Django Unchained கருந்தேள் ராஜேஷ்

-கருந்தேள் ராஜேஷ்

மண்டையில் சாக்குத்துணியால் செய்யப்பட்ட முகமூடிகள் அணிந்துகொண்டு குதிரைகளில் கும்பலாக சென்று, கறுப்பின மக்களை(யும்) தூக்கிலிடும் கும்பல் Ku Klux Klan. மிகவும் வெறிபிடித்த கும்பலும் கூட. இந்த கும்பலின் பெயரைக் கேட்டாலே மக்கள் நடுங்கினர். இதில் யாரெல்லாம் இருந்தனர் என்பதும் எவருக்கும் தெரியாது. ஊரில் பெரிய பொறுப்பில் இருக்கும் ஷெரீப் முதல் ஊரின் கடைக்கோடி குடிமகன் வரை ஒவ்வொரு ஊரிலும் இந்த கும்பலில் ரகசிய அங்கத்தினர்களாக இருந்தவர்கள் அநேகம் பேர். ‘கார்ஸனின் கடந்த காலம்’ லயன் காமிக்ஸ் கதையில் வரும் ‘அப்பாவிகள் – innocents’ கும்பலைப் போன்று, இவர்களின் அங்கத்தினர்களுக்குள்ளும் பல சங்கேத வார்த்தைகள் இருந்தன. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட காலம் – கி.பி 1865.

முகத்தில் இப்படி சாக்குத்துணி முகமூடி அணிந்துகொண்டு குதிரைகளில் புயல்வேகத்தில் செல்லும் ஒரு வெறிபிடித்த கும்பலில் நிலவும் அபத்தங்கள் எத்தகையவை? முதலில் அந்த சாக்குத்துணியை மண்டையில் மாட்டிக்கொண்டு, அதிலுள்ள ஓட்டைகளில் சரியாக கண்களைப் பொருத்திக்கொள்ள முடியுமா? ஒருவேளை திடீரென்று அந்தத் துணி கண்டபடி ஆடி கண் தெரியாமல் போய் எங்காவது சென்று தடுக்கி விழ நேர்ந்தால்? இதுபோன்ற பல அபத்தங்கள் இதில் இருக்கின்றன அல்லவா? இத்தகைய அபத்தங்களை மிகச்சரியாக வெளிக்கொணர்வதே க்வெண்டின் டாரண்டினோ ஸ்டைல்.

உண்மையில் இந்த கு க்ளுக்ஸ் க்ளான் உருவாக்கப்பட்ட காலத்துக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே Django Unchained திரைப்படம் தொடங்கிவிட்டாலும், இந்த கும்பல் இப்படித்தான் உருவாகியிருக்கும் என்ற கற்பனையைத்தான் டாரண்டினோ கையாண்டிருக்கிறார் என்பது என் கருத்து. பொதுவாகவே டாரண்டினோ படங்களைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இதுபோன்ற நிஜவாழ்வின் குரூரங்களில் இருக்கும் அபத்த நிமிடங்களை டாரண்டினோ தொடர்ந்து காட்சிப்படுத்திவருவது தெரிந்திருக்கும். உதாரணமாக Pulp Fiction திரைப்படத்தை எடுத்துக்கொண்டால், புட்ச்சும் வின்சென்ட்டும் காரில் இருந்து இறங்கி நடந்து அபார்ட்மெண்ட் கதவைத் தட்டும் தருணம் வரை அவர்கள் இருவரையும் இரண்டு ஜாலிக்கிறுக்கு நண்பர்கள் என்றுதான் நாம் புரிந்துவைத்திருப்போம். ஏனெனில் அவர்கள் பேசும் வசனங்கள் – ஐரோப்பாவைப் பற்றியும் அதன் அபத்தங்கள் பற்றியும் – அப்படிப்பட்டவை . கதவைத் தட்டுகையில்  இருவரும் துப்பாக்கிகளை உருவும் அந்த கணத்தில்தான் தீவிரமான சம்பவம் எதுவோ நடைபெறப்போகிறது என்பது நமக்கு உறைக்கும். ஒரு கொலையை செய்யச் சென்றுகொண்டிருக்கும் இரண்டு நபர்கள் எப்போதுமே பாலா படங்களில் வருவதுபோல படு சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு உர்ரென்று எதிரே நோக்கிக்கொண்டுதான் செல்லவேண்டுமா? ஏன் மிக இயல்பாக அவர்கள் இருக்கக்கூடாது? அவர்களின் வேலையே கொலை செய்வதுதானே? இதுதான் கதாபாத்திர உருவாக்கம். கூடவே, பரம்பரை பரம்பரையாக வரும் நம்பிக்கைகளை உடைப்பது.

