இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது? மார்வின் கயே

-ஷாஜி

ரெஜியின் அப்பா அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த புனலூர் காகித ஆலையில் உயரதிகாரியாக இருந்தார். கிறித்தவப் பழமைவாதியான அவரைப் பொறுத்தவரை இசை என்பது ஒவ்வொருநாளும் மாலைஜெபத்திற்குப் பின்னரும், ஞாயிற்றுக்கிழமைகளில் மாதாகோயிலிலும் ஆராதனைப்பாட்டுகளைப் பாடுவது மட்டுமே. பிள்ளைகளை 'முறையாக' வளர்த்து அதிகாரிகளாக ஆக்கவேண்டுமென்பதே அவரது இலட்சியம்.

ஆனால் தன் பன்னிரண்டாவது வயதில் ரெஜி, கர்நாடக இசை பயில ஆசைப்பட்டான். அவனது தந்தைக்கு குண்டுவெடித்ததுபோல அதிர்ச்சி. மார்த்தோமா தேவாலய மரபில் யாராவது கர்நாடக இசையைப் படித்திருக்கிறார்களா? அவர் கேள்விப்பட்டவரை இல்லை. ஒரு உண்மைக் கிறித்தவன் 'வாதாபி கணபதிம் பஜே ஹம்' என்றும் ' பாஹிமாம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி'' என்றும் பாடினால் என்ன ஆகும்? ரெஜி கடுமையாக எச்சரிக்கப்பட்டான்.

ஒருவருடம் கழித்து ரெஜி இன்னொரு உத்தியைக் கண்டுபிடித்தான். ஆர்மோனியம் கற்பது. அதில் பக்திப்பாடல் வரிகள் இல்லையே. அதையும் சுயமாகவே கற்றுக் கொள்வது! அந்த ஆசையையும் கடுமையாக ஒடுக்கியது அவன் குடும்பம். அந்த தரித்திரம் பிடித்த பொருள் வீட்டுக்குள்ளேயே வரக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

பலவருடங்கள் கழித்து நான் ரெஜியை ஹைதராபாத் லாலகுடாவில் இருந்த அவனது அறையில் முதன்முதலாகச் சந்தித்த போது அவனைச் சுற்றி இசைக்கருவிகள் குவிந்துகிடந்தன. பலவிதமான கீபோர்டுகள், தபலா, ஆர்மோனியம், மின்னணுக் கிட்டார்கள். சுவர்களில் சர்வதேச இசை நட்சத்திரங்களின் படங்கள் நிறைந்திருந்தன. ஹைதராபாத் நகரின் மேலையிசை வட்டாரத்தில் புகழ்பெற்ற கிட்டார் கலைஞனாகவும் இசைநிபுணராகவும் இருந்தான். அவனுக்குச் சொந்தமாக இசைக்குழுவே இருந்தது! எல்லாமே சுயமாகக் கற்றுக் கொண்டவை!

நான் ரெஜியின் இசை நண்பனாக ஆனேன். அப்போது அவனது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி விட்டிருந்தது. அவர்கள் அவனை அங்கே அழைத்தார்கள். அவன் போகவிரும்பவில்லை. ''அமெரிக்கா என் கனவுபூமி அல்ல!'' என்பான். இந்தியாவில் வாழும் மேலை இசைக்கலைஞன் - அவன் விரும்பிய அடையாளம் அதுவே. தன் சகோதரர்களிடமிருந்து அவ்வப்போது வரும் ஒலிநாடாப் பொதிகளை மட்டும் பெற்றுக் கொள்வான். அவனிடமிருந்த இசைச்சேகரிப்பு பெருகியபடியே இருந்தது. இரவும் பகலும் நானும் அவனும் இசையிலேயே வாழ்ந்தோம். அன்று இந்தியாவில் அபூர்வமாக மட்டுமே அறியப்பட்டிருந்த எண்ணற்ற மேலையிசைக் கலைஞர்களை அப்போதுதான் நான் கேட்டறிந்தேன்.

எல்லா வகையான இசையையும் நாங்கள் விரும்பிக் கேட்டாலும் அமெரிக்கக் கறுப்பிசையில் இருந்த ஆத்மார்த்தமான, தீவிரமான உணர்ச்சிவேகங்கள் எங்களுக்கு சிறப்பாகப் பிடித்திருந்தன. அரீதா ஃப்ராங்க்லின் முதல் நீனா சிமோன் வரை, ரே சார்லஸ் முதல் சக் பெர்ரி மற்றும் ஸ்டீவி வொண்டர் வரை எங்கள் ரசனை பரந்து கிடந்தது. அவர்களில் எனக்கும் ரெஜிக்கும் மார்வின் கயெ தனிப்பட்ட ஆதர்சப் பாடகராக இருந்தார். சின்னஞ்சிறிய அறையை நிறைத்தபடி பின்னிரவின் குளிர்ந்த இருளில் ஒலித்துக் கொண்டிருக்கும் அவரது இசை, இசைமூலமே செல்லக்கூடிய அறியா நிலங்களுக்கு எங்களைக் கொண்டுசெல்லும். 'ஆத்மா' ['Soul' ] என்று அழைக்கப்பட்ட இசைவகைமையின் உச்சநட்சத்திரப் பாடகர் மர்வின் கயெ.

