ஸ்லம்டொக் மில்லியனர்: இந்தியாவின் வறுமையும் பெருமையும்  

சொல்லப்படுவது யதார்த்தம்தானா என்பதில் சந்தேகம் இருக்கிறது.
படைப்பாளியின் தேவைக்கு ஏற்ப உருக்கொள்ளும் யதார்த்தம் அது.

'ஸ்லம்டொக் மில்லியனர்' பற்றிப் பக்கம் பக்கமாக எழுதப்பட்டு விட்டது. 'ஸ்லம்டொக்' என்னும் அந்தத் தலைப்பில் தொடங்கி, அது சர்ச்சைக்குள்ளாகிவருகிறது. முதலில் 'கோல்டன் குளாப்', பின்னர் 'பவ்ரா', அதன் பின்னர் பொது நீரோட்டப் படங்களின் கனவுக் கிரீடமான 'ஒஸ்கார் '. இப்படி, எல்லா விருதுகளையும் அள்ளிய இந்தப் படம் 'ஒரு சுமாரான படம்' என்பதைச் சொல்வதற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட விமர்சகராக இருக்கவேண்டும் என்பதில்லை. இந்தியாவில் பாலிவூட், டொலிவூட், கொலிவூட் என்றெல்லாம் ஹாலிவூட்டைப் பார்த்து பச்சை குத்திக்கொண்ட திரைப்படப் பிரிவுகள், ஆண்டுதோறும் ஸ்லம்டொக் போன்ற படங்கள் பலவற்றை பல தர நிலைகளில் உருவாக்கித் தள்ளுகின்றன.

உதிரிகளும் பலவீனர்களும் ஏற்றம் பெறுவது சார்ந்த காதல் கற்பனைகள் இந்தியத் திரைக்குப் புதிதல்ல. 'லகான் ', 'சக் தே இந்தியா ' போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.சமீபத்தில் வெளியான 'வெண்ணிலா கபடிக்குழு ' இத்தகைய படத்துக்கான சிறந்த உதாரணம். ஏழைக் கதாநாயகன் விண்ணைத்தொடும் அளவுக்கு உயரும் மசாலாப் படங்களையும் சற்றே தாராளப் போக்குடன் இந்தப் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

Image result for slumdog millionaire oscar

இத்தகைய படங்களில் ஸ்லம்டொக் பெறக்கூடிய இடம் என்ன? கறாரான விமர்சன அளவுகோல்களின்படி பார்த்தால், இதற்கு முதலிடம் தரமுடியாது என்பதே நிதர்சனம். திரைக்கதைத் தர்க்கத்திலும், காட்சி அமைப்பிலும் லகான், சக் தே இந்தியா, வெண்ணிலா ஆகிய படங்கள் ஸ்லம்டொக்கைவிட சிறந்தவை. தவிர, சக் தே இந்தியாவும் வெண்ணிலாவும் ஸ்லம்டொக்கைவிடவும் யதார்த்ததுடன் அர்த்தபூர்வமாக உறவு கொண்டுள்ளன. இந்தப் படங்களும் நாடகத் தன்மை கொண்டிருந்தாலும், அந்த நாடகத் தன்மையின் சாரத்தில் பொய்மையோ, சில்லறைத்தனமோ இல்லை.

