சார்பட்டா பரம்பரை- திராவிட இயக்கங்களுக்கான ஊமைக்குத்து

-மணி ஜெயப்ரகாஷ்வேல்

சமூக ஊடகங்கள் வலுத்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், பொதுப்புத்தி அல்லது பொதுவான போக்கு என்பது எளிதாக உருவாகி விடுகிறது. ஆழ்ந்து படிப்பவர்களும், கூர்ந்து கவனிப்பவர்களும் அருகிக்கொண்டு வரும் சூழலில், அப்படியான ஒருசிலர் முன்வைக்கும் ஒரு தரப்பான, அல்லது இவர்களுக்கு இடையிலான இருமுனை கருத்துக்கள் மிக வேகமாகவும், மிக விரிவாகவும், நுனிப்புல் மேய்பவர்களால் பரப்பப்படுகிறது. அப்படி பரவும் போது, ஒன்று அல்லது இரண்டு பார்வைகள் பொதுப்பார்வையாக உருவகம் கொள்கின்றன. நிதானித்து அலசும் போக்கு குறைந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இயக்க அல்லது அரசியல் சார்புகளும், அவர்கள் முன்னெடுக்கும் தொழில்நுட்ப விளையாட்டுகளும் பொதுப்பார்வையாக ஒன்றையோ இரண்டையோ கட்டமைப்பதில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. சமூக ஊடகங்களில், பணத்தைச் செலவு செய்து ஒரு குறிப்பிட்ட கருத்தை பொதுவான கருத்தாக நிலைசெய்துவிடவும் முடியும் என்ற சாத்தியம் தேர்தல் நேரங்களில் மட்டுமல்ல; எல்லா நேரங்களிலும் இதை நாம் கவனிக்க முடியும்.


அந்த வகையில், சார்பட்டா பரம்பரை படம், திராவிட இயக்கங்களுக்கு, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவான படம் என்கிற ஒரு பார்வை பொதுப்பார்வையாக செல்வாக்கு செலுத்துகிறது. மிகவும் நுணுக்கமான அரசியல் பார்வை உள்ள சுபகுணராஜன் போன்றவர்களே இந்தப் படத்தை மிகவும் உவப்போடு அணுகுகிறார்கள். ஒரு ஒரு திராவிட / திமுக அரசியல் சார்பாளனாக தனது நன்றியைச் சொல்லும் சுபகுணராஜன் தனது ஃபேஸ்புக் பதிவில் ”

இன்றிலிருந்து அந்தநாட்களைப் பரிசீலித்தால் அவை குறித்த, கடுமையான விமர்சனங்களுடனான பார்வையைக் கொண்டவராக பா. ரஞ்சித் இருக்கக்கூடும். ஆனால் திரைப்பிரதியின் எந்த அலகிலும், இன்றைய பார்வையின் சாயல் கூட இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் தனது படைப்பு நேர்மையை மிகச் சிறப்பாக நிரூபித்திருக்கிறார். இந்த நிருபணம் அவரை கொண்டாடத்தக்க படைப்பாளியாக்கியிருக்கிறது” என்கிறார்.