Marvin Gaye's Lost Album, 'You're The Man,' Due Out March 29 : NPR

அன்றும் இன்றும் கறுப்பிசை என்பது அமெரிக்க அன்றாடவாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாகவும், அதன் பண்பாட்டின் முக்கியமான சாதனையாகவும் விளங்குகிறது. காஸ்பல் இசை, ப்ளூஸ், ஜாஸ், ராக் அண்ட் ரோல், ரிதம் அண்ட் ப்ளூஸ், சோல் முதல் இன்றைய ஹிப்-ஹாப் வரை அதன் வகைமைகள் ஏராளமானவை. ஆரம்பகால கறுப்பிசையானது அடிமைகளாக இருந்த உழைப்பாளிகளின் பாடல்களில் இருந்து உருவானது, ஆப்ரிக்க பழங்குடிப் பாடல் மரபில் வேர் கொண்டது. அதன் வழியாகக் கறுப்பு அடிமைகள் தங்கள் கதைகளை பரிமாறிக் கொண்டார்கள், வரலாற்றை பேணிக்கொண்டார்கள், ஒரு சமூகமாக தங்களைத் திரட்டிக் கொண்டார்கள்.

பெரும்பாலான அமெரிக்க கறுப்பு அடிமைகள் கிறித்தவர்களாக இருந்தமையால் அவர்கள் தங்கள் இசையை மாதாகோயில்களுக்குக் கொண்டுவந்தார்கள். அவ்வாறாக பக்திநோக்குள்ள ஒரு தனி கறுப்பிசை உருவாகி இன்றுவரை உயிர்ப்புடன் இருந்து வருகிறது. அதுவே காஸ்பல் இசை என்று அழைக்கப்படும் இசை வடிவம். இன்று காஸ்பல் இசை அதன் மத அடையாளத்தை பெரும்பாலும் இழந்து கலையின்பத்தின் பொருட்டே இசையமைத்துப் பாடப்படுகிறது. சந்தையை கருத்தில் கொண்டே அதன் பாடல்கள் வெளியாகின்றன. மஹாலியா ஜாக்ஸன், டான்னி மெக்-கிளர்க்கன், ஷேர்லீ சீசர், வெனெஸ்ஸா பெல் ஆம்ஸ்டிராங், யோலந்தா ஆடம்ஸ் போன்றவர்களை இவவிசையில் முக்கியமானவர்களாகச் சொல்லலாம்.

அடக்குமுறைக்கு எதிரான கறுப்பர்களின் போராட்டத்தில் விளைந்த மனச்சோர்வு, துயரம், ஆங்காரம், வறுமையின் ஏக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் இசையாக உருவானதே ப்ளூஸ். 'ஆழமான இசை உள்ளூரத் துயரமானது' என்ற கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைபவை ப்ளூஸ் பாடல்கள். டபிள்யூ.சி. ஹேண்டி, ராபர்ட் ஜான்ஸன், கேரி டேவிஸ், மேமி ஸ்மித் ஆகியோரை ப்ளூஸ் இசையை வளர்த்த முன்னோடிகளாகச் சொல்லலாம். பெஸ்ஸி ஸ்மித், பி.பி.கிங், ஜான் லீ ஹூக்கர், டயானா வாஷிங்டன், சாரா வாகன், ஆகியோரை ப்ளூஸ் இசையின் முன்னோடிப் பாடகர்களாகவும் சொல்லலாம்.

கறுப்பிசையின் வளர்ச்சிக் காலகட்டத்தில் பல்வேறுவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதும் படைப்பூக்கம் உள்ளதுமான புதிய ஒரு இசைமரபு உருவாயிற்று. கற்பனைமூலம் விரிவாக்கிப்பாட ஏற்றது அது. அதுவே ஜாஸ். அடிப்படையில் ப்ளூஸ் இசையின் இன்னிசைத்தன்மையில் வேரூன்றியதானாலும் ஜாஸ் பலவகையான மெட்டுக்களையும் தாளக்கட்டுக்களையும் தன்னுள் இணைத்துக் கொண்டும் தந்திக்கருவிகள், உலோகக் கருவிகள் மற்றும் முழவுகளை விரிவாகப் பயன்படுத்தி தன்னை விரிவாக்கிக் கொண்டது ஜாஸ் இசை.

