விஞ்ஞானத்தின் கீழ்த்திசை

ஹாலிவுட்டுக்கு இரண்டு முகங்கள் உண்டு. மூடநம்பிக்கை கொண்ட ஆவிகள் கதையை கூறுவது ஒன்று. விஞ்ஞான அறிவிப்பின்னணி உள்ள சயின்டிபிக் பிக்ஷன் கதைகளைக் கூறுவது மற்ற ஒன்று. இந்த இரண்டிற்குமேநவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஹாலிவுட்டுக்கு பெருமளவு கைகொடுத்து வருகிறது. இன்றைக்கு நாற்பதுகளில் இருபவர்களுக்கு ‘எக்ஸார்சிஸ்ட்’, ‘ஓமன்’ அனுபவங்கள் இன்றைக்கும் மறக்கமுடியதவைகளாய் மெய்சிலிரிக்க குடியவைகளாய் இருக்கும். எவ்வளவுதான் ஹாலிவுட் டிஜிட்டலையும், கிராபிக்சஷையும் உளவாக்கிக்கொண்டாலும் அன்றைக்கும் இவை இரண்டும் ஏற்படுத்திய பீதிக்கு எதுவும் இணையாக முடியாது. அந்த பீதியே அலாதியான ஒன்றுதான். அதைப் போலத்தான் ஹாலிவுட் பிரபாண்டத்தைப் பற்றிப் பேசுகையில் ‘மெக்கான்ஸ் கோல்டி’ன் கிளைமாக்ஸ் காட்சிகளைத் தவிர்த்து பேசமுடியாது. பீதியும் பிரமாண்டமும் ஹாலிவுட்டின் தனிச் சொத்துக்களாக இருந்தாலும் முந்தைய, இன்றைய ரகங்களுக்கு இடையே பெருத்த வேறுபாடு இல்லாமலும் போகவில்லை. இன்றைய சந்ததியினர் ‘எக்ஸார்சிஸ்ட்’ ‘ஓமனை’ பார்த்திருப்பார்களோ இல்லையோ ஆனால் அப்போதைக்கப்போது ஹாலிவுட் பீதி ரக படங்களைப் பார்த்து வருகின்றனர். பீதி படங்கள் என்னும்போது நம்மால் எக்ஸார்சிஸ்ட்களைத் தவிர்த்து பேசமுடியாது என்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இந்த ரக படங்கள் அரை டஜன் வந்து அச்சிறுத்தி சென்றன. ‘ப்ளையர் விட்ச் ப்ராஜெக்ட்’ , ‘ஸ்லீப்பி ஹாலோ’ , ‘தி ஹாண்டிங்’, ’ஸ்டிக்மேட்டா’ போன்றவைகளை குறிப்பிடலாம். இவற்றினுடே இந்தியாவிலிருந்து சென்ற மனோஜ் நைட் ஷியாமளனின் ‘தி சிக்ஸ்த் சென்ஸ்’ சும் இந்த ரகங்களில் தனித்து இருந்தது. 

