DER BUNKER - நிறுவனமாக்கப்பட்ட குடும்ப வன்முறை

ஜெர்மனியின் எழுத்தாளர்- இயக்குனர் Nikias chryssos இன் முதல் திரைப்படம்
'டேர்பங்கர்'. கடந்த ஆண்டு ' fantastic fest' இல் சிறந்த திரைப்படத்திற்கான பரிசைப் பெற்றது. மாறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகும் திரைப்படங்கள் அவற்றின் சொந்த உள்தர்க்கத்தைப் பின்பற்றும் படங்களாக இருக்கும். அந்த வகையில் குடும்ப கட்டமைப்பு,குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி குறித்த தர்க்கங்களை பகடியுடன் காட்சிப்படுத்தியுள்ளது. 2021- ல் வெளிவந்த இவரது இரண்டாவது திரைப்படம் ' தி ப்யூர் ப்ளேஸ் குழந்தைகளின் அமுக்கப்பட்ட அமைப்புகளின் தூய்மை வாதங்களை கேள்விக்குட்படுத்தும் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.  

தன்னுடைய இயற்பியல் ஆய்விற்கு தனிமையும் அமைதியும் தேவைப்படும் நிலையில், ஒரு மாணவன் (pit bukowski) காட்டுக்குள் தனிமையாக இருக்கும் வாடகை வீட்டிற்ச் செல்ல விரும்புகின்றான். ஆனால் அந்த இடம் மாணவன் எதிர்பார்த்து வந்த வெளிச்சத்துடனும், காற்று வந்து போகும் இருப்பிடமாகவும் இல்லை. மாறாக, அது கிட்டத்தட்ட தலையை குனிந்து நடக்கக்கூடிய சிரமமான இடமாக இருந்தது. சன்னலற்ற மாற்று வெளிப்புற சூழலை அணுக முடியாத நிலத்திற்கு அடியில் இருக்கும் ''பதுங்கு குழி '' போன்ற இடத்தை காட்டுகின்றார்கள். அங்கு தாய் (Oona Von Maydell), தந்தை (david scheller) மற்றும் ஒரு மகன் (daniel fripan) வசிக்கின்றார்கள்.


வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியுடன் அமர்ந்து உணவ உண்ணும் பொழுது மாணவன் கொடுக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும், அவன் பயன்படுத்தும் நாப்கின்களுக்கும் தந்தை குறிப்பெடுத்து கொள்கின்றார். மேலும் அந்த தொகை மாணவன் கடனாக அடைக்கப்பட வேண்டிய கட்டணத்தில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. இதனால் அவனுடைய இருப்பு இறுக்கத்திற்கு உள்ளாகின்றது.

மாணவனுக்கு க்ளோசை பற்றிய புரிதல் விசித்திரமாக இருக்கின்றது. ஏனென்றால் க்ளோசைப் பற்றி அவனுடைய தாய் அறிமுகப்படுத்தும் பொழுது அவனுடைய வயது 8 என்றே குறிப்பிடுகிறார். ஆனால், அவனுக்கு உண்மையாக 29 வயதாவதை மாணவனால் காண முடிகிறது. மிக குட்டையான, இறுக்கமான நகைப்பை ஏற்படுத்தும் ஆடைகளை அணிவித்து குழந்தை போன்ற உருவாக்கப்படுத்தலும், தான் பிறந்து வளர்ந்து எட்டு வயது குழந்தையாகவே பழக்கப்பட்டதினால் க்ளொஸினுடைய பாவனைகளும் அறிவும் அந்த வயதிற்கேற்றால் போல குழந்தைத்தன்மையுடன் இருக்கிறது. அக்குடும்பத்தின் மிக விசித்திரமான ஆனாலும் நகைச்சுவையான நடவடிக்கைகள் மாணவனை வெறுப்படையச் செய்கிறது.

மாணவன் க்ளோஸுடன் தன்னை அறிமுப் படுத்திக்கொள்ளும் முதல் காட்சியில் கைகொடுக்க கைகளை நீட்டுகிறான். 29 வயதாகும் இளைஞன் தான் வளர்க்கப்பட்ட தன்மையால் வெளிமனிதராக வந்திருக்க கூடிய மாணவர்களிடம் பழகுவதற்கு தயக்கம் காட்டுகிறான். அது மாணவனுக்கு சரியான அறிமுகமாகத் தெரியவில்லை. ஆனால், சில நாட்களுக்கு பிறகு க்ளோஸை புரிந்து கொள்வதற்கு மாணவன் முயற்சிக்கிறான்.

