ஆவணக்காப்பகம்: அலங்காரம்மாறிப்போச்சு!

கருப்பு- வெள்ளை காலம்முதல் டிஜிடல் புரஜெக்டர் வந்துவிட்ட இன்றையகாலம் வரை வெள்ளித்திரையில் உடைஅலங்காரம் என்றதுறை பலவண்ண மாற்றங்களைக்கண்டிருக்கிறது.


சினிமா, ஃபேஷன் – இந்த இருவார்த்தைகளும் உடலும் உயிரும்போல, சினிமாநட்சத்திரங்களே பெரும்பாலும் ஃபேஷன் முன்னோடிகளாக இருக்கிறார்கள். ஹாலிவுட்டின் க்ரெகரிபெக்கிலிருந்து கோலிவுட்டின் ரஜினிகாந்த் வரை மக்களின் நடை உடைபாவனைகளைத்தீர்மானிப்பவர்களாக விளங்குகிறார்கள். தமிழ்சினிமாவை உடையலங்காரத்தின் அடிப்படையில் நான்கு யுகங்களாகப்பிரித்துக் கொள்ளலாம்.

சந்திரலேகா, சம்பூர்ண ராமாயணம், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்கள் முதல்யுகத்தில் வருகின்றன. இந்தகாலகட்டத்தில் உடையலங்காரம் என்பதுதிரையுலகில் மிகமுக்கியமான ஒன்று. உடையலங்கார அணிக்கு இயக்குனர்கள், தயாரிப்பு, கலை இயக்குனருக்கு இணையான அந்தஸ்து இருந்தது. அந்தக்காலகட்டத்தில் பெரும்பாலான ஃபேஷன்டிசைனர்கள் காஸ்ட்யூமர்கள் என்றே அறியப்பட்டனர். உடைகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டன. ஒரு படத்தின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அளவுதொகை உடைகளுக்கு மட்டுமென்றே ஒதுக்கப்பட்டது. கறுப்பு – வெள்ளையில் தான்பல படங்கள் தயாரிக்கப்பட்டன. வண்ணம் திரையில் தெரியாதநிலையில் ஆடைகளைவடிவமைப்பதுசவால்தான். ஆடைவடிவமைப்பாளர்கள் தங்கள்திறமைகளைவிதவிதமான மடிப்புகள், அலங்காரங்கள்போன்றவற்றில்காட்டினர். இந்தகாலகட்டத்தைச்சேர்ந்தபடங்கள்பெரும்பாலும்வரலாற்றுப்படங்களாகவோ, புராணப்படங்களாகவோ இருந்ததனால் அக்காலகட்டத்தைச் சேர்ந்த படங்களுக்கான உடைகளைத் தயாரிக்கும்போது ஏகப்பட்ட ஆராய்ச்சியும் கவனமும் தேவைப்பட்டது. ஜரிகை, எம்பிராய்டரி போன்றவற்றைப்பயன்படுத்துவது இந்தகாலகட்டத்தில் உச்சத்தில்இருந்தது. உடைகள், செருப்புகள், வஸ்திரங்கள் எல்லாம் ஒரேபளபளப்பாகக்காட்சியளிக்கும்.


இரண்டாவது யுகத்தில் சரித்திர, புராணக்கதைகளிலிருந்து விலகி சமூகக்கதைகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது தமிழ்சினிமா. திரையுலகின்ஃபேஷன்கடும் தாக்கத்திற்கு உள்ளானது. அன்பேவா, ஆயிரத்தில்ஒருவன், புதியபறவை போன்ற படங்கள் தமிழ்சினிமா ஃபேஷனின் முகத்தையே மாற்றின. நடிகர்கள் உருவாக்கிய ஃபேஷன் பொதுமக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. எதுவுமே பெரிதாக இருப்பதுதான் அன்றுபெரிதும் விரும்பப்பட்டது. சட்டைபட்டன்களில் ஆரம்பித்து கைக்கடிகாரங்கள், செருப்புகள் எனஎல்லாமே பெரிதாககாட்சியளித்தன.

