திரைக்கதையின் முதல் வெற்றி நடிகர்கள் தேர்வின் பொழுதே தீர்மானிக்கப்படுகிறது : சுகுமார் சண்முகம் பேட்டி

சுகுமார் சண்முகம் புதுவை பல்கலைக்கழகத்தில், நாடகத்துறையில் நடிப்பு மற்றும் கதாபாத்திர உருவாக்கம் என்ற தலைப்பில் PhD ஆய்வு செய்துவருகிறார். மேலும் சமீபத்தில், தேசிய விருதுபெற்ற தமிழ்த்திரைப்படமான ’பாரம்’ படத்தின் ஒரு முதன்மைக் கதாபாத்திரமாகவும், நடிகர்கள் பயிற்சியாளர் மற்றும் நடிகர்கள் தேர்வு இயக்குனராகவும் (Casting Director) இருந்துள்ளார்.

Sugumar Shanmugam - YouTube

Pondicherry Theatre Arts Academy என்ற நிறுவனத்தில் உள்ள பதினெட்டு நடிகர்களை வைத்து நாடகங்கள் இயக்குவது, நடிகர்களைப் பயிற்றுவிப்பது மற்றும் நடிப்பு சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுத்துவது மேலும் ஆரோவில் தியேட்டர் குழுவுடன் சேர்ந்து 8 வருடங்களாக நாடகம் நடிப்பது மற்றும் ஒளி வடிவமைப்பு செய்வது என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். இப்போதைக்கு Indian Foundation for Art என்ற NGOவின் நிதி உதவியால், தெருக்கூத்துக்குள் எப்படி ஒரு கதாபாத்திரம் உருமாற்றம் அடைகிறது? என்பது தொடர்பாக ஆவணப்படம் இயக்கி வருகிறார்.

நடிப்பு சார்ந்தும், நாடகம், கதாபாத்திர உருவாக்கம், பாரம் திரைப்படம், தேசிய விருதில் தமிழ்ப் படங்களின் பங்களிப்பு என பல தளங்களில் அவரோடு உரையாடியதிலிருந்து;

கலை மற்றும் நடிப்பின் மீதான ஆர்வம்?

என் தாத்தா ஒரு தெருக்கூத்து வாத்தியார். மேலும் கூத்தில் தலவேஷம், சூர வேஷம், பெண் வேஷம் என எல்லா வேஷத்தையும் ஆடக்கூடியவர். கூத்தில் மத்தளம் வாசிக்கக்கூடிய வித்வானும்கூட. குறிப்பாக அவர் கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் சிறந்தவர் என்று சொல்வார்கள். நான் அவரைப் பார்த்ததில்லை. நான் பிறக்கும் முன்பே இறந்துவிட்டார். ஆனால் சிறுவயதிலிருந்தே தாத்தாவுடைய பெருமையைக் கேட்டே வளர்ந்தேன்.

ஊரில் திருவிழாக்களில் காத்தவராயன் கூத்து, கழுமரம், மயான கொள்ளை, பூந்தோட்ட அழிப்பு, காளி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம் பண்டாரக் களி, தெருக்கூத்து என ஒன்றுவிடாமல் அனைத்தையும் அத்தை, பாட்டி , அப்பா, அம்மாவுடன் சென்று பார்ப்பது, ஊரைச்சுற்றி எங்கு நாட்டுப்புற கலைகள் நிகழ்ந்தாலும் தேடிச்சென்று நண்பர்களுடன் பார்ப்பேன், ஊருக்குள் நாடோடிகளாக வரும் இசை கலைஞர்கள் பின்னாலேயே திரிவேன், பள்ளி படிக்கும் பொழுது கூத்தைப் பார்ப்பதை விட கூத்து ஆடுபவர்களுடன் பழகுவதிலும், ஒப்பனை இடத்தில் இருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதிலுமே அதிக ஆர்வம் காட்டுவேன். குறிப்பாக கட்டியக்காரன் (கோமாளி) வேஷம் கட்டுபவர் யார் என்று தெரிந்து அவர் பின்னாலேயே அலைந்து கொண்டிருப்பேன்.


ஒருமுறை கூத்து கற்றுகொள்ள ஒரு கூத்து வாத்தியாரைப் போய்ச் சந்திக்கும் பொழுது அவர் மற்ற கலைஞர்களிடம் என்னை ”தோ பாத்தியா? கூத்து வாத்தியாரு வானூர் ராமசாமி பேரன் காலேஜ் படிக்கறான், ஆனா கூத்து கத்துக்க ஆர்வமா வந்துருக்கான்.” என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அது எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் தாத்தாவிற்கு பிறகு என் குடும்பத்தில் வேறு யாரும் கூத்து ஆடவில்லை. நான் பெரிதாக தெருக்கூத்து ஆடவில்லை என்றாலும் கற்றுக் கொண்டேன். சில குழுக்களுடன் சேர்ந்து ஆடி இருக்கிறேன். இதன் வழியாகத்தான் கலை மீது பெரிய ஆர்வம் வந்தது.


தமிழகத்தில் இப்பொழுது, நீங்கள் ஆர்வமாகக் கற்கத்துவங்கிய தெருக்கூத்தின் நிலை என்னவாகயிருக்கிறது?

தமிழகத்தில் குறிப்பாக வட ஆற்காடு மாவட்டங்களில்தான் தெருக்கூத்து பிரபலம், 30 வருடங்களுக்கு முன்னிருந்த அளவிற்கு பரபரப்பாக இல்லை என்றாலும், வருடத்திற்கு 4 அல்லது 6 மாதத்திற்கு கோவில் திருவிழாக்களில் கூத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது, இதில் கூத்துக் கலைஞர்களின் பொருளாதாரம்தான் மிகப்பெரிய பின்னடைவில் இருக்கிறது.

தமிழகத்தில் நவீன நாடகங்களின் நிலை மற்றும் அதன் வளர்ச்சி?

