கிம் கி தக் மெளனத்தின் அழகியல் – தீவு

தமிழில்: தீஷா

கொரிய மொழியையும் அதன் இலக்கியத்தையும் படிக்கும்பொழுது, புகழ்பெற்ற தென்கொரிய இயக்குனர் கிம்-கி தக்கின் திரைப்படங்களும் அறிமுகமாகின. அவர் பொதுவாக, தன் சினிமாக்களில் கையாள்கிற தனிப்பட்ட திரைமொழியினால் அடையாளம் காணப்படுகிறார். அதன் கதை, படப்பிடிப்பு நடத்தப்பட்ட உத்திகள் மற்றும் படத்தின் மற்ற அம்சங்கள் அனைத்தையும் பார்க்கப் பார்க்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அதே நேரத்தில், சுவாரஸ்யமாகவும், படம் பார்ப்பவர்களைக் கதைக்குள் ஈர்த்துக்கொள்ளும் நுட்பத்துடனும் விளங்கியது. மனதில், உணர்வில் ஆழ்ந்து பதிகிற தன்மையை அப்படம் ஏற்படுத்தியது. எனவே, நான் அவரது மற்ற படங்களையும் பார்க்கத் துவங்கினேன். 
கிம் கி தக்கின் சினிமாக்களில் ஒருவித கவிதைப் பாங்கு அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவரது படங்களில் உள்ள தீவிரம், அது பிற காரணிகளுடன் சேர்ந்து தனக்கான வித்தியாசமான பாணியை உருவாக்கிக்கொள்கிறது. மேலும், இதே பாணி, அவரது படங்களில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.

கிம் கி தக், தன் முதல் திரைப்படத்திலேயே, மனிதகுலம் தன் அபத்தமான பக்கங்களை வெளிப்படுத்துவதைக் காட்சிப்படுத்துகிறார். கிம் கி தக்கின் முதல் படமான Crocodile(1996)-ல், தென்கொரியாவில், சியோலில் ஹான் நதிக்கரைக்கு அருகில், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ள வீடற்ற மக்களின் வாழ்க்கையை, கொடூரமான சூழ்நிலைகளையும், இரத்தம் தோய்ந்த வன்முறைக்கு மத்தியில் வெளிப்படுத்துகிறார். படத்தில் மையக்கதாபாத்திரம், எதிர் – நாயகனின் பெயர் தான் “Crocodile - முதலை)”, இந்த வாழ்க்கையைச் சகித்துக்கொண்டு வாழ்கிற மற்ற சில மனிதர்களையும் சேர்த்து கதை பயணிக்கிறது. படம் மனித வன்முறையின் ஆழத்தை ஆராய்கிறது. மேலும், கிம் கி தக்கின் வெற்றிகரமான படங்களுக்கான தொனியை உருவாக்கும், தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் வன்முறை, அவரது ஆரம்பப் படத்திலும் உள்ளது. 

Image result for Crocodile movie kim ki duk
Figure 9 Crocodile

அவரது சொந்த வார்த்தைகளில், ”இருத்தலியல் கேள்விகளான, வாழ்க்கை என்றால் என்ன? மனிதம் என்றால் என்ன? இவையனைத்திற்கும் என்ன அர்த்தம்?” போன்றவற்றைக் குறித்தெல்லாம் ஆய்வுசெய்வதில் ஆர்வமாக உள்ளார். காமம், காதல் மற்றும் இறப்பு, இத்தகைய தொன்மக் கதைகளை ஒத்தத் திரைப்பட உலகத்தையே, கிம் தன் படங்களின் வாயிலாகக் கட்டமைக்கிறார். உதாரணத்திற்கு, 3 Iron படத்தையே எடுத்துக்கொள்ளலாம். இம்மூன்றும், அந்தப் படத்தில் தவிர்க்கமுடியாத அளவிற்கு நிறைந்திருக்கிறது. அவரது படைப்புகளில் The Isle (2000), Bad guy(2001) மற்றும் Bow(2005) இம்மூன்றிலும், மையக்கதாபாத்திரம், அதாவது கதாநாயகன் படம் முழுவதும் பேசாமலேயே இருக்கிறான். கிட்டத்தட்ட முழுப் படத்திலும் வசனங்கள் மிகமிகக் குறைவு. அப்படி அமைதியாக இருக்கிற மையக்கதாபாத்திரத்திற்கும் மற்றவர்களுக்குமிடையே நடக்கிற தொடர்பு, மனித வன்முறையின் அடித்தளங்கள், அவர்களின் குறுக்குவெட்டுத் தோற்றங்களைப் படம் பேசுகிறது. இந்த மூன்று படங்களிலும் வெளிப்படுகிற கருப்பொருளும், கருத்தாக்கங்களும், ’Crocodile’ படத்திலும் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்.