இந்த யுகத்தைத் தொடர்ந்து ரஜினி – கமல்யுகம். இறுக்கமான உடைகளை அணிவது மாறத்துவங்கியது. பெரிய காலர்கள், பெல்பாட்டம் என்று கலக்கினார்கள். மூன்று முகம், சிகப்புரோஜா, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் புதிய ஃபேஷணை உருவாக்கின. ஒவ்வொருகாலகட்டத்திற்கும் ஒவ்வொரு உடையணியும் வழக்கம் இந்தியர்களிடம் இல்லாததால், பெரியதிரையில் தெரிந்தது தான்அவர்களது ஃபேஷனாக மாறியது. சட்டையை மடக்கிவிட்டிருப்பது, மார்புப்பகுதியிலிருக்கும் பட்டன்கள் திறந்திருப்பதுபோன்றவை அந்தகாலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சிலடிசைன்கள். பூபோன்ற டிசைன்கள் பிரிண்ட் செய்யப்பட்டஆடைகல் இந்தசமயத்தில் பிரசித்தமாக இருந்தன. பெண்களுக்கான மேலாடையில் பரிசோதனை முயற்சிகள் செய்தனர். குட்டைக் கை, ஸ்லீஃப்லெஸ், தொளதொளகை, பின்பக்கத்தில்முடிச்சு, முன்புறமும், பின்புறமும் கீழிறங்கிய பாணிபோன்றவை இந்தக்காலகட்டத்தில் பிரபலமாயின. இக்காலத்தில் மக்களின் ஃபேஷனை சினிமா தீர்மானித்தது.


மூன்றாவது யுகத்தில் திரையில் உடைவடிவமைப்பு மிகையான கற்பனையிலிருந்து யதார்த்தம் மற்றும் எளிமையை நோக்கித்திரும்பியது. பாரதிராஜா, மகேந்திரன், பாலசந்தர், பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் சராசரி தமிழர்கள் நிஜவாழ்வில்தரிக்கும் உடைகளையே தங்களது கதாபாத்திரங்களுக்கும் தேர்ந்தெடுத்தார்கள். கதையின் ஓட்டத்திற்கு ஏற்ற உடைகள் யதார்த்தமாகவும் பாடல்காட்சிகளுக்கு ஃபேண்டஸி உடைகளை வடிவமைப்பதும் ஒருட்ரெண்டானது. சிறிய பட்ஜெட் படங்களின் சிக்கனத்துக்கு உடைப்பிரிவும் பலியானது. மக்களின் ஃபேஷன் ரசனை, பட்ஜெட்பிரச்னை, பாடல்காட்சிகளுக்கு அதிககவனம் செலுத்தவேண்டியகட்டாயம் போன்ற நெருக்கடிகளால் இந்தயுகத்தில் காஸ்ட்யூம் துறைமிகமோசமாகப்பாதிக்கப்பட்டது. பிற்பாடு வந்த மூன்றாம்பிறை, புன்னகைமன்னன், வேதம்புதிது, மெளனராகம் போன்ற படங்களில் கதைக்கேற்ற, ரசனையுள்ள காஸ்ட்யூம்களையும் பார்க்கமுடிந்தது.


இன்று வெகுஜன ஃபேஷன் சினிமா உடைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய உடைவடிவமைப்பாளர்களை சர்வதேச உடைச்சந்தையில் மதிக்கிறார்கள். நல்ல உடைரசனையை மதிக்கும் டிவிசேனல்களும் ஃபேஷன் பத்திரிகைகளும் வருகின்றன. இதனால் மக்களுக்கு இன்று ஃபேஷன்விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.


