’C/O காஞ்சரபாலெம்’

சங்கீதா தேவி

ஒரே திரைப்படத்திற்குள் நான்கு வெவ்வேறு கதைகள், அது மதம் மற்றும் காதல் என்ற ஊடாட்டத்திற்கு நடுவில் ஒரு புள்ளியில் இணைந்திருக்கிறது. முதலாவது பள்ளிப்பருவக் காதல், இரண்டாவது இளைய வயதில் யுவன் – யுவதிக்கிடையிலான காதல், அடுத்து 30 வயதுகளைக் கடந்தபின் கொஞ்சம் பக்குவப்பட்ட காதல், அந்தப் பெண் விலைமகளாக இருந்தாலும், அவளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமிக்க காதல், நான்காவது 49 வயது ஆணுக்கும் 42 வயது பெண்ணிற்குமான காதல். இந்நான்கு காதல் கதைகள்தான், ’C/O காஞ்சரபாலெம்’ படத்தின் அடித்தளம். இந்நான்கு கதைகளும் ஒன்றுசேரும் புள்ளி, படத்தின் க்ளைமேக்ஸில் விடுவிக்கப்படுகிறது. நிச்சயம் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு, இப்படம் அத்தகையதொரு ஆச்சரியத்தை படத்தின் களைமேக்ஸ் பொதிந்துவைத்திருக்கிறது. யாரும் ஊகித்தறியமுடியாதவாறு கதையைக் க்ளைமேக்ஸ் வரை நகர்த்திச்செல்வதில் இயக்குனரின் உழைப்பும், திரைக்கதையின் பங்களிப்பும் தெரியவருகின்றன.

அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் மஹா எழுதி இயக்கிய ’C/O காஞ்சரபாலெம்’ படம் குறித்தும், அத்திரைப்பட உருவாக்கத்தில் அவர் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்துமான பார்வை:

வழக்கமாக மசாலா படங்களை மையமாகக் கொண்டு இயங்குவதாக மதிப்பிடப்படுகிற தெலுங்கு திரையுலகிலிருந்து ஒரு சுயாதீன சினிமா (2018-ல்) வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தைப் போலவே, இப்பட உருவாக்கத்தின்பொழுது கடந்துவந்த அனுபவங்களும், படத் தயாரிப்பின் பின்னணியில் உள்ள கதைகளும் அத்தனை சுவாரஸ்யமானது. ஒரு இந்திய – அமெரிக்க சுயாதீனத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரவீணா பருச்சுரி இப்படத்தைத் தயாரித்து, எழுத்தாளர் & இயக்குனராக வெங்கடேஷ் மஹாவை இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். வெங்கடேஷ் மஹா, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைகளில் பல்வேறு பிரிவுகளில், ஸ்பாட் பாய் முதல் தயாரிப்பு மேலாளர் மற்றும் இணை இயக்குனர் வரை வேலை பார்த்த அனுபவம் மிக்கவர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் ஆரம்ப ஆண்டுகளில் வேலைபார்த்தபொழுது, குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

வெங்கடேஷ் மஹா விஜயவாடாவைச் சேர்ந்தவர், காஞ்சரபாலெம் அல்ல. அவருக்கு மிகப்பிடித்த விசாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள கிராமம் . படம், காதல் மற்றும் ஏக்கம் தொடர்பான நான்கு கதைகளை விவரிக்கிறது, மேலும் காஞ்சரபாலெம் என்ற அப்பகுதிக்குரிய தனித்த சுவையுடன் ஒத்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர் அபர்ணா மல்லடியின் வீட்டில் ஒன்றுகூடி திரைப்படத்திற்கான கதைக்கருக்களைக் குறித்து விவாதிக்கவும், திரைப்பட உருவாக்கத்தின் மீது ஆர்வமுள்ள குழுவினருடன் இணைந்து கதைகளை விவரிக்கவும், அக்கதைக்கு அவர்கள் சொல்கிற எதிர்வினைகளையும், கருத்துக்களையும் தேடிக்கண்டடையும் பல ஆர்வமுள்ள இயக்குநர்களில் மஹாவும் ஒருவர்.