Bad Guy படத்தில் வருகிற எதிர் கதாநாயகன் Han-gi, தற்கொலை மனப்பான்மையுள்ள, இணை – சார்ந்த ‘ஜோடி’யாக The Isle படத்தில் வருகிற Hyun-shik மற்றும் Hee-jin, அல்லது ‘The Bow’- படத்தில் வருவதுபோன்று, முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட வயதானவர் மற்றும் இளம்பெண், இந்த ஒவ்வொரு படமும் கிம் கி தக்கின் கருத்தாக்கங்களை எடுத்துக்கொண்டு, பேசாத கதாபாத்திரங்களின் பயன்பாட்டின்மூலம், ”சினிமாவில் புதிய அலை” என்று பேசவைத்தவர். விமர்சகர்களால், இந்தப் படங்கள், உணர்ச்சிகளின் சினிமா என்று குறிப்பிடப்படுகிறது. இத்திரைப்படங்களின் காட்சிகள், கவிதை தோய்ந்த பிம்பங்களைப் பயன்படுத்துகின்றன. மேலும், தீஞ்சுவை நிரம்பிய தண்ணீரால், மையக்கதாபாத்திரங்கள் சூழப்பட்டிருக்கின்றன. இது அவர்களுக்கான ஒரு மாய உலகத்தைத் திரைப்படத்தில் உருவாக்குகிறது. மேலும், இதுபோன்ற கட்டமைப்புகள், வழக்கமான சமுதயாத்திலிருந்து, தனிமைப்படுத்தப்பட்டவர்களாக, இக்கதாபாத்திரங்களை அடையாளப்படுத்துகிறது. 

Image result for The Bow movie
Figure 10 The Bow

The Isle, Bad Guy மற்றும் The Bow, என இந்த மூன்று படங்கள் முழுவதும், சிக்கலான மனித வாழ்வை, மெளனத்தின் மூலமாக ஆராய்கிறார். இது கிம் கி தக்கின் சினிமாக்களை மனித உணர்வின் ஆழமான சித்திரங்களாக மாற்ற உதவியிருக்கிறது. அமைதியாகயிருக்கிற மையக்கதாபாத்திரம், கதாநாயகானவும், வில்லனாகவும் அவன் ஒருவனே செயல்படுகிறான். இது, அக்கதாபாத்திரத்தின் தனிமையை மேற்கொண்டு கட்டமைக்கிறது. இந்த ஒவ்வொரு படத்திலும், மெளனம் வேறுபட்ட முறைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு அமைதியும், சுயமதிப்பின் ஒரு நெருக்கமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன. மனமுறிவு, தனிமை மற்றும் கற்பனையான உலகத்திற்குள் இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது. அதேவேளையில், இந்த ஒவ்வொரு திரைப்படமும் எடுத்துக்கொண்ட கதைக்களன்களிலும் வேறுபாடுகள் நிகழ்கின்றன. தொடர்ச்சியான கதைக்கருக்கள் மற்றும் கருப்பொருள்கள் வாயிலாக கிம், இந்த மூன்று (The Isle, Bad Guy மற்றும் The Bow) படங்களுக்கும், ஒரு ஒத்த தன்மையை வெளிக்காட்டுகிறார்.

The Isle படத்திற்கான கதைக்களனே மிகவும் கவிதைத்தன்மையுடன் இருக்கிறது. ஏரிக்கரையை ஒட்டிய பகுதிதான் கதை நடக்கும் இடம். முற்றிலும் நீரால் சூழப்பட்டிருக்கிற படகிற்குள்தான், பெரும்பாலான கதை நடக்கிறது. விடுமுறைக்காலங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் உல்லாசமாகப் பொழுதுபோக்குவதற்காக சில ஆண்கள் இந்த ஏரிக்கரைக்கு வருகின்றனர். சில வேளைகளில் பெண்களும் வருவார்கள். Hee-jin தான் கதாநாயகி. அவர், ஏரிக்கரைக்கு வருகிற ஆண்களை, படகில் ஏற்றிச்சென்று, ஆங்காங்கே மிதந்துகொண்டிருக்கும், குடிலுக்குள் தங்கவைப்பார். அவர்கள், ஏரியில் குடிப்பதற்கு ஏற்ற பொழுதுபோக்காக, மீன்பிடிப்பதை விரும்பிச் செய்கின்றனர். ஒவ்வொரு குடிலும் ஒவ்வொரு வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. அங்கு தங்கியிருப்பவர்கள் அருந்துவதற்கு பானங்கள், மற்றும் அவர்களுக்குத் தேவையான பொருட்களை Hee-jin ஏற்பாடு செய்துதருவார். மேலும், Hee-jin, அங்கு வருகிற ஆண்களின் காமத்தைப் போக்கிக்கொள்வதற்கான வடிகாலாகவும் இருக்கிறார். ஆண்களும் கூட, இந்த இடத்திற்கு விலைமாதுக்களை அழைத்துவந்து, மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கின்றனர். ஹீ-ஜின் கூட விலைமாதுவாகத்தான் இருக்கிறார். 