Image result for the grudge

இந்த பின்னணியில் சமீபத்து ஹாலிவுட் வரமாக வந்திருப்பது ‘தி கிரட்ஜ்’. இந்தப் படத்தின் கருத்தாம்சம் அப்படியே நம் மண்ணிற்குப் பொருந்த கூடியதே. ஒரு ஆறாத சினத்துடன் சாகுபவர்களின் சாபம், அவர்கள் செத்த இடத்தில் இருந்துகொண்டே இருக்கும். அந்த மரணம் நடந்த இடத்தில் இடற்ப்படுகிறவர்களுக்கு அது ஒரு பெருத்த பாதிப்பை, அழிவை, மனோரீதியான விபத்தை விளைவிக்கும் என்பதானவைகளை அப்படியே உள்வாங்கியிருக்கிறது, ஜப்பானிய இயக்குனரான டகாஷி ஷிமிசூ இயக்கத்தில் உருவான ‘தி கிரட்ஜ்’.
கரேன் (சாரா மிஷேல் ஜெல்லர்) தன் சிநேகிதனான டப் (ஜேசன் பெகர்) உடன் ஜப்பானில் தங்கி படிக்கிறாள். படிப்பின் ஒரு பகுதியாய் சமூக சேவை என்கிறபோது வீட்டோடு செயல்படமுடியா நிலையில் இருப்பவர்களுக்குச் சென்று உதவுகிற பணியில் ஈடுபடுகிறாள். அவளின் முதல் பணி எம்மா (கிரேஸ் ஜாப்ரிஸ்கி) என்கிற அமெரிக்க மூதாட்டியில் தொடங்குகிறது. மகனும் மருமகளும் அற்ற அவளின் வீடு ஒழுங்கற்ற, கலைந்த நிலையில் உள்ளது. இதுபோன்ற படங்களைப் பார்த்து தேர்ச்சிபெற்றவர்கள் இதோ இந்த இடத்தில் இருந்துதான் கதை ஆரம்பமாகப் போகிறது, தாம் எதிர்பார்த்துவந்த பீதி உருவெடுக்கப்போகிறது என்று உணர தொடங்கிவிடுவர். கரேன் அந்த வீட்டினுள் நுழைந்ததுமே கதைக்கான அமானுஷ்யமான கீறல் ஒலிகள் வீட்டின் மாடி பகுதியிலிருந்து வருவதை உணர்கிறாள். கதைக்கான ப்ளாட் இங்கே ஆரம்பமாகிறது. நாயகி ஆர்வக்கோளாறில் சத்தம் வந்த இடத்தை நோக்கிச் செல்கிறாள். அங்கே அவளுக்கு ஏற்படுகிற அனுபவத்திலிருந்து பீதி உச்சத்திற்கு செல்கிறது. பேய் அறைந்த நிலைக்கு வருகிறாள். ஒவ்வொரு பேய் படத்திலும் ஒவ்வொரு விதமான உருவில் அதுவரும். இதில் ஒரு விதமாய்\திடும் திடுமென்ற சத்தத்துடன் வந்து பார்ப்பவர்களை மிரட்டி செல்கிறது. ஒரு காட்சியில் கதவு தட்டப்படுகிறது. நாயகி தன் காதலன் என நினைத்து கதவைத் திறக்கிறாள். கதவின் இடுக்கு வழியாகக் கதவிற்கு பின்னால் இருக்கின்ற காதலனைக் காண்கிறாள். கதவைத் திறந்து வெளியே வந்தால் அங்கே யாருமில்லை. பயந்துபோய் கதவை தாழிட்டு, கட்டிலில் படுத்து போர்வையை மூடிக்கொள்ள, போர்வைக்குள்ளேயே பீதிக்குள்ளாக்குகிற அந்த உருவம் புகுந்து முகத்திற்கு நேரே வந்து அலறலை ஏற்படுத்தி செல்கிறது. 

எப்படியும் நுழைந்துவிடுகிற சக்திபடைத்த அத்தகைய உருவம் காதவை திறக்க சொல்லி அதன் மூலம்தான் உள்ளே நுழைய வேண்டுமா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கக்கூடாது. இத்தகைய கேள்விகளை எழுப்புபவர்கள் இத்தகைய படங்களிலிருந்து விலகி நிற்பதே நல்லது. 'தி கிரட்ஜ்' ஏதோ முழுக்கமுழுக்க ஹாலிவுட் சரக்கு என்று நினைத்துவிடவேண்டாம். இந்த படத்தின் இயக்குனரான டக்ஷி ஷிமிசூ வின் ஒரிஜினல் ஜப்பானிய [படமான ஜூ-ஆன் என்ற படத்தை அப்படியே ஆங்கிலத்தில் ஹாலிவுட்டிற்குத் தாரை வார்த்திருக்கிறார். தமிழில் வெற்றிப்படமாவது அப்படியே தெலுங்கு, இந்தி, கன்னடத்திற்கு ஒரு ரவுண்டு போய்விட்டு வருவதைப்போலத்தான் 'தி கிரட்ஜ்' வும் என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் படம்போல் வராது... ஒரிஜினல் ஒரிஜினல்தான். கதையின் ப்ளாட்டுக்கான விஷயங்களை ரசிகர்களே ஒரிஜினல் ஜப்பானிய படத்தில் புரிந்துகொண்டனர். ஆங்கில பதிப்பிலோ இத்தகைய விஷயங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு சுவாரஸ்யக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானிய மொழி படத்தின் உத்தி ஆரவாரம் இன்றி , ஓஸோ இன்றி, கதையை நகர்த்துதல் ஆகும். 'தி கிரட்ஜ்' பாணி வேறுவிதமானது. கதையின் மூலாதாரமான பேய் விஷயங்களுக்கு நேரடியாக வரமால் சம்பந்தம் இல்லாத காட்சிகளை புகுத்தி பொறுமையை சோதிக்க செய்கிறது இது. ஜப்பானிய மற்றும் ஹாலிவுட் சரக்கிற்கு இடையேயான ஒற்றுமை வேற்றுமை என்னவென்றால் ஒன்று குறைந்த பொருட் செலவில் நிறைந்த மன திருப்தியை தந்தது. மற்றது பெருத்த பொருட்செலவில் பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது எனலாம். காரணம் ஆங்கில பதிப்பில் சில அடிப்படை விசயங்கள் விடுபட்டிருந்தது. 'தி கிரட்ஜ்' ஏதோ முதல் ஜப்பானிய படம் அல்ல, ஹாலிவுட்டை கலக்கியத்தில் 'தி ரிங்' போன்ற சமீபத்திய ஜப்பானிய ஹாரர் பிலிம்கள் ஹாலிவுட் தனத்தை பெற்று அது கொடுத்த வெற்றியே 'தி கிரட்ஜ்' வெளிவர உதவியிருக்கிறது. 'ட்ரீம் ஒர்க்ஸ்' என்ற ஸ்பீல்பெர்க்கின் நிறுவனம் 1998 இல் ஜப்பானில் வெளியான ஹிடியோ நகடா (Hideo Nakata)வின் ரிங்குவை (ringu) ஹாலிவுட் தனமாக்கி 2002-ல் வெளியிட்டு கணிசமான தொகையைக் கையீட்டியது. 