மையநீரோட்ட சினிமாவினாலும், வணிக சினிமா வடிவமைத்திருக்கிற பாதையிலிருந்தும், பிரிந்து, அதற்கு அப்பாற்பட்ட ஒரு சினிமாவை இக்குழு உருவாக்க நினைக்கிறது. இவர்கள் லாபகரமான திரைப்படங்களை உருவாக்க விரும்புகிறார்கள், ஆனால் அதேவேளையில், எடுக்கப்படுகிற திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, அதற்கேற்ற வகையில் கதையிலும், பட உருவாக்கத்திலும் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. அவர்கள் சினிமா எனும் கலையையும், அதன் நுட்பத்தையும் இறுகப் பற்றியிருக்கிறார்கள். இயக்குனராவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, மஹா ஒரு நண்பரின் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தார், அப்பகுதியிலேயே, பகல்நேரத்தில் ஒரு வேலையையும் நிலையாகப் பார்த்துவந்தார். எனவே, இம்மாதிரியான சந்தர்ப்பம் மக்களுடன் எளிதாகப் பேசிப்பழகும் வாய்ப்பைத் தந்தது. அந்தப் பகுதியில் உள்ள மக்களுடன் உரையாடிபொழுது, ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டார். தமிழ் திரையுலகிலிருந்து பல யதார்த்தமான திரைப்படங்கள் வருகின்ற காரணத்தினால், அங்குள்ள பலரும் மொழிமாற்றம் (டப்பிங்) செய்யப்பட்டு வருகிற அத்தகைய தமிழ்த்திரைப்படங்களைப் பார்ப்பதில் பேரார்வம் கொண்டவர்களாகயிருக்கின்றனர்.

காஞ்சரபாலெம்:

மஹாவின் பயணம், எந்தவொரு ஆர்வமுள்ள நடிகர்/ ஃப்லிம்மேக்கர் சொல்கிற கதைகளைப் போலவேதான் இருக்கிறது. சினிமாவின் மீது ஆர்வத்தோடு நுழைகிற இளைஞர்கள், சினிமாவில் சாதிப்பதற்காக அடைய, எதிர்கொள்கிற போராட்டங்கள், சிக்கல்களைத்தான் மஹாவும் எதிர்கொண்டிருக்கிறார். மஹாவின் கதையும் அதற்கு எடுத்துக்காட்டாகவே இருக்கிறது. ”2009ஆம் ஆண்டில், எனக்கு 16வயதாக இருந்தபோது, நான் வீட்டைவிட்டு வெளியேறி, கிடைத்த வேலைகளைச் செய்துவந்தேன். ஒருமுறை நான் விசாகப்பட்டினத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். சில காரணங்களால் அதன் உரிமையாளர் என்னைத் தங்குமிடத்திலிருந்து வெளியேற்றினார். தற்செயலாக, என்னைச் சந்தித்து, ஒரு இடத்தில் இறக்கிவிட வந்தவரிடம், ”நான் தங்குவதற்கு ஒரு இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,”என்று குறிப்பிட்டேன். அவர் என்னை காஞ்சரபாலெத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்: அவரது குடும்பத்தினர் என்னை மிகவும் வரவேற்று உபசரித்தனர், நான் அவர்களுடன் தங்கியிருந்து என் வேலையைத் தொடரலாம் என்று தோன்றியது.” என்று அறிமுக இயக்குனர் தனது பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கிறார்.