Image result for The Isle movie
Figure 11 The Isle

அந்த ஏரிக்கரைக்கு கதாநாயகன் Hyunshik வருகிறான். அங்கிருந்துதான் கதை தீவிரமடையத்துவங்குகிறது. ஏரிக்கரையின் மேற்பரப்பில் மிதந்துகொண்டிருக்கும், மஞ்சள் வண்ண படகுக்குடிலில் Hyunshik தங்குகிறான். ஆனால், அவனுக்குப் பின்னால், அவன் மறக்க நினைக்கிற கடந்தகாலம் ஒன்றுள்ளது. அதிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்தக் குடிலில் தஞ்சம் அடைந்திருக்கிறான். கறைபடிந்த கடந்தகால வாழ்விலிருந்து அவனால் வெளியே வரமுடியவில்லை. எனவே, இரண்டுமுறை தற்கொலைக்கு முயற்சிக்கிறான். பெரும்பாலும், கிம் கி தக்கின் படங்களை சிலர் வெறுப்பதற்கும், அருவருக்கத்தக்கதாகக் கருதுவதற்கும் மிக முக்கியக் காரணமே, அவர் தன் படங்களில் இதுவரை யாரும் காட்சிப்படுத்த முயன்றிராத, அவ்வளவு கோரமான காட்சியைத் தன் கதைசொல்லலுக்காகப் பயன்படுத்துகிறார். அவர் படங்களைத் திரையரங்குகளில், திரைப்பட விழாக்களில் பார்த்தவர்கள் கூட, இத்தகைய வன்முறையைப் பார்க்கச் சகிக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர். The Isle படத்திலும் அதேபோன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. உண்மையிலேயே நீங்கள் சற்று பலவீனமான மனம் கொண்டவராகயிருந்தால், நிச்சயமாக உங்களாலும் அத்தகைய காட்சியைப் பார்க்கமுடியாது.

படத்தில் ஒரு காட்சி வருகிறது. மீன்பிடித் தூண்டிலின்மூலம் மீனைப் பிடித்து, அதன் ஒருபகுதியை மட்டும் மேற்பரப்பில் சீவியெடுத்து, ஆடவனும், அவன் கூட்டி வந்த விலைமாதுவும் சுவைக்கின்றனர். மீன் உயிருடன் இருக்கும்பொழுதே, இதெல்லாம் செய்யப்படுகிறது. அந்த மீனின் வாய் திறந்து மூடுவதையும், காட்சியில் பார்க்கிறோம். அடுத்து, அந்த பாதி உயிரோடு இருக்கும் மீனை, மீண்டும் அவர் ஏரிக்குள்ளேயே விட்டுவிடுகிறார். ஆச்சரியப்படும்வகையில், அந்த மீன் மீண்டும் நீந்தியபடி, ஏரிக்குள் மறைந்துபோகிறது. இதுபோன்ற காட்சிகள் பிற உயிரைத் துன்புறுத்துவதைத் தாங்கமாட்டாதவர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டன. கிம் கி தக்கை பைத்தியம் பிடித்தவர், மனநோய் உள்ளவர் என்றும் கூட படம் பார்த்தவர்கள் திட்டியிருக்கின்றனர். 

கதையின் நாயகன், தன் கடந்தகாலச் சூன்யத்திலிருந்து வெளியேறும்பொருட்டு, மிகவும் கொடூரமான முறையில் தற்கொலைசெய்துகொள்ள முயற்சிக்கிறான். அந்த ஏரிக்கரை, மீன் பிடிப்பதற்குத் தோதான இடம் என்று பார்த்தோமல்லவா? அந்த மீன் தூண்டில் கொக்கிகளை வைத்து, Hyunshik தற்கொலைக்கு முயற்சிக்கிறான். 

Related image

கயிற்றில் சில தூண்டில் முட்களை ஒன்றாக இணைத்து, விழுங்குகிறான். தொண்டைக்குழியில் அந்த முட்கள் இறங்கியதும், அப்படியே கயிறைக் கைகளால் இழுத்து அத்தெறுகிறான். Hyunshik, அந்த கொக்கிகளை அறுக்க முற்படுகிறபொழுது, நாம் அவனின் சிவந்த கண்களைப் பார்க்கிறோம். அவன் படுகிற வேதனையை, அந்தக் கண்கள் வெளிப்படுத்துகிற மிரட்சியிலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.

Image result for The Isle movie hook


எதிர்பாரா நேரத்தில் அங்கு வந்த Hee-jin, அவனைக் காப்பாற்றுகிறாள். தொண்டையில் மாட்டியிருக்கிற முட்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கி வெளியே எடுக்கிறாள். ரத்தம் தோய்ந்த அந்தத் தூண்டில் முட்கள் நம் பார்வைக்குக் கிடைக்கின்றன. படம் முழுவதுமே, ஹீ-ஜின், அவனுடன் ஒரு விசித்திரமான ஈர்ப்பையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறாள். Hyun-shik, Hee-jin இருவருமே, வலியேற்பு வெறி, வலியேற்படுத்துவதன் மூலம் காம இன்பம் அடைதல் போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். ஹீ-ஜின்னும், அதேபோன்று மீன் பிடிக்கும் தூண்டிலைப் பயன்படுத்தி தற்கொலைசெய்ய முயற்சிக்கிறாள். சொல்லப்போனால், இன்னும் கொடூரமாக தற்கொலை செய்ய நினைக்கிறாள்.

