எந்தக் காட்சிக்கு எந்த லென்ஸைப் பயன்படுத்துவீர்கள்?

சிறந்த திரைப்படங்கள் உருவாக, சிறந்த நடிப்பு, அற்புதமான திரைக்கதை மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய குழுவினரும் வேண்டும். இதுமட்டும் போதுமா? ஒரு திரைப்படத்தின் முழுக் கட்டுமானமும் ஷாட்களில்தான் உள்ளது, எனவே, நல்ல படத்திற்கு நல்ல ஷாட்களும் வேண்டும். ஒரு திரைப்பட இயக்குனர்தான் அந்தக் குழுவின் Captain of the Ship. அங்கு வேலைசெய்கிற எல்லோரும், உங்கள் கனவை, திரைக்குக் கொண்டுவருவதற்காகத்தான் போராடுகிறார்கள். எனவே, அத்தகைய தலைமைப் பொறுப்பில் இருக்கிற நீங்கள், ஒரு காட்சியை எப்படி எடுக்கிறீர்கள் என்பதும் முக்கியம். உங்களுக்குக் கிரியேட்டிவ் கேமரா நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் ‘படம் இயக்குவதற்காக உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை வீணடிக்கிறீர்கள்’ என்று அர்த்தம். முறையற்ற கேமரா நகர்வினால் நல்ல திரைக்கதையைக் கூட நீர்த்துப்போகச் செய்கிறீர்கள். அப்படி ஒருபோதும் செய்யாதீர்கள்.  

சிறந்த நடிப்பைக் கூட மோசமான கேமரா வழிமுறைகளில் படம்பிடித்திருந்தால், அக்காட்சியைத் திரையில் பார்க்கும்பொழுது ஏமாற்றமே மிஞ்சும். நல்ல நடிப்பு, நல்ல சினிமோட்டோகிராஃபி நுட்பத்தினால்தான் மெருகேறுகிறது. காட்சிக்கான மனநிலையைக் கொண்டுவருவதில், கேமராவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. மறந்துவிடாதீர்கள்! வாழ்க்கையில் நீங்கள் இயக்குனராக வரவேண்டுமென்றால், ஒரு இயக்குனர் போல காட்சியைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சிறந்த படம் உருவாக வேண்டும் என்ற அக்கறையிருந்தால், நீங்கள் ஒவ்வொரு ஷாட்டையும் நன்கு கவனித்து உருவாக்க வேண்டும். 

கேமரா ஒரு வெற்று ஓவியச் சட்டகம் போன்றது. அதற்குள் ஒரு பொருளை அல்லது மனிதரை வைத்துவிட்டால், அந்தப் புள்ளியிலிருந்து/ நொடியிலிருந்து கதைசொல்லத் துவங்குகிறீர்கள். ஒரு நடிகரை எந்த இடத்திலிருந்து, எந்த நிலையிலிருந்து, எவ்வளவு தொலைவிலிருந்து, எந்தக் கோணத்திலிருந்து படம்பிடிக்கிறீர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனெனில், இதில் ஏற்படுகிற சிறு சிறு மாற்றங்கள் கூட, உங்கள் கதையின்மீது பாதிப்புச் செலுத்திக்கொண்டேயிருக்கிறது. அது உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அந்த மாற்றங்கள் பார்வையாளர்களின் ஆழ்மனதில் நிகழ்ந்தே தீரும். கேமராவின் உயரத்திற்கேற்ப, காட்சியின் பரிமாணத்திலும் மாற்றங்கள் நிகழும். கேமராவின் உயரத்தை மாற்றினால், நீங்கள் வேறொரு கதையைச் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். கேமராவை வேறு கோணத்திற்கு நகர்த்தினால், அதில் வேறுவிதமான உணர்ச்சிகளை உருவாக்குகிறீர்கள். சட்டகத்திற்குள் நடிகர்களை எங்கே வைக்கிறீர்கள், எப்படி நகர்த்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அக்கதாபாத்திரங்களைப் பற்றி நாம் என்ன உணர்கிறோம் என்பதிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. 

எனவே, இயக்குனராக நீங்கள் ஒரு ஷாட்டைப் படம்பிடிப்பதற்கு முன்னால், இந்த எல்லாவற்றையும் கணக்கில் வைத்திருக்க வேண்டும். எப்படி ஒரு கேமராவின் நகர்வு கதையின் உணர்வை மாற்றுகிறது? கதாபாத்திரத்தை நகர்த்தாமல் கேமராவை மட்டும் நகர்த்தினால் என்னவாகும்? அல்லது கதாபாத்திரத்தை மட்டும் நகர்த்தி, கேமராவை அப்படியே ஒரே இடத்தில் வைத்திருந்தால், காட்சியில் என்ன பரிமாணம் கிடைக்கும்? ஒரு கதாபாத்திரத்தை, தரை உயரத்திலிருந்து அல்லது கண் மட்டத்திற்கு நேராகக் கேமராவை வைத்துப் படம்பிடிக்கிறபொழுது என்ன தோற்றம் கிடைக்கிறது? அது கதையில் என்ன தாக்கத்தைக் கொண்டுவருகிறது? என எல்லாவற்றையும் அறிந்துவைத்திருங்கள். மிக முக்கியமாக கேமராவின் லென்ஸை மாற்றுவதால், காட்சியியல் தோற்றம் எப்படி மாறுகிறது? என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஷார்ட் லென்ஸ்(Short Lens), லாங் லென்ஸ் (Long Lense) என இரண்டிற்குமான வேறுபாடு, இவையிரண்டில் எந்த லென்ஸை, எந்த ஷாட்டிற்குப் பயன்படுத்தலாம், எந்த லென்ஸை எப்போது பயன்படுத்த வேண்டும், இவையிரண்டிற்கும் மத்தியில் உள்ள மீடியம் லென்ஸின் (Medium Lens) பயன்பாடு என்ன? போன்றவற்றை இக்கட்டுரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. மாதிரி வடிவில் இருப்பது, முழுவடிவம் பெறுகிறபொழுது இன்னும் நிறைய கற்றல் அனுபவங்களைத் திறக்கும். 

தொலைவுக் காட்சியில் லாங் லென்ஸ்

லாங் லென்ஸ் உங்கள் சப்ஜெக்ட்களில் அல்லது முக்கியக் கதாபாத்திரத்தின்மீது கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் அவற்றைச் சுற்றியுள்ள சூழலையும் வெளிப்படுத்துகிறது. கதாபாத்திரத்தையும், கதாபாத்திரம் இப்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் ஒரே நேரத்தில் இந்த லாங் லென்ஸ் உதவியால் சட்டகத்திற்குள் கொண்டுவரமுடியும். ஆனால், அதற்கேற்ற வகையில், கேமராவிற்கும் கதாபாத்திரத்திற்கும் இடையேயான தொலைவும், கதாபாத்திரத்திற்கும் அதன் பின்னணிச் சூழலுக்குமான இடைவெளியும் கட்டமைக்கப்பட வேண்டும். அதாவது லாங் லென்ஸ் பயன்படுத்துகையில், கேமராவானது நடிகரிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, நடிகருக்கும், அவரது பின்னணிக்குமான தொலைவு அதைவிட அதிகமாக இருத்தல் அவசியம். அப்போதுதான் இந்த நுட்பம் திறம்பட வேலைசெய்யும். பார்வையாளர்களுக்குக் கடத்தவேண்டிய உணர்வையும் சரியாகக் கடத்தும். ஞாபகத்தில் கொள்ளுங்கள், கேமராவிற்கும் நடிகருக்குமான இடைவெளியைக் காட்டிலும், நடிகருக்கும் அவரது பின்னணிக்குமான இடைவெளி அதிகமாக இருக்க வேண்டும். 