முதலில் தமிழகத்தில் நவீன நாடகம் குறித்த பார்வை என்பதே பொதுமக்களிடம் சற்று தவறாகவே உள்ளது. கலைத்துறையில் தொடர்ந்து பயணிப்பவர்களைத் தவிர்த்து பெரும்பான்மையோர் நாடகம் என்றால் தெருக்கூத்து மற்றும் சில சபா நாடகங்கள் மட்டுமே என அறிந்து வைத்துள்ளனர், ஆனால் பல தத்துவங்களையும், கோட்பாடுகளையும் அடிப்படையாக வைத்து இயங்கிக்கொண்டிருக்கும் நவீன நாடகங்கள் குறித்த பார்வை தமிழகத்தில் மிகக்குறைவாகவே உள்ளது.

நாடக வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது தமிழ்நாடு சற்று பின்தங்கியே இருப்பதாகக் கருதுகிறேன். அதுமட்டுமின்றி தமிழகத்தில் நவீன நாடகத்திற்கு பார்வையாளர்கள் குறைவு, அதற்கான காரணமாக ஏதோ ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது. ஏனெனில் இதற்குப் பின்னால் நீண்ட வரலாறு உள்ளது.


மாநிலங்களுக்கு இடைப்பட்ட மக்களின் கலாச்சாரம், மனநிலை, நாடகத்தை அவர்கள் பார்க்கும் கண்ணோட்டம், மாநில அரசு நாடகத்தைப் பற்றி பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வு, நிகழ்த்துக் கலைகளுக்காக மாநில அரசு ஒதுக்கும் நிதி, பள்ளி கல்லூரிகளில் நாடகத்தைப் பற்றி அரசு கொண்டுவரும் பாடத்திட்டம் மற்றும் நாடகக்காரர்கள் மக்களைத் தங்களோடு கை பிடித்து அழைத்துச் செல்லும் விதம் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம், மேலும் இந்நிலைக்கு காரணமாக பல நுண்ணரசியல் உள்ளது.

நாடகக் கலைஞர்களுக்கு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கல் இருந்தாலும் குறிப்பிட்ட பல தமிழ்நவீன நாடகக் கலைஞர்கள் அவர்களுக்குள் தேங்கி இருக்கும் ஆசைகளையும் வற்றாத வலிகளையும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நாடகத்தின் மூலம் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு சேர்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

Sugumar shanmugam (@sugaa14) | Twitter

தெருக்கூத்து மற்றும் நவீன நாடக நடிகர்களுக்கான அங்கீகாரம் எப்படியிருக்கிறது? பல ஆண்டுகளாக நாடகத்துறையில் நடித்துக் கொண்டிருப்பவர்கள் அதிகமாக வெளியில் தெரியமாட்டார்கள், அதே நடிகர்கள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டால், அவர்கள் பரவலாக அறியப்படுகிறார்கள், பாராட்டப்படுகிறார்கள். இந்தப் போக்கினை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாடக நடிகர்களுக்கான பாராட்டுகள் மற்றும் அங்கீகாரம் என்பது நாடகம் சார்ந்து பயணிப்பவர்கள் மற்றும் நாடகத்தைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் மத்தியில் நன்றாகவே இருக்கிறது.

ஆனால் நாடகக் கலைஞர்களை சினிமா கலைஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்தவகையிலும் சரியாக இருக்காது. இந்த ஒப்பீடு என்பது ஒருவனைக் குதிரையிலும், ஒருவனை மிதிவண்டியிலும் ஏற்றி ஒரே ஓடுதளத்தில் இருவருக்கும் பந்தயம் வைப்பதுபோல் உள்ளது. சினிமா என்பது ஒரு நிமிடத்தில் பல லட்சக்கணக்கான மக்களைச் சென்றடையும் அளவிற்கு தொழில்நுட்ப சக்திகொண்ட ஒரு ஊடகம். ஆனால் நாடகம் ஒவ்வொருமுறையும் அதிகபட்சமாக இருநூறு அல்லது முந்நூறு பார்வையாளர்களைத்தான் சென்று சேரும்.


இவ்விரண்டும் வெவ்வேறு தளத்தில் இயங்கக்கூடிய கலைகள். ஆகவே இவ்விரண்டையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவது முட்டாள்தனமாகவே தோன்றுகிறது.

சினிமாவுடன் நாடகத்தை பொருளாதாரத்திலும் மக்களிடம் சென்றடைவதிலும் ஒப்பிடும்பொழுது மிகச்சிறிய பங்கே இருந்தாலும், நாடகத்தைச் செய்வதில் இருக்கிற உண்மைத்தன்மை, அதற்குள் இயங்குகிறபொழுது கிடைக்கிற மகிழ்ச்சி, என்னுடைய அனுபவத்தில், சினிமாவிற்குள் கூட கிடைக்கவில்லை.

நடிகர்களுக்குப் பயிற்சியளிப்பது மேலும் நடிப்பு, கதாபாத்திர உருவாக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வது போன்ற எண்ணம் எப்படி வந்தது?

சிறுவயதில் இதெற்கெல்லாம் படிப்பு இருக்கிறது என்பதே எனக்கு தெரியாது, அப்பொழுது நான் தெருக்கூத்தை கற்றுக் கொண்டு தாத்தாவைப் போலவே ஆட வேண்டும் என்ற நோக்கம் இருந்ததே தவிர நடிப்பு, ஆய்வு மற்றும் இது சம்மந்தமாக படிப்பது என எந்தவொரு சிந்தனையும் இல்லை, எல்லாம் படிப்படியாக தேடலின் மூலமாகவே நிகழ்ந்தது.

நான் பள்ளி கல்லூரிகளில் நன்றாகப் படிக்கும் மாணவன் அல்ல. 30 மாணவர்களில் 20வது இடத்தில் இருக்கக்கூடியவன். விளையாட்டுகளிலும், கலைகளிலும் முன்வரிசையில் இருப்பேன். ஆனால் பாடத்திட்டங்களைத் தவிர்த்து எனக்கு பிடித்த மற்ற துறைசார்ந்த புத்தகங்களை விரும்பி வாசிப்பேன். அப்படித்தான் உளவியல் துறை மீது எனக்கு ஆர்வம் வந்தது. இந்தத் தேடலின் மூலம்தான் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud), பிரீட்ரிக் நீட்சே (Friedrich Nietzsche) மற்றும் ஆல்பேர்ட் காம்யு (Albert Camus) போன்ற கோட்பாட்டாளர்கள் எனக்கு ஒரு மிகப்பெரிய ஈர்ப்பாக இருந்தார்கள்.