க்ளோஸினுடைய தந்தையும் தாயும் வெளயுலகில் இருக்கக்கூடிய மனிதர்களிடம் நகர்ந்து தனித்துவமாக இருப்பதாக கருதுகின்றனர். மேலும் அந்த வகை உணர்வுடன் தன்னுடைய மகனும் வளரக்கூடிய சூழ்நிலைக்கு ஆளாகின்றான் . பொருளாதார ரீதியான பெருமிதம் மற்றும் கல்வி சார்ந்த வேடிக்கையான பெருமிதங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். வளர்க்கப்படும் குழந்தைக்கு 29 வயதிலும் பழகுவதற்கு அந்நிய தன்மையை குழந்தைகளுக்கு ஏற்படுத்த காரணமாக அமைகின்றார்கள்.

முதல் காட்சியில் மாணவன் தான் அடைய வேண்டிய வீட்டின் இடத்தை வி மிக நீண்ட தூரமாக இருப்பதை அறிகிறான். இயல்பான தற்காலிக வாழ்வியலில் இருந்து விலகி வெகு தொலைவில் இருக்கும் நம்பிக்கைகள் சார்ந்து அமையும் பழமைவாதங்களின் நோக்கிலும் நாகரீகமற்ற நிலையிலும் இதை அணுக இயலும் மிக கடுமையான கட்டமைப்புகளுடன் கட்டமைக்கப்பட்ட தீவிர மதம் அல்லது தனி அமைப்பினுள் சார்ந்த மனிதர்களுடைய இயல்பு வாழக்கையற்ற பொது வெளி பற்றிய புரிதலை அம்பலப்படுத்துகிறது. மனிதர்களிடமிருந்து அந்நியத்தன்மை அல்லது தனித்துவமாக கருதும் பண்பை மையப்பத்துவதன் மூலம் மட்டுமே ஒரு குழுவை அல்லது குடும்பத்தை பின்னோக்கி வளர்வதற்கும் வழிவகுக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும். மேலும் மைய நீரோட்ட இயக்கத்திலிருந்து விலகி அறிவியல் பூர்வமாகவும் அனுபவரீதியில் என்ற நிலையிலிருந்து விலகி பின்னடைவை சமூகத்திற்கு தருகிறது.

இயக்குனர் கிரியோஸிஸ், தற்போதைய குடும்ப அமைப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில் ''ஒரு மூடிய குடும்ப ஆட்சிமுறை'' போன்ற நிறுவனமாக இருப்பதை குறிப்பிடுகிறார்.
அனைத்து வகையான டிரிங்கிட்டுகள், ரெட்ரோகிட்ச் (retrokich) மற்றும் வடிவமைக்கப்பட்ட வர்ணத்தாள்களால் (wallpaper) அலங்கரிக்கப்பட்ட குறுகிய அறைகள், அவற்றின் சிறிய மேல்தளம் குடியிருப்பாளர்களை ஒரு குனிந்த பார்வையில் நிற்கும் படி கட்டாயப்படுத்துகின்றன. சுய தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமைப்படுத்துதலுக்கும் சிறைவாசத்திற்கும் இடையிலான வினோதமான சரடின் இருப்பை இது வெளிப்படுத்துகின்றது. தனிமையின் தேவை கருதிவரும் மாணவன் அந்த சரடின் வெறுப்புடன் கூடிய குழப்பத்திற்கு உள்ளாகிறான்.

 வானியலின் ஹிக்ஸ் துகள் (higg particals) பற்றிய ஆய்வை முடிப்பதற்கு தனிமையும் அமைதியும் தேவைப்படுவதால் மாணவன் அந்த வீட்டை தேர்ந்தெடுத்து அடைகின்றான். இயற்பியலின் மிகத்துல்லியமான அணுப்பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் இளைஞனுக்கும் அதே வயதை ஒத்த குடும்ப கட்டமைப்புடன் வளர்க்கப்படும் இளைஞனுக்கும் உள்ள ஒப்பீடு கற்றல் ரீதியாக புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று.