ஸ்லம்டொக் இந்திய சேரிகளின் யதார்த்தத்தை முகத்தில் அறைந்தது போலச் சொல்கிறது என்று சொல்லப்படுகிறது. முகத்தில் அறைவது என்னவோ உண்மைதான். ஆனால், சொல்லப்படுவது யதார்த்தம்தானா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு வெள்ளைக்காரர் இதைக் காட்டியதற்காக நாம் கூடுதலாக வருத்தப்படவேண்டிய அவசியமும் இல்லை. இவரைவிடவும் வலுவாக இந்திய வறுமையை சத்யஜித் ரேயின் படங்களும், ஒரு சில வெகுஜன திரைப்படங்களும் சித்தரித்துள்ளன. யதார்த்தத்தை யார் சொல்கிறார்கள், ஏன் சொல்கிறார்கள் என்பது முக்கியம்தானெனினும், அதையெல்லாம் மீறி அந்த யதார்த்தத்துக்கு முகம் கொடுக்கவேண்டியது அவசியம். ஆனால், இயக்குநர் டனி பொயில் காட்டும் யதார்த்தம், பொழுதுபோக்குத் திரைப்பட ரசிகர்களின் நுகர்வுக்கேற்ப திறமையாக வடிவமைக்கப்பட்ட யதார்த்தம். பொழுதுபோக்குத் திரைப்பட ரசிகர்களின் நுகர்வுக்கேற்ப திறமையாக வடிவமைக்கப்பட்ட யதார்த்தம். குறிப்பாக, இந்திய யதார்த்தம் குறித்த மேற்கத்தைய மனங்களின் முன் தீர்மானங்களுக்கு ஏற்ப உருக்கொள்ளும் யதார்த்தம் அது. உதாரணமாக, அமிதாப் பச்சனைப் பார்ப்பதற்காக மலக்குழிக்குள் இறங்கி ஓடும் சிறுவனின் சித்திரம். இத்தகைய கழிவறைகள் (?) இருப்பது குறித்து ஒவ்வோர் இந்தியரும் வெட்கப்படவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அந்தச் சிறுவன் ஓடும் காட்சியைச் சற்றே ஆராய்ந்து பார்த்தால், அது யதார்த்தத்தின் மீது கட்டப்பட்ட புனைவு என்பது புரியும். ஒரு சிறுவன் கழிவறையின் குழியில் இறங்கி, பூமிக்கு அடியில் ஓடும் மல நீரோட்டத்தினுடே நீந்தியோ நடந்தோ சென்று, தான் போக வேண்டிய இடத்துக்கு அருகில் உள்ள இன்னொரு மலக்குழியின் வழியே வெளியில் வருகிறான். இது, கிட்டத்தட்ட அமிதாப், ரஜினி, விஜய் போன்ற அசாத்தியமான நாயகர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் சாகசம். இந்தச் செயலின் நடைமுறைச் சாத்தியம் பற்றிய கேள்விகளை எழவிடாமல் செய்வது அந்தக் காட்சியின் அதிர்ச்சியூட்டும் தன்மை.

Image result for slumdog millionaire oscar

இதுபோலவே பல காட்சிகள். வறுமையில் வாடும் சிறுவர்கள் பிச்சைக்காரர்களாகப்படும் குரூரமான நடைமுறை பற்றிய கேள்விகளை எழவிடாமல் செய்வது அந்தக் காட்சியின் அதிர்ச்சியூட்டும் தன்மை. இதுபோலவே பல காட்சிகள். வறுமையில் வாடும் சிறுவர்கள் பிச்சைக்காரர்களாக்கப்படும் குரூரமான நடைமுறைப்பற்றிய சித்தரிப்பு நன்றாகவிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் பிச்சைக்காரர்களை உருவாக்கி, அவர்களை வைத்துப் பிழைக்கும் ஈனத் தொழில் பல விதங்களில் நடப்பதால் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான யதார்த்தம் நிலவுகிறது. இந்நிலையில், திரையில் காட்சிப்படுத்தப்படும் யதார்த்தம் நாம் கண்ட யதார்த்தம்போல இருக்கிறதா என்று பார்க்காது, அதற்கான நம்பகத்தன்மையுடன் முன்வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும்தான் நாம் பார்க்கமுடியும். அந்த வகையில், இது யதார்த்தமான சித்தரிப்பு என்று சொல்வதில் தவறில்லை. ஆனால், அடுத்தடுத்த கட்டங்களில் அந்தச் சித்தரிப்பு வகை மாதிரித் தன்மைக்குள் புகுந்து,வெகுஜனத் திரைப்படங்களுக்கே உரிய 'சுவாரஷ்யத்துடன்' மனதைத் தொட முயல்கிறது. முக்கிய பாத்திரங்களாக வரும் சிறுவர்கள் தப்பிச் செல்லும் காட்சி இதற்கு உதாரணம். அந்தப் பெண் ஒரு விபச்சார விடுதியில் காணப்படுவதும் இத்தகையதே. நாயகன் 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியைப்பற்றி அறிந்துகொள்வதும்,அதில் கலந்து கொள்வதும் கூட இந்தப் பட்டியலில் கட்டாயம் இடம் பெற்றாகவேண்டிய, வெகுஜன ரசனைக்குரிய நாடகங்கள்தாம். போட்டியில் தொலைபேசி மூலம் நண்பரை அழைத்து உதவிகோரும் கட்டத்தில், அந்தத் தொலைபேசியை நாயகனின் காதலி எடுப்பதற்கான முஸ் தீபுவின் நாடகத் தன்மைகளும், அந்தப் பெண்ணின் கை அந்தத் தொலைபேசியைப் பற்றும் தருணத்தின் பரவசவமும் வெகுஜனத் திரைப்படங்களின் அச்சு அசலான உத்தி.

