பிரபஞ்ச அன்பின் மறுபக்கம் - குருதிப்புனல்

-தி. குலசேகர்

இந்த திரைப்படம் வெளியாகி இருந்த தருணத்தில் தான் தூத்துக்குடி ஸ்பிக் உரத்தொழிற்சாலை பணியை ராஜினாமா செய்து விட்டு, சென்னை வந்து இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சேர்ந்திருந்தேன். அவரோடு சேர்ந்து புரஜக்சனில் பார்த்த முதல் படமும் இது தான். அப்போது அவர் இரண்டு கருத்துகளை குறிப்பிட்டார். அது பற்றி இதன் இறுதியில் பார்க்கலாம்.

இதன் தலைப்பே ஒரு கவிதை. நதி என்றால் புனல் என்பது பலருக்கும் அதற்கு முன் தெரிந்திருக்காது என்றே தோன்றுகிறது. நம்முடைய மானுட பாதைகளில் எவ்வளவோ ரத்த சரித்திரங்கள் நீங்க கரைகளை தொடர்ந்து பதித்தவண்ணம் தான் இருக்கின்றன. அப்படியான வன்முறை அத்தியாயங்களின் ஒரு பகுதியே இதன் பின்புலம்.

இதன் கதை கோவிந்த நிகாலினி. திரைக்கதை, வசனம் கமல்ஹாசன். ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் பி.சி. ஸ்ரீராம். கமல், நாசர், கே.விஸ்வநாத், கௌதமி, கீதா, சுபலேகா சுதாகர், அனுசா மற்றும் ஸ்ரீராமின் உதவியாளரான அரவிந்த் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இதில் ஆதி என்கிற சி.பி-சி.ஐ.டி அதிகாரியாக கமலும், அப்பாஸ் என்கிற கதாபாத்திரத்தில் அர்ஜுனும் நடித்திருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் பத்ரி என்கிற தீவிரவாதியின் குரூப் பற்றி சில தகவல்கள் தெரிய வருகிறது. உடனே அவர்கள் தங்களுடைய உயரதிகாரி டி.ஐ.ஜி உட்பட யாருக்குமே தெரியாமல், ரகசியமாக இரண்டு பேரை அந்த தீவிரவாத குழுக்களுக்குள் தீவிரவாதிகளாக ஊடுருவி, பின் படிப்படியாக வயர்லெசில் தகவல் அனுப்ப வேண்டுமென்பது ஏற்பாடு. இந்த திட்டத்திற்கான பெயர் ஆபரேசன் தனுஷ்.

Kuruthipunal (1995)

இந்த சமயத்தில் தீவிரவாத கும்பலை சேர்ந்த முக்கியமான நபர் ரயில் நிலையத்தில் இருந்து வருவதாக தகவல் வருகிறது. அங்கே அப்போது ஆதி, அப்பாஸ் குழு மாறுவேடத்தில் மையமிடுகிறது. சந்தேகப்படுகிற விதத்தில் தோன்றுகிற காரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்படுவதில், கார் டிரைவர் மட்டும் பிடிபடுகிறார்.

அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஒருவர் அவசரஅவசரமாக தமிழகம் வருகிறபோது ராக்கெட் லாஞ்ச்சர் தாக்குதலுக்கு பலியாகிறார். ஆனாலும், ஆதி அந்த லாஞ்ச்சர் ஆபரேட் செய்த அஜய் ரத்தினத்தை காலில் சுட்டு பிடித்து விடுகிறார். அவனிடம் கார் டிரைவரின் படத்தை காட்டுகிறபோது இவர் தான் பத்ரி என்கிறான். ஆதிக்கு அதிர்ச்சி.

பத்ரியை சந்திக்கும் ஆதி அவரை படிப்படியாக தர்ட் டிகிரி ட்ரீட்மெண்ட் நோக்கி நகர்த்தி, வழிக்கு கொண்டு வர பார்க்கையில், ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு.. அதனால, நீயும் உண்மையை சொல்லுவ.. மெல்லமெல்ல சொல்லுவ.. சொல்ல வைப்பேன்.. என்பார்.  

