உலகைக் குலுக்கிய ரஷ்யப் புரட்சி : ரெட்ஸ் - யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடல்

-யமுனா ராஜேந்திரன்

1981ஆம் ஆண்டு வாரன் பெட்டி (Warren Beatty) இயக்கத்தில் வெளியான படம் ரெட்ஸ். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் விட்டோரியோ ஸ்டொராரோ (Vittorio Storaro). அமெரிக்கா ஏகாதிபத்திய நாடு, சிறு சிறு நாடுகளின் மீது, தனது குயுக்தியால் வன்முறையை ஏவுகிற நாடு. ஆனால், அமெரிக்காவிலிருந்தும் இதுபோன்ற, அரசியல் சினிமாக்கள் வந்திருக்கின்றன என்பதைக் கவனப்படுத்தவே இவ்வுரையாடல். அக்டோபர் புரட்சியில் அமெரிக்காவைச் சார்ந்த பத்திரிக்கையாளர் ஜான் ரீடின் ஈடுபாடு குறித்தது இப்படம். ஜான் ரீட், இந்த அனுபவங்களை ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற தலைப்பில் புத்தகமாகவும் எழுதினார். அவரது தனிப்பட்ட காதல் வாழ்வு, ரஷ்ய அனுபவங்கள், புரட்சியின் வரலாற்றுக் காலகட்டம், பத்திரிக்கைகளின் உலகம், பத்திரிக்கையாளனாக அலைந்துதிரிதல் போன்றவை கதையின் வாயிலாக பின்னப்பட்டிருக்கின்றன. சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதையும் இப்படம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் பார்வையில் ரஷ்யப் புரட்சி எப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது, வரலாற்று ஆவணங்கள் எப்படி கதையில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன, படம் உருவாகியதன் பின்னணி, கதைசொல்லல் பாணி, அதன் அழகியல் என பல தளங்களில், ரெட்ஸ் படம் குறித்து, தோழர். யமுனா ராஜேந்திரன் அவர்களுடன் உரையாடலாம்.

யமுனா ராஜேந்திரன்: மூன்று மணி நேரம், பதினைந்து நிமிடங்கள் கால அளவு கொண்ட படம். இதில், முதல் ஒரு மணி நேரம் பத்து நிமிடம் வரையில், ஜான் ரீட், ரஷ்யாவிற்குச் செல்வதற்கு முன்புவரை, அமெரிக்காவில் அவரது சூழல் என்னவாகயிருந்தது, அரசியல் தன்னுணர்வு என்னவாகயிருந்தது என்பதைப் பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசுகிறது. அதற்கடுத்து, தோராயமாக அடுத்த ஐம்பது நிமிடங்கள் வரை, ஜான் ரீட், ரஷ்யப் புரட்சியில் பங்கெடுத்தது தொடர்பாகப் பேசுகிறது. அதற்குப் பிறகு, மீண்டும் அவர் அமெரிக்காவிற்கு வருகிறார். அமெரிக்காவில் அவரது காதல் வாழ்க்கை மற்றும் அரசாங்கத்தினால் ஏற்படுகிற சிக்கல்கள் குறித்து, கதைக்களம் அடுத்த அரைமணி நேரம் எடுத்துக்கொள்கிறது. அதற்குப் பிறகு, ஜான் ரீட், மீண்டும் ரஷ்யாவிற்குச் செல்கிறார். ரஷ்யாவிலிருந்து அவரால் திரும்பி வரமுடியவில்லை என்பதால், அவரைத் தேடிக்கொண்டு, அவர் மனைவி லூயிஸ் ப்ரைண்ட் ரஷ்யா செல்கிறார். அதிலிருந்து அவரது மரணம் வரையிலான பகுதி, படத்தின் இறுதியாக அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தைப் புரிந்துகொள்ள, இரண்டு சமகாலப் பிரச்சினைகளிலிருந்து, இதனை மறுவாசிப்பு செய்கிறோம். சோவியத் யூனியன் 1989ஆம் ஆண்டு பிளவுண்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, அந்தத் தேய்விற்குப் பின்னான காலத்தில், இந்தப் படத்தை நாங்கள் மீண்டும் மீள் பார்வை செய்கிறோம். ஏனெனில், இப்படம் சோவியத் புரட்சி நிலவிய காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனை, நாம் பின் சோவியத் காலத்தில், இப்போது மீண்டும் பார்க்கிறோம். இது முதல் வாசிப்பு. அடுத்தது, அமெரிக்காவில் 51சதவீதத்திற்கும் மேலானவர்கள், சோசலிசம் ஒரு நல்ல கோட்பாடு, அது நம் நாட்டிற்கு அவசியமான ஒன்றுதான் என்று சொல்கிறார்கள்.

டெமாக்ரடிக் கட்சியின் தேர்தலில்கூட, இறுதியில் பெர்னி ஸாண்டர்ஸ் மற்றும் ஜோ பைடன் என இருவரும்தான் வந்து நின்றார்கள். பெர்னி ஸாண்டர்ஸ் சோசலிசத்தை முன்வைக்கிற ஒருவர். மார்க்சியத்தை ஏற்றுக்கொள்கிறவர். அவரை ஒபாமா சென்று சந்தித்து, ”நீங்கள் இந்தத் தேர்தலிலிருந்து வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள். நீங்களும் எதிர்த்து நின்றால், ஜோ பைடன் வெற்றிபெற முடியாது என, பெர்னி ஸாண்டர்ஸ் மீது ஒபாமா அழுத்தம் கொடுத்தார். இதில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, ஜோ பைடனுக்காக, இடதுசாரி தத்துவங்களையும், மார்க்சியத்தையும் நம்புகிற ஒருவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று அழுத்தம் தரப்படுகிறது. தற்காலத்தில், பெர்னி ஸாண்டர்ஸின் அரசியல், ஒரு மையநீரோட்ட அரசியலாக இன்று உருவாகியிருக்கிறது. அமெரிக்காவில் சோசலிசம், ஜனநாயக சோசலிசம் வேண்டுமென்பது விவாதப்பொருளாகியிருக்கிறது. அமெரிக்காவில் என்றைக்குமில்லாத ஒரு மாற்றம் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. அது என்னவென்றால், டெமாக்ரடிக் பார்ட்டிக்குள்ளேயே சோசலிசத்தை விரும்புகிற இடதுசாரி சக்திகள் இருக்கிறார்கள். அவர்கள் இன்று மெய்ன்ஸ்ட்ரீம் சக்திகளாக உருவாகியிருக்கிறார்கள் என்பதைத்தான் பெர்னி ஸாண்டர்சனின் சூழல் எடுத்துக்காட்டுகிறது.

அதற்கடுத்து, முதலாளித்துவ சமூகமாக நிலவுகிற அமெரிக்கச் சமூகத்தில், வெளிநாட்டுக் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், உள்நாட்டில் சிற்சில நடவடிக்கைகள் எடுப்பதுபோன்று, ஜோ பைடன் செயல்படுகிறார். முழுக்க வலதுசாரியாகவும், முழுக்க நிறவாதியாகவும், முழுக்க ஒரு கன்சர்வேடிவ் மனப்பான்மை கொண்டவராக ட்ரம்ப் இருக்கிறார். அமெரிக்காவில் இன்றைய சூழல் இதுதான். நிலவுகிற இதே விஷயங்கள், 1917ஆம் ஆண்டும் 1917ஆம் ஆண்டிற்கு முன்பும் அமெரிக்காவில் நிலவியது. இதைத்தான் நான் மறுவாசிப்பு என்று குறிப்பிடுகிறேன். ஒன்று, பின் சோவியத் சூழலில் வைத்து இந்தப் படத்தைப் பார்க்கிறோம். இன்னொன்று, நிகழ்காலத்தில் இருக்கிற அமெரிக்கச் சமூகத்தினுடைய இடது, வலது, வலதிற்குள் இருக்கிற டெமாக்ரடிக் சக்தியை வைத்து இப்படத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறோம்.

1917ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ரஷ்யாவில் புரட்சி நடந்து, வெற்றிபெறுகிறது. அதற்கு முன்பாகயிருக்கிற மூன்று வருட காலங்களில் அமெரிக்காவில் இடதுசாரி அரசியல் என்னமாதிரியாக வளர்ந்தது, என்பது தொடர்பான விஷயங்களை கதைக்களனின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிறது. இந்தப் படத்தினுடைய கதை சொல்லல் இரண்டுவிதமாக இருக்கும். முதலில் ஒரு பாடல் ஒளிபரப்பாகும். அதற்குப் பிற்பாடு, ஜான் ரீடுடனும், அவர் காதலி லூயிஸ் ப்ரைண்டுடனும் உண்மையிலேயே பழகிய, இன்னும் உயிரோடு இருக்கிற நபர்கள், தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதாக அமைகிறது. வரலாற்றுக் காலத்தோடு, நிகழ்காலத்தைத் தொடர்புபடுத்தி, நிகழ்காலத்தின் இடதுசாரி மரபைச் சொல்வதாக, எது தங்களை அதுநோக்கி நகர்த்தியது என்று சொல்வதாக, அந்தக் கதை சொல்லல் அமைந்திருக்கிறது. இந்த ஆவணப்படப் பாணியிலான தன்மையிலிருந்துதான் கதையும் நகர்கிறது. கதை ஆரம்பத்தில் எப்படித் துவங்குகிறதோ, அதேபோலத்தான் இறுதியிலும் முடிகிறது.

தொழிலாளிகள் சுரண்டப்படுகிறார்கள், எனவே, இவர்களைத் தொழிற்சங்க அமைப்பிற்குள் கொண்டுவரவேண்டும், ஒன்றுபட்ட ஒரு அமைப்பு அமெரிக்கா தழுவி உருவாக வேண்டும் என்ற அரசியல், படத்தின் கதை சொல்லலுக்குள்ளேயே இருக்கிறது. இந்த அரசியலில் ஜான் ரீட் என்ன பாத்திரம் வகிக்கிறார்? அல்லது லூயிஸ் ப்ரைண்ட் (Louise Bryant) என்ன பங்கு வகிக்கிறார்? இவர்களுக்கு இணையாக இப்படத்தில் வருகிற இன்னொரு கதாபாத்திரம், கவிஞர் யூஜினி ஓநெய்லின் (Eugene O'Neill) பங்கு என்ன? என்பதையும் இந்தக் கதை விவாதிக்கிறது. ஜான் ரீட், ஒரு உறுதியான மார்க்சிஸ்டாகவோ, உறுதியான சோசலிஸ்டாகவோ, சோசலிசத்தைத் தன்னுடைய நாடுகளில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று நினைக்கிற ஆளோ அல்ல. அவர் ஒரு பத்திரிக்கையாளர். அதேபோல, லூயிஸ் ப்ரைண்ட் பத்திரிக்கைகளில் சிறந்த கட்டுரை எழுத முயற்சிப்பவர். லூயிஸ் ப்ரைண்டிற்கு, கணவனின் வைத்தியத் தொழிலும், பத்திரிக்கைத் தொழிலும்தான் தெரியுமேயொழிய, ஆரம்பத்தில் அவருக்கும் பெரிய அரசியல் உணர்வோ, பொதுவுடைமை நோக்கமோ கிடையாது. மேலும், அவருடைய அக்கறை என்பது, புகைப்படங்கள், எழுத்து மற்றும் கலை போன்ற விஷயங்களில்தான் இருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஜான் ரீட் குறைந்தபட்ச அரசியல் உணர்வு கொண்டவர். ஆனால், அவர் மார்க்சிஸ்டோ, பொதுவுடைமைவாதியோ அல்ல. லூயிஸ் ப்ரைண்டிற்கு எந்தவித அரசியல் உணர்வும் இல்லை, அவருக்கு கலை மற்றும் இலக்கியத்தில்தான் ஈடுபாடு இருக்கிறது. இதில், யூஜினி ஓநெய்ல், ஜான் ரீடின் நண்பர். அவர் ஒரு லிபரல். அவர் எப்போதுமே சோசலிசம், சோவியத் யூனியன் போன்ற விஷயங்களை விமர்சன உணர்வோடு அணுகுகிறவர். ஆனால், அதேநேரத்தில் அமெரிக்க வாழ்வு தொடர்பாகவும், விமர்சன உணர்வு கொண்டிருப்பவர். குறிப்பாக, நிறவாதத்திற்கு, இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்.

அம்சவள்ளி: கதையில் சில திருப்புமுனைப் புள்ளிகள் எம்மா கோல்ட்மன் (Emma Goldman) மூலம் நிகழ்கின்றன. ஆனால், ஜான் ரீட், லீயிஸ் ப்ரைண்ட், யூஜினி ஓநெய்ல் போன்று, இணையான கதாபாத்திரம் எம்மா கோல்ட்மனுக்கு படத்தில் வழங்கப்படவில்லை. வரலாற்றில் அவரது இடம் என்னவாகயிருந்தது?

