ஃப்லிம்டைரக்ஷன் -ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக்

ஒரு திரைப்பட இயக்குனர் தனது வேலைகள் அனைத்தையும் ஸ்டுடியோவிலேயே செய்து முடித்துக் கொள்கிறார். தான் விரும்புவது போல் நடிகர்களுக்கு பயிற்சி கொடுத்து, தேவையான நடிப்பினை அவர்களிடமிருந்து பெறுகிறார் என்றே பெரும்பாலான மக்கள் எண்ணுகிறார்கள். உண்மையில் எனது சொந்த வழிமுறைகள் இவ்வாறானவை அல்ல. நான் எனது சொந்த வழிமுறைகள் பற்றியே எழுதுகிறேன். படப்பிடிப்புத் தளத்திற்கு செல்வதற்கு முன்பே படத்தினைப் பற்றி ஒரு முழுமையான வடிவத்தினை எனது மனதில் உருவாக்கிக் கொள்கிறேன். சில நேரங்களில் ஒரு படம் குறித்து ஒருவருக்கு முதலில் தோன்றும் எண்ணம் தெளிவற்ற அமைப்பு கொண்டதாகவும், வகை பிரிக்க முடியாத வடிவமானதாகவும் அமையலாம். அது பிறகு ஒரு வண்ண மிக்க ஆரம்பத்துடன் துவங்கி, மத்தியில் நெருக்கமாக வளர்ந்து, அதன்பின் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளையோ அல்லது வேறுபட்ட ஒரு துணிகரச் செயலினையோ கொண்டதாக, அமைந்து, சிலவேளைகளில் இறுதியாக ஒரு பெரிய முடிவினையோ, திருப்பத்தினையோ அல்லது வியப்புறும் வண்ணம் அமைக்கப்பெற்ற காட்சியோடு முடியலாம். முதலில் தெளிவற்றது போல் தோன்றும் ஒரு கருத்தினைக் கூட வலுவான காட்சி அமைப்புகளினால் நன்கு விளங்கும்படி செய்யலாம். சொல்லவேண்டிய கருத்திற்கு ஏற்ற ஒரு கதையினை தேர்ந்தெடுத்து அதன் பின் காட்சி அமைப்புகளை அதற்கு உகந்தாற்போல் அமைத்தல் வேண்டும்.
உதாரணமாக, ஒரு வழக்கமான கதைக்கருவினை கற்பனை செய்து கொள்ளுங்கள். கதை, காதலுக்கும், கடமைக்கும் இடையே நடக்கும் போராட்டம் எனக் கொள்வோம். எனது முதல் பேசும் படமான ‘ப்ளாக் மெயில்’ இந்தக் கருவினை அடிப்படையாகக் கொண்டது. படத்தினைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் முதலில் இப்படத்தில் கடமை – காதல் – காதலுக்கும் கடமைக்கும் இடையே நடக்கும் போராட்டம் இறுதியில் இரண்டில் ஏதாவது ஒன்றிற்கு கிடைக்கும் வெற்றி போன்றவைகளே தெரியும். படத்தின் மத்திய பகுதி, காதலுக்கும், கடமைக்கும் இடையே நடக்கும், போராட்டத்தைப்பற்றியும், பிறகு கடமைக்கும், காதலுக்கும் முறையே தனித்தனியே முக்கியத்துவம் தரப்பட்டது போல் காட்சிகள் அமைந்திருக்கும். ஆகவே முதலில் கடமையினை உணர்த்தும் காட்சிகளை அமைக்க வேண்டியதாயிற்று.