இதற்கிடையே அஜய் நஞ்சு கலந்த தண்ணீர் குடிக்க மரணிக்கிறார். அதற்கு காரணம் இன்ஸ்பெக்டர் அளவில் ஒருவர் காவல் துறைக்குள் பத்ரிக்கு விசுவாசமான இன்ஃபார்மராக இருந்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் செய்த கைங்கர்யம் தான் அது. 

ஆதி தனியிடத்திற்கு பத்ரியை அழைத்துக்கொண்டு போய் என்கவ்ண்ட்டர் செய்ய யத்தனிக்கிறார். அப்போது பத்ரி சொல்கிற வசனம் கூர்மையானது.‘பாத்தியா.. கோவம் எப்பிடி வருதுன்னு.. வன்முறை கோழைத்தனமான ஆயுதம்னு சொல்லிட்டிருந்த நீயே, நாம நெனக்கிறது நடக்கலேன்னதும், வன்முறையை கையில எடுத்துக்க நெனச்சுட்ட பாத்தியா.. இப்படித்தான் நாங்களும் வன்முறையை கையில எடுத்திருக்கோம்.. என்பார். உடனே சட்டப்படியே உன்னை தண்டிக்க வைப்பேன் என்று சொல்லி, திரும்ப அழைத்துச் சென்று விடுவார்.

மகாபாரதத்தின் தாக்கம் கல்கி பொன்னியின் செல்வனில் அப்பட்டமாக இருக்கும். அதில் திருதராட்டினனுக்கு பார்வை இல்லாததால் அரச பதவி பறிபோகும். அதனைத் தொடர்ந்து அவரின் அங்க ஈனம் இல்லாத துரியோதனனிடம் பதவியை தர பாண்டவர்களுக்கு மனம் வருவதில்லை. அதனாலேயே வன்மம் வளர்ந்து, யுத்தம் வருகிறது. அப்படித்தான், பொன்னியின் செல்வனில் அண்ணன் அரச பதவியை விட்டுவிட்டு துறவு மேற்கொள்வதால், அவரின் தமையன் சுந்தர சோழன் பதவிக்கு வருகிறார். இருந்தாலும், அடுத்த தலைமுறையில் அண்ணன் மனைவி செம்பியன் மாதேவிக்கோ, மகன் மதுராந்தகனுக்கோ அரசாளும் பதவியை மன்னராட்சி மரபுப்படி வழங்கவில்லை. இதனாலேயே இங்கே பொன்னியின் செல்வனிலும் யுத்தம் உண்டாகிறது. யுத்தங்கள் இப்படியாக உலகமெங்கும் ஒரே மாதிரி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அன்பை போதிப்பதாக சொல்லும் மதங்களினாலேயே உலகில் ஆயிரக்கணக்கான யுத்தங்கள் நடத்தப்பட்டு, ரத்தம் சிந்தப்பட்டிருக்கின்றன. மதங்கள் அன்பின் மறுபக்கத்தில் வன்முறை என்றே சங்கேத பாசையில் எழுதி வைத்திருக்கிறது.

இப்படியாக இரண்டு பக்கங்களிலும் யார் நல்லவர்? யார் கெட்டவர்? இவர் எவ்வளவு நல்லவர்.. எவ்வளவு கெட்டவர்? அவர் எவ்வளவு நல்லவர்.. எவ்வளவு கெட்டவர்? இவர் எத்தனை சதவீதம் நல்லவர் கெட்டவர்? அவர் எத்தனை சதவீதம் கெட்டவர் நல்லவர்? இவரின் பயம் எந்த அளவு? அவரின் பயம் எந்த அளவு? என்று பலவிதமான கேள்விகளை கேட்காமல் கேட்கிறது இதன் திரைக்கதை.