யமுனா ராஜேந்திரன்: எம்மா கோல்ட்மன் மிகவும் கறாராகப் பேசக்கூடிய, தியரிட்டீசியன். அமெரிக்க கம்யூனிசம், அமெரிக்க இடதுசாரி இயக்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள் சார்ந்து எம்மா கோல்ட்மன் நிறைய எழுதியிருக்கிறார். சோவியத் யூனியன் அமைக்கப்பட்ட பிறகு, விமர்சன ரீதியில் அதிகம் எழுதியிருக்கிறார். எனினும், படத்தில் எம்மா கோல்ட்மனுக்கு மற்ற கதாபாத்திரங்களைப் போல, அதிகமான முக்கியத்துவம் தரப்படவில்லை. அதற்குக் காரணமென்னவென்றால், சமவேளையில் இந்தப் படம் ஒரு முக்கோணக் காதல் கதையையும் சொல்லிக்கொண்டு போகிறது. ஜான் ரீடுக்கும் - லூயிஸ் ப்ரைண்டிற்கும், யூஜினி ஓ நெய்லுக்கும் - லூயிஸ் ப்ராண்டிற்கும் இருக்கிற காதலை, விடுபடலை படம் முழுக்கவுமே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த முக்கோணக் காதல் கதையில், ஒருவரையொருவர் நேசிக்கின்றனர். ஒருவர் மீது மற்றவர் மரியாதை வைத்திருக்கின்றனர். ஜான் ரீடுக்கு, லூயிஸ் ப்ரைண்டிற்கும் யூஜினி ஓ நெய்லுக்கும் இடையேயிருக்கிற உறவு தெரிந்தபிறகும், லூயிஸ் ப்ரைண்டுடன் சிநேகமான உறவையே கடைப்பிடிக்கிறார். பிற்பாடு, ஜான் ரீட், ரஷ்யாவில் மாட்டிக்கொண்டு திரும்பிவர முடியாமல் தவிக்கிறபோது, லூயிஸ் ப்ரைண்டிற்கு உதவி செய்து, அவளை ரஷ்யாவிற்கு அனுப்புவது யூஜினி ஒ நெய்ல். ஏனெனில், ஜான் ரீட் எனக்கு நல்ல நண்பன். அவன் ரஷ்யச் சிறையில் மடியக்கூடாது. அவனைக் காப்பற்ற உனக்கு உதவுகிறேன் என்கிறார் யூஜினி ஓ நெய்ல். ஃப்ரீ லவ் (Free Love) என்ற விஷயம், அங்கு எப்படி நடைமுறைக்கு வருகிறது என்பதையும் கதை ஒரு அடுக்கில் சொல்கிறது. எனவே, இந்த ஹ்யூமன் ட்ராமாவிற்கு இடையில், அக்டோபர் புரட்சி போன்ற வரலாற்றுச் சம்பவங்களை முக்கியத்துவப்படுத்துவதால், எம்மா கோல்ட்மனுக்குரிய முக்கியத்துவத்திற்கு இடமில்லாமல் போகிறது.

அம்சவள்ளி: எம்மா கோல்ட்மன் கதாபாத்திரம் மிகச்சிறிய அளவிலே தோன்றினாலும், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, அக்கதாபாத்திரத்தில் நடித்த மெளரீன் ஸ்டெப்லெடனுக்குக் (Maureen Stapleton) கொடுத்திருக்கிறார்கள். இதை எப்படி எடுத்துக்கொள்வது?

யமுனா ராஜேந்திரன்: கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்து, எம்மா கோல்ட்மன் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான எழுத்தாளர் என்ற காரணத்திற்காகவும், அவரைப் பெருமைப்படுத்தும் நோக்கிலும் கொடுத்திருக்கலாம். அதேநேரம், மிக யதார்த்தமாக மெளரீன் அக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். படத்தில் ஜான் ரீடிற்கு, லூயிஸ் ப்ரைண்டை அறிமுகப்படுத்தும்போது எம்மா கோல்ட்மன் வருகிறார். அடுத்து, அவ்வப்போது நடக்கிற அரசியல் விவாதங்களில் எம்மா கோல்ட்மனும் இருக்கிறார். லூயிஸ் ப்ரைண்டிற்கும், ஜான் ரீடுக்கும் உறுதுணையாக இருக்கிறார். மிகக் குறைந்த காட்சிகளிலேயே அவர் தோன்றினாலும், அந்தக் கதாபாத்திரம் மிக முக்கியமான திருப்பங்களை உருவாக்குகிறது. உதாரணத்திற்கு, எம்மா கோல்ட்மன், லூயிஸ் ப்ரைண்டை அறிமுகப்படுத்தவில்லை என்றால், ஜான் ரீடும் லூயிஸ் ப்ரைண்டும் சந்திக்கும் வாய்ப்பு தள்ளிப்போயிருக்கும், அல்லது நிகழ்ந்திருக்காது. அதேபோல, ஜான் ரீட், ரஷ்யாவில் சிக்கிக்கொள்கிறபோதும், எம்மா கோல்ட்மன் உதவுகிறார். திரைக்கதையில், அவருக்குப் போதிய இடம் வழங்கப்படவில்லை என்றபோதிலும், அமெரிக்க வரலாற்றில் எம்மா கோல்ட்மன் குறிப்பிடத்தக்கவர்.

அம்சவள்ளி: இந்தப் படத்தில் லூயிஸ் ப்ரைண்ட், யூஜின் ஓ நெய்ல், ஜான் ரீட், எம்மா கோல்ட்மன் மற்றும் மேக்ஸ் ஈஸ்ட்மன் (Max Eastman) போன்றோர் கதையை நகர்த்துவதற்கு மட்டுமல்ல, வரலாற்றிலும் இவர்கள் முக்கியமான நபர்களாகவே இருக்கின்றனர். ஓநெய்ல் நாடகாசிரியராகவும் கவிஞராகவும் இருக்கிறார். அவர் ஆண்டன் செகாவின் கதையை நாடகமாக்குகிறார். அதேபோல, மேக்ஸ் ஈஸ்ட்மனும் மிக முக்கியமான நாடகாசிரியர். இவர்களது வரலாற்றுப் பங்களிப்புகள் எத்தகையன.

யமுனா ராஜேந்திரன்: உண்மையிலேயே அமெரிக்கக் கம்யூனிசத்தில் மிகப்பெரிய ஆளுமைகள் இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஹ்யூமனிஸ்ட் கம்யூனிசம் என்ற விஷயத்தைப் பேசிய, பெரிய சிந்தனையாளர்களெல்லாம் அந்த நாட்டில் இருந்திருக்கின்றனர். குறிப்பாக, இந்தக் கதாபாத்திரங்களில் ஒருவரான, யூஜின் ஓ நெய்லை எடுத்துக்கொண்டால், அவரைப் பற்றி மட்டுமே தனியாக ஒரு படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அது தவிர்த்து, ஆவணப்படங்கள்கூட அவரைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை, ஜாக் நிக்கல்ஸனே நடித்திருந்தாலும், யூஜின் ஓ நெய்லும் ஒரு துணைக்கதாபாத்திரம்தான்.

அதேபோல, இந்தப் படத்தில் வருகிற, பெரும்பாலானவர்கள் தனித்தனியான ஆளுமைகள், அவர்களில் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக படமெடுக்குமளவிற்கு ஆளுமைத்தன்மை உள்ளவர்களாயினும், இந்தப் படம் யாரைப் பற்றியது, எந்த அரசியல் சம்பவத்தை விவாதிக்கிறது, அதுதான் பிரதான கதைக்களம். ஆகவே, அந்த ஆளுமைகள் அனைவருக்கும், முக்கியத்துவம் கொடுத்து, படத்தை உருவாக்குவது சிரமமான விஷயம். இந்த மூன்றேகால் மணி நேரப் படத்திலேயே கூட, பாதிப்படம் அமெரிக்காவில்தான் நிகழ்கிறது. ஜான் ரீடுக்கும், அக்டோபர் புரட்சிக்குமான தொடர்பு பற்றியதுதான் இப்படம் என்றபோதிலும், ரஷ்யாவில் நிகழ்கிற காட்சிகள் பாதிதான் வருகின்றன. ஏனெனில், ஒரு படம், ஒரு மொழியில், நாட்டினுடைய சூழல் சார்ந்து எடுக்கப்படும்போது, அந்த நாட்டினுடைய சென்சிடிவிட்டி (உணர்திறன்) என்பது மிக முக்கியமான விசயம். அப்படியாக ரெட்ஸ் படத்தில் அமெரிக்காவின் சென்சிட்டிவிட்டி மிகமிக முக்கியம்.
அமெரிக்கப் படங்கள் எப்போதுமே அரசியல் பற்றிப் பேசும்போது, தேசபக்தியை முன்வைத்துப் பேசும். அடுத்து, அமெரிக்கப் படங்கள், அரசியல் என்றால், ஜனநாயகத்தை முன்வைத்துப் பேசவேண்டும். இந்த இருவிஷயங்களையும் முன்வைக்கிற, அந்த சென்சிடிவிட்டியோடுதான், நீங்கள் இடதுசாரி இயக்கங்களையும், அதனோடு தொடர்புடைய மற்ற கருத்துக்களையும் அணுகமுடியும். அமெரிக்கா என்பது உலகத்தில் லிபரல் டெமாக்ரசியை முன்வைத்த ஒரு நாடு. பல கட்சி ஆட்சி முறையை கொண்டிருக்கிற நாடு. அவர்களுக்கு சனநாயகம் மிக முக்கியமானது. அதேபோல, ’அமெரிக்கன்’ என்ற தேசியவுணர்வும் அவர்களுக்கு மிக முக்கியமானது. இந்தப் படத்தின் முதல் நுகர்வோர் யாரென்றால், அது அமெரிக்க மக்கள்தான். அந்த மக்களுக்காக படம் எடுக்கப்பட்டாலும், அமெரிக்க வரலாற்றில் ஒரு காலத்திலிருந்த, இடதுசாரி சிந்தனைகளின் தாக்கம், என்னவாகயிருந்தது என்பதையும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது. அது இன்றைக்கு எப்படி மாறியிருக்கிறது என்ற விஷயத்தை, மூன்று அமெரிக்க சென்சிடிவிடி, ஒன்று டெமாக்ரசி, இரண்டாவது அமெரிக்கன் என்ற உணர்வு, மூன்றாவது அமெரிக்கன் இடதுசாரி அரசியல் பார்வையுடன் விவாதிக்கிறது.

அன்றைக்கும், இன்றைக்கும் அமெரிக்கன் லெஃப்ட் பாலிடிக்ஸ் என்பது பெக்யூலியர் பாலிடிக்ஸ். அமெரிக்க அரசியலைச் சற்று உற்றுப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும். அமெரிக்காவில், இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், அவர்களது வெளிநாட்டுக் கொள்கைகளில் எந்தவித மாற்றங்களும் இருக்காது. நாடுகளுக்கிடையில் தலையிடுவது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். அதேபோல, உள்நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னதம், அதுவும் மாறாது. இந்த சென்சிடிவிடி, கதைசொல்லலில் மிக முக்கியமான விஷயம். அதனடிப்படையில்தான், ரெட்ஸ் படம், ஒரு பாதி அந்த அமெரிக்க மண், கலாச்சாரம் சார்ந்த உணர்வைப் பிரதிபலிப்பதுபோல உள்ளது. அதேநேரத்தில், அமெரிக்காவை, இடதுசாரி பார்வை கொண்ட சமூகமாக மாற்றவேண்டும் என்ற பார்வையும் ஒரு காலத்தில் இருந்தது, என்ற விஷயத்தையும் படம் சொல்லவேண்டும். அதனால், ரஷ்யா சார்ந்த விஷயங்களை அவர்கள் இதனோடு இணைத்துக்கொள்கின்றனர்.

அம்சவள்ளி: எனில், படம் குறித்த விமர்சனங்கள் என்னவாகயிருந்தன?

யமுனா ராஜேந்திரன்: படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்தன. இந்தப் படம் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பாக, ரஷ்யத் தலைவர்கள் தொடர்பாக, ஒருவித கொச்சையான பார்வையை முன்வைக்கிறது. அதேமாதிரி, அமெரிக்க நாடு என்ற அளவில், அதனை ஒரு நேர்மைறையான நாடு, என்ற தேசபக்திப் பார்வையையும் முன்வைக்கிறது, என இதுபோன்ற விமர்சனங்களெல்லாம் வந்தன. ஆனால், அப்படியான காரணங்களை, இன்றைக்கு மீள் பார்வையில் பார்க்கும்போது, ஒரு படம் என்றளவில், அத்தகைய விமர்சனங்களை முன்வைக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்தப் படத்தில் க்ரிகோரி ஜினோவிவோ (Grigory Zinoviev), கதாபாத்திரம், இவர் க்ளாஸ் வார் என்று சொல்கிற விசயத்தை, அவர் ஹோலி வார் என்று மொழிபெயர்க்கிறார். அதேபோல, அவர் நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறேன் என்று சொன்னபோது, ”அப்படியெல்லாம் போகமுடியாது, நீ காதலியை மறந்துவிட வேண்டும், நீ இங்குதான் இருக்க வேண்டும்” என்று வற்புறுத்துகிறார். அதேபோல, மற்றவர்களின் விஷயங்கள் குறித்து பேசவோ, விவாதிக்கவோ விடுவதில்லை. மிகவும் மூர்க்கமாக நடந்துகொள்கிறார். ஆனால், இன்றைக்கு நீங்கள் ஜினோவிவோ குறித்துப் படித்துப்பார்க்கும்போது சில உண்மைகள் தெரியவருகிறது. எம்மா கோல்ட்மன் சொல்கிறார், ப்யூரோகிரஸி (Bureaucracy) ரஷ்யாவின் நோக்கத்திற்குத் தகுந்தாற்போல இல்லாமல், கம்யூனிஸ்ட் பார்ட்டி அதைக் கட்டுப்படுத்தாமல், அதிகாரத்துவம்தான் அதைக் கட்டுப்படுத்துகிறது என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார். 1980களில் இந்தப் படம் வெளியானபோது பார்த்தீர்களென்றால், இதெல்லாம் கம்யூனிசத்திற்கு விரோதமானது, சோவியத் யூனியனையும், ரஷ்யப் புரட்சியையும் கொச்சைப்படுத்துகிறது என்று சொன்னார்கள். ஆனால், இன்று, சோவியத் யூனியன் தொடர்பாக விவாதிக்கிறவர்கள், விமர்சிக்கிறவர்களைப் பார்த்தீர்களென்றால், சோவியத் யூனியன் வீழ்ந்ததற்கான காரணங்களில் ஒன்று, ப்யூராகிரிடிக் ஸ்டேட்டாக அது உருவானது, என்ற விஷயத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். அதேபோல, அங்கிருந்த பல்வேறு ப்யூராகிரிட்டுகள், புரொபகனிஸ்ட் மதிப்பீட்டில்வைத்தே பல்வேறு விஷயங்களை அணுகுகிறார்கள்.

அம்சவள்ளி: அதேநேரம் ஜான் ரீடின் கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஒருபோதும், தனது சர்வதேச பாத்திரத்தையோ, சர்வதேசியவாதி என்ற விஷயத்தையோ நிராகரிக்கவே இல்லை. இறுதிக் காட்சியில் கூட, அவர் தொடர்வண்டியில் வரும்போது, ஜெனோவேவிடம் பேசுவதில், ஒரு முக்கியமான உரையாடல், “வென் யு பெர்ஸ் த டிஸ்டன், யு கில் த ரெவல்யூஷன்” என்பார். நான் ஒரு எழுத்தாளர், சர்வதேச அரசியலுக்கும், எனது சொந்த நாட்டிற்காகவும் நான் நிற்கிறேன், என்று சொல்கிறார். இறுதிவரை, ஜான் ரீட், தனது போக்கை, அரசியல்மயப்படுத்தாமல், எழுத்தாளர் எனும் நிலையிலிருந்து, நான் என்னுடைய நாட்டிற்காகவும், நாட்டிலிருக்கிற உழைக்கும் மக்களுக்காகவும் பேசுகிறேன் என்ற விஷயத்தைச் சொல்கிறார். படம் முழுவதுமே ஜான் ரீடின் நிலைப்பாடு, வலுவாக உள்ளது.