Image result for The Isle movie hook

 Hyun-Shik போலவே, ஹீ-ஜின் தூண்டில் கொக்கிகளைத் தன் பெண்ணுறுப்பிற்குள் செலுத்தி, அந்த வலியின் மூலம் மரணமடைய நினைக்கிறாள். தற்கொலை செய்வதற்கு எத்தனையோ வழிவகைகள் இருந்தாலும், இதுபோன்று மிகவும் வன்முறையான, தன் உடலையே முற்றிலுமாக சிதைத்துக்கொண்டு, அது தருகிற தாங்கொணா வலியை அனுபவித்து, சீழ்பிடித்துச் சாவதை, இவ்விருவரும் தேர்ந்தெடுக்கின்றனர். அது அவர்கள் அடைந்திருக்கிற துயரமான வாழ்க்கைதான், இதுபோன்ற கொடூரங்களைச் செய்யத் தூண்டுகிறது என்ற முடிவிற்கு வரலாம். செய்நன்றிக் கடன் போல, இப்போது, Hyun-Shik, அவளைக் காப்பாற்றி, சிகிச்சையளித்து, பழைய நிலைக்குத் தேற்றுகிறான்.

Image result for The Isle movie hook

கதை அடுத்தடுத்தக் கட்டங்களில் முன்னேறும்பொழுது, இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொள்கின்றனர். எவ்வித சுயநலத்தன்மையும் இல்லாமல், இணை- சார்ந்தவர்களாகயிருக்கின்றனர். படத்தின் இறுதியில், ஹுன் ஷிக் மற்றும் ஹீ-ஜின் என இருவருமே கொலைகாரர்களாக மாறுகின்றனர். தங்களைத் தொந்தரவு செய்பவரைக் கொன்று அதே ஏரிக்குள் மூழ்கடிக்கின்றனர். ஒரு விலைமாதுவின் மோட்டார் பைக் கூட தண்ணீருக்குள் கிடக்கிறது. பின்பு ஒரு கட்டத்தில், அந்தக் குடிலுக்கு விலைமாதுவுடன் வரும் ஒருவன், மீன் பிடித்துக்கொண்டிருக்கும்பொழுது, தன் விலைமதிப்பான கைக்கடிகாரத்தைப் பக்கத்தில் கழட்டிவைக்கிறான். ஆனால், தெரியாத்தனமாக, விலைமாது ரோலக்ஸ் கடிகாரத்தைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்டுவிடுகிறார். அந்தக் கடிகாரத்தைத் தேடிச்செல்லும்பொழுது, இவ்விருவரும் கொலைசெய்த உடல், மோட்டார் சைக்கிள் போன்ற பொருட்களும் வெளியே தெரியத் துவங்குகின்றன. 

பின்பு, அந்த மிதக்கும் மஞ்சள் குடிலை, பிடியிலிருந்து விடுவித்துக்கொள்கின்றனர். ஏரியின் போக்கில் அது மிதந்துசெல்கிறது. பாலியல் உறவுசார்ந்த கேள்விகளில் நிறுவப்பட்டிருக்கிற படம், அது சார்ந்த ஒரு தத்துவக் குறியீட்டோடு முடிகிறது. 

Related image

இதேபோன்ற, மிதக்கும் குடில், அவரது Spring, Summer, Fall, Winter, And Spring படத்திலும் வருகிறது. அடுத்து, வயதான ஒருவருக்கும், கிட்டத்தட்ட பதினாறு வயதுடைய இளம் பெண்ணிற்கும் இடையேயான மெளனமான உறவைப் பற்றி The Bow திரைப்படம் எடுத்தாள்கிறது. இருவரும் நடுக்கடலில், ஓரளவு பெரிய மீன்பிடிப் படகில் வசித்து வருகின்றனர். நிலப்பகுதியிலிருந்து ஒவ்வொரு நாளும் வருகிற மீனவர்கள் வாயிலாகத்தான் வெளி சமூகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது, என்பதையே தெரிந்துகொள்கிற சூழ்நிலை இருக்கிறது. அந்தப் பெண், இன்னொரு ஆண்மீது ஈர்ப்பினை வெளிப்படுத்துகிறபொழுது, வயதானவருக்கும், அந்தப் பெண்ணிற்குமிடையே முரண்கள் அதிகரிக்கின்றன. இந்தப் படமும், முழுக்க மெளனத்தால் நிரம்பியிருக்கிறது.