ஆபரேசன் தனுஷ் வயர்லெசில் ஆபரேசன் தனுஷ் என்று குறிப்பிட்டு விட்டு, கமலிடம் ஒரு தகவலை சொல்கிறார். சின்ன சுவாமிஜி என்கிற நபர் தான் பத்ரியின் டெரரிஸ்ட் குழுவிற்கு முக்கியமான அரசாங்க தகவல்களை கசிய விடுகிற இன்ஃபார்மர் என்கிறது அந்த சேதி. சின்ன சுவாமிஜி அது ஒரு ரகசிய சங்கேத அடைமொழி.

இதற்கிடையே பத்ரிக்கு பென்டதால் கொடுத்து மனதில் புதைந்திருக்கும் ரகசியங்களை வெளிக்கொணர ஆதி முற்படுகிறார். அப்போது பத்ரி, சீனிவாஸ் பத்திரம் என்கிறார். ஆதிக்கு ஒரு நொடி அடிவயிற்றில் திக்கென்று ஒரு உணர்வு வந்து செல்கிறது. சீனிவாஸ் ஆதியின் எட்டு வயது மகன்.

மறுநாளை ஆதியின் மகன் நீச்சல் குளத்தில் டைவிங் போர்ட் மீது நின்று குதிக்கப்போகையில், அவனின் காலுக்கு கீழாக டைவிங் போர்டில் யாரோ ஸ்னைப்பர் ஷாட்டில் சுட, அவர் அலறியபடி தண்ணீருக்குள் விழுகிறான்.
பத்ரியை சந்திக்கிறபோது, பத்ரியின் முகத்தில்,‘எல்லாருக்கும் ஒரு பிரேக்கிங் பாய்ண்ட் இருக்கு..’ என்கிறவனின் உதட்டில், ஒருவித அசட்டு புன்னகை இழையோடுகிறது.

ஆதி டி.ஐ.சி-யை சந்தித்து, ‘எதுக்காக இதெல்லாம் பண்ணுனீங்க சார்.. என் பையனுக்கு கூட உங்க பெயரைத் தானெ வச்சிருக்கேன்… சி.பி.ஐ இந்த வீட்டை சுத்தி ரவுண்ட் அப் பண்ணியிருக்காங்க..’என்று சொல்லி ஆதங்கப்படுகிறான். ‘பணத்துக்காக இதை நான் செய்யல ஆதி..’ என்கிறவர், தன் மனைவியிடம் ஆதிக்கு குடிக்க ஏதாவது தரச்சொல்லி விட்டு, படுக்கை அறைக்கு சென்று தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார்.

முதன்முதலில் பயம் என்பதை ஆதி உணர ஆரம்பிக்கிறான். பத்ரி அவனை இப்போது கையாளத் துவங்குகிறான். நீ உன் குடும்பம் உயிரோடு சௌக்யமாக இருக்க விரும்பினால், நாளை ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள். என்னை கோர்ட்டிற்கு பத்ரியின் இன்ஃபார்மராக இருக்கிற இன்ஸ்பெக்டர் தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொல்கிறான்.

Image may contain: 1 person, sitting and indoor

அது மாதிரியே நடக்கிறது. பத்ரி தப்பிக்கிறான். அந்த நேரத்தில் எதிர்பாராதது ஒன்றும் நடக்கிறது. தன்னுடைய இன்ஃபார்மராக இருந்த இன்ஸ்பெக்டரை பத்ரியே சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்து காட்டிற்குள் தப்பிச் செல்கிறான்.

அப்பாஸ் ஆதியிடம் இத்தனை கவனப்பிசகாக அவனிருந்து, தான் இதுவரை பார்த்திருக்கவில்லை என்று தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்துகிறான். ஆதி எப்படியோ பூசி மெழுகி சமாளிக்கிறார்.

