சூப்பர் சைஸ் மீ

ஜனவரி 21-23 ஹைதராபாத் நகரம் காங்கிரஸ்காரர்களால் நிரம்பி வழிந்தது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய 82வது மாநாடு. சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி என ஒட்டுமொத்த டில்லி வி.ஐ.பி.க்கள் நட்சத்திர ஹோட்டல்களை ஆக்கிரமித்துக்கொண்டார்கள். பிலிம் அனானமஸ் ஹைதராபாத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் திரைப்பட இயக்கம். மேல்தட்டுக்காரர்கள் அதிகம் தென்பட்டாலும் சாதாரண நபர்களும் அதிகமாய் கலந்துகொள்ளும் அமைப்பாக பிலிம் அனானமஸ் இருப்பது ஆறுதல்.

ஜனவரி 23 மாலை தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் `சூப்பர் சைஸ் மீ` திரையிடப்பட்டது. அமெரிக்க விவரணப் படமான `சூப்பர் சைஸ் மீ`யின் இயக்குனர் மார்கன் ஸ்பெர்லாக். அவருக்கு இது முதல் படம்.

படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் மார்கன் ஸ்பெர்லாக் தரும் சில புள்ளிவிவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். அவசரகதியான அமெரிக்க வாழ்க்கையில் விரைவு உணவு வகைகளை நம்பி வாழும் அமெரிக்கர்கள் 40% மக்கள் தொகையில் நான்கில் ஒரு அமெரிக்கர் தினமும் விரைவு உணவகத்துக்குத் செல்கிறார்.

1972 கணக்கெடுப்பின்படி 3 பில்லியனும், இன்றைய கணக்கின்படி 110 பில்லியனும் விரைவு உணவுகளுக்காகச் செலவிடப்படுகிறது. அமெரிக்கர்களின் மாமிச உணவிற்காக ஒரு மணி நேரத்திற்கு 10,00,000க்கு மேல் பிராணிகள் இறைச்சியாக்கப்படுகின்றன. அமெரிக்காவில் காசைக்கொட்டும் வியாபாரங்களில் விரைவு உணவுத் சந்தை முக்கியமானது. மெக்டொனல்ஸ், கே.எஃப்.சி, வால்மார்ட், ஸ்டார் பக்ஸ், பெப்ஸி, கோக் என பெரிய உணவுக்கம்பெனிகள் வியாபித்திருக்கும் அமெரிக்க விறைவு உணவு சந்தை வியாபாரத்தில் 4.3% வியாபாரம் மெக்டொனல்சுக்குச் சொந்தம். 6 கண்டங்களில், 100 நாடுகளில், 30,000 ரெஸ்டாரண்டுகளில் மெக்டொனல்ஸ் தினமும் 46 மில்லியன் மக்களுக்கு உணவு வியாபாரம் செய்கிறது. குழ்ந்தைகள் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே மெக்டொனல்ஸை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். விரைவு உணவை நம்பி அமெரிக்கர்களின் வாழ்க்கைமுறை இருப்பதால். அவர்களுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளில் ஒன்று ஊடல் பருமன்.


அமெரிக்க மருத்துவ ஆய்வுகளின்படி-மூன்று பேருக்கு இரண்டு பேர் அதிக உடல்நிலை உள்ளவர்கள். 37% அமெரிக்கத் குழந்தைகள் தேவையற்ற வகையில் உடல் பருமன் உடையவர்களாகயிருக்கிறார்கள். 60% அமெரிக்கர்கள் அதிக உடல் பருமன் உள்ளவர்கள்.