அலைபாயுதே, நியூ, மன்மதன் போன்ற படங்கள் இந்த மாற்றத்தைகதைக்கேற்ற படி சரியாகப்பிரதிபலித்த வெகுசிலபடங்கள். ஆனால் பெருவாரியான தமிழ்ப்படங்கள் உடைவடிவமைப்பு விஷயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நடிகர்களும் இன்றுகூட உடைவிஷயத்தைதாங்களாகவே தீர்மானிக்கிறார்கள். ஆனால் உடையறிவு விஷயத்தில் ரசிகர்கள் அவர்களைவிட ஒருபடிமுன்னே இருக்கிறார்கள். பாலிவுட்டும்டி.வி. சேனல்களும்உடைவிஷயத்தில்கோலிவுட்டைவிடமுன்னேறியிருக்கின்றன. தமிழ் சினிமாத்துறையினர் ஒருவிஷயத்தைப்புரிந்து கொள்ளவேண்டும். ஒளிப்பதிவு, இசைபோன்றவற்றை அந்தந்தத்துறைவல்லுனர்களிடம் விடுவதுபோல உடைகள்விஷயத்தையும் ஃபேஷன்டிசைனர்களிடம் ஒப்படைத்தால் படத்திற்கு தனிமெருகு ஏறும். சினிமாவுக்கு வெளியேஃபேஷன் டிசைனர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடிவரும் இந்தவேளையில் சினிமாவில் அவர்களுக்கு பெயர் கிடைக்காதது வருத்தமான விஷயம் தான்.

கட்டுரையாளர் சினிமா மற்றும் விளம்பரங்களுக்கான உடை வடிவமைப்பில் 10 வருட அனுபவமுள்ள ஃபேஷன் டிசைனர் மற்றும் இமேஜ்கன்சல்டண்ட்.

இந்தியா டு டே டிசம்பர் 28, 2005

****
அந்த நாள் ஞாபகம் – மேக்கப்மேன் தனக்கோட்டி பேட்டி.!
அழகுக்கு அழகு சேர்ப்பதும், அவலட்சணத்தை அழகாக்கிக் காட்டுவதும்தான் மேக்கப் கலை. இந்தக் கலையை கேமராவின் பார்வைக்கு ஏற்ப கையாள்வது தனிக்கலை. இதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் மேக்கப் மேன் தனக்கோட்டி. இவரைப் பற்றி யாரிடம் கேட்டாலும் இவரது திறமையைப் பாராட்டாதவர்களே இல்லை. ஆறாயிரம் படங்களுக்கு மேக்கப் மேனாகப் பணியாற்றியுள்ள இவரை நேரில் சந்தித்தபோது, அவரது அடக்கத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப்போனேன். வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துள்ள இவரைச் சந்தித்தபோது சொன்னார்:

“செங்கல்பட்டு மாவட்டம் குளத்தூர்தான் எனக்கு சொந்த கிராமம். விவசாயக் குடும்பம். சிறு பையனாக இருந்தபோதே எனக்கு நன்றாகப் பாடவரும். ஒரு நாள் நான் படித்துக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்தை மேற்பார்வையிட பள்ளி ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் வந்தார். அவர் முன்னிலையில் என்னைப் பாட வைத்தனர். என் குரலின் இனிமையைப் பார்த்த பாலசுப்பிரமணியம், முறைப்படி எனக்கு சங்கீதம் சொல்லித்தர என்னை தன்னோடு வந்தவாசிக்கு அழைத்துச் சென்றார். அங்குதான் அவருக்கு வீடு. கிட்டத்தட்ட ஆறுமாத காலம் என்னை அவரோடு வைத்துக்கொண்டார். பிறகு எனக்காக பாபநாசம் சிவனுக்கு சிபாரிசுக் கடிதம் எழுதி, என்னையும் அனுப்பி வைத்தார்.

பாட்டு கற்க வந்த எனக்கு பாட்டுப்பாடவே வாய்ப்பு கிட்டியது. அது தாலாட்டுப்பாட்டுதான். அப்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த வி.என்.ஜானகி அவர்களின் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. குழந்தையை தூங்கச் செய்ய பாட்டுப்பாடினேன்.