இப்போது பத்ரியின் சின்ன சுவாமிஜியாக ஆதி மாறிப்போக வேண்டிய பின்னடைவு. அவருக்கும் உடனே என்ன செய்வதென்று தோன்றுவதில்லை. பத்ரி சொல்கிறதையெல்லாம் கேட்கிற கைப்பாவையாக அந்த சூழ்நிலையில் மாறுகிறான். அனுசா, சுதாகர் என்று இரண்டு பேர் விருந்தாளிகளாக உன் வீட்டுக்கு வந்து உன்னை கண்காணிப்பார்கள். நீ விசுவாசமாக இருப்பது தெரிந்ததும், அவர்கள் திரும்பி விடுவார்கள் என்கிறான். அதற்கும் ஆதி சம்மதிப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

பத்ரியை சந்திக்க ஆதி செல்கிறான். அப்போது ஆதிக்கே தெரியாமல், அவனை அப்பாஸ் பின்தொடர்கிறான். அப்போது பின்னால் வந்த தீவிரவாதிகளின் காரில் நான்கு பேர் இருக்கிறார்கள். இரண்டு பேரை அப்பாஸ் காலி செய்கிறான். மூன்றாவதாக இருந்தது தனுஷ். அதனால் ஒரு நொடி தயங்க, அதற்குள் மற்றொரு நபர் பின்னால் இருந்து அப்பாஸ் தலையில் அடிக்க, நிலைகுலைகிறார்.

பத்ரி சேரில் கட்டி வைத்திருக்கும் அப்பாஸிடம் தனுஷ் என்பது யார் என்று கேட்கிறான். அப்பாஸ் தான் தான் தனுஷ் என்று சொல்ல, ஆதியை கண்களை கட்டி அங்கிருந்து வெளியேற வைத்து விட்டு, அப்பாஸை கொலை செய்கிறான்.

அப்பாஸின் மனைவியும், வயதுக்கு வந்த மகளும் ஆறுதலுக்காக அங்கே வந்து தங்கி இருக்கிறார்கள். 

இதற்கிடையே கடந்த சில வருட விசுவாதத்தின் நீட்சியாக பத்ரி குழுவில் தனுஷ் மூன்றாவது இடத்திற்கு நகர்ந்து விட்டிருக்கிறான்.

ஆபரேசன் தனுஷிற்காக அனுப்பப்படுகிற இரண்டு ரகசிய அதிகாரிகளில் ஒருவர், ஆதிக்கு தகவல் சொல்வதற்காக ரகசிய இடத்தில் வைத்திருக்கிற வயர்லெஸ் கருவியை எடுக்கப்போகையில், பத்ரியின் வலக்கரம் நம்பர் 2- விடம் மாட்டிக் கொள்ள, சயனைட் குப்பியை மென்று மரித்துப் போகிறான். நரசிம்மன் உடனே அந்த வயர்லெஸ் கருவியை உடைத்து சேதப்படுத்தி விடுகிறான். உடனிருக்கும் தனுசும் நரசிம்மனுக்கு உதவுகிறான்.

அதன் பிற்பாடு வேறு விதத்தில், தனுஷிடமிருந்து வயர்லெசில் ஒரு தகவல். அந்த தீவிரவாத கும்பலில் பத்ரிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிற நரசிம்மன் தன்னுடைய மனைவியை சந்திப்பதற்காக, ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள டென்ட் திரையரங்கிற்கு வர இருப்பதாக துப்பு கொடுக்கிறான். 

அங்கே செல்கிற ஆதி அவனை திரைக்கு பின்னால் கைகழுவிக் கொண்டிருக்கையில் சுடுகிறான். காட்சியிலும் யாரோ ஒருவன் சுடப்பட்டு விழ, அவனோடு சேர்ந்து நரசிம்மனும் அப்படியே சரிகிறான்.

விருந்தாளியாக வந்திருந்த சுதாகர் தனியாக இருக்கிற அப்பாஸ் மகளிடம் தவறாக நடக்க யத்தனிக்க, அவளை காப்பாற்றும் நிமித்தம், ஆதியின் மனைவி தன்னை தருவதாக சொல்லி தனியாக அழைத்துப்போய், அவனின் பலகீனமான தருணத்தில், அருகே டிராயரில் இருந்த துப்பாக்கி எடுத்து சுட்டுவிடுகிறாள். உடன் வந்திருந்த அனுசாவிற்கும் அந்த விசயத்தை பொறுத்தமட்டில் எந்தவித ஆட்சேபணையும் இருக்கவில்லை.