2000ஆம் ஆண்டுக் கணக்கின்படி பிறக்கும் மூன்று குழந்தைகளில் ஒன்று நீரிழிவு வியாதியைப் பெறுகிறது. மார்கன் ஸ்பெர்லா, நியூயார்க பல்கலைக்கழகப் பட்டதாரி. எம்.டிவி, இ.எஸ்.பி.என். ஸோனி, ஃபாக்ஸ் தொலைகாட்சிகளுக்கு மியூசிக் வீடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள். 1990களில் தி பினிக்ஸ் என்ற அவரது முழுநீள நாடகம் “நியூயார்க் அகில உலக பிரஞ்ச்” விழாவில் பார்வையாளர்கள் விருது வாங்கியது. வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டிருந்த மார்கன் ஸ்பெர்லாக் டி.வியில் இரண்டு உடல் பருமனான பெண்கள் மெக்டொனல்ஸ் உணவு வகையை சாப்பிட்டுக்கொண்டிருந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது “சூப்பர் சைஸ் மீ” எடுக்க பொறி தட்டியது. உடன் தன் ஒளிப்பதிவாளர் ஸ்கூப் அம்ப்ரோஸிக்கு தொலைபேசியில் தன் படத்தின் கருவை சொல்ல ஆச்சரியப்பட்ட ஸ்கூப் “இது மோசமான வியக்கவைக்கும் ஐடியா” என்று கிண்டலடிக்க ஸ்பெர்க்லாக் அந்த மோசமான வியக்கவைக்கும் ஐடியா” என்று கிண்டலடிக்க ஸ்பெர்க்லாக் அந்த மோசமான வியக்கவைக்கும் ஐடியாவை சாதித்துக் காட்ட முடிவுகட்டினார்.

மெக்டொனல்ஸ் உணவு வகைகளை ஒருவர் தொடர்ந்து உண்பதால் உடல் பருமனும், நீரிழிவு நோய்க்கு ஆளாவதும் ஏற்படுகிறது என்பதை மருத்துவ ரீதியாக நீரூபிக்கத் தயாரானார். சோதனைக்கூடத்தில் ஆய்வுகளுக்கு எலிகள் பயன்படுத்துவதைப் போல தன் படத்தின் கருத்திற்கு தன் உடலையே பரிசோதனைக்குப் பயன்படுத்திக்கொள்ள மார்கன் ஸ்பெர்லாக் முடிவு கட்டினார்.

டாக்டர்கள் டர்ரில் ஐசக், லிஸா கனஜீ, ஸ்டீபன் ஸிகல், பிரட்ஜட் பென்னட் ஆகியோர் மார்கனின் அப்போதைய உடல்நிலையைப் பரிசோதனை செய்து குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். படத்தில் மார்கன் உரையாடியபடியே தன்னை டாக்டர்கள் பரிசோதிப்பதை பதிவு செய்திருக்கிறார். அவரின் நக்கலான உரையாடல்,விவரணை ஒரு அதிர்சியான விஷயத்தை பார்வையாளனை நகைத்தப்படியே பார்க்கவைக்கிறது. அவர் நம்மையும் சேர்த்துதான் கிண்டலடிக்கிறார் என்பதை புரிந்துகொள்ளும் முன் அடுத்த காட்சி மாறிவிட அப்பாவியைப்போல் சிரித்தப்படியே நம் சோகத்தை நாமே சினிமாவாக காண நேரிடுகிறது. ஆரம்ப கட்டச் சோதனைகள் முடிந்தபின் - அவர் தன் திரைக்கதையின் அதிர்ச்சிகரமான திட்டத்தை ஆரம்பிக்கிறார். பார்வையாளனுக்கு அதனைப் பற்றிய விபரங்களை மார்கனே விளக்குகிறார்.

அமெரிக்காவின் 20 நகரங்களில் தொடர்ந்து 30 நாட்கள் மெக்டொனல்ஸ் விரைவு உணவு நிலையத்தின் உணவுகளை மூன்று வேளையும் சாப்பிடுவது..... குடி தண்ணீர் உட்பட. 30 நாட்கள் “மெனு கார்டில்” உள்ள உணவு வகைகள் அனைத்தையும் குறைந்த பட்சம் ஒரு முறையாவது சாப்பிடுவது. மார்கனின் 30 நாள் பயணம் ஆரம்பமாகிறது.


முதல் நாள்: பரபரப்பான மெக்டொனல்ஸ் உணவு விடுதியில் உணவருந்த ஆரம்பிக்கும் மார்கன் முப்பது நாளுக்குள் முகம் வாடி. உடல் தளர்ந்து, நொந்துபோவதைப் படம் பார்க்கும் பார்வையாளனாலும் உணர்ந்து கொள்ளமுடிகிறது. அமெரிக்காவின் பெரும் நகரங்களில் அதிக உடல் பருமனுள்ளவர்கள் அதிக சதவீதமாக வாழும் ஹீஸ்டன் உட்பட. அங்கு வசிக்கும் மருத்துவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான உணவுகளை தாயரிக்கும் சமையல்காரர்கள் என அத்தனை பேரின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மார்கன் திடீரென ஒரு மெக்டொனல்ஸ் உணவகத்தில் “இங்கு விற்கப்படும் உணவு வகைகள் பற்றிய டயட்டீஷியன் ரிப்போர்ட் எங்கே? என்று கேட்க, அந்த உணவகத்தின் பொறுப்பாளர் அப்படி எதுவும் இங்கு இல்லை என்பதை தொடர்ந்து சில விடுதிகளில் அதே கேள்வி கேட்கப்படுகிறது- “இல்லை” என பதில். ஒரே ஒரு விடுதியில் மட்டும் அலங்காரப் பொருட்களால் மறைக்கப் பட்ட நிலையில் டயட்டீஷீயன் ரிப் போர்ட் கண்ணில்படுகிறது.