 நிஜ வாழ்க்கையில், கிம் கி தக் மீது, பாலியல்புகார்கள் வந்திருப்பதும் உண்மை. இதுபோன்ற சம்பவங்கள், திரைப்படத்தில் மட்டும் அறம் சார்ந்த கருத்துக்களைப் பயன்படுத்தி, தனிமனித வாழ்க்கையில், அதைப் பின்பற்றாத தன்மையுடையவராக, கிம் இருக்கிறாரோ, என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. படைப்பாளியை, அதன் படைப்புகளுடனும் பொருத்திப் பார்த்து, அதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களுக்கு, அவரே முரணாக நடந்துகொள்கிறபொழுது, அறம் சார்ந்தபார்வை வெறும் திரைப்படத்திற்காக மட்டுமா? என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால், அவரது படைப்புகள் கலைத்தன்மைக்கு சான்றாகயிருக்கின்றன.

The Isle படத்தில் ஹீ-ஜின் கதாபாத்திரத்தில் நடித்த, ஸுஹ் ஜங்(Suh Jung), மற்றும் கிம் கி தக்குடன், பப்லோ க்ஜோல்ஸெத், நடத்திய பேட்டியில், கிம் கி தக், தன்மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களும் பதில் சொல்கிறார். அதேவேளையில், கிம் கி தக், திரைப்படம் எடுக்கையில், அவரது மனநிலை என்னவாகயிருக்கிறது, என்பதையும் இந்தப் பேட்டியை வாசிக்கும்பொழுது, புரிந்துகொள்ளமுடிகிறது.

சாங் யீமு-வின் ‘ரெட் சொர்கம்’ (Red sorghum) போன்ற படங்களில் பார்த்து வியந்த, அதிசயக்கத்தக்க ஒளிப்பதிவுக் காட்சிகளையும், ஈர்ப்புமிக்க இடங்களையும், குறைந்த பட்ஜெட்டில் சாதிக்கமுடியாது என்று நினைத்திருப்போம். ஆனால், அதைப் பொய்யென, மிகக் குறைவான பொருட்செலவு கொண்டு, வெளியாகி, உலகெங்கிலும் பரவலான கவனத்தையும் பெற்றிருக்கும், இந்தக் கொரியத்திரைப்படம் (The Isle) சாதித்துக்காட்டியிருக்கிறது. இதில் வாய் பேசாத பெண்ணாக ஹீ ஜின் வேடத்தில் ஸுஹ் சங் நடித்திருக்கிறார். அந்த ஏரியில் மிதக்கும் குடிலில், இரண்டு பேர் வரையிலும் தங்கமுடியும். அங்கு வந்து தங்குபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார் இந்தப் பெண். அவர்களுக்கு விலைமாது வேண்டுமென்றாலும், அதையும் ஏற்பாடு செய்கிறார். கரையிலிருந்து, அந்த மிதக்கும் குடில் இருக்கும் இடத்திற்கு, வந்திருக்கிற நபர்களை அழைத்துச்செல்லுதல், இவரது முக்கியத் தொழிலாகவும் உள்ளது. இந்தக் கதை நிகழும் இடம்தான், படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரம் போலவே, செயல்படுகிறது. ஒளிப்பதிவில் கதைக்குத் தேவையான அழகியலைச் சேர்க்கிறது. 

Image result for The Isle kim ki duk movie

இந்தப் படத்தில் காதல், சஸ்பென்ஸ், மனித நிலைக்கு மிகவும் உயர்ந்த தியானம், போன்றவை எல்லா ஜானர் திரைப்படங்களிலும் இருந்துவிடும் என்று கூறமுடியாது. கவிதைப்பூர்வமான காட்சியியல் தோற்றங்கள் படத்தில் முன்னும்பின்னுமாக வருவதும், பல அடுக்குகளில் அர்த்தங்களை உட்பொதிந்திருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டிருக்கிற சம்பவங்களும், மற்றும் நயநாகரீகமற்ற, இழிந்த காட்சிகளும், ,இருப்பதால், படம் பார்க்கிற மக்கள் அந்த எதிர்பார்ப்போடு அலறினர்.

கிம் கி தக்கின் படங்களை வெறுப்பவர்களும் உண்டு, அளவுக்கதிகமாகக் காதலிப்பவர்களும் உண்டு. இதுசார்ந்து அவரிடமே கேள்விகளைக் கேட்கலாம்.
கேள்வி: ’The Isle’ திரைப்படம் கொரியாவில் ஏற்கனவே திரையிடப்பட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். பின்பு, நேற்றிரவு உட்டா(Utah)வில், உள்ள பார்க் சிட்டியில் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இவ்விரு இடங்களிலும், இந்தப் படத்தைப் பார்க்கிற மக்களிடத்தில், அதைப் புரிந்துகொள்கிற தோற்றத்தில், கலாச்சார வேறுபாடுகள் எதையேனும் கவனித்தீர்களா? படத்தின் இயக்குனர் மற்றும் அதில் நடித்தவர் என்ற முறையில் இதற்கான பதிலை உங்களிருவரிடமும் எதிர்பார்க்கிறேன்…