More Music | Marvin Gaye | Official Site

ஜாஸ் அமெரிக்க ரசனையை பெரிதும் கவர்ந்தது. லூயிஸ் ஆம்ஸ்டிராங், சார்லி பார்க்கர், எல்லா ஃபிட்ஸ்ஜெரால்ட், பில்லி ஹாலிடே, மைல்ஸ் டேவிஸ் போன்ற ஜாஸ் கலைஞர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒலிக்கும் பெயர்களாக ஆனார்கள். அமெரிக்க இசையில் இந்த பெரும் கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

இந்தக் கறுப்பிசை மரபுகள் நாற்பதுகளில் அமெரிக்க இசை ரசனையில் உருவாக்கிய அலையின் விளைவாக பிறந்ததே ராக் அண்ட் ரோல். வேகமான தாளக்கட்டு கொண்டதும் நடனமாட ஏற்றதுமான இசை இது. ராக் அண்ட் ரோல் இரு மின் கிட்டார்களினால் கட்டுப்படுத்தப்படுவது. அத்துடன் முழவுத்தொகுப்பும் இணைந்துகொள்ளும். ஆரம்பகாலத்தில் டபிள் பாஸ் எனும் பெரிய தந்திக் கருவியின் ஒலி அடிப்படை ஒலியாகப் பயன்படுத்தப்பட்டது. பியானோவும் சாக்ஸஃபோனும் முன்நிலை வாத்தியங்களாக இருந்தன. 1950 முதல் மின்கிட்டார் அந்த இடத்தை எடுத்துக் கொண்டது. ஸ்னேர் முழவில் ஒலிக்கும் ராக் அண்ட் ரோல் இசையின் பின்னணித்தாளம் எப்போதுமே வேகமானது.

சக் பெர்ரி, ஃபாட்ஸ் டாமினோ, லிட்டில் ரிச்சார்ட் முதலியவர்களை ராக் அண்ட் ரோல் இசையின் முன்னோடிகளாகச் சொல்லலாம். கறுப்பராக இல்லாவிட்டாலும் எல்விஸ் பிரெஸ்லி ராக் அண்ட் ரோல் இசையின் அரசராக கருதப்படுகிறார். 'கறுப்புக்குரல் கொண்ட வெள்ளையர்' என்று அவரைச் சொல்வதுண்டு.

Marvin Gaye was shot and killed by his own father 37 years ago today -  Frank Beacham's Journal

இக்காலகட்டத்தில்தான் காஸ்பல் இசை, ப்ளூஸ், ஜாஸ் ஆகியவற்றின் இன்னிசைத் தன்மைகளை ஒருங்கிணைத்தது ரிதம்&ப்ளூஸ் (R&B) உருவாகியது. இன்றும் புகழ்பெற்ற இசை வகைமையாக R&B நீடிக்கிறது. ரே சார்லஸ், ஜேம்ஸ் பிரவுன், ஸ்டீவி வொண்டர் ஆகியோரை R&B முறையின் முன்னோடிகளாகச் சொல்லலாம். இந்த R&B இசைமுறையிலிருந்து உதித்ததே சோல் [Soul]. சிலர் சோல் இசைமுறை பழைய R&B முறையின் இன்னொரு பெயர் மட்டுமே என்று கருதுகிறார்கள். உண்மையில் அது காஸ்பல் இசை, R&B ஆகிய இசைமுறைமைகளின் இன்னிசைத் தன்மைகளை போ டிட்லி, சாம் குக், ரே சார்லஸ் முதலிய இசைக் கலைஞர்கள் தொடர்ச்சியாக மறுஆக்கம் செய்ததன் வழியாக உருவான ஒரு புதிய இசைமுறைமையே.
ஸ்மோக்கி ராபின்சன், லூதர் வாண்ட்ரோஸ், ஓடிஸ் ரெட்டிங், லயனல் ரிச்சி ஆகியோர் R&B மற்றும் சோல் ஆகிய இரு இசைமுறைமைகளையுமே வளர்த்தெடுத்தார்கள். அரீத்தா ஃப்ராங்லின் சோல் இசையின் ஆகச்சிறந்த பெண்குரல். மார்வின் கயே நவீன சோல் இசையின் மிகச்சிறந்த இசையமைப்பளாரும் கவிஞரும் பாடகரும்.