27 Django Unchained Pictures ideas | django unchained, quentin tarantino,  quentin tarantino movies

தனது ஆரம்பகால படங்களில் இந்த ‘உடைக்கும்’ வேலையை தொடர்ந்து செய்தவர் டாரண்டினோ. Reservoir Dogs படத்திலும் இது இருக்கும். அதுதான் அவரது முதல் படம். வசனங்களாலேயே கதையை நகர்த்துவதை அதில் செய்திருப்பார். திரைப்படம் என்பது விஷுவல் மீடியம். அதில் ‘பேசாதே – காட்டு’ என்பதுதான் முதல் விதி. பேசிக்கொண்டே இருந்தால் எரிச்சலே மிஞ்சும். ஆனால் டாரண்டினோ அந்த விதியை உடைத்தவர். காட்டியிருந்தால் எத்தனை சுவாரஸ்யம் இருந்திருக்குமோ அதைவிட சுவாரஸ்யம் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்கும் அவரது வசனங்களில் இருக்கும்படி திரைக்கதை அமைத்தவர்.

ஆனால், டாரண்டினோவும் டெம்ப்ளேட்டில் அகப்படுவதிலிருந்து தப்பவில்லை. அவரது டெம்ப்ளேட் என்னவென்றால், மேலே சொல்லிய அபத்த நிமிடங்கள், நீண்ட வசனங்கள், திரைக்கதையின் அத்தியாயங்களின் பெயர்களை திரையில் காட்டுவது, அதீத வன்முறை, ரத்தம் பீறியடிப்பது, கெட்ட வார்த்தைகள் ஆகியவற்றின் இடையே நான் லீனியர் திரைக்கதை அமைப்பது. அவரது மூன்றாம் படமான ‘Jackie Brown’ படத்திலிருந்தே இந்த டெம்ப்ளேட் மிக எளிதில் வெளிப்பட்டுவிடும்.

இருந்தாலும், தமிழில் இப்படி டெம்ப்ளேட்தனமாக எடுக்கும் பாலா போன்றவர்களின் படங்களுக்கும் டாரண்டினோவின் டெம்ப்ளேட்தனமான படங்களுக்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு உள்ளது. டாரண்டினோ படங்களில் கதைமாந்தர்கள் ஒரேபோன்று இருக்க மாட்டார்கள். வெவேறு கதைமாந்தர்களின் வாழ்வில் நடைபெறும் வெவ்வேறு சம்பவங்களைக் காண்பிப்பதில் மட்டுமே டாரண்டினோவின் டெம்ப்ளேட் வெளிப்படும். அதாவது திரைக்கதை எழுதும் முறையில் இருக்கும் டெம்ப்ளேட். ஆனால் தமிழில் அப்படி இல்லை. தமிழில் கதை, இசை, கதாபாத்திரங்கள், பின்னணி ஆகியவை ஒரே போன்று இருப்பதால்தான் பாலாவின் படங்கள் அலுத்துவிடுகின்றன. கூடவே இன்னொரு காரணமும் இருக்கிறது. அது இந்தக் கட்டுரையின் கட்டக்கடைசி பத்தியில் படித்துக்கொள்ளலாம்.

இன்னொரு முக்கியமான அம்சம் – டாரண்டினோவின் படங்கள் எல்லாவற்றிலும் இன்றுவரை அவரைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும் விஷயமாக தனித்து விளங்கும் ஒரு அம்சம் இருக்கிறது. அதுதான் இசை. இசையை கனகச்சிதமாக தனது படங்களில் இடம்பெற வைப்பது டாரண்டினோவின் விசேடம். அதையும் விரிவாக இந்தக் கட்டுரையில் எழுதப்போகிறேன். பின்னால் வரும். தமிழின் டெம்ப்ளேட் படங்கள் தோற்பது இசையாலும்தான் என்பதையும் நினைவுகொண்டால் டாரன்டினோவின் டெம்ப்ளேட் ஜெயிப்பதன் காரணத்தை உணர முடியும். இசை என்றவுடன் பாடல்களை நினைவுகொள்ளவேண்டாம். பின்னணி இசையைப் பற்றி மட்டுமேதான் நான் சொல்கிறேன். பின்னணி இசை அமைப்பதில் டாரண்டினோ ஒரு கில்லாடி. இதைப்பற்றிப் பின்னர்.