அந்தக் குடும்பத்துடன் தங்கியிருந்த ஒன்பது மாதங்களில், மஹா, காஞ்சரபாலெத்தையும் அதன் மக்களையும் நுணுக்கமாக அவதானித்தார். அவர் தனது நண்பரின் தந்தையுடன் ஒரு வலுவான பிணைப்பை வளர்த்துக்கொண்டார், அவருடன் நேரம் செலவழிக்கத் துவங்கினார். தன்னைவிட, நண்பரின் தந்தைக்கு இந்தக் காஞ்சரபாலெத்தைப் பற்றியும், இப்பகுதியில் வாழும் மக்களைப் பற்றியும் அதிகம் தெரியும். நிச்சயம் ஒவ்வொரு மனிதர்களுக்குப் பின்னாலும் ஒரு கதையிருக்கிறது. எனவே, தந்தையிடம் பேசிப்பேசி அவரது குழந்தைப் பருவத்து நினைவுகள், இப்பகுதியின் மக்களுடன் அவருக்கிருந்த உறவு, பின்பு இளைஞராக அவர் காதலித்த காதல் கதைகள், பல தசாப்தங்களைக் கடந்துசெல்லும்போது வாழ்க்கையின் அனுபவங்கள் என அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். மனிதர்களிடம் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. நாம் புத்தகங்களிலும், மற்றமொழி திரைப்படங்களிலும் கதைகளைத் தேடுகிறோம். அதைவிட, இன்னும் வெளிவராத ஆயிரம் கதைகளைச் சுமந்துகொண்டிருக்கிற மனிதர்கள் நம் அருகிலேயே இருக்கிறார்கள். அவர்களிடம் பேசுகிறபொழுது அத்தகைய கதைகள் வெளிவரும். பின்பு அவற்றை கதைக்கான யோசனைகளாகக் கொண்டு, மேம்படுத்தி, ஒரு திரைப்படத்திற்கான முழு திரைக்கதையாக அதை மாற்றுவது கதாசிரியரின் வேலை. மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறுகிற கதைகள் அத்தகைய உயிர்ப்போடு இருக்கும். அந்த அனுபவத்தைத்தான் காஞ்சரபாலெத்தில் மஹா அனுபவித்திருக்கிறார். பின்பு பணி நிமிர்த்தமாக, ஹைதராபாத் சென்றுவிட்டார். சில குறும்படங்கள் எடுக்க முயன்றார், பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இணை – இயக்குநராகவும் பணியாற்றினார்.