அதே சமயம் என்னுடை பெற்றோர்களும் பெரிதாக படிக்கவில்லை என்பதால், 12 ஆம் வகுப்பிற்கு பிறகு நான் என்ன படித்தேன் என்றே அவர்களுக்குத் தெரியாது. எனவே என்னுடைய மேற்படிப்பு சார்ந்து அவர்களுடைய விருப்பமும் கட்டாயமும் இல்லாத அந்த சுதந்திரம்தான் என்னை எனக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய்து படிக்க உதவியது, எனக்குப் பிடித்த முதுகலை நாடகத்தை படிக்க இளங்கலையில் ஏதோ ஒரு பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண் போதுமானதாக இருந்ததால் B.com எடுத்து படித்தேன், பிறகு நான் விரும்பிய நாடகத்துறைக்குள் நுழைந்தேன்.

நான் மேடைகளில் நடிக்கும் பொழுது மற்றவர்கள் நான் நன்றாக நடிக்கிறேன் என்று சொல்லும் பொழுதுதான், எனக்கு நடிப்பின் மீது ஒரு மிகப்பெரிய ஆர்வம் வந்து, அது சார்ந்த புத்தகங்கள் கோட்பாடுகள் என பயணிக்கத் தொடங்கினேன். அதனுடைய ஊக்கம்தான் இன்று நடிப்பு குறித்த ஆய்வில் வந்து நிற்கிறது.

சினிமா மீதான விருப்பம்?

நாடகங்களின் மீது ஈர்ப்பு இருப்பது போலவே, கல்லூரி படிக்கும் பொழுது சினிமா பார்ப்பதிலும் அதன் பின்னணியில் இருக்கும் இரகசியம் பற்றும் தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்வதிலும் ஒரு பெரிய ஆர்வம் இருந்தது, பாண்டிச்சேரி ஒரு சிறிய ஊராக இருப்பதால் எந்த இடத்தில் சினிமா படபிடிப்பு நடந்தாலும் அது எளிதாக எல்லோருக்கும் தெரிந்துவிடும், மேலும் பாண்டிச்சேரி Beach மற்றும் White Town-ல் அடிக்கடி படபிடிப்பு நடக்கும், கல்லூரிக்குப் போகாமல், ஒரு முழு நாள்கூட அந்த படப்பிடிப்பை சலிக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன், ஒருமுறை Life of Pi திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது, இதுவரை நான் பார்க்காத அளவிற்கு படப்பிடிப்புத் தளத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயந்திர உபகரணங்களும் இருந்ததைக் கண்டு வியந்தேன், எல்லோரும் வழக்கமாக கேட்பதைப்போல் நானும் அங்கு நின்று வேடிக்கை பார்த்தவர்களிடம் என்ன படம்? ஹீரோ யார்? என்று கேட்டேன். ஒருவர் என்னிடம் ”ஹீரோ யாருனு தெரியல பா, ஆனா வெளிநாட்டுப் படம்” என்றார், தொடர்ந்து மூன்று நாள் கல்லூரிக்குப் போகாமல் அந்த படப்பிடிப்பை ஏதோ ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒலி பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு தொழில் நுட்பக்கலைஞர் என்னை மூன்று நாட்களாக கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். மூன்றாவது நாள் மாலை நேரத்தில் தேநீர் இடைவேளையின் பொழுது கையில் இரண்டு தேநீர் கப்போடு என்னை நோக்கி தேநீரைச் சிந்தாமல் கொண்டு வந்து ஒரு கப்பை என்னிடம் கொடுத்தார். நான் உடனே பதட்டத்தோடு ’வேண்டாம்’ என்றேன். உடனே அவர் ’Hey! gentleman take it, it’s for you’ என்றார்.


நான் தயக்கத்தோடு வாங்கலாமா? வேண்டாமா? என நினைத்தேன், உடனே என் அருகில் வேடிக்கை பார்த்த ஒருவர் ”தம்பி வாங்கிக்கோ குடுக்கறாரு இல்ல” என்றதும் வாங்கிகொண்டு தேங்க்ஸ் என்றேன். பிறகு என்னைப் பற்றி விசாரித்தார், எதற்காக நாங்கள் போகும் இடமெல்லாம் வருகிறாய் என்று கேட்டார், நான் உடனே ’சும்மா பார்க்க’ என்றேன். அது என்னால் மறக்கமுடியாத ஒரு அனுபவம்.

பாண்டியில் அப்பொழுது முருகா தியேட்டர் மிகவும் பிரபலம். நண்பர்கள் ஒரு குழுவாக தொடர்ந்து அந்த தியேட்டருக்கு சென்று படம் பார்ப்போம். ஒரு மூன்று வருடத்திற்கு அந்த தியேட்டரில் வெளிவந்த ஒரு படத்தைக் கூட நாங்கள் பார்க்கத் தவறியதில்லை, தேர்வு நேரங்கள் தவிர்த்து ஒரு வெள்ளிக் கிழமைகூட கல்லூரிக்குச் சென்றதில்லை.

நான் முதுகலை நாடகம் படிக்கும் பொழுது எனக்குக் கிடைத்த சில நண்பர்கள் மிக முக்கியமாணவர்கள், என்னைப் போலவே நாடகம் மற்றும் சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களால் பல உலக சினிமா இயக்குனர்களைப் பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்ள முடிந்தது, எனக்கு அப்பொழுது பல நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், நிலப்பரப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக அந்த நாடுகளுக்குச் சுற்றி திரியவேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் அது நடக்காது என்பதால் நான் விரும்பும் நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்த்து அவைகளை தெரிந்துகொள்வேன். சினிமாவைப் பார்ப்பதன் வழியாகத்தான் நான் பல நாடுகளையே சுற்றி இருக்கிறேன்.

சினிமாவில் நுழைவதற்கான ஒரு வழியாக மட்டுமே நாடகத்துறை இருக்கிறதா? நாடகம் என்ற கலையின் மீதுள்ள ஆர்வத்தால் முழுவதுமாக அதில் மட்டுமே ஈடுபட நினைக்கிற இளைஞர்களின் வரத்து உள்ளதா?