வீட்டின் உரிமையாளர் தன்னுடைய மகனை அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்காக வேண்டி கற்பிக்கின்றார். அவரது போலியான மற்றும் வேடிக்கையான கற்றல் முறைகளும் சீராய்ந்த கல்வி கற்பது போன்ற பாவனைகளும் நகைச்சுவையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கற்றல் முறையை காணும் மாணவனுக்கு மிக குழப்பத்தையும் வெறுப்பையும் உண்டாக்குகின்றது.

இப்படிப்பட்ட கல்வி முறை தனக்கு அறிமுகமமில்லாததும் இவற்றால் தெளிவு பெறமுடியாது என்பதை உணருகின்றான். ஆனால், மாணவர்களின் உடல் ரீதியான தண்டனை மட்டுமே விரும்பிய கற்றல் வெற்றியை கொண்டுவருகின்றது என்ற நம்பிக்கை அவனது தந்தைக்கு மிகுந்து காணப்படுகின்றது. பொதுவாக, கற்றல் என்பது அனுபவமாகும். அனுபவத்தின் மூலம் அறிவையும் திறனையும் செயல் முறையாக்கப்படும் பொழுது கற்றல் பயனளிக்கின்றது கற்றல் வழியாக ஒரு மனிதரின் நடத்தையிலும் வாழ்க்கைமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் பண்பைத்தான் சிறந்த கற்றல் முறையாக கருத இயலும் மாறாக குழந்தைகள் ஆசைப்படுவதை வாங்கி கொடுப்பதற்காக கற்றலை ஒரு கருவியாக பயன்படுத்த தொடங்குவதை இதில் காணமுடிகின்றது.

மாணவன் க்ளோஸிற்கு உலகளாவிய வணிக பாடத்தை வகுப்பெடுக்க ஆரம்பிக்கின்றான். ஆனால், க்ளோசால் அதை புரிந்துகொள்ள இயலவில்லை குடும்பம் என்ற அமைப்பு வெளியுலகை அடைந்து தேடுதலையும் அனுபவத்தை பெறாததால் க்ளோஸால் புரிந்து கொள்ள முடியாததான் காரணத்தை மாணவன் புரிந்து கொள்கின்றன்.


க்ளோஸ் வகுப்பில் மிக இறுக்கமான அழுத்தத்தில் அமர்ந்திருப்பதை மாணவன் காண்கிறான். இறுக்கத்தை தளர்த்துவதற்காக சில விளையாட்டுகளை க்ளோஸிருக்கு அறிமுகப் படுத்துகிறான் அந்த அனுபவத்திலிருந்து மாணவனை சகதோழனாக ஏற்றுக்கொள்ள துவங்குகின்றான். இயக்குனர் கிரிஸோஸின் உடல் ரீதியான சித்தரிப்புகள் நிகழ்கால கற்பித்தல் மற்றும் கற்பித்தலின் வேடிக்கையான வினோதங்களை பிரதிபலிப்பதாக அமைகின்றன. வீட்டின் உரிமையாளர் தன் மகனுக்கு கொடுக்கும் உடலை காயப்படுத்தும் தண்டனைகள் கற்பித்தலுக்கான நடைமுறையாக முயற்சிக்கின்றார். தொடர்ந்து உடலை துன்புறுத்துவதும் அதன் மூலம் உண்டாக்கும் பயம் மாணவர்கள் கற்பதற்கு உதவும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளார். உன்னதமான கல்வி இலட்சியங்கள் மற்றும் போலி-அறிவுத்திறன் ஆகியவற்றால் உந்தப்பட்ட ஒரு வளர்ப்பின் கொடூரமான உளவியல் பயங்கரத்தை அரங்கேற்றுவதற்கு பரிந்துரைக்கும் வழிகளை வீட்டின் உரிமையாளர்கள் பயன்படுத்துகின்றார்.
அவர்களின் இலட்சியங்களுக்கு பகடியாக மற்றும் முரண்களுக்கு நடுவே இத்திரைப்படம் அமைகின்றது.

சோபின்,மொஸார்ட் மற்றும் பீத்தோவன் இசையால் மேட்டிமை தன்மையை காட்ட தந்தை முயற்சிறார். இயக்குனர் கிறிஸ்சோசின் இடைவிடாத தீவிரமான குழந்தை வளர்ப்பின் பரிசோதனையானது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வளர்வதையும், சுதந்திரமாக மாறுவதையும் பெற்றோர்கள் தடுக்கின்றார்கள் என்பதேயாகும். 