The Book of Eli திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த ஃப்ரேம்களைக் கவனியுங்கள், 


லாங் லென்ஸ் (long lens) எல்லாவற்றையும் out of focus-ல் காட்சிப்படுத்துகிறது, கதாபாத்திரத்தின் முகம் ஓரளவிற்குத் தெளிவாகத் தெரிகிறது. எனவே நம் கவனச்செறிவு முழுவதும் அந்நடிகர் மீதும், அவரது வெளிப்பாட்டின் மீதும் குவிகின்றன. இக்காட்சியைப் பெற, நடிகரிடமிருந்து வெகு தூரத்தில் கேமரா வைக்கப்பட்டிருக்கும், நடிகரைச் சுற்றியுள்ள மற்ற பொருட்கள் அல்லது மற்ற துணை நடிகர்கள் கேமராவிற்குச் சற்று நெருக்கமாக இருப்பார்கள். நீங்கள் நடிகருக்கு ஃபோகஸ் செய்கிறபொழுது, முன்னால் உள்ள பொருட்கள் அல்லது நடிகர்கள், அதேபோல பின்னணிச் சூழல், பின்னணியில் உள்ள விஷயங்கள், அனைத்தும் out of focus-ற்குச் சென்றுவிடுவதால், நம்மால் அவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடிவதில்லை. மங்கலானதாகவே தோன்றுகின்றன. மையக்கதாபாத்திரத்தை மட்டும் அல்லது இந்த ஷாட்டில் யார் மீது பார்வையாளர்களின் கவனம் இருக்க வேண்டுமோ, அவர்களுக்கு ஃபோகஸ் செய்யப்பட்டிருப்பதால், நாம் அவரை மட்டும் தெளிவாகப் பார்க்கிறோம். இந்த விளைவை இன்னும் யதார்த்தமாக்கவும், இன்னும் மிகைப்படுத்திக் காட்டவும், கேமராவுக்கு முன்னால் உள்ள மற்ற நடிகர்கள், கேமராவுக்கு முன் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்துசெல்ல வேண்டும். அவர்களது உருவம் மங்கலாகத்தான் தோன்றும். எனினும், அந்த மங்கலான உருவங்கள் கடந்து செல்வதற்கு மத்தியில், தூரத்தில் கதாநாயகன் மட்டும் தெளிவாகத் தோன்றுவது, காட்சியியல் ரீதியிலான பலத்தைக் கூட்டுகிறது. 


நடிகர் கேமராவை நோக்கி வேகமாக நகர்வதுபோலத் தோன்றாது,, ஆனால், சட்டகத்தின் குறுக்கும் நெடுக்குமாக நகர்பவர்கள், விரைவாக நகர்வதுபோலத் தோன்றும். எனவே, குழப்பமான சூழலுக்குள் கதாபாத்திரம் சிக்கியிருப்பது அல்லது அதற்குள் போராடுவது போன்ற உணர்வை இவ்வகைக் காட்சியமைப்பு உருவாக்குகிறது. 


கேமராவின் நிலையையும், கேமராவின் முன்னால் குறுக்கும் நெடுக்குமாக நகர்கிற மற்ற சப்ஜெக்ட்களின் நிலையையும், அவர்களிலிருந்து தூரத்தில் நிற்கவைக்கப்பட்டிருக்கிற மையக்கதாபாத்திரத்தின் நிலையையும் கவனியுங்கள். இந்த தூர இடைவெளி சரியாகக் கட்டமைக்கப்படுகிறபொழுதுதான், ஷாட்டில் அதன் பரிமாணத்தை உணரமுடியும். 

அடுத்து ’ப்ளாக் ஸ்வான்’ திரைப்படத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிற உதாரணத்தைப் பார்ப்போம். இது, ஒரு லாங் லென்ஸைப் பயன்படுத்தி, ஒரு கதாபாத்திரத்துடன் இணைந்து கேமரா Pan செய்யப்படுகிறபொழுது, சட்டகத்தில் உள்ள முன்னணி மற்றும் பின்னணிக்கூறுகளையும் இது எப்படி வெளிப்படுத்துகிறது, என்பதை உணர்த்துகிறது. மேலும், இது ஒரே ஷாட்டில் எடுக்கப்படுகிறது. காட்சி நிகழ்கிற இடத்தைச் சட்டகத்திற்குள் கொண்டுவருவதற்கு, நீங்கள் ஒரு வைட் ஷாட் மூலம் துவங்கி, பின்பு நடிகர்களுக்கு மீடியம் ஷாட் மற்றும் க்ளோஸ் அப் ஷாட் என்று கட் செய்து காண்பிக்கலாம், என்பதுதான் பெரும்பாலான படப்பிடிப்புக் குழுவினர் பின்பற்றுகிற வழிமுறையாக உள்ளது. ஆனால், நன்கு திட்டமிடப்பட்ட ஒரே ஷாட், உங்களுக்காக இந்த எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறது. 

இங்கே கேமரா, அறையைச் சுற்றிலும், கதாபாத்திரத்தைப் பின் தொடர்வதைத் தவிர, வேறு எதுவும் செய்யவில்லை, ஆனால், நடிகர்களை கேமராவுக்கு நெருக்கமாக வைப்பதன்மூலமும், அதேபோல பின்னணியில் உள்ள நடிகர்களைத் தொலைதூரத்திற்கு நகர்த்துவதன்மூலமும், முழு காட்சியையும் ஒரே ஷாட்டில் தெளிவாகப் பெறமுடிகிறது. 


இந்தச் சட்டகங்களையே எடுத்துக்கொள்ளலாம், நம் கவனம் குவிய வேண்டியது மையக்கதாபாத்திரமான, கருப்பு உடை அணிந்திருக்கிற பெண் மீதுதான். ஆனால், அவருக்கு முன்பாகவும், பின்பாகவும் மற்ற துணைக் கதாபாத்திரங்களும் இந்தச் சட்டகத்திற்குள் உள்ளனர். அவர்களின் மீதெல்லாம் கேமராவின் ஃபோகஸ் பதியவில்லை. மத்தியில் நிற்கிற பெண், அவரது நகர்விற்கு ஏற்ப, கேமரா பான்(Pan) செய்து பின்தொடர்கிறது, அவரையேச் சட்டகத்திற்குள் தொடர்ந்து தக்கவைக்கிறது. லாங் லென்ஸ் பயன்படுத்துவதால், முன்னணி மற்றும் பின்னணிக் கதாபாத்திரங்கள் மங்கலாக்கப்பட்டு, மையக்கதாபாத்திரம் மட்டும் தெளிவாகத் தெரிகின்றன. ஃப்ரேமில் இப்படியான ஒரு out of focus வருவதற்கு, அந்நடிகர்கள் கேமராவிலிருந்து எவ்வளவு தொலைவில் நிற்கிறார்கள்? என்பதும் முக்கியம். 

ஒரு ஷாட்டிற்கு லாங் லென்ஸ் பயன்படுத்துகிறபொழுது, பின்னணிச்சூழலானது சப்ஜெக்டிலிருந்து விரிகிறது ஆனால், முன்னணியில் உள்ள பொருட்கள் சப்ஜெக்டை நோக்கிச் சுருங்குகின்றன. 