கொஞ்ச நாட்கள் கழிந்தது. மெல்ல மெல்ல சினிமா உலகத்தொடர்பு எற்பட்டது. பிரத்தி ஸ்டுடியோவில் சவுண்ட் டிபார்ட்மெண்டில் ஒரு சின்ன வேலை கிடைத்தது. சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் ஏழு ரூபாய், இந்த வேலையில் எனக்கு ஈடுபாடு ஏற்படவில்லை. அதிலிருந்து விலகி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆபீசில் வேலைக்குச் சேர்ந்தேன். இதிலும் எனக்கு மனம் ஒட்டவில்லை. வேலையைவிட்டு விலகினேன்.

மீண்டும் சினிமா உலகில் தஞ்சம் அடைந்தேன். டைரக்டர் கே.சுப்பிரமணியம், செருகளத்தூர் சாமா, நடிகை எ.வி.ராஜம்மா ஆகியோரிடம் உதவியாளனாக இருந்தேன். அதற்கப்புறம் நியூ டோன் ஸ்டுடியோவில் சேர வாய்ப்பு கிட்டியது. புரொடக்‌ஷன் பாய் வேலைதான். அப்போது நான் செய்த குறும்பையும் அதற்கு எனக்குக் கிடைத்த பரிசையும் இங்கே சொல்லத்தான் வேண்டும்.


எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த “மீரா”, படத்துக்கு நான் தான் புரொடக்‌ஷன் பாய். படத்தை இயக்கிய டைரக்டர் எல்லிஸ் ஆர். டங்கனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. படப்பிடிப்பின் போது கொஞ்சம் கொஞ்சம் மது அருந்துவது அவர் வழக்கம். அவருக்கு மதுவையும், சோடாவையும் கலந்து தரும் பணி எனக்கு. ஒருநாள் ஐந்தாறு தடவைக்கு மேல் மது அருந்தியும் அவருக்கு தாகம் தணியவில்லை. இன்னும் கொஞ்சம் ட்ரிங்க் வேண்டும் என்றார். அவர் மது அருந்திய தம்ளரில் மதுவை ஊற்றாமல் சோடாவை மட்டும் ஊற்றிக் கொடுத்தேன். ஏற்கனவே குடிபோதையில் இருக்கும் அவருக்கு இது தெரிகிறதா?, பார்க்கலாம் என்பது என் எண்ணம். தம்ளரை வாயில் வைத்து வேகமாக உறிஞ்சினார். எழுந்தார். விட்டாரே ஒரு அறை. எனக்கு கன்னம் ஜிவ்வென்று வலித்தது. ‘மதுவை ஊற்றித் தரச் சொன்னால் சோடாவை மட்டும் ஊற்றித் தந்து குறும்புத்தனமா செய்கிறாய்?”, என்றார் டங்கன். அவர் எவ்வளவு போதையில் இருந்தாலும் நிதானம் இழக்க மாட்டார்.

புரொடக்‌ஷன் பாய் அந்தஸ்திலிருந்து கொஞ்சம் உயர்ந்து மேக்கப் மேன் உதவியாளனாகச் சேர்ந்தேன். மேக்கப் மேன் வெங்கடாசலத்திடம் உதவியாளனாகப் பணி புரிந்தேன். என்றாலும் எனக்கு தொழிலைக் கற்றுக்கொடுத்த குரு மேக்கப் மேன் ஹரிபாபுதான். “மேக்கப் போடும்போது ஆர்ட்டிஸ்ட் தலையில் கை வைக்காதே. அது பாவம்.”, இது அவர் எனக்குச் சொன்ன அறிவுரை. இன்றுவரை அவர் சொன்னபடிதான் நடந்துகொள்கிறேன் ‘ஞானசவுந்தரி’தான் நான் முதன் முதலாக மேக்கப்மேனாகப் பணியாற்றிய படம். இந்தப் படத்திற்காக ஹேர்டிரஸ்ஸிங்கும் கற்றுக்கொண்டேன்.