படத்தில் இசை, கிராபிக்ஸ் நகைச்சுவையோடு அழுத்தமாக கையாளப்பட்டிருக்கின்றன. சிரித்த படியே பார்வையாளனை ஆழ்ந்த யோசனைக்குள் தள்ளும் மார்கன் ஸ்பர்லாக்கின் முதல் முழுநீளப் படம் இது. 250 மணி நேர படச்சுருள் 75,000 டாலர் செலவு 25,000 மைல் பயணம் என மார்கன் மெக்டொனல்ஸ் விரைவு ரீதியாக ஜெயித்திருக்கிறார். மார்கன் கண்டறிந்த உண்மை அனைவரையும் உறைய வைக்கிறது. தொடர்ந்து மெக்டொனல்ஸ் உணவை 30 நாட்கள் உண்ட பின் மார்கன் தன் உடலில் 13.5 கிலோ கிராம் சர்க்கரை, 5.5 கிலோகிராம் கொழுப்பு, 11.25 கிலோ கிராம் உடல் எடை அதிகரித்திருப்பதை மருத்துவர்களின் ஆய்வின் மூலம் நிரூபித்தார். அமெரிக்கர்கள் அதிர்ச்சியாகிப் போனார்கள். மார்கனின் காதலி- அலெக்ஸாண்ரா ஜெபிசன், “மெக்டொனல்ஸ் உணவை தொடர்ச்சியாக உட்கொண்ட சில நாட்களில் மார்கன் எளிதில் களைத்துபோகும் நிலைக்கு ஆனார். மெக்டொனல்ஸ் அவரது உடலுறவுக்கு செயல்பாடுகளைக் கூட வெகுவாக பாதித்ததை என்னால் உணர முடிந்தது என்று படத்தில் சொல்லும்போது அரங்கம் உறைந்து போய்க் கிடந்தது. அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் தானியங்கி இயந்திரங்களின் மூலம் உணவு வியாபாரம் பார்க்கும் நிறுவனங்கள் மாவட்டந்தோறும் 107,250 டாலர்களை வருடத்திற்கு சம்பாதிக்கின்றன. ஆனால் அதை விரும்பி உண்ணும் குழந்தைகளின் கேள்விக்குறியான உடல் பருமனையும், வியாதிகளை சுமப்பதையும் யார், யாருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.


“நான் எப்போதும் என் முதல் படம் வித்தியாசமானதாகவும், சுயமானதாகவும் இருக்க வேண்டும்” என்று விரும்பினேன் அது நிறைவேறிவிட்டது” என்கிறார் மார்கன்.“சூப்பர் சைஸ் மீ” அடுக்கடுக்காய் கேட்ட கேள்விகளில் “மெக்டொனல்ஸ்” விரைவு சாம்ராஜ்யம் வழக்குகளையும், விசாரணைகளையும் சந்தித்துக்கொண்டிருப்பதாக மின்வலையில் படிக்க முடிகிறது.
சட்டம் என்றும் இழந்தவைகளைத் திருப்பி வழிந்தது. காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கியிருப்பதால் என்றார்கள். பாரில் நிறைய கதர்ச் சட்டைகள் தென்பட்டன.

உலக வியாபாரிகளுக்கு இந்தியாவின் கதவுகளைத் திறந்துவிடும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்ணில் பட்டால் “சூப்பர் சைஸ் மீ” படத்தை அவருக்காக போடச் சொல்லலாம் என்ற எண்ணம்........ காணவில்லை.

நன்றி: திரை மாத இதழ் பிப்ரவரி 2006
(இக்கட்டுரை ஆவணப்படுத்தும் நோக்குடன் பதிவிடப்படுகிறதே அன்றி வேறு எந்த வியாபார நோக்கமும் அல்ல)