Django Unchained திரைப்படம், அதன் கதையை மட்டும் எடுத்துப் பார்த்தால் பத்தோடு பதினொன்றான ஒரு மிகச் சாதாரணமான ஹாலிவுட் மொக்கை. ஆனால், ஒரு மொக்கைக் கதைக்கு டாரண்டினோ திரைக்கதை அமைத்தால் என்ன நடக்கும் என்பது இந்தப் படத்தில் தெளிவாகவே தெரிகிறது. டாரண்டினோவின் பிற படங்களை விட இதில் black humor (கறுப்பின கதாநாயகன் நடித்திருப்பதாலோ என்னமோ) அதிகம். அதேபோல் நாம் ஏற்கெனவே பார்த்த அபத்த நிமிடங்களும் அதிகம். கூடவே கறுப்பின மக்களை வசைபாடும் ‘நீக்ரோ’ என்ற வார்த்தையும் அதிகம். அவரது பிற படங்களை ஒப்பிட்டால் இதில் வன்முறை மிக மிகக் குறைவு. அதேபோல் வரிசையான லீனியர் திரைக்கதையை அவர் முழுதாக அமைத்திருக்கும் படமாகவும் இது இருக்கிறது. இதில் காட்சிக்குக் காட்சி அத்தியாயத்தின் பெயர்கள் வருவதில்லை. எனவே, அவரது டெம்ப்ளேட்டை அவரே அடையாளம் கண்டு, அதிலிருக்கும் சில முக்கியமான விஷயங்களை இந்தப் படத்தில் இருந்து தூக்கியிருக்கிறார் என்று சொல்லலாம். இருந்தாலும், ஒருசில காட்சிகளைப் பார்த்தாலேயே இது டாரண்டினோ படம் என்று கண்ணை மூடிக்கொண்டு அறிவித்துவிடலாம்.

Quentin Tarantino Reveals 'Django Unchained' Synopsis - YouTube

ஒண்ணரையணா கதையாக இருந்தாலும், அதை ஆடியன்ஸுக்கு அளிக்கையில் அந்தக் கதையை மறக்க முடியாத ஒரு கலை அனுபவமாக எப்படி மாற்றுவது என்பது டாரண்டினோவுக்கு கை வந்த கலை. ‘அனுபவம்’ என்ற சொல்லால், அது நம்மை நெகிழ்ச்சியில் கண்ணீர் விட வைக்கும் திரைப்படமாக இருக்கும் என்பது உண்மையல்ல. அப்படி ஒரு படத்தை டாரண்டினோவே நினைத்தாலும் எடுப்பது கடினம். ஆனால், அதற்கு நேர் எதிராக, லேசான புன்னகையோடு சந்தோஷமாக ஆடியன்ஸை அனுப்பிவைக்கும் படங்களாகவே டாரண்டினோவின் படங்கள் இருக்கின்றன.

Django Unchained அத்தகைய படம்.

இந்தப் படத்தின் திரைக்கதையை குறைந்தபட்சம் ஐந்து முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு வசனமும் எந்த இடத்தில் சொல்லப்படுகிறது என்பது படத்தைப் பார்ப்பதற்கு முன்னரே நன்றாகத் தெரியும். ஆனால், ஒரு வெள்ளைத்தாளில் எழுதப்பட்டுள்ள வரிகளை திரைப்படத்தில் எப்படி டாரண்டினோ காட்டுகிறார் என்பதைப் பார்ப்பதற்காகவே இந்தப் படத்துக்காக காத்திருந்தேன். புதன் இரவு (27th March 2013 – for my nostalgic reasons) கருடா மால் ஐநாக்ஸில் இப்படத்தைப் பார்த்தேன். நான் எண்ணியது வீண்போகவில்லை. திரைக்கதையில் நான் பார்த்துப் படித்திருந்த அதே வரிகள் (சில இடங்களில் சில வசனங்கள் மாறியிருக்கின்றன. அது எதிர்பார்த்ததே. ஓரிரண்டு ஸீன்களும் படத்தில் இல்லை. அவை இந்தியாவில் கட் செய்யப்படவில்லை. டாரண்டினோவே அவைகளை தூக்கியிருக்கிறார் என்று அறிந்துகொண்டேன்) படத்தில் உயிரோட்டமுள்ள நடிகர்களால் அருமையான வகையில் நடித்துக் காண்பிக்கப்பட்டன. ஒவ்வொரு வசனம் வரும்போதும் இதனை உணர்ந்தேன். அதேபோல், டாரண்டினோவின் முத்திரை பல ஸீன்களில் அவரால் வெளிப்படுத்தப்பட்டிருப்பதையும் பார்த்தேன்.