ஸ்காட்லார்ந்து சமவெளியைச் சார்ந்த துப்பறியும் நிபுணர்கள். ஒரு குற்றவாளியைக் கைது செய்வதையும், அதன் தொடர்பான காட்சிகளையும் விரிவாக காட்டினேன். துப்பறியும் நிபுணர்கள் , குற்றவாளியை கைகளைக் கழுவ கழிவறைக்கு அழைத்துச் செல்வதைக் கூட படத்தில் காணலாம். இது போன்ற காட்சிகளில் எந்தவித கிளர்ச்சி அம்சமும் இல்லாமல் சாதாரணமான கடமை உணர்வே தோன்றும், இதற்குப் பிறகு அந்த இளம் துப்பறிவாளர் தனது காதலியைச் சந்திக்க அன்று மாலை செல்வதாகக் கூற, அக்காட்சி முடிந்து, கடமையிலிருந்து காதலுக்கு காட்சி தாவுகிறது. இதற்கு பிறகு அந்தத் துப்பறிவாளருக்கும், அவரது காதலிக்கும் இடையே உள்ள காதல் உறவு காட்டப்படுகிறது. அவர்கள் இருவரும் நடுத்தர வர்க்கத்தினர். ஒரு நாள் அவர்கள் காதலின் இடையில் சிறு சச்சரவு தோன்றுகிறது. துப்பறிவாளர் தனது காதலியை சந்திக்க சிறிது தாமதமாக வருவதால், அவள் கோபித்துக்கொண்டு புறப்பட்டு செல்கிறாள். கதையில் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. காதலி வில்லன் கையில் சிக்க , அவன் அவளைக் கெடுக்க முயற்சிக்கிறான். அதனால் அந்தப் பெண் வில்லனை கொன்று விடுகிறாள். இப்பொழுது துப்பறிவாளர், கொலை பற்றி துப்பு துலக்க வருகிறார். காதலுக்கும், கடமைக்கும் இடையே போராட்டம், படம் பார்ப்பவருக்கு அவன் தன் காதலிதான் கொலையினை செய்தாள் என கண்டுபிடித்து விடுவானோ, அடுத்து என்னென்ன நிகழும் என்று ஆர்வம் ஏற்படுகிறது.
அந்தப் பெண்தான் கொலை செய்தாள் என்பதை அறிந்த ஒருவன் அவளை பயமுறுத்தி வருவதுபோல் காட்டுவது கதையின்கிளைக்கருவாகும். இந்தப் பாத்திரத்தை கொண்டே கொலையாளி யார்? என்பதைக் காட்டி கதையை நான் முடிக்கக் கருதினேன். கதையில் தேடல் அந்தப் பெண்ணை சுற்றியே அமைந்திருக்க வேண்டுமேயொழிய, பயமுறுத்தும் நபராக வருபவரை சுற்றி அமைதல் கூடாது என கருதினேன். இறுதியில் கொலைகாரி என்று அறியாமல் அப்பெண்ணை பயமுறுத்தும் நபரிடமிருந்து துப்பறிவாளர் மீட்கும் போது அப்பெண் உண்மையைச் சொல்ல விரும்புகிறார். அதற்குள் காவலர்கள் அங்கு வந்து, கொலைகாரியான அவளை கைது செய்தமைக்கு துப்பறிவாளரைப் பாராட்டுகிறார்கள். உண்மையில் அப்பெண்தான் அவரின் காதலி என்பது அவர்களுக்குத் தெரியாது. படம் பார்ப்பவர்களுக்கு தெரியும். கொலைகாரப் பெண் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போது, சிறைக்கு வெளியே அவளது காதலனான துப்பறிவாளரிடம் மற்றொருவர் (சிறையில் அடைபட்டிருப்பது அவனது காதலி என அறியாமல்) “உன்னுடைய காதலியோடு இரவு வெளியே செல்கிறாயா?” என்று கேட்க, அவனோ, “இல்லை... இன்று இல்லை” என்பது போல் வர்த்தக ரீதியாக நான் முடிவை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. திரைப்படங்கள் எவ்வளவு நுட்பம் வாய்ந்தவைகளாக இருந்தபோதும், சிலவேளைகளில் அவை நம்மை கட்டுப்படுத்தவே செய்கின்றன.