அவர் ஒவ்வொரு வேலையாக நகர்ந்துகொண்டிருந்தார், ஆனால் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவு அவருள் வளர்ந்தபடியே இருந்தது. ஒருமுறை, ஆகாசமே ஹட்டு (Aakasame Haddu) என்ற படத்தில் ஹீரோவின் நண்பனாக நடிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் படப்பிடிப்பு நடக்கும் அரங்கங்களில் 42 நாட்கள் உடனிருந்தார். திரையுலகின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று உள்ளுக்குள் எரியும் ஆசை, மீண்டும் எரியத்துவங்கியது. நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருபவர்களின் மையமாக விளங்குகிற ஹைதராபாத்தின் கிருஷ்ணாநகருக்குச் சென்றார். ஒருநாள் காலை, பவன் கல்யாணின் டீன்மார்(Teen Maar) படப்பிடிப்புத் தளத்திற்கு, பலபேருடன் ஒரு ஆளாக இவரும் அழைத்துச்செல்லப்பட்டார். ஒரு நாளைக்கு ரூபாய்.150 சம்பாதிக்கும் ஸ்பாட் பாயாக வேலை செய்தார். ”படப்பிடிப்புத் தளத்தில்/செட்டில் இருப்பதற்கும் சினிமாவைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்காகவும் நான் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருந்தேன்.” என்று மஹா நம்மிடம் சொல்கிறார்.
இடைவிடாமல், மஹா ஒரு கால்செண்டரில் பணிபுரிந்தார், ஆனால் அவர் அக்கறை காட்டியது சினிமா மட்டுமே. ஒரு நடிகராகவோ, அல்லது பல வருடங்கள் உதவி இயக்குநராக இருப்பதால் மட்டுமே, உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் வந்துவிடாது. ”உங்களுக்கு சினிமா சார்ந்த தொடர்புகள் மற்றும் பரிந்துரைகள் தேவை” என அவர் சுட்டிக்காட்டுகிறார். எனவே, நடிப்பைத் தாண்டி, ‘ரங்கஸ்தலம்’(‘Rangasthalam’) என்ற தலைப்பில் ஒரு கதையையை எழுதத் துவங்கினார். இப்போது இயக்குனர் சுகுமார் என்பவரும் இதே பெயரில் ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார், இதைப் படிக்கிற நீங்கள் இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம். பின்னர், மஹா, கதையை எழுதி முடித்ததும் அபர்ணா மல்லடியைச் சந்தித்தார். அவரிடம், தனது கதையையும், ஸ்கிரிப்டையும் வழங்கினார், கதையைப் படித்தபின் தனக்கு கதை எழுத வருகிறது என்பது போலவோ, திரைப்படம் எடுக்க நான் தயாராகயிருக்கிறேன் என்பதுபோன்று ஊக்கமளிக்கும் வார்த்தைகள் வெளிப்பட்டால், உடனே ஃப்லிம்மேக்கராக தன் பயணத்தைத் துவங்கிவிட வேண்டியதுதான், மிகச்சிறந்த பாதை என்று மஹா நம்பினார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக மல்லட்டியின் கருத்து வேறுபட்டது. ”நான் இன்னும் தனித்துவமான ஒரு கதையுடன் களமிறங்க வேண்டும்,” என்று உணர்வதாக மல்லட்டி தன் பதிலைச் சொல்லியிருக்கிறார்.

தான் ஒரு கதையைக் கொடுக்கிறோம், அது சிறப்பாக இல்லை என்று படித்தவர் சொல்கிறார். இதை கதையின் உரிமையாளர் எப்படி எடுத்துக்கொள்வார் என்ற தயக்கம் - உண்மையிலேயே ஒரு சராசரித்தனமான கதையை படிக்கக் கொடுத்து, அவர்களைச் சோதிக்கிறேனோ என்று கதையைப் படிக்கக் கொடுத்தவருக்கு ஏற்பட்ட எண்ணம், என இருவருமே ஒருவரையொருவர் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. எனினும், அச்சூழ்நிலையைப் புரிந்துகொண்டு மஹா, அடுத்ததாக ஒரு புதிய கதையில் வேலை செய்யத் தீர்மானித்து காஞ்சரபாலெமுக்குப் புறப்பட்டார். ”நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சரபாலெமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். நான் ஒரு கதைக்கான கதைக்கரு, உத்வேகமளிக்கக்கூடிய ஐடியாக்களைத் தேடுகிறேன் என்று என் நண்பனிடம் சொன்னபோது, அவர் இந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருமே ஒரு கதை என்று தோளைக் குலுக்கிக்கொண்டு அநாயாசமாகச் சொன்னார்.” நண்பர் சொன்ன வார்த்தைகளில் உள்ள உண்மையை மஹா கண்டுகொண்டார். அடுத்த சில நாட்களுக்கு காஞ்சரபாலெம் பகுதி மக்களுடன் உரையாடுவதில் நேரம் செலவழிக்கத் துவங்கினார், அங்கு மிகக் குறுகிய தெருக்களுக்குள் ஒரே நேரத்தில் இரண்டுபேர்கூட நடந்துசெல்ல முடியாது, அவ்வளவு குறுகலான பாதைகள் இருந்தாலும், அங்கு வாழும் மக்கள், அவர்களுக்குள் ஒன்றோடொன்று இணைந்த வாழ்க்கையை வாழ்ந்துவருவதைக் கவனித்தார். அந்தக் களத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த அமைப்பால் ஈர்க்கப்பட்டு ஒரு கற்பனையான கதையை வெளிப்படுத்தத் துவங்கினார்.