கார்டியன் இதழ் நவீன உலக இசையின் முகத்தையே மாற்றியமைத்த பத்து பேரை பட்டியலிட்டபோது அதில் மார்வின் கயேயை நான்காவதாக சேர்த்தது. R&B இசைமுறையே மார்வின் கயேயின் தொடக்கமாகும். அங்கிருந்து இன்னும் நுண்மையானதும் பண்பட்டதுமான சோல் இசை முறைமைக்கு வந்து இறுதியில் தனக்கே உரிய அரசியல் தனித்தன்மையும் அந்தரங்கத்தன்மையும் கொண்ட இசைமுறைமையை உருவாக்கினார் மார்வின் கயே. தன் இசைத்தொகைகளை தானே எழுதி இசையமைத்துப் பாடித் தயாரித்தார். பியானோ, கீபோர்டுகள், முழவுகள் போன்றவற்றை அவர் திறம்பட வாசிப்பார். வேகமும் கூர்மையும் கொண்ட அவரது குரல் அதேசமயம் இனிமையும் கொண்டது.
அவரது இசை, சோல் இசைமுறையை படைப்பூக்கத்துடன் மறு ஆக்கம் செய்ததோடு சமூக மாற்றத்துக்கான கருவியாகவும் ஒலித்தது. அவரது பல இசைத்தொகைகள் நிறவெறிக்கு எதிராகவும் (What's Going On?) பாலியல் உரிமைக்காகவும் (Let's Get It On) குடும்ப அமைப்பின் வலிமைக்காகவும் (Here, My Dear) குரலெழுப்புபவை.

மார்வின் கயே கற்பனையழகு மிக்கக் கதைப்பாடல்கள் முதல் வேகமான துள்ளல்பாடல்கள் வரை வகைவகையாக இசையமைத்திருக்கிறார். தன் வளர்ச்சிபடியின் ஒவ்வொரு கட்டத்திலும் மார்வின் கயே அந்தரங்க சுத்தியையும் தீவிரமான உணர்ச்சிகரத்தன்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இசையில் மட்டுமே ஆறுதலைக் கண்டடைந்த துயருற்ற இதயம் கொண்டவர் மார்வின் கயே. அவரது இசை இதமளிப்பது. அவரது பாடல்கள் தியானங்கள். தாக்குபிடித்து வாழ்வதற்கான அவரது ஒரே உத்தியாக இருந்தது இசைதான்.

மார்வின் கயே 1939ல் வாஷிங்டன் டிசியில் பாதிரியார் 'மார்வின் பெண்ட்ஸ் கே'-யின் மூன்று பிள்ளைகளில் இராண்டாமவராக பிறந்தார். செவந்த் டே அட்வெண்டிஸ்டுகள் தேவாலயத்திலிருந்து உடைந்து உருவான 'கடவுளின் இல்லம்' என்ற அடிப்படைவாதக் கிறித்தவ தேவாலயத்தில் தீவிரமான மத போதகராக இருந்தார் அவரது தந்தை. அந்த தேவாலயம் புராதன யூத மதக்கோட்பாடுகளையும் பெந்தகொஸ்தே கோட்பாடுகளையும் கலந்து உருவானது. அது தன் உறுப்பினர்களுக்கு ஓய்வு, விடுமுறை, கொண்டாட்டங்கள், கலைகள், விருந்துகள் அனைத்தையுமே தடை செய்தது.

மார்வின் கயே மூன்றுவயதிலேயே தேவாலயத்தில் கூட்டு ஆராதனைகளில் பாட ஆரம்பித்துவிட்டிருந்தார். ஐந்தாம் வயதில் தனித்து பாடத் தொடங்கினார். தேவாலய இசைக்குழுவிலிருந்துதான் அவர் பியானோ, முழவுகள் போன்றவற்றில் தன்னுடைய தொடக்கக் கல்வியை பெற்றார். ஒரு கொடுங்கனவுபோலிருந்த தன் இளமைப்பருவ குடும்பச்சூழலிலிருந்து தப்ப அவருக்கு இசை ஒரு சரணாலயமாக இருந்தது.

அவரது தந்தை மதவெறியரும் கண்டிப்பானவருமாக இருந்தமையால் குழந்தைகள் செய்யும் எதையுமே கண்டிப்பது அவரது வழக்கம். அவர் மார்வினை அனேகமாக தினமும் அடிப்பதுண்டு. இந்த இளம்பருவ அனுபவங்கள் அவரை வாழ்நாள் முழுக்க கொந்தளிப்பானவராகவும் குழப்பமானவராகவும் இருக்கும்படிச் செய்தன. பட்டப்படிப்புக்குப் பின் மார்வின் கயே விமானப்படையில் சேர்ந்து சிலகாலம் பணியாற்றி மீண்டுவந்து தெருவோர இசைக்குழுக்களில் பாட ஆரம்பித்தார்.