ஆனால், உண்மையிலேயே இந்தப் படத்தில் காட்டப்படும் திமுக சார்பான குறியீடுகள், அதிமுக கட்சியை மறைமுகமாக கள்ளச்சாராயம் போன்ற சமூகச் சீர்கேடுகளுக்கு ஆதரவாக நிறுத்துவது போன்றவற்றை இயக்குநர் ரஞ்சித் தனது அரசியல் மாற்றத்தின் காரணமாக விரும்பி வைத்தாரா அல்லது கதை நடக்கும் காலத்தின் தேவைக்கேற்ப, கலைப்பிரதியின் நியாயத்துக்காக (சுபகுணராஜன் சொல்வது போல) வைத்தாரா என்று இருவிதமான பரிசீலனைகள் உள்ளன. மூன்றாவதாக ஒரு பரிமாணம் உண்டு. உதயசூரியன் சின்னம் உள்ள மேலங்கி, உடன்பிறப்பு என்கிற வசனம், முதலமைச்சரின் மகன் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்ற வசனம், முரசொலி படிப்பது என்பதையெல்லாம் அவர் உள்ளார்ந்த ஆதரவோடு வைத்திருப்பார் என்று நான் நம்பவில்லை. மேலும் கதை நிகழும் காலக்கட்டத்தின் உண்மைத்தன்மைக்காக வைத்திருப்பார் என்பதையும் நான் நம்பவில்லை. இந்த மாலையையும் முதலியாருக்கே போடு என்ற வசனமும் இந்தப் படத்தில் தான் உள்ளது. அது திமுக ஆதிக்க சாதியினர் செல்வாக்கு உள்ள கட்சி என்பதைக் காட்டுவதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, திராவிட இயக்க ஆதரவு, மிகக் குறிப்பாக திமுக ஆதரவுதான் விலைபோகும் சரக்கு என்பதை நல்ல வியாபாரிகள் உணர்ந்தே இருப்பார்கள். ’கத்தி’ படத்தில் கம்யூனிச வசனம் வைப்பதால் அது அரசியல் படமுமல்ல. இயற்கை படத்தில் அரசியல் வசனங்கள் இல்லாவிட்டாலும் அது சாதாரண படமும் அல்ல.
படைப்பவரின் அரசியலை மீறி ஒரு படைப்பைக் கொடுக்கும் அளவு மாஸ்டர்கள் இன்னும் உருவாகிவிடவில்லை. பா ரஞ்சித் முதல்முறையாக தன் படத்தில் பெரியாரைக் காண்பித்துள்ளார். அவரின் முந்தைய படங்களையும் அவர் பேசிவரும் அரசியலையும் கணக்கிட்டே சார்பட்டா பரம்பரை படத்தின் காட்சிகளை நாம் பரிசீலிக்க முடியும். ஒரு சினிமா நிகழ்ச்சியில், பா ரஞ்சித் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலைப் மிகவும் உணர்வுப்பூர்வமாக பேசிக்கொண்டு இருக்கும் போது, அவரை ஆற்றுப்படுத்தும் விதமாக, ஒரு இயக்குநர் நாமெல்லாம் தமிழர்கள்-ஒன்றுதான் என்று சொன்னபோது, அந்த ஒருமைக்குள் அடங்கவும் ஒப்பாமல், மேடையில் நாங்கள் தனி என்று முழங்கியவர் பா. ரஞ்சித். தனது நீலம் பண்பாட்டு அமைப்பின் மூலமாகவும், இன்னபிற தனிப்பட்ட செயல்களினாலும், பா ரஞ்சித் மட்டுமல்ல, இன்னும் சிலரும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு சாதியப் பெருமித உணர்வை ஊட்டி அவர்களை சமூகத்தில் இருந்து தனித்து வைக்கும் வேலையைச் செய்துவருவதாக நான் அனுமானிக்கிறேன். அப்படி மிகத்தீவிரமாக இயங்கி வரும் ஒரு இயக்குநர் சடாரென்று தன்னை திராவிட இயக்க ஆதரவாளராகவோ அல்லது பிரதியின் உண்மைத்தன்மைக்காக திராவிட இயக்க ஆதரவு பேசுவார் என்றோ நான் நம்பவில்லை. அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கிறார் என்று வைத்துக்கொண்டால், மிசா காலகட்டத்தை தவிர்த்த ஒரு பீரியட் படத்தைக் கூட எடுத்து இதே அளவு சுவாரசியத்தோடு கொடுத்திருக்க முடியும். அட்டக்கத்தி, மெட்ராஸ் போன்ற அருமையான படங்களைக் கொடுத்த இயக்குநருக்கு அது கடினமான காரியமும் அல்ல. ஆனாலும், படத்தில் திமுகவை நியாயப்படுத்துவது போலவும், அதிமுகவை குற்றவாளிக்கூண்டில் வைப்பது போலவும் காட்சி அமைப்புகள் உள்ளன. இந்தக் காட்சிகளின் உண்மைத்தன்மையையும், நிகழ்காலப் பொருத்தப்பாட்டையும் நான் வலுவாகவே நம்புகிறேன். எனது தனிப்பட்ட கருத்தும் அதுவே. ஆனால், இதை ரஞ்சித் செய்ததன் பின்னணியையே நான் வேறு விதமாகப் பார்க்கிறேன்.