தி ரோட், திரைப்படத்திலிருந்து உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஷாட்டைக் கவனியுங்கள், 


நடிகர் மையத்தில் இருக்கிறார், சட்டகத்தின் முன்னணி மற்றும் பின்னணி பொருட்கள் தோன்றும் விதத்தைப் பார்க்கிறபொழுது, அது உண்மையில் இருப்பதைவிட, இந்தச் சட்டகத்தில் அவை நடிகருக்கு மிக நெருக்கமாக உள்ளதுபோலத் தோன்றுகின்றன. ஆனால், இயல்பில் அவை இவ்வளவு நெருக்கமாக இருக்காது, அதுவே லாங் லென்ஸ் பயன்படுத்திக் காட்சிப்படுத்தப்படுவதால், நடிகருக்கு நெருக்கமாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. எனவே, ஒரு லென்ஸை எங்கு, எப்போது பயன்படுத்தவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் காட்சிக்கு என்னவகையான தோற்றம் வேண்டும், என்பதைப் பொறுத்தே நீங்கள் லென்ஸைத் தேர்ந்தெடுக்க வேண்டும். லாங் லென்ஸ் பயன்படுத்த வேண்டிய நேரத்தில், ஷார்ட் லென்ஸ் பயன்படுத்தி ஒரு காட்சியைப் படம்பிடித்தால், அது கடத்தவேண்டிய உணர்வைச் சரியாக வெளிப்படுத்தாது. 

இந்த உதாரணத்தில், சட்டகத்தின் ஒரு பக்கத்தில் நடிகரை வைத்திருக்கிறோம், சட்டகத்தின் மறுபக்கத்தை (அதாவது நடிகருக்கு எதிர்ப்புறமான இடத்தை) முன்புற சப்ஜெக்ட் நிரப்புவதன் மூலம், பார்வையாளரின் கவனத்தை கதாபாத்திரத்தினை நோக்கி ஈர்க்கும் அதே வேளையில், நீங்கள் சுற்றுப்புறச் சூழல் சார்ந்தும் ஒரு வலுவான முத்திரையைப் பதிக்கிறீர்கள். 


அண்மைக் காட்சியில் லாங் லென்ஸ்

லாங் லென்ஸ் என்பது ஒரு டெலிஸ்கோப்பைப் (தொலைநோக்கியைப்) பயன்படுத்துவது போன்றது, என்று கற்பனை செய்துகொள்ளுங்கள், ஏனெனில், நீங்கள் செயலுக்கு நெருக்கமாக வருகிறபொழுது, கேமரா இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வையிலிருந்து, அதனைச் சுருக்கும் செயலைத்தான் இந்த லாங் லென்ஸ் செய்கிறது, எனவே, இதனைக் கேமராவின் பார்வையைக் குறுக்கிக் காட்டும் கருவியாக நினைத்தால் நல்லது. கேமராவில் லாங் லென்ஸ் பொருத்தி, அதனை நடிகருக்கு நெருக்கமாக வைக்கிறபொழுது, அது நீங்கள் ஃபோகஸ் வைத்திருக்கிற நடிகரைத் தவிர, வேறு எதையும் காண்பிக்காது, எனவே, இது க்ளோஸ் அப் ஷாட்கள் மற்றும் எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப் ஷாட்களுக்கு ஏற்றதாக உள்ளது. ஏதாவதொரு காட்சியில், பார்வையாளர்களின் முழுக்கவனமும் நடிகரின் மீதுதான் பதிந்திருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு லாங் லென்ஸ் பயன்படுத்தி, நடிகருக்கு நெருக்கமாக கேமராவை வைத்துப் படம்பிடிப்பதுதான் மிகச்சிறந்த வழிமுறை. 

Image result for difference between long lens and short lens

இதற்குமுன்பு பார்த்த தொலைவுக் காட்சியைப் பயன்படுத்த லாங் லென்ஸ்கள்
என்பதில், பின்னணிச் சூழலை ஓரளவிற்கேனும், அல்லது கதாபாத்திரத்திற்கும் பின்னணி இடைவெளிக்கும் ஏற்றபடி, பின்னணிச் சூழலின் வெளிப்பாட்டைப் பெறுகிறோம். ஆனால், அதுவே, லாங் லென்ஸினை சப்ஜெக்டிற்கு மிக அருகாக வைக்கிறபொழுது, ஃப்ரேம் முழுவதும் நாம் அந்த நடிகரின் முகத்தை மட்டுமே பார்க்கமுடியும். பின்னணிச் சூழல் என்பது அனுமானிக்க முடியாததாகவும், ஸ்தூலமாகவுமே காட்சிதரும்
கேமராவில் லாங் லென்ஸைப் பொருத்தி, அதை நடிகருக்கு நெருக்கமாக வைத்து, கதாபாத்திரத்தின் கண்களில் ஃபோகஸ் வைத்துப் படம்பிடியுங்கள். நடிகரின் கண்கள் அவ்வளவு தெளிவாகக் காட்சி தரும், ஆனால், பின்னணிச் சூழல் எதுவுமே தெரியாது. நமக்குக் காட்சியில், நடிகரின் கண்களும், அதில் தெரிகிற உணர்வும்தான் முக்கியம். மற்ற எதுவுமே இப்போது தேவையில்லை. எனவே, லாங் லென்ஸ் பயன்படுத்தி அந்தக் கண்களைப் படம்பிடிக்கிறோம். இதோ அதற்கான உதாரணத்தைப் பாருங்கள். 

இரு கதாபாத்திரங்களின் கண்களும் ஒன்றுக்கொன்று சந்தித்துக்கொள்கின்றன, எனவே, இந்தக் கண்பார்வை தொடர்புதான் முக்கியமானது. அதைத்தான் சட்டகம் முழுவதும் பார்க்கிறோம். Hard Candy என்ற திரைப்படத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த உதாரணத்தில், பார்வையாளரான நீங்கள், அந்தக் கண்களைத் தவிர, வேறெதிலும் கவனம் செலுத்தமுடியாது. இவ்விரு கண்களும் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்கின்றன, என்பதை இந்தச் சட்டகத்தைத் தவிர வேறெந்த முறையிலும் உங்களால் பெறமுடியாது. அப்படியே பெற்றாலும், இத்தகைய காட்சி ரீதியிலான தாக்கம், அந்த ஷாட்களில் கிடைக்குமா? என்பது சந்தேகமே!

இதே சட்டகங்களை இன்னும் கூர்மையாகக் கவனித்துப் பாருங்கள், அந்த இரண்டு கண்களுக்கு மட்டும்தான், ஃபோகஸ் இருக்கும், கண்களைத் தவிர முகத்தின் மீதி பகுதிகூட, அவுட் ஆஃப் போகஸில்தான் காட்சிதருகிறது. அதுவே, லாங் லென்ஸை, நடிகருக்கு நெருக்கமாக வைத்துப் படம்பிடிப்பதன் அனுகூலம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். முழுக் கவனமும் நடிகரின் கண்களில்தான் உள்ளது என்பதால், நடிகரின் ஒத்துழைப்பும் இதில் மிக முக்கியம். நடிகரின் முகம் மட்டுமல்ல, கண்களும் உணர்வுகளைக் கடத்தும், என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம், எனவே, முடிந்தால் நடிகர்கள் இந்த ஷாட்டை எடுக்கிறபொழுது, முகத்தை கேமராவை நோக்கியோ, அல்லது கேமராவிலிருந்து விலகியோ நகர்ந்துவிடவேண்டாம் என்று எச்சரிக்கை செய்யுங்கள். ஏனெனில், அவர்களது முகம் சிறிது அசைந்தாலும், ஃபோகஸ் புள்ளி மாறிவிடும், பின்பு பார்வையாளர்களுக்கு, கதாபாத்திரத்தின் அந்தக் கண்கள்மீது கவனம் செலுத்துவது கடினமாகிவிடும்.