நான் எனது படத்தின் திரைக்கதை அமைப்பில் மிக்க கவனம் செலுத்தி, அதிலிருந்து பிறழாமல் படம் பிடிக்க எண்ணும் நேரத்தில் எனது துணைவி தொழிற்நுட்ப ரீதியாக கருத்துகள் சொல்லி உதவிபுரிவாள். உண்மையில் எனக்கு திரைக்கதை சரியான முறையில் அமைந்துவிட்டாலே நல்ல முறையில் அதனை படமெடுத்துவிட்டது போன்ற திருப்தி மனதில் ஏற்பட்டுவிடுகிறது. நான் எனது படத்தின் எடிட்டிங்கினையும் கூர்ந்து கவனிக்கிறேன். இயக்குநர் விரும்பும் வகையில் படம் திருப்திகரமாக அமைய வேண்டுமெனில், எடிட்டிங்க சிறப்பாக அமைய வேண்டும் என்பது நியதி. திரைக்கதை தெளிவாக அமைக்கப்பட்டு, நல்ல முறையில் படமாக்கப்பட்டால் எடிட்டிங் என்ற ஒன்று சுலபமாகிவிடுகிறது. படப்பிடிப்பு முடிந்தவுடன் செய்ய வேண்டுவது என்னவெனில் , தேவையற்ற காட்சிகளை வெட்டி எரிந்துவிட்டு படத்தினைப் பார்த்தால் , அது நாம் எடுத்துக்கொண்ட திரைக்கதையினை முழுமையாக படமெடுத்த தன்மை விளங்கும்.
காட்சிக்கேற்ற அரங்க அமைப்புகள் பற்றிய எண்ணம், பெரும்பாலும் எனது முதற்கட்ட திட்டத்திலேயே உருவாகிவிடுகிறது. நான் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே கலை மாணவனாக இருந்தேன். சிலவேளைகளில் படத்தினைப் பற்றி நினைக்கும் போது, காட்சிகளின் அரங்க அமைப்பே முதன்முதல் என் முன் வந்து நிற்கும். ‘ திமேன் ஹீ நியூ டு மச்’ ஆரம்பமானது இப்படித்தான். எனது மனக்கண்ணானது ஆல்ப்ஸ் மலையின் பனியினையும், லண்டனின் குறுக்கு சந்துகளையும் எண்ணியது. எனது கதாபாத்திரங்கள் மேற்சொன்ன இடங்களில் வாழ்வது போல் கதையினை அமைத்தேன். ஸ்டுடியோக்களில் அமைக்கப்பெறும் அரங்க அமைப்புகள் அடிக்கடி பிரச்சினை உள்ளவைகளாக தோன்றுகின்றன. ஏனெனில் பகட்டின் உச்சியினையும், ஏழ்மையின் கடைசிக் கட்டத்தையும் அரங்கு அமைத்து, படம்பிடித்து தருதல் கடினமானது. எனக்கு மத்திய தரத்தினரின் வீட்டின் உட்புறத்தினை அரங்கில் அமைத்து சிறப்பாக படமாக்குவதில் அனுபவம் பெற சிறிது காலம் பிடித்தது. உதாரணமாக எனது “சபட்டேஜ்’ படத்தில் வரும் ‘வெர்லோக்ஸின்’ வசிப்பறை அரங்கமைப்பு எனது நீண்ட அனுபவத்தின் பின்வந்த சிறப்பேயாகும். ஆனால் ஒன்று கவனிக்கப்பட வேண்டும். அதாவது நமது பார்வையாளர்களுக்கு உள்ளதை உள்ளபடியே தந்து படம்பிடித்து தருவதிலும் ஆபத்து இருக்கிறது.