இக்காலகட்டத்தில்தான் அவர் கொக்கெய்ன் போன்ற போதைப்பொருட்களுக்கு அறிமுகமானார். மெல்ல அவர் மேலும் பெரிய இசைக் குழுக்களான 'ரெயின்போஸ்', 'மூன்-க்ளொஸ்' போன்றவற்றுக்குச் சென்றார். மூன்-குளோஸ் குழு சிகாகோவுக்கு சென்றபோது மார்வின் கயே அவர்களுடன் சிகாகோ சென்று குடியேறினார்.

1961ல் டெட்ராய்டில் பாடும்போது மார்வின் கயேயின் இனிய ஆழமான குரலும் பாட்டும் முறையும் அக்காலத்தில் அமெரிக்காவிலிருந்த மிகப்பெரிய இசைவெளியீட்டகமான மோ-டவுன் ரிகார்டிங் கம்பெனியின் இயக்குநரான பெர்ரி கார்டியைக் கவர்ந்தது. ஆனால் ஆரம்பகாலத்தில் அந்நிறுவனத்தில் பாடிவந்த பிரபலங்களான ஸ்மோக்கி ராபின்சன் போன்றவர்களின் பாடல்களில் முழவுக்கலைஞராகவும் பியானோ வாசிப்பவராகவும் பணியாற்றும் வாய்ப்பு மார்வின் கயேவுக்குக் கிடைத்தது. பெர்ரி கார்டியின் தங்கை அன்னாவை காதலித்து மார்வின் கயே மணம்புரிந்து கொண்டார். அன்னா மார்வின் கயேயை விட பதினேழு வருடம் மூத்தவர்.
முதலில் தனிக்குரலாகப் பாட வாய்ப்பு கிடைத்தபோது மார்வின் கயே தன் தொண்டையுடன் போராடினார். முதல் முயற்சிகள் பரிதாபகரமான தோல்விகளாகவே இருந்தன. 1962ல் வெளிவந்த 'Stubborn Kind of Fellow' சுமாரான வெற்றியைப் பெற்றது. அவரது அடுத்த இரண்டு ஒருபாடல் தொகைகளான 'Hitch Hike' and 'Can I Get a Witness' அமெரிக்க விற்பனை அட்டவணையில் முப்பதுக்குள் வந்தன.

1963ல் வெளிவந்த Pride and Joy மூலமாக மார்வின் கயே முதல் பத்துக்குள் இடம்பெற்றார். ஆனால் மார்வின் கயே, தான் ஒரு துள்ளலிசைப் பாடகராக பெற்ற இவ்வெற்றிகளில் மகிழ்ச்சி அடையவில்லை. ஆத்மா ததும்பும் துயரம் நிறைந்த இன்னிசைப் படல்களையே அவர் விரும்பினார். வேகமான தாளம் கொண்ட நடனப்பாடல்களைப் பாடும்படி மோ-டவுன் நிறுவனம் அளித்த கட்டாயங்களை உதறிய அவர் எதிர்த்திசையில் நகர ஆரம்பித்தார்.
அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் நீடித்த காலம்வரை அவரது இன்னிசை ஈடுபாட்டுக்கும் நிறுவனத்தின் வணிக நோக்கத்துக்குமான போர் நீடித்தது. “நான் எப்போதும் என் பின்பக்கத்தை ஆட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை. ஒரு முக்காலியில் நன்றாக அமர்ந்து தரமான காதல்பாடல்களைப் பாடவே ஆசைப்பட்டேன்'' என்று பிற்பாடு இதைப்பற்றி மார்வின் கயே சொன்னார்.

Buy Easy (with Tammi Terrell) [LP] Online at Low Prices in India | Amazon  Music Store - Amazon.in

1964ல் வெளிவந்த 'Together' மேரி வெல்ஸுடன் இணைந்து பாடிய இணைக் குரல்பாடல்களின் தொகை. அதன் மூலம்தான் மார்வின் கயே விற்பனைப்பட்டியலில் முதன்முதலில் முதலிடத்தைப் பெற்றார். அவர்கள் இணைந்து 'Once Upon a Time' and 'What's the Matter with You, Baby?' போன்ற புகழ்பெற்ற பல இணைக்குரல் பாடல்களைப் பாடி மேலும் மேலும் முதலிடத்திலேயே இருந்தார். 1965ல் வெளிவந்த 'Ain't That Peculiar?', 'How Sweet It Is to Be Loved by You' போன்ற தனிக்குரல் பாடல்கள் வழியாக அவர் பெரும்புகழ் பெற்றார். மோ-டவுன் நிறுவனம் வெளியிட்ட நாற்பது தனிக் குரலிசைத் தொகைகளில் முப்பத்தொன்பதிலும் அவர் விற்பனையில் முதலிடம் பெற்றார். அப்பாடல்களில் பெரும்பாலானவை அவரே எழுதி இசையமைத்தவை.