சிவாஜி – பத்மினி நடித்த ‘ராஜா ராணி’ படத்தில் சிவாஜிக்கு மட்டும் நான் மேக்கப் மேனாகப் பணியாற்றினேன். படப்பிடிப்பின் உணவு இடைவேளை. எனக்குள் ஒளிந்திருந்த குறும்புத்தனம் மெல்ல தலையெடுத்தது. பத்மினிக்குத் தர இருந்த ரொட்டியில் ஒரு ஊசியைச் சொருகி வைத்தேன். இதை டைரக்டர் டி.ஆர். ரகுநாத் பார்த்துவிட்டார். என்னை அழைத்து, “நீ செய்யும் செயலின் விளைவைக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா? ஊசி வயிற்றுக்குள் போய்விட்டால் ஆபரேஷன் செய்துதானே எடுக்க வேண்டியிருக்கும்? இதெல்லாம் என்ன விளையாட்டு? என்று கடிந்துகொண்டார்.

என் குறும்புத்தனத்தை அடக்க சிவாஜியும், கலைஞரும் ஒரு திட்டம் தீட்டினார்கள். சிவாஜி சாக்ரடீசாக ஒரு காட்சியில் நடிக்கிறார். ”சிவாஜிக்குமேக்கப் நீதான் போடவேண்டும்”, என்று என்னிடம் கூறினார்கள். சாக்ரடீஸ் எப்படி இருப்பார் என்பதை அதற்குமுன் பார்த்ததில்லை. என்ன செய்வது என்று கையைப் பிசைந்தேன். என் குருநாதர் ஹரிபாபுவை தஞ்சம் அடைந்தேன். அவர் உடனே சாக்ரடீஸ் படம் ஒன்றைக்காட்டி, எப்படி மேக்கப் செய்ய வேண்டும், என்பதை சொல்லித் தந்தார். அப்புறம் எப்படி? ஜமாய்த்து விட்டேன். அதற்கப்புறம் சிவாஜி மேக்கப் மேனாக 50 படங்கள் வரை செய்திருக்கிறேன். அவர் நாடகங்களுக்கும் பணியாற்றி இருக்கிறேன்.


ஒருவரிடமே நான் பல வருடங்கள் மேக்கப் மேனாக இருந்திருக்கிறேன் என்றால் அவர் பத்மினி தான். அவரிடம் மட்டும் நான் 20 வருடங்கள் மேக்கப் மேனாக இருந்தேன். ‘மங்கையர்க்கரசி’ படத்தில் ஒரு டான்ஸ் காட்சியில் நடிக்க லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் வந்தனர். அவர்களை நான் கிண்டலடித்தது பத்மினியின் காதில் விழுந்துவிட்டது. “சேச்சி (லலிதா) இந்த ஆசாமி நம்மை கிண்டல் செய்கிறான். நாம் இவனிடம் மேக்கப் போட்டுக்கொள்ளக் கூடாது” என்று பத்மினி கூறினார். உடனே லலிதா, “அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அவனுடைய பிழைப்பில் நாம் ஏன் மண்ணைப்போட வேண்டும்?” என்று சொல்லி, பத்மினியை சமாதானப்படுத்தினார். அன்று என்னை வெறுத்த பத்மினியே பின்னர் என்னை தனது மேக்கப்மேனாக நியமித்துக்கொள்ள விரும்பினார்.

1952-ல் இந்திப் படம் ஒன்றில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது. அதற்காக அவர் பம்பாய் செல்ல நேர்ந்தது. அவரது மேக்கப் மேனாக என்னையும் அழைத்துச் செல்ல விரும்பினார். நான் வரமுடியாது என்று கூறிவிட்டேன். ஆனால் அவர் விடவில்லை. நியூடோன் ஸ்டுடியோ அதிபர்களில் ஒருவரின் உதவியை நாடினார். அவர் சொன்னதன் பேரில் அரைகுறை மனதோடு சம்மதித்தேன்.