ஆதி, பத்ரி மறுபடி சந்திக்கிறார்கள். பத்ரி ஆதியிடம் தன் சந்தேகத்தை கேட்கிறான். இங்கே இருந்து இப்போதும் தகவல் கசிகிறது. யார் அந்த தனுஷ். அப்பாஸ் அல்ல அது.. வயர்லெஸ் கருவிகளை அழித்தாகியும் எப்படி தகவல் கசிய முடியும் என்று ஆதியை பார்க்க, அந்த நேரத்தில் கணத்திற்கும் குறைவான கணத்தில் ஆதியின் பார்வை தனுஷை பார்த்து திரும்ப, அதை கவனித்து விடும் பத்ரிக்கு தனுஷ் யார் என்று தெரிந்து விட, உடனே அவனை சுட முற்பட, அதற்குள் ஆதி பத்ரி மீது பாய்ந்து தாக்கியவன், அருகில் கிடந்த ஸ்குரு ட்ரைவரை எடுத்து பத்ரியின் கழுத்தில் இறக்கி விடுகிறான்.

அறை பூட்டி இருக்கிறது. வெளியிலிருந்து மற்ற நபர்களின் சத்தம் கேட்கிறது. அதற்கிடையே, குற்றுயிரும்கொலையுயிருமாக இருக்கிற ஆதி மெதுவாக தனுஷிற்கு உத்தரவிடுகிறார். ‘என்னை கொன்று விடு.. நீ இப்போது இந்த குழுவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறாய். பத்ரி இறந்து விட்டதால், நீ தலைமைக்கு வந்து விடலாம். பிற்பாடு ஒட்டுமொத்த குழுவையும் நாம் திட்டமிட்டபடி உன்னால் மடக்கி பிடித்து விட முடியும்’ என்கிறார். ஒரு நொடி தயங்கும் தனுஷ், சூழ்நிலையை புரிந்து கொண்டு தன் கையில் இருக்கிற இயந்திர துப்பாக்கியை எடுத்து, ஆதியை சுட்டு வீழ்த்துகிறான். கதவை திறந்து விடுகிறான். தனுஷ் இப்போது அந்த குழுவினரால் தலைவனாக தேர்ந்தெடுக்கப்படுகிறான்.

இந்த இடத்தில் சின்னதாய் தீவிரவாத குழுக்கள் எப்படி உருவெடுக்கின்றன என்பதை பார்த்து விடலாம். இந்த சமூகத்தில் எண்ணிலடங்காத ஏற்றத்தாழ்வுகள். சொல்லித் தருவது ஒன்று.. நடப்பது வேறொன்று. படித்த படிப்பிற்கு நியாயமான வேலை கிடைக்காதபோது சமூகத்தின் மீதும், அரசு அதிகார மையங்களின் மீதும் இளைய சமுதாயம் கோபத்தோடு தன்னின் முதல் கேள்வியை வைக்கிறது.

ஆதாரத்தேவைகளோடு வாழ ஒரு அரசு ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆவன செய்யாதபோது, ஒட்டுமொத்த மக்களுக்குள்ளும் அந்த கேள்வி ஆவேசத்தோடு எழவே செய்கிறது. அந்த கேள்வியின் உக்கிரம் அதிதீவிரமடைந்து, கோபமாக மாறுகிறபோது தீவிரவாத குழுக்கள் அதன் எதிர்வினையாக, கலகக்குரலாக உருவெடுக்கின்றன. பெரும்பாலும் அனைவரின் ஆதார தேவைகளுக்காகவும், சுதந்திரமாக செயல்படுவதற்காகவும், பேச்சுரிமைக்காகவுமே அது குரல் கொடுக்க நினைத்து துவக்கம் கொள்கிறது.