சுவாரஷ்யமான இந்த நாடகங்களில் மறைந்துபோகும் யதார்த்தம் ஒரு புறமிருக்க, நாடகத் தன்மை குறைவான இடங்களிலும் யதார்த்தம் அடிவாங்குகிறது.பார்வை இழந்த சிறுவன் அமெரிக்க பணநோட்டில் அச்சிடப்பட்டுள்ள பெஞ்சமின் பிராங்ளினைப்பற்றி எப்படித் தெரிந்து கொண்டான் என்பதைப் படம் தெளிவுபடுத்தவில்லை. அந்தக் காட்சியின் உணர்வுபூர்வமான சித்தரிப்பு, இந்தக் கேள்வியை விலக்கிவிடக் கூடிய தன்மை படைத்தது. மலக்குழியில் யதார்த் தத்தைப் பற்றிய கேள்வியை எழ விடாமல் செய்வது அதன் அதிர்ச்சியூட்டும் தன்மை என்றால், இங்கு அதற்குப் பயன்படுத்தப்படுவது கழிவிரக்கம்.

கோடீஸ்வரனாவதற்கான வினா-விடைப் போட்டியில் நாயகன் எதிர் கொள்ளும் கேள்விக்கான விடைகள், அவன் வாழ்பநுபவங்களிலிருந்தே கிடைப்பதாகக் காட்டியிருப்பது ஒரு புனைவு உத்தி என்னும் வகையில் சிறப்பானதுதான். ஆனால், கேள்விகள் பெரும் பாலும் அவன் வாழ்வின் கால ஓட்டத்துக்கு ஏற்ப பின்னோட்டத்தில் அவன் கதையைச் சொல்வதற்கு வசதியாக வந்து விழும் அதிசயத்தை என்ன வென்று சொல்வது!

இந்தப் படம் இந்தியாவின் வறுமையைக் கடைச் சரக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்னும் விமர்சனம் தன்னளவில் வலுவானதல்ல.சித்தரிப்பின் நோக்கம் சார்ந்து அதன் மதிப்பு உருவாவதைப்போலவே, அது சார்ந்த விமர்சனமும் அதன் நோக்கம் சார்ந்தே மதிக்கப்பட வேண்டும். இந்தியாவின் அவலங்களை ஆவணப்படுத்திய 'மதர் இந்தியா' நூலை எழுதிய டாக்டர் மேயோவை காந்தியடிகள் சாக்கடை மேஸ்திரி என்று சொன்னார். அவரது கண்ணோட்டம் இந்திய யதார்த்தத்துக்கு முகம் கொடுக்காத மேட்டுக்குடி மனப்பான்மையின் போலிப் பெருமிதத்திலிருந்து உருவானதல்ல. இந்திய கிராமங்களிலும் சேரிகளிலும் முறையான கழிவறைகள் இருக்கவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட, பல சீர்திருத்தங்கள் பற்றி முதலில் பேசியவர் காந்தி.அவற்றை நடைமுறைப்படுத்த செயல்திட்டம் வகுத்தும் அவர் செயல்பட்டார். கழிவறைகள் அமைப்பது மற்றும் அவற்றைப் பராமரிப்பது குறித்து கிராமத்து மக்களுக்கு பயிற்சி அளித்தவர் அவர். மேயோவின் நூல்மீதான அவரது கோபம் நிஜமான அக்கறையிலிருந்தும்,விமர்சனம் செய்பவரின் நோக்கம் குறித்த கூர்மையான மதிப்பீட்டிலிருந்தும் உருவானது. டனிபொயில் காட்டும் அவலம் கண்டு, 'மானம் போகிறது' என்று கொதிப்பவர்களில் பலர், தங்கள் கண்ணெதிரில் வாழும் அவலங்கள் குறித்த சலனம் எதுவுமின்றி, அன்றாடம் அவற்றைக் கடந்து செல்லும் போலிகள். அரசியல்வாதிகளைத் திட்டுவதோடு அவர்களது சமூகப் பொறுப்புணர்வு முடிந்துபோகிறது.