முழுக்கவும் சினிமாவில் நுழைவதற்கான ஒரு வழியாக மட்டுமே நாடகத்துறையை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது, நான் மேலே குறிப்பிட்டதைப் போல ஆர்வத்தோடு பலர் நாடகத்தில் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகின்றனர்.

சமீபத்தில் நாடகத்துறையில் இருந்து வந்து சிலர் திரைத்துறையில் நடித்து பிரபலமானதால் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடும் பெரும்பாலானோர் கவனம் நாடகத்தின் பக்கம் திரும்பியது, வாய்ப்பு கேட்பதற்கு முன்பு நாடகத்தில் சிறிது காலம் இயங்கி அதை நடிப்பிற்கான ஒரு முன் அனுபவமாக வைத்துக்கொண்டு எளிதாக சினிமாவில் வாய்ப்பைப் பெற்றுவிட நாடகத்தைத் தேடி வருபவர்களும் உள்ளனர்.

அப்படியானால் நாடகப்பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு இப்பொழுதெல்லாம் எளிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறதா?

நாடகப் பின்னணியிலிருந்து வருகிற இளைஞர்கள் நல்ல உடல்தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு நடிப்பு சார்ந்த சில விடயங்களை மிக எளிதாகப் புரியவைக்க முடியும், ஒரு நடிகர் கதாபாத்திரத்தை எப்படி உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அவர்களுக்கு அனுபவம் இருக்கிற காரணத்தினால், நாடக நடிகர்கள் படப்பிடிப்புத் தளத்தில் பெரியளவில் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. அதுவே, புதிதாக சினிமாவில் நடிப்பதற்கு வருபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொள்ள அதிகம் சிரமப்படுகிறார்கள். எனவே, இயக்குனர்களே நாடக நடிகர்களுக்கு, சினிமாவில் நடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிற காரணத்தினால் இது போல நிகழலாம், ஆனால், மறு பக்கம் சில இயக்குனர்கள் நாடக நடிகர்கள் என்றாலே மிகைப்படுத்தி நடிப்பார்கள். அவர்களிடம் இயல்பான நடிப்பைப் பெறுவது சிரமம் என்றும் அவர்கள் ஒரு இயந்திரத்தைப் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள் என நாடகப் பின்னணியிலிருந்து வருபவர்களை தேர்வுசெய்யாமல் போவதும் நடக்கிறது.

This doctorate scholar in theatre arts is looking to change Tamil ...

நாடகப் பின்னணியிலிருந்து வருபவர்களிடம் எதார்த்தமான நடிப்பைப் பெறுவது கடினம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் நாடகப் பின்னணியிலிருந்து வருகிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை, தொடர்ந்து இந்த வாதம் என் காதில் படும்பொழுது சில வருடங்களுக்கு முன்னால் எனக்கும் இந்த கேள்விகள் குறித்து பல குழப்பங்களும் சந்தேகங்களும் இருந்தன. இவர்கள் நவீன நாடக நடிகர்களைச் சொல்கிறார்களா? அல்லது கூத்து கலைஞர்களைத்தான் அப்படிச் சொல்கிறார்களா? என்று குழம்பியிருக்கிறேன். இது குறித்து நான் மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல இயக்குனரால் ஒர் அளவிற்கு நடிப்பைப் பற்றிய புரிதலுடைய எந்த நடிகரிடமிருந்தும் அவருக்குத் தேவையான நடிப்பை வாங்கிக்கொள்ளமுடியும்.


ஆனால் நாடக நடிகர்களிடமிருந்து வேலைவாங்குவது கடினம் என சில இயக்குனர்கள் சொன்ன காரணங்கள் ’நான் நாடக நடிகர்களை நடிக்க வைக்கும் பொழுது அவர்கள் நாடகத்தில் நடிப்பதைப் போல உரக்கப் பேசுகிறார்கள் மேலும் மிகுதியாக நடிக்கிறார்கள்’ என்றும் குறையாகச் சொல்கின்றனர். ஒருவேளை வெகு சிலர் அப்படி இருக்கலாம். ஆனால் எல்லா நாடக நடிகர்களும் அப்படி இல்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் மேடைக்கும் கேமராவிற்கும் உள்ள வித்தியாசம் கண்டிப்பாக அவர்களுக்கும் தெரியும். ஒருவேளை சிலர் அப்படி இருந்தால் கூட அனுபவம் இல்லாதவர்களை நடிக்கவைக்கும்பொழுது. மிகுதியாக நடிக்கும் நாடக நடிகர்களைத் தேவையான அளவிற்கு நடிக்கவைப்பது சுலபம் என்றே தோன்றுகிறது. மேலும் என்னுடைய அனுபவத்தில் நாடகப் பின்னணியில் இருந்து வருபவர்கள் ஒரு சூழலை மிக எளிதாக Improvise செய்து கொடுப்பார்கள்.
அதே சமயம் நாடகப் பின்னணியிலிருந்து வரும் அனைவரும் நன்றாக நடிப்பார்கள் என்றும் மற்றவர்கள் நடிக்கமாட்டார்கள் என்பதும் அல்ல நிறை குறைகள் இரண்டிலும் இருக்கிறது.

நீங்கள் சினிமா மற்றும் நாடகம் என இரண்டிலும் உங்கள் பங்களிப்பைச் செலுத்துகிறீர்கள். மேடை மற்றும் கேமரா என இரண்டு தளத்திலும் வெவ்வேறு நடிப்பு முறைகளை கையாள்கிறீர்களா?

எனக்கு சினிமாவில் மிகப்பெரிய அனுபவம் ஏதும் இல்லை, ஆனால் நடிப்பு குறித்த ஆய்வின் பொழுது Acting for Stage and Acting for Camera என இவைகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் மற்றும் நுணுக்கங்களை ஆராய்ந்து அதைப் பின்பற்றி வருகிறேன்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் Stage and Camera என இரண்டிற்கும் வெவ்வேறு நடிப்பு முறைகளும், யுக்திகளும் உள்ளன. இங்கு இவ்விரண்டிற்கும் உள்ள நோக்கம் வேறு. அத்தோடு பார்வையாளர்களைச் சென்று அடையும் வழிமுறைகளும் வெவ்வேறாக உள்ளன.