யமுனா ராஜேந்திரன்: அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் என்பதைத்தான் அவர் முதன்மைப்படுத்துகிறாரேயொழிய, அமெரிக்கன் இம்பீரியலிசம் என்ற விஷயத்தை அவர் முன்வைப்பதில்லை. அதேபோல, எம்மா கோல்ட்மன், ரஷ்யாவில் நான்கு மில்லியன் ஆட்கள் மரணித்துவிட்டார்கள். இதற்குக் காரணம் சோவியத் யூனியனின் நிலைமைதான் என்று சொல்லும்போது, ”அப்படியல்ல, ஏகாதிபத்தியங்கள் சூழ்ந்திருக்கிற ஒரு நாட்டில், ஏகாதிபத்தியங்கள் எல்லாவிதமான தடைகளையும், அந்த நாடுகளின்மீது சுமத்துவதால், உள்நாட்டில் இத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது” என்று ஜான் ரீட், புரட்சியை ஆதரித்துப் பேசுகிறார். எனவே, வாரன் பெட்டி, இதனை இடதுசாரிகளுக்கு எதிரான படமாகவோ, ரஷ்யப் புரட்சிக்கு எதிரானதாகவோ, லெனினுக்கு எதிரானதாகவோ எடுத்துச்செல்லவில்லை.

இந்தப் படத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று, லெனினுக்கும், ஜான் ரீடுக்கும் இடையேயிருந்த உறவு. அதை மிகவும் அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஜான் ரீடை ஒருசமயம், பின்லாந்தில் கைதுசெய்துவிடுகிறார்கள். ஜான் ரீடை விடுதலை செய்யவேண்டும் என்பதற்காக, லெனின், தான் கைதுசெய்து வைத்திருந்த ஐம்பது பின்லாந்து நபர்களை (பேராசிரியர்களை) விடுதலை செய்கிறார். யோசித்துப் பாருங்கள். ஜான் ரீடு என்ற ஒருவருக்காக, ஐம்பது கைதிகளை விடுதலை செய்கிறார் லெனின். அதேபோல, லெனினுக்கும் ஜான் ரீடிற்கும் இடையே தனிப்பட்ட உரையாடல்களும் நடந்திருக்கின்றன.

அம்சவள்ளி: அமெரிக்கர்கள் இத்தகைய புரட்சியைப் பற்றி எழுதும் எண்ணம் கொண்டவர்களா? என்ற நோக்கில், சந்தேகத்தில், ஜான் ரீடைப் பார்த்து, “நீ ஒரு அமெரிக்கனா?” என்று ஆச்சர்யமாகத் திரும்பத் திரும்பக் கேட்கிறார் லெனின்.

யமுனா ராஜேந்திரன்: லெனின், ஜான் ரீடைப் பார்த்து, “நீ ஒரு அமெரிக்கன் அமெரிக்கனா?” என்று கேட்கிறார். இதன் அர்த்தம், ஒருவர் அமெரிக்கராக இருப்பது வேறு, அமெரிக்கன் அமெரிக்கனாக இருப்பது வேறு. அதாவது, ஒருவர் அமெரிக்காவின் அரசியலை ஒப்புக்கொள்வது, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்குப் பெயர்தான், “அமெரிக்கன் அமெரிக்கன்”. அங்கிருக்கிற தொழிலாளி வர்க்கத்தினுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பதுமாதிரி இருக்கிற, ஒரு அமெரிக்கர். ஒரு நாட்டினுடைய குடிமகனாக இருப்பது, திட்டமிட்டு செய்வதல்ல. நாம் அங்கு பிறந்ததால் அந்நாட்டின் குடிமகனாகிறோம். அங்கு பிறந்ததன் காரணமாகவே, அந்நாடு செய்கிற தவறான செயல்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. உண்மையிலேயே, லெனின், ஜான் ரீடை மிகுந்த மரியாதையோடு நடத்தியிருக்கிறார். அதேபோல, லெனின் சரியான நிலைபாடு எடுத்து, புரட்சி சார்ந்த விஷயங்களை வழிநடத்துகிறார். இதை, விலாவாரியாகவேக் காட்சிப்படுத்தியிருக்கிறார் வாரன் பெட்டி.

சோவியத் யூனியனில் அதிகாரத்துவம் இருந்தது. சோவியத் யூனியன் பல விஷயங்களை புரபகண்டா விஷயங்களாகத்தான் பார்த்தன. அதேபோல, சோவியத் யூனியனிலிருந்த அதிகாரத்துவம், தனிமனித உறவுகள் போன்றவற்றில் முக்கியத்துவம் கொடுக்காமலிருந்தது. இந்த உண்மைகளும் படத்தில் இடம்பெறுகின்றன.

அம்சவள்ளி: ஆரம்பத்திலிருந்தே ஜான் ரீடிற்கு, தன்னுடைய எழுத்துகள், திருத்தி எழுதுவது பிடிக்கவில்லை. ஜினோவேதான், கடைசியாக ஜான் ரீடின் பேச்சை, எழுதுகிறார். (ஹோலி வார், க்ளாஸ் வார்). அதற்கு முன்பு ஜான் ரீடின் கட்டுரையில் இருந்த ரெட் புரொபகண்டாவை நீக்கிவிடுவார்கள். இரண்டு இடங்களில், தெளிவாக இதையே சொல்கிறார். ”நான் உண்மையைத்தான் பேசுகிறேன். வேறெதுவுமில்லை”. ஜினோவேவிடம் சொல்லும்போது, அவர் என்ன சொல்வாரென்றால், ”நான் இரண்டு வார்த்தைகளை மட்டுமே மாற்றியிருக்கிறேன். மக்களிடம் எளிமையாக தொடர்பு ஏற்படுத்துவதற்காக, அந்த வார்த்தைகளை மாற்றியிருக்கிறேன்.” என்பதுபோலச் சொல்வார். அப்போதுதான் ஜான் ரீட், “நான் உண்மையைத்தான் சொல்வேனே தவிர, மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவோ, ரெட் புரபகண்டாவை வைத்தோ எழுதமாட்டேன்” என்கிறார். பொதுவாக ஜான் ரீடின் எழுத்திற்கும், ஜினோவோவேவிற்கும் இடையேயான முரணிற்கு காரணம் என்ன?

யமுனா ராஜேந்திரன்: ஜினோவோவேவிற்கும், ஜான் ரீடிற்கும் இடையேயான பிரச்சினைகளை தனி நபர் பிரச்சினைகள் என்று பார்ப்பதைவிடவும், அந்தக் காலத்தில் எப்படி மெல்ல மெல்ல, சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் பார்ட்டிற்குள் அதிகாரத்துவம் உருவானது என்ற விஷயத்தைத்தான் பார்க்க வேண்டும். ஜினோவோவே மட்டுமல்ல, அந்தப் பொறுப்பில் இருந்த யாருக்குமே, ஒன்று அந்த புரபகண்டா வேல்யூவோடு கட்டுரை அமையவேண்டும் என்றாலே, அங்கு உண்மை இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிடும். அதிகாரத்துவ மனநிலையில் இது இருக்கும்.

பல்வேறு சர்வதேச பிரதிநிதிகள் கலந்துகொள்கிற அந்தக் கூட்டத்தில், மீண்டும் மீண்டும் ரஷ்ய மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு, உள்வாங்கி, அதிலிருந்து நாம் ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கான, தன்மையே அங்கு இருப்பதில்லை. பொதுவாகவே இந்தப் பிரச்சினை இருக்கிறது. பல்வேறு மொழி சார்ந்த இடதுசாரிகள் கூட்டத்தில் மீண்டும் மீண்டும் ஒரேமொழியினுடைய மேலாண்மையை நீங்கள் வலியுறுத்திக்கொண்டு வருவது, ஒரு ஒற்றுமையுணர்வை, கூட்டுணர்வை உருவாக்குவதற்குப் பயன்படாது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிகளில் கூட, தேசிய இனப் பிரச்சினை, மொழி சார்ந்த பிரச்சினை மிக முக்கியமான காரணி என்றே சொல்கிறார்கள்.


அதாவது, ரஷ்ய மொழி, ரஷ்ய நிலத்தின் ஆதிக்கம், அந்த முன்னுரிமை பல்வேறு மாநிலங்களில் திணிக்கப்பட்டது. கோர்பட்சே தன்னுடைய ப்ரஷ்ட்ராயகா தொடர்பான கொள்கைகளைப் பேசும்போது, சோவியத் யூனியனின், உடைவிற்கு முக்கியமான காரணி, இந்த ’மொழி சார்ந்த, தேசிய இனப் பிரச்சினை’ என்பார். அதன் பாதிப்புதான், ஜினோவோவே, ஜினோவோவேவிற்குப் பிறகான, இத்தாலியன் பார்ட்டி, அமெரிக்கன் பார்ட்டி, பிரிட்டிஷ் தொடர்பான பார்ட்டிகள் பேசுவதிலிருந்தும் பார்க்கலாம். ஜான் ரீட் சொல்வார், “அமெரிக்காவிலிருந்தும், பிரிட்டனிலிருந்தும் வந்த, எங்களுடைய பிரதிநிதிகள் தொடர்பான விஷயங்களை, நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை. நீங்கள் எங்களை புறந்தள்ளுகிறீர்கள்.” என்றுசொல்வார்.

கம்யூனிஸ்ட் பார்ட்டியில் மத்தியத்துவம் என்பது இல்லாமலாகி, அதிகாரத்துவம் என்பது மேலோங்கி வரும்போது, இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இதைத்தான் எம்மா கோல்ட்மன் சுட்டிக்காட்டுகிறர். இதை, ஜான் ரீட் மறுக்கிறார். ”இவ்வளவு அதிகாரத்துவமும், புரபகண்டாவும் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், ரஷ்யா கண்டது இளம் புரட்சி, அந்தப் புரட்சியைக் காப்பாற்ற வேண்டிய தேவையிருக்கிறது. “எப்போதும், ஏகாதிபத்தியங்களால் சூழப்பட்டு, அவர்களால் சதி வேலைக்கு உள்ளாக்கப்பட்டு, இந்த அரசைக் கவிழ்த்து வலதுசாரி அரசைக் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிடுகிற, ஒரு சூழல் நிலவுகிறது” என்று தன் வாதத்தை முன்வைக்கிறார். இந்த விவாதத்திற்கான காட்சிகள் எல்லாமே, இந்தப் படத்திற்குள் இருக்கிறது.


அம்சவள்ளி: ஜான் ரீடின் ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ புத்தகம், உலகெங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, வாசிக்கப்பட்டன. அந்தப் புத்தகம் குறித்து

யமுனா ராஜேந்திரன்: இடதுசாரிகளுக்கு, ஜான் ரீடு அதிகமாகப் பரிச்சயமானதே அந்தப் புத்தகத்தின் வாயிலாகத்தான். அதைக் காட்டிலும் இந்தப் படம், ஜான் ரீடு பற்றிய சித்திரத்தை, அவரது கருத்தியலை, இன்னும் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. அவர் அடிப்படையில் மார்க்சிஸ்டோ, தொழிற்சங்கவாதியோ அல்ல. ஒரு சாதாரண மனிதாபிமானி. யூஜின் ஓ நெய்ல் போன்ற நபர்களுடன் சேர்ந்து நாடகம் போடுகிற ஒருவர். ஒரு கட்டத்தில் லூயிஸ் ப்ரைண்ட்ஸ் பார்த்து, “யு ஆர் ஏன் ஆர்டிஸ்ட், நீ அரசியல்வாதிபோல பேசாதே! நீ உண்மையைப் பேசு. ஒற்றுமையைப் பற்றிப் பேசு. நீ ஒரு கலைஞன், எனவே மனிதாபிமானத்தோடு பேசு” என்கிறார். இதுதான் ஜான் ரீடின் கதாபாத்திரம்.

தொழிலாளிகள் ஒன்றுபட வேண்டும். அதற்காக, முழு அமெரிக்கா தழுவி, ஒரு தொழிற்சங்க இயக்கத்தை நிறுவ வேண்டும். இதுதான் ஜான் ரீடின் நோக்கம். இதைக் குறித்து கம்யூனிஸ்ட் பார்ட்டியில் பேசும்போது, அவர்கள் சொல்கிறார்கள், “நீ கம்யூனிஸ்ட் பார்ட்டி உறுப்பினர் இல்லை. உனக்குப் பேசுவதற்கு உரிமையில்லை, எனவே, இங்கு நீ எந்த விஷயத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.” என்கிறார்கள். பதிலுக்கு அவர், “ஆம், நான் எதையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பது உண்மைதான். நான் ஒரு பத்திரிக்கையாளனாக இந்த விஷயத்தைக் கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்லுங்கள்” என்கிறார். இப்படித்தான் ஜான் ரீடு படிப்படியாக ஒரு ஆளுமையாக வளர்கிறார்.
பல்வேறு கூட்டங்களில் அரசியல் பேசும்போது பார்த்தீர்களென்றால், அவர் பதிலே சொல்வதில்லை. ஒரு கூட்டத்தில், உலகப்போரில், அமெரிக்காவை எதிர்த்துச் சண்டைபோடுவதா? வேண்டாமா? என்று ஒவ்வொருவரும் தங்களது கருத்தைச் சொல்கிறபோது, ஜான் ரீடின் முறையும் வருகிறது. ஆனால், அவர் ஏதும் பதில்சொல்வதில்லை. ’வார் எஸ் எபொட் ஜஸ்ட் ஃப்ராபிட், போர்களே லாபத்திற்கான ஒன்றுதான், அதைத்தவிர இதில் வேறொன்றுமில்லை’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு அமர்ந்துகொள்கிறார். ஆக, அவருக்கு பெரிதாக விவாதத்திலும் ஈடுபாடு இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. காரணம் என்னவென்றால், வலதுசாரிகளோடு பேசிப் பிரயோசனமில்லை என்று நினைக்கிறார். ஆனால், அதே ஜான் ரீடு, கம்யூனிஸ்ட் பார்ட்டிக் கூட்டங்களில், இடதுசாரிக் கூட்டங்களில் மிகத் தீவிரமாக விவாதிக்கிறார். வாதம் செய்கிறார். காவலர்கள் அவரை இழுத்துச்செல்லும்வரை அது நடக்கிறது. அப்படியெல்லாம் ஆக்ரோஷமாகச் செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் பார்ட்டிக்குள் செல்லும்போதுதான், சோசலிசம், மார்க்சியம் சார்ந்து பேசுகிறார். கம்யூனிஸ்ட் பார்ட்டி இரண்டாக பிளவுறும்போது, அதில் ஒரு பார்ட்டிக்காக, ரஷ்யாவிலிருந்து அங்கீகாரம் வாங்கிவரவேண்டும் என்று பேசுகிறார். அதேபோல, லூயிஸ் ப்ரைண்டிற்கும், அவருக்கும் இருக்கிற உறவைப் பாருங்கள். ப்ரையண்ட் உண்மையிலேயே, தன்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்கள், காதல் வாழ்க்கை அனுபவங்களிலிருந்துதான், தன்னுடைய கலை இலக்கிய ஈடுபாடுகள், போன்றவற்றிலிருந்து அரசியல் தன்னுணர்வுள்ள பெண்ணாக அவர் உருவாகிறார். அதற்குப் பிறகு, தீவிர அரசியல் பேசும் ஒரு நபராக அவர் வருகிறார்.


