வெள்ளித்திரை வித்தகர்கள் ஷியாம் பெனகல்  அறந்தை மணியன்: தொடர்ச்சி


ஷியாம் பெனகல் இயக்கிய மேலும் சில படங்களை இனி பார்க்கலாம்:
 
“கலியுக்” (KALIYUG)

1980ல் வெளிவந்த இப்படத்தில் மகாபாரதத்தில் இடம் பெற்ற சில முக்கியக் கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு, அவர்கள் நவீன இந்தியாவின் 1980களில் வாழ்ந்த செல்வந்தக் குடும்பத்தினராகக் கற்பனை செய்திருந்தார். “பூரண்சந்த்”, “கூப்சந்த்” என்ற சகோதரர்கள் இருவரும் பெரும் தொழிலதிபர்கள்,“கூப்சந்த்”தின் மகன்களான “தன்ராஜ்”, “சந்’ப்ராஜ்” ஆகிய இருவரையும் “துரியோதனன்” மற்றும்“துச்சாதனன்” ஆகியோருக்கு இணையாக உருவாகப்படுத்தினார். கால் ஊனமுற்ற “கூப்சந்த்” தான்“திருதராஷ்ட்ரன்.” இறந்துவிட்ட, “பூரண்சந்த்” தான் பாண்டு! “பூரண்சந்த்”தின் மூன்று மகன்களான“தர்மராஜ்”, “பலராஜ்”, “பரத்” ஆகிய மூவரும் “தர்மர்”, “‘மன்”, “அர்ச்சுனன்” இவர்களில் “தர்மராஜின்”மனைவியான “சுப்ரியா” தான் திரௌபதி! அவளுக்குத் தனது மைத்துனனான “பரத்” மீது தனி ஈடுபாடு!

மகாபாரதத்தைப் போலவே இந்த இரு பங்காளிக் குடும்பங்களும் ஐம்பத்தேழு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒருநிலத்திற்காக மோதிக் கொள்ளுகிறார்கள். அந்த நிலம் சொந்தமாக இருந்தால் அங்கு ஒரு பெரும்தொழிற்சாலையை நிறுவலாமே என இரண்டு குடும்பங்களும் அதற்கு உரிமை கொண்டாடுகின்றன. (வேடிக்கைஎன்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பாக திருபாய்அம்பானி மறைந்ததும் முகேஷ் அம்பானியும், அனில்அம்பானியும், அண்ணன் தம்பிகளாக இருந்தும் தந்தையின் சொத்துகளையும், நிறுவனங்களையும் பிரித்துக்கொள்வதில் மோதிக் கொண்டது உண்மை வரலாறானது தான்!)

அந்த இதிகாசத்தைப் போலவே இந்தப் படத்திலும், பேராசை, பதவிப்போட்டி, காமம், குரோதம், உட்பகை,கொலை, அதற்காகப் பழிவாங்கல் அத்தனையும் இடம் பிடித்துள்ளன.இந்தப் படத்தைத் தயாரதித்த நடிகர் சசிகபூர், ‘கரன்’ (கர்ணனுக்கு இணையான பாத்திரம்) ஆகவும்நடித்திருந்தார். ‘திரௌபதி’க்கு இணையான ‘சுப்ரியா’ பாத்திரத்தில் நடிகை (பானு) ரேகாவும் ‘தன்ராஜ்’பாத்திரத்தில் விக்டர் பானர்ஜி, ‘தர்மராஜ்’ பாத்திரத்தில் குல்பூஷன்கார்பந்தா, ‘பரத்’ பாத்திரத்தில் ஆனந்த்நாக் ஆகியோரும் நடித்திருந்தனர்.சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இப்படத்திற்கு, கோவிந்த் நிஹலானி ஒளிப்பதிவு செய்ய,வனராஜ்பாட்டியா இசையமைத்திருந்தார்.

