போர் ஒரே நாளில் நடக்காது

 ”இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” திரைப்பட இயக்குனர் அதியன் ஆதிரை பேட்டி

பா.ரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’வின் டிரெய்லர் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. படத்தின் நாயகன் தினேஷ், ஒரு காயலாங்க் கடையில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் கோபமுற்ற இளைஞனாக நடித்திருப்பது டிரெய்லரிலிருந்து தெரிகிறது. 

36 வயதான இயக்குனர் அதியன் ஆதிரை – இவரது கடைசி பெயர் அவரது மனைவியின் முதல் பெயர் – காயலாங்க் கடை என்பது நியாயமற்ற பணியிடம் மட்டுமல்ல; இது புறக்கணிப்பு மற்றும் சுரண்டலுக்கான உருவகம். அவர் இந்தத் தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு முன்பு, இதுபோன்ற ஒரு காயலாங்க் கடையில் வேலைபார்த்த அனுபவம் இருக்கிறது. எனவே, அவரால், அதுசார்ந்த காட்சிகளைப் படத்தில் கொண்டுவர முடிகிறது. 

அதியன், வில்லுபுரத்தில் உள்ள சிருவலை கிராமத்தில் இருந்து வந்தவர், அங்கு அவரது பெற்றோர்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலைசெய்கிறார்கள். பள்ளிப் படிப்பிற்கு பிறகு, கடலூரில் உள்ள பெரியார் கலைக் கல்லூரியில், பிஎஸ்சி தாவரவியல் (BSc Botany) படிக்கச் சென்றார், பின்பு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ தமிழ் படித்தார். அதற்குப் பிறகுதான், அதியன் தனது சினிமா கனவைத் துரத்திக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். 

”ஆனால், அது எனக்குப் பலனளிக்கவில்லை, எனவே அனிமேஷன் துறையில் CD composition வேலைக்குச் சேர்ந்தேன்.” என்று அதியன் கூறுகிறார்.

இருப்பினும், இது சத்யம் ஊழல் வெளிப்பட்ட நேரம். தொழிற்துறையைப் பாதித்து, பலரது வேலை இழப்புக்கு வழிவகுத்தது. அதியனும் கூட வேலையிலிருந்து வெளியேறி, ஒரு காயலாங்க் கடையில் மேலாளராகச் சேர்ந்தார்.

காயலாங்க் கடை உருவகம்:

அந்நேரத்தில், அதியனுக்கு ஒரு வாழ்க்கையை வழங்கிய காயலாங்க் கடை, அவரது முதல் படத்திலும் ஒரு முக்கியமான இடத்தைக் கண்டறிந்து, பிடித்துக்கொண்டது.  

”எல்லா வகையான கழிவுகளும், வீணான பொருட்கள் என்று மதிப்பிடப்படுபவைகளும் காயலாங்க் கடைக்கு வருகின்றன. ஒரு விமானம் பல கோடி மதிப்பு பெறும், ஆனால் அது பழுதானபின் அதன் பாகங்கள் பிரிக்கப்படும்பொழுது, அல்லது அந்த விமானம் விபத்தினைச் சந்தித்துவிட்டால், அதன் பயணம் இறுதியில் காயலாங்க் கடைக்கு வருவதோடு முடிகிறது. பேருந்தின் உதிரிபாகங்கள், ரயில்வே தடவாளங்கள், ரயிலின் சக்கரங்கள், ஒரு இராணுவ பீரங்கி – இப்படி நீங்கள் ஆச்சரியத்துடன் பார்த்த ஒவ்வொரு பொருளும், ஒரு நாள் காயலாங்க் கடைக்கு வந்து சேர்கிறது.” என்று கூறுகிறார். 

ஒரு கவிஞரான அதியன், இதற்கும், காயலாங்க் கடையில் உள்ள ஊழியர்கள் சமூகத்தால் பெருமளவில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்குமான ஒப்பீட்டை இதற்கிடையில் வரைகிறார். 

“அங்கு பணிபுரியும் மக்கள் எல்லோரிடமிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள், அவர்களுடைய உழைப்பு அவர்களிடமிருந்து பிழிந்தெடுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 14 முதல் 15 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கென எந்த அமைப்பும், தொழிற்சங்கமும் இல்லை. இந்த வேலையைச் செய்யும் அவர்கள் தங்கள் கை கால்களையும், உறுப்புகளையும் கெடுத்துக்கொள்கிறார்கள். வெளியில் தெரிந்தும், தெரியாமலும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள், அம்மாதிரியான இடங்களில் வேலை செய்துவருகின்றனர். அவர்களின் வாழ்க்கையை அறிந்த நான், படத்திற்காக என்னிடம் இருந்த ஐடியாவுடன், அதையும் தொடர்புபடுத்த நினைத்தேன்,” என்று கூறினார்.