அம்சவள்ளி: ஜான் ரீட் அமெரிக்காவில் பேசும்போது, சோசலிஸ்ட் பார்ட்டியில் பேச அனுமதி மறுப்பார்கள். ஆனால், ரஷ்யாவில் அத்தனை பேருக்கு மத்தியில் ஜான் ரீட், அமெரிக்காவில் தொழிலாளர்களின் நிலை என்னவாகயிருக்கிறது, ”நீங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும்போது அவர்களும் போராடத்துவங்குவார்கள், அவர்கள் உங்களுக்குத் துரோகம் செய்யமாட்டார்கள்” என்பது போன்றெல்லாம் சொல்கிறார். கூட்டத்தினர் கைதட்டி ஆதரவு தெரிவிக்கின்றனர். ஜான் ரீடிற்கு, அவர்கள் மத்தியில் ஒரு பிம்பம் எழுகிறது. பின்னர்தான், லூயிர் ப்ரைண்டிற்கும், ஜான் ரீடிற்கும் இடையில் வெறும் கணவன் மனைவி உறவு என்றில்லாமல், வேலை சார்ந்தும் பேசிக்கொள்ளக்கூடிய ஈடுபாடு அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் ஜான் ரீட், லூயிஸ் ப்ரைண்ட் எழுதுகிற கட்டுரைகளில் இருக்கிற பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறபோது, லூயிஸ் ப்ரைண்ட் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனால், ரஷ்யாவில், பெருங்கூட்டத்தின் மத்தியில் ஜான் ரீட் பேசியதிலிருந்து, அவர் கட்டுரைகளில் சொல்கிற தவறுகளுக்கு செவிசாய்க்கிறார்.

யமுனா ராஜேந்திரன்: இந்த காதல் உறவு படத்தில் அற்புதமாகக் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, ஃப்ரீ லவ் என்ற விஷயத்தை முன்வைக்கிறார்கள். லூயிஸ் ப்ரைண்ட் ஒரு கடற்கரை நகரத்திலிருந்து நியூயார்க் வருகிறார். நியூயார்க்கிலிருந்து இன்னொரு நகரத்திற்குப் போகிறார். அங்கு நாடகம் போடுகின்றனர். பின்னர், அங்கிருந்து இன்னொரு நகரத்திற்குச் செல்கின்றனர். அதற்கடுத்து, ரஷ்யா பயணமாகின்றனர். லூயிஸ் ப்ரைண்டிற்கும் யூஜின் ஓ நெய்லுக்கும் இடையே நடக்கிற உரையாடல்கூட, முக்கியமானதுதான். ”நாம் காதலுறவில் இருந்தோம். ஆனால், ஜான் ரீட் வந்ததும், நீ என்னிடம் ஒருவார்த்தை கூட சொல்லாமல், அங்கிருந்து சென்றுவிட்டாய். ஏன் அப்படிச் செய்தாய்? என்னைவிட்டு விலகி, நீ ஜான் ரீடுடன் சேர்ந்து வாழலாம். அது உன் விருப்பம். ஆனால், ஏன் என்னிடம் ஒருவார்த்தைகூட சொல்லாமல் சென்றாய்” என்றுதான், யூஜின் ஓ நெய்ல், லூயிஸ் ப்ரைண்டை நேரடியாகச் சந்தித்துக் கேட்கிறார்.

Figure 21 Eugene o'neill

ஆண்-பெண் உறவில் எப்போதுமே முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே நேரத்தில், இரண்டு பேருடன் காதலில் இருப்பதென்பது, சம்பந்தப்பட்ட ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, பொறாமை, பொசசிவ் சம்பந்தமான விஷயமாகத்தான் இருக்கும். அடுத்து காதலில் இருக்கும்போது, இந்த உறவை உறுதிப்படுத்திக்கொள்ள திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வரும். அதனால்தான், லூயிஸ் ப்ரைண்டும், யூஜின் ஓ நெய்லும் உறவில் இருக்கிறார்கள் என்று ஜான் ரீடு தெரிந்துகொண்டதும், அவர்களுக்கிடையில் சிறு விரிசல் வருகிறது. ஆனால், அவர் சலனப்படுவதில்லை. லூயிஸிடம், “நாம் திருமணம் செய்துகொள்ளலாமா?” என்று கேட்கிறார். ஆரம்பத்தில் அவர்கள் திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லாமல்தான் இருக்கின்றனர். பிறகு, லூயிஸிற்கும், ஜான் ரீடுக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கிறது. உடல் மனம் மட்டுமல்லாமல், கருத்தியல் ரீதியிலும் அவர்கள் ஒன்றுபடுகின்றனர். அதுவரை ரஷ்யாவிற்கு வரவில்லை என்று சொன்ன லூயிஸ், ஜான் ரீடுடன் ரஷ்யா வருகிறார்.


ரஷ்யாவில் மக்கள் படுகிற பாடுகள், உருவாக்க நினைக்கிற சமூகம் தொடர்பான போராட்டங்களைப் பார்த்து, அந்தக் கருத்தியல் போன்ற விஷயங்கள், முழுக்க அவளுக்குச் சம்மதமாகயிருக்கிறது. ”நீ என்னை இங்கு அழைத்துவந்ததற்காக நன்றிகள்” என்று ஜான் ரீடிடம் சொல்கிறாள். ஆகவே, இந்த கணவன் மனைவி உறவு என்பதற்கு அப்பால், கருத்தியல் ரீதியிலும் இருவரும் ஒன்றிணைகிற சூழல் அங்கு உருவாகிறது. அவ்விருவரும் ஓருயிராக இணைகிறார்கள்.

அதற்குப் பிறகுதான், ரஷ்ய மக்கள் மத்தியில் ஜான் ரீட், அமெரிக்கத் தொழிலாளிகள் பற்றி உரையாற்றுகிறார். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. இங்கு கேமராவின் நகர்வையும், ஃப்ரேமையும் கவனிக்க வேண்டும். அந்த மக்கள் திரளுக்கு இடையில் சிக்கியபடி, ஜான் ரீடும், லூயிஸ் ஃப்ரைண்டும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள செய்கிற முயற்சிகள், பெரும் ஜன நெருக்கடி, அதற்குரிய லைட்டிங் என அற்புதமான காட்சி. ’பார், நான் எவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்திருக்கிறேன், மக்கள் எப்படி என்னைக் கட்டித்தழுவுகிறார்களென்று பார்’ என்பது மாதிரியான எக்காளத்தோடு, ஜான் ரீட், கூட்டத்தின் மத்தியில் வருகிறார். லூயிஸ் ப்ரைண்டிற்கும், அந்தப் பரவசம் இருக்கிறது. ஜான் ரீடின் மகிழ்ச்சியில் பங்குகொள்கிறாள். அதற்குப் பிறகு, ஜான் ரீடிற்கும், லூயிஸ் ப்ரைண்டிற்கும் இடையே நடக்கிற உடலுறவைக் காண்பித்திருப்பார்கள்.

கூட்டத்தின் உணர்வையும் சரி, தனி நபர்களுக்கிடையிலான உணர்வும் சரி, அதேநேரம், கதையின் உணர்வையும் கேமரா ஒரே சமயத்தில் படம்பிடிக்கிறது. விட்டோரியோ ஸ்டொரோராவின் ஒளிப்பதிவு நுட்பம் குறித்து தனியக ஒரு உரையாடலையே நிகழ்த்த வேண்டும். அந்தளவிற்கு மிகச்சிறந்த ஒளிப்பதிவு இப்படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஜான் ரீடும், லூயிஸ் ப்ரைண்டும் தொடர்வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது, நிலப்பரப்பையும், தொடர்வண்டியையும் காண்பிக்கிற காட்சிகள் அதியற்புதம். பிறகு, செம்படை ஒன்று இன்னொரு தொடர்வண்டியில் கடந்துசெல்கிறது. அதை வெள்ளைப் படைகள் எதிர்க்கின்றன. இருவருக்குமிடையேயான சண்டை, குதிரைகள் வருவது, வெடிகுண்டுகள் வெடித்து புகை கிளம்புவது என வன்முறையைக் காட்சிப்படுத்துகிற கேமரா. தொடர்வண்டிப் பயணம், லெனின், ட்ராஸ்ட்கி பேசுவது, அதற்குப் பிறகு அணி நடையாக அவர்கள் விண்டர் பாலஸிற்குச் செல்வது. இந்த இடத்தில் சர்வதேசிய கீதம் ஒலிக்கும், மக்கள் கூட்டத்தைக் காட்சிப்படுத்தும் கேமரா.
அம்சவள்ளி: வரலாற்றில் நடந்து முடிந்த சம்பவங்களை, அதே காட்சிப் பிரக்ஞையோடு, ஒளிப்பதிவாளர், இயக்குனர் மறு உருவாக்கம் செய்திருக்கின்றனர்.

யமுனா ராஜேந்திரன்: ஆம், மயிர்க்கூச்செறியும் காட்சிகள். உண்மையிலேயே இந்தப் படம் தொடர்பாக, எனக்கு எந்தவிதமான கடுமையான விமர்சனங்களும் கிடையாது. இன்றைக்கு பின் சோவியத் பார்வையில் இதனைப் பார்க்கும்போது, சோவியத் யூனியனின் தேய்வையும், பிளவையும் பார்க்கும்போது, அதே நேரத்தில் மார்க்சிய பார்வைகொண்ட ஒருவனாக இதைப் பார்க்கும்போது, இந்தப் படம் உண்மையிலேயே மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்குகிறது. இன்றைக்கு, அமெரிக்காவில் நவகால யுவ, யுவதிகள் மத்தியில், சோசலிசம் நம் நாட்டிற்குப் பொருத்தமானது என்ற நம்பிக்கை வளர்ந்திருக்கிறது. இதற்காக மிகப்பெரிய போராட்டங்களையும் அந்த நாடு நடத்தியிருக்கிறது.


ஜான் ரீட் காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பிற்பாடு சிவில் ரைட்ஸ் மூவ்மெண்ட், பின்னர், ப்ளாக் பாந்தர் மூவ்மெண்ட். அதற்கடுத்து ஏண்டி வியட்னாம் இயக்கம். சமீபத்தில் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் மூவ்மெண்ட் போன்றவை வந்திருக்கின்றன. இன்றைக்கு, டெமாக்ரடிக் சோசலிசம் பேசுகிற ஆட்கள் இருக்கிறார்கள். நோம் சாம்ஸ்கி போன்றவர்கள் இருக்கிறார்கள். ப்ரெட்ரிக் ஜாம்ஸன் போன்றவர்கள், அது குறித்த பத்திரிக்கைகள் (ஜக்கோஃபி) வருகிறது. மதர் டோன்ஸ், டிஸண்டட், ஓ ஆர் புக்ஸ், ஹேமாஸ் புக்ஸ் போன்றவை இருக்கின்றன. அமெரிக்காவில் இன்றைக்கும் ஒரு இடதுசாரி பாரம்பரியம், ப்ளாக் பாந்தர்ஸ் மத்தியிலும், இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் மத்தியிலும் இருக்கிறது. மால்கம் எக்ஸ் மற்றும் கறுப்பின மக்களின் தலைவர்களை, நாம் அந்த இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கமுடியும். இனவாதத்திற்கு எதிரான உணர்வு, நிறவாதத்திற்கு எதிரான உணர்வு, தொழிலாளர்களின் ஒற்றுமை, அதேபோல, சிறுபான்மையின மக்களின் ஒற்றுமை, தென்னமெரிக்க மக்களின், ஆசிய மக்களின், ஆப்பிரிக்க மக்களின் ஒற்றுமை, இதெல்லாம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அந்தக் காலத்திலும் இந்தக் கலக உணர்வு இருந்தது. அதைத்தான் இந்தப் படம் கதைசொல்லலாக முன்னெடுக்கிறது. ஆனால், அதேநேரத்தில், இதில் இருக்கிற இன்னொரு கதைசொல்லல் ஒடுக்குமுறை. அந்த ஸ்டேட் என்னமாதிரி நடந்துகொள்கிறது என்று பாருங்கள். இவர் ரஷ்யாவிலிருந்து, அமெரிக்காவிற்குத் திரும்புகிறபோது, அந்த அடக்குமுறையை நாம் காணலாம். மீண்டும், ஜான் ரீடு ரஷ்யாவிற்குச் செல்ல நினைத்தாலும் செல்ல முடியாத சூழல். இரு நாட்டிற்கும் பகை. எனவே, வேறு பெயரில் பின்லாந்து சென்று, அங்கிருந்து ரஷ்யா செல்ல முயற்சிக்கிறார். இது தெரிந்து, ஜான் ரீடை தேசத்துரோகி என்று சொல்கிறார்கள், அவர்கள் வீட்டை சூறையாடுகின்றனர், அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்கிறார்கள். இந்நிலை 1917லிலும் இருந்தது. 1960இல் மெக்கார்தியின் காலத்தில், இந்த அடக்குமுறை மிகவும் கடுமையாக இருந்தது. இடதுசாரி கலைஞர்கள், கம்யூனிச கலைஞர்கள், மார்க்சியத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள், எல்லோரும் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்கள் வீட்டில் மார்க்ஸின் புத்தகமோ, ஏங்கல்சின் புத்தகமோ, ஃப்ரெக்டின் புத்தகமோ வைத்திருந்தால், அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். சார்லி சாப்ளின் இந்த ஒடுக்குமுறைகளைத் தவிர்க்கவே முடியாமல் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். பெர்டோல்ட் ப்ரெக்ட் வெளியேறினார். அதேபோல, கிதாரஸ் அலியா போன்ற கியூபக் கலைஞர்களுக்கு, அமெரிக்காவிலிருந்த சில அமைப்புகள் விருதுகள் அளித்தபோது, விருது வாங்க வரவிருந்த கிதாரஸ் அலியாவிற்கு விசா கொடுக்க அமெரிக்கா மறுத்தது. இன்றைக்கு அது தொடர்பாக நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