தொழில் நுட்பத்தின் மூலம் உருவான கேமரா ஒரு நடிகனின் கண் விழிகளில் உள்ள உணர்வுகளைக் கூட கடத்திச் சென்று அரங்கத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் பார்வையாளனை அடைந்து அவனுக்கும் திரையில் இருக்கும் பாத்திரத்திற்கும் இடையே ஒரு நெருக்கமான உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வல்லமை கொண்டது, ஆனால் மேடையில் பார்வையாளனிடம் இந்த உணர்ச்சியைக் கொண்டுவர வேறு சில நுணுக்கங்களைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. நாடகத்திலும் சினிமாவிலும் பயணிக்கும் ஒரு நடிகன் முதலில் இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்பத் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு கதாபாத்திரம் உங்களுக்குக் கொடுக்கப்படுகிற பட்சத்தில், நடிகராக, அந்தக் கதாபாத்திரமாக நீங்கள் மாறுவதற்கு, மேற்கொள்ளக்கூடிய பயிற்சிகள் என்னென்ன?

கதாபாத்திர உருவாக்கம் என்ற தலைப்பில் நான் PhD ஆய்வு மேற்கொண்டிருப்பதால், அதைக் குறித்துக் கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன்.

அடிப்படையிலேயே, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்புலக் கதை இருக்கும். மேலும் Character and Character Does அதாவது பாத்திரத்தின் குணாதிசயம் மற்றும் அந்தக் குறிப்பிட்ட குணாதிசயங்களைக் கொண்ட பாத்திரம் செய்யும் வேலைகள் என பிரித்துக்கொள்ள வேண்டும். மேலும் இதைப் புரிந்து கொள்வதற்கு அந்த பாத்திரம் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தது? எந்த நிலத்தில் வசிக்கிறது? பொருளாதார நிலை? பாத்திரத்தின் சமூகம் சார்த்த புரிதல் என அந்தக் கதாபாத்திரத்தின் பின்புலத்தை அறிந்துகொள்ள வேண்டும்.


அந்த பாத்திரத்தைப் பற்றி தனியாகக் கதை ஆசிரியர் குறிப்பு கொடுக்கவில்லை என்றாலும் அந்தக் கதையை முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக நம்மால் அதில் இருக்கும் பாத்திரங்களின் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும், இவற்றை அந்த பாத்திரமாக நடிக்கப் போகும் நடிகன் தெரிந்துகொள்வது அடிப்படையான ஒன்று. இதன் மூலமாகவே அந்த நடிகன் அவன் ஏற்று நடிக்கும் பாத்திரத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும். இதன் உதவியால் அந்தக் கதாபாத்திரத்தின் நடை, பாவனை, செயல்கள் குணாதிசயங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டுவர முடியும். மேலும் எல்லா பாத்திரத்திற்கும் தான் செய்யும் செயல்கள் எண்ணங்களில் ஒரு குறிப்பிட்ட எல்லை இருக்கும் அதை ஒரு நடிகன் கடந்து நடித்துவிட்டால் அந்த பாத்திரம் அடிபட்டுப் போய்விடும்.

அந்த பாத்திரத்தை உள்வாங்கிக் கொள்ள சில பயிற்சிகளை செய்யலாம். உதாரணத்திற்கு, ஒரு விளையாட்டு வீரன் கதாபாத்திரம் என்றால், அந்த கதையில் அந்த பாத்திரம் என்ன செய்கிறது என்பதை மட்டும் நினைவுகூறுவதைத் தாண்டி அந்த நடிகன் பயிற்சியெடுக்கும் பொழுது அந்த பாத்திரத்தின் வீட்டில் தன்னுடைய அறை எப்படியிருக்கும், அந்த அறையில் அவன் என்னென்ன பொருட்களெல்லாம் வைத்திருப்பான்? என அந்த நடிகன்தான் தன்னை ஒரு கற்பனைச் சூழலுக்குள் இட்டுச்சென்று, அந்த பாத்திரத்தை முழுமைப்படுத்த வேண்டியுள்ளது. இந்த காட்சி கதையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, இதன் வாயிலாக ஒரு கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக வெளிக்கொண்டுவர முடியும். இப்படித்தான் நான் நடிக்கும் பாத்திரத்தை தயார்படுத்திக்கொள்வேன், பாத்திரத்திற்கு ஏற்றது போல சில சமயங்களில் வேறு சில பயிற்சிகளையும் மேற்கொள்வேன்.

சில சமயங்களில் கதை ஆசிரியர் கதையையோ அல்லது கதையில் வரும் பாத்திரங்களையோ தெளிவாக உருவாக்கத் தவறினால் நல்ல நடிகனாக இருந்தாலும் அவன் ஏற்கும் பாத்திரத்தைச் சிறப்பாக நடிக்க முடியாமல் போய்விடும்.

நடிப்பதற்கு படிப்பு, பயிற்சி தேவையா?

இயற்கையாகவே நடிப்பு என்பது எல்லோரிடமும் இருப்பதுதான். எனவே அதைப் பிறருக்கு புதிதாகக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் நடிப்பை வெளிப்படுத்த முடியாதபோது அதை வெளிக்கொணரவும் அவர்களுக்குப் புரியவைக்கவும் வேண்டியிருக்கிறது.

நடிப்பதற்கு படிக்கவேண்டும் என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை, ஆனால் நடிப்பு பற்றிய நுணுக்கங்கள், கதாபாத்திர மாற்றங்களின் பொழுது ஏற்படும் உடல் மற்றும் உளவியல் சார்ந்த இயக்கங்களைத் தெரிந்து கொள்ளவேண்டுமெனில் படிக்கலாம், மேலும் இதைத் தெரிந்துகொண்டால்தான் சிறப்பாக நடிக்கமுடியும் என்றும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம், இதன் மூலம் மற்றவர்களுக்கு எளிமையாக நடிக்க வைக்கவும் அவர்களுக்குப் புரியவைக்கவும் முடியும் அதுவும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்ற முடியாது, இது கிட்டத்தட்ட ஒரு உளவியல் மருத்துவரின் பணி போலத்தான் அவர் சந்திக்கும் ஒவ்வொருவரையும் அவர்களுடைய பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு கையாள்வது போல.