எளிமையான கதையில் ஒரு சிக்கலான செய்தி:

படத்தின் தலைப்பில், இரண்டாம் உலகைப் போரைப் பற்றிய குறிப்புகள் இருந்தபோதிலும், படம் முழுக்க முழுக்க சமகாலத்தில் நிகழ்வதுபோல அமைக்கப்பட்டுள்ளது என்று அதியன் தெளிவுபடுத்துகிறார். 
”போர் என்பது ஒரே நாளில், ஒருவர் வெடிகுண்டு வீசுவதால் நடக்கும் ஒன்றல்ல. ஒரே நாளில் நடந்துமுடிவதல்ல. போர் அதற்குப் பின்னான பல நூற்றாண்டுகளுக்கு ஒரு நாட்டை பாதிக்கும். யுத்த காலங்களில் உருவாக்கப்படும் மனநிலை, அந்த சமூகத்தின் ஆன்மாவை, உளவியலை மாற்றும். இது அன்போ இரக்கமோ இல்லாத, முற்றிலும் பண எண்ணம் கொண்ட மனிதர்களை உருவாக்குகிறது. அத்தகைய போர் காலங்களில், உருவாக்கப்பட்ட ஆன்மாவும், உளவியலும் இன்றும் நம் மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எனது படம் ஊடுருவிப் பார்க்கிறது.” என்கிறார்.

பேரன்பு, அல்லது அனைத்தையும் உள்ளடக்கிய காதல் மட்டுமே உலகைக் காப்பாற்ற முடியும் என்று அதியன் நம்புகிறார். ஆனால், இந்தச் சிக்கலான செய்திகள் அனைத்தும் படத்தில் உங்கள் முகத்திற்கு நேராக வராது. கதையின் அடித்தளத்தில் இதெல்லாம் உள்ளது. 
”இதுவொரு சாதாரண லாரி டிரைவர் பற்றிய எளிமையான கதை.” என்று கூறுகிறார். இது அதியன், நெருங்கிப் பழகிய பகுதிகளிலிருந்து பார்த்த ஒரு வாழ்க்கை – அவரது சகோதரர் அதில் ஒருவராக வேலை செய்து வருகிறார். 

கம்யூனிசத்தைத் திரைக்குக் கொண்டுவருதல்:

தொழிலாளர் சுரண்டல் மற்றும் முதலாளித்துவம் குறித்த அதியனின் கருத்துக்களிலிருந்து, அவர் இடதுசாரி அரசியலுடன் இணைந்திருப்பது தெளிவாகிறது (அவருக்கு இரண்டு மகன்கள் – திலீபன் சே குவேரா மற்றும் தமிழ் முருகன்). இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு… ட்ரெய்லரில் கூட, கம்யூனிச சிவப்புக் கொடிகள் மற்றும் அம்பேத்கரிய நீலக் கொடிகளுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கமுடிகிறது. ஆனால், இந்தியாவில் இடதுசாரி இயக்கம் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மட்டுமே பேசுவதாகவும், சாதிப் பிரச்சினைகளை பேசாமல் புறக்கணிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இதை அதியன் எப்படிப் பார்க்கிறார்?
”இன்று, கம்யூனிஸ்டுகள் சாதிக்கும் எதிராகப் போராடுகிறார்கள். சாதி என்பது எந்தவொரு தனிப்பட்ட நபரின் பிரச்சினை அல்ல. அதுவொரு சமூக நோய். இது எல்லோரிடமிருந்தும் அகற்றப்படவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை, இதற்காக, கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் அனைவரும் போராடுகிறார்கள். என் படம், இந்த உண்மையை ஒப்புக்கொள்கிறது.” என்கிறார்.


வில்லுபுரத்தில், நடைபெறுகிற நாட்டுப்புற நிகழ்ச்சிகளைப் போலவே, ட்ரெய்லரில் கதையும் தெருக்கூத்து பாணியில் விவரிக்கப்படுகிறது. ஆனால், அதியன் இந்த ஊடகத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதில் வேறுபாடுகள் உள்ளன.

”கூத்து, படத்தின் மிக முக்கியமான பகுதியாக வருகிறது. மேலும், தெருக்கூத்து, அனைத்து மக்களுக்கான நாடகம் என்றாலும், மகாபாரதத்திலிருந்தோ அல்லது வேறு இதிகாசங்களிலிருந்தோ கதைகளைக் கொண்டுவருவதால் அதற்கு ஒரு மதச்சாய்வு வழங்கப்படுகிறது. ஆனால், இங்கு நான் மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக அதே கூத்து எனும் ஊடகத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன். நான் அந்த ஊடகத்தை மாற்றவில்லை – இது சாதாரண மக்களை எளிதில் சென்றடையக்கூடிய ஊடகமாக, பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. எனவே, அதை ஒதுக்கி வைக்காமல், நான் அந்த இடத்திற்குள் நுழைந்து, வழக்கமான உள்ளடக்கத்தை எனது சொந்தக் கருத்திற்காக மாற்றியுள்ளேன். அது நன்றாக வேலை செய்திருப்பதாக நான் உணர்கிறேன், நான் வெற்றிபெற்றிருக்கிறேன் என்று நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டும்!” என்று அவர் புன்னகைக்கிறார். 