கண்களுக்கு மட்டும்தான் ஃபோகஸ் உள்ளது, மீதி முகம் தெரியவில்லை, அது மங்கலாகத்தான் தோன்றுகிறது என்பதற்காகக் கவலைப்பட வேண்டாம், ஏனென்றால், இவ்வகையான காட்சியியல் கட்டமைப்புதான், நடிகரின் கண்களுக்கு நமது கவனத்தைச் செலுத்துகின்றன. இயல்பிலேயே நமது கண்கள், மங்கலான பிம்பங்களைக் காட்டிலும், தெளிவான பிம்பத்தை நோக்கித்தான் குவிகின்றன. 

இப்பொழுது அடுத்த ஃப்ரேமினைக் கவனிப்போம், 


மூன்றாவது சட்டகம் மிக நெருக்கமானதாகத் தோன்றவில்லை, ஆனால், இது இன்னும் நடிகரின் முகபாவனைகளில் கவனத்தை ஈர்க்கும் விளைவைக் கொண்டுள்ளது. முந்தைய இரு சட்டகங்களைக் காட்டிலும், மூன்றாவதில் பின்னணிச் சூழல் சற்று வெளிப்படுகிறது. ஃப்ரேமில் அதற்கான இடம் கணிசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், அது எந்தப் பின்னணி? என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இப்போதும், நமது கவனம் முழுவதும், அந்தக் கதாபாத்திரத்தின் முகத்தில்தான் உள்ளது. 

அக்கதாபாத்திரத்தின் முடிகள், உடை மற்றும் பின்னணி போன்றவற்றையும் ஓரளவு பார்க்கிறோம். எனினும், கேமராவானது, அந்தக் கதாபாத்திரத்தின் முக பாவனைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மற்றவையெல்லாமே, அதற்கடுத்தபட்சம் தான். இந்த நுட்பம், குறிப்பிடும்படி, நன்றாக எடுபடுகிறது, ஏனென்றால், அவள் சட்டகத்தின் வலது ஓரத்தில் இருக்கிறாள், திரையில் வலது ஓரத்தைப் பிடித்துக்கொண்டாள், அத்தோடு தோள்பட்டைக்கு மேல், கணிசமான இடத்தை விட்டுக்கொடுத்திருக்கிறாள். இதற்கடுத்த நான்காவது சட்டகத்தைக் கவனிப்போம். 


இதில் அவன் திரையின் இடதுபுறமாக வைக்கப்பட்டிருக்கிறான், அதேபோல, வலதுபுறம் அதிக இடைவெளி கிடைக்கிறது. இதனால், அந்தப் பெண் சட்டகத்தில் உருவாக்கிய அதே விளைவுதான், இந்நான்காவது ஷாட்டிலும் உண்டாகிறது. எனவே, இரு ஷாட்களிலும் ஒரு ஒத்த தன்மையை நம்மால் உணரமுடியும். இது காட்சியில் ஒரு சீரான ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. 

 லாங் லென்ஸைப் பயன்படுத்தி, ஒரு காட்சியை வடிவமைத்து வருகிறோம். இதில் லாங் லென்ஸ் ஷாட்களின் தொடர்ச்சியாக நிகழ்கிற, இந்தக் காட்சியின் அடுத்த சட்டகம், அதாவது இறுதிச் சட்டகம், கதாபாத்திரத்தைச் சற்று பின்னாலிருந்து ஆனால், பக்கவாட்டிலிருந்து காட்சிப்படுத்துவதைக் காண்பிக்கிறது. அதே லாங் லென்ஸ் ஷாட் தான், ஆனால், கேமராவிற்கும், நடிகருக்கும் இடையேயான தூர இடைவெளி சற்று அதிகமாகிறது, அதேபோல கேமரா வைக்கப்பட்டிருந்த நிலையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. கேமராவானது அந்நடிகரைப் பக்கவாட்டிலிருந்து படம்பிடிக்கிறது. 


இந்த இறுதிச் சட்டகத்தில், நடிகரின் முகமானது திரையின் இடது ஓரத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, திரையில் வலது பக்கத்திற்கு அதிகமான வெற்றிடம் கிடைக்கிறது. அந்த இடத்தை நடிகரின் கையசைவுகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அந்த வெற்றிடம் காரணமின்றி விடப்படவில்லை, நடிகரின் கையசைவுகள் அந்த வெற்றிடத்தை நிரப்புகின்றன. இப்போதும் அந்நடிகரின் முகத்திற்குத்தான் அதிகமான ஃபோகஸ் உள்ளது, முகத்தோடு கைகளை ஒப்பிட, கைகளுக்கு ஃபோகஸ் கொஞ்சம் குறைவு, இந்த ஃப்ரேமிலும் உங்களால் பின்னணிச் சூழலைத் தெளிவாகக் கண்டுணர முடியாது. எனவே, நம் கவனம் பெரும்பாலும், நடிகரின் முகத்தில்தான் குவிகின்றன. 

அவரது முகத்தில் கவனம் செலுத்துவதால், அவரது கைகளுக்குக் கூட அவ்வளவாகக் கவனம் செல்வதில்லை. எனினும், கைகளின் அசைவுகளைப் பார்க்கிறோம், ஆனாலும், பெரும்பாலான கவனம் முகத்தில்தான். நெருக்கமான லாங் லென்ஸில் இந்தக் காட்சி படம்பிடிக்கப்பட்டிருப்பதால், அந்நடிகரை நாம் உன்னிப்பாகப் பார்க்கிறோம், அந்நடிகரின் முகத்தில் நம் கவனம் முழுவதையும், இறுக்கமாகப் பதிப்பதன்மூலம், அவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்கிறோம். இத்தகைய கவன ஓர்மைமிக்க காட்சியை உருவாக்குவதற்கு, லாங் லென்ஸ் பயன்பாடு அளப்பறியது. 

இனி, இந்தச் சட்டகத்தை உருவாக்குவதற்குத் தேவையான கேமராவின் நிலையை, உதாரணத்தில் காணலாம். 


எப்போதுமே, கேமராவிற்கும், நடிகருக்குமான இடைவெளியைப் பொறுத்து, சட்டகத்தின் தோற்றத்தில் மாற்றங்கள் நிகழ்கின்றன.

தொலைவுக்காட்சிக்கு குறுகிய லென்ஸ் – ஷார்ட் லென்ஸ்

லாங் லென்ஸ்கள் பின்னணி இடத்தை மறைத்துவிடுகின்றன என்றால், ஷார்ட் லென்ஸ்கள், சட்டகத்தில் அந்தப் பின்னணி இடத்தின் உணர்வினை உண்டாக்குகின்றன. காட்சி நடக்கிற பின்னணிச் சூழலுக்கு, இவை முக்கியத்துவம் கொடுக்கின்றன. பெரும்பாலும் பரந்த நிலப்பரப்புகளைக் காண்பிக்கப் பயன்படுவதாகயிருந்தாலும், அல்லது பெரிய உட்புற இடத்தைக் காட்சிப்படுத்துவதாக இருந்தாலும், இந்த ஷார்ட் லென்ஸ்கள் திறம்படச் செயல்படுகின்றன. இவை ஒரு சிறிய அறைக்குக் கூட பெரிய அறை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும், அதேநேரத்தில் பெரிய வெற்றிடம்(இடம்) என்றால் அதைப் பாதாளக் குகை போலத் தோன்றச்செய்யும். எல்லாவற்றையும் மிகைப்படுத்தி, பெரிய அளவில், காட்சியியல் பிரம்மாண்டத்துடன் காட்டக்கூடியன இந்த ஷார்ட் லென்ஸ்கள். 