 
Smita Patil
 
“ஆரோஹன்” (AAROHAN)
 
1982ல் வெளியான இப்படத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் 1977ல் இடதுசாரிக்கூட்டணி ஆட்சியைப்பிடித்ததும் அம்மாநிலத்தில் எழுபத்தைந்து சதவிகித விளைநிலங்கள் உழுபவர்களுக்கே சொந்தமென்றுஆக்கப்பட்டதும், அவ்வாறே பிரித்துக் கொடுக்கப்பட்டதும், அதனால் கூலிக்கு உழுது கொண்டிருந்தவிவசாயிகளின் நிலை ‘உயர்ந்ததும்’ அவர்களின் ‘ஆரோஹணம்’ என்று விவரித்திருந்தார் ஷியாம் பெனகல்.

‘ஹரிமண்டல்’ என்ற ஏழைக்குடியானவர் ஒருவரின் வாழ்க்கை மாநில அரசின் புரட்சித் திட்டத்தினால் எப்படி உயர்ந்தது என்பதை, கிட்டத்தட்ட ஓர் ஆவணப்படம் போல விளக்கியிருந்தார். ‘பீர்பம்’ என்ற மாவட்டத்தில் உள்ள, ‘கிரிப்பூர்’ என்ற கிராமத்தில் படம்பிடிக்கப்பட்டது. ‘ஹரிமண்டல்’ பாத்திரத்தில் ஓம்பூரி நடித்திருந்தார்.
(அவர் விவரிப்பதாகவே படம் அமைந்திருந்தது) மற்றும் ஸ்ரீஉலா மஜும்தார், விக்டர் பானர்ஜி, பங்கஜ் கபூர், கீதாசென் ஆகியோர் நடித்திருந்தனர். கோவிந்த் நிஹலானி ஒளிப்பதிவு செய்ய, பூர்ணதாஸ் பால் என்பவர் இசையமைத்திருந்த இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.
 
“மண்டி” (சந்தை)
 
1983ல் வெளியான இப்படத்தில், தனது வீட்டில் சில பெண்களை வைத்துக்கொண்டு விபச்சாரம் நடத்தும்‘ருக்மணிபாய்’ என்ற பெண்மணியின் அனுபவங்களையும், அவலங்களையும் சற்று நகைச்சுவை கலந்துசொல்லியிருந்தார் ஷியாம் பெனகல். ஓர் அமெரிக்கப் படத்தின் சாயலில் அமைந்த இப்படத்தில் “ருக்மணிபாய்’ பாத்திரத்தில் ஷபானாஆஸ்மியும், அவரது பிரியத்திற்குட்பட்ட இளம் விபச்சாரியாக ‘ஜீனத்’ என்ற பாத்திரத்தில் ஸ்மிதாபாட்டிலும், ஆண்மையில்லாத அப்பாவி காவல்காரனாக நசிரு’ன்ஷாவும் நடித்திருந்தனர். சிறந்த கலை இயக்கத்திற்கான தேசிய விருது பெற்ற இப்படத்தில் ஓம்பூரி, அம்ரிஷ்பூரி, நீனாகுப்தா, குல்பூஷண் கார் பந்தா ஆகியோரும் நடித்திருந்தனர். வசனங்களை சத்யதேவ் துபே எழுத, அசோக் மேத்தா ஒளிப்பதிவு செய்ய வனராஜ்பாட்டியா இசையமைத்திருந்தார்.
 
“த்ரிகால்” (THIRIKAAL)
 
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலகட்டங்களையும் குறிக்கும் இப்படம் 1985ல் வெளியானது. போர்த்துகீசியர் ஆட்சியில் கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்த கோவாவின் கடந்த கால பாதிப்புகள், 1961ல் கிடைத்த விடுதலை, 1985ல் அதன் நிலை மற்றும் வருங்காலத்தில் வரக்கூடிய வளர்ச்சி ஆகியவற்றை “ரூயிஸ் பெரைரா” என்ற பாத்திரத்தின் கண்ணோட்டத்தில் விவரித்திருந்தார் ஷியாம் பெனகல். அன்றைய பம்பாயில் வசிக்கும் ‘ரூயிஸ்’ விடுமுறை நாள்களில் கோவாவுக்கு வந்து போவார். அவர் கோவாவில் 1961ல் வாலிபனாக இருந்து அதன் விடுதலைப் போராட்டங்களை நேரில் கண்டவர். இப்போது 1985ல் அங்கு வாழ்ந்து இறந்து கிடக்கும் ‘எர்னெஸ்டோ’ என்பவரின் துக்க வீட்டுக்கு வருகிறார். ‘ரூயிஸ்’, ‘எர்னெஸ்டோ’ இரண்டு தலைமுறைகளையும் 1961க்கு முற்பட்ட மற்றும் விடுதலைக்குப் பிறகான கோவாவையும் பார்த்தவர்.