500 ரூபாய் பணத்துடன் பம்பாய்க்குச் சென்றேன். எனக்கு முன்பே பத்மினி போய்விட்டிருந்தார். பம்பாயில் எனக்கு ஒரு கசப்பான அனுபவம். படத் தயாரிப்பாளர் எப்.சி. மெஹ்ரா, மெட்ரோ தியேட்டர் அருகே இருந்த காஷ்மீர் ஓட்டலில் நான் தங்க அறை ஏற்பாடு செய்தார். அந்த அறை இருந்த கோலம் எனக்கு அறுவறுப்பை ஏற்படுத்தியது. இனி ஒரு கணமும் பம்பாயில் தங்குவதில்லை என்று முடிவு செய்துகொண்டு பத்மினியிடம் விஷயத்தைக் கூறினேன். காரணம் கேட்டார். சொன்னேன். கோபத்துடன் படத்தயாரிப்பாளரை அழைத்தார். தான் தங்கியிருந்த நட்சத்திர அறைக்குப் பக்கத்து அறையை எனக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இல்லாவிட்டால் தானும் சென்னைக்கு போய்விடப் போவதாகக் கூறினார். இதைக் கேட்டதும் மெஹ்ரா பதறிப்போனார். பத்மினி சொன்னபடியே எனக்கு அறை வசதி செய்துகொடுத்தார். பத்மினியின் இந்த பரந்த மனம் இன்றைய நட்சத்திரங்களுக்கும் இருக்கவேண்டும் என்பது என் ஆசை.

என்னுடைய ஒப்பனைத் திறமை பத்மினியை வெகுவாக கவர்ந்தது. அவர் என்னை தன்னுடைய மேக்கப் மேனாக நிரந்தரமாக வைத்துக்கொள்ள விரும்பினார். என்னைக் கேட்டார். ஆனால் அதில் எனக்கு துளிக்கூட விருப்பம் இல்லை. நியூடோன் ஸ்டுடியோவில் செய்துகொண்டிருக்கும் நிரந்தர வேலையை விட்டுவிட்டு அவர் பின்னால் செல்வதா? என்று நினைத்து வரமுடியாது என்று சொல்லிவிட்டேன்.

அவரது மூத்த சகோதரர் சத்யபாலை அனுப்பி என்னை வீட்டுக்கு அழைத்துவரச் சொன்னார். அங்கே போனால் மீண்டும் அதே கேள்வி. “நிரந்த வேலையை விட்டு உங்களிடம் வந்தால் கடைசி வரை எனக்கு பிழைப்பு நடக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று பத்மினியிடம் கேட்டேன்.

எனக்கு இருந்த அவநம்பிக்கையைப் புரிந்து கொண்ட அவர், என்னை பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே குருவாயூரப்பன் படத்தின் முன் நின்று, “எனக்கு மார்க்கெட் இருக்கும் வரை நீதான் எனக்கு மேக்கப் மேன்” என்று கையிலடித்து சத்தியம் செய்துகொடுத்தார்.
அதற்கு மேல் எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. நியூடோன் ஸ்டுடியோ வேலையை உதறிவிட்டு பத்மினியின் மேக்கப் மேன் ஆனேன். அவர் திருமணம் செய்துகொண்டு பட உலகை விட்டு விலகும் வரை – கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அவருக்கு மேக்கப் மேனாக இருந்தேன்.