The Adjustment Bureau படத்திலிருந்து உதாரணமாகக்கொடுக்கப்பட்டுள்ள ஷாட்களில், வலதுபுறமாக ஒரு சிறிய டாலி நகர்வு, இந்த இடத்திற்கான உணர்வை அதிகரிக்கிறது, 

(

The Adjustment Burea
Directed by George Nolf

இந்த இடத்தை லாங் லென்ஸ் கொண்டு படம்பிடித்து, அதன் பிரம்மாண்டத்தை வெளிக்கொண்டுவர முடியாது. ஏனெனில், அவை பின்னணிச் சூழலை மறைப்பதற்குத்தான் அதிகமாகப் பயன்படுகின்றன. அதுவே, சட்டகம், பின்னணிச்சூழலால் நிரம்பப்பட்டிருக்க வேண்டுமென்றால், அதற்கு ஷார்ட் லென்ஸ்தான் சரியான தேர்வு. இந்த ஷாட்டில் கேமரா இயக்கமோ, கதாபாத்திர இயக்கமோ பெரியளவில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கேமரா பான்(Pan) செய்யப்படக்கூட இல்லை. வெறுமனே டாலியில் சற்று ஃப்ரேமின் வலப்புறமாக நகர்கிறது. அவ்வளவுதான். அதுதான், பின்னணிச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், இத்தகைய காட்சியியல் உணர்வை வெளிப்படுத்துகிறது. அறையின் அளவு குறித்து நீங்கள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பினால், ஏதேனும் அல்லது யாராவது ஒருவர் தோராயமாக அந்த இடத்தின் மையத்தில் இருப்பது முக்கியம். அவை ஒருவேளை கேமராவுக்கு மிக நெருக்கமாக இருந்தால், ஃபோகஸ் (கவனம்) முழுக்க முழுக்க கதாபாத்திரத்தின் மீதுதான் இருக்கும், இடத்தின் மீது திரும்பாது, அதுவே, அவை வெகு தொலைவில் இருந்தால், பக்கவாட்டு இயக்கத்தில், அந்த இடத்தின் பிரமிப்பூட்டும் உணர்வு ஷாட்டில் வெளிப்படாது. அந்த பிரம்மாண்டத்தின் அளவை நிர்ணயிக்க, சராசரி உருவம் ஒன்று ஒப்பிடுவதற்குத் தகுந்தாற்போல கிட்டத்தட்ட மையத்தில் நிற்க வேண்டும். 

கேமராவை நோக்கி வருதல் அல்லது கேமராவிலிருந்து விலகிச் செல்லுதல் போன்றவற்றை இந்தக் குறுகிய லென்ஸ்கள் மிகைப்படுத்திக் காட்டுகின்றன, அதாவது சட்டகத்தினுள் உங்கள் நடிகர்கள் சிறிது தூரத்திற்கு நகர்ந்தாலும் கூட, அவர்கள் வேகமாக அங்கிருந்து விலகிச்செல்வதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. எனவே, உங்கள் கதாபாத்திரங்களை, சாதாரண, வழக்கமான இடத்திலிருந்து, பரந்த திறந்த வெளியில் தள்ளுவதற்கு இது பயன்படுத்தப்படலாம். அதுபோன்ற ஷாட்தான் Léon: : The Professional படத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது, அதைப் பார்ப்போம். 


on: The Professiona

Directed by Luc Besson

நடிகர்கள் வாசற்கதவுக்கு வெளியே, கொஞ்சம் இருண்மையான பகுதியில், நெருக்கடியான இடத்திற்குள் நிற்கிறார்கள், ஆனால், கேமரா டாலியில் வலதுபுறமாகச் செல்கிறபொழுது, அவர்களும், கேமராவிலிருந்து விலகி கட்டிடத்தின் விளிம்புக்கு நகர்கிறார்கள். 

அசல் பின்னணி (இருண்மையான கட்டிடம்) முற்றிலுமாக சட்டகத்திலிருந்து வெளியேறும்வரை, கேமரா நகர்கிறது. இந்த ஷாட்டை ஒரு சேரப் பார்க்கிறபொழுது, இது ஒரு இருண்ட/ நெருக்கடியான இடத்திற்கும், ஒரு பெரிய, பரந்த நகரத்திற்கும் இடையில் ஒரு அற்புதமான மாற்றத்தை உருவாக்குகிறது. ஒரு இருண்மையான இடத்திலிருந்து அப்படியே அதற்கு எதிர்ப்பதமான பரந்த வெற்றிடத்தை அடைவதை இந்த ஷாட் உணர்த்துகிறதென்றால், இங்கு அந்த பின்னணிச் சூழல் என்பது காட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, சட்டகத்தில் நாம் இவ்விரு இடங்களுக்குண்டான வெளியையும், பிரதானமாகக் காட்சிப்படுத்தியாக வேண்டும். எனவேதான், இங்கு ஷார்ட் லென்ஸ் பொருத்தமான தேர்வாக விளங்குகிறது. ஷாட் துவங்கும்பொழுது, நாம் ஒரு குறுகலான சந்துக்குள் இருக்கிறோமா அல்லது அடுத்தும் ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்குள்தான் கதாபாத்திரங்கள் இருக்கின்றதா? என்பது தெரியாது, ஆனால், பக்கவாட்டில் டாலி மூலமாக நகர்கிற கேமரா நகர்வானது மெல்ல மெல்ல அந்த இடத்தின் பரந்த தன்மையை வெளிப்படுத்துகிறது, எனவே, நாம் இப்போது கதாபாத்திரங்கள் மிகப்பெரிய உலகின் பகுதியாக இருப்பதை உணரமுடிகிறது.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அல்லது ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு வகையான மனநிலைக்கு மாறும் கதாபாத்திரங்களைக் காட்சிப்படுத்த விரும்பினால், இந்த நுட்பம் மிகவும் பயனுள்ளதாக அமையும். கேமராவின் இயக்கமானது வெளிப்புறத்தில் ஒரு தோற்றத்தையும், மனதளவில் ஒரு தோற்றத்தையும் உணர்த்துவதாக இருக்கிறது. அப்படித்தான் இந்நுட்பத்தையும் நாம் பயன்படுத்தலாம். அதாவது, ஒரு கதாபாத்திரம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறது என்பது, நம் கண்ணால் பார்த்து அறிந்துகொள்ள முடிந்த உணர்வு. அதுவே, அந்தக் கதாபாத்திரம் ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு மனநிலைக்கு மாறுகிறதென்றால், அது உளப்பூர்வமான மாற்றம். அதை நாம் கண்களால் பார்த்து அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், நம் ஆழ்மனதில் அதை உணரமுடியும். ஏனென்றால், நாம் காட்சியியல் ரீதியாக, இருண்மையான இடத்திலிருந்து வெளிச்சத்தை நோக்கிக் கதாபாத்திரம் செல்கிறது என்று காண்பிக்கிறோம். இந்த, ‘மாற்றம்’ என்ற தகவல் மனதில் பதிந்துவிட்டாலே போதுமானது. நம் நனவிலி மனது, அதை, கதாபாத்திரத்தின் மாற்றத்துடன் அடையாளங்கண்டுகொள்ளும். நாம் முன்பே சொன்னதுபோல, ஷார்ட் லென்ஸ், சிறு நகர்வைக் கூட மிகைப்படுத்திக் காட்டுகிறது. அத்தகைய வலிமையைக் கொண்டிருக்கிறது. ஆக, அதுபோன்ற வலிமையான ஷாட்களைக் காட்சியில், இதுபோன்ற வலிமையான மாற்றத்தை உணர்த்தப் பயன்படுத்துகிறபொழுது, அந்த நுட்பத்தின் பயன்பாடு சீரிய முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பொருள்படும். 