ஆனால் அதே சமயம் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கல்விமுறை உலகம் முழுவதும் பயன்படுத்தக்கூடியதாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதன் முரண்பாடான தீவிரத்தை வெளிப்படுத்துகின்றது. விசித்திரமான குடும்பத்தின் ஜனாதிபதி ஆக்கக்கூடிய அடிப்படையற்ற கல்விமுறையும் வளர்ப்பும் மனித இயல்பு நிலையிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது.

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இப்படம், வீட்டு அமைப்பானது உண்மையில் ஒரு பதுங்கு குழி, போரின் காலத்திலிருந்தது போன்ற ஒரு அடைக்கலம். குறிப்பாக ஒருநாள் ஜனாதிபதியாக ஆவதற்குண்டான முயற்சியில் இருக்கிறான். ஒவ்வொரு நாட்டின் தலைநகரங்களையும் மனப்பாடம் செய்வதில் கண்டிப்பான பயிற்சியின் மூலம் தாய் மற்றும் தந்தையின் எட்டு வயது மகன் க்ளோஸ் கற்று கொண்டிருக்கின்றான். இது அடிப்படையற்ற வழி தொடரும் உலகலாவிய கல்வி அமைப்பு மற்றும் அமெரிக்க குழந்தைகளின் வளர்ப்பு கலாச்சாரத்தை சுட்டிக்காட்டும் குறியீடாக இருக்கின்றது.

க்ளோஸும் மாணவனும் கிட்டத்தட்ட ஒரே சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர். இருவரும் எதிரெதிர் துருவங்களின் இருப்பு ஆகும். அவர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் கேள்விக்குள்ளாக்கும் பொழுது அவ்வரம்பிலிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர். க்ளோஸ் முதல்முதலாக கற்றுக்கொள்கின்றான். இயல்பாக வாழ விரும்புகின்றான். உண்மையில், க்ளோஸ் தன்னால் கற்க முடியாது என்பதை நம்புகின்றான்.

 க்ளோசின் முதிர்ச்சி அடைந்த முகம், அப்பாவியான குணம், இறுக்கமான ஆடைகள் யாவும் இறுக்கமான சூழ்நிலையில் வளர்வதை காணமுடிகின்றது. பாலியல் தொடர்பான எந்தவித உணர்வும் க்ளோஸினால் உணர இயலவில்லை. சிறுவயதிலிருந்தே குழந்தையாக வளர்க்கப்பட்டவன், அவனுடைய தாய் தன்னுடைய குழந்தை தன்னை பிரிந்து செல்லக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்படாக க்ளோஸ் வளர்க்கப்பட்டுள்ளான். அவன்குழந்தை என்பதை நம்ப வைப்பதும் பாலியல் வரம்புகளை தாய் கவனித்து கொள்வதும் சுயநல சார்பான சுதந்திரமற்ற போக்காக இருக்கிறது.


இயக்குனர் கிறிஸ்லோஸ், குடும்பம் மற்றும் மாணவர்களின் மன-பாலியல் உறவைப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளின் Oedipus Complex ற்கு தாயிற்கும் மகனுக்கும் உள்ள உறவு முறைக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

மாணவன், நாடுகளின் தலைநகரங்களில் பெயர்களை கற்றுக் கொடுக்கிறான். வீட்டு உரிமையாளரின் கட்டாயத்தினால் தந்தையின் கேள்விகளுக்கு மாணவன் கைகளில் எழுதி கொடுத்தவற்றை அவருக்கு தெரியாமல் பார்த்து படிக்கிறான்.தாம் என்ன படிக்கிறோம் என்பதை புரியவில்லை என்றால் கற்றுக்கொள்வது என்பது சிரமமானதாக அமையும் .மனப்பாடம் செய்வது குறிப்பிட்ட வகை நினைவாற்றலை மீண்டும் மீண்டும் பெருக்கி நினைவுபடுத்திக் கொள்ளும் செயல்முறை.

உண்மையில் கற்றதின் வாயிலாக உள்வாங்கிய தரவுகளை நினைவிற்கு கொண்டு வந்து அனுபவம் செய்வது மற்றும் ஆராய்தலை மேற்கொள்ளும் பயிற்சி முறையாக இருப்பது சிறந்த முறையாகும். அழுத்தங்கள் நிறைந்த கட்டமைப்பில் விளையாடுவதற்கும் இயற்கையை நேசிப்பதற்கும் கல்வி அமைப்புகளில் போதிய இடம் கிடைப்பதில்லை.