கலைஞர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அரசியல் தலைமையை யார் கைப்பற்றுவது என்பதில் பெரிய போட்டி இருந்தது. கருத்தியல் தளத்தில் திமுக ஆதரவை பலவீனப்படுத்த முன்னெப்போதையும் விட, கலைஞரின் மறைவுக்குப் பிறகு கடும் பிரயத்தனங்கள் செய்யப்பட்டன. கலைஞருக்குப் பிறகான திமுக பலவீனப்பட்டு விடும் என்ற தப்புக்கணக்கில் மதவாத சக்திகள் செயல்பட்டார்கள். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தனது உறுதியான மற்றும் திறமையான அரசியல் அறிவால் அதை முறியடித்துள்ளார். சமீபத்திய தேர்தல் வெற்றி, திமுகவை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பலவீனப்படுத்த முடியாது என்ற செய்தியைச் சொல்லியுள்ளது. இதன் காரணமாக, வீழ்த்த முடியாத திமுகவுடன் மல்லுக்கட்டுவதை விட இரண்டாம் இடத்தில் உள்ள அதிமுகவை பலவீனப்படுத்தும் அரசியல் மற்றும் கருத்தியல் தளத்திலான நகர்வுகளை நான் அனுமானிக்கிறேன். இந்தப் பின்னணியில், சார்ப்பட்டா பரம்பரை படம் திமுக ஆதரவுப் படம் என்றாலுமே கூட அது உள்ளார்ந்த திமுக ஆதரவு என்று நான் கருதவில்லை. இந்த ஒரு படத்தின் வணிக வெற்றிக்காக, திமுக ஆதரவு போன்ற முஸ்தீபைக் கொடுத்துள்ளார் ரஞ்சித் என்றே கருதுகிறேன். கருப்பு சிவப்பு துண்டை ரங்கன் காவியப் பெருமிதத்துடன் நீவிக்கொள்வது, மீரான்-கபிலன் உதயசூரியன் அச்சிட்ட அங்கியை அணிவது, போன்றவற்றை சிலாகிக்கும் திமுக ஆதரவாளர்கள் இறுதிக்காட்சியில் அதுவரை படத்தில் முக்கியமாக இல்லாத ஒருவர் “கபிலா, இந்த வெற்றி உன்னுது மட்டும் இல்லப்பா; நம்ம ஜனங்களுக்கானது; ஆடி ஜெயிச்சிட்டு வா” என்று சொல்லி கொடுக்கும் நீல அங்கியைப் போர்த்திக்கொண்டுதான் இறுதிப்போட்டிக்குச் செல்கிறார் கபிலன் என்பது என்ன விதமான செய்தி? திமுக ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதல்ல என்பதுதானே செய்தி. முதலியாருக்கே மாலையைப் போடு என்ற வசனத்தையும் இங்கே பொருத்திப்பார்க்க வேண்டும். இது திராவிட இயக்க ஆதரவு படமல்ல. உண்மையில் திராவிட இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவானவை அல்ல என்ற இயக்குநரின் தனிப்பட்ட அரசியல் பார்வையை மறைபொருளாக வைத்து வழங்கப்பட்டிருக்கும் படம். ஜனரஞ்சக மொழியில் சொல்வதானால் ஊமைக்குத்து. காலா படத்தில் இடதுசாரி அரசியலை, என் ஜி ஓ சமரசத்துக்குள் கலந்து காட்டி, மலினப்படுத்திய ரஞ்சித் இந்தப்படத்தில், இடதுசாரி அடையாளங்கள் ஏதும் இல்லாமலும் பார்த்துக்கொண்டுள்ளார். இது வேறொரு தளத்தில் விரிவாக விவாதிக்க வேண்டிய பார்வை.