உதாரணமாக, படத்தின் ஆரம்பத்தில் ஸ்பெக் சகோதரர்கள் மருத்துவர் ஷூல்ட்ஸால் சுடப்படும் காட்சி. அதில் இரண்டாவது சகோதரனான Dickyயின் குதிரையை ஷூல்ட்ஸ் தலையில் சுட்டுக் கொன்றுவிடுவார். குதிரைக்குக் கீழே டிக்கி மாட்டிக்கொள்வான். அப்போது ஆரம்பிக்கும் டிக்கியின் அலறல், அந்தக் காட்சி முழுவதும் பின்னணியில் கேட்டுக்கொண்டே இருக்கும்.

இதேபோல் ஜாங்கோவும் மருத்துவர் ஷூல்ட்ஸும் Daughtrey என்ற ஊருக்குள் குதிரையில் வரும் ஸீன். அந்த ஊர் ஷெரீப்பை ஷூல்ட்ஸ் கொல்லும் காட்சி. அந்த நேரத்தில் பின்னணியில் ஊர் மக்கள் பலர் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்களின் மத்தியில் ஊன்றுகோல்களை வைத்துக்கொண்டு ஒரு இளம்பெண்ணும் இருப்பாள். ஷெரீப்பை ஷூல்ட்ஸ் கொன்ற அடுத்த கணம் அனைவரும் கண்டபடி ஓடுகையில் இந்தப் பெண்ணும் அரக்கப்பரக்க தட்டுத்தடுமாறி ஓடுவதுபோல் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இது இரண்டே நொடிகள் மட்டும்தான் வரும். இப்படி ஒரு பெண் கதாபாத்திரத்தை சித்தரிப்பது டாரண்டினோவின் ஸ்டைல். அவர் நடித்திருக்கும் Planet terror படத்தைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும்.

அடுத்த டாரண்டினோ முத்திரை- மறுபடியும் இரண்டே நொடிகள் வரும் காட்சி. மேலே பார்த்த அதே காட்சியின் இறுதியில் அந்த ஊர் மார்ஷல் அங்கு வருவார். அப்போது ‘அதோ அந்தக் கூரையின் மீது இரண்டு நபர்கள் – இரண்டு ரைஃபிள்கள்; இதோ இந்தக் கூரையின் மீது இரண்டு நபர்கள் – இரண்டு ரைஃபிள்கள்’ என்று வரிசையாக சொல்லிக்கொண்டே வருவார். (அப்படி சொல்லிக்கொண்டே வரும்போது மார்ஷலின் கூடவே வரும் பெண்மணியை கவனியுங்கள்). ஊர் மக்கள் அனைவருமே ஜாங்கோவும் ஷூல்ட்ஸும் இருக்கும் விடுதியின் வெளியே துப்பாக்கிகளோடு நிலைபெற்றிருப்பார்கள். அப்போது டக்கென்று ஒரு ஷாட்டில் அவர்களின் மத்தியில் ஒரு கிழவியும் துப்பாக்கியோடு அமர்ந்துகொண்டிருப்பது தெரியும். சம்மந்தமே இல்லாமல் அந்தக் கிழவி அங்கு இடம் பெற்றிருப்பது – டாரண்டினோவின் குறும்புதான். அந்தக் கிழவியின் ரியாக்‌ஷன்களும் அருமையாக இருக்கும் (அடுத்த இரண்டு நொடி கட் ஷாட்டின்போது). அதேபோல் அந்தக் காட்சியில் துப்பாக்கி வைத்திருக்கும் ஊர் மக்களை சற்றே கவனித்துப் பாருங்கள். பெரிய மீசை, கிடா தாடி, தொழிலாளி, முதலாளி, மாடு மேய்ப்பவன் போன்ற பல கதாபாத்திரங்களை கவனிக்கலாம். இவையெல்லாம் மார்ஷல் கில் டேடம் பேசும்போது பின்னணியில் தெரிபவை.