மார்வின் கயேயின் சிறந்த இணைக்குரல் பாடல்கள் பாடகியான டாம்மி டெர்ரெல்-உடன் இணைந்து பாடியவை. 1967ல் வெளிவந்த 'Ain't No Mountain High Enough’, 'Your Precious Love' முதலிய மாபெரும் வெற்றிப்பாடல்கள் உட்பட மார்வின் கயே ஏராளமான பாடல்களை அவருடன் இணைந்து அளித்திருக்கிறார். 1968ல் வெளிவந்த 'Ain't Nothing Like the Real Thing' , 'You're All I Need to Get By' முதலிய பாடல்களும் வரலாற்று வெற்றியைப் பெற்றவை.மார்வின் கயே டாம்மியுடன் ஆழமான காதலில் இருந்தார். ஆனால் இருவருமே வேறு திருமண உறவுகளில் இருந்தமையால் அவர்களால் சேர்ந்துவாழ முடியவில்லை. மார்வின் கயே தனது கசப்பான திருமண வாழ்க்கையை வாழ டாம்மி கொடுமைக்காரனான கணவருடன் வாழ்ந்தார். 1967ல் விர்ஜீனியாவில் நடந்துகொண்டிருந்த ஒரு இசைமேடையில் டாம்மி துவண்டு மார்வின் கயேயின் கைகளில் விழுந்தார். 1970ல் மூளைப் புற்றுநோய் அவரை பலிகொண்டது. அமெரிக்காவின் அழியாப்புகழ்கொண்ட காதலிசை இணை இல்லாமலாயிற்று. அந்தப் பிரிவு மார்வின் கயேயை கொடும் மனவதைக்கு ஆளாக்கியது. அப்போது வந்த 'I Heard It through the Grapevine' மார்வினின் ஒரு மகத்தான வெற்றி வெளியீடு. ஆனால் மார்வின் கயே ஆழமான மனச்சோர்வில் போதையில் மூழ்கிக் கிடந்தார்.மோ-டவுன் நிறுவனத்தின் வணிக நோக்கங்களுக்கு ஏற்ப அவர் அமைத்துக் கொண்டிருந்த காதல்பாடல்கள் அன்று அமெரிக்காவில் எழுச்சி பெற்றுக் கோண்டிருந்த கறுப்பின அரசியலுடன் தொடர்பே இல்லாத பொருளில்லா முயற்சிகள் என அவருக்கு தோன்ற ஆரம்பித்தது. 1970 முழுக்க அவர் தனிமையிலேயே கழித்தார். 'What's Going On?' என்ற பாடலின் மூலம் அடுத்த வருடம் மேலே வந்தார். அசாத்தியப் புகழ்பெற்ற இப்பாடல் அவரது பாடும் முறை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் தெளிவான வழிப்பிரிதலை அடையாளம் காட்டுகிறது. அந்தப் பாடலில் இருந்த வெளிப்படையான அரசியல் குரல் மோ-டவுன் நிறுவனத்தைக் குழப்பியது. அவர்கள் அதை வெளியிட முதலில் மறுத்தார்கள் என்றாலும் அதைமீறியே அப்பாடல் வெளியானது.
அமெரிக்க கறுப்பிசையின் முகத்தையே அந்தப்பாடல் மாற்றியமைத்தது. அந்தத் தொகையில் ஜாஸ் மற்றும் செவ்வியலிசையின் அம்சங்களைக் கலந்து சோல் இசையின் உணர்ச்சிகரமான தனித்துவத்தை நிலைநாட்டியிருந்தார் மார்வின் கயே. நிறவெறி, வறுமை, சுற்றுச்சூழல் அழிவு மற்றும் அரசியல் போராட்டங்கள் ஆகியவற்றுடன் நேரடியாக எதிர்வினையாற்றும் பாடல்களை மார்வின் கயே தொடர்ந்து அமைக்க ஆரம்பித்தார்.

இந்த இசைத்தொகையின் மாபெரும் வெற்றி தன் கலைஞர்கள் மேல் மோ-டவுன் நிறுவனத்துக்கு இருந்த இறுக்கமான கட்டுப்பாடு தளர்த்த வழிவகுத்தது. ஸ்டீவி வொண்டர் முதலிய பாடகர்கள் அதனால் தங்கள் சொந்த இசையைக் கண்டுகொண்டு முன்னேறும் வாய்ப்பினைப் பெற்றார்கள். விழியிழந்தவரான ஸ்டீவி வொண்டரின் பல ஆரம்பகாலப் பாடல்களுக்கு மார்வின் கயே தான் முழவு வாசித்திருக்கிறார்.