மற்றபடி, அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் படங்களுக்குப் பிறகு ரஞ்சித் கொடுத்துள்ள அற்புதமான சினிமாதான் சார்பட்டா. புதுப்பேட்டை, வடசென்னை வரிசையில் குறிப்பிடத்தக்க முயற்சி. ஜனநாதனின் உதவியாளர் எடுத்த பூலோகம் படம் இதே களத்தைதான் காண்பித்தது. ஆனால் அதன் உருவாக்க நேர்த்தியின்மை காரணமாக சரியாக சென்றடையவில்லை. படத்தின் தொழில்நுட்பக்குழுவினர் மிக அற்புதமாக வேலை செய்துள்ளனர். இயக்குநர் அரசின் கவின்கலைக்கல்லூரியில் படித்தவர். மிகவும் கலையார்வம் மிக்கவர். தொழில்நுட்ப பரிச்சயம் உள்ளர். ஆகவே, படத்தின் உருவாக்க மற்றும் தொழில் நேர்த்தி அற்புதமாக உள்ளது. முக்கியமாக அமெரிக்க ஐரோப்பிய படங்களுக்கு இணையாக வெளிர்பழுப்பு நிறத்தில் உடல்நிறம் தெரியும் படியான கலர்டோன் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. தனது எல்லாப்படங்களிலும் பிராதான பெண் கதாபாத்திரங்களை தனித்துவமும், துணிவும் மிக்கதாக வடிவமைப்பார் ரஞ்சித். இந்தப் படத்திலும் அப்படியே. குடிகாரக் கணவனை கொலைசெய்ய வரும் கொலைகாரர்களை விரட்டியடிக்கும் மாரியம்மாள், எனக்குப் பசிக்குது ஊட்டி விடுடா என்று கேட்கிறார். தோற்றால் என்ன என்கிறார். அற்புதம். டான்சிங் ரோஸ் பாத்திரம் வணிகசினிமாவுக்கான அற்புதமான கச்சாப் பொருள். கபிலன் - டான்சிங் ரோஸ் இடையிலான வசீகரமான சண்டைக்காட்சி, வணிக சினிமா வரலாற்றில், மயிர்கூச்செரிய வைக்கும் காட்சிகளின் வரிசைப்படுத்தலில் தவறாமல் இடம்பெறத்தக்க ஒன்று. ’மாஞ்சா கண்ணன்’ என்கிற முக்கியமான பாத்திரத்தில் நடித்துவிட்டு, கொரோனாவுக்கு பலியான நடிகர் மாறன் மனதில் இடம்பிடித்து விடுகிறார்.


மிக அருமையான பொழுதுபோக்கு படம். தனித்துவமான படம் என்று சொல்வதற்கில்லை. வழக்கமான மசாலா சினிமாவை மிகத் தேர்ந்த இயக்குநர் ஒருவர் ரசிக்கும்படியாக கொடுத்துள்ளார். படம் எங்கேயும் தொய்வில்லாமல் பார்ப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. பாடல்களைத் தவிர. எல்லாப் படங்களையும் போல இந்தப்படத்திலும் தனிப்பட்ட குணாதிசயம் உள்ள பாத்திரங்கள். அவ்வளவே. ஆனால் கெவின் டாடியை வைத்தே ஒரு படம் எடுக்கலாம் அத்தனை கிளைக்கதைகள் என்றெல்லாம் பேசுகிறார்கள். அப்படியான படம் வடசென்னை. அப்படிப்பார்த்தால் லொடுக்கு பாண்டி என்ற பாலாவின் கேரக்டரையும் தனியாக வைத்து படம் எடுக்கலாம். சினிமாவில் தனித்துவமான பல கதாபாத்திரங்கள் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொன்றும் ஒரு விதமாகத்தான் இருக்கவும் வேண்டும். அதேதான் இந்தப் படத்திலும் உள்ளது. அதில் சிறப்பேதும் இல்லை. நிறைய க்ளீஷேக்களும் உள்ளன. பீடி ராயப்பன் பகுதி துருத்திக்கொண்டிருக்கும் க்ளீஷே. உன் கருவுக்குள்ளே போயிடறேன் அம்மா என்பதையும் நான் துருத்தலாகவே பார்க்கிறேன். பத்ரி படத்தில் வரும் பாக்ஸிங் பயிற்சிக்கான ஆங்கிலப்பாடலை ஒத்த, ஒரே பாட்டில் சிக்ஸ் பேக் வளர்க்கிற, (குறிப்பாக கோச்சை முதுகில் சுமக்கும் தேய்ந்து போன காட்சியுடன் கூடிய) ஒரு சுயமுன்னேற்றப்பாடலும் இதே படத்தில் தான் உள்ளது. இயக்குநர் சறுக்கும் இடங்கள் இவை. சார்ப்பட்டா பரம்பரையில் எல்லா மதத்தவரும் சாதியினரும் இருந்த போதிலும், பெரும் எண்ணிக்கையிலும், முக்கியமான வெற்றி வீரர்களாகவும் இருந்த மீனவ மக்களுக்கான அடையாளம் இந்தப் படத்தில் இல்லை; தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றொரு பார்வையும் வைக்கப்பட்டிருக்கிறது. கவனிக்க வேண்டிய ஒன்று.