ஒவ்வொரு தீவிரவாத குழுக்களும் தனக்கான குழுவை பல வட்டங்களாக விரிவு படுத்திக்கொண்டே செல்லும். ஆனால், ஒரு வட்டத்திற்கும், இன்னொரு வட்டத்திற்கும் இடையே நேரடி தொடர்பு இருக்காது. அந்த துவக்க வட்டத்திற்குள் ஒருவரை கொண்டு வருவதற்கே ஒரு தீவிரவாத குழு சில வருடங்கள் அவர்களின் விசுவாசத்தை பரிசோதிக்கும். அவர்கள் தருகிற பணிகளை கேள்வி கேட்காமல், தருகிற பணத்தை பெற்றுக்கொண்டு நிறைவேற்றுகிறவர்களை நாளடைவில் தங்களின் ஏதாவது ஒரு தரவட்டத்திற்குள் இணைத்துக் கொள்கிறது. இப்படியாகவே ஒவ்வொரு தீவிரவாத குழுவும் தன்னை விரிவு படுத்துகிறது. ஆனாலும், அது மாட்டிக்கொள்ளாதபடி தங்களுடைய வட்டங்களை சிலீப்பர் செல்களாக துண்டுதுண்டுகளாகவே கோர்க்கின்றன.

உலகின் உண்மையான மீட்பர்கள் என்றால் அது காரல் மார்க்ஸ் மற்றும் சிக்மண்ட் ஃபிராய்ட் என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். ஒருவர் அனைவருக்குமான அடிப்படை தேவை, மற்றொருவர் இயற்கையின் வம்சாவிருத்தி கோட்பாடாகிற சுதந்திரமான காமம் பற்றிய ஞானங்களை கண்டடைந்து மக்களுக்கு அளித்திருப்பவர்கள்.

24 Years of Kurudhipunal:- Cinema express

நிலவுடமை பிரபுத்துவம், முதலாளித்துவம் போன்ற மக்களை நசுக்கும் சமூக அமைப்பு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பொதுவுடமை சித்தாந்தம் வெற்றி கண்ட சீனா, ரஷ்யா, கொரியா போன்ற பெரிய நாடுகளில் கூட, அதை பின்பற்றிய தலைவர்களின் மிதமிஞ்சிய கட்டுப்பாடு ஒரு பக்கம் அதன் அடர்வை நீர்த்துப்போக வைக்கிறது. இப்படியான நிகழ்வினாலேயே சே கியூபாவை விட்டு ஒரு கட்டத்தில் வெளியேற நேர்கிறது என்று ஒரு கருத்து உண்டு. அதிகாரத்தில் இருக்கிற போது, கடைப்பிடித்து வந்த சித்தாங்களை அட்சரம் பிசகாமல் கடைப்பிடிப்பது என்பதில் நிறையவே நடைமுறை சிக்கல்கள் இருக்கும் தான். இப்படியாக இஸங்களாக நேர்த்தியாக இருக்கிற விசயங்களும், நடைமுறை படுத்துகிறபோது, பல விதங்களில் சற்றே வளைந்து போக நேர்கிறது. அதன் விளைவாக ஏகாதிபத்தியம் இருக்கிற இடங்களில் இருக்கிற அளவிற்கு இல்லாவிட்டாலும், அங்கேயும் வன்முறைகள் வெடிக்காமல் இல்லை.

மொத்தத்தில் மக்களின் அடிப்படை தேவை மற்றும் சுதந்திரமான வாழ்க்கைக்கு தேவையான காதல், நிறைவான காமம் என்கிற இரண்டு விசயங்களும் பூர்த்தி செய்யப்படாத இடங்களில் எல்லாம் வன்முறை வெடித்தபடியே தான் இருக்கிறது.

மேலும், அதிகாரவர்க்கத்தின் போட்டிமயம், முதலில் யார் வருவது என்கிற அவர்களுக்குள்ளான போட்டி வன்முறைகளின் உச்சம் தொட்டு, உலக யுத்தம் வரை செல்கிறது. அப்போதைக்கு அப்போது யுத்தம் நிறுத்தப்படுவது, அப்போதைக்கு அப்போது அடங்கும் எரிமலையாகவே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மறுபடி வெடித்து கிளம்ப கூடிய நிலையிலேயே இருக்கிறது. காரணம், அதற்கான தீர்வை அது எட்டியாக வேண்டியிருக்கிறது என்பது குறித்து நினைப்பதே இல்லை. 