மெக்கார்லேயின் காலத்தில், “இவர்கள் தேசத்துரோகிகள், இவர்களுக்கு திரைக்கதை எழுத, நடிக்க, படமெடுக்க, இசையமைக்க, என எதற்கும் வாய்ப்பு கொடுக்காதீர்கள்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார். பல கலைஞர்கள் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டனர். கம்யூனிஸ்டுகளையும், மார்க்சியர்களையும் ஜோ பைடன் ஆதரிக்கிறார், ஆகவே ஜோ பைடனை நிராகரியுங்கள், அவருக்கு வாக்களிக்காதீர்கள் என்று வெளிப்படையாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. எனவே, இந்த கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான உணர்வென்பது, அரசாங்க மட்டத்தில் அன்றும், இடைக்காலத்திலும், சமகாலத்திலும் இருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவில் இடதுசாரி மரபு என்பது, என்றைக்கும் இருக்கிறது. அவர்களுக்கான மிகப்பெரும் தாக்கமாக, ரஷ்யப் புரட்சி இருந்தது. ரஷ்யப் புரட்சியே அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. உலகத்திலேயே இல்லாததுபோல, தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் மிகப்பெரிய அரசை உருவாக்கினார்கள். ஒரு புரட்சி அங்கு நடந்தது. அவர்கள் இரண்டு விஷயத்தை முன்வைத்தார்கள். ஒன்று, யுத்தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர்கள் முன்வைத்தார்கள். ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் அமெரிக்கர்கள் முதல் உலகப்போரில் கொல்லப்பட்டார்கள். யுத்தங்களுக்கு ரஷ்யப் புரட்சி முடிவுகட்டியது. அவர்கள், சமாதானத்தின்மூலம் ஒரு மாற்றத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களினுடைய தலைமையிலே அங்கு ஒரு புரட்சி நடந்தது, அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இது வரலாற்றில் நடந்த மிக அற்புதமான விஷயம் என்று அமெரிக்கர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.


ஈராயிரம் ஆண்டுகால வரலாற்றில் நடந்த மிக முக்கியமான, ஒடுக்கப்பட்ட மக்களினுடைய புரட்சியாக, ரஷ்யப்புரட்சி இருந்தது என்பதை, அன்று ஜான் ரீடுடனும், லூயிஸ் ப்ரைண்டுடனும் வாழ்ந்தவர்கள், இன்றைக்கும் அதே உணர்வோடு, அதே கருத்தை, படத்தில் ஆவணப்பதிவாக முன்வைக்கிறார்கள். இந்தப் படம் சமகால வாழ்வோடு தொடர்புகொள்கிறது. 1981இல் இப்படம் வெளியாகியிருந்தாலும், 2021இல் இப்படம் குறித்து நாம் உரையாடும்போதும் அதனுடைய சித்தாந்த, அரசியல் பார்வை பொருத்தமானதாகவே இருக்கிறது.

உலக வரலாற்றிலேயே எந்த ஐடியலாஜிகல், பிளாசபிகல் மூவ்மெண்டும், கம்யூனிஸ்ட் மூவ்மெண்ட் உருவாக்கியதுபோன்று, பெண்ணியச் சிந்தனையாளர்களை உருவாக்கவில்லை. அதேபோல, பெண்ணியக் கலைஞர்கள், படைப்பாளிகள், தத்துவவாதிகளை உருவாக்கவில்லை. ரோஸா லக்ஸம்பெர்க், ருட்ஸ்கயா, ஆர்மோன், லூயிஸா காட்ஸ்கி, அமெரிக்காவில் பொயான், எம்மா கோல்ட்மன், ஆஞ்சலா டேவிஸ் இப்படி மிகப்பெரிய இண்டலக்சுவல் பரம்பரையை ரஷ்யப் புரட்சி துவங்கி வைத்தது. இன்றைக்கு வரைக்கும் அந்த வரலாறு நீள்கிறது.

அம்சவள்ளி: லூயிஸ் ப்ரைண்ட்ஸும் அத்தகையச் சிந்தனையாளர்களில் ஒருவராக எடுத்துக்கொள்ளலாம். அவர் ’****ரெவல்யூசன் ‘ புத்தகம் எழுதி வெளியிடப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்.

யமுனா ராஜேந்திரன்: இந்தப் படத்தை மீண்டும் பார்க்கும்போது, லூயிஸ் ப்ரைண்டை இன்னொரு கோணத்திலிருந்துதான் அணுகமுடிந்தது. பதினைந்து வருடத்திற்கு முன்பு நான் இப்படத்தைப் பார்த்தபோது, எனக்கு முக்கியமாகப்பட்டது, இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள்தான், ஒன்று யூஜின் ஓ நெய்ல் மற்றொருவர் ஜான் ரீட். இதற்குக் காரணம் என்னவென்றால், ஜான் ரீடு பற்றிய புத்தகத்தை நான் வாசித்திருந்தேன். அதேபோல, யூஜின் ஓ நெய்லின் நாடகங்கள் தொடர்பாகவும் எனக்கு ஏற்கனவே பரிச்சயம் இருந்தது. ஆதலால், எனக்கு எம்மா கோல்ட்மன் கதாபாத்திரம்கூட, அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக என் மனதில் பதியவில்லை. ஆனால், இன்றைக்குப் பார்க்கும்போது, சோவியத் யூனியன் தொடர்பான விமர்சனங்கள் எல்லாம் வந்தபிறகு, எம்மா கோல்ட்மனின் விமர்சனத்தின் பொருத்தப்பாட்டையும் இன்றைக்கு நினைத்துப்பார்க்கிறேன். அதேபோல ஃபெமினிசம் தொடர்பான விழிப்புணர்வு வந்தபோது, அதில் மார்க்சிஸ்டுகளுக்கும், ஃபெமினிஸ்டுகளுக்கும் தொடர்பான உரையாடல்களைப் பார்க்கும்போது, லூயிஸ் ப்ரைண்ட் உருவாகிவந்த பாங்கு, ஜான் ரீட் உருவாகிவந்ததை விடவும், முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால், ஜான் ரீடைவிட, சிறப்பான பாத்திரக் கட்டமைப்பைக் கொண்டதாக லூயிஸ் ப்ரைண்டின் கதாபாத்திரம் இருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற டயான கீட்டன் (Diane Keaton), ஜான் ரீடு கதாபாத்திரத்தில் நடித்த வாரன் பெட்டி, அதியற்புதமான கதாபாத்திர வார்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். யூஜின் ஓ நெய்ல் கதாபாத்திரத்தில் நடித்த ஜாக் நிக்கல்ஸனின் நடிப்பிற்கு எந்தவித அறிமுகமும் தேவையில்லை. அவர் ஒரு நியூரோக்ரிடிக்ட் ஆக்டர். இந்த வகையில், மார்லன் ப்ராண்டோவுடன் இவரை ஒப்பிட்டுச் சொல்லமுடியும். அதாவது ஒரு கதாபாத்திரத்தினுடைய உடல்மொழி, நியூரோலாஜிகல் லெவலில் எப்படி உடம்பையும், கதாபாத்திரத்தையும் வெளிப்படுத்துவது என்ற தன்மை இயல்பாகவே அவர்களிடம் இருக்கும். கதாபாத்திரத்திற்கேற்ற நடிகர் தேர்வு, சிறந்த நடிப்பு, ரஷ்யப் புரட்சியை மறு உருவாக்கம் செய்த பானராமிக் வியூ கேமராக்கள், என படக்குழுவினர் இணைந்து, மிகச்சிறப்பானதொரு படத்தை திரைப்பட உலகிற்கு அளித்திருக்கிறார்கள்.


அம்சவள்ளி: ஜான் ரீடின் உடல் க்ரெம்ளின் வால் மாஸ்கோவில் புதைக்கப்பட்டது. சி.இ.ருடர்ன்பெர்க், பவுண்டர் ஆஃப் கம்யூனிட்டி பார்ட்டி யு.எஸ்.ஏ பில் ஹேவுட். என இவர்கள் மூவர் மட்டுமே அங்கு புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

யமுனா ராஜேந்திரன்: குறிப்பிட்ட காலம் வரைக்கும் அமெரிக்கன் கம்யூனிஸ்ட் மூவ்மெண்ட், மற்றும் அமெரிக்க இடதுசாரிகள் தொடர்பான அறுவுறுத்தல்கள், உலகமெங்கும் இருந்த இடதுசாரிகளுக்கு இல்லை என்றுதான் சொல்வேன். பொதுவாக, அமெரிக்கா தொடர்பாக, ஒரு விரோதமான, வெறுப்பான, எதிர்மறை உணர்வுதான் இடதுசாரிகள் மத்தியில் உருவாகிவந்திருக்கிறது. அதேபோல, அமெரிக்க இலக்கியம், ஹாலிவுட் சினிமாவை எடுத்துக்கொண்டாலும், இதில் பாசிட்டிவான ட்ரெண்ட், க்ரிட்டிக்கலான ட்ரெண்ட்ஸ் இருந்திருக்கிறது என்ற விஷயத்தைக்கூட, அவர்கள் பெரும்பாலும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. குறிப்பாக, தமிழ் சூழலை எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ்ச் சூழலில் அமெரிக்கச் சமூகத்தை லெஃப்ட் லிபரல் பாய்ண்ட் ஆஃப் வியூவிலிருந்து பார்த்த, டான் டிலிலியோ போன்ற எழுத்தாளர்கள் பற்றி எந்தவிதமான விபரங்களும் கிடையாது. சமீபத்தில் நோம் சாம்ஸ்கியின் எழுத்துகளில், அவருடைய லிங்க்வஸ்டிக் ரைட்டிங், அவருடைய சாதாரணமான பொலிடிக்கல் விஷயங்கள்தான் வருகிறதேயொழிய, ஆழமான அரசியல் எழுத்துகள் தமிழில் இன்னும்கூட பெரிதாக அறிமுகமாகவில்லை.

அங்கிருக்கிற பற்பல படைப்பாளிகள், திரைப்படங்கள் தொடர்பான விஷயங்களை எடுத்துக்கொண்டால், 1950, 60 களில் இருநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள், இயக்குனர்கள், இசைக்கலைஞர்கள், நடிகர்கள் போன்றவர்கள் தடைசெய்யப்பட்டார்கள். பலர் தற்கொலை செய்துகொண்டார்கள். இவர்கள் சம்பந்தமான கட்டுரைகளோ, குறுநூல்களோ தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவே இல்லை. எழுதப்படவே இல்லை. இது தொடர்பாக, நான் இருபதிற்கும் மேற்பட்ட புத்தங்களை ஆங்கிலத்தில் சேகரித்து வைத்திருக்கிறேன். அதேபோல தலித் பாந்தர்ஸ் மூவ்மெண்ட். மால்கம் எக்ஸ் தொடர்பான சில புத்தகங்கள் இப்போது வந்திருக்கின்றன. கருப்பு மக்களின் எழுச்சி அதில் இசை, கலை இலக்கிய எழுச்சி, அதன் மாற்றங்கள் தொடர்பான நூல்கள் இதுவரை வரவில்லை. ஆப்ரிக்கன் அமெரிக்கன் அனுபவங்கள் பற்றி எழுதப்பட்ட பல்வேறு நூல்கள், தமிழில் வரவில்லை. இடதுசாரிகள் பற்றிய திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. ’சால்ட்’ என்றொரு படம். ஒரு சுரங்கத்தொழிலில் எப்படி தொழிலாளிகள் ஒருங்கிணைந்து, போராட்டம் நடத்தி, தங்கள் உரிமைகளை பெறுகிறார்கள் என்பது தொடர்பான படம். அதேபோல, ’ஸ்ட்ரைக்’ என்ற படம். அப்படிப் பல படங்கள் இருக்கின்றன. நோம் சாம்ஸ்கி எழுதிய பிறகுதான் சால்ட் என்ற படத்தை நான் பார்த்தேன். அப்படியாக மிகப்பெரிய தத்துவார்த்த மரபு, கலை இலக்கிய மரபு, கவிதை மரபு, அரசியல் மரபு அமெரிக்காவில் இருந்திருக்கிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய சிந்தனையாளர்கள் அன்றைக்கும் இன்றைக்கும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பெரிதாக வெளியில் தெரியவில்லை. அவர்கள் பற்றி எழுதுவதற்கான திட்டங்களும் இருக்கின்றன. ஆப்ரிக்க அமெரிக்க சினிமா தொடர்பாகவே ஒரு நூலைக் கொண்டுவருவதற்கான யோசனை இருக்கிறது. 1960களில் எப்படி சி.இ.ஏ திட்டமிட்டு அங்கிருக்கிற இடதுசாரிக் கலைஞர்களை வேட்டையாடியது என்பது தொடர்பாகவும் எழுதும் எண்ணமிருக்கிறது.

இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம், அமெரிக்கா எதிர்ப்புரட்சி நாடு என்பதையெல்லாம், அதனுடைய அரசு சார்ந்துதான் பார்க்கவேண்டுமேயொழிய, அங்கு வாழ்கிற மக்கள் சார்ந்து பார்க்கமுடியாது. ஏனெனில், அங்கு ஏகாதிபத்திய எதிர்ப்புணர்விற்கு எதிராக, காலனியாதிக்கத்திற்கு எதிராக, நிறவெறிக்கு, இனவெறிக்கு எதிராக, பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. அவைகளை நாம் மறு கண்டுபிடிப்பு செய்து, முன்வைக்க வேண்டும். ஏனென்றால், அதற்கான காலம் இன்றைக்கு வந்துவிட்டது. அந்த வேலைகளை நாம் செய்யத்துவங்க வேண்டும். அதை நாம் செய்யத்தவறியதால்தான், ஜான் ரீடு என்றாலே, அவரது ஒரே புத்தகம், ’உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்பது மட்டும்தான் தெரிகிறது. ஆனால், அமெரிக்க கம்யூனிஸ்ட் இயக்கத்தில் என்னென்ன முரண்பாடுகள் வந்தன, ஜான் ரீட் என்னென்ன முரண்பாடுகளைக் கடந்துவந்தார், வேறுநாட்டு மொழி பேசுகிறவர்கள், ரஷ்யாவிற்குச் செல்லும்போது, அதிகாரத்துவ அமைப்பால் அவர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள், அதிகாரத்துவ அமைப்பால் எப்படி உலகெங்கும் இருக்கிற கம்யூனிஸ்டுகள் நம்பிக்கையிழந்தார்கள். அதேபோல, அமெரிக்காவிலிருந்த கம்யூனிஸ்டுகளுக்கும் நெருக்கடி வந்தது என்ற விஷயத்தையெல்லாம் இந்தப் படம் மூலமாகத் தெரிந்துகொள்கிறோம். இதற்குப் பிற்பாடு, மேற்கொண்டு ஜான் ரீடைத் தேடிச்செல்கிறபோது, லூயிஸ் ப்ரைண்டைப் பற்றி தேடிச் செல்கிறபோது, இன்னும் அவர்களைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. எம்மா கோல்ட்மனைப் பற்றியும், ஜூனெயஸ்கா என்ற பெண் தத்துவவியலாளரைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ரோஸா லக்ஸம்பெர்க்கிற்கு இணையாகச் சொல்லக்கூடிய, மிகப்பெரிய படிப்பாளி ஜூனெயஸ்கா தொடர்பான ஒரு கட்டுரை அல்லது பத்திகூட தமிழில் எழுதப்படவில்லை. ஆனால், அவர்கள் எழுதியவற்றைச் சற்று படித்துப் பாருங்கள். மிகப்பெரிய மேதைகளோடெல்லாம் அவர் விவாதம் நடத்தியிருக்கிறார். எட்வெர்ட் மார்க்யூஸ், எரிக் ஃபார்ம் போன்றோருடன் விவாதம் நடத்தியிருந்தார். எல்லையற்ற வாசிப்பு கொண்டிருந்தார். இந்தப் படத்தை முன்வைத்து, அதை அடியொற்றி மேற்கொண்டு தேடினாலே, இன்னும் அந்தக் கதாபாத்திரங்கள் சார்ந்து நிறைய அறிந்துகொள்ள முடியும். ஃப்ரெட்ரிக் ஜாம்ஸனை அடியொற்றிப் போனால், அமெரிக்காவில் நடந்த இடதுசாரி கலையிலக்கிய, திரைப்பட முயற்சிகளைத் தேடிக்கண்டடைய முடியும்.

ஆகவே, அமெரிக்கா என்பது இரண்டுவிதமான அமெரிக்கா. ஒன்று, ஹாலிவுட் படங்களால் உருவாக்கப்படுகிற, கனவுமயமான ஏகாதிபத்திய அமெரிக்கா. இன்னொரு அமெரிக்கா, அந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, காலனியாதிக்கத்திற்கு எதிராக, பெண் விடுதலைக்கு ஆதரவாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் ஆதரவாக, ஒரு மரபு அங்கே இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிற அமெரிக்கா. அந்த மரபை ஹாலிவுட் சொல்லாது. ஹாலிவுட்டில் சிலர், கொப்பாலோ, மார்டின் ஸ்கார்சசெ, ஆலிவர் ஸ்டோன், ஸ்பைக் லீ போன்றவர்கள் சொல்வார்கள். இந்த மரபை மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் கடமையை, இந்தப் படத்தைத் தொடர்ந்து செல்வதன் மூலம், இதில் கதாபாத்திரங்களாக வருகிற ஆளுமைகளைத் தேடிச்செல்வதன்மூலம் அடைய முடியும்.

அம்சவள்ளி: மூன்றேகால் மணி நேரம் கால அளவு கொண்ட படம். இதில் ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு வசீகரமானதாக இருக்கிறது. அந்தப் பயணமே அற்புதமாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் புரட்சியைக் காண்பிப்பதாகயிருக்கட்டும், பெரும் மக்கள் கூட்டம், ஜான் ரீடிற்கும்,லூயிஸ் ப்ரைண்டிற்கும் இடையே நடக்கிற காதல், உடலுறவுக்காட்சிகள் எல்லாமே சில் அவுட்டில் (chill-out) எடுக்கப்பட்டிருக்கும். லைட்டிங் தொழில்நுட்பத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருப்பார். இதற்கு உதாரணமாக, ஒரு காட்சியைச் சொல்லவேண்டுமென்றால், லூயிஸ் ப்ரைண்ட், யூஜின் ஓ நெய்லைச் சந்தித்து உதவி கேட்கும்போது, லூயிஸின் கண்களையே காட்ட மாட்டார்கள். ஆனால், நெய்ல் அந்தக் கண்களைப் பார்த்துதான், ”நான் போகவில்லை, நீயே அங்கு செல்” என்று சொல்வார். லைட்டிங்கை காட்சியின் உணர்விற்காகப் பயன்படுத்தியிருப்பார் விட்டோரியோ ஸ்டொராரோ. அதேபோல, அவர் பெர்ட்டலூச்சி, கொப்பாலோ, இதுபோன்ற புகழ்வாய்ந்த இயக்குனர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஃப்ரேமும் ஓவியம் போலத் தோன்றுகின்றன. படம் முழுக்கவுமே, அழகியல் மதிப்பீடுகளைச் சேர்த்திருப்பது, விட்டோரியோ ஸ்டொரேரோவின் ஒளிப்பதிவுதான். படம் ஒரு டாக்யூ ஃபிக்சன் போலத்தான் தோன்றுகிறது. இதுவே, ஒரு பரிட்சார்த்த முயற்சியிலான கதை சொல்லல் பாணிதான். ஜான் ரீடுடனும், லீயிஸ் ப்ரைண்டுடனும் வாழ்ந்தவர்கள், திரையில் தோன்றிப் பேசுகிறார்கள். பார்வையாளர்கள் கவனம் முழுக்க அவர்கள்மேல் பதிய வேண்டுமென்பதற்காக, பேக் லைட் பயன்படுத்தியிருக்க மாட்டார். அதிகமாக, க்ளோஸ் அப் காட்சிகளும் இருக்காது. மிட் ஷாட், லாங் ஷாட் காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இரு நபர்கள் பேசுகிறார்கள், என்றால், அவர்களுக்கான திரைப் பகிர்வு என மிகச்சிறந்த ஒளிப்பதிவு நுட்பங்களுக்காகவே இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கமுடியும். விட்டோரியோ ஸ்டொரோரோவின் பங்களிப்பு குறித்து?


யமுனா: பேக் லைட்ஸ், எப்போதுமே, ரொமாண்டிக், மித்திகல் அன் ரியல் விஷயங்களுக்காகத்தான் பயன்படும். தமிழில், அதிகமாக பேக் லைட்ஸைப் பயன்படுத்தியவர் என்றால், மணி ரத்னத்தைச் சொல்லலாம். பேக் லைட்ஸ் மிகவும் பகட்டான ஒரு விஷயத்தை உருவாக்கும். அதனால்தான், நீங்கள் சொன்னதுபோல, ஜான் ரீடுடனும், லூயிஸ் ப்ரைண்டுடனும் பழகிய, நிஜ மனிதர்கள் வந்து பேசும்போது, அந்த உண்மைத்தன்மையை அப்படியே பார்வையாளர்களுக்குக் கடத்தவேண்டும் என்பதற்காகத்தான், அவர் பேக் லைட்ஸை முற்றிலுமாக அகற்றிவிட்டு, படம் பிடித்திருக்கிறார். மற்றது, இந்தப் படத்தில், ஒரு மணி நேரம் பத்து நிமிட கால அளவு வரை, முழுக்க ஒரு சிறிய அறை, ஹாலுக்குள், தனிப்பட்ட அறைக்குள், ஹோட்டலில் சாப்பிட்டு விவாதிக்கிற விஷயங்கள், கூட்டத்தில் பேசி விவாதிக்கிற காட்சிகள்தான் படத்தின் ஆரம்பத்தில் இருக்கிறது. மூன்றில் ஒரு பகுதி இந்தக் காட்சிகள்தான். அவர்கள் ரஷ்யாவிற்குச் செல்லும்போதுதான், முழுக்க பரந்த நிலப்பரப்பைக் காட்டுகிறது. மக்கள் கூட்டத்தைக் காட்டுகிறது. லெனினைக் காண்பித்தாலும், ட்ராஸ்ட்கியைக் காண்பித்தாலும், ஜினோவேவைக் காண்பித்தாலும், என எங்கும் மக்கள் நிறைந்திருக்கிறார்கள். ரஷ்யா மக்கள் திரளினுடைய நாடு. தொடர்வண்டியில் பயணிக்கும்போதும் சரி, சன்னல் வழிக் காட்சிகள், இரஷ்ய நிலம் எல்லாம் விஸ்தாரமாகக் காண்பிக்கப்படுகிறது. அடுத்து, இந்தப் படம் குளிர்காலத்தில் நடக்கிறது. இந்தப் புரட்சி நிகழ்கிற காலத்திலும் சரி, இரண்டாவது முறையாக, ஜான் ரீடு, பின்லாந்து சென்று, அங்கிருந்து ரஷ்யாவிற்கு செல்ல முயற்சிக்குபோதும் சரி, அவை பனிக்காலத்தில் நடக்கிற காட்சிகள். பனிக்காலத்தின் அழகை, ரஷ்ய நிலப்பரப்பைக் கடந்து, வேறெங்கும் இவ்வளவு அழகாகப் பார்க்கமுடியாது.

நரிகள் பனிகளில் கூட்டம் கூட்டமாக ஓடுகிறதல்லவா, அந்தக் காட்சியெல்லாம் ரஷ்யாவில் மட்டும்தான் பார்க்கமுடியும். பின்லாந்து சிறையிலிருந்து அவர் விடுதலையாகி வருவது, அவர் திரும்பிச் செல்லும்போது, இறங்கி சில காட்சிகளைப் பார்ப்பது, உறைந்து கிடக்கிற ஏரி, இதெல்லாம் ரஷ்ய நிலத்திற்கேயுரிய தன்மை. ரஷ்யாவிற்குச் செல்லும்போதுதான், கேமரா முழுக்க, பனாரமிக் வியூவை எடுத்துக்கொள்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இயற்கை. பனிக்காலம். பனிப்பொழிவு. அதேபோல, மிகப்பெரிய பனி வெளியில் அணிவகுத்து நடந்துபோகிற காட்சிகள் எல்லாம் அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற காட்சிகளையெல்லாம் நீங்கள் ’வால்’ படத்தில் பார்க்கமுடியும்.

Figure 22 vittorio storaro

லெனின், ஸ்விட்சர்லாந்திலிருந்து ரஷ்யாவிற்கு வரும்போது, தொடர்வண்டியில்தான் வருகிறார். அந்த இரயில் பயணம் பற்றியே தனியாக ‘ட்ரெய்ன்’ என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புரட்சியில் இரயில், மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. செம்படை, எதிர்ப்புரட்சியாளர்களை முறியடிப்பது, இதற்கு தொடர்வண்டிப் பயணம் என்பதுதான் முக்கியமான விஷயம். இரயிலில் சென்றுதான், எல்லா இடங்களிலும் அவர்கள் மக்களை ஒருங்கிணைத்தார்கள். இந்த சம்பவங்கள், இயற்கை, அந்த நிலப்பரப்பு, நசிவான மக்கள் இது எல்லாமே பானராமிக் வியூவிற்குள் வருகிறது. வீடு, தனிப்பட்ட இடம், என்பதிலிருந்து கேமரா பனாரமிக் வியூவிற்குச் செல்வதற்குக் காரணம் இதுதான்.
ஆனால், அமெரிக்காவிற்கு வரும்போது, மறுபடியும், அந்த வீடு, ஹால், பார்ட்டிக் கூட்டங்கள், கட்சி விவாதங்கள் என்றளவில் மீண்டும் கேமரா ஃப்ரேம் சுருங்குகிறது. இந்தக் காட்சி வேறுபாட்டிற்கான, உணர்வு வேறுபாட்டிற்கான வித்தியாசங்களைச், சரியாகத் திட்டமிட்டுச் செய்திருக்கிறார் விட்டோரியோ ஸ்டொரேரோ. அமெரிக்காவில் மிட் ஷாட்டாகவும், க்ளோஸ் அப் ஷாட்டாகவும் இருந்த கேமரா லென்ஸ் தேர்வுகள், ரஷ்யாவிற்கு வரும்போது பெரும்பாலும் வைட் ஷாட்களாக மாறுகிறது. மிகப்பெரிய உயரமான கட்டிடங்கள், ஐம்பது பேர் அமர்கிற கூட்டங்கள், ரஷ்யாவில் கதை நடக்கிற அந்தக் குறிப்பிட்ட காலத்தில், தனிப்பட்ட மனிதர்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை. இது பெரும் மக்கள் புரட்சி. மக்கள் திரளாகப் பங்குபெற்ற விஷயம். அதனால், மக்கள் கூட்டமே நிரம்பியிருக்கிறது. லெனினைக் கூட தனிப்பட்ட நபராக, அங்கு பார்க்கமுடியாது. எந்தவொரு புரட்சிகரத் தலைவர்களையுமே நீங்கள் தனிப்பட்ட நபராகப் பார்க்கமுடியாது.