மார்வின் கயே தன் பாதையை மேலும் மாற்றிக் கொண்டு ஜாஸ் இசையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். காமச்சுவைகொண்ட பாடல்களை அமைத்த மார்வின் கயே 1973ல் அமைத்த 'Let's Get It On' அதன் உச்சம். அமெரிக்க இசை வரலாற்றில் மிக அதிகமாகக் காமச்சுவை கொண்ட பாடலாக அது இன்றும் கருதபப்டுகிறது. உள்ளார்ந்த காம ஏக்கமும் தவிப்பும் வெளிப்படும் அந்த பாடல் அவரது ஆகச்சிறந்த வணிக வெற்றியாகும். அத்துடன் அதற்கொரு தனித்தன்மையும் உண்டு. அரசியல் பாடல்களிலிருந்து மார்வின் கயே மீண்டும் அந்தரங்க உலகுக்குத் திரும்பியது அப்பாடல் வழியாகவேதான்.

அப்போதைய இசையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய பாடகி டயானா ரோஸ்-ஸுடன் இணைந்து 1973ல் வெளியிடப்பட்ட 'மார்வினும் டயானாவும்' என்ற இசைத்தொகைக்குப் பின் அவரது தனிக்குரல் தொகையான 'I Want You' வெளிவந்தது. R&B / சோல் இசை முறைமையின் ஆகச்சிறந்த படைப்பு அதுவே என நான் கருதுகிறேன். எல்லாமே அதில் சரியாக அமைந்து வந்திருக்கின்றன. மார்வினின் குரல் அதிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் ஆத்மார்த்தமாக உரைப்பதுபோல ஒலிக்கிறது. கவித்துவமாகப் பார்த்தாலும் நான் இதுவரைக் கேட்டவற்றில் மிகச்சிறந்த உண்மையான, உணர்ச்சிகரமான சோல் காதல் கீதத்தொகை அதுவே.அன்னா கார்டியுடனான விவாகரத்து வழக்குக்காக எழுபதுகளின் பெரும்பகுதியை மார்வின் கயே நீதிமன்றங்களில் செலவழித்தார். அவர் அதிகமாக இசைப்பதிவுகளுக்கு வர முடியாத நிலையில் மோ-டவுன் அவரது பழைய மேடைப்பாடல்களின் தொகை ஒன்றை 'Got to Give It Up' எனும் பேரில் வெளியிட அதுவும் வெற்றி பெற்றது.
1978ல் தன் விவாகரத்துக்குப் பின்னர் அவர் வெளியிட்ட 'Here, My Dear' என்ற இசைத்தொகை ஆழ்ந்த மனக்கசப்புடன் அவரது மணவாழ்க்கையைப் பற்றிப் பேசியது. பல அந்தரங்கத்தகவல்கள் அதில் இருந்தமையால் அன்னா மானநஷ்ட வழக்கு தொடுத்து பெருந்தொகையை நஷ்ட ஈடாகக் கேட்டிருந்தார். தன்னைவிட 18 வயது இளைய ஜானிஸ் ஹண்டரை மார்வின் கயே மணம் புரிந்துகொண்டார். அடுத்த இசைத்தொகைக்கான பணிகளில் ஈடுபட்டாரென்றாலும் அதை அவரால் முடிக்க முடியவில்லை. அவரது போதைப்பழக்கம் உச்சத்தை அடைந்துவிட்டிருந்தது. இரண்டாவது திருமணமும் துயரம் மிக்கதாக ஆகிவிட்டது.அமெரிக்காவில் அவரைத் துரத்திய பல வருமானவரி வழக்குகளில் இருந்து தப்ப மார்வின் கயே ஐரோப்பாவுக்கு ஓடிப்போனார். அங்கே அவர் 'In Our Lifetime' என்ற இசைத்தொகையை வெளியிட்டார். அது அவரது பிற பாடல்களிலிருந்து மாறாக ஆழமான தத்துவ நோக்கு கொண்டிருந்தது. அப்பாடலில் எழுந்த பிரதியுரிமைச் சிக்கல்களின் காரணமாக மோ-டவுன் நிறுவனத்துக்கும் அவருக்குமான உறவு முறிந்தது. கொலம்பியா நிறுவனத்துக்காகப் பாடிய பிறகு அவரைப்பற்றி தவறான செய்திகள் தொடர்ந்து வெளிவரத்தொடங்கின. போதைப்பழக்கம் முற்றியது.