பொருள்படுத்தத் தகுதியற்ற போலி ரோஷங்கள் ஒருபுறமிருக்க, டனிபொயிலின் நோக்கம் குறித்து அவரது சித்தரிப்பின் தன்மை சார்ந்து பேசுவதற்குச் சில விஷயங்கள் இருக்கின்றன. சமூகத்தின் கடை நிலையிருந்து உயரத்துக்கு வரும் கதை என்பதால் கடைநிலை வாழ்வின் யதார்த்தங்களை அவர் காட்ட வேண்டியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அதேவேளை, எந்த மும்பையில் இந்த சேரி அமைந்திருக்கிறதோ அதே மும்பையில் இந்தியாவின் பொருளாதார, உள்கட்டமைப்பு வளர்ச்சி சார்ந்த தடயங்களும் காணக்கிடைக்கின்றன. இவை, டனி பொயிலின் கண்களில் படவில்லை. மும்பைச் சேரிப் பகுதியின் அழுக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காகவாவது மும்பையின் அழகிய முகத்தையும் அவர் காட்டியிருக்கலாம். எல்லாமே சேர்ந்துதான் மும்பை. இயக்குநர் பிரியதர்ஷன் ஒரு பேட்டியில் சொன்னது போல, மும்பையின் அழகைக் காட்டும் ஒரு 'ஷோட்' டைக் கூட படத்தில் பார்க்க முடியவில்லை. சேரியிலேயே மையம் கொண்டு, அங்கேயே இயங்கும் படமாக இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால்,பல காரணங்களுக்காகப் பல இடங்களுக்குப் பயணிக்கும் திரைக்கதையில் மும்பையின் சாதகமான எந்த அம்சத்துக்கும் அநேகமாக இடமில்லை. 'நான் கடவுள் ' படத்தில் பிச்சைக்காரர்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஈன வியாபாரிகளையும், அவர்களிடம் அடிவாங்கி நாளும் செத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களையும் காட்டும் கமெரா, அங்கிருந்து வெளியே வரும்போது, நிலவொளியில் மின்னும் மலையடிவாரத்து சிற்றோடையின் அழகை இயல்பாகப் பதிவுசெய்கிறது. அதுபோன்ற ஒரு காட்சியைக்கூட ஸ்லம்டொக் படத்தில் காணமுடியவில்லை என்பது தற்செயலான விஷயமாக இருக்கமுடியாது. படத்தை உருவாக்கியவர்கள் எத்தகைய யதார்த்தத்தை, யாருக்கான நுகர்பொருளாக சித்தரிக்க விரும்புகிறார்கள் என்பது குறித்த கேள்விகள் எழுவதையும் தடுக்க முடியாது. இந்தியா பற்றிய ஒற்றைப் பரிமாண புரிதலைப் போற்றிப் பாதுகாக்கும் மேற்கத்தைய மனங்களைத் திருப்திப்படுத்தும் வகைமாதிரிச் சித்தரிப்பு இது என்று சொல்வது தவறானதாகாது.

வெகுஜனத் திரைப்படங்களின் வெற்றிச் சூத்திரத்தின் எல்லைக்குள் திணிக்கப்படும் யதார்த்தம், தர்க்கத்தைவிட சுவாரஷ்யத்துக்கும் நாடக தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதை,மனித வாழ்வின் அகம் சார்ந்த அவதானிப்பைக் காட்டிலும் புறத்தோற்றம் சார்ந்த எளிமைப்படுத்தப்பட்ட சித்தரிப்பில் கவனம் செலுத்தும் மேம்போக்கான படைப்பு மனம் ஆகிய தன்மைகள் கொண்ட படம்தான் ஸ்லம்டொக். சுவையான திரைக்கதை, பொருத்தமான பின்னணி இசை, நேர்த்தியான ஒளிப்பதிவு, யதார்த்தத்தின் ஒரு முகத்தை அப்பட்டமாகக் காட் டும் முயற்சி, நம்பகமான நடிப்பு ஆகிய சாதகமான அம்சங்கள் இருந்தும் மேற்சொன்ன குறைகளால் இது ஒரு சராசரி பொது நீரோட்டப் படமாகவே தேங்கிவிடுகிறது.