நடிப்பு என்பது மிகப்பெரிய சவால் என்று சொல்லிவிட முடியாது. அதேநேரம் எல்லோராலும் தனக்குள் இருக்கும் நடிப்பை மிக எளிமையாகவும் வெளிக்கொண்டு வரவும் முடிவதில்லை. நடிப்பின் நுட்பங்களை நம்மைச் சுற்றி உள்ள சமூகத்தையும் எளிமையானவர்களையும் உற்று நோக்குதலின் மூலமாகவே மிகச் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.

’பாரம்’ படத்தில் காஸ்டிங் டைரக்டராகவும் (Casting Director) பணியாற்றியிருக்கிறீர்கள். தமிழ்சினிமாவிற்கு இந்த காஸ்டிங் டைரக்டர் என்ற பதம் புதிது. அடிப்படையில் ஒரு காஸ்டிங் டைரக்டரின் பங்கு என்ன?

ஒரு படத்தில் நடிப்பதற்கான நடிகர்களைத் தேர்வு செய்யக்கூடிய பணியைச் செய்பவர்தான் காஸ்டிங் டைரக்டர் (Casting Director). மேற்கத்திய நாடுகளில் மிகப்பெரிய கமர்ஷியல் படமாக இருந்தாலும், கலைப்படமாக இருந்தாலும், காஸ்டிங் டைரக்டர்கள் பெரும்பாலும் அத்தியாவசியமானவர்களாக இருக்கிறார்கள். மேலும் நடிப்புப் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள், பாலிவுட்டில் கூட காஸ்டிங் டைரக்டர்களை நம்மால் பார்க்க முடியும்.

ஒரு படத்திற்கு நடிகர்களைத் தேர்வு செய்வதென்பது மிக முக்கியமான பணி. ஏனெனில் அது ஒரு வீடு கட்டுவதற்கு அடிக்கல் இடுவதுபோல எந்த சமரசமும் இன்றி மிகச் சரியான நடிகர்களை ஒரு திரைக்கதைக்கு தேர்வு செய்துவிட்டால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே 30% படம் முடிந்து விட்டதற்குச் சமம். ஒரு கதைக்குப் பொருந்தும் நடிகர்களைத் தேர்வு செய்வது உளவியல் மற்றும் வணிக நுட்பங்கள் சார்ந்தது.


அப்படியெனில், ஒரு திரைக்கதையாசிரியரைவிட, இயக்குனரை விட, காஸ்டிங் டைரக்டரால்தான் சரியான நடிகர்களைத் தேர்வு செய்யமுடியுமா?

அப்படியெல்லாம் இல்லை. ஒரு திரைக்கதை ஆசிரியரும், இயக்குனரும் கூட நல்ல காஸ்டிங் டைரக்டராக இருக்க முடியும், மேலும் சரியான காஸ்டிங் டைரக்டரை அணுகுவது சில நேரங்களில் கூடுதல் பயனும் அளிக்கலாம்.

இதற்கு முன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டுள்ளனர். சமீபத்தில் ஒரு கன்னட இயக்குனருடன் வேலை செய்கிற பொழுது, நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கையில், புதுவை பல்கலைக்கழகத்தில் ‘நடிப்பு மற்றும் கதாபாத்திர உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சி மாணவனாக’ இருக்கிறேன் என்று சொன்னேன். அவர் உடனே ஆச்சரியமாக இத்தனை வருடங்களாக நான் சினிமாத்துறையில் இருக்கிறேன். நடிப்பு மற்றும் கதாபாத்திர உருவாக்கம் சார்ந்து படிப்பது என்பது புதிதாக இருக்கிறது’ என்றார். பின்பு நான் அவரிடம், எழுத்தில் இருக்கிற கதாபாத்திரத்தை எப்படி ஒரு நடிகருக்குள் கொண்டுவருவது, ஒரு கதாபாத்திரத்தை உயிர்ப்பிப்பதில் உள்ள உடல் மற்றும் உளவியல் ரீதியிலான மாற்றம், இது பற்றிய பல பயிற்சி முறைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்தும் அவரிடம் சொன்னேன்.

அந்த இயக்குனர் என்னிடம், ”நான் ஒரு திரைக்கதை எழுதுகிறேன், அதை எழுதுகிறபொழுதே, இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்ற காட்சி என் மனதில் தோன்றுகிறது. அப்படியெனில், என்னைவிட நீ சரியாக நடிகர்களை தேர்வு செய்யமுடியுமா?” என்ற கேள்வியை முன்வைத்தார். அது மிக, சரியான கேள்வி. ஆனால் அதே நேரத்தில் தான் எழுதும் பொழுது காட்சிப்படுத்துவது வேறு, காட்சியில் வரும் பாத்திரங்களை திரைப்படத்திற்கு தேர்ந்தெடுப்பது என்பது முற்றிலும் வேறானது.

எழுதும்போது கற்பனையில் வந்த பாத்திரங்கள் மிகச் சரியாகவே நடித்து இருப்பார்கள். ஏனெனில் அவைகளை நடிக்க வைத்து இயக்கியது கதை ஆசிரியரின் கற்பனை. ஆனால் படப்பிடிப்பின் பொழுது அந்த பாத்திரங்கள் உண்மையாகவே நடிக்க வேண்டும். கேமராவின் முன் கதையில் உள்ள பாத்திரத்தை நடிகர்கள் கொண்டுவரவேண்டும், அந்த கற்பனை இங்கே பயனளிக்காது. எனவே இந்தப் புரிதல் தேவைப்படுகிறது, இதற்குச் சரியான ஒருவரை அணுகுவது தவறில்லையே!’ என்று சொன்னேன்.