அதேபோல, ஜினோவோவேவையும் கூட, பத்து பேர் சூழ்ந்திருக்கும்போதுதான் பார்க்கமுடியுமே தவிர, தனி நபராகப் பார்ப்பது குறைவு. ஒரு படத்தின் கதைசொல்லலில், இந்த விஷயங்களை முன்கூட்டியே கண்டுணர்ந்த ஒருவரால்தான், இத்தகைய ஃப்ரேம்களில், கடப்பாட்டுடன் தன்னுடைய கலை மேதமையைப் புகுத்தமுடியும். அதேபோல, எமோஷனலும் இந்தப் படத்தில் மிக முக்கியமான விஷயம். ஒளிப்பதிவு என்பது வெறுமனே அலங்காரமாக இருப்பது என்பதைவிடவும், படத்தோடும், அந்தக் கதையின் உணர்வோடும் ஒன்றி, காட்சியமைப்பதுதான், ஒரு திரைப்படக்கலைஞனுக்குரிய மிக முக்கியமான விஷயம். இதை விட்டோரியோ ஸ்டொரேரோ அதியற்புதமாகச் சாதித்திருக்கிறார். சினிமாவைப் பயிலவேண்டும் என நினைப்பவர்களுக்கு இதுவொரு பாடம்.

(*சீமோர்க்கர் மிக முக்கியமான பத்திரைக்கையாளர், அவரது பயோகிராஃபி இப்போது புத்தகமாக வெளியாகியிருக்கிறது.)

அம்சவள்ளி: போராடுகிறவர்கள் மீது செடிஷன் வழக்கு தொடுப்பது பற்றி...

யமுனா: செடிஷன் கேஸ் என்பது அமெரிக்காவின் கலாச்சாரங்களில் ஒன்று. காலானிய நாடுகளின் பாரம்பரியமே, இந்த செடிஷன் கேஸ்தான். பிரிட்டனிலும் ஒருகாலகட்டம்வரை இந்த செடிஷன் கேஸ் நடைமுறையில் இருந்தது. செடிஷன் கேஸ் என்பது என்னவென்றால், அரசாங்கத்திற்கு எதிராகப் பேசினால், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கோ, அரசாங்கத்திலிருக்கிற அமைச்சர்களுக்கோ எதிராகப் பேசினால், அது தேசத்துரோக குற்றம் எனும் அடிப்படையில் செடிஷன் கேஸை அவர்கள்மீது பிரயோகித்தார்கள். இந்தியாவில், பிரிட்டிஷ் காலனிய காலத்தில், இந்த செடிஷன் சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது லிபரல் சொசைட்டியில் இந்த செடிஷன் கேஸ் பெரும்பாலும் இல்லை. இதற்காக நிறைய போராட்டங்களை முன்னெடுத்து, அரசாங்கத்தை விமர்சிக்கலாம், அரசாங்கத்தின் தவறான போக்குகளை விமர்சிக்கலாம், இதற்கன பத்திரிக்கைச் சுதந்திரம் இருக்கிறது என்றெல்லாம் போராடி, இந்தச் சட்டத்தை இல்லாமலாக்கினர். இன்றைக்கு செடிஷன் சட்டம் பிரிட்டனில் கிடையாது. அதேபோல, பெரும்பாலான மேற்கத்திய நாடுகளிலும் இந்த ’செடிஷன் லா’ கிடையாது. இந்த செடிஷன் லா வரவேண்டும் என்று ட்ரம்ப் போன்றவர்கள்தான் அதிகமாக வலியுறுத்துகிறார்களேயொழிய, டெமாக்ரடிக் பார்ட்டியில் இருப்பவர்கள் இதைப் பொருட்படுத்துவதில்லை.

இந்த செடிஷன் லா என்பதே, அரசாங்கம் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்கும், அரசாங்கத்திலிருக்கிற அமைச்சர்கள் மீது தொடுக்கவிருக்கிற அத்துமீறல்களைத் தவிர்ப்பதற்கான, கருவியாகப் பாவிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளில் இந்தச் சட்டம் நடைமுறையில் இல்லை. ஆனால், இன்றைக்கும் இந்தியாவில், அந்தக் காலனிய காலத்தில் போடப்பட்ட அதே செடிஷன் சட்டத்தை வைத்துக்கொண்டுதான், ஜே.என்.யூ மாணவர்களை, அலிகார் யுனிவர்சிட்டி மணவர்களை, கொரேஹான் பிரச்சினையில், போராடியவர்களைக் கைது செய்தது. அதேபோல, விவசாயிகளுக்கு ஆதரவாக இணையத்தில் ஒரு ட்வீட் செய்தால், அந்த மாணவியைக் கைதுசெய்வது, என்பதெல்லாம் செடிஷன் லா வைத்துதான். ஆனால், இதுகுறித்து சிறப்பானதொரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அரசாங்கத்தை விமர்சிப்பதோ, அரசாங்கத்தைச் சார்ந்த அமைச்சர்களை விமர்சிப்பதோ, தேசத்துரோக குற்றமல்ல, இது தனிமனித உரிமை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.


அம்சவள்ளி: ரஷ்யாவில் க்ரன்ஸ்கியின் ஆட்சி எவ்வாறு நிலவியது?

யமுனா ராஜேந்திரன்: க்ரன்ஸ்கி குறித்துச் சொல்லும்போது, அவர் ஒரு லிபரல் டெமாக்ரடிக் என்பதுபோலச் சொல்வார்கள். ஆனால், இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த ஜார் மன்னரின் ஆட்சி முறையின், பாரம்பரியத்தை அவர் விடவில்லை. அதுமட்டுமல்ல, க்ரன்ஸ்கி யுத்தத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். முதல் உலகப்போரில் யுத்தத்தை ஆதரித்தார். இங்கு ஒரு முக்கியமான திருப்புமுனைப் புள்ளி என்னவென்றால், அன்றைய காலகட்டத்திலும் சரி, அதற்குப் பின்னாலும் சரி, இந்த ஏகாதிபத்தியத்திற்கான யுத்தங்களை, புரட்சிக்கான முகாந்திரங்களாக மாற்றுவது, என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு. யுத்தங்கள் மிகப்பெரிய மனிதக்கொலைகளையும், மனிதப் பேரழிவுகளையும் நிகழ்த்தும். யுத்தத்தினால், அங்கிருக்கிற உழைக்கும் மக்களுக்கோ, தொழிலாளி வர்க்கத்திற்கோ, சாதாரண மக்களுக்கோ, எந்தவிதமான பலனும் கிடையாது. ஆகவே, யுத்தத்தைத் தடுத்து நிறுத்துவதன்மூலமாக, பெருவாரியான மக்களின் உயிரைக் காப்பாற்றலாம். ரஷ்யாவில் லெனின் வைத்த முக்கியமான விஷயமே, ”யுத்தத்தை நிறுத்த வேண்டும், படையினர் யுத்தத்திற்கு போகக்கூடாது என்று சொல்லவேண்டும். ஆனால், அதேநேரத்தில், அந்தக் காலகட்டத்தை புரட்சிக்கான காலகட்டமாக மாற்றவேண்டும். முடியாட்சியிலிருந்து அடுத்து வருகிற அரசு, யுத்தத்தை ஆதரிக்கிற அரசாக இருக்க முடியாது. மாறாக, அவர்கள் தொழிலாள வர்க்கத்தினுடைய, விவசாய வர்க்கத்தினுடைய தூணாகயிருக்க வேண்டும்”. அதுதான் இந்த திருப்புமுனைப் புள்ளி.

இதே விஷயத்தைத்தான் இரண்டாம் உலகப்போரிலும் முன்வைத்தார்கள். ஸ்டாலின் கடைசிவரை யுத்தத்திற்குப் போகவில்லை. இறுதியாக, சோவியத் யூனியன் மீதே படையெடுத்து வந்தபிறகுதான், அவர் யுத்தத்திற்குள் சென்றார். அதற்குப் பிறகு, மிகப்பெரிய யுத்த எதிர்ப்பு இயக்கங்களை, அணு ஆயுத எதிர்ப்பு இயக்கங்களை, உலக சமாதானங்களுக்கான இயக்கங்களை நடத்தியவர்கள் இடதுசாரிகளும் கம்யூனிஸ்டுகளும்தான். பிரிட்டனிலும் சி.என்.டி.ஏ என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார்கள். யுத்த எதிர்ப்பு இயக்கத்திற்கான இலச்சினையை, பாப்லோ பிக்காசோ வரைந்துகொடுத்தார். புறா சின்னம் அதில் இருக்கும். அந்த யுத்த எதிர்ப்பு இயக்கத்தில் மிகப்பெரிய கலைஞர்களெல்லாம் ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். பிக்காசோ, நெரூதா உட்பட அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், இடதுசாரிகள் என்றுமே யுத்தத்தை விரும்புவதில்லை. அவர்கள்தான் ஈராக் யுத்தத்திற்கு எதிராக இருந்தார்கள். சிரிய யுத்தத்திற்கு எதிராக இருக்கிறார்கள். இந்திய பாகிஸ்தான், இந்திய சீன யுத்தத்திற்கும் எதிராகயிருப்பார்கள். அமெரிக்கா எங்கெங்கு உலகநாடுகளில் ஆக்கிரமிப்பு செய்கிறதோ, அதற்கு எதிராகயிருப்பார்கள். ஏனெனில், யுத்தம் எந்த நாட்டிற்கும் நல்லது செய்வதில்லை. எந்த நாட்டிற்கும் சுபிட்சத்தைக் கொண்டுவருவதில்லை. யுத்த நாடுகளில் வாழ்கிற தொழிலாள வர்க்கத்திற்கோ, உழைக்கும் மக்களுக்கோ, பெண்களுக்கோ, விவசாயிகளுக்கோ, யுத்தங்களால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. ஆகவே, உலக சமாதானத்திற்காக மார்க்சியர்கள் செயல்படுவார்கள். இன்னும் யுத்தங்களைப் புரட்சிக்கான முகாந்திரமாக மாற்றுவார்கள்.


அம்சவள்ளி: ஜான் ரீடும், லூயிஸ் ப்ரைண்டும் ரஷ்யாவிலிருந்து மீண்டும் நியூயார்க் வரும்போது, அவர்களது புத்தகங்களையெல்லாம் கைப்பற்றினபிறகு, செனேட்டருடன் லூயிஸ் ப்ரைண்டிற்கு ஒரு மீட்டிங் இருக்கும். அப்போது அவர்களிடம் “உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையிருக்கிறதா?” என்ற விவாதம் எழும். அவர்களுக்குப் பதில்சொல்லும் விதமாக, ”நீங்கள் ரஷ்யாவிற்குச் சென்று பார்த்தீர்களா? ரஷ்யா எந்தமாதிரியான நாடு என்று உங்களுக்குத் தெரியுமா? அங்கு பெண்களுக்கு வாக்குரிமை இருக்கிறது. இங்கு அதுகூட இல்லை.” என்றெல்லாம் லூயிஸ் சொல்வார். இந்த பெண்களுக்கு வாக்குரிமை என்ற விஷயம் எப்போதிருந்து நடைமுறைக்கு வந்தது?

யமுனா ராஜேந்திரன்: 1920 காலகட்டத்தில்தான், அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குசெலுத்துவதற்கான உரிமையைக் கொடுத்தார்கள். கிரேட்டஸ்ட் லிபரல் டெமாக்ரஸி. பிரிட்டனில் 1918இல் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தார்கள். கிரேடல் ஆஃப் டெமாக்ரஸி. ஆனால், இதற்கு முன்பே, ரஷ்யாவில் 1917லிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதேபோல, கருத்தடை உரிமை. கருத்தடை என்பது பெண்கள் தீர்மானிக்கக்கூடிய உரிமை என்பது, முதன்முதலில் அங்கீகரித்தது லெனினின் அமைச்சரவை. அந்த லெனினின் அமைச்சரவையில் சமூக மேம்பாட்டிற்கும், பெண்கள் மேம்பாட்டிற்கும் பொறுப்பில் இருந்தவர் அலெக்ஸாண்ட்ரா கொலண்டை. இவர் பெரிய தத்துவவியலாளர், எழுத்தாளர். இவர் ஃப்ரீ லவ் என்பதைத் தன் வாழ்க்கையில் பின்பற்றியவர்.

இன்றைக்கும், உலகத்திலிருக்கிற எல்லா பெண்களை எடுத்துக்கொண்டாலும், ஃப்ரீ லவ் என்ற விஷயத்தை முயற்சிக்கிறவர்களும், அல்லது குழந்தை வளர்ப்பு என்பதை அரசு எடுத்துக்கொண்டு, பெண்கள் பொதுவாழ்க்கைக்குள் வரவேண்டும், அவர்கள் வேலை செய்யலாம், படிக்கலாம், இராணுவத்திற்கும் போகலாம், எல்லாவிதமான சமூகச் செயற்பாடுகளிலும் ஈடுபடலாம் என்பதை உத்திரவாதப்படுத்தியது அலெக்ஸாண்ட்ரா கொலண்டை. குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவும், முதியவர்களைப் பராமரிப்பதற்காகவும் காப்பகங்களை உருவாக்கியது அந்த அரசுதான். சோஷல் வெல்ஃபேர் சொசைட்டிக்கான எல்லாவிதமான வேர்களும், ஆதாரங்களும் அவர்களே உருவாக்கினர்.

அதேபோல, மதம் தொடர்பான விஷயங்கள். எல்லாவிதமான மத உரிமைகளும் உண்டு. மக்கள் விருப்பப்பட்டால் அவற்றைப் பின்பற்றலாம். ரஷ்யாவிலோ, சீனாவிலோ, அல்லது எந்த சோசலிச நாடுகளிலோ மதம் தடைசெய்யப்படவேயில்லை. ஆனால், மதவாதிகள், அரசியல்வாதிகளோடு சேர்ந்து, அதிகாரிகளோடு சேர்ந்து, தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும், அங்கு வாழ்கிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக வேலைசெய்வார்களேயானால், அந்த மத அமைப்பை, அரசு கண்காணிக்கும், அந்த மதத்தை அரசு கட்டுப்படுத்தும்.