அதற்கு மானுடம் பிரபஞ்ச பேரன்பாகிற மனிதத்தின் ஒத்திசைவோடு இயற்கையை நேசிக்கிற, சுயநலமற்ற, சௌகர்யத்தை விட மகிழ்ச்சியை கொண்டாடுகிற சமுதாயமாக பரிமளிக்க வேண்டியிருக்கிறது.

அது நிகழாதது வரை இங்கே வன்முறைகள் ஏதாவது ஒரு ரூபத்தில் வெடித்துக்கொண்டே தான் இருக்கும் என்பதையே குருதிப்புனல் திரைக்கதையின் இறுதி காட்சி கோடி காட்டியபடி நிறைகிறது.

ஆதி, அப்பாஸ் தியாகங்களுக்கு அவர்களின் மனைவிமார்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆதி, அப்பாஸ் சமாதிகளுக்கு சென்று விட்டு அவர்களின் குடும்பத்தார் திரும்புகிறபோது, தீவிரவாத கும்பலில் நம்பர் டூவாக இருந்து திரையரங்கில் மரித்துப்போன நரசிம்மனின் மகன் மறைந்திருந்து ஆதியின் மகன் சீனிவாஸ் மீது கல்லெறிந்து விட்டு ஓடுகிறான். இவனும் அவனை பதிலுக்கு தாக்குவதற்காக துரத்துகிறான். அதற்குள் அவன் மதில் சுவர் தாண்டி தப்பித்து விடுகிறான். ஆக, வன்முறை என்பது அதன் வேர்க்காரணியை அறிந்து அதனை போக்காத வரை அதுவொரு தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே தானிருக்கும் என்கிற கசப்பான உண்மையை வேதனையோடு பதிவு செய்வதோடு இந்த திரைப்படம் நிறைவடைகிறது.

இது தொழில் நுட்ப ரீதியில் நேர்த்தியாகவும், அதேசமயம் அசகாய சூரத்தனம் காட்டாத யதார்த்தத்தன்மையோடும் உருவாக்கப்பட்டிருந்தது இதன் தனிச்சிறப்பு. இந்த படம் வெளிவந்த அதேநாளில் சுமாரான படமாக முத்து படமும் வெளியாகி இருந்தது. முத்து மிகப்பெரிய வெற்றி. ஆட்டம், பாட்டம், ரகளை, இசைப்புயலின் இசை என்று அந்த சுமாரான படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. தரமாக, ஆழமான படைப்பான குருதிப்புனல் சுமாரான வெற்றியையே பெற முடிந்தது. இது தான் சமூக முரண். பார்வையாளர்கள் முன் நிற்கிற பெருங்கேள்வி. இந்த கேள்விக்கு மக்கள் பதில் தேடி கண்டடைகிறபோது கலையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயமுமே மறுமலர்ச்சி கொண்டு மகிழ்ச்சியில் நிறையும்.

அந்த விடாத நம்பிக்கையோடு தான் தரமான, கலாப்பூர்வமான, யதார்த்தமான, சுவாரஸ்யமான கலைப்படைப்புகளை எடுக்கிறவர்கள் தங்களின் முயற்சிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் வசனம் துல்லியமாக, உயிர்ப்போடு வெளிப்பட்டிருக்கும். காதல் காட்சிகளில் கூட. ஒரு காட்சியில் ஆதி தன் மனைவிக்கு முத்தம் கொடுக்க போகிறபோது, அவனின் மகன் வந்து விடுவான். உடனே மனைவி வெட்கப்பட்டுக்கொண்டே, ‘விடுங்க.. பிள்ள தப்பா நெனச்சுக்க போறான்’ என்பாள். ‘இதில என்ன வெட்கம். அப்பா, அம்மாவுக்கு அன்பா முத்தம் குடுக்கறாருன்னு நெனச்சிக்க போறான். நாம மறைச்சா தான் அது ஆபாசமோனு தோண ஆரம்பிக்கும்.. அதுக்கு நாமளே இதுஇது இப்படித்தான்டான்னு யதார்த்தத்தை கத்துக்குடுக்கறது நல்லதில்லையா’ என்பான். அது போகிற போக்கில் செக்ஸ் எஜுகேஷன் பற்றி தெரிவித்து செல்கிற சாதுர்யம். இப்படி பல இடங்களை குறிப்பிடலாம். 