மேலும் இயக்குனர்களும் சரியாக இந்த பணியைச் செய்யமுடியும் என்பதற்கு ஓர் உதாரணம், ஒரு கேமராவை ஆன் செய்து ஒரு காட்சியைப் பதிவு செய்யத்தெரிந்தால் மட்டுமே ஒருவரால் ஒளிப்பதிவாளாராக ஆகிவிடமுடியாது ஒரு சூழலைச் சரியாகப் பதிவு செய்யும் படைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவும் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் இவை அனைத்தையும் அறிந்து சில இயக்குனர்கள் ஒளிப்பதிவாளராகவும் இருக்கிறார்கள். அதுபோல் சில இயக்குனர்களும் மிகச் சரியாக நடிகர்களைத் தேர்வு செய்கின்றனர் என்றேன். அதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் நான் கூர்ந்து கவனித்ததில் நடிகர்களைத் தேர்வுசெய்வதில் இங்கு உள்ள ஒரு பெரிய சிக்கல் சிறியச்சிறிய பாத்திரங்களில் வரும் நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய கவனம் பல இயக்குனர்கள் செலுத்துவதில்லை. இதற்கு நேரம் போதாமை, தெரிந்தவர்கள், இரண்டு வசனம்தான் என பல காரணங்களைச் சொல்கின்றனர். ஆனால் இதில் சமரசமே இல்லாமல் அவர்களுக்கும் பெரிய பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் கொடுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வெண்டும் அப்பொழுதுதான் அந்த படம் நடிப்பில் முழுமை பெரும்.

மேலும் இங்கு காஸ்டிங் ஏஜெண்டுகள் (Casting Agents) செய்யும் பணிகளை காஸ்டிங் டைரக்டர் என்ற தவறான புரிதலும் உள்ளது. ஆனால் வாய்ப்புத் தேடி வரும் சில ஆர்வமுள்ள கலைஞர்களின் புகைப்படங்களைத் தொகுப்பாக வைத்துக்கொண்டு, இயக்குனர்களிடம், தயாரிப்பாளர்களிடம் அந்தப் புகைப்படத்தைக் காண்பித்து, அவரை படப்பிடிப்பிற்கு அழைத்துவருவது, இவர்களுடைய பணி,

பாரம் படத்தில் நீங்கள் இணைந்தது எப்படி? உங்களுக்கு இந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

இந்த வாய்ப்பு எனக்கு என்னுடைய பேராசிரியர் ராஜூ அவர்கள் மூலமாகத்தான் கிடைத்தது. நான் பாரம் திரைப்பட இயக்குனர் ப்ரியா கிருஷ்ணசாமியைச் சந்திப்பதற்கு முன்பே, பெங்களூரில் National School Of Drama வில் ஓராண்டிற்கான சிறப்பு நடிப்புப் பயிற்சி படித்தேன். அங்கு படிக்கும் பொழுதே, எனக்கு அங்குள்ள சில திரைப்பட இயக்குனர்களுடன் தொடர்பு இருந்தது. நான் NSD யில் படித்து முடித்தவுடனே, அங்கு கன்னடத்தில் இரண்டு படங்களில் நடிகர்களுக்கு பயிற்சியாளராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

Baaram Movie Review: Torn between being a moving tale and a ...

அப்போழுது புதுவை நாடகத்துறையின் புல முதன்மையாளராக இருந்தவர் பேராசிரியர் ராஜு.(பாரம் படத்தில் கருப்பசாமி பாத்திரத்தில் நடித்தவர்) அவர்கள் அந்த காலத்திலேயே நான்காவது மாணவராக தமிழ்நாட்டில் இருந்து டில்லி NSD யில் படித்தவர், ப்ரியா கிருஷ்ணசாமி, ராஜு அவர்களைச் சந்தித்து, ”நான் அடுத்து ஒரு படம் எடுக்கப் போகிறேன் அந்த படத்தில் நீங்கள் ஒரு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றும், மேலும் அதில் நடிகர்கள்தான் படத்தின் அடித்தளமாக இருக்கிறார்கள், ஏனெனில் இது உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்ட படம். எனவே மற்ற நடிகர்களைத் தேர்வு செய்ய உதவி கேட்ட பொழுது பேராசிரியர் ராஜு “சுகுமார் சண்முகம் என்ற என் மாணவர் இங்கு ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். அவர் சில கன்னட படத்தில் நடிகர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார். அவரும் கூட தமிழ்ப்படங்களில் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசுங்கள்’ என மறு நாள் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

பிறகு, இயக்குனர் என்னிடம் முழுக் கதையையும் சொன்னார். அதில் நடிப்பதற்கு 86 நடிகர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றார். உடனே வேலையைத் தொடங்கினோம். இப்படியாகத்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது.

’வீரா’ என்ற கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள். அந்தக் கதாபாத்திரத்திற்காக உங்களை எப்படித் தயார்படுத்திக் கொண்டீர்கள்?

நான் அந்த பாத்திரத்தில் நடித்ததே ஒரு விபத்தாக நடந்ததுதான். ஏனெனில் நான் முதலில் Casting Director ஆக மட்டுமே இருந்தேன், நடிகர்களைத் தேர்வுசெய்யும் பொழுது ’வீரா’ பாத்திரத்திற்கு பல நபர்களைச் சந்தித்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததுபோல் குணாதிசயங்களைக் கொண்டவர்கள் யாரும் கிடைக்கவில்லை, இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிலரை அழைத்துவந்து, இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினேன். ஆனால் அதுவும் சரியாக அமையவில்லை. படப்பிடிப்பு துவங்குவதற்கு இன்னும் பதினைந்து நாட்கள்தான் இருந்தன. அதற்குள் ஒருவரைக் கண்டுபிடித்து, அவரை வீரா கதாபாத்திரத்திற்குத் தயார்படுத்திவிட வேண்டும். வீராதான் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்று. அவர்தான், கதையை, முன்னகர்த்திச் செல்கிறார். எனவே, அந்தக் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருந்தோம்.

நடிகர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒருபக்கம், மறுபக்கம் வீரா கதாபாத்திரத்திற்கான தேடுதல் மும்மரமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் நானும் இயக்குனரும் இதுகுறித்து விவாதித்துக் கொண்டிருக்கிற பொழுது, ”இந்தக் கதாபாத்திரத்தில் நீயே நடிக்கலாமே!” என்று என்னைப் பார்த்துச் சொன்னார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகவே, ஒன்றாக பயணித்தோம், பின்னர் ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊர் மக்களைச் சந்தித்தல், அவர்களிடம் யதார்த்தமாகப் பேசி, அவர்களை நடிக்க வைப்பது என, இந்த கடந்த இரண்டு மாத காலத்தில், ஒருநாள் கூட, இந்தக் கதையில் நான் நடிக்கவேண்டும் என்று யோசித்ததில்லை.