கிம்: கொரிய பார்வையாளர்களைப் பொறுத்தவரை, இந்தப் படத்தை முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள் என 30 சதவீதமானவர்களை மட்டுமே சொல்லமுடியும். ஆனால், நேற்றிரவு நடந்த திரையிடலில், அப்படியே அதற்கு எதிர்ப்பதமாக இருந்தது. அதிகம மக்கள், இந்தப் படத்தை ஆழமாகப் பார்த்துப் புரிந்துகொண்டனர். 
ஸுஹ் சங்: நானும் இதை ஒப்புக்கொள்கிறேன். நேற்றிரவு திரையிடலில் பங்கெடுத்துக்கொண்ட மக்கள், படத்தைச் சிறப்பாகப் புரிந்துவைத்திருந்தனர்.

கேள்வி: ஸ்கிரிப்டிற்கு, சங் ஸுஹ்-வின் அசலான எதிர்வினை என்ன?

ஸுஹ்: முதல்முறையாக, இந்தத் திரைக்கதையை வாசிக்கிறபொழுதே, அந்தக் கதாபாத்திரத்துடனான நெருக்கத்தை உணர்ந்தேன். ”இது எனக்காக எழுதப்பட்டிருக்கிறது – நான் தான் இதில் நடிக்க வேண்டும்” என்று முடிவுசெய்தேன்.

கேள்வி: நேற்று திரையிடல் முடிந்தபின்பாக, நடந்த கேள்வி-பதில் நிகழ்வில், இந்தப் படம் கொரியாவில், பெண்ணியவாதிகளால் எப்படியெல்லாம் தாக்கப்பட்டது, விமர்சிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்டீர்கள். அத்தகைய விமர்சனங்களுக்கு எப்படிப் பதிலளித்தீர்கள்?

கிம்: கொரியர்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறபொழுது, இதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. படத்தில், விலைமாதுக்கள், லேசாக முகம் காட்டினால்கூட, கொரியப்பார்வையாளர்கள் அதனை அவமரியாதையாகக் கருதி, முகம்சுளிக்கின்றனர். தனி நபர்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் பிரசங்கம் செய்வதற்கு, கொரிய சமுதாயம் இன்னும் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், அந்தத் திறனை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்.

C:\Users\Arun M\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.MSO\A4F734F4.tmp
Figure 12 Jung Suh

கேள்வி: அமெரிக்காவில், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களைச் சித்திரவதை செய்வதை, படங்களில் பார்க்கலாம். ஆனால், அது நிறுவப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். மேலும், அந்தக் காட்சி, “இது ஒரு திரைப்படம்தான்” என்ற புரிதலைத் தருகிறது. ஒரு காமெடி படத்தில், நாய் ஒன்றினை உதைத்து, சன்னல் வழியாக வெளியே வீசியெறிப்படுகிற காட்சியைப் பார்த்து, நம் மனது பதறினாலும், அந்தக் காட்சி பொய்யென்றும், அந்த நாய் உண்மையிலேயே சன்னல் வழியாக வீசியெறியப்படவில்லை, என்பதும் நம் உள்மனதிற்கு நன்றாகவே தெரியும். ஆனால், இந்த The Isle படத்தைப் பொறுத்தவரை, காட்சியில், உண்மையான தவளையின் மேற்புறத்தோலை, அது உயிரோடு இருக்கும்பொழுதே அப்படியே உரிப்பதையும், உண்மையான உயிருள்ள மீனின் ஒரு பக்கம் சிதைக்கப்பட்டு, அது மீண்டும் ஏரிக்குள் விடப்படுவதையும் மக்கள் பார்க்கின்றனர். இது பார்வையாளர்களை மனரீதியாக துன்புறுத்துகிறது மேலும், மக்களிடமிருந்துப் படத்திற்குக் கிடைக்கவேண்டிய வரவேற்பிற்கும் முட்டுக்கட்டையாக உள்ளது. அல்லது, இதனையே வேறுவார்த்தைகளில் சொல்வதானால், வேறுநாடுகளுக்கும், உங்கள் படத்தை வினியோகம் செய்வதற்கு, இதுபோன்ற காட்சிகள் தடையாகயிருக்கலாம். இதைக்குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