Marvin Gaye's wife reveals how he tortured her

பொது இடங்களில் முறைமீறி நடந்துகொண்டார். ஆனால் அடுத்த வருடம் வெளிவந்த 'Midnight Love' ஒரு திரும்பிவருதலாக அமைந்தது. அதைத்தொடர்ந்து வெளிவந்த 'Sexual Healing' பெருவெற்றி பெற்று அவ்வருகையை உறுதிசெய்தது. மறுபடியும் மோ-டவுன் நிறுவனத்துடன் சமாதானமானார். அவர்கள் தங்கள் வெள்ளிவிழாவைக் கொண்டாடும்பொருட்டு நடத்திய மேடைநிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.மார்வின் கயேயின் வாழ்க்கை மேலும் மேலும் தனிமைகொண்டதாக ஆகியது. போதைப்பழக்கமும் தற்கொலைவிருப்ப மனநிலையும் அதிகரித்துக்கொண்டே போயின. எங்கும் போக முடியாமல் எதிலும் நிலைகொள்ளாமல் பலவருடங்களுக்கு முன் அவர் விட்டுவிட்டு வந்த தன் பெற்றோரிடமே திரும்பிப்போக முடிவுசெய்தார். அது உண்மையில் இசைவழியாகத் தன்னைத்தேடி இறங்கிய ஒரு பெரும்கலைஞனின் தீவிரப் பயணத்தின் துயரம் மிகுந்த முடிவு. தன் நிலைகெட்ட வாழ்க்கையில் ஒரு பிடிமானத்தை மீண்டும் உருவாக்கிக் கொள்வதற்கான கடைசி முயற்சி அது. ஆனால் அதுவும் மேலும் கசப்புக்கும் மனச்சோர்வுக்குமே அவரைக் கொண்டு சென்றது. எவ்வளவுதான் வீடு திரும்பினாலும் கருப்பையின் வெம்மைக்கும் பாதுகாப்புக்கும் எவரும் திரும்பிப் போக முடியாது.

மார்வின் கயேயின் தந்தை மகனின் மதம் சாராத இசையைப் பற்றி ஆழமான கசப்பு கொண்டிருந்தார். மார்வின் கயேயின் சுதந்திரமான வாழ்க்கைமுறை, பிரபலம் ஆகியவற்றை அவர் அறவே வெறுத்தார். மார்வினை அவர் நிராகரித்து தொடர்ச்சியாக அவமதித்தார். அவர்கள் நடுவே நிகழ்ந்த விவாதங்கள் கடுமையான மோதல்களில் முடிந்தன.

அவரது தந்தை மார்வினின் மனச்சிக்கலையும் சோர்வையும் பொருட்படுத்தாமல் அவரை மூர்க்கமாக வசைபாடினார். சர்வதேச இசைநட்சத்திரமான, தேசிய அடையாளமான மார்வின் கயே அந்த விவாதங்களால் மனம் புண்பட்டு கண்ணீர்விட்டு அழுதார். பலமுறை தற்கொலைக்கு முயன்றார்.

1984 ஏப்ரல் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மார்வினின் நாற்பத்தி ஐந்தாவது பிறந்தநாளுக்கு ஒரு தினம் முன்னதாக காலையில் மார்வின் கயேக்கும் அவரது தந்தைக்கும் மோதல் வெடித்தது. அவரது தந்தை அவரது தாயை ஏதோ வணிகப் பத்திரங்களை கைத்தவறுதலாக வைத்துவிட்டாரென்று சொல்லி கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். மார்வின் அதில் தலையிட்டபோது தந்தையின் சினம் அவர் மீது திரும்பியது. மோதல் வெடித்து கடும் பூசலாக மாறியது. கடும் சினத்தில் நிலைமறந்து தன் துப்பாக்கியை எடுத்து மகனை நோக்கிச் சுட்டார். தோளிலும் மார்பிலும் குண்டடிபட்டு சுருண்டு விழுந்த மார்வின் கயே பின்னர் மீண்டெழவேயில்லை.

ரெஜி தன் தந்தையின் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவோ அங்கே தங்கவோ இல்லை. அவன் அமெரிக்காவுக்குச் சென்று விட்டான். 2007, ஏப்ரல் ஒன்றாம் தேதி அவன் வாஷிங்டன் டிசி யில் உள்ள மார்வின் கயே பூங்காவிலிருந்து என்னை அழைத்தான். அங்குள்ள மிஸ்டர் மார்வின் உள்ளரங்கில் ஒருவாரம் நீண்டு நின்ற 'What's Going On?' என்ற மார்வின் கயே நினைவு நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்திருந்தான். மார்வின் கயே பாடல்களின் பழைய ஹைதராபாத் நினைவுகளில் மூழ்கிப் போன எங்களால் எதுவும் சரியாகப் பேசவே முடியவில்லை.