இதுபோன்றவைதான் டாரண்டினோவின் குறும்பான சித்தரிப்புகள். எத்தனை கனமான ஸீனிலும் டாரண்டினோ நம்மை புன்னகைக்க வைப்பார் என்று சொன்னேன் அல்லவா? அதற்கான எடுத்துக்காட்டுகள். மேலும் இதுபோன்ற பல குட்டிக்குட்டி ஷாட்கள் உள்ளன. குதிரை ஃப்ரிட்ஸ் தலையை ஆட்டி சலாம் வைப்பது, மருத்துவர் ஷூல்ட்ஸின் வண்டியின் மீது இருக்கும் பிரம்மாண்ட பல் பொம்மையைப் பார்த்துவிட்டும் ‘நீ எந்த டாக்டர்?’ என்று அவரை கேள்வி கேட்பது (இந்தப் பல் பொம்மை திரைக்கதையில் இல்லை. படப்பிடிப்பின்போது டாரண்டினோ செய்த நுணுக்கமான மாற்றம் இது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், படத்தில் வரும் கு க்ளுக்ஸ் க்ளான் கும்பலின் முற்றுகையின்போது, திரைக்கதையின்படி, டைனமைட்களை ஷூல்ட்ஸ் அவரது வண்டியின்முன்னர் மண்ணில்தான் புதைத்து வைத்திருப்பார். அதை நோக்கித்தான் சுடுவார். ஆனால் படத்தில் இன்னும் அருமையாக, பல் பொம்மையினுள் டைனமைட் குச்சியை சொருகி வைத்திருப்பதாக வரும். அதை நோக்கியே சுடுவார். இதுதான் திரைக்கதையை மெருகேற்றுவது. டாரண்டினோவுக்கு அது பாஸந்தி சாப்பிடுவதுபோல்), ‘Are you positive?’ என்று, தான் தேடி வந்த நபர் குதிரையில் தப்பிக்கையில் ஜாங்கோவை நோக்கி ஷூல்ட்ஸ் கேட்பது, Bounty hunter என்றால் என்ன என்று ஜாங்கோ கேட்கும் காட்சி, தான் நிர்வாணமாக தொங்கவிடப்பட்டிருக்கும்போது தனது விரைகளை பழுக்கக் காய்ச்சிய கத்தியால் அறுக்க வரும் Ace woodyயை பின்னர் அவனது விரைகளில் சுட்டே கொல்வது.. இப்படி பல உதாரணங்கள் படத்தில் உண்டு.

HD wallpaper: Django Unchained, Jamie Foxx, movies, Quentin Tarantino,  western | Wallpaper Flare