பாப்லோ நெருதா தொடர்பான படம், இல் ஃபோஸ்டினோ (Il Postino: The Postman, 1994). இந்தப் படத்தில் பாப்லோ நெருதா, கடற்கரைக் கிராமத்திற்கு வந்து சேர்வார். ஒரு தபால்காரர், இவருக்குத் தினமும் ஒரு கடிதத்தை வந்து கொடுப்பார். நெருதா, அந்தத் தபால்காரருடன் மிகுந்த பரிவுணர்வோடு இருப்பார். தபால்காரார் ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருப்பார். அந்தப் பெண்ணிற்குக் காதல் கவிதைகளை எழுத்தித்தான், தன்னைக் காதலிக்கவைக்க முடியும். எனவே, நெருதாவிடம் வந்து ஒரு காதல் கவிதை எழுதித்தரச் சொல்கிறார். “என்னுடைய காதலிக்குத்தான் எழுதமுடியும், உன் காதலிக்கும் சேர்த்து நான் எழுதவேண்டுமா?” என்றெல்லாம் யோசித்தாலும், நெருதா அந்தக் காதல் கடிதத்தை எழுதிக்கொடுத்து விடுகிறார். காதலும் கைகூடுகிறது. ஆனால், தபால்காரரிடம் அம்மா நெருதாவைப் பற்றி, “நெருதா மிகவும் மோசமானவர். நெருதா ஒரு கம்யூனிஸ்ட். அவர்கள் குழந்தைகளைக் கொலை செய்வார்கள். கம்யூனிஸ்டுகளுக்குக் கடவுள் பக்தியே கிடையாது. மத விரோதிகள்” என்று சொல்வார். அப்போது கேமரா, நெருதாவின் அறையை நோக்கிப் பயணிக்கும். உள்ளறையில் நெருதா மண்டியிட்டு ஜீசஸை வணங்கிக்கொண்டிருப்பதைக் கேமரா காண்பிக்கும். இதே லத்தீன் அமெரிக்காவில்தான் லிபரேஷன் தீயாலஜி தோன்றுகிறது. மார்க்ஸையும் இயேசுவையும் இணைத்துக்கொண்டு, விடுதலை இறையியல் தோன்றியது.

கேள்விக்கு வருவோம். ரஷ்யா ஒரு ஏண்டி க்றிஷ்ட். இந்தப் படத்தில் பல்வேறு இடங்களில் ஒரு வசனம் வருகிறது. ” அமெரிக்காவும், பின்லாந்தும், ரஷ்யாவின் மீது கொண்டிருக்கிற பார்வை என்னவென்றால், இந்த க்றிஸ்டியன் தியாலஜி. க்றிஸ்டியன் எதிக்ஸைக் கொண்ட சமூகத்தை நிலைநாட்டவேண்டுமென்பதற்காகத்தான், ஆண்டி க்றிஸ்ட் மனநிலை கொண்ட ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இவர்கள் எடுத்தார்கள்” என்று பேசுவார்கள்.

இதே விஷயத்தை, ஜார்ஜ் புஷ், ஈராக்கிற்கு எதிராக யுத்தம் நடத்துகிறபோது, ”சிலுவை யுத்தம்” என்று பெயரிட்டார். இஸ்லாமியர்களுக்கு எதிரான சிலுவை யுத்தம் எனக் குறிப்பிட்டார். எனவேதான், பேனலில் இருக்கிற நீதிபதி கேட்கிறார், “உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? அவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள், மதத்திற்கு எதிரானவர்கள், நாத்திகர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள்” என்று சொல்லும்போதுதான், பதிலாக, “அங்கு பெண்களுக்கு வாக்குரிமை இருக்கிறது, இங்கு இருக்கிறதா?” என்கிறார். இதெல்லாம் மோசமான பிரச்சாரம் என்று லூயிஸ் ப்ரைண்ட் குறிப்பிடுகிறார். ”நீங்கள் ரஷ்யாவிற்குச் சென்றிருக்கிறீர்களா? அவர்கள் மத நம்பிக்கைக்கு எதிரானவர்கள் என்று தெரியுமா? எனவே பொய் சொல்லாதீர்கள். எனக்கு கிறித்துவ நம்பிக்கை இருக்கிறது. அந்தக் கிறிஸ்து யாருக்கானவர் என்பதும் எனக்குத் தெரியும்” என்று உறுதியாகச் சொல்கிறார். ஆகவே, கம்யூனிஸ்டுகள் என்றால் கிறித்துவிற்கு எதிரானவர்கள், மத விரோதிகள், மத நம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் என்பது பொய்ப்பிரச்சாரம்.

மார்க்ஸின் எழுத்துக்களிலேயே, மதம் ஏன் தோன்றியது என்பதற்கான சமூகக் காரணங்களை அவர் ஒப்புக்கொள்கிறார். இந்த மதங்களை ஏன் மக்கள் நம்புகிறார்கள்? அதற்கான சமூகக் காரணங்கள் என்ன? என்ற விஷயத்தையும் பரிவுடன் பார்ப்பார். இதையெல்லாம் வைத்துதான், ”மதம் மக்களின் மனங்களை மறக்கடிக்கிற, மக்களின் மனங்களைத் திசைதிருப்புகிற, அபினி (போதை மருந்து) போன்றது” என்பார். அதை மாற்றுவதற்கு, எந்தத் துயரத்திற்கான காரணமாக, சொர்க்கவுலகத்திற்குச் செல்லவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த சொர்க்கத்தை மண்ணில் படைப்பதன்மூலம், அந்தத் துயரத்திற்கான மாற்றை, மண்ணில் உருவாக்குவதன்மூலம், இந்த மதத்திற்கான அடிப்படைகளில் மாற்றங்களைச் செய்யமுடியும் என்பார். கம்யூனிஸ்டுகள், மதத்தை, விமர்சனப்பூர்வமாகப் பார்ப்பார்கள். மதம் ஒரு உண்மையான விஷயமில்லை, என்று மதத்தை மறுப்பார்கள். ஆனால், மதத்திற்கான காரணங்களை அவர்கள் மறுப்பதுமில்லை. வெறுப்பதுமில்லை. இரண்டாவது இது மக்கள் சார்ந்த விஷயம். எனவே, ஒருநாளும் மார்க்சியர்கள், மத வெறுப்பாளர்களோ, மத விரோதிகளோ இல்லை. மதத்தைப் பற்றிய சரியான விமர்சனக் கண்ணோட்டத்தைக் கொண்ட மத மறுப்பாளர்கள்.

அம்சவள்ளி: ஜான் ரீடிற்கு ரஷ்ய மொழி தெரியாது. ஆனாலும், புரட்சியைப் பற்றி எழுதவேண்டுமென்பதற்காக அவர் ரஷ்யாவிற்குப் பயணமாகிறார். பின்பு, ஜான் ரீடிற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பது வேறுவிஷயம். ஆனால், மொழி ஒரு தடையல்ல என்ற இந்த சர்வதேசிய உணர்வு வரலாற்றில் வேறெங்கெல்லாம் நிகழ்ந்திருக்கிறது?


யமுனா ராஜேந்திரன்: ஸ்பெய்னில் ஃப்ராங்கோ சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், அந்நாட்டிலிருக்கிற குடியரசுவாதிகளுக்கு மத்தியில், உள்நாட்டுப் போர் நடந்தது. குடியரசுவாதிகள் குறிப்பிட்ட பிரதேசத்தைக் கையகப்படுத்தி, அங்கு விவசாயிகள் தொழிலாளிகளுக்கான கூட்டு அரசாங்கத்தையும் நிறுவுகிறார்கள். அதை முறியடிப்பதற்காக, ஃப்ராங்கோ, இராணுவத்தை அனுப்பி, அந்த மக்களைக் கொலைசெய்கிறார். அந்தச் சமயத்தில், குடியரசைக் காப்பாற்றுவதற்காக, உலகெங்கும் இருந்த கலைஞர்களும், எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் அங்கு செல்கின்றனர். ஜார்ஜ் ஆர்வெல், க்றிஸ்டோபர் க்றிஷ்னோவெட்ச் போன்றோரெல்லாம் அங்கு செல்கின்றனர். பல மார்க்சியர்கள் அங்கு சென்று, இறந்துபோகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஸ்பேனிஷ் மொழி தெரியாது. ஆனால், அடக்குமுறைக்கு எதிராகவும், குடியரசுக்கு ஆதரவாகவும் நிற்கவேண்டும் என்ற உணர்வில் அவர்கள் அங்கு செல்கிறார்கள். அதேபோல, ரஷ்ய மொழி தெரியாத பல கம்யூனிஸ்டுகள், ரஷ்யாவிற்குச் சென்றிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் கூட, ஸ்டாலினைச் சந்திக்க முயற்சித்திருக்கிறார். புரட்சியில் பங்கெடுக்க மொழி ஒரு அடிப்படையான தடையே அல்ல.

ரஷ்யாவை ’புரட்சியின் மெக்கா’ என்று சொல்வார்கள். எப்படி இஸ்லாமியர்களுக்கு மெக்கா ஒரு புனிதத்தளமாக இருக்கிறதோ, அதுபோல, புதுவுலகைக் கனவு கண்டவர்களுக்கு, புரட்சியாளர்களுக்கு ரஷ்யாவும், மாஸ்கோவும் ஒரு புனிதத்தளமாகத்தான் இருந்தது. புதுயுகம் சம்பந்தமான கனவு, இந்த சர்வதேசிய உணர்வுதான், அவர்களை ரஷ்யாவை நோக்கித் திருப்புகிறது.

அம்சவள்ளி: பின்லாந்தில் ஜான் ரீட் கைதுசெய்யப்பட்ட பிறகு, அவருக்கு ஒரு சிறுநீரகம்தான் செயல்படுகிறது என்பதையறிந்து, அவரை மெல்ல மெல்லக் கொலைசெய்யும் நோக்கில், அதிக உவர்ப்புச் சுவைகொண்ட மீனை உணவாகக் கொடுக்கின்றனர். பற்களெல்லாம் ரத்தமாக இருக்கும். அங்கு ஒரு மருத்துவர் அவரைச் சோதித்து, “உங்களுக்கு என்ன உணவாகக் கொடுக்கிறார்கள்?” என்று கேட்கும்போதுதான், அதிக உப்புத்தன்மை கொண்ட மீன் உணவு குறித்துச் சொல்வார். பின்லாந்தில், அந்த உப்பு மீனை, உணவாக உட்கொண்டதனால், உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக, இதயம் பாதிப்படைந்துதான் ஜான் ரீட் இறந்தும் போகிறார். இத்தகைய முறையற்ற செயல்முறை, பிடிபட்ட கைதிகளிடம், போராளிகளிடம் செலுத்துப்படுகிறதல்லவா!

யமுனா ராஜேந்திரன்: உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது, இனிப்போ, உப்போ அதிகமாகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதேபோல, எலுமிச்சையில் சிட்ரிக் அதிகமாகயிருக்கிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிட்ரிக் கூட ஆபத்தான விஷயம்தான். அதனால்தான், ஜான் ரீடைச் சோதிக்கும், இரக்கக்குணம் கொண்ட மருத்துவர், வேறுசில மருந்துகளைப் பரிந்துரைக்கிறார். சிறைகளில், இதுபோன்ற துன்புறுத்தல்கள் இயல்பான விஷயங்கள்.


துருக்கியில் இம்ரா அலி சிறையில், குர்தீஸ் விடுதலை இயக்கத்தின் தலைவரான அப்துல்லா ஒச்சலானை இருபது வருடங்களாக சிறையில் வைத்திருக்கிறார்கள். அதுவும் தனிமைச் சிறை. ஒரு தனித் தீவு, அதனுள் ஒரு இராணுவத் தளம் இருக்கிறது. அதன் கட்டுப்பாட்டில், அப்துல்லா ஒச்சலானைத் தனியாக சிறைவைத்திருக்கிறார்கள். அவருக்குக் கொடுக்கப்படுகிற உணவில், அவரது உடல்நலனில் பாதிப்பு ஏற்படுத்துவதுபோன்று, புளிப்புச் சுவை அதிகம் கொண்ட உணவுகள் கொடுக்கப்படுகின்றன, என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

அம்சவள்ளி: சில இடங்களில் புரட்சிக்கான பாடல்கள், அதற்கான இசைகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஜான் ரீடிற்கும், லூயிஸ் ப்ரைண்டிற்கும் இடையிலான காதலை, பின்னணியில் வருகிற இசை வெளிப்படுத்துகிறது. படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற இசை குறித்து.

யமுனா ராஜேந்திரன்: படத்தில் இசையின் சிறப்பை உணர்த்தவேண்டுமென்றால், ரஷ்யாவில் நடக்கிற காட்சிகளையும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அந்தக் கொந்தளிப்பான, எக்காளமான, புரட்சிக் காலகட்டத்தை பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸில் கடைசிக் காட்சியில் பார்த்தீர்களேயானால், மக்கள் கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மாதிரியான, தீவிரமான கொண்டாட்ட மனநிலையை அந்த இசை வெளிப்படுத்தும். அதுபோன்ற இசையுணர்வை, ரெட்ஸ் படத்தில் மக்கள் எழுச்சி தொடர்பான காட்சிகளிலும், ரஷ்யாவைக் காட்சிப்படுத்துகிற நிலப்பரப்புக் காட்சிகளிலும் உணரமுடிகிறது. மனதைவிட்டு அகலாத, ரஷ்யப் புரட்சிக் காட்சிகளுக்கு ஏற்ற இசை படத்தில் பாவிக்கப்பட்டிருக்கிறது. எப்படி கேமரா, அமெரிக்காவில் நடக்கிற காட்சிகளை ஒரு வீட்டிற்குள், மூடிய அறைக்குள் நடப்பதுபோன்று எடுத்து, பிற்பாடு ரஷ்யாவில் அப்படியே திறந்தவெளிக்காட்சிகளாக விரிகின்றனவோ, அதேபோலத்தான் இசையும், முக்கோணக் காதல், ஆண் – பெண் உறவு, அமெரிக்க இடதுசாரி விவாதம் போன்ற காட்சிகளில், அதற்குரிய மென்மையான, மகிழ்வூட்டும் இசையும், அப்படியே ரஷ்ய மக்கள் எழுச்சியைக் காட்சிப்படுத்துகிறபோது வேறொரு பரிமாணத்தைக் கடத்துவதாகயிருக்கிறது.