Trikal (Past, Present, Future) (1985) - IMDb
 
 ‘எர்னெஸ்டோ’வின் விதவையான ‘மரியா’ கோவா விடுதலைப் பெற்றதை ஏற்றுக்கொள்ளாத, போர்த்துக்கீசிய மனப்பான்மை கொண்ட கிறித்தவப் பெண்மணி. ஆனால் அவர்களது குடும்பத்தின் பிற உறுப்பினர்களும், வேலைக்காரி ஒருத்தியும் நிகழ்கால கோவாவை விரும்புபவர்கள். மரியாவின் முன்னோர்கள் கோவாவின் ஹிந்துக்களைக் கொடுமைப்படுத்தியதும், கொன்றதும் மரியாவின் நினைவில் வந்து வந்து போகின்றன. நாளடைவில் அவள் தனது ஆதிக்க மனப்பான்மையிலிருந்து மாறக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

‘ரூயிஸ்’ ஆக நசீருதின்ஷாவும், ‘மரியா’வாக பழம்பெரும் நடிகை ‘லீலா நாயுடு’வும், வேலைக்காரியாக நீனாகுப்தாவும் நடித்த இப்படத்திற்கு ‘சிறந்த இயக்குனர்’ என்ற தேசிய விருது ஷியாம் பெனகல் பெற்றார். அசோக் மேத்தா ஒளிப்பதிவு செய்ய, வனராஜ் பாட்டியாவும், ரிமோ ஃபெர்னாண்டஸும் கூட்டாக இசையமைத்திருந்தனர்.
 
“சுஸ்மன்” (SUSMAN)
 
1986ல் வெளியான இப்படம் ஆந்திர மாநிலம் ‘பொச்சம்பள்ளி’ என்ற கிராமத்து நெசவாளர்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டிருந்தது. “அங்குர்”, “ஆரோஹன்” ஆகிய படங்களில் விவசாயிகளின் அவலங்களையும், போராட்டங்களையும் “மந்தன்” படத்தில் பால் கறந்து விற்பவர்களின் வாழ்க்கை முறையையும் விவரித்த ஷியாம் பெனகல் ‘ஸ்ரீராமுலு’ என்ற பொச்சம்பள்ளி நெசவாளியின் கதையை ‘சுஸ்மன்’ படத்தில் பயன்படுத்தினார். மிகவும் இயல்பாக, மண்ணின் மணத்துடன் கிட்டத்தட்ட ஆவணப்பட பாணியில் அமைந்திருந்தது இப்படம்.

You Can Now Watch Shyam Benegal's Rare Film 'Susman' On YouTube ...

“கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஒருங்கிணையம்” தயாரித்த இப்படத்தில் ஸ்ரீராமுலு என்ற நெசவாளியாக ஓம்பூரியும் அவரது மனைவியாக ஷபானா ஆஸ்மியும் மற்றும் நீனாகுப்தா, குல்பூஷண் கார்பந்தா, மோகன் ஆகாஷே ஆகியோரும் நடித்திருந்தனர். அசோக் மேத்தா ஒளிப்பதிவு செய்ய, வனராஜ்பாட்டியா இசையமைத்திருந்தார்.
 
“அந்தர்நாத” (ANTHARNAADHA)
 
‘உள்ளுறை நாதம்’ என்று பொருள்படும் இப்படம் 1991ல் வெளிவந்தது. குஜராத் மாநிலத்தில் ‘பாண்டுரங்க சாஸ்திரி அதாவலே’ என்பவர் தொடங்கிய ‘ஸ்வாத்யாய இயக்கம்’ இப்படத்தின் பின்புலமாக அமைந்தது.

பக்தி மூலமாகவே தனிமனிதர்களும் சமுதாயமும் குறிப்பாக ‘தலித்’ மற்றும் மீனவ சமுதாயம் வளர்ச்சி பெறமுடியும் என்று நிரூபித்துக் காட்டியது ‘ஸ்வாத்யாய இயக்கம்.’