ஜெமினியின் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தைப் பார்த்தவர்கள் அதில் இடம்பெற்றுள்ள பத்மினி – வைஜெயந்தி மாலா போட்டி நடனத்தை மறக்கமாட்டார்கள். இந்தப் படத்தில் நடிக்க பத்மினியை அழைத்தபோது, அவருடைய மேக்கப் மேனாக நான் தான் இருக்க வேண்டும் என்று பத்மினி நிபந்தனை போட்டார். அப்போதெல்லாம் ஜெமினியின் படங்களில் வேலை செய்ய வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் நிறுவன ஆட்கள் தான் எல்லா வேலைகளையும் கவனிப்பார்கள். அதனால் பத்மினியின் இந்த நிபந்தனையைக் கேள்விப்பட்ட ஜெமினி பொதுமேலாளர் பார்த்தசாரதி இருதலைக்கொள்ளி எறும்பு ஆனார். இந்த விஷயத்தை ஒருநாள் ரொம்ப தயக்கத்துடன் வாசனிடம் கூறினார். அதற்கு அவரோ, இந்தப் படத்தில் பத்மினி நடிக்க வேண்டும்; அதனால் அவர் சொல்கிறபடி செய்யுங்கள், என்றார்.

‘சாதுர்யம் பேசாதடி’ என்ற இனிய பாடலுக்கு ஏற்ப போட்டி நடனம் ஆட மேக்கப்புடன் பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் தயாராக நின்றனர். அப்போது அங்கே வந்த வாசன் பத்மினியின் மேக்கப்பைப் பார்த்து ரொம்பவும் பாராட்டினார். தனக்கும் மேக்கப் செய்யும் படி வைஜெயந்திமாலா கேட்டுக்கொள்ளவே அவருக்கும் மேக்கப் செய்தேன். எனக்கு வாசனிடம் இருந்து கிடைத்த பாராட்டை மறக்கவே முடியாது.

இந்திய – ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான பரதேசி இந்திப் படத்தில் நடிப்பதற்காக பத்மினி பம்பாய் போனார். அஜந்தா குகையில் படப்பிடிப்பு. அவருக்கு அப்போது ஆஸ்துமா தொல்லை இருந்தது. ஒருநாள் படப்பிடிப்பின் போது திடீரென்று இந்தத் தொல்லை அதிகமாகிவிட்டது. அவர் இறந்துவிடுவார் என்றே எல்லோரும் நினைத்தனர். நடிகர் அசோக்குமார் அவரைப் பரிசோதித்துவிட்டு, வேகமாக வெளியே சென்றார். சிறிது நேரத்தில் தவளைக் கறியைக் கொண்டுவந்து கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். அதன்பிறகு இன்றுவரை பத்மினிக்கு ஆஸ்துமா தொல்லை இல்லை. அசோக்குமாருக்கு வைத்தியம் தெரியும் என்பது பின்னர் தெரிந்தது.

கிருஷ்ணா பிக்சர்ஸ் எடுத்த ஒரு படத்திற்கு நான் தான் மேக்கப் மேன். நியூடோன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் பி.யு.சின்னப்பா நடித்தார். கொஞ்சம் முரட்டு சுபாவம் கொண்டவர். படக்கம்பெனி அவருக்கு அனுப்பி வைக்கும் மதிய உணவை எங்களுக்குக் கொடுத்துவிடுவார். படக்கம்பெனியின் புரொடக்‌ஷன் அசிஸ்டண்ட் சந்தானம் என்பவர்தான்உணவு கொண்டு வருவார். பி.யு. சின்னப்பாவுக்கு கொண்டுவரும் உணவை நாங்கள் சாப்பிடுவதைக் கண்ட அவர் உணவு அயிட்டங்களைக் குறைத்துவிட்டார். இது குறித்து பி.யு.சின்னப்பாவிடம் சொன்னோம் வந்ததே அவருக்குக் கோபம். சந்தானத்தை ஓங்கி ஒரு அறை விட்டார். அறையின் கதவை உடைத்துக்கொண்டு சந்தானம் வெளியே வந்துவிழுந்தார். பி.யு.சின்னப்பாவின் பலம் என்ன? என்பதை இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்தான் உணரமுடியும்.
எம்.எல்.பதி என்றொரு பட அதிபர். இவருடைய படத்தில் வேலைபார்க்கும் பெரிய நட்சத்திரங்களைத் தவிர மற்றவர்களுக்கு பணம் தரமாட்டார். இவர் எடுத்த ஒரு படத்திற்கு மேக்கப்மேனாகப் பணியாற்றினேன். படமும் முடிந்தது. சம்பளப்பணத்தைக் கேட்டால், ஆபீஸ் பையனை அழைத்தார். செக் புத்தகம் கொண்டுவா என்றார். பெரியம்மாவிடம் இருக்கு என்றான் ஆபீஸ் பையன். சரி, நாளைக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள் என்று பதில் கூறினார்.