இந்த படத்தை பார்த்து விட்டு என்னுடைய முதல் திரை ஆசானான கே.பாக்யராஜ் சில கருத்துக்களை அன்றிரவு பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன விசயங்கள் வெகுஜன பார்வையிலானது. 

என்ன தான் அபாரமான நடிப்பாற்றலை கமல் கொண்டிருந்தாலும், அவர் ஒரு உச்ச நட்சத்திரம். அதற்கும் தீனி போட்டாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆதியை பின்தொடர்ந்து செல்லும் அப்பாஸை ஆதியால் காப்பாற்ற முடியாமல் போய், கையறுநிலையில் நிற்கிற காட்சிகளை பார்வையாளர்களால் ரசிக்க முடியவில்லை. கமல் என்கிற ஸ்டாராகவே அந்த இடத்தில் பார்க்கிறார்கள். கண் முன்னே நண்பனை விட்டுவிட்டு கமல் வந்து விடுகிறபோது பார்வையாளர்கள் அதிருப்தியடைகிறார்கள். ஒரு ஸ்டாராக இருக்கிற கமல் ஏதாவது அசகாயசூரத்தனமோ, அதிபுத்திசாலித்தனமோ செய்து அர்ஜுனை காப்பாற்றி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்து, அதுமாதிரி எதுவும் நடக்காமல் போக ஏமாந்து போய்விடுகிறார்கள்.

Kuruthipunal (1995) - Photo Gallery - IMDb

கதையின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றான ஆபரேஷன் தனுஷில் தனுஷ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறவர் அறிந்திராத முகமாக இருந்தது மக்களை ஈர்க்கவில்லை. அங்கே ஒரு அறிந்திருந்த முகம் இருந்திருந்தால், பார்வையாளர்கள் மனதில், எதிர்காலத்தில் அத்தனையும் சாத்தியம் என்பது நம்பும்படி இருந்திருக்கும். இந்த இரண்டு விசயங்கள்தான் அப்போது அவர் தன் வெகுஜன பார்வையில் இருந்து அப்போது தெரிவித்தது. மற்றபடி அற்புதமான முயற்சி என்பதையும் சொல்ல அவர் தவறவில்லை.

இதன் மூலக்கதையான துரோக்கால் படைப்பிற்கு சொந்தக்காரரான கோவிந்த் நிஹாலினி குருதிப்புனல் திரைப்படத்தை பார்த்ததும், அவரிடம் அந்த படம் குறித்து கருத்து கேட்டபோது, இப்படி தெரிவித்திருந்தார்.

இரண்டு படங்களுமே நேர்மையாகவே பயணித்திருக்கின்றன. குருதிப்புனலில் ஒரு பெரிய நட்சத்திரம் நடித்திருக்கிறார் என்பதை உணரவிடாதபடி கமல் அந்த கதாபாத்திரத்திற்குள் ஊடுறுவி இருக்கிறார். துரோக்கால் இறுக்கமான கதையமைப்போடு பயணிக்கும். குருதிப்புனலில் கமல்ஹாசன் அற்புதமான காதல் காட்சிகளை கூடுதலாய் சேர்த்திருக்கிறார். அது இந்த படத்திற்கு பொருத்தமான கலவையாக கச்சிதமாக கலவை கொண்டு, ஆவணப்பட தோற்றத்தை அகற்றி இருக்கிறது. அந்த வகையில் அந்த அபாரமான காதல் காட்சித்துளிகள் கூடுதலாய் என்னை ஈர்த்திருக்கிறது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.