கிம்: ஆம், நான் அந்த உண்மைகளைப் பற்றிக் கவலைப்படுகிறேன். ஆனால், நான் அவற்றை ஒரு உணவுப்பொருளாகத்தான் பார்க்கிறேன். நாம் சாப்பிடுகிற உணவிற்கும், அதற்கும் ஏதொரு வித்தியாசமும் இல்லை. மீன் மற்றும் தவளையை உண்ணும் மனிதர்கள் உள்ளனர். அமெரிக்காவை எடுத்துக்கொண்டாலும், மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். அந்த உயிர்களைக் கொல்லாமல் சாப்பிடமுடியுமா? அவற்றைக் கொன்று, அந்த இறைச்சியைச் சமைத்து, பிறகு சாப்பிடுகிறோம். இந்த உயிரினங்களை உண்ணும் மக்கள், தாங்கள் செய்த படுகொலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. விலங்குகளும் இந்த நுகர்வுச் சுழற்சியில் ஒரு பகுதியாக உள்ளன. திரையில் பார்க்கும்பொழுது, இது மிகவும் கொடூரமானதாகத் தோன்றுகிறது. ஆனால், நான் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. உலக மக்கள் எல்லோருமே, இதே பார்வையில்தான் பார்ப்பார்கள் என்று சொல்லமுடியாது. எல்லா மக்களுக்குமே இந்த ஒத்தபுரிதல் இருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது. ஒரு பகுதியினர், ’ஆம் இது ஒரு உணவுதான்’ எனும் அடிப்படையில் பார்த்தால், மற்ற பகுதியினர், அதை ஒரு உயிரின் சித்திரவதையாகப் பார்ப்பார்கள். ஆம், நிச்சயமாக கலாச்சார வேறுபாடுகள் இருக்கின்றன. ஒருவேளை, அமெரிக்கர்கள், இதுபோன்ற காட்சிகளைப் பிரச்சினைக்குரியதாகக் கருதலாம். ஆனால், இதே காட்சியை மற்ற பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டு பார்ப்பதை, அவர்கள் கருத்தில்கொண்டால், காட்சியை மீண்டும், திரையில் பார்க்கிறபொழுது, அவர்களுக்கு எந்தச்சிக்கலும் இருக்காது என்று நம்புகிறேன். 

Image result for kim ki duk

கேள்வி: (ஸுஹ் சங்கிற்கு) கிம் கி தக், 1996-ஆம் ஆண்டுமுதல், தீவிரமாக, ஒரு வருடத்திற்கு ஒரு படம் என வெளியிட்டுவருகிறார். உலகம் முழுவதும் நடக்கிற திரைப்பட விழாக்களிலும் அவரது திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. The Isle படத்தை, கிம் கி தக்கின், இதற்கு முந்தைய பிற படங்களோடு ஒப்பிடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஸுஹ் : நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பு வரை, அவரது படங்களில் Wild Animals மட்டுமே பார்த்திருந்தேன். அந்தப் படத்தில் கையாளப்பட்டிருக்கிற காட்சியியல் பிம்பங்கள் மற்றும் அதன் வெளிப்பாடுகளால் உண்மையிலேயே அவற்றின்பால் ஈர்க்கப்பட்டேன். ஆனால், ஒரு வேடிக்கை என்னவென்றால், அவரை முதன்முதலாகச் சந்திக்கிறபொழுது, நான் பார்த்து வியந்த Wild Animals படத்தை இயக்கியது அவர்தான் என்பதே எனக்குத் தெரியாது – அதனால் அது விதிபோல தோன்றுகிறது. இப்போது அவருடைய அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். அவற்றிலிருந்து இந்த The Isle திரைப்படம் மிகவும் வேறுபட்டது என்றே நினைக்கிறேன். எதிர்காலத்தில், ஒரு கட்டத்தில், தென்கொரியா, அங்கு வாழும் மக்கள் மற்றும் சமுதாயத்தின் மீதான கோபத்தையும், உள் வலியையும் வெளிப்படுத்துவதுபோல படங்கள் எடுக்கக்கூடும். இது என் உள்ளுணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ”தான் இதுபோல படமெடுக்க விரும்புகிறேன்” என்று, அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.

கேள்வி: ஸ்டுடியோ விநியோகஸ்தர்களின் ஏகபோக கட்டுப்பாடுகளின் மூலம், அமெரிக்கத் திரைப்படங்கள், உள்ளூர் திரைப்படங்களுக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிற வேளையில், பிற வெளிநாட்டுப் பகுதிகள் போலல்லாமல், கொரியா, வலிமையான படக்காட்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து, அனுபவித்துவருவதாகத் தெரிகிறது. ஏனெனில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Swiri எனும் த்ரில்லர் திரைப்படம், டைட்டானிக்கை விடவும் விஞ்சிவிட்டது. இவ்விரு படங்களுக்கான போட்டியில், கொரிய மக்கள், தங்கள் நாட்டில் எடுத்த படத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