கைகளில் எழுதியிருந்த தலைநகரங்களில் பெயர்களை அவனது பெற்றோர்களுக்கு தெரியாமல் சரியாக சொல்லி விடுகிறான். அவனுடைய தாய் தன்னுடைய மகன் சாதித்து விட்டதாக கருதி பூரிப்பு அடைகிறாள்.தந்தை பிரெஞ்சு நாட்டிலிருந்து தன் மகன் அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதி ஆகப்போவதை குறித்து பெருமிதம் கொள்கிறார். அவர்களின் பாசாங்குடன் கூடிய அன்பு மாணவன் மேல் கூடுகிறது.

தாய் மேடலும் மாணவனும் உடலுறவு கொள்கிறார்கள். மெடல் மாணவன் மேல் தனிப்பட்ட ரீதியில் அன்புகாட்ட தொடங்குகிறாள். கல்வி ரீதியான புறக்கணிப்பிற்கு பிறகு ஏற்படும் பாசாங்கும் அனுதாபமும் இங்கே வெளிப்படுத்தப்படுகின்றன. கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கற்பித்தலுக்கான கையாளுதல் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. கல்வி ரீதியில் வெற்றிகள் சமூக அரங்கில் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமில்லாமல் பாலியல் ரீதியான வெற்றியை பாசாங்குகளுடன் தீர்மானிக்கிறது. இந்தியாவில் குறிப்பிட்ட குடும்பங்களின் திருமணத்திற்குண்டான விண்ணப்ப கடிதமாகவும் கருதலாம். இங்கு காதலுடன் கூடிய உறவிற்கு இடமில்லாமல் மனிதர்கள் முறியடிக்க படுகிறார்கள்.

இயக்குனர் கிறிஸ்லோஸ் குறிப்பிடுவது போல,ஹென்றிச் ஒரு பாஸ்டியன் உருவகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஹென்ரிச் என்ற அருவமான கதாபாத்திரம் தாய் மெடலின் காலிலிருக்கும் காயத்திலிருந்து ஒலிக்கும் குரலாகும். க்ளோஸின் பிரச்சனைகளுக்கு அவனிடம் தீர்வு கேட்பதை தாய் மெடல் வழக்கமாக வைத்திருக்கிறாள்.


இயக்குனர் கிறிஸ்லோஸ் பிராய்டியன் (Freudian) மற்றும் மார்க்சிய (marxism) கருப்பொருள்களை துணிச்சலுடன் சாமர்த்தியமாக கட்டமைத்து பொருத்தமான சமநிலையை உருவாக்கியுள்ளார். குடும்ப அமைப்பியலின் தந்தை, தாயின் பங்கும் முதலாளித்துவ சிந்தனைகளுடன் வளர்க்க நிர்ணியக்கும் குழந்தை, கல்வி கற்பித்தலின் பிதற்றலான கல்வி அணுகுமுறை யாவும் தோல்வியை சந்திக்கிறது. மெடலின் தன்னுடைய காயங்களின் பெயரால் உணரப்படும் கற்பனையான உருவம் உண்மையில் இருப்பதாகவும் அது தன்னையும் தன் குடும்பத்தையும் தற்காப்பதாகவும் எண்ணுகிறாள். தனிப்பட்ட மனநிலையில் குரலாகவும், தற்காப்பு ரீதியில் ஆதரவான குரலாக கற்பனை செய்கிறாள். தான் நேசிக்கும் குழந்தை தன்னை விட்டு பிரியாமல் இருக்க கொண்டிருக்கும் பாசாங்குகளும், பயமும் உள்ளார்ந்த உளவியல் சிக்கல்களை எட்டுவதாக இருக்கிறது. ஒரு குறுக்கப்பட்ட வட்டத்திற்குள் மாணவன் கற்பித்தலுக்கான பணியில் அமர்த்தப் படுகிறான். படத்தின் துவக்கம் ஒரு புதிய குழந்தையின் எதிர்பார்ப்பிலிருந்து முற்றிலும் விலகி வினோதங்களையும் அழுத்தங்களையும் காணக்கூடியதாக மாணவனின் கதாபாத்திரம் திகழ்கிறது.