களத்தில்:

தான் ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னபோது, அந்தக் கிராமத்தில் யாரும் அவரை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அப்பகுதியிலே சிலர் விளையாட்டுத்தனமாக, முதிர்ச்சியற்ற குறும்படங்களை எடுத்து வந்தனர், மஹாவும் அவர்களில் ஒருவர்தான் என்ற எண்ணத்தில், கிராம மக்கள் அலட்சியமாக இருந்தனர். தன் வேலைகளைப் பார்த்துவந்தனர். மீண்டும் ஹைதராபாத்திற்குத் திரும்பிய மஹா, அபர்ணா மல்லட்டியிடம் காஞ்சரபாலெம் குறித்த கதையை விவரித்தார், பட உருவாக்கத்திற்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன, இறுதியில் பிரவீணா பருச்சுரி என்ற தயாரிப்பாளரையும் கண்டுகொண்டார்.

அடுத்தடுத்த பட வேலைகளுக்கான பணிகளில் மும்மரமாக இயங்கத் துவங்கினார். மீண்டும், காஞ்சரபாலெம் கிராமத்திற்குத் திரும்பி, படத்தில் நடிப்பதற்கான நடிகர்களைத் தேர்வுசெய்யும் பணியில் ஈடுபட்டார். ”அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் பகல் நேரத்தில் வேலைக்குச் சென்றுவிட்டார்களேயானால், இரவு 7 மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். பின்புதான் நான் அம்மக்களை வைத்துக்கொண்டு இரவு 8 மணி முதல் 11 மணி வரை முன் ஒத்திகை நடத்தினேன். நான் அவர்களிடம் நடிப்பு குறித்து வகுப்பு எடுக்கவில்லை. நான் அவர்களின் வாழ்க்கைக் கதைகளை பகிர்ந்துகொள்ள வைத்தேன். அவர்கள் கடந்துவந்த வாழ்க்கை அனுபவங்களை, காஞ்சரபாலெம் பகுதியில் வாழ்ந்து அனுபவித்த நிகழ்வுகளையும் என்னுடன் பகிர்ந்துகொள்வார்கள். அவர்கள் மனதில் பொத்தி வைத்திருந்த உள் மனத்தடைகளை அப்படியே கொட்டிவிடுவார்கள். ஹைதராபாத்தில், ஆடிஷனின் போது மக்கள் அமைதியாக இருப்பதைப் பார்த்தேன், அவர்களுக்குத் தங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை, ஆனால் இங்கு கிராமவாசிகள் ஆடிஷனின் போது உற்சாகம் நிறைந்தவர்களாக மாறிவிடுகிறார்கள்.” என்று மஹா நினைவுகூர்கிறார்.

ஆனால், அதே மக்கள் முன்னால் கேமராவை வைத்தபோது, விஷயங்கள் மாறிவிட்டன. கேமராவைப் பார்த்ததும் கிராமவாசிகள் உறைந்துபோய் நின்றனர். பேச்சு வரவில்லை. ஒருவித பதட்டத்தை உணர்ந்தனர். கேமரா அவர்களுக்கு ஒரு அந்நியத்தன்மையைக் கொடுக்கிறது, எனவே, அதிலிருந்து வெளிவர அவர்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. பழைய கிராம வாசிகளை, உறைந்துபோய் நிற்கிற கிராமவாசிகளிடமிருந்து வெளியே எடுக்க சிறிது நேரம் பிடித்தது. ஒவ்வொரு காட்சியின் மனநிலையும், காட்சி நடக்கிற இடங்களின் சூழலின் தயவால் முழுமையடைகிறது. காஞ்சரபாலெம் என்கிறபொழுது, அந்த இடத்திற்குரிய இரைச்சல், சப்தங்கள் எல்லாம் படத்தில் பதிவாக வேண்டும் என்று மஹா நினைத்தார். எனவே, அந்த நிலப்பரப்பின் தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மகா, படத்தை ஒத்திசைவு ஒலியில் படமாக்கினார். படம் சிறந்ததொரு அனுபவத்தைத் தரவேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறோம். ஆனால், அதைத் திரையில் நான் நினைத்ததுபோலக் கொண்டுவருவது அத்தனை எளிதான காரியமல்ல. அதற்கு மிகவும் பிரயத்தனம் செய்ய வேண்டும். ” ஒரு நாளில், 100 ரயில்கள் அந்நகரத்தின் வழியாக வந்துபோகின்றன. எனவே, ஒரு ரயில் சென்று, அடுத்த ரயில் வருவதற்கு இடையில் உள்ள இடைப்பட்ட நேரத்தில்தான், நாங்கள் ஒரு ஷாட்டை முடிக்க வேண்டியிருந்தது. காட்சியின்பொழுது, ரயில் கடந்துசெல்லும் சப்தங்கள், பதிவாவதை நாங்கள் விரும்பவில்லை.”