கிம்: நன்று, அமெரிக்கத் திரைப்படங்கள் முடிவில்லாமல், தங்களைத் தாங்களே பிரதியெடுக்கின்றன. இதில் என்ன சுவாரஸ்யமான விஷயம் என்றால், பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்கள், கொரியாவில் தோல்வியடைகின்றன. அதேசமயம், கொரியாவில் வெளியாகிற பெரிய பட்ஜெட் கொரியத் திரைப்படங்களுக்கும் பாரிய அளவிலான கூட்டம் திரையரங்கிற்கு படையெடுத்து, படங்களைப் பார்த்து மகிழ்கின்றன. ஆனால், The Isle குறைந்த முதலீட்டில் உருவான திரைப்படம். கொரியாவில், இதுபோன்ற படங்கள், மிக அதிகளவிலான மக்களால் பார்த்து அனுபவிக்கப்படமாட்டாது. ஆனால், திரைப்படத்தைத் தீவிரமாக அணுகுகிறவர்கள், சிறந்த படங்களைப் பார்க்க விருப்பம் கொண்டவர்கள் என எனக்கான ரசிகர்கள் இதுபோன்ற படங்களைப் பார்ப்பதால், ஓரளவிற்கு வெற்றிபெறுகின்றன. கவனிக்கப்படுகின்றன. ஆனால், டொரண்டோ ஃப்லிம் பெஸ்டிவல் மற்றும் சன் டேன்ஸ் ஃப்லிம் பெஸ்டிவலில் இங்கு திரையிடப்படுவதற்கும் The Isle படம் தேர்வாகியிருக்கிறது. இதே திரைப்பட விழாவிற்கு கொரியாவில் பெரிய பொருட்செலவில் உருவான ஆறு அல்லது ஏழு திரைப்படங்கள் போட்டிப்பிரிவில் கலந்துகொண்டன. ஆனால், அவையெல்லாம் தேர்வாகாமல், குறைந்த முதலீட்டில் உருவான The Isle-தான் தேர்வாகியிருக்கிறது. இதுபோன்ற உண்மைகளால், நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Related image
Figure 13 The Isle

கேள்வி: The Isle படத்திற்கான பட்ஜெட் தொகை எவ்வளவு? எப்படியும் பல மில்லியன் பணம், இப்படத்திற்காகச் செலவு செய்யப்பட்டதுபோல தோன்றுகிறது…


கிம்: ஐம்பதாயிரம் டாலர்கள் மட்டுமே. நாங்கள் அனைவரும் ஊதியம் இல்லாமல் பணிபுரிந்ததால் இது சாத்தியமானது.

கேள்வி: The Isle படத்தைப் பார்க்கிறபொழுது, இதேபோல படங்கள் எடுக்கிற மற்றொரு இயக்குனரின் ஞாபகம் வந்தது. அவரது படங்களைப் பற்றியும், The Isle சிந்திக்க வைத்தது. அவரும், குறைந்த முதலீடுகளில், நம்பமுடியாத அளவிற்கு சிறப்பான படங்களைக் கொடுக்கிறார். காட்சியியல் கட்டமைப்பிலும், ஜானரின் அடிப்படையில் அழகான மற்றும் கொடூரமான பிம்பங்களைக் கதையின் போக்கில் பயன்படுத்துவதுமென, உங்கள் படங்களின் பாணியை, அவரது படத்திலும் பார்க்கமுடியும். அந்த ஜப்பானிய இயக்குனரின் பெயர் டகேஷி மைக்(Takashi Miike). நீங்கள் அவர் இயக்கிய AUDITION திரைப்படத்தைப் பார்த்ததுண்டா?

Image result for takashi miike
Figure 14 Takashi Miike

பதில்: டொரொண்டோவில் அவரது AUDITION திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படம் என்னைப்போலவே, இன்னொரு நபரும் வேலை செய்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. நாங்கள் ஒரே வகைப்பாட்டின் இரண்டு மாதிரிகள்.

கேள்வி: இத்தகைய குறைவான பட்ஜெட்களுடன் பணியாற்றுவதால், நீங்கள் எப்போதாவது டிஜிட்டல் வீடியோக்களில் படப்பிடிப்பு நடத்துவதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?

கிம்: டிஜிட்டல் வீடியோக்களைப் பொறுத்தவரை, அதில் பதிவாகிற காட்சிகள், பிம்பங்கள், தட்டையாகத் தோற்றமளிக்கின்றன. எனவே, முழு படத்தில், மிகச்சிறிய பகுதிக்கு மட்டுமே, இந்த டிஜிட்டல் வீடியோக்களைப் பயன்படுத்துகிறேன். 100 சதவீதம், முழுப் படத்திற்கும் பயன்படுத்துவதில்லை. ஃப்லிம் ரோல்களைப் பயன்படுத்தி எடுக்கப்படுகிற காட்சிகளில், ஒருவித Organic Look உள்ளது. அது மிகவும் திருப்திகரமான உணர்வைத் தருகிறது.

(இந்தப் பேட்டி, ஜனவரி 31, 2001 அன்று வெளியாகியிருக்கிறது. எனவே, அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும், ஃப்லிம் கேமராக்களைப் பயன்படுத்தித்தான் திரைப்படங்கள் எடுத்து வந்தனர். டிஜிட்டல் கேமராக்களின் வளர்ச்சி, அப்போதுதான் மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. எனவே, கிம் கி தக்கிடம் கேட்கப்பட்ட இந்தக் கடைசிக் கேள்வியை, அதன் காலத்தோடு இணைத்துப் பார்க்கிறபொழுது, பொருத்தமான உணர்வு கிடைக்கிறது.)