என்னுடைய எண்ணமெல்லாம், நடிகர்களை நல்லமுறையில் தேர்ந்தெடுத்துத் தர வேண்டும். முதல்முறையாக ஒரு நல்ல கதைக்கு காஸ்டிங் செய்வதால், அதைச் சிறப்பாக செய்துமுடிக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பைக் கொண்டுவர வேண்டும் என்ற மனநிலையே என்னிடம் இருந்தது.

அடுத்து, வீரா கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் உள்ள பெரிய சிக்கல் வயது வித்தியாசம். கதையின்படி வீராவிற்கு, 45 வயது. ஆனால், நான் அதில் நடிக்கிறபொழுது, என்னுடைய தோற்றத்தின்படி 26 வயதுள்ள கதாபாத்திரமாக அதை மாற்றவேண்டியுள்ளது. இதுகுறித்து இயக்குனரிடம் கேட்கும் பொழுது. அவர் அதற்கேற்றபடி திரைக்கதையில் மாற்றங்கள் செய்துகொள்ளலாம் என்று நம்பிக்கையளித்தார். இப்படி, வீரா என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்தது எதிர்பாராமல் நடந்த ஒன்று.

நீங்கள் நடிகர்கள் தேர்வு குறித்து விரிவாக பேசுகிறீர்கள். தமிழ் சினிமாவில் சிறந்த காஸ்டிங் செய்யப்பட்ட திரைப்படம் என்றால் எதைச் சொல்வீர்கள்?

நூற்றுக் கணக்கான படங்கள் உள்ளன. அதில் நான், எனக்குப் பிடித்த சில படங்களைச் சொல்ல வேண்டும் என்றால். அமைதிப்படை, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, தண்ணீர் தண்ணீர், முதல் மரியாதை, அபூர்வ சகோதர்கள் மற்றும் தளபதி என அடிக்கிக்கொண்டே போகலாம், இதை நான் கமர்ஷியல், ஆர்ட் பிலிம் என்ற அடிப்படையில் பிரிக்கவில்லை. நீங்கள் என்ன படம் எடுத்தாலும், அதற்கு காஸ்டிங் மிக முக்கியம். திரையில் நடிகர்கள் கதாபாத்திரங்களாகப் பிரதிபலிக்க வேண்டும். பார்வையாளர்கள், ஒரு கதாபாத்திரத்தின் குணாதிசயங்களைப் பார்க்க வேண்டும்.

பாரம் படத்தில் நடித்த பிற கதாபாத்திரங்கள் குறித்துச் சொல்லுங்கள்…

இந்தப் படத்தில் நாடகத்துறையில் இருந்து கிட்டத்தட்ட 12 பேர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கருப்பசாமியாக நடித்த பேராசிரியர் ராஜு தமிழ் நவீன நாடக அரங்கில் மிக முக்கியமானர். இன்று தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் பல நாடகக் கலைஞர்களுக்கு ஆசிரியர். மேலும் மென்மொழி பாத்திரத்தில் நடித்த ஜெயலட்சுமி அவர்களுக்கு 30 வருடங்களுக்கு மேலாக நாடகத்துறையில் அனுபவம் உள்ளது, பல முறை ஜெயலட்சுமி அம்மாவின் நடிப்பை நாடகத்தில் பார்த்து எனக்குள் நடிப்பின் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது அந்த அளவிற்கு ஓர் எதார்த்தம், முருகனாக நடித்த சமணராஜா, செந்திலாக நடித்த சு.ப முத்துகுமார், மணியாக நடித்த பிரேம், மூர்த்தியாக நடித்த அருணகிரி, மீனாவாக நடித்த நந்தினி மற்றும் ஸ்டெல்லா என மிகமுக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிற எல்லோரும் குறைந்தது 10 வருடங்களாக நாடகத்துறையில் பயணிப்பவர்கள்.தமிழ்ப்படங்களுக்கு அதிகமான தேசிய விருதுகள் கிடைக்காதது குறித்து?

சமீப காலமாகவே, தமிழ் படங்களுக்கு விருதுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது உண்மைதான். அதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் சொல்லமுடியும். விருதுகள் மட்டுமே நல்லப் படங்களை நிர்ணயிப்பது இல்லை.

அடுத்தகட்ட பயணம்?

ஒரு நல்ல நடிப்புப் பயிற்சியாளராக வர வேண்டும், ஒரு படத்திற்கு சரியான காஸ்டிங்கை செய்யும் பொழுது பார்வையாளர்களுக்கு அந்தப் படம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்த வேண்டும் என விரும்புகிறேன், அதுசார்ந்த ஆய்வுகளையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். தற்போதைக்கு Indian Foundation for Arts என்ற NGO வின் நிதி உதவியால் ”திரை விருத்தம்” (தெருக்கூத்துக்குள் எப்படி ஒரு கதாபாத்திரம் உருமாற்றம் அடைகிறது) என்ற ஒரு ஆவணப் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன்.

இந்த ஆவணப்படம் காதாப்பாத்திர உருவாக்கம் குறித்த ஒரு விரிவான புரிதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன், மேலும் இரண்டு தமிழ் படம் மற்றும் ஒரு கன்னட படத்திற்கு காஸ்டிங் டைரக்டர், நடிப்புப் பயிற்சியாளர் மற்றும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டும் இருக்கிறேன். தொடர்ந்து என்னுடைய நாடகங்களையும் மேடையேற்றம் செய்துகொண்டிருக்கிறேன், நான் நடித்த மற்றொரு படம் வெளிவர இருக்கிறது. பல திறைமைவாய்ந்த கலைஞர்களை அறிமுகம் செய்யவேண்டும், வாய்ப்பு கிடைத்தால் மேலும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

சந்திப்பு: தினேஷ் – பிரகாஷ்