திரைக்கதை வசனமும் , அரங்க அமைப்புகளும் சரியான நேரத்தில் தயாராக இருந்தாலே, படப்பிடிப்புக்கு நாங்கள் தயார் என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அடிக்கடி ஏற்படும் பிரச்சினை என்னவென்றால், படத்தின் நடிகர்களை சினிமாவின் தொழிற்நுட்பங்களுக்கு ஏற்ப சில மாறுதல்களுக்கு ஆட்படுத்த வேண்டிய நிலையே பெரும்பாலான நடிகர்கள், நாடக மேடையிலிருந்து திரைப்படத்திற்கு வந்தவர்களாக இருப்பதால், அவர்களுக்கு சினிமா என்ற தொழிற்நுட்ப சாதனத்தை விளக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்கள் நீண்ட காட்சிகளில் நடிக்க உடனே தயாராகி விடுகிறார்கள். நான் நீண்ட தடங்கலற்ற காட்சிகளை எடுப்பதனை விரும்புகிறேன். இது போன்ற காட்சிகள் தவிர்க்க முடியாதவை. இக்காட்சிகளில் இரண்டு காமிராக்களில், ஒன்று அருகிலிருந்தும், மற்றொன்று தொலைவிலிருந்தும் படமெடுத்துக் கொண்டிருக்கும். படத்தை எடிட் செய்யும் போது இரண்டு காமிராக்களின் படங்களையும் மாற்றி மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். நான் நீண்ட காட்சியினை எடுக்கும் சிலவேளைகளில் சினிமா கண்ணோட்டத்தில் ஒருவித பிடிப்பினை இழப்பதாக உணர்கிறேன். நான் கொடுக்க விரும்பும் காட்சிக்கு ஏற்றவாறு படமெடுத்து அவைகளை ஒன்று சேர்த்து நிகழ்ச்சி வடிவில் கொடுக்க விரும்புகிறேன். எனது படத்தினைப் பார்க்கும்போது ஏதோ நாடகத்தினை காண்பது போன்ற உணர்வு தோன்றாமல் , நிகழ்ச்சிகள் கண் எதிரே நடப்பது போன்ற உணர்வினை திரைப்படம் என்ற சாதனம் ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். நான் மேற்சொன்ன கருத்தை எனது “சபட்டேஜ்”, படக் காட்சி உணர்த்துகிறது. இதில் ‘வெர்லாக்’ என்பவன் கொல்லப்படுவதற்கு முன்வரும் காட்சியில் சில்வியா சிட்னி அவனுக்கு உணவு பறிமாறுவது போன்ற காட்சி வரும். இதில் இறுதியில் வெர்லாக்கின் மரணம் ஒரு விபத்து போன்றதுதான் என்பது தெளிவானால் கூட, பார்வையாளர்களின் அனுதாபம் சில்வியா மீதே. அவள் காய்கறிகளை அதற்குரிய செலுத்திய கத்தி கொண்டு பரிமாறுகிறாள். அவன் சாப்பிடுவது, அவளது முகபாவம் , பரிமாறுவதில் தவறு ஏற்படுவது போன்று மாறி மாறி பல்வேறு கோணங்களில் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். காட்சியின் நீளம் அதிகமானாலும், படத்தின் விறுவிறுப்பில் சிறிது கூட தொய்வு இல்லை. வெர்லாக் எழுந்து மேசையினை சுற்றி நடந்து வருகிறான். காமிராவுக்கு அருகில் அவன் வருவது போலவும், படம்பார்ப்பவர் பின் நகர்ந்து அவனுக்கு வழிவிட வேண்டும் என்பது போன்றும் காமிரா செல்கிறது. பிறகு காமிரா சில்வியா பக்கம் வந்து, திரும்பவும் கத்திக்கு வருகிறது.