கிடைத்த நிதி ஆதாரங்களையும், வளங்களையும் வைத்துக்கொண்டு படத்தை முடிக்க வேண்டும், மஹா திரைப்பட உருவாக்கத்தின் பல பணிகளையும், ஒரே ஆளாக பார்க்க வேண்டியிருந்தது. ஆள் பற்றாக்குறை காரணமாக, ஒரு நபரே இரண்டு பேரின் துறைகளைக் கவனித்துக்கொள்வது என்று செயல்படத்துவங்கினர்.

இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும், அவரது கனவுத் திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்ற நினைப்பே அவருக்குப் போதுமானதாக இருந்தது. இந்தப் பட உருவாக்கமானது இந்தி ஆவணப்படமான சூப்பர்மேன் ஆஃப் மாலேகானில் (Supermen of Malegaon) உள்ள சில சூழ்நிலைகளை அவருக்கு நினைவூட்டுகிறது.

இடையில் தயாரிப்பாளர், பிரவீணா பருச்சுரி அமெரிக்காவிலிருந்து இங்கு வந்துசேர்ந்தார். படப்பிடிப்புத் தளத்தில் காட்சிகள் எப்படிப் படமாக்கப்படுகின்றன என்பதை அறியும்பொருட்டு அமெரிக்காவிலிருந்து பறந்துவந்தார். அவரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தோம். ”அந்த ஊரில் அவர் சுலபமாக படப்பிடிப்பு நடத்தவில்லை என்பதையும், அதுவும் ஒத்திசைவு ஒலியில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமான விஷயம் என்பதையும் நான் உணர்ந்தேன். மாடுகளும் எருமைகளும் படப்பிடிப்புத் தளத்திற்குள் குறுக்காக உலவிக்கொண்டிருக்கும்பொழுது, நான் மழுங்கடிக்கப்படுவேன்”, அவர் சிரிக்கிறார், ”அவர் ஒரு சிறு நகரத்தையே இயக்கிக்கொண்டிருந்தார்.”

தெலுங்கு பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு படத்தை அவர் உருவாக்கியுள்ளார் என்ற நம்பிக்கையில் வெங்கடேஷ் மஹா இருக்கிறார். ”மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் தெலுங்கு பேசும் மக்களைப் பிரதிபலிக்கும் அசல் கதைகளைப் பார்க்க விரும்பும் மக்கள் போதுமானவர்களாக இருப்பதை நான் அறிவேன். அப்படியாக காஞ்சரபாலெம், அக்கிராமத்திற்குள்ளிருந்து வெளிவந்த கதைகளுக்குச் சாட்சியாக இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார். காஞ்சரபாலெத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குறும்பாட்டாக எனது படம் இருக்கும் என்கிறார் வெங்கடேஷ் மஹா.

நன்றி: The Hindu