இவ்வளவு பெரிய மாற்றத்தை உணர்த்தும் கேமராவின் நகர்வானது, விதிவிலக்காக மிக எளிமையாக உள்ளது, நடிகர்கள் தங்கள் நகர்வை மேற்கொள்ளும்போது, கேமரா டாலியில் சட்டகத்திற்கு வலப்பக்கமாகச் செல்கிறது. ஆனால், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிற லென்ஸ் தேர்வுதான், இக்காட்சியை உயிர்ப்பெற வைக்கிறது. ஷார்ட் (குறுகிய) லென்ஸ்கள், கேமராவிலிருந்து அவர்கள் விலகிச்செல்கிறபொழுது தேவையான இயக்கத்தை உருவாக்குகிறது, மேலும் அவர்களைச் சுற்றிலும், அவர்களுக்கு முன்பாகவும் உள்ள சூழல் மற்றும் நிலப்பரப்பின் உணர்வைக் கொடுக்கிறது. 

குறுகிய லென்ஸ் அண்மைக்காட்சி

ஷார்ட் லென்ஸ்கள் தூரத்தை மிகைப்படுத்திக்காட்டுகின்றன, உண்மையில் இயல்பாகயிருக்கிற தூரத்தைவிட பெரிதுபடுத்திக்காட்டுகின்றன. எனவே, ஷார்ட் லென்ஸ்கள் தொலைவை மிகைப்படுத்துவதால், கேமரா நகர்வும் கூட வேகமாகத் தெரிகிறது. ஷார்ட் லென்ஸ் பயன்படுத்துகிறபொழுது, மனிதர்கள் கேமராவை நோக்கியோ அல்லது கேமராவிலிருந்து விலகியோ மிக வேகமாகச் செல்வதுபோலத் தோன்றும், மற்றும் பொருட்கள் கூட சிதைந்ததுபோலக் காட்சிதரும். 

ஒரு சிறிய கேமரா நகர்வு, ஒரு வலுவான கதாபாத்திர நகர்வுடன் இணைந்து, அவசர(வேக) உணர்வை உருவாக்குகிறது. அவர் எங்கோ விரைவாகச் செல்கிறார் என்ற தகவலைக் கடத்துகிறது. Inception திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த சட்டகங்களில், ஒரு பரந்த உள் இடத்தை நம்மால் பார்க்கமுடிகிறது. கேமரா சற்று முன்னோக்கித் தள்ளப்படுகிறது,அந்தக் கதாபாத்திரம் கேமராவைக் கடந்து அறைக்குள் நுழைகிறது. 

முதலில் நாம் அந்த வெற்றிடத்தை மட்டுமே பார்க்கிறோம். பின்பு, கேமரா மெல்ல முன்னால் நகர்கிறது, அப்போது அந்தக் கதாபாத்திரம் சட்டகத்திற்குள் நுழைந்து முன்னே செல்கிறது. இது மிகச்சிறிய கேமரா நகர்வு என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

(

Inceptio

Directed by Christopher Nolan. கேமரா நகர்வு சிறியதாக இருந்தாலும், அதற்கேற்ப நடிகரின் நகர்வும் இருப்பதால், இது திரையில் பார்ப்பதற்கு வலுவான நகர்வாகத் தோன்றும். கேமராவிலிருந்து விலகிச் செல்வதற்கான உணர்வை மிகப்பெரிய அளவில் பெறுவதற்கு, உங்கள் நடிகர் கேமராவுக்கு அருகிலிருந்து செல்லவேண்டும். உதாரணத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இரண்டாவது சட்டகத்தையும், அதற்கடுத்தடுத்த சட்டகங்களையும் கவனியுங்கள். இரண்டாவது சட்டகத்தில் அந்த உருவம் பெரியதாகத் தெரிகிறது. ஏனெனில், அவர் கேமராவுக்கு அருகிலிருந்து செல்கிறார். அடுத்தடுத்த ஃப்ரேம்களில் அந்த உருவம் முன்னோக்கிச் செல்ல செல்ல சிறியதாகிக்கொண்டே போகிறது. எனவே, இத்தகைய நகர்வு மிகவும் ஆக்கப்பூர்வமான வகையில் தோற்றமளிக்க, உங்கள் நடிகர் கேமராவுக்கு அருகிலிருந்துதான், அந்தச் சட்டகத்திற்குள் நுழையவேண்டும். 

இக்காட்சியைத் தகுந்தவிதத்தில் பெறுவதற்கு, கேமரா மற்றும் நடிகர் நகர்விற்கான, உதாரணங்களைக் கவனியுங்கள். வெள்ளை அம்புக்குறி கேமராவின் இயக்கத்தையும், கருப்பு அம்புக்குறி நடிகரின் இயக்கத்தையும் குறிக்கிறது. கேமரா மெல்ல நகரவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவே, அந்த அம்புக்குறி அளவில் சிறியதாக உள்ளது. மற்றும் சில அடி தூரம்தான் நகர்கிறது. நடிகர்தான் கேமராவிற்கு அருகிலிருந்து வேகமாக முன்னேறுகிறார். 


இதுபோன்ற நகர்வுக் காட்சிகளை மட்டுமல்ல, நிலையான காட்சிகளையும் எடுப்பதற்கும் ஷார்ட் லென்ஸ் சிறந்தது, என்பதை அடுத்து வரப்போகிற உதாரணத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். நாம் இதற்கு முன்பு, ஷார்ட் லென்ஸ்களை நடிகரின் முகத்திற்கு அருகில் கொண்டுசெல்கிறபொழுது, அது சிதைந்தபிம்பமாக, அதாவது பெரிய உருவமாகத் தெரியும் என்று பார்த்தோம். எனவேதான், க்ளோஸ் அப் ஷாட்களை எடுப்பதற்கு, லாங் லென்ஸ்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன, என்பதையும் அறிவுறுத்தினோம். ஆனால், காட்சியில் உங்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தின் முகம், கலவரமடைந்ததுபோலத் தெரியவேண்டும். அப்படிக் கலவரமடைந்திருக்கிற முகத்திற்குக் க்ளோஸ் அப் காட்சி வேண்டும். அப்போது அந்த பெரிதுபடுத்திய முகம்தான் சட்டகத்தில் இருந்தால் நன்றாகயிருக்கும் என்று தோன்றும், உங்களுக்கு அப்படி மிகைப்படுத்திய முகம்தான் வேண்டுமென்றால், ஷார்ட் லென்ஸ் பயன்படுத்தி, கேமராவை நடிகருக்கு அருகில் வைத்து க்ளோஸ் அப் காட்சி எடுத்துக்கொள்ளலாம்.

இதோ, மேற்கண்ட காட்சியின் சூழலை விவரிப்பதுபோன்று, A Very Long Engagement-ல் எடுக்கப்பட்ட சட்டகங்களைக் கவனிப்போம். 