Image result for slumdog millionaire oscar

இத்தகைய ஒரு படம் இத்தனை விருதுகளைப் பெற்றது எப்படி? என்ற கேள்வி எழுகிறது. இச்சமயத்தில், 'தாரே ஜமீன் பர் ', 'ஜோதா அக்பர்' போன்ற படங்களோடு ஒப்பிட்டு, இந்தப் படங்களுக்கு விருது கொடுத்திருக்கலாமே என்றும் குரல்கள் எழுவதைக் கேட்கமுடிகிறது. இந்தப் படம் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது என்பதை மறந்துவிடலாகாது. தாரே ஜாமீன் பர் போன்ற ஹிந்திப்படங்கள் வெளிமொழிப் படங்கள் என்னும் பிரிவில்தான் போட்டிக்குச் செல்ல முடியும். அந்தப் படங்களுக்கும் வேறு பிரிவின்கீழ் வரும் ஸ்லாம்டொக்குக்கும் போட்டி இல்லை என்பதால் இத்தகிய ஒப்பீடுகள் அர்த்தமற்றவை. ஆனால்,  ஸ்லாம்டொக்கின் பிரிவில் இடம் பெற்ற The Curious Case of Benjamin Button, The Reader முதலான படங்களைப் பார்க்கையில் இந்தத் தேர்வு நியாயப்படுத்தக்கூடியதாக இல்லை என்றே பல விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அப்படியானால், இந்தப் படத்துக்கு விருதுகள் எப்படிக் கிடைத்தன? இந்தப் படத்தின் தரத்தை வைத்துப் பார்க்கையில் விருதுக்குப் பின்னால் செயல்பட்டிருக்கக்கூடிய மனோபாவங்கள் குறித்த சில சந்தேகங்கள் தவிர்க்க இயலாதவை.

சமீப காலமாக இந்தியப் படங்களுக்கு சர்வதேச மதிப்பு கூடியிருக்கிறது.கடந்த ஆண்டு வெற்றிபெற்ற 'சிங் இஸ் கிங் ', 'கஜினி' போன்ற படங்களின் வசூலில் கணிசமான பகுதி வெளிநாட்டுச் சந்தையிலிருந்து கிடைத்தது. அதிலும் கஜினி, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கவனத்தினாலும், திறமையான சந்தைப்படுத்தலாலும், வெளியான இரண்டே வாரங்களுள் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. 

அதன் பட்ஜெட் சுமார் 60 கோடி. இப்போதெல்லாம் இந்திய மொழிகளில் வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளிநாடுகளின் வசூலையும் முக்கிய இலக்காகக்கொண்டிருக்கின்றன. உலகமெங்கும் இந்தியர்கள் பரவிக்கிடப்பதும், அவர்கள் பொருளாதார ரீதியில் ஓரளவு வசதிப்படைத்தவர்களாக இருப்பதும் இதற்குக் காரணம். தவிர, வெளிநாட்டு இந்தியர்களின் பொதுவான ஆர்வங்களாக கோவில் சார்ந்த நடவடிக்கைகளும் சினிமாவும் இருக்கின்றன. எனவே, இவர்களைக் குறிவைத்து படம் எடுப்பது பொருளாதார ரீதியில் புத்திசாலித்தனமான உண்மை.

75 கோடி செலவில் உருவான ஸ்லம்டொக் இதுவரை ஆயிரம் கோடி ரூபா வசூல் செய்திருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 800 கோடி வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்து கிடைத்தது. இந்தியர்கள் பெருமளவில் இடம்பெற்ற ஓர் இந்தியப் படத்துக்கு ஏராளமான விருதுகளும், வரலாறு காணாத உலகளாவிய கவனமும் கிடைத்திருக்கிறது. இதன் விளைவாக இதன் வசூல், சாதனை அளவைத் தொட்டிருக்கிறது. நாளை, இன்னோர் ஆங்கிலேய அல்லது அமெரிக்க இயக்குநர் இந்தியாவுக்கு வந்து ஷாரூக்கான், அமீர்கான், ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப், ரஜினி காந்த் ஆகிய எவரையேனும் வைத்து ஆங்கிலப் படம் எடுத்தால் அதற்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அமோக ஆதரவு கிடைக்கும் என்று நம்ப இடமிருக்கிறது. அதற்கான களத்தை ஸ்லாம்டொக்குக்குக் கிடைத்த மிகப்பெரிய கவனமும் வெற்றியும் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்திய சந்தையை அல்லது இந்திய ஆற்றல்களைப் பயன்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க முயல்வதற்கு வழிவகுக்கக்கூடிய நிகழ்வாகவும் இதைப் பார்க்கலாம்.