மேலும்,மெடலின் உடலுறவுக்கு இணங்கி அந்த பாலியல் உணர்வை தன்னுடைய பிரபஞ்ச கண்டுபிடித்தலுக்கு பயன்படுத்திக் கொள்கிறான். பாலியல் உணர்வின் நோக்கமும் அந்த உணர்வை திசைவழி படுத்துவதும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

திரைப்படத்தின் இயக்குனர் நிக்கியாஸ் கிரியோஸிஸ் தன்னுடைய சினிமாவின் பயணத்தை பற்றி கூறுகையில் " நான் சினிமாவை கனவின் வடிவமாக, ஒரு மாயாஜால உருவகமாக, பின்னிப் பிணைந்த உரையாக, முட்டாள்தனமும் அபத்தமும் கூடிய ஆழமான மற்றும் உன்னதமானவற்றை சந்திக்கும் இடமாக பார்க்க விரும்புகிறேன். திரைப்படங்களில் இது போன்ற விசித்திரமான மற்றும் மர்மமான கதைகளை உருவாக்குவதில் நான் ஆராய விரும்புவது இது போன்ற அமுக்கப்பட்ட கட்டமைப்புகளைத்தான் " என்கிறார்.


பொதுவாக, கிளாஸ்ட்ரோ போபியாவை ஏற்படுத்தும் சூழல்கள் பற்றி சமூகம் அதிகம் அறியப்படவில்லை. சுற்றுச்சூழல் காரணிகள் இதற்க்கு பெரிய பங்கைக் கொண்டிருக்கலாம். மக்கள் பொதுவாக குழந்தை பருவத்தில் அல்லது அவர்களின் பருவ வயதுகளில் கிளாஸ்ட்ரோ போபியாவிற்கு ஆட்படுகிறார்கள்.

கிளாஸ்ட்ரோபோபிக் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினருடன் இறுக்கமாக நீங்கள் வளர்ந்திருந்தால், கிளாஸ்ட்ரோ போபியா உருவாகும் வாய்ப்புகள் அதிகம். ஒரு குழந்தை தனது அன்புக்குரியவர் ஒருவர் சிறிய அல்லது அடைக்கப்பட்ட இடத்தைப் பார்த்து பயப்படுவதைக் கண்டால், அவர்கள் பயத்தையும் பதட்டத்தையும் இதே போன்ற சூழ்நிலைகளுடன் குழந்தைகள் தொடர்புபடுத்திக் கொள்ள தொடங்குகின்றன.


விளையாடுதல்,படித்தல்,எழுதுதல்,வரைதல்,இசைத்தல்,சமைத்தல் போன்ற படைப்பாக்கம் மிகுந்த விஷயங்கள் மாணவர்களிடையே நிலவும் மனஅழுத்தங்களை குறைக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. அதுபோல,தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் தியானத்தில் ஈடுபடுவது குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களுடன் உரையாடுவது ஆகியவை மன அழுத்தத்தை எதிர்கொள்ள சிறந்த வழிகளாக உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

இதைப்பற்றி இயக்குனர் நிக்யஸ் கிரியோஸிஸ் கூறுகையில்," நாங்கள் படத்தை மிகச் சிறிய பட்ஜெட் மற்றும் மிகவும் கிளாஸ்ட்ரோ போபிக் இடத்துடன் உருவாக்கினோம், ஆனால், அதன் வரம்பை கதையில் எப்படியாவது செயல்படுத்த முயன்றோம், அது எங்களுடைய சிறிய உலகத்தை உருவாக்கவும் காட்சிப்படுத்தவும் ஏதுவாக அமைந்தது "என்கிறார். க்ளோஸ் மற்றும் அவனது குடும்பத்தின் உளச்சிக்கல்களை இடங்களுடன் தொடர்புபடுத்த முடிந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். உண்மையில், இயக்குனர் கிறியோஸின் திரைப்படங்கள் குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் கல்வி முறைகளின் சிக்கல்களில் கவனம் செலுத்துவதாக இருக்கிறது. அவை ஏற்படுத்தும் அறிவியல் அடிப்படையற்ற அணுகுமுறை மற்றும் அனுபவ சிந்தனையற்ற கல்விமுறையை இத்திரைப்படம் கடுமையாக சாடுகிறது.