பதினைந்தாயிரம் கிராமங்களில் வாழ்ந்த ஐம்பது லட்சம் ‘தலித்’துகளும், மீனவ மக்களும் இந்த இயக்கத்தால் தன்னம்பிக்கை பெற்று வளர்ச்சியடைந்தார்கள். ஆகவே இப்படமும் அந்த மக்களைக் குறித்த ஓர் ஆவபணப்பட பாணியிலேயே அமைந்திருந்தது. குஜராத்தில் இரு கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சுயமுன்னேற்ற குழுக்களும், மகளிர் சுயஉதவிக் குழுக்களும் எந்த அளவிற்கு அடிமட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்த முடியும் என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது இப்படம். (குஜராத் மாநிலத்தைப் பின்பற்றி தான் பிற மாநிலங்களிலும் அத்தகைய குழுக்கள் தொடங்கப்பட்டன என்று இங்கு குறிப்பிடத்தக்கது.)

ஓம்பூரி, ஷபானாஆஸ்மி, குல்பூஷண் கார்பந்தா, அனங்தேசாய்’ ஆகியோர் நடித்த இப்படத்திற்கு வி.கே.மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, வனராஜ்பாட்டியா இசையமைத்திருந்தார். “சூரியனின் ஏழாவது குதிரை” (சூரஜ் கா சாத்வான் கோடா) பிரபல எழுத்தாளர் ‘தரம்வீர் பாரதி’ அவர்களின் இந்தி மூலக்கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் 1992ல் வெளியானது. சிற்றூர்களில் பொழுதுபோகாத இளைஞர்கள் பிற்பகல் நேரங்களில் எங்காவது கூடித் தங்களுக்குள் தாங்கள் கேள்விப்பட்ட கதைகளைப் பரிமாறிக் கொள்ளுவது வழக்கம். அந்த வகையில் மூன்று பிற்கல் பொழுதுகளில் ‘மானெக்’ என்ற இளைஞன் மூன்று பெண்களின் கதையைத் தனது நண்பர்களிடம் விவரிக்கிறான்.

“கதை சொல்லி”யாகிய ‘மானெக்’குக்கும் அந்த மூன்று பெண்களுக்கும் ஏதாவதொரு வகையில் தொடர்பிருக்கிறது. அந்த மூன்று பெண்களுக்கிடையேயும் ஏதோவொரு சம்பந்தம் இருக்கிறது. மூன்று பெனகளின் கதையையும், பல்வேறு நிலைகளில், பல்வேறு கோணங்களில் நின்று விவரிக்கும் ‘மானெக்’ அந்த மூன்று காதல் கதைகளிலும் தானும் ஒரு பாத்திரமாகிறான். ஆனாலும் அதை வேண்டுமென்றே மாற்றி மாற்றி அமைத்துக் கொள்ளுகிறான். காதல் என்றால் என்ன; சமூகப் பொருளாதார நிலைகள் எந்தளவுக்குக் காதலர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; உண்மையிலேயே இத்தகைய காதல் கதைகள் நிறைவைத் தருகின்றனவா அல்லது தோல்வியைப் பிரதிபலிக்கின்றனவா போன்ற வினாக்களை எழுப்பி அவற்றிற்கு விடைகான ஷியாம் பெனகல் முயன்றிருக்கிறார். ஒவ்வொரு கதையையும் குறித்த பலதரப்பட்ட விமர்சனங்களையும், பாத்திரங்களின் வாயிலாகவே விவாதப்படுத்தியிருக்கிறார். பெனகலின் மிகச்சிறந்த படமாக விமர்சகர்கள் கருதும், “சூரியனின் ஏழு குதிரைகள்’ படத்திற்குச் சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

‘தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கார்ப்பரேஷன்’ தயாரித்த இப்படத்தில் அம்ரிஷ் பூரி, நீனாகுப்தா, பல்லவிஜோஷி, ரகுவீர் யாதவ், அனங்தேசாய் ஆகியோர் நடித்திருந்தனர். ‘பியூஷ் ஜா’ ஒளிப்பதிவு செய்ய, வழக்கம் போல வனராஜ்பாட்டியா இசையமைத்திருந்தார்.