நகடாவின் 2002 வெளியீடான டார்க் வாட்டர் (DarkWater) ஜப்பானில் பெரும் வெற்றியை ஈட்டியதால் இந்த காரல் பிலிமும் டக்ஸ்டோன்ஸ் பட நிறுவனத்திற்காக இயக்குனர் வால்டர் சால்ஸ் , 'எ பியூட்டிக்புல் மைண்ட்' என்ற வெற்றி படத்தில் நடித்த ஜெனிபர் கானலியைக் (Jennifer Connelly) கொண்டு இயக்கியிருக்கிறார். இது ஹாலிவுட்டின் மிக சமீபத்திய வரவாகும். எந்த மூலையில் இருந்தாலும், அது என்னவாக இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும், அது லாபகரமானதாக இருந்தால் அதை அமேரிக்கா சர்வதேச சட்டங்களை எல்லாம் கடந்து தனதாக்கி கொள்ளும். அமெரிக்காவிலேயே கூட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் முதற்கொண்டு பெரும்பாலான பயன்பாட்டுச் சாதனங்கள் யாவுமே ஜப்பானிய, தொழில்நுட்பத்தில் உருவானவைகளே.

தரமே இதற்குக் காரணமாய் இருந்தாலும், இந்த தனதாக்கிக் கொல்வதில் எண்ணெய் கிணறுகளையும் அது விட்டுவைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியத்தையும் அச்சுறுத்தலையும் தருகிற விஷயம். 

அமெரிக்க பாணியை ஹாலிவுட்டுக்கு அப்படியே பின்பற்ற தொடங்கியிருக்கிறது. அமெரிக்கத் திரைக்கலாசாரத்திற்கு அந்நியமான ஜப்பானிய வாழ்க்கைமுறையைத் திரையில் கொண்டுவந்து அதை அமெரிக்கர்கள் நுகரக் கொடுப்பதென்பதே நம்மூரின் ஜுனூன் சீரியலை போல இருக்கிறது.ஜாப்பனீய திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி பாணி உண்டு.ஏனெனில் அவர்களுக்கென்று ஒரு நீண்ட வரலாறு, கலாசாரம் இருப்பதால், ஹாரர் பிலிம் என்று இருந்தாலும் அதிலும் ஒரு கலாசார பின்னணி இருக்கும். ஆவி போன்ற சமாசாரங்கள் அகிரா குரோசாவா படங்களிலும் உண்டு. அவைகளை அவர் கதை கூறலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். ரோசோமான் இதற்கு ஒரு உதாரணம். அதோடு மட்டுமின்றி கிழக்கிந்திய நாடுகளின் கலாசார நம்பிக்கையின் ஓர் அங்கம்தான். பேய் சமாச்சாரங்கள். ஆனால் அமெரிக்க பேய் சமாச்சாரங்களுக்கும் ஜப்பானிய பேய் சமாச்சாரங்களுக்கும் பெருத்த வேற்றுமை இருக்கவும் செய்கிறது. முன்னது வெறும்பீதியை, அருவருப்பை ஏற்படுத்த கூடியதே. 'எக்ஸார்ஸிஸ்ட் ஓமன்' களில் இதை காணலாம். 