இப்படியாக உளவியல் அடிப்படையான காட்சி, துண்டு துண்டாக காமிராவால் காட்டப்பட்டு முதலில் ஒரு விளக்கத்தையும் , பிறகு மற்றதையும் உணர்த்துகிறது. இதில் நோக்கத்தக்கது என்னவெனில் படம் பார்ப்பவரை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்க மட்டும் செய்யாமல் அவர்களையும் காட்சிக்குள் இழுப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவ்வாறில்லாமல் காமிராவினை ஒரே இடத்தில் வைத்து, மொத்த காட்சியினையும் படமெடுத்தால் அது ஒளிப்பட ஆவணம் போல இருக்குமேயன்றி, பார்வையாளர்களை காட்சியில் ஒருமிக்க வைத்து, கதாபாத்திரங்களின் உணர்வுகளை அவர்களுக்கு உணர்த்த முடியாது. ஒரு காட்சிக்கு மெருகூட்ட வேண்டுமென்றால் காமிராவினை உபயோகப்படுத்தி எதிர்வினைக் காட்சியினை (ரியாக்‌ஷன் ஷாட்) அமைத்தல் வேண்டும். எதிர்வினைக் காட்சி என்பது ஒரு நிகழ்வின் போது அதற்கு ஆட்பட்ட நபர் அல்லது குழுவின் முகபாவங்களை காட்டாமல், அதனைக் காண்பவர்களின் குளோஸ் அப்பினைக் காட்டுதல் ஆகும்,. கதவு திறந்து அறைக்குள் ஒரு நபர் உள்ளே வருகிறார். வருபவர் யார் என காட்டுவதற்கு முன்னால் அறைக்குள் அமர்ந்திருப்பவர்களின் முகபாவங்களை காட்டுதல் அல்லது ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை காட்டாமல் அவரது பேச்சினைக் கேட்டுக் கொண்டிருப்பவரின் முகபாவங்களை காமிரா காட்டுதல் ஆகும். இதுபோல் ஒரு மனிதரை சித்தரிக்க குரலொலியை பயன்படுத்துவது பேசும் சினிமா படத்திற்கே உரிய தன்மை. இதுபோன்ற முறையினால் , நாடகம் மற்றும் பேசாத படங்களில் கதை சொல்லும் வேகத்தை விட காமிராவினை, குளோஸ் அப்பில் பயன்படுத்தும் முறையால் பார்ப்பவர்களின் கவனத்தை ஒரு குறிப்பிட்ட நடிகரின் பேச்சு அல்லது நடிப்பிற்கு ஈர்க்க முடிகிறது. நாடக மேடையாய் இருந்தால் அவர் மேடையின் மையப்பகுதிக்கு வந்து நடிக்க வேண்டும் அல்லது குரலை உயர்த்திப் பேச வேண்டும். ஆனால் குளோஸ் அப் காட்சி இவை அனைத்தையும் தவிர்த்து , காட்சியைப் பார்ப்பவர்களை உடன் நடிகர் பக்கம் கவர்ந்துவிடுகிறது.
சமீப காலமாகவே நான் பழைய காமிராக்களை குறைவாகவே உபயோகப்படுத்துகிறேன். பழமைக்கே ஆட்பட்டு, புதிய தொழிற்நுட்பங்களை கற்காமல் இருந்து விடுவேனோ என்ற வர்த்தக ரீதியான பயம் கூட எனக்கு சிலவேளைகளில் உண்டு. அனுபவம் எனக்கு பல படங்களை கற்றுத் தந்துள்ளது.