அவருடைய பேச்சில் எனக்கு சந்தேகம். எனவே, ஆபீஸ் பையனிடம் எட்டணா கொடுத்து உண்மையைக் கறந்தேன். பட அதிபர் இப்படித்தான், எல்லோரையும் ஏமாற்றுவார் என்று அவன் கூறினான். மருநாள் திருமலைப் பிள்ளை ரோடில் இருந்த பதியின் ஆபீசுக்குச் சென்றேன். வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவிக்கொண்டிருந்த அவர், என் முகவாய்க்கட்டையைப் பிடித்து, ”நான் யாருக்கு பணம் கொடுத்திருக்கிறேன் நைனா, நீ வந்து என்னைக் கேட்கிறாயே” என்று தெலுங்கில் கூறினார்.


ஒன்றும் பதில் பேசமுடியாமல் சிட்டாடல் ஸ்டுடியோவுக்குச் சென்றேன். அங்கே இருந்த கலைவாணரிடம் விஷயத்தைக் கூறினேன். ஓஹோ!, அப்படியா! என்று கலைவாணர் கேட்டுக்கொண்டார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பதி அங்கே வந்தார். அங்கே நான் இருப்பதைப் பார்த்து திருதிருவென்று விழித்தார். கலைவாணர் அவரிடம் “எனக்கு அவசரமாக மூவாயிரம் ரூபாய் வேண்டும்”, என்று கேட்டார். பதில் பேசாமல் பதி, படப்பிடிப்புச் செலவுக்காக கொண்டு வந்திருந்த மூவாயிரம் ரூபாயை மடியை அவிழ்த்து எடுத்துக்கொடுத்தார்.

அந்தப் பணத்தை என்னிடம் நீட்டியவாறு கலைவாணர் பதியைப் பார்த்து, “உங்க படத்துல அவர் வேலை பார்த்ததற்கு இந்தப் பணத்தை சம்பளமாகத் தந்துவிட்டேன். இந்தப் படத்துக்கு அப்புறமா எனக்குக் கொடுத்துருங்க” என்று கூறினார். கலைவாணர் குடும்பத்தில் ஒருவனாக நான் இருந்தேன்; பழகினேன்.

பத்மினி அமெரிக்கா சென்ற பிறகு லதாவின் மேக்கப்மேனாகப் பணியாற்றினேன். இப்படி ஒருவருக்கு மேக்கப்மேனாக நான் பணியாற்றிய போதிலும், நான் தொட்டு மேக்கப் போடாத நடிகர், நடிகைகள் இல்லை என்றே சொல்லலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஆறாயிரம் படங்கள் வரை மேக்கப் மேனாகப் பணியாற்றியிருக்கிறேன். இந்த அனுபவத்தைக்கொண்டு இன்றைய படங்களைப் பார்க்கும்போது, திறமையான மேக்கப்மேன்கள் இல்லாதது கண்டு மனம் வேதனைப் படுகிறது. இன்றைய காமிராமேன்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பதால், மேக்கப் குறைகள் தெரியவில்லை. இந்த நிலை மாறி, மேக்கப்மேனின் கைவண்ணம் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதே என் ஆசை.”

நன்றி: பொம்மை, அணில்