ஒளிப்பதிவும் நானும் - ஒளிப்பதிவாளர் ஜி.முரளி 

நான் வேலை செய்யப்போகிற ஸ்க்ரிப்ட் சொல்கிற விஷயங்கள் எல்லாவற்றிற்கும் நான் உடன்படுகிறேனா? என்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் எவற்றிற்கெல்லாம் நான் முரண்படுகிறேன் என்ற நிலையும் உள்ளது. இப்படித்தான் நாம் ஒவ்வொரு படத்தையுமே பார்க்கிறோம். அதைமீறி நாம் கமர்ஷியல் ஃபிலிம்மேக்கிங்கிற்குள் வருகிறபொழுது நிறைய அழைப்புகளை, நமக்கான அழைப்புகளை அதற்குள் நடைமுறைப்படுத்தியும் பார்க்கமுடியாது. இங்கு தொடர்ச்சியாக சினிமோட்டோகிராஃபரின் பங்கு என்னவாகயிருக்கிறது? என்பது முக்கியம். இங்கிருக்கிற சினிமா எனும் தொழில்துறையின் பழக்கத்திலிருந்து அது வேறு வேறாகயிருக்கிற பட்சத்தில், இந்தக் குழுவும் இந்தக் குழுவுடைய உள்நோக்கமும், அவர்கள் அடையக்கூடிய இலக்கின் நேர்மையையும் நாம் புரிந்துகொள்வதால், அவர்களுடைய அரசியல் பார்வையை மதிக்கக்கூடிய ஆளாக நாம் மாறுகிறோம். அப்படித்தான் நான் பா. ரஞ்சித்தின் படங்களில் வேலைசெய்ய வருகிறேன். அவர் முன்வைக்கக்கூடிய அரசியலை நாம் எவ்வளவுதூரம் நம்புகிறோம் என்பது முக்கியமாக இருக்கிறது. அவருடைய முயற்சிகள், சக மனிதனுக்கான உரிமையை மீட்டெடுப்பதற்கான பெரிய போராட்டமாக இருக்கிறது. இங்கிருக்கக்கூடிய மனிதர்களை நெருக்கக்கூடியது சாதியாக இருந்தால், அந்தச் சாதியை உடைப்பதற்கோ, அந்தச் சாதியைக் கடந்துபோவதற்கான விஷயமாகவோ அவருடைய படங்கள் இருக்கின்றன. அரசியலாக இருந்தால், அரசியலை உடைக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எந்த வடிவம் ஒரு சக மனிதனை, மனிதனாகப் பாவிக்க முடியாத அளவிற்குப் புறக்காரணியாக இருக்கிறதோ, அந்தப் புறக்காரணிகளைக் களைவதற்கான நோக்கம்தான், அவரது படங்களில் தொடர்ந்து பேசப்படுகிறது. அதுதான் பிரதானமான நோக்கமாக இருக்கிறது. பா. ரஞ்சித் தயாரித்த ’பரியேறும் பெருமாள்’ படத்தை எடுத்துக்கொண்டாலும், இதுதான் பெரிய நோக்கம்.

 G. Murali Vardhan - Cinematographer - Entertainment

வரலாற்று ரீதியாக இங்கே அமுக்கப்பட்டிருக்கிற அடக்குமுறையினால் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தும் தாழ்ந்தும் நிற்கக்கூடியதொரு சூழல் நிலவுகிறது. அவர்களை அறிந்தும் அறியாமலும் இந்த கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதை எங்காவது புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது, அப்படியானதொரு புரிதல் தளத்தை இங்கேயிருக்கிற கமர்ஷியல் சினிமா பார்வையாளர்களுக்கு மத்தியிலாவது சின்னச்சின்ன உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். இது மிக உயரிய நோக்கமாகத்தான் எனக்குத் தெரிகிறது. ஆக, அந்தமாதிரியான படங்களோடு நாம் இணைந்து வேலைசெய்கிறபொழுது ஒரு தொழில்நுட்பக் கலைஞனாக, நாம் அந்தத் தொழில் சார்ந்து மட்டுமே இயங்குகிறவனாக அல்லாமல், அந்த உணர்வு சார்ந்துமே அதனோடு இணைந்து, வேலைசெய்கிற ஆட்களாகவும் மாறுகிறேன். 

பி.ஜே.பி காட்சிகள் – காலா

’காலா’ படத்தில் பா.ஜ.க என்பதையெல்லாம் உருவகப்படுத்தி வேலைசெய்யவில்லை. இங்கே நிறுவப்படுகிற சித்தாந்தங்களை எதிர்த்துதான் அந்தப் படம் பேசுகிறது. இரண்டு கருத்தியல்களை அந்தப் படம் முன்வைக்கிறது. அதனால் அந்தக் கட்சி புண்படுகிறது என்றால், அந்தக் கட்சி அதுபோன்ற மக்கள் விரோதப் போக்கினையும், சித்தாந்தத்தையும் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். நமக்கு வரலாற்று ரீதியிலான கருத்தியல், அது இன்றைக்கு அரசியல் ரீதியாகப் பின்னிப் பிணைந்து நிற்கிறது. மேலும் இது வரலாற்றுப் பிழை. இந்தப் பிழைகளைக் களைய வேண்டியது, அனைவருக்குமான தேவை. ஆக, இதனைக் கருத்தியல் மோதலாக, இரண்டு கருத்தியல்களுக்கிடையிலான கதையாக, விவாதமாகத்தான் நாம் முன்னெடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, இதை ஒரு கட்சி சார்ந்து முன்வைப்பது என்றெல்லாம் இல்லை. 

‘Clean India’ என்பது பா.ஜ.க வின் நோக்கமாக இருக்கலாம். ‘Clean India’ யோசனையே இங்கு யார் கையில் வைத்திருக்கிறார்கள்? என்று அர்த்தம். சுத்தம் எங்கு இருக்கிறது? என்பதை யார் முன்னெடுக்கிறார்கள்? வசிப்பிடமே சாக்கடையையொட்டி வாழ்கிறவர்களுக்கு சுத்தம் என்பது எங்கிருக்கிறது? சமூகத்தில் மேல்மட்டத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு சுத்தம் என்பது எங்கிருக்கிறது? அங்கு சுத்தம் என்னவாகயிருக்கிறது? சுத்தம் என்பது புறச்சூழலில் இருக்கிறதா? அகச்சூழலில் இருக்கிறதா? இதை முன்னிறுத்தித்தான் ‘காலா’ கதை சொல்லி வருகிறது. எனவே, சுத்தம் என்பது வெறும் புறத்தைத் தூய்மைப்படுத்துவது இல்லை. அகத்துக்குள் இருந்து தூய்மையாக வேண்டிய ஒன்றாகயிருக்கிறது. ஆக, இதை யாரெல்லாம் நம்புகிறார்களோ, அவர்களை அது சுட்டிக்காட்டுகிற கருத்தியல்களுக்கான யுத்தம்தான், அந்தப் படத்திற்குள்ளே பேசப்படுகிறதே தவிர, குறிப்பிட்டு இந்தக் கட்சி சார்ந்தோ, இந்தக் கட்சிக்கு ஆதரவாகவோ பேசவில்லை. 

காலா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி
 
ஆறு நாட்களில் அது படமாக்கப்பட்டது. நடிகர்களோடு நான்கு நாட்கள். மற்ற இரண்டு நாட்களில் அந்தக் காட்சியின் Inner Cuts. மொத்தமாக ஆறு நாட்கள் என்று சொல்லலாம். வண்ணங்களுடன் படம்பிடித்தோம். நடிகர்களான ரஜினி சாரோ, நானா படேகரோ, வயதிலே மிகவும் மூத்தவர்கள், அவர்களை வைத்து கலர்பொடிகளைத் தூவி, ஹோலிப்பண்டிகைக்குப் பயன்படுத்துகிற வண்ணங்கள், சி.ஜி.யில் Enhance மட்டும் செய்தோம். மற்றபடி அதில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் எல்லாமே நேரடியாக படப்பிடிப்பில் பயன்படுத்திய வண்ணங்கள்தான். அந்தக் குறிப்பிட்ட வண்ணம் வெடிக்கிறபொழுது, அங்கிருக்கிற எல்லோருமே அதே வண்ணத்தில்தான் இருப்பார்கள். கருப்பு என்றால், படப்பிடிப்பில் இருக்கிற அனைவரும் கருப்புப் பொடியோடு இருப்பார்கள். உடல் முழுவதும் கருப்பு அப்பியிருக்கும். அடுத்தது நீலம் என்றால், சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் நீல வண்ணத்தில் இருப்போம். இம்மாதிரியான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். இதெல்லாம், படப்பிடிப்பு சார்ந்த நடைமுறைச் சிக்கல்கள். 
இருப்பினும், மூத்த நடிகர்கள் ஈடுபாட்டோடு இந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்ததால், வெற்றிகரமாக இந்தக் காட்சிகள் வெளியே பேசப்படுகின்றன என்று சொல்கிறேன்.

கேமராவிற்குப் பின்னால் இருப்பவர்கள் வேண்டுமானால் வண்ணப்பொடிகளிலிருந்து தப்பிக்க முகமூடிகளை அணிந்திருக்கலாம். ஆனால், நடிப்பவர்கள் நடிக்கிறபொழுது, முகமூடிகளைக் கழட்டிவிட்டுத்தான் நடிக்கவேண்டியிருக்கும். மற்றநேரங்களில் நீங்கள் முகமூடி அணிந்திருந்தாலும், நடிக்கிறபொழுது, முகமூடிகளைக் கழற்றிவிட வேண்டும். எனவே, வண்ணப்பொடிகளை வீசுகிறபொழுது அதனை மூச்சுக்குள் இழுத்துதான் ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும் நாங்கள் குளிக்கும்பொழுது ஒவ்வொரு வண்ணத்தில் தண்ணீர் வெளியேறும். மற்றபடி, அதற்கேற்ற மருந்துகள் எல்லாமே, அலர்ஜி ஏற்படாமல் தடுப்பதற்கும், மூச்சுத்திணறலுக்கும் ஏற்ற வகையில் முன்னேற்பாடுகள் செய்துவைத்திருந்தோம். தயாரிப்புக் குழுவும் நல்ல ஆதரவு தந்தது.

மூத்த நடிகர்களின் பங்களிப்பு

இரண்டு பேருமே, நல்ல பயிற்சிபெற்ற நடிகர்கள். இருவருக்குமே திரைத்துறையில் அதிகமான அனுபவம் இருக்கிறது. ரஜினி சார் இந்த படப்பிடிப்பு அரங்கத்திற்குள் வருகிறார் என்றாலே, கேமரா எங்கேயிருக்கிறது? லைட் எங்கேயிருக்கிறது? என்பதையெல்லாம் ஒரு நொடியில் ஸ்கேன் செய்துவிடுவார். அந்தளவிற்கு அனுபவம் வாய்ந்தவர். நாம் ஏதும் சொல்லிக்கொடுக்காமலேயே அவர் அதைப் புரிந்துகொள்வார். அவருடன் நிறைய குழந்தைகளும் நடித்தார்கள். அப்பொழுது ஏதாவதொரு குழந்தை கேமராவை மறைக்கிறபொழுது, காட்சியின் பொழுதே, அழகாக, அந்தக் குழந்தையை அழைத்து உட்காரவைத்துக்கொள்வார். இது அவரது பலவருட அனுபவத்திலிருந்து வருகிறது. எனக்கு ரஜினி சாருடன் பணியாற்றியதிலிருந்து மறக்கமுடியாத தன்மை, சில காட்சிகள் இரண்டு மூன்று கேமராக்களை வைத்து எடுத்திருக்கிறோம். இந்த நான்கைந்து கேமராக்களிலுமே மிகவும் கவன ஓர்மையுடன் நடிக்கக்கூடிய மனிதர் ரஜினி. அந்தளவிற்கு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பெரும்பாலும் இங்கு ஒரு கேமரா இருக்கிறதென்றால், அந்த ஒரு கேமராவின் மேல்தான் நம் கவனம் இருக்கும். அந்தக் கேமராவை ஒருவர் மறைத்தாராயினும், கொஞ்சம் பின்னகர்ந்து இன்னொரு கேமராவில் பதிவதுபோல நின்றுகொள்வார். ஏனெனில், இன்னொரு ஷாட் எடுப்பதற்கான கால அவகாசம் இருக்காது. 

லைட் போட்டிருக்கிறதா? இல்லையா? லைட் எந்தக் கோணத்தில் இருக்கிறது? எந்தப் பார்வையில் இருக்கிறது? என எல்லாவற்றையுமே மனதில் கணக்கெடுத்தும், நடிப்பார். மானிட்டரை அதிகமாகப் பார்க்காமலேயே நடிப்பார். மானிட்டரைக் குறைவாகத்தான் பார்ப்பார். அதையும் மீறி, சில காட்சிகள் என்னவாக வந்துகொண்டிருக்கிறது? என்ன லென்ஸ் போட்டிருக்கிறார்கள்? என்பதுவரை அவருக்கு நன்றாகத் தெரியும். 

Photo featuring Rajinikanth, Nana Patekar Kaala goes viral

அதேபோல, நானா படேகர் சார் லைட்டின் வேல்யூஸ் எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்வார். அவ்வளவு தூரம் அவருக்கு தொழில்நுட்ப அறிவு இருக்கிறது. Low key செய்திருக்கிறேனா? High Key செய்திருக்கிறேனா? என்பதுவரை அவர் தெரிந்துவைத்திருப்பார். Focus Distance என்னவென்று அவர் அங்கேயிருந்தபடி சொல்வார். அவருக்கும், கேமராவுக்கும் இடையேயிருக்கிற தூரத்தைக் கணக்கிட ஒருவர் டேப் எடுத்தவுடன், 10 அடி வைத்துக்கொள் என்று சரியாகச் சொல்லிவிடுவார். அந்தளவிற்கு அனுபவம் வாய்ந்த மனிதராக இருக்கிறார். அதேபோல ஒரு ஸ்கிரிப்டை உள்வாங்குகிறபொழுது, அரங்கை எந்தளவிற்கு தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது வரையிலுமே, அவருடன் சேர்ந்து வேலை செய்தது, எங்களுக்கு இன்னும் தொழில்நுட்ப ரீதியிலான அணுகுமுறையோடு விரைவாக வேலையை முடிக்க உதவியது. Live Sound-ல் வேலைசெய்யக்கூடியவர்களாக இருந்ததால், பெரும்பாலும் அரங்கம் அமைதியாக இருக்கவேண்டும், என்று எதிர்பார்ப்பார்கள். அதெல்லாம் அவருக்காக நாங்கள் நிறைய வேலை செய்தோம். ஆனால், நாம் இந்தப் பக்கம் காட்சி எடுத்துக்கொண்டிருப்போம், அடுத்த பக்கம் ’டமால் டுமீல்’ என்று சத்தமாக மற்ற அரங்க வேலைகள் செய்துகொண்டிருப்பார்கள். அது நடிகர்களுக்குத் தொந்தரவாக இருக்கும். ஆனால், ரஜினி சார் அதைப் பொருட்படுத்தமாட்டார். பக்கத்திலிருந்து வருகிற சப்தங்களைக் கவனத்தில் கொள்ளாமல் நடித்துவிடுவார். ஏனெனில், இங்கு நமக்கு வேறுவிதமான பயிற்சிமுறை உள்ளது. 

பெரும் கூட்டத்திற்கு நடுவில்கூட அவரால் நடிக்க முடியும். ஆனால், live sound-ல் பழக்கப்பட்டவர்களுக்கு, அந்த செட்டைத் தவிர்த்து, வெளிப்புற சப்தங்கள் வருகிறபொழுது, தன் மனதில் இந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும்? என்று நினைத்திருந்த மனநிலை குலைந்துவிடும் என்று நினைப்பார்கள். எனவே, நானே படேகர் போன்ற நடிகர்கள் நடிக்கிறபொழுது அரங்கம் இன்னும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமிருக்கும். இப்படி இரண்டுமே வெவ்வேறான அணுகுமுறை. ஒரு வசனம் என்ன செய்யும்? இது பார்வையாளர்களிடத்தில் என்னவாகப் போய்ச்சேரும்? என அத்தனையையும் இருவருமே தெரிந்து வைத்திருப்பார்கள். ஏறக்குறை 150 படங்களுக்கும் மேலாக நடித்துக்கொண்டிருக்கிற பொழுது, நாம் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். அவர்களை ஏமாற்றி நாம் ஒன்று செய்துவிட முடியாது. கால விரயம் செய்துகொண்டிருக்கிறோமா? என்பதையெல்லாம் கவனமாக உணர்ந்து வைத்திருப்பார்கள். 

நானா படேகர் ஃப்லிம் இன்ஸ்டிட்யூட்டோடு நிறைய படங்கள் செய்திருக்கிறார். அவருக்குத் திரைப்படக் கல்லூரிகளோடு நெருங்கிய தொடர்பு இருப்பதால், எனக்கும் மிக நெருக்கமான ஒரு நபராக இருந்தார். பூனே ஃப்லிம் இன்ஸ்டிட்யூட் என்று சொன்னவுடன், அவர் இன்னும் என்னுடன் நெருங்கிப் பழகி, மிக மகிழ்வோடு நிறைய விஷயங்கள் பேசுவார். இந்தக் காட்சிக்கு எப்படி லைட்டிங் அமைப்பது என்பதுவரை தொடர்ந்து பேசுவோம். தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். எனக்குமே இது மிகவும் உதவியாக இருந்தது. 

Pa Ranjith Is The Conscience The Indian Film Industry Desperately ...

Pre-Production-ல் ஒரு காட்சி குறித்து டிசைன் செய்து வைத்திருப்பீர்கள். இந்தக் காட்சியை இப்படி எடுக்கலாம், இந்த இடத்தில் ’கட்’ செய்யலாம், என்றெல்லாம் நினைத்திருப்பீர்கள். அதுவே, படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றபின்னால், அங்கு நடக்கிற சூழ்நிலைகளைப் பார்த்து, காட்சியை மாற்றியமைக்கிற பழக்கம் இருக்கிறதா?

ஆமாம், அந்த வழக்கம் இருக்கிறது. ரஞ்சித்தும் நானும் முதல் படத்திற்கே, ஸ்டோரிபோர்ட் உருவாக்கித்தான் படப்பிடிப்பிற்குச் செல்வோம். ஷாட் டிவிஷனுக்குத் தனி புத்தகமே இருந்தது. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளக்கூடிய இடமாகத்தான் இவையெல்லாம் நிகழ்ந்தன. இது மிக நீண்ட Pre Production. என்ன காட்சி எடுக்கப்போகிறோம்? எந்த ஷாட் முதலில் எடுக்கப்போகிறோம்? என சரியான திட்டமிடல் இருந்தது. சில காட்சிகள் குறித்து இருவருமே வரைந்து பார்த்துக்கொள்வோம். என்னென்ன நடக்கிறது? என கோடுகளால் வரைந்துப் பார்த்துக்கொள்வோம். ஸ்கிரிப்ட் புத்தகம் போல ஷாட் டிவிஷன் புத்தகமும் எங்களிடம் இருந்தது. கபாலியில் அந்த வழக்கம் கொஞ்சம் குறைந்திருந்தது. பொதுவாக, இந்தப் படத்தை என்னமாதிரியான ஸ்டைலில் எடுக்கப்போகிறோம்? என்ற தெளிவு இருந்தாலே போதும். சில விஷயங்களை நான் என்ன தீர்மானிக்கிறேன் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதும், முரண்பட்டால் எளிதாக அது குறித்துப் பேசிக்கொள்வதும், நடந்தது. காலாவில் அந்த மேம்படுத்துதல் இன்னும் அதிகமாக இருந்தது. 

ஒரு ஒளிப்பதிவாளருக்கும், இயக்குனருக்கும் நல்ல புரிதலுணர்வு அவசியம். ராஜீவ் ரவியையும் அனுராக் காஷ்யப்பையும் சொல்லலாம். நான் என்ன நினைக்கிறேனோ, அதை விஷுவலைஸ் செய்யக்கூடிய ஆளாக அவர் இருப்பதால், பெரிய உரையாடல் கிடையாது. நான் ஐடியாவாக நினைப்பதை கேமராமேன் காட்சியாக எடுத்து விடுகிறார், என அவர்கள் இருவரைப் பற்றியும் அறிந்தவர்கள் சொல்வார்கள். அதுபோல நம்முடைய குழு, எந்தளவிற்கு, காட்சி ஊடகம் சார்ந்து பெரிய விவரிப்புகளைத் தனக்குள் வைத்திருக்கிறார்களோ அது மிகவும் எளிதாக இருக்கும். ஐடியா என்பது டெக்ஸ்ட் ஆக உள்ளது. அந்த ஐடியாவை எழுத்தாக மாற்றுகிறபொழுது அதில் என்னவெல்லாம் செய்யலாம்? இந்தக் காட்சிக்கு நான் என்ன லென்ஸ் போடவேண்டும், என்பது எங்களது புரிதலில் இருந்து வருகிறது. 

குழு ஒத்துழைப்பு

என்னுடன் பணியாற்றுகிற ஒவ்வொருவரது ஒத்துழைப்பும் முக்கியம். எனவே, உட்கார்ந்து நன்றாக பேசுவோம். நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்லி புரியவைக்க முயற்சிப்போம். பெரும்பாலும், இயக்குனர் குழுவுடன் இணைந்து அடிக்கடி ஸ்டோரி டிஸ்கஷன் மேற்கொள்வோம். ரஞ்சித்தின் குழு ஒரு திரைப்படப் பள்ளி போல தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருப்பார்கள். ஒரு படம் பார்த்தார்களானால், எல்லோரும் உட்கார்ந்து அதைப் பற்றிப் பேசுவார்கள், அதில் சொல்லியிருக்கிற கருத்துகள் குறித்து விவாதிப்பார்கள். அது முன்மொழிகிற கருத்தியல் சார்ந்து தன் எதிர்வினைகளை முன்வைப்பார்கள். அதேபோல, அவருடைய ஸ்கிரிப்டை எழுதிக் கொடுக்கிறபொழுது, அந்த ஸ்கிரிப்டை முன்வைத்தும் பெரிய விவாதங்கள் நடக்கும். 

அந்த ஸ்கிரிப்டின் மீது அவர்களுக்கிருக்கிற ஒவ்வொரு முரண்கள் குறித்தும் எடுத்துரைப்பார்கள். ரஞ்சித்தும், ஸ்கிரிப்ட் சார்ந்து தன்னுடைய வாதங்களை முன்வைப்பார். மேலும், ஒரு படம் செய்து முடித்ததும், எடிட்டர், சினிமோட்டோகிராஃபர், என அனைவருக்குமே ஒரு மீட்டிங் ஏற்பாடு நடக்கும். இதில் எடுத்துமுடித்த சினிமாவில் எதையெல்லாம் சாதித்திருக்கிறோம். எதையெல்லாம் கைகூடாமல் தவறவிட்டிருக்கிறோம். சாதாரணமாக யோசித்த விஷயம், மிகச்சிறப்பாகத் திரையில் பிரதிபலிக்கலாம். அதுவே, மிகத்தீர்க்கமாக யோசித்த விஷயம், மிகச் சாதாரணமாகப் பார்வையாளர்கள் யாராலும் கண்டறிய முடியாமல் விடுபட்டுப் போயிருக்கலாம். இந்தப் படத்தில் நமக்குக் கிடைத்திருக்கிற சாதக பாதக அம்சங்களைக் குறித்து, தன்னுடைய படம் குறித்து தாங்களே விவாதித்துப் பேசுவார்கள். இதை ஒவ்வொரு படத்திற்கும் ரஞ்சித் செய்கிறார். அந்தப் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் அதில் கலந்துகொள்வார்கள். 

அப்படிப் பேசுகிறபொழுது நம்முடைய வேலையைப் பற்றி நாமே தெரிந்துகொள்வது, நம்முடைய அனுகூலங்களை நாமே அலசிப் பார்ப்பது எல்லாம் நடக்கிறது. இதுமாதிரியாகப் புரிந்துகொள்கிற குழுவாக நாம் உருவாகிக்கொண்டிருக்கிறபொழுது, நீங்கள் உருவாக்குகிற படைப்புகளை இன்னும் எளிமையாக எக்ஸிக்யூட் பண்ணமுடியும்.

அப்படியில்லையானால் நான் ஒரு விஷயம் குறித்து யோசித்திருப்பேன், இயக்குனர் சொல்வதைப் புரிந்துகொள்ளாமல் நானாக ஒரு ஷாட் வைத்திருக்கலாம். இப்படி ஷாட் வைப்பதில் இருவருக்குள்ளும் முரண்கள் வருகிறபொழுது, நான் ஏன் இப்படியொரு ஷாட் வைத்தேன் என்று நான் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதேபோல, அவரும் எனக்கு ஏன், இந்த ஷாட் வேண்டாம் என்று புரியவைக்க முயற்சிப்பார். இந்நெருக்கடிகளுக்குக் காரணம், அவருடைய ஐடியாவை முழுதாக எனக்குப் புரியவைக்காததாக இருக்கலாம், நான் என்ன நினைக்கிறேன் என்பதை அவருக்குச் சொல்லாமல் விட்டதாகவும் இருக்கலாம், இம்மாதிரியான சூழ்நிலைகளுக்குள் சிக்குகிறபொழுது, குழப்பங்கள் நடக்கும். இப்படியான சூழ்நிலைகளைப் பெரும்பாலும் நாங்கள் தவிர்த்துவிட்டு, கருத்தியல் சார்ந்தோ, திரைப்பட ஊடகம் சார்ந்தோ, சில நம்பிக்கைகள் சார்ந்தோ தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறோம். 

ப்ரீ புரொடக்‌ஷனில் 100 சதவீதம் எல்லாவற்றையும் யோசித்துவிட்டு, படப்பிடிப்பிற்குச் சென்றால்தான், அதில் ஒரு 60 சதவீதமாவது நம்மால் ரீ-கிரியேட் செய்ய முடியும். ப்ராக்டிகல் எக்ஸிக்யூஷன் என்பது நம்முடைய கற்பனைக்கு அப்பால் இருக்கும். 

மெட்ராஸ் ஷுட்டிங்கின்பொழுது படப்பிடிப்பிற்கான பின்னணி இசையெல்லாம் கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடத்தினோம். இசையையும், ஒலியையும் ரஞ்சித் அதிகமாகப் பயன்படுத்துகிறார். ஆண்டனி ரூபன் மாதிரியான ஆட்கள் இங்கு இருப்பதால், செளண்ட்ஸ் மூலமாகக் கதை சொல்வதால், இயற்கையான முறையில் பின்னணி ஒலியை மெருகேற்றுவதாக அவரது பணி இருக்கிறது. ஃப்லிம் இன்ஸ்டிட்யூட்டில் அவர் எனக்கு சீனியர். பல விருதுகள் வாங்கியிருக்கிறார். செளண்ட் டிசைனும், மியூசிக்கும் சேர்ந்த ஒரு படமாகத்தான், ரஞ்சித்தின் படங்கள் இருக்கின்றன. 
உதவி ஒளிப்பதிவாளர்கள்.

உதவி ஒளிப்பதிவாளர்களின் பங்கு அதிகமாக இருந்தால்தான், படப்பிடிப்பு நன்றாக, தடையில்லாமல் இயங்கும். எல்லோரும் இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் வருவார்கள். அதேபோல பலரும் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற எண்ணத்தில் வருவார்கள். ஆனால், காட்சி படப்பிடிப்பு நடக்கிற இடத்தில், அனைத்து உதவியாளர்களும் உடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனக்குத் தெரிந்து ரஞ்சித்தின் உதவியாளர்கள் மற்றும் என்னுடைய உதவியாளர்கள் சிலருக்கு நான் என்ன படப்பிடிப்பு நடத்துகிறேன் என்ற விஷயமே தெரியாது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை வேறெங்காவது இருக்கும். அடுத்த காட்சிக்கான தயாரிப்பில் இருப்பார்கள். ஆனால், இதெல்லாம் சேர்ந்ததுதான் ஒரு படத்திற்கான வேலை என்பதால், உதவியாளர்களும் அதையெல்லாம் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். நடக்கிறார்கள். அந்த உதவியாளர்கள் ஒவ்வொருவரும் அந்த ஒத்துழைப்பைத் தருகிறபொழுது, முழுமையான திரைப்படமாக உருவாகும். எல்லோருமே மானிட்டரின் முன்னால் அமர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினால், முழுமையான படைப்பு உருவாகாது. 

அப்படியாக, எல்லா உதவி இயக்குனர்களும், உதவி ஒளிப்பதிவாளர்களும், அவரவர்களுடைய பங்களிப்பை, அவர்களுக்கான வரையறுக்குள் வேலை செய்கிறபொழுது சிறப்பான படைப்பு உருவாகும் சாத்தியம் இருக்கிறது. 

படம் இயக்குகிற வாய்ப்பு

 என்னுடைய இலக்கு என்பது ஓவியத்தை, அடுத்து ஒரு காட்சி ஊடகத்திற்கு நகர்த்தவேண்டும் என்பதே! அதில், கதை சார்ந்து இயங்கினால் இயக்குனராக இருப்பேன்.

இல்லையெனில், அது ஓவியப்பிரதியாக இருக்கும். ஆனால், காட்சி வெளி மற்றும் காட்சி ஊடகத்திற்குள் இயங்கவேண்டும் என்பதுதான், என் வாழ்நாள் நோக்கமாக இருக்கிறது. இப்பொழுது அதில்தான் இயங்குகிறேன். அதில் இயக்குனராக அவதாரம் எடுப்பேன் என்றெல்லாம் இப்போது யோசிக்கவில்லை.
பிடித்த சினிமோட்டோகிராஃபர்கள்.

ஒவ்வொருவருடைய பங்களிப்பும், அவர்களுடைய Execution Level வரையறைக்குள்ளிருந்து யோசித்திருப்பார்கள். ஒருசில நேரத்தில் ஒருவர் ட்ரோன் பயன்படுத்தி காட்சி எடுப்பதற்கும், அதையே ஒருவர் க்ரேன் பயன்படுத்தி ஷாட் எடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள், வேறுபாடுகளை உணரமுடியும். 

ஒருவருக்கு ட்ரோன் வரை செல்வதற்கு, அதற்கு வசதிகள் இருக்கிறது. இன்னொருவருக்கு க்ரேன் வரை செல்வதற்குத்தான் வசதி கொடுத்திருக்கிறார்கள். அதைவைத்து அவர் ஒரு சிறப்பான படம் எடுப்பார். இதனால், யார் சிறப்பாக எடுத்திருப்பார்கள்? என்ற முடிவுக்கு வரமுடியாது. இருவரும் அவரவர் எல்லைக்கு உட்பட்டு படமெடுத்திருப்பார்கள். அந்த வரையறைக்குள்ளிருந்து தன் பங்களிப்பை நிகழ்த்தியிருப்பார்கள். 

Wong Kar Wai படங்கள் பிடிக்கும். அவரது சினிமோட்டோகிராபரான க்றிஸ்டோபர் டாய்ல் படங்களை அதிகமாகக் கவனித்திருக்கிறேன். நான் சினிமாவை அணுகுகிற அணுகுமுறையோடு நெருங்கிவரக்கூடிய பாணியை அப்படம் கொண்டிருக்கிறது. இன்ஸ்டிட்யூட் காலத்திலிருந்தே அவரது படங்களை ரசிக்கிறேன். அவரது படங்களை இன்னும் மகிழ்ச்சியோடு பார்ப்பேன். அவருடைய நுணுக்கங்கள் என் வேலைப்பாடுகளிலும் தெரிய வாய்ப்புள்ளது. மற்றபடி நான் எல்லோருடைய ஒளிப்பதிவு சார்ந்த நுணுக்கங்களையும் கவனிக்கிறேன். 

அவர்கள் படங்களைப் பார்த்து, அதை நாமும் பிரதியெடுப்பது அவ்வளவு உண்மையாக இருக்காது. அப்படியே பிரதியெடுத்தாலும், அவர் கடத்திய உணர்வை, நம்மால் கடத்த முடியாது. வேண்டுமென்றால், ஒரு பெரிய சினிமோட்டோகிராஃபர் எடுத்ததுபோல காட்சியை, வைத்த கோணத்தை, லைட்டிங்கை நாமும் அப்படியே பிரதியெடுத்து உருவாக்கலாம். ஆனால், அந்தக் காட்சி உருவாக்கியிருக்கிற கம்பீரத்தை நம்மால் நம் காட்சியில் உருவாக்க முடியாது. ஏனெனில், அங்கு அவர்கள் காட்சியை உருவாக்கியதற்கான நோக்கம், வேறானதாக இருக்கிறது. ஆக, நீங்கள் உங்கள் ஸ்கிரிப்டை என்னவாக புரிந்துகொண்டீர்கள் என்ற கேள்வியிலிருந்துதான், நம் வைக்கிற கோணம், லைட்டிங்கும் நாம் உருவாக்குகிற காட்சிப் பிரதியும் மாறும். அப்படியெனில், நம்முடைய அனுபவங்களிலிருந்து, உண்மையிலிருந்து, நேர்மையிலிருந்து உருவாகிறபொழுது அது ஆகச்சிறந்த படைப்பாக இருக்கும். 

Wong Kar-wai with Christopher Doyle - In the Mood for Love ...

தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள்.

எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறபொழுதுதான் அந்தப் புத்தகத்தை தேடிச்சென்றோ, இணையத்தில் தேடியோ படிப்பேன். அந்தக் கேள்விகள் வராதபட்சத்தில் அதுவரை நாம் ஆயிரம் புத்தகங்கள் படித்திருந்தாலுமே, அது பயன்படாது. என்னுடைய சந்தேகங்களிலிருந்துதான் என்னுடைய கல்வி உருவாகிறது. Parellel cut என்ற பிரயோகம் நமக்கு வருகிறதென்றால், அது என்னவென்றே தெரியாமல் கூட, நம் காட்சியமைப்புகளில் அதைப் பயன்படுத்திக்கொண்டிருப்போம். ஆனால், அதை நாம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறபொழுது பேரலல் கட்டின் நியாயத்தையும் உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, அந்த விளக்கத்தைத் தேடி நான் ஓடுகிறபொழுது, அந்த பேரலல் கட்டினைப் புரிந்து படிப்பேன். எனவே, என் தேவைகளுக்கு ஏற்ப நான் இயங்குகிறபொழுது, அந்தக் கல்வியைப் பரிபூரணமாக கிரஹித்துக்கொள்கிறேன். அதுதான் உண்மையான கல்வி. 

-முற்றும்