(

A Very Long Engagemen
Directed by Jean-Pierre Jeune

முதல் சட்டகத்தில், துப்பாக்கிதான் பிரதானம். ஒரு பொருளின் இருப்பை அதிகரிக்க, முக்கியமாக அதன் பயங்கரத்தன்மையை உணர்த்த ஒரு ஷார்ட் லென்ஸை எவ்வளவு திறம்படப் பயன்படுத்தலாம் என்பதை இது காட்டுகிறது. சட்டகத்தில் பார்க்கிறபொழுது, ஒரு துப்பாக்கியின் நிஜ அளவைவிட, பெரியதாகத் தோன்றுகிறது. ஏனென்றால், லென்ஸிற்கு மிக நெருக்கமாகத் துப்பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நன்றாகக் கவனித்துப் பாருங்கள், இது அளவில் பெரிய துப்பாக்கி, அதன் இருப்பை வலுவாக உணர்த்துகிறது. இந்தப் பெரிதுபடுத்திய தோற்றம், அதன் இயக்கத்தையும் அதிகரிக்கிறது, அதாவது துப்பாக்கியைத் தாங்கிப்பிடித்திருக்கிற அந்நடிகர், துப்பாக்கியை மெல்ல மெல்ல நகர்த்தும்போது, அது திரையில், பெருமளவு அசைவதுபோலத் தோற்றம் தருகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், சட்டகத்தில் நாம் நடிகரின் மீதுதான் கவனம் செலுத்துகிறோம், அவர் மீதுதான் ஃபோகஸ் இருக்கிறது, ஆனால், அதேசமயம் நாம் அந்தத் துப்பாக்கியின் இருப்பிலும் விழிப்புணர்வோடு இருக்கிறோம். மேலும், துப்பாக்கி நம்மைக் குறிபார்ப்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கிறது, எனவே, ஒரு மீடியம் லென்ஸ் பயன்படுத்தும்போதும் கிடைக்காத ஒருவித ஆபத்தான/ எச்சரிக்கையான மனநிலையை, இந்த ஷார்ட் லென்ஸ்தான் கொண்டுவருகிறது. 

*சிதைந்த முகம் – அசாதாரண முகம்

அடுத்து, நாம் முன்பே பார்த்தபடி, ஷார்ட் லென்ஸ்களை அண்மைக் காட்சியாகப் பயன்படுத்துகிறபொழுது, முகத்தை பெரிதுபடுத்திக் காட்டும், சிதைந்த பிம்பமாக வெளிப்படுத்தும் என்று பார்த்தோம். ஷார்ட் லென்ஸைக் கேமராவில் பொருத்திவிட்டால், கேமராவுடன் எது நெருக்கமாக இருந்தாலும், அது உண்மையில் இருக்கும் நெருக்கத்தின் அளவைவிட, குறைவாகக் காட்டும். அதாவது, இயல்பான நெருக்கத்தைவிட, கேமராவுக்கு மிக அண்மையில் அவர்கள் நெருங்கி இருக்கிறார்கள் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்; இதன் சாராம்சம், இப்படிப்பட்ட காட்சியில் ஒரு கதாபாத்திரத்தைப் படம்பிடித்தால், கதாபாத்திரங்கள் வழக்கத்தைவிட சற்றே பெரிய மூக்குகளைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது முகத்திற்கு நேராகக் கேமராவை வைக்கும்பொழுது நடக்கிறது. படம் பார்ப்பவர்களை இது நகைப்புற்குள்ளாக்கும். கேலியான சித்திரம் போன்ற உணர்வைக் கொடுக்கும். எனவே, காட்சியில் இது கடத்தவேண்டிய பதைபதைப்பு எனும் உணர்வு மங்கிவிடுகிறது. இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்க (அல்லது கேலிக்குரிய பிம்பத்திலிருந்து விடுபட), கேமராவின் கோணத்தை சற்று மேலேயிருந்து கதாபாத்திரத்தைப் பார்ப்பதுபோல மாற்றியமைக்கலாம். உதாரணத்திற்கு, இரண்டாம் சட்டகத்தில் அந்தப் பெண்ணின் முகத்தைப் பாருங்கள்.லேசான டில்ட்(tilt) இதற்கு உதவக்கூடும். இந்த வழியில் உங்கள் கேமராவை நிலைநிறுத்துவதன் மூலம், முகங்களை மிகவும் அசாதாரணமாகக் காட்டாமல், ஒரு குறுகிய லென்ஸால் வழங்கப்படும், சிதைவின் கனவுத் தோற்றத்தை சற்று உணரலாம். 

இருவித லென்ஸ்களுக்கு இடையே வெட்டுதல்

இதற்கு முன்பு வரை, ஆரம்பத்தில் ஒரு குறுகிய லென்ஸ் தேர்ந்தெடுத்தால், அந்தக் காட்சி முடியும்வரை, அந்த லென்ஸில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்ட காட்சிகளைத்தான் பார்த்தோம். அதேபோலத்தான் லாங் லென்ஸிலும் நடந்தது. ஆனால், இருவித லென்ஸ்களிலும் ஒரு காட்சியைப் படப்பிடிப்பு நடத்தினால் என்னவாகும்? நீங்கள் படப்பிடிப்பில் ஷார்ட், லாங், மீடியம் என எந்த லென்ஸில் வேண்டுமானாலும் ஷுட் செய்யலாம், பின்னர் அதை படத்தொகுப்பில் வரிசையமைக்கலாம், இந்தச் செயல்களிலிருந்து உங்களை எவற்றாலும்/யாராலும் தடுக்கமுடியாது. பல படங்களில், குறிப்பாக தொலைக்காட்சிகளில் இந்தச் செயல்முறைதான் நடக்கிறது. 

ஒரு காட்சியையும், கதை நடக்கிற சூழலையும் விவரிப்பதற்கு ஒரு வைட் ஷாட்டுடன் துவங்குகிறீர்கள், அடுத்து இரண்டு கதாபாத்திரங்கள் வருகிறார்கள், அவர்களைச் சட்டகத்திற்குள் காட்சிப்படுத்த மீடியம் லென்ஸைத் தேர்ந்தெடுக்கிறோம், அடுத்து, அதே கதாபாத்திரத்திற்கு க்ளோஸ் அப் ஷாட் வைப்பதற்காக, லாங் லென்ஸைப் பயன்படுத்துகிறோம். இப்படித்தான் படப்பிடிப்புகள் நடக்கின்றன. எனவே, காட்சி முழுவதும் ஒரே லென்ஸைத்தான் பயன்படுத்த வேண்டுமென்றோ, லென்ஸ்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவது தவறு என்றோ அர்த்தப்படுத்திக்கொள்ளாதீர்கள். கதையானது ஷாட்களின் மூலமாகவும், அதற்கிடையே நடக்கிற வெட்டுக்களின் மூலமாகவும் நகரக்கூடியது. அம்மாதிரியான நேரங்களில் நீங்கள், லென்ஸ் தேர்வினை மாற்றியமைத்துக்கொள்ளலாம். இதுவொரு நிலையான நடைமுறை, இது மாற்று வழிகளில் வேலை செய்வது பற்றி சிந்திக்க வேண்டியது. அண்மைக் காட்சிகள் (Close up Scenes) மிகைப்படுத்தித் தெரிவது தனக்கு ஒரு பிரச்சினையில்லை என்று நீங்கள் நினைத்தால், காட்சி முழுவதையும் ஒரு ஷார்ட் லென்ஸ் கொண்டே நீங்கள் படம்பிடிக்கலாம். அதேபோல, பரந்த நிலப்பரப்பைக் காட்ட வேண்டிய ஷாட்டையும், உள் அறையின் பரந்த மற்றும் பிரம்மாண்டத் தன்மையையும் காட்சிப்படுத்துகையில், அதன் ஓரங்கள் வெட்டப்படுவதைப் பற்றிக் கவலையில்லை என்று நினைத்தால், நீங்கள் அவற்றை லாங் லென்ஸ் கொண்டே படம்பிடிக்கலாம். யாரும் தடுப்பதற்கில்லை. மேலும் இவை தீவிரமான மாற்று வழிமுறைகள், அத்தோடு இவை பரிசோதனைக்குரியவை. 