இந்தப் படத்தில் குறிப்பாக சொல்லவேண்டிய விஷயம் – இரண்டாவது பாதியில் கேல்வின் கேண்டியாக வரும் லியனார்டோ டி கேப்ரியோவின் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள். அதிலும் ஷூல்ட்ஸும் ஜாங்கோவும் கேல்வின் கேண்டியும் பேசிக்கொள்ளும் மிக நீண்ட பகுதி ஒன்று உண்டு. தன் கையில் ஒரு மண்டையோட்டை வைத்துக்கொண்டு கேல்வின் கேண்டி பேசும் காட்சி. இதில் டாரண்டினோவின் டெம்ப்ளேட் பக்காவாக வெளிப்பட்டிருக்கும். கில் பில் படத்தின் இறுதியில் சூப்பர்மேன் பற்றி வில்லன் பில் பேசும் காட்சி ஒன்று இருக்கிறது. அதேபோல் பல்ப் ஃபிக்‌ஷனிலும் சுடுவதற்கு முன்னர் புட்ச் உச்சரிக்கும் பைபிள் வசனம். இதுபோன்று எதுவோ ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அதைப்பற்றி நிறையப் பேசி, இறுதியில் தற்போது நடைபெறும் ஸீனுக்குள் நுழைந்து அந்த ஸீனையும் எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளையும் இணைப்பது டாரண்டினோவின் திரைக்கதை உத்தி. இதுவரை அது சோடை போனதில்லை (கில் பில் க்ளைமாக்ஸ் சூப்பர்மேன் வசனம் மட்டும் கொஞ்சம் போர் அடிக்கும்). இந்தப் படத்தில் அது அருமையாக வெளிப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற காட்சிகளின் மூலம், படம் பார்க்கும் அலுப்பை டாரண்டினோ போக்கிவிடுகிறார். மூன்று மணி நேரம் ஒரு இருண்ட அறையில் அடைந்து கிடப்பது என்பது எத்தனை பெரிய கொடுமை? அந்த துன்பியல் அனுபவத்தை டாரண்டினோ போன்ற இயக்குநர்களின் படங்கள் போக்கி, படம் பார்ப்பவர்களை குஷிப்படுத்துகின்றன. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில், Django Unchained திரைப்படம் மொத்தம் 2:45 மணி நேரம். ஆனால் ஒரு நிமிடம் கூட எனக்கு அலுக்கவில்லை. அதேசமயம் பரதேசி படம் கிட்டத்தட்ட இரண்டே மணி நேரம் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு நிமிடமும் மரண அறுவையை வழங்கிக்கொண்டிருந்தது அந்தப் படம். (உடனேயே ‘இந்தாள் இப்படித்தான் ஆங்கிலப் படங்களை பாராட்டி, தமிழ்ப்படங்களை கேவலப்படுத்துவான்’ என்று எண்ணிக்கொள்வதற்கு முன்னர், காரணத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன். பலமுறை – ஆரம்பத்திலிருந்தே நான் இங்கு எழுதிக்கொண்டிருப்பதுதான் – திரைப்படம் என்பது அதில் நடிப்பவர்கள், பின்னணி இசை, ஷாட்களின் நேர்த்தி, செயற்கையான நடிப்பை அள்ளி வழங்காமல் இருத்தல், நாடகத்தனமான காட்சியமைப்புகள் போன்ற பல விஷயங்களின் கலவை. டாரண்டினோவின் இந்தப் படம் ஒரு அரத மசாலா. இருந்தாலும் இதில்கூட ஒவ்வொரு ஷாட்டிலும் அந்த செய்நேர்த்தியை கண்டு சந்தோஷப்படலாம். ஆனால் பரதேசி, ஒரு so called ’தமிழ் சினிமாவின் மைல்கல்’ (கிட்டத்தட்ட வருடத்துக்கு ஒரு தமிழ்ப்படமாவது இப்படிக் கிளம்பிவிடுகிறது.  கூடவே அவற்றின்பின்னர் வாழ்நாளில் மொத்தமே மிகச்சில படங்களைப் பார்த்திருக்கும் ஒரு கும்பலும், ‘உலக சினிமா…உலகசினிமா’ என்று அரற்றிக்கொண்டே. அந்தப் படத்தைப் பார்த்தாலோ அது மேடை நாடகங்களின் திரை வடிவமாகவே இருக்கிறது. இது என் அனுபவம்). அதாவது என் புரிதலில் பரதேசி ஒரு pseudo கலைப்படம். அந்தப் படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலும் செயற்கைத்தனமே நிறைந்திருக்கிறது.

DJANGO UNCHAINED - Anamorphic is Tarantino's preference - how DP Robert  Richardson shot masterpiece 'spaghetti southern' - EOSHD.com - Filmmaking  Gear and Camera Reviews

எனவே, Django Unchained திரைப்படம், டாரண்டினோவின் வழக்கமான அதே மசாலாவாக இருந்தாலும், படத்தை ரசித்துப் பார்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அத்தனை செய்நேர்த்தியுடன் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