எல்லோரும் நிலைமறந்து பாராட்டும் ”திராவிட வீரன்” ரங்கன் வாத்தியார் கதாபாத்திரன் உண்மையில் அத்தனை நுணுக்கமாக கட்டமைக்கப்படவில்லை. ”உன் ஆட்டத்தை ஆடு; என்னடா ஆடற; ஏய் என்னடா ஆச்சு உனக்கு; இந்த ரவுண்டில் அவனை முடிக்கற” போன்ற எம் எஸ் உதயமூர்த்தி ரகமான ஊக்குவிப்புகளை மட்டுமே செய்வதாகத்தான் ரங்கன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். பாக்ஸிங் நுணுக்கங்களை ரங்கனும் சொல்லவில்லை. பீடி ராயப்பனும் சொல்லவில்லை. மிகப்பெரிய பாக்ஸிங் வீரரும், பாக்ஸிங் வாத்தியாருமான ரங்கன், வேம்புலியை தோற்கடிக்க ஏற்பாடு செய்த, ராமனை, எந்தப் பயிற்சியையுமே எடுக்காத ஒரு சுமைதூக்கும் தொழிலாளி கபிலன் உயிர்போகுமளவுக்கு அடித்து தோற்கடிக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய், ரங்கனிம் பயிற்சி எடுக்காமல் பீடி ராயப்பனிடம் பயிற்சி எடுத்துத்தான் இறுதியாக வேம்புலியை வீழ்த்துகிறார் கபிலன். இறுதியாக, சார்பட்டா பரம்பரைடா…ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா…என்று ஆர்ப்பரித்தாலும், ரங்கன் வாத்தியார் எதுவுமே சொல்லிக்கொடுக்காமல் அவரால் புறக்கணிக்கப்பட்ட கபிலன், அவரது ஊர் மக்களுக்காக, தனக்காக ஆடி ஜெயித்தார் என்பது தான் இயக்குநர் காட்டும் பார்வை. பல்வேறு காட்சிகளும், ரங்கன் வாத்தியார் பாத்திரத்துக்கு மரியாதை கொடுக்கும் விதமாக இல்லை. ராமன் தனி வாத்தியார் வைத்துக்கொள்வது, வெற்றி ஸ்பேரிங் போடுவது, கபிலன் ஸ்பேரிங் போடுவது, கபிலன் பீடி ராயப்பனிடம் பயிற்சி பெறுவது, கபிலன் இரண்டாவது முறையாக வேம்புலியிடம் ரங்கனை மீறி சண்டைக்கு போவது போன்ற பல்வேறு காட்சியமைப்புகள் ரங்கன் பாத்திரத்தை பலவீனப்படுத்தவே செய்கின்றன. உண்மைக்கு இந்தப் பாத்திரத்தில் தேர்ந்த நடிகரான பசுபதி இல்லாமல் வேறு யாராவது நடித்திருந்தால் பாத்திரத்தின் அடிப்படை பலவீனம் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கும்.

நிறைவாக, சார்பட்டா படத்தில் திமுக ஆதரவு அரசியலைத் தேடாமல், திமுக ஆதரவு அரசியல் இருப்பதாக இறும்பூது அடையாமல், ஒரு பொழுதுபோக்குப் படம் என்ற வகையில், எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அற்புதமான படங்களைக் கொடுக்கும் திறமை உள்ளவர் ரஞ்சித் என்பதற்கு இந்தப்படமும் ஒரு சான்று. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இங்குள்ள திராவிடக்கட்சிகள் ஆதரவானவை அல்ல என்று ரஞ்சித் விட்டிருக்கும் ஊமைக்குத்துதான் சார்பட்டா பரம்பரை.