை நேரில் கண்டு நேத்தாஜிக்கு விளக்கியவர். அவரும் 1946ல் இந்தியா திரும்பியதும், அண்ணன் தினகரைப் போலவே, வெள்ளையர் அரசால் கைது செய்யப்பட்டவர். 
 
பின்னர் 1947ல் விடுதலை செய்யப்பட்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த 1965ல் இந்தியா & பாகிஸ்தான் போரின் போது முக்கியப் பங்காற்றினார்.

ரமேஷ் பெனகல் மூலமாக, நேத்தாஜி குறித்தும், இந்தியத் தேசிய இராணுவத்தின் சாகசங்கள் குறித்தும் ஏராளமான செய்திகளைத் தெரிந்து கொண்ட ஷியாம் பெனகல் நேத்தாஜி மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் வளர்த்துக் கொண்டார். (அதன் காரணமாகவே 2004 & 05ல் "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்" என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தையும் உருவாக்கினார்).

1948ல் ஜவஹர்லால் நேரு எழுதிய மூன்று நூல்களான "மகளுக்குத் தந்தை எழுதிய கடிதங்கள்" (LETTER FROM A FATHER TO A DAUGHTER), உலக வரலாற்றின் சில பார்வைகள் (GLIMPSES OF WORLD HISTORY) மற்றும் "கண்டுணர்ந்த இந்தியா" (DISCOVERY OF INDIA) ஆகியவற்றைப் பரிசுகளாகப் பெற்று அவற்றை ஆழ்ந்து படித்தார்.
 
அந்தத் தாக்கத்தினால்தான் 1986லிருந்து 1991வரை நீண்ட ஒரு மெகாத் தொடராக "பாரத் ஏக் கோஜ்" (BHARAT EK KHOJ) என்ற தொலைக்காட்சித் தொடரை, தூரதர்ஷனுக்காக உருவாக்கினார். இப்படியாக அவரது மூத்த சகோதரரான சுதர்ஸன் மூலமாக, ஷியாமுக்கு ஓவியத்தில் ஈடுபாடு வந்தது; 
 
சித்தப்பா தினகர் மூலமாகத் திரைப்படங்கள் பார்க்கும் ஈடுபாடும், இலக்கியங்களைப் பார்க்கும் ஈடுபாடும், இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டது; மற்றொரு சித்தப்பாவான ரமேஷ் மூலமாக நேத்தாஜி மீது அபார பக்தியே வந்தது என்று சொல்லலாம். முன்னதாக அவரது தந்தை ஸ்ரீதர் ஒரு காந்தியவாதியாகத் திகழ்ந்ததால், நாட்டுப்பற்றும் அண்ணன் சுதர்ஸன் ஒரு 'கம்யூனிஸ்ட்' ஆதரவாளராக இருந்ததால், இடதுசாரிக் கருத்துக்களின் தாக்கமும் ஷியாமுக்கு உண்டாயின. (ஆனால் அவரது தம்பியான சதானந்த்தோ, ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுதாபி!).
 
Related image
 
ஆகவே, குடும்பத்தினர் ஒன்று கூடி மகிழும் நாள்களில் இவர்கள் அத்தனை பேரும் மேற்கொண்ட விவாதங்கள் எல்லாம் அறிவு பூர்வமானதாகவும், சுவாரஸ்யமாகவும் அமைந்தன!
இத்தனை தாக்கங்கள் ஷியாம் பெனகல் மீது ஏற்பட்டதனால்தான், பின்னர் அவரால் அந்தமாறுபட்ட கருத்தாக்கங்களைத் தமது திரைப்படங்களில் கொண்டு வரமுடிந்திருக்கிறது. இதனால்தான், இந்திப் படங்களின் 'மசாலா'ப் பாணியும் இல்லாமல் மணிகவுல் குமார் சஹானி ஆகியோரின் பாணியும் இல்லாது, ஓர் இடைப்பட்ட (MIDDLE CINEMA) பாணியில் திரைப்படங்களை உருவாக்க முடிந்திருக்கிறது.
 
தொடரும்

(கட்டுரையின் முந்தைய பாகத்தைப் படிக்க: