சினிமா In & Out

முதல் படைப்பு அது குறும்படமாக இருந்தாலும் திரைப்படமாக இருந்தாலும் அதில் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆரம்பத்தில் சிற்சில தவறுகளைச் செய்து, அதிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் அதே தவறுகளை மீண்டும் செய்யாமல் எச்சரிக்கையாக பணியாற்றுகிறோம். அல்லது, ஒரு திரைப்படத்திற்கான முன் – தயாரிப்புப் பணிகளிலேயே முந்தைய படங்களின் தவறுகள் மீண்டும் இந்தப் படத்தில் நிகழாதவாறு படப்பிடிப்புகளைத் திட்டமிடுகிறோம். ஆனால், நிதர்சன உண்மை என்னவெனில், நீங்கள் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் அதன் பட உருவாக்கப் பணிகளிலும், நீங்கள் கற்றுக்கொள்ள ஏதோவொரு விஷயங்கள் புதிது புதிதாக நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. முதல் படத்தில் நிகழ்ந்த அதே தவறுகள்தான் இரண்டாவது படத்திலும் நிகழும் என்று சொல்லமுடியாது. அதற்குப் பதிலாக, இரண்டாவது படத்தில் புதிய பல பிரச்சினைகள் எழும். ஒரு திரைக்கலைஞனாக அதைச் சரிசெய்து, அடுத்த மூன்றாவது படத்திற்குள் செல்வீர்கள். இப்பொழுது முதல் இரு படங்கள் தந்த பாடங்கள் உங்கள் மனதில் இருக்கிறது. உங்கள் அனுபவம் கூடியிருக்கிறது.அதேநேரத்தில், மூன்றாவது படத்தில் வேறொரு கோணத்திலிருந்து சில புதிய பிரச்சினைகள் உங்களுக்குச் சவாலாக எழுந்து நிற்கும். எனவே, ஒரு திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர் போன்ற கலைஞர்களுக்கு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் காத்துக்கிடக்கும். இவற்றை எப்படிச் சமாளித்து ஒரு நல்ல படைப்பை உருவாக்குகிறீர்கள் அதை மக்கள் முன் வெற்றிகரமாகக் கொண்டுவருகிறீர்கள்,எனஇவையெல்லாம் சேர்ந்துதான், உங்களை ஒரு தேர்ந்த கலைஞன் எனும் இடத்தை நோக்கி நகர்த்திச் செல்லும்.

பல நபர்கள், முதல் படத்தில் செய்ய நேர்கிற தவறுகளுக்கு அஞ்சியே, அதன் பக்கம் செல்லாமல் தவிர்த்துக்கொண்டே வருவார்கள். நீங்கள் எவ்வளவுதான் காலம் தாழ்த்தினாலும், அந்தத் தவறுகளைக் கடந்துதான் உங்கள் பயணத்தை நீங்கள் மேற்கொள்ள முடியும்.ஃப்லிம்மேக்கிங்கில் ஜாம்பவான் என்று போற்றப்படுகிற ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். தான் ஒரு சிறந்த இயக்குனர் என இனிமேலும் அவர் யாருக்காகவும் தன்னை நிரூபிக்கத் தேவையில்லை. அவர் படங்கள் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டையாடுகின்றன. அவர் தேர்ந்தெடுக்கிற கதைக்களன்களின் பிரச்சினைகள் இருந்தாலும், அவரது திரைமொழி தனித்துவமானது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் கட்டிப்போடும் வசீகரமிக்கது. ஆனால், அவர்கூட தான் ஒவ்வொருநாளும் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன்னால், படபடப்பை உணர்வதாகச் சொல்கிறார். எனவே, இந்தப் பயமும், படபடப்பும்கூட உங்களை இன்னும் எச்சரிக்கையுடன் செயலாற்ற வைக்கும். ஆக, உங்களுக்கு மட்டுமே, திரைப்பட உருவாக்கத்தின் மீதும், அதில் முதல் அடி எடுத்துவைப்பதன் மீதும், தயக்கம் இருப்பதாக நினைக்கவேண்டாம். எல்லோருக்குமே இது இயல்புதான். பல படங்கள் எடுத்த இயக்குனர்கள்கூட இதே தயக்கத்துடன் இருப்பதுண்டு. எனவே, அதற்காக, அந்த முதல் படியில் காலடி எடுத்துவைக்காமல், தயக்கத்துடனேயே நின்றுகொண்டிருக்காதீர்கள். இதன்மூலம் நீங்கள் அந்த அனுபவத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்பதுதான் அர்த்தம்.

முந்தைய நாட்களில் கதைக்கான விவாதப் பணிகளில், படப்பிடிப்புத் தளங்களில் ஒரு சில முதிர்ந்த அனுபவசாலிகளும் பங்கேற்பார்கள். அவர்களுக்கு இதுபோன்ற பல படங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்கும். எனவே, அவர்கள் இப்போது பணியாற்றுகிற குழுவிடம், தங்கள் அனுபவத்தைச் சொல்லியபடியே இருப்பார்கள். இதுவும் ஒருவகையில், நாம் படப்பிடிப்பில் எதிர்பாராமல் வருகிற ஒருசில சிக்கல்களை முன்கூட்டியே சரிசெய்ய உதவியாக இருக்கும். கிட்டத்தட்ட இந்தத் தொடரும் அதுபோன்ற ஒன்றுதான்.
திரைப்பட உருவாக்கம் சார்ந்து நீங்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும், பல உலகமொழித் திரைப்படங்களை உங்கள் விரல் நுனியில் வைத்திருந்தாலும், அந்தக் களத்தில் நின்று நீங்கள் பெறுகிற அனுபவம் தனிச்சுவையுடையது. அந்தக் களத்திற்குச் செல்லும்முன், நீங்கள் உங்களைத் தயார்படுத்திக்கொள்கிறீர்கள், அதற்கான செயல்பாடுகள்தான் படிப்பதும், படங்கள் பார்ப்பதும், ஆனால், அந்த படப்பிடிப்புத் தளம் என்பது இதற்கு முற்றிலும் வேறானது. நீங்கள் எப்பொழுதும் மனக்கண்ணில் உருவாக்கி வைத்திருப்பதுபோல, எழுத்திலிருப்பதை அப்படியே காட்சியாக மாற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு நிறைய பயிற்சிகளும் உழைப்புகளும், கூட்டு ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இதை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள திரைப்பட உருவாக்கம் என்பதே ஒரு கலை என, அந்த அனுபவம் வாயிலாகவே உணர்வீர்கள்.
ஒரு குறும்படம் அல்லது திரைப்படம் எடுத்து முடித்தவுடன், அந்தப் பட உருவாக்கப் பணிகளில் தாங்கள் என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவித்தோம், எப்படி அவற்றை எதிர்கொண்டோம், எழுதும்பொழுது நேர்ந்த பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், படப்பிடிப்பில் தேவையான உபகரணங்கள் இல்லாதுபோயினும் அந்தக் குறை தெரியாது காட்சிகளை ஒளிப்பதிவு செய்த விதம், சுயாதீன முயற்சியாக சொற்பத்தொகையைக் கொண்டு படமெடுக்க வருகையில் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும், அதை எப்படித் தவிர்த்து ஒரு படைப்பை முழுமையாக எடுத்து முடிப்பது? என தாங்கள் கற்றுக்கொண்டவைகள் குறித்து அந்தந்த திரைப்படக் குழு, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அயல்நாடுகளில் பட உருவாக்கம் சார்ந்து தனித்தனி குறுந்தகடுகள் கூட கிடைப்பதுண்டு. ஆனால், தமிழில் அதற்கான முயற்சிகள் முழுமையாக இல்லை என்றே சொல்லவேண்டும். அதிகபட்சம் படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்ட பட உருவாக்கக் காட்சிகள், திரைக்கதைகள் மட்டுமே பார்க்கவும் படிக்கவும் கிடைக்கின்றன. ஒவ்வொரு திரைப்படத்திற்குப் பின்னாலும், அது எழுத்திலிருந்து திரைக்குக் கொண்டுவருவது முதல் அந்தத் திரைப்படக்குழு எதிர்கொண்ட பணிகளை, அவர்களே வெளிப்படையாக எடுத்துக்கூறும்பொழுது, அந்த ஒவ்வொரு திரைப்பட உருவாக்கமுமே ஒரு திரைப்படக் கல்லூரி போல, திரைப்படத்துறையின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குப் பலனளிக்கும். திரைப்பட உருவாக்கம் எனில், வெறும் இயக்கம்(டைரக்ஷன்) சார்ந்தது மட்டுமல்ல, கதை, அதற்கான முன் – தயாரிப்புப் பணிகள், படப்பிடிப்புப் பணிகள், நடிப்பு, ஒலி – ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, படத்தொகுப்பு, உடை, அலங்காரம், தயாரிப்பு மேற்பார்வை, கலர் கரெக்ஷன், டி.ஐ போன்ற பிற்- தயாரிப்புப் பணிகள் என அந்தந்த துறையில் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். தான் கற்ற படிப்பினைகளை மற்றவர்களுக்குச் சொல்லச்சொல்ல அந்த அறிவு பல்கிப்பெருகுமே தவிர குறைந்துபோகாது. இப்படி, ஒரு திரைப்பட – உருவாக்கப் பணியில் இருக்கிற ஒவ்வொரு குழுவும் தான் அந்தத் திரைப்படத்திற்கு ஆற்றிய பங்கினையும், வேலை செய்த நுட்பங்களையும், கைக்கொண்ட தந்திரங்களையும் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள அதுவே ஒரு திரைப்படப் பாடநூல் போலச் செயல்பட வாய்ப்புள்ளது.

பல லட்சங்களில் பணம் செலவழித்துப் படிக்க முடியாத மாணவர்கள், இந்த ஒவ்வொரு படத்திலிருந்தும், திரைப்பட உருவாக்கம் சார்ந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அதிலிருந்து அவர்கள் தனக்கான பாதையையும் தேர்ந்தெடுத்து, அதில் பயணித்து, தனக்கான அனுபவங்களைப் பெற்று, தன் படைப்புகளைத் தொடர்ந்து படைக்க முடியும். ஃப்லிம்மேக்கிங்கைப் பயில்வதற்கு பணம் அவர்களுக்குப் பெரிய தடையாக இருக்காது. கிராமங்கள்தோறும் இந்தப் புத்தகங்கள் அங்குள்ள மாணவர்களுக்குத் திரைப்படக்கல்லூரிகள் போலச் செயல்படும். ஆனால், தமிழில் இதுபோன்ற முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்ந்திருப்பினும், ஒரு முழுத்தொகுப்பாகத் தீவிரமான ஒன்றாக பதிவு செய்யப்படவில்லை. அதனை இந்தப் புத்தகம் துவங்கிவைக்கும் என்று நம்புகிறோம்.
ஒரு தயாரிப்பாளரை வைத்துக்கொண்டு, அவர் பணத்தில் ஒரு படப்பிடிற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் கையெட்டும் தூரத்தில் அமைத்துக்கொண்டு, படப்பிடிப்புப் பணிகளை மேற்கொள்வது ஒரு வகை. ஆனால், சுயாதீன திரைப்படங்களில் நீங்கள் இதுபோலச் செயல்பட முடியாது. ஒரு காட்சியில் நடித்துக்கொண்டிருந்தவர், அடுத்த காட்சியில் ஒரு லைட்-மேனாக, குழுவில் ஒரு ஆளாக தன் வேலையில் பங்காற்றுவார். அவரே உதவி இயக்குனராகவும் செயலாற்றுவார். ஒளிப்பதிவுக் கருவிகளைச் சுமந்துவரும் நபராகவும் அவரே இருப்பார். சுயாதீன திரைப்படம் என்பதே குறைந்த குழுவைக் கொண்டு, பயணிப்பதுதானே!. சுயாதீன படப்பிடிப்புத் தளத்தில் ஒரு இணக்கமான உறவைக் காண முடியும். தனக்கு இந்த வேலைதான் என்று அவர்கள் ஒதுங்கித் தன் வேலையை மட்டும் செய்துகொண்டிருக்கமாட்டார்கள். எல்லாவேலையிலும் அந்த நபரின் ஈடுபாடும், ஒத்துழைப்பும் இருக்கும். ஒரு சினிமா, ஒரு தனி நபரின் கற்பனையிலிருந்து உதயமானதாக இருந்தாலும், அந்தக் கற்பனையைக் காட்சியாக வெளிக்கொண்டுவர குழு ஒத்துழைப்பு அவசியம். சுயாதீன படப்பிடிப்புத் தளத்தில், நீங்கள் புரொடக்ஷன் குழு சாப்பாடு கொண்டுவரும் என்று காத்திருக்க முடியாது. இடைப்பட்ட நேரத்தில் உதவி இயக்குனர் அதற்கான வேலையைக் கவனிப்பார். எனவே, நீங்கள் ஒரு சுயாதீன திரைப்படக் குழுவில் பணியாற்றுகிறபொழுது, ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, இயக்கம், திரைக்கதை உருவாக்கம் என பல களன்களிலும் வேலைசெய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் நீங்கள் கற்றுக்கொள்வதற்கான விஷயங்களும் ஏராளமாய் இருக்கின்றன. அதன்படி, எங்களது முதல் குறும்பட முயற்சியில் நாங்கள் கற்றுக்கொண்டவைகளை, ஆரம்பத்திலிருந்து முடிவுவரை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறோம். முடிவில் அந்தக் குறும்படத்தின் குறுந்தகட்டோடு இது புத்தகமாகவும் வெளிவரும்.
இந்தப் படம் மிகச்சிறந்த படம், நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது, திரைப்பட உருவாக்கத்திற்கு இதுவே சான்று, மைல்கல் என்றெல்லாம் சொல்லவில்லை. இந்த முதல் படத்தில் நாங்களும் தவறுகள் செய்திருக்கிறோம், அவற்றிலிருந்து சில பாடங்களையும் கற்றுக்கொண்டிருக்கிறோம். கதைத் தேர்வு, படப்பிடிப்புத்தளத்தில் நேர்ந்த காலநிலை மாற்றங்கள், தகுந்த முன்னேற்பாடுகளின்மை, இரவு நேர படப்பிடிப்பிற்கான திட்டம், அவசர கதி, நடிகர்களின் பணிச்சூழல், பொருளாதாரம் எனச் சொல்ல ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதேநேரத்தில், எவ்வித முறையான உப-கருவிகளும் இல்லாமல், கிட்டத்தட்ட படப்பிடிப்புக்குரிய Lights, Tripod, Camera equipments, என எதுவுமே இல்லாமல், முழுக்க கைகளையே தாங்கிகளாகக் கொண்டு, கிடைத்த சொற்ப வெளிச்ச வசதிகளைத் தனக்குச் சாதகமாக்கி, தேர்ந்த ஒளிப்பதிவாளரின் சிறப்பான முயற்சியால் மிகச்சிறந்த காட்சிகளைப் பெற்றிருக்கிறோம். (அந்த ஒளிப்பதிவாளர், திரைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொருவரின் விபரமும் இந்தத் தொடரின் வாயிலாகவே அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. காத்திருங்கள்). எனவே, நாங்கள் எங்களது முதல் குறும்படத்தில் இன்னின்ன பிரச்சினைகளைச் சந்தித்தோம், இந்தச் சவால்களை சாமர்த்தியமாக எதிர்கொண்டோம், இந்தத் தவறுகளைச் செய்திருக்கக்கூடாது என கருதுகின்றவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். இதைப் படிக்கிற நீங்கள் உங்கள் முதல் படத்தில் அல்லது எடுக்கப்போகிற அடுத்த படத்தில் இந்தத் தவறுகளிலிருந்து முன்கூட்டியே காத்துக்கொள்ள முடியும். ஆனால், எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் படத்தில் இன்னும் சில புதிய பிரச்சினைகள் எழக்கூடும்…

ஒரு திரைப்பட உருவாக்கம் சார்ந்த புத்தகம் வெளிவருவது முக்கியமான முயற்சியாகவே பார்க்கிறோம். அத்தோடு, இதனை வெறுமனே எங்கள் ஒரு குறும்படம் என்பதோடு அல்லாமல், ஒரு திரைப்படைப்பு உருவாக, அதன் ஆரம்பம் முதல் முடிவு வரை என்னென்ன பணிகளெல்லாம் நடைபெறுகின்றன என்பதையும் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கப் போகிறோம். இதுவரை ரகசியமாய்க் கட்டிக்காக்கப்பட்ட அதன் சூட்சுமங்கள் இந்தத் தொடரின் வாயிலாக வெளிவரவிருக்கின்றன. ஒரு திரைப்பட இயக்குனர், தன் இயக்கம் (டைரக்ஷன்) சார்ந்து மட்டுமல்லாமல், ஏனைய பிற துறைகளான, நடிப்பு, ஒலி, ஒளியமைப்பு, படத்தொகுப்பு என மற்றதுறைகள் சார்ந்தும் அறிந்துகொள்வது நல்லது. அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தேர்ந்த அனுபவசாலிபோல உங்களுடன் பயணிக்கும். இந்தக் குறும்படம் மட்டுமல்ல, இனி எடுக்கிற ஒவ்வொரு திரைப்பட முயற்சியுமே, அவை முறையாகப் பதிவுசெய்யப்பட்டு, மக்களிடம் ஒப்படைக்கப்படும். திரைப்பட உருவாக்கம் (Film making) எனும் மாயை உடைக்கப்படுவதே இதன் நோக்கம்.
- தொடரும்