ஒரு நாள் என்னைப் பேட்டி காண வந்த பத்திரிகையாளரும், நானும் திரைப்பட தொழிற்நுட்பங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவர் தனது நினைவில் எப்பொழுதும் இருப்பதாக கூறி “தி ரிங்” என்ற மெளனப் படத்தில் வரும் ஒரு காட்சியை,வீரன் போட்டியில் வெற்றி பெற்று வீடு திரும்புகிறான். வெற்றியை கொண்டாட விரும்பி ஷாம்பைன் பாட்டிலை திறந்து எங்கும் தெறிப்பது போல் பிடித்து மகிழ்ச்சியினைக் கொண்டாடுகிறான். அவனது மனைவி மற்றொருவனோடு வெளியே சென்றிருப்பது அவனுக்கு தெரிய வருகிறது. அந்த நொடியில் காமிரா ஷாம்பைன் ஊற்றி வைக்கப்பட்ட கண்ணாடி டம்ப்ளரை படம்பிடித்துக் காட்டுகிறது. அதில் குமிழ்கள் போல் நுரை மேலெழுந்து வந்து, சுவைக்கப் படாமலேயே உடைந்து சமமாவது காட்டப்படுகிறது. இந்த ஒரு காட்சி குத்துச் சண்டை வீரனது மனநிலையினை முழுவதும் எடுத்துக்காட்டுகிறது என்றார் பத்திரிகையாளர். “ஆம்” என்ற நான் இது போன்ற காட்சிகளை அவ்வப்போது காட்டுகிறேன். அவை கவனிக்கப்படுகின்றனவா? “தி ரிங்” படத்தில் இது போன்ற பிறிதொரு காட்சி எத்தனைப் பேரால் கவனிக்கப்பட்டதோ என காட்சியை கூறினேன்.
திரைப்படங்களில் பெரும்பாலும் பல காட்சிகள் மிகைப்படுத்தியே காட்டப்படுகின்றன. கறுப்பு வெள்ளை சினிமா படமும், வண்ணப்படமும் பல்வேறு முறைகளில் வேறுபடுகின்றன. எனக்கு படங்களை வண்ணத்தில் தயாரிப்பதில் அதிக நாட்டமில்லை. வண்ணங்கள் திரையில் புதிய அர்த்தத்தை காண்பவருக்கு உடன் ஏற்படுத்திவிடும் . உதாரணமாக நாம் ஒரு வண்ணப் படத்தினை நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் அறையினைக் காட்டித் துவங்குவோம். அங்கு மேஜை, நாற்காலி போன்றவைகள் மங்கலான நிறத்திலும், நிர்வாகிகளின் உடைகள் பிரகாசமான நிறத்திலும் , வெள்ளை நிற கழுத்துப்பட்டையுடனும் காட்டப்படுகிறது. நிர்வாகத் தலைவரின் துணைவியார் சிவப்பு நிறத்தில் தொப்பி அணிந்து உள்ளே வருகிறார். அந்த நிறத்தில் அவர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார். மற்றொரு காட்சி; ஒரு கொள்ளைக் கூட்டத்தைப் பற்றிய கதை; கூட்டத்தின் தலைவன் தான் சந்தேகிக்கும் நபருடன் ஒரு உணவு விடுதியில் உட்கார்ந்திருக்கிறான். தலைவன் தன் கூட்டாளிகளிடம் , கருமையான நிறம் கொண்ட மதுவகையினை தான் வரவழைத்ததால், சந்தேகப்படும் நபருடன் மோதும்படியும், அப்படியில்லாமல் பச்சை நிறம் கொண்ட மதுவகையினை வரவழைத்தால் அவனை விட்டுவிடும்படியும் கூறுவதாக அமையக் கூடும்.
என்னைக் காணவந்த பத்திரிகையாளர், எனது படத்தில் வரும் ஒலி அமைப்புப் பற்றிக் கேட்டார். எனது “ப்ளாக் மெயில்” திரைப்படத்தில் கொலை நடந்த மறுநாள் காலையில் படத்தில் வரும் குறிப்பிட்ட பெண் உணவு உண்ணும் போது “கத்தி” என்ற வார்த்தை ஒலிப்பது அவளது மனசாட்சியை சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வை உண்டாக்குவது போல் காட்சி இருக்கும்.