Image result for iswarya rai

தொண்ணுறுகளில் இந்தியாவிலிருந்து வரிசையாக உலக அழகிகள் வந்த வண்ணம் இருந்தார்கள். ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, டயானா ஹைடன்,யுக்தா முகி ஆகியோர் உலக அழகிப் பட்டங்களை வென்று இந்தியாவுக்குப் 'பெருமை' சேர்த்தார்கள். திடீரென்று உலகம் இந்திய அழகை மதிக்கத் தொடங்கியது.இந்தியர்கள் பலர் இது குறித்துப் பெருமித உணர்வடைந்தனர். ஐஸ்வர்யா ராய் போல, பிரியங்கா சோப்ராபோல, சுஷ்மிதா சென் போல நாமும் வரவேண்டும் என்ற ஆசை இந்திய இளம் பெண்கள் பலருக்கும் ஏற்பட்டது. வரமுடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டது.

பணமும் முயற்சியும் இருந்தால் யாரும் 'அழகி' யாகலாம் என்ற நம்பிக்கை பெண்கள் மனதில் இந்த வெற்றிகளின் மூலமாகவும், அதையொட்டிய செய்தியூடக கொண்டாட்டங்களின் மூலமாகவும் விதைக்கப்பட்டது. அழகு என்பது தன்னம்பிக்கைக்கான புதிய மந்திரமாக, முயன்றால் அடையக்கூடிய இலக்காக உணரப்பட்டது. ஐந்து இந்தியப் பெண்கள் உலக அழகிகளாகத் தேர்வு பெற்றதையொட்டி இத்தனை கோடிப்பேர் மனதில் அழகுக் கனவுகளை விதைக்க முடியும் என்பது கேட்பதற்குக் கற்பனைபோலத் தெரியும் ஆனால், அது ஓர் யதார்த்தம் என்பது இந்தியாவின் சிறு நகரங்களிலும் பெருநகரங்களிலும் சுற்றிப் பார்த்தால் தெரியும்.

'தேவைக்கு ஏற்ப சேவை' என்பது தானே சந்தையின் நிரந்தர விதி. அழகை 'உருவாக்க' வும் மெருகேற்றவும் உத்தரவாதம் அளிக்கும் அழகு நிலையங்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் தோன்ற ஆரம்பித்தன. மேற்கு உலகம் எதை அழகு- குறிப்பாக பெண்ணழகு என்று நினைக்கிறதோ அந்த அழகை அடைவதற்கான முயற்சிகள் சந்தைப்படுத்தப்பட்டன. இடுப்பு, மார்பு, கைகள், கால்கள் என எந்தெந்த அங்கங்கள் எந்த அளவில் இருக்கவேண்டும் என்பது குறித்த தரப்படுத்தப்பட்ட அளவு கோல்கள் கோலோச்சத் தொடங்கின. திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் இந்த அளவுகோல்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. உடற்பயிற்சி, சிகை அலங்காரம், தோல் பராமரிப்பு, உணவுக் கட்டுப்பாடு ஆகியவை குறித்த 'விழிப்புணர்வு' பெருகியது. இந்தப் புதிய விழிப்புணர்வுக்கு தீனிபோடும் மையங்களும் கூடவே முளைத்தன. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் அழகு பராமரிப்புச் சந்தை அடைந்திருக்கும் வளர்ச்சி கண் கூடானது; பிரமிக்கத்தக்கது.

Image result for slumdog millionaire

தொண்ணுறுகளில் இந்தியாவில் அழகிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். அழகு வியாபாரம் பெருகிப் பல பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் கஜானாக்கள் நிரம்பின. 2009இல் இந்தியர்களை வைத்து எடுக்கப்பட்ட ஓர் ஆங்கிலப் படம் சிறந்த படமாக மகுடம் சூட்டப்பட்டடுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சில விருதுகளும் பல முதலீடுகளும் இந்தியத் திரை உலகுக்கு வந்து சேரலாம்.இந்தியர்களின் கலைத்திறன் மேற்கு உலகினால் 'கண்டுபிடிக்க'ப் பட்டுக் கொண்டாடப்படலாம். பல பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நட்சத்திரங்களின் பொருளாதார சாம்ராஜ்யங்கள் விரிவடையலாம். ஆனால், இதற்கும் நல்ல சினிமாவுக்கும் தொடர்பில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்; இந்திய பெருமையாக இதைப் பார்ப்பதிலுள்ள ஏமாளித்தனத்தையும் சேர்த்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.        

நன்றி: நாழிகை, மார்ச் 2009