ஒரு மாதறுதலுக்காக, இஸ்லாமியக் கதைகளைக் கொண்ட மூன்று படங்களையும் இயக்கினார் ஷியாம்பெனகல். அவை:
 
“மம்மோ” (MAMMO)
 
பாட்டி என்று பொருள்படும் இப்படம் 1994ல் வெளிவந்தது. “தேசியத் திரைப்பட வளர்ச்சி கார்ப்பரேஷன்” தயாரித்த இப்படத்தில் ஃபரீதா ஜலால், சுரேகா சிக்ரி, ரஜித் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். பிரசன்ன ஜெயின் ஒளிப்பதிவு செய்ய வனராஜ்பாட்டியா இசையமைத்திருந்தார். இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது இப்படம்.

Mammo - Wikipedia

“சர்தாரி பேகம்”

1996ல் வெளிவந்த இப்படம் தில்லியில் வாழும் ஓர் இஸ்லாமிய ஹிந்துஸ்தானி தும்ரி பாடகியின் கதையை அடிப்படையாகக் கொண்டது. ‘கிரன்கேர்’ என்ற நடிகை அந்தப் பாடகியாக நடித்துப் புகழ் பெற்றார். வன்ராஜ் பாட்டியாவின் இசையமைப்பில் ஆஷா பான்ஸ்லே மிக அருமையாகப் பாடியிருந்தார். ராஜேஸ்வரி சச்தேவ், சுரேகா சிக்ரி, அம்ரிஷ் பூரி, ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோரும் நடித்திருந்த இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.
 
“ஜுபைதா’ (ZUBAIDAA)
 
2000வது ஆண்டு வெளியான இப்படத்திற்கு நமது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கரீஷ்மா கபூர், (பானு) ரேகா, அம்ரிஷ் பூரி, சுரேகா சிக்ரி, ரஜித் கபூர் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு ‘சிறந்த இந்திப் படத்திற்கான தேசிய விருது’ வழங்கப்பட்டது.

பத்திரிகையாளரான காலித் முகம்மது மேற்சொன்ன மூன்று படங்களுக்குமான கதைகளை எழுதியிருந்தார்.
 
“மேக்கிங் ஆஃப் த மகத்மா” (MAKING OF THE MAHATHMA)
 
தேசிய திரைப்படக் கார்ப்பரேஷனும் தூர்தர்ஷனும் இணைந்து தயாரித்த இப்படம் 1995ல் வெளிவந்தது. “மகாத்மா”வாக அழைக்கப்படுவதற்கு முன்பு, தென்ஆப்ரிக்காவில் இருபத்தோரு ஆண்டுகள் வாழ்ந்து அங்கு அடிமைகளாக நடத்தப்பட்ட இந்திய வம்சாவளியினருக்காகப் போராடியதை விவரிக்கும் படமிது.

ஃபாத்திமா மீர் என்ற பெண்மணி எழுதிய உண்மை வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் கற்பனைக்காட்சிகள் மிகவும் குறைவு. பெரும்பாலான வரலாறு தென்னாப்பிரிக்காவில் நடந்ததால் படப்பிடிப்பும் அங்குதான் நடத்தப்பட்டது. 
 
The Making of the Mahatma - Wikipedia

நூல்களில் மட்டுமே நாம் படித்திருக்கும் பல செய்திகளை இப்படத்தில் காட்சிகளாகக் காண முடிகிறது. உதாரணமாக ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்யும் மகாத்மா காந்தியை வெள்ளையர்கள் ஒரு ரயில் நிலையத்தில் ரயிலை விட்டுக் கீழே தள்ளியது. அவர் அங்கு ‘சத்யாக்கிரக’ப் போராட்டத்தைத் தொடங்கியது... காவல் துறையினரால் தாக்கப்பட்டது... ஆகிய நிகழ்வுகள் ரஜித் கபூர் என்பவர் காந்தியாக நடித்திருந்தார். பல்லவி ஜோஷி கஸ்தூரிபாயாகவும் மற்றும் அசோக் மேத்தா ஒளிப்பதிவு செய்ய, வனராஜ்பாட்டியா இசையமைத்திருந்தார். இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாரிக்கப்பட்டது.
 