சில வேளைகளில் குழப்பமான மன நிலையினை காட்ட படத்தில் கற்பனை கலந்து காட்சியினை அமைக்க வேண்டும். நான்கதையினை எளிமையாக சொல்ல விரும்புகிறேன். அதுவே படம்பார்ப்பவரை குழப்பத்தில் ஆழ்த்தாமல் என் வசமாக சிறந்த வழி. சிலர் நான் ஏன் திகில் படங்களையே இயக்குகின்றேன் என்று கேட்கிறார்கள். நீங்கள் ஏன் பிரபல நாவல்களை திரைப்படமாக்கலாமே என்றும் வினவுகிறார்கள். இதற்கான எனது பதில், திரைப்படமாக்க ஏற்றது போல் தகுந்த கதைகள் கிடைக்கவில்லை; ஆகவே நானே எனது திரைப்படத்திற்கேற்ற கதைகளை அமைத்துக்கொள்கிறேன் என்பதே ஆகும்.
நான் க்ரைம் கதைகளை தேர்ந்தெடுப்பது ஏனென்றால் இது போன்ற கதைகளையே நான் எழுதுகிறேன்.; அல்லது எழுத உதவுகிறேன். இவைகளையே நான் வெற்றிகரமாக படமாக்குகிறேன். வேறு கதைகளையும் பயன்படுத்த நான் தயாராக இருக்கிறேன். ஆனால் கதைகளை எனக்குத் தேவையான வடிவத்தில் எந்த எழுத்தாளரும் தருவதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட காட்சிகளைப் போன்று இன்று அமைத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக நகைச்சுவை காட்சிகள்; பெரிய திரைப்பட நடிகர்களிடமிருந்தும் அவர்களின் புகழ் குறையா வண்ணம் நகைச்சுவை காட்சிகளைப் பெறமுடியும் என்பது தெரியவருகிறது. நான் 1926ல் நோவெல்லோவின் நாடகத்தை தழுவி “டவுன்ஹில்” என்ற திரைப்படத்தை எடுத்தபோது அதில் நோவெல்லோடு, இவான் ஹண்டர், இசபெல் ஆகியோர் நடித்தனர். அதில் ஹண்டரும் நோபெல்லோவும் சண்டையிடுவது போன்ற ஒரு காட்சி. இந்தக் காட்சியை நகைச்சுவை மிக்கதாக படமாக்கி இருந்தேன். ஹண்டருக்கு வித்தியாசமான ஆடை அலங்காரம். சில காரணங்களுக்காக அக்காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது. 39 படிகள் படத்தில் நாயகி கரோலை கதைக்கு வேண்டி அழுக்கான உடைகளோடு சில காட்சிகளில் நடிக்க செய்ய வேண்டியிருந்தது. இதுபோல் அவரை பத்தாண்டுகளுக்கு முன் நடிக்க செய்திருக்க இயலாது.
தற்பொழுது நகைச்சுவை நடிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். இருந்தாலும் கூட குறிப்பான சில நகைச்சுவை நடிகர்களுக்கென்று அவர்களைச் சுற்றி காட்சிகள் அமைக்கப்படுகின்றன. இன்று மக்களின் ரசனை நாடகத் தன்மையோடு கலந்த நகைச்சுவையின் பக்கம் திரும்பி உள்ளது. நாடகத்திற்கும் , திரைப்படத்திற்கும் காட்சிகளை பிரித்துத் தருவதில் வேறுபாடு நிறைய உள்ளன. திரைப்பட ரசிகர்கள் காட்சிகளுக்கேற்ப தங்களின் உணர்வுகளை உடனக்குடன் மாற்றிக்கொள்ளும் தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள். இதனால் திரைப்பட இயக்குனருக்கு சுதந்திரம் அதிகமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல் அல்லாமல் இன்று என் விருப்பம் போல் சுதந்திரமாக படங்களை இயக்க முடிகிறது. கால ஓட்டத்தில் இதைவிட அதிக சுதந்திரம் பெறமுடியும் என்றும் அதனை பார்வையாளர்கள் தருவார்கள் எனவும் நம்புகிறேன்.சலனம்: டிசம்பர் 93 – ஜனவரி 94