நடிகர்கள் மற்றும் குழுவினர்:

படத்தில் நடிப்பதற்கான நடிகர்களைத் தேர்வுசெய்வது எளிதான பணியாகவே இருந்தது. பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டகத்தி’யில் நடித்த தினேஷ், இப்படத்தின் கதாநாயகனாகவும், அதே நேரத்தில் ரஞ்சித் தயாரித்த, ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஆனந்தி, இப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். அதே அணியின் படங்களில் அங்கம் வகித்த ரித்விகா போன்றோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். 

”நான் ஒரு நடிகராக, தினேஷை மிகவும் விரும்புகிறேன். அனைத்து உதவி இயக்குநர்களும் எப்போதும் தினேஷை தனது முதல் படத்தின் கதாநாயகனின் பட்டியலில் விருப்பமான இடத்தில் வைத்திருப்பார்கள், ஏனெனில், அவர் வேலையைச் சிறப்பாகச் செய்துவிடுவார். அவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் அவர் மிகவும் ஈடுபாட்டோடுச் செயல்படுகிறார். நான் அவரிடம் கதை சொன்னபோது, அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது, உண்மையில் அவர் படத்தைத் தயாரிக்கவும் தயாராகவே இருந்தார். படத்தைத் தயாரிக்க 4 – 5 மாதங்கள் முயற்சித்தார், ஆனால் அது நடக்கவில்லை. அப்போதுதான், நீலம் புரொடக்‌ஷன்ஸ் இதற்குள் அடியெடுத்து வைத்தது.” என்கிறார் அதியன். 
உங்கள் கிராமத்தில், நீங்கள் பார்த்த ஒரு வகையான இளம் பெண் என்று ஆனந்தி கதாபாத்திரம் குறித்து விவரிக்கும் அதியன், முந்தைய படங்களில் அவர் நடித்த விதத்திலிருந்துதான், அவர் நடிப்பில் அதிகம் ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார். 

”அவருடன் எப்படி வேலை செய்யப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், அவர் பழகுவதற்கு மிக எளிமையாகவும், மிகவும் பணிவுடன் நடந்துகொள்வதை நான் கண்டேன்,” என்கிறார்.


இருப்பினும், இந்தப் படத்தில் ஜான் விஜய் நடித்திருக்கிறார், #MeToo இயக்கத்தின்போது அவரின் பெயரும் வந்தது, வி.ஜே மற்றும் பாடகர் ஸ்ரீரஞ்சினி பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஜான் விஜய் ஆளானார். சமூக நீதியைப் பற்றிய ஒரு திரைப்படத்தில் அவரை நடிக்க வைப்பது, இதை அதியன் எப்படிப் பார்க்கிறார்?

”என்ன நடந்தது என்பது குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், இந்தக் குற்றச்சாட்டு வருவதற்கு முன்பே, நான் அவரை இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்திருந்தேன்.” என்று கூறினார், மேலும், இந்த விவகாரம் குறித்துப் பேச மறுத்துவிட்டார். 
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸின் டென்மா, மேலும் முந்தைய நாட்களின் பங்களிப்பு அடுத்தடுத்த நாட்களில் கொண்டாடப்படும் என்பதில் அதியன் உறுதியாகயிருக்கிறார்.

“அவருடைய பாணி என்னவென்று எனக்கு முன்பே தெரியும், அது இந்தப் படத்துடன் நன்றாக ஒத்துப்போகும் என்ற நம்பிக்கை இருந்தது. பா.ரஞ்சித், இசையமைப்பாளருக்காக 2,3 மூன்று தேர்வுகளை எனக்குக் கொடுத்தார், நான் அதில் டென்மாவைத் தேர்ந்தெடுத்தேன். படத்தின் சப்ஜெக்ட் குறித்து நான் டென்மாவிடம் பேசினேன் – அது கதாநாயகன், பரந்த நிலப்பரப்புகளில் பயணிக்கும் இடம். நீண்ட காலத்திற்குப் பிறகு, இது ஒவ்வொரு பாடலும் வெற்றிபெறும் ஆல்பமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.” என்று அதியன் கூறினார். 


நன்றி: www.thenewsminute.com