 எதைத் தேர்வு செய்தாலும், நீங்கள் கேமராவை எங்கு வைக்கிறீர்கள் என்பதைக் கவனமாகக் கவனியுங்கள். நீங்கள் காட்சியில் எந்த விளைவை (Effect) விரும்புகிறீர்களோ, அந்த விளைவிற்கேற்பதான், கேமராவின் லென்ஸைத் தேர்வுசெய்ய வேண்டும், பின்னர், நீங்கள் விரும்பும் ஃப்ரேமிங்கைப் பெற, அதற்கேற்றவாரு கேமராவை நகர்த்தவேண்டும். 
Love Actually திரைப்படத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த ஷாட்களைக் கவனியுங்கள், அதில் பல்வேறு மீடியம் மற்றும் லாங் லென்ஸ்களுக்கிடையே நிகழ்ந்த வெட்டுக்களைக் காணலாம், ஆனால் லென்ஸ் மாற்றத்தின் உணர்வை/ விளைவை அதிகரிக்க, கேமரா தன்னை நடிகரை நோக்கியும், பின்பு அவரிடமிருந்து பின்னகர்ந்து கொள்ளவும் செய்கிறது. அதாவது, லென்ஸின் மாற்றத்திற்கேற்ப கேமரா நடிகரை நோக்கியும், அவரிடமிருந்து விலகி பின்வாங்கியும் தன் நிலையைத் தேர்ந்தெடுக்கிறது. இதை இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால், லென்ஸ் மாறுகிறபொழுது, கேமராவின் நிலையும் மாறுகிறது. 


Love Actuall

Directed by Richard Curti
எவ்வாறாயினும், இது பார்வையாளர்களைச் சார்ந்து, படுக்கையின் மையத்துடன் ஒத்துப்போகிறது. நிறைய லென்ஸ் மாற்றங்களுடன், கேமரா அறையைச் சுற்றிலும் நகர்ந்தால், ஷாட்களுக்கு இடையே நிகழ்கிற வெட்டுக்களானது, பார்வையாளர்களுக்குக் குழப்பமான மனநிலையை உண்டாக்கும். அவர்களால் ஒரு ஓர்மையில் காட்சியைத் தொடர்ந்து ரசிக்க முடியாது. லென்ஸை மாற்றுவதும், கட் செய்வதும் இயக்குனராக உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால், அதற்காக எந்தவொரு முறையும் தேவையில்லாமல், தன் இஷ்டத்திற்கு அறைமுழுவதும் கேமராவை வைத்து, லென்ஸ்களை மாற்றிப் படம்பிடித்தால், அது பார்வையாளர்களுக்குக் கவனச்சிதறலையே உண்டாக்கும். 

அடுத்து Never Let Me Go, திரைப்படத்திலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், ஒப்பீட்டளவில் லாங் லென்ஸ்கள் அந்த ஜோடியைப் படம்பிடிக்கின்றன, பின்னர் ஒரு லாங்கர் லென்ஸ், ஒரு கதாபாத்திரத்தை மட்டும் படம்பிடிக்கிறது. இப்போது கேமரா மீண்டும் அந்த ஜோடிக்குக் கட்(Cut) செய்கிறபொழுது, இன்னும் நீண்ட லாங்கர் லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், அதற்கேற்ப கேமரா அறையில், சற்று நகர்த்தப்பட்டுள்ளது, எனவே நாம் நடிகர்களை நேரடியாகப் பார்க்கிறோம். 

(

Never Let Me G

Directed by Mark Romane

காட்சியின் தீவிரம் அதிகரிக்கும்பொழுது, இது கதாபாத்திரங்களின் கண்களை நேரடியாகப் பார்க்க உதவுகிறது. இந்தக் கட்டத்தில் லாங்கர் லென்ஸுக்கு ஷாட்டை வெட்டுவதால், அவை பின்னணியில் கவனம் செலுத்தாமல், கதாபாத்திரங்களை மட்டும் ஃபோகஸ் செய்கின்றன. அதாவது, காட்சியில் லாங் லென்ஸ், கதாபாத்திரங்கள் இருக்கும் இடத்தைவிட, கதாபாத்திரங்கள் மீது, அதிகக் கவனம் செலுத்துகிறது. லாங் லென்ஸ் என்ற ஒரு வகையை மட்டும் எடுத்துக்கொண்டாலே, அதற்குள் பல துணை வகைகள் உள்ளன. இந்தக் காட்சியில் அப்படித்தான், லாங் லென்ஸ், லாங்கர் லென்ஸ், நீண்ட லாங்கர் லென்ஸுக்கு இடையே காட்சி கட் செய்யப்படுகிறது. காட்சியின் உணர்விற்கேற்ப, இந்த வெட்டுகள் நிகழ்வதால், அது பார்வையாளர்களை உறுத்துவதில்லை. 

எந்தக் காட்சிக்கு எந்த லென்ஸ் பயன்படுத்த வேண்டும்? ஒரு காட்சிக்குள் எத்தனை வெவ்வேறு லென்ஸ்களைப் பயன்படுத்தலாம்? எப்போது லென்ஸை மாற்ற வேண்டும்? என்று ஃப்லிம்மேக்கிங்கைப் பொறுத்தவரை எந்த விதிமுறைகளும் இல்லை. அது பார்வையாளர்களுக்கு உறுத்துகிறதா? அவர்களுக்குக் குழப்பத்தை விளைவிக்கிறதா? நான் சொல்லவந்த கருத்திலிருந்து அவர்களை இந்த லென்ஸ் மாற்றங்கள் திசைதிருப்புகின்றனவா? என்பதைத்தான் இயக்குனர் கண்காணிக்க வேண்டும். ஆனால், நீங்கள் காட்சியில் எந்த லென்ஸ்களைத் தேர்வுசெய்தாலும், உங்கள் லென்ஸ் தேர்வின் விளைவுகளை அதிகரிக்க அல்லது குறைக்க, கேமராவை நகர்த்த வேண்டும் என்பதை மறக்காதீர்கள். லென்ஸை மாற்றினால் மட்டும்போதாது, அந்த மாற்றம் திரையில் பகிரங்கமாகத் தெரிய, அதற்கேற்றவாறு கேமராவின் நிலையையும் சற்று நகர்த்த வேண்டும். அப்போதுதான் லென்ஸை மாற்றியதற்கான நியாயம் காட்சியில் உருவாகும். வெறுமனே லென்ஸை மாற்றுவது காட்சியியல் தோற்றத்தில் சற்று மாற்றத்தைக் கொண்டுவரலாம், அந்தச் சிறு மாற்றமே போதும் என்றால் பரவாயில்லை, ஆனால் அந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதை நீங்கள் வலுவாக உணர்த்த விரும்பினால் கேமராவின் இருப்பிடத்தையும் நகர்த்தித்தான் ஆக வேண்டும்.

கேமராவிற்கு Movements கொடுப்பதல்ல, லென்ஸை மாற்றியவுடன் அதுவரை கேமரா இருந்த இடத்தை சற்று மாற்றியமைப்பது. அதுதான் வெட்டுகள் நிகழும்பொழுது, ஒரு சீரான காட்சிக்கோர்வையைத் திரைக்குள் கொண்டுவரும். சரியான லென்ஸ்களைத் தேர்ந்தெடுப்பதுதான் ஒரு நல்ல ஷாட்டை உருவாக்குகிறது, பல நல்ல ஷாட்கள் இணைந்துதான் ஒரு நல்ல திரைப்படத்தைப் பெறுகிறோம்.