டோஸ் ஹெவியாகக் கொடுத்து அலறவைப்பதில் ஹாலிவுட் காரர்கள் தனி சிறப்பு பெற்றவர்கள்தான். ஆனால் ஜப்பானிய பேய் கதை கூறல்கள் மென்மையானவை. பெரும்பாலும் உளவியலையும் உள்ளடக்கியவை. ஆல்பர்ட் ஹிட்ச்காக் திரையில் ஏற்படுத்திய பீதி அலறல்கள் எல்லாம் இத்தகைய ரகத்திலானவையே. ஹாலிவுட்டின் ஹிட்ச்காக்கின் பீதி படங்கள் எல்லாம் இயல்பான மனித உணர்விற்குட்பட்டவைகளே. அவர் இயல்பான மனித உணர்விற்கு அப்பால் சென்று அலற வைக்காததை இன்றைய அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இன்டர்நெட், ஈமெயில், செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி, பூமியை கடந்து வேறு எங்காவது சென்று குடியேறமுடியுமா என்றெல்லாம் ஒருபக்கம் விஞ்ஞான முனேற்றத்தை கண்கொண்டு இருக்கும் அமெரிக்க பெற்றிருக்கும் விஞ்ஞான அறிவை அந்த நாட்டு சினிமாக்கள் எட்டவில்லையே என்று நினைக்கும்போதுதான் சற்றே வருத்தமாக இருக்கிறது. விஞ்ஞான பார்வையை, அறிவை சினிமாவினுள் பரவலாக்க மாட்டேன் என்கிறது. ஹாலிவுட் விஞ்ஞான அறிவு என்பது வெறும் ஸ்டார் வார்ஸ்களும், சயின்டிபிக் பிக்சன்களும் மட்டும் அல்ல. விஞ்ஞான வளர்ச்சி அடைவதற்கு முன்பும் மனித நாகரிக வளர்ச்சி அடைவதற்கு முன்பும் மின்சாரத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பும் மனிதனுள் உண்டான பீதி, கலவரம், பொய்யான நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பேய் சமாச்சாரத்திற்கு இன்று வரை தொழில் நுட்ப தூபமிட்டுத் போற்றி வருவது என்பது அமெரிக்க நாகரீகத்திற்கு அழகானதாகப் படவில்லை. எத்தனையோ விஷயங்களில் உலக நாடுகளுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து வருகிற அமெரிக்க பேய், பிசாசு, சூன்யம் போன்றவைகள் எல்லாம் போலித்தனமானவைகள், மனபிராந்திகள். இவைகளுக்கு பின்னணியே உளவியல் கோளாறுதான் என்கிற ரீதியில் உண்மையை தெளிவுபடுத்துகிற பாணியில் படங்களை தயாரிக்காமல் வெளிநாடுகளில் ஓடி வெற்றிபெற்ற ஹாரர் பிலிம்களை எல்லாம் ஓடிபோய் எடுத்துவந்து அதற்கு ஒரு சர்வதேச அங்கிகாரம் கொடுத்து அதனை பிரதிநிதித்துவ படுத்துகிற ரீதியில் அமெரிக்க ஹாலிவுட் செயல்படுகிறது என்பது ஏற்கனவே மடமையில் வாழ்பவனை மேலும் மடமையாக்குவதற்கு ஒப்பாகும். 

இத்தகைய திரைப்படங்களில் இன்னொரு பக்கத்தையும் மறந்துவிடமுடியாது. அது இவை வாரிக்குவித்த வசூல்கள் வெறும் 50,000 டாலர்களில் உருவான 'ப்ளையர் விட்ச் ப்ராஜக்ட்' ஹாலிவுட்டில் மாபெரும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானது. இதுபோன்ற விஷயங்கள்தான் ஹாலிவுட்டை திசை திருப்பி விடுகின்றன. அதுமட்டுமின்றி பென்ஸ்காரில் செல்பவனுக்கு பி.எஸ்.ஏ. சைக்கிளை பார்த்ததும் ஒரு ரவுண்ட் அடித்தால் என்ன என்ற எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்யும். இதற்கு ஒப்பானதுதான் இந்த நவீன விஞ்ஜான, தொழிநுட்ப யுகத்தில் பேய் கதைகள். 
       
நன்றி: திரை