இதேபோல, அடுத்து டாரண்டினோ எடுத்த The Hateful Eight படத்திலுமே கிட்டத்தட்ட ஜாங்கோ அன்செய்ண்ட் படத்தில் கையாளப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட தீம்தான் வருகிறது. இது ஒரு சாதாரண வெஸ்டர்ன் படம் அல்ல. மாறாக, அமெரிக்காவில் கறுப்பின மக்களின் பதைபதைப்பு பற்றிய அவரது கருத்துகளே இந்தப் படமாக வந்துள்ளன. இதுவேதான் Django Unchained படத்திலும் அவரது கருத்தாக இருந்தது. ஒரு குட்டிக் கறுப்பினச் சிறுவன் வெஸ்டர்ன்கள் பார்க்கவேண்டும் என்று விரும்பினால், வெள்ளையர்களால் நிரம்பிய வெஸ்டர்ன்களில் அவனுக்குப் கிடைக்கும் ம்கிழ்ச்சியை விட, ஜாங்கோவிடம் அவனுக்கு மகிழ்ச்சி கூடுதலாகக் கிடைக்கும் என்பது அவரது கருத்து. இதுதான் ஹேட்ஃபுல் எய்ட் பற்றிய டாரண்டினோவின் கருத்தும் கூட. இதிலும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு மனிதனே பிரதான கதாபாத்திரம் வகிக்கிறான். இதுவும் ஒரு வெஸ்டர்ன் தான். ஆனால் பெருமளவில் வெளியாகும் பிற வெஸ்டர்ன்களைப் போல் அல்லாமல், இது கொஞ்சம் வசனங்கள் நிரம்பியது. அதுவும் தெரிந்தேதான் டாரண்டினோ செய்திருக்கிறார்.ஒரு வெஸ்டர்ன் எடுப்பதைவிட, தொடர்ச்சியாக இரண்டு வெஸ்டர்ன்கள் எடுப்பதில் சவால்கள் அதிகம் என்று சொல்லியிருக்கிறார். அத்தகைய சவால்மிக்க ஒரு படமாகவே இது வெளிவந்துள்ளது என்பது அவரது கருத்து. கூடவே ஜாங்கோவில் கறூப்பினத்தவர்கள் அனுபவிக்கும் கொடுமையைச் சொன்ன டாரண்டினோ, ஹேட்ஃபுல் எய்ட்டிலும் அதையே மேஜர் மார்க்விஸ் வாரனாக நடித்துள்ள சாமுவேல் ஜாக்சன் கதாபாத்திரம் பிறரின் பார்வையில் எப்படி இளக்காரமாகக் காட்டப்பட்டுள்ளது என்பதன்மூலம் விவரித்திருப்பார். 

ஆனால் அதேசமயம், நிறவெறிக் கொடுமைகள் இருந்தாலுமே, மேஜர் மார்க்விஸ் வாரன் நல்லவர் இல்லை. இதுவும் மிக முக்கியமான கருத்தாக இப்படத்தில் காட்டப்பட்டிருக்கும். கூடவே, இதில் மேஜர் மார்க்விஸ் வாரன் கையோடு கொண்டு செல்லும் ஒரு கடிதமும் படம் முழுக்க வருகிறது. ஆப்ரஹாம் லிங்கன், தனது பேனா நண்பரான மார்க்விஸ் வாரனுக்கு எழுதிய பல கடிதங்களில் ஒன்று என்று ஒரு பின்னணியோடு வரும் இந்தக் கடிதத்தின் ஒரு சில வரிகளே படம் முழுக்கப் பேசப்படுகின்றன. பல்ப் ஃபிக்‌ஷனில் வரும் மர்மமான பெட்டியைப் போன்றது இந்தக் கடிதம். ஆனால் இறுதியில் முழுக்கடிதமும் படிக்கப்பட்டுவிடுகின்றது. இந்தக் கடிதம் இவரே தயாரித்த ஃபோர்ஜரி. ஏன் தயாரித்தார் என்பதையும் இவரே சொல்கிறார். வெள்ளையர்கள் முழுமுட்டாள்கள் ஆனால்தான் கறுப்பின மக்களுக்குப் பாதுகாப்பு என்னும் அவரது வரிகள் இன்றும் உண்மைதானே? இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் கறுப்பின மக்களைக் கண்டாலே கொலைசெய்யும் வெறியில் திரிந்த வெள்ளையர்கள் மத்தியில் மேஜர் மார்க்விஸ் வாரன் வாழ்வதற்காகத் தயாரித்துக்கொண்ட ஒரு கேடயம்தான் இந்தக் கடிதம்.

இப்படி, ஒரு குறிப்பிட்ட பிரச்னையை எடுத்துக்கொண்டு (நிறவெறி), அதில் இருக்கும் அத்தனை அம்சங்களையும் சுவாரஸ்யமாகக் காட்டி, மறக்க முடியாத கதாபாத்திரங்களை உருவாக்கி உலவவிட்டு அவற்றின் மூலம் படம் பார்ப்பவர்களுக்கு அழுத்தமான கருத்துகளைச் சொல்வது டாரண்டினோவின் ஜீனியஸ். அதில் அவர் இதுவரை சோடை போனதே இல்லை.