“சமர்” (CONFLICT)
 
மோதல் என்று பொருள்படும் இப்படம் 1998ல் வெளியானது. மத்தியப் பிரதேசத்தில் நடந்த உண்மை நிகழ்வைப் படம் பிடிக்க ஒரு குழு அங்குள்ள ஒரு கிராமத்திற்குப் போகிறது. அந்தக் கிராமத்தில் ஏற்கனவே இருந்த ஜாதி மோதலைப் படம் பிடிக்கப் போன இடத்தில் அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கிடையிலேயே உள்ள ஜாதி உணர்வும் வெளிப்படுகிறது. ‘தலித்’ஆக நடிக்கும் தலித் நடிகரை, மேல்ஜாதிக்காரராக நடிக்கும் மேல்ஜாதி நடிகர் படப்பிடிப்பின்போதே கேவலப்படுத்துகிறார். இதனால் படப்பிடிப்பு தடைபடுகிறது. இப்படியாகப் படத்துக்குள் ஒரு படமாக உருவாக்கப்பட்ட இந்த ‘சமர்’ என்ற படமானது, படித்த நகரவாசிகளிடையே கூட,
 
1998லும் ஜாதி மோதல்கள் குறையவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தது. “சிறந்த படத்திற்கான” தேசிய விருது பெற்ற இப்படத்தில், ரகுவீர் யாதவ், கிஷோர் கதம், ரஜித் கபூர், ராஜேஸ்வரி சச்தேவ், சீமாபிஸ் வாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். அசோக் மேத்தா ஒளிப்பதிவு செய்ய, வனராஜ்பாட்டியா இசையமைத்திருந்தார்.
 
“ஹரிபாரி” (HARI BHARI)
 
மனித உரிமை, பெண்களின் உரிமைகள், குறிப்பாக, குழந்தை பெற்றுக் கொள்ள பெண்களுக்குள்ள உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இப்படம் 2000ஆவது ஆண்டில் வெளியானது. மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த ஐந்து பெண்களின் அனுபவங்கள் விவரிக்கப்பட்டன. ஆண்குழந்தை பெறாதது பெண்ணின் குற்றம் என்றுமு அவளுடைய கணவனுக்கு அதில் பங்கில்லை என்பது போன்றும் கருதப்படுவதை, சாடும் வகையில் கதையோட்டம் இருந்தது. ‘ஷாமா சைதி’ என்ற இஸ்லாமியப் பெண்மணி கதை, வசனம் எழுதியிருந்த இப்படத்தில் ஷபானா ஆஸ்மி, நந்திதா தாஸ், சுரேகா சிக்ரி, ராஜேஸ்வரி சச்தேவ், ரஜித் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்ற இப்படத்தை ராஜன்கோத்தாரி ஒளிப்பதிவு செய்ய, வனராஜ்பாட்டியா இசையமைத்திருந்தார்.

 
Hari-Bhari (2000) - IMDb
 
“வெல்கம் டு சஜ்ஜன்பூர்”

2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது இப்படம். கிராமத்து மக்களுக்காகக் கடிதம் எழுதி உதவி செய்யும் ஓர் இளைஞனின் கதை அங்கதத்துடனும் நகைச்சுவையுடனும் சொல்லப்பட்டது. “ஸ்ரேயஸ்

தல்பாடே” அம்ரிதா ராவ், திவ்யா தத்தா ஆகியோர் நடித்திருந்தனர்.
 
தயாரிப்பில் உள்ள படங்கள்
 
1) “சம்கி சமேலி”
2) “தஸ் கஹானியான்”
3) “நூர் இனயத்கான்”
 
ஷியாம் பெனகல் உருவாக்கிய வாழ்க்கை வரலாற்றுப்படங்கள்:
 
1) “பண்டிட் நேரு” (1983)
2) “சத்யஜித் ராய்” (1984)
3) “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” (மறக்கப்பட்ட தலைவர்) (2005)
 
தொலைக்காட்சித் தொடர்கள்
 
1) “யாத்ரா” (1986)
2) “கதாசாகர்” (1986)
3) “பாரத் ஏக் கோஜ்” (1988)