படத்தொகுப்பு – வால்டர் முர்ச்

பார்வையாளர்கள் இடத்தில் படத்தொகுப்பாளர்:

ஒரு படத்தொகுப்பாளர் கவனத்தில்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான கருதுகோள் அல்லது முன்நோக்குப் பார்வை என்பது, பார்வையாளர்களின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது. எந்தக் குறிப்பிட்ட தருணத்திலும் பார்வையாளர்கள், எந்தச் சிந்தனையோட்டத்தில் இருக்கப்போகிறார்கள்? அவர்கள் எதைப் பார்க்கப்போகிறார்கள்? அவர்கள் எதைப் பற்றிச் சிந்திக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அதைப் பற்றிச் சிந்திக்க அவர்களுக்கு என்ன தேவை? மற்றும், நிச்சயமாக, அவர்கள் என்ன உணர்வை அடையவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? இதை நீங்கள் மனதில் வைத்திருந்தால் (இது மந்திரவாதியின் முன்நோக்கு பார்வை), நீங்களும் ஒரு வகையான மந்திரவாதியே! இங்கு சொல்லப்பட்டிருப்பது அமானுஷ்யமான மந்திரவாதி, அல்லது மாய மந்திரம் அறிந்த ஒரு மந்திரவாதியின் அற்புதச் செயல் போன்றது அல்ல, ஒரு மேஜிக் கலைஞன் போல, அன்றாடம், வேலைசெய்யும் ஒரு மேஜிக் மேன் போன்றது இது.

ஹெளதினியின்(மேஜிக் மேன்) வேலை, அதிசயமான ஒரு உணர்வை உருவாக்குவது, அவர் உங்களை இங்கே (வலதுபுறமாக) பார்க்க விடவில்லை, ஏனெனில் அங்குதான் அவர் பிணைக்கப்பட்ட தனது கைச்சங்கிலிகளை அவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், எனவேதான், அவர் உங்களது பார்வையை அங்கே (இடதுபுறமாக) வைத்திருக்கக்கூடிய ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார். மந்திரவாதிகள் (மேஜிக்மேன்கள்) சொல்வதுபோல, அவர் உங்களைத் தவறாக வழிநடத்துகிறார். அவர் விரும்பியதுபோலவே, உங்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேரின் கவனத்தைத் திசைதிருப்பி வேறொரு பக்கமாகப் பார்க்கவைக்கும் அதே நேரத்தில், மறுபக்கம் தன்னுடைய காரியத்தை அவர் கச்சிதமாக நிறைவேற்றிக்கொண்டிருந்தார். ஒரு படத்தொகுப்பாளரும் அதேபோலச் செய்யமுடியும் மற்றும் அவ்வாறு செய்திருக்கிறார்கள் – மற்றும் அதைச் செய்ய வேண்டும்.

ஒரு படத்தொகுப்பாளராக நீங்கள் சில நேரங்களில், காட்சி சார்ந்த விவரங்களில் சிக்கிக்கொண்டிருக்கும்பொழுது, பார்வைக் கண்ணோட்டத்தின் தடத்தை தவறவிட நேரிடும். அதுபோல் எனக்கும் நிகழும், ஏனெனில், நான் எடிட் செய்கிறபொழுது, அந்தக் காட்சிகளை ஒரு தியேட்டரின் திரையளவிற்குப் பெரிதாகப் பார்க்காமல், எடிட்டிங் அறையில் இருக்கும் மினியேச்சராகக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன். நாம் படத்தொகுப்பு செய்கிற படம் இறுதியில் அந்தத் திரையரங்கில்தான் வெளியாகப்போகிறது என்பதை மறந்துவிட்டு, சிறு மினியேச்சரில், சின்ன உருவங்களாகக் காட்சிகளைப் பார்த்து எடிட் செய்கையில், பார்வையாளர்களின் நிலையிலிருந்து அந்தப் படத்தைப் பார்க்கும் மனநிலையைத் தவறவிடுகிறோம். இதில் சரியான பார்வைக் கண்ணோட்டத்தை விரைவாக மீட்டெடுக்கும் ஒன்று, உங்களை மிகச்சிறியதாகவும், திரையை மிகப் பெரியதாகவும் கற்பனை செய்து, மக்கள் கூட்டம் நிறைந்த ஆயிரம் இருக்கைகள் கொண்ட திரையரங்கில் நீங்கள், முடிக்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்க்கிறீர்கள் என்று மனதில் உருவகம் செய்துகொள்கிறீர்கள், மேலும் இந்த இடத்தில் படம் மேற்கொண்டு திருத்தங்கள் செய்கிற நிலையைக் கடந்துவிட்ட ஒன்று, பிழைதிருத்தம் என்ற சாத்தியத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இப்போதும் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால், அது பரவாயில்லை. இல்லையென்றால், அது என்னவாகயிருந்தாலும், அந்தச் சிக்கல்களை எப்படிச் சரிசெய்வது என்பது பற்றிய சிறந்த யோசனைகள் உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். எனவே, அந்தத் திருத்தங்களை இப்போதே மேற்கொள்ளுங்கள். இப்படித்தான் நான் பார்வையாளர்களின் இடத்திலிருந்து காட்சிகளை முன்கூட்டிய பார்க்கிற மனநிலையில் வேலை செய்கிறேன். இந்த முன்னோக்கு நிலையை அடைய எனக்கு உதவும் சிறந்த தந்திரங்களில் ஒன்று, சிறிய காகித பொம்மைகளை வெட்டி – ஒரு ஆண் மற்றும் பெண் பொம்மை – எடிட்டிங் திரையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றை வைப்பது: பொம்மைகளின் அளவு (சில இஞ்ச் உயரம் கொண்ட பொம்மைகள்) விகிதாசார அளவில் திரையில் முப்பது அடி அகலம் இருப்பது போல் தோன்றும்.


சட்டகத்தின் விளிம்பைச் சுற்றிப் பார்த்தல்

ஒரு குறிப்பிட்ட ஷாட், எந்தச் சூழ்நிலையில் படமாக்கப்பட்டது என்பதை அறியாமல், அத்திரைப்பட உருவாக்கத்தில் பணிபுரியும் ஒரு சிலருள் படத்தொகுப்பாளரும் ஒருவர் (அல்லது அதை அறிந்துகொள்ளாமல் இருக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளார்), மற்றும் அதே நேரத்தில் அந்நபரே அப்படத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கூடியவராகவும் இருக்கிறார்.

ஒரு திரைப்பட உருவாக்கத்தில் பணிபுரியும் ஒரு சிலருக்கு, அந்த ஷாட் எப்போது, எப்படி எந்தச் சூழ்நிலையில் எடுக்கப்பட்டது என்பது தெரியாது. குறிப்பாக படத்தொகுப்பாளரின் வேலையானது படப்பிடிப்புக் காலம் முடிந்து, பின் – தயாரிப்புப் பணிகளில்தான் ஆரம்பமாகிறது என்பதால், அவருக்கு படப்பிடிப்புத் தளத்தில் ஒரு ஷாட் எத்தகைய சூழலுக்கு மத்தியில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதேவேளையில் ஒரு திரைப்பட உருவாக்கத்தில் மிக முக்கியமான பணியில் ஈடுபட்டு, அப்படத்தைமுடித்துக்கொடுக்கவேண்டிய இறுதிக்கட்ட வேலை, படத்தொகுப்பாளரின் கைகளுக்கே வருகின்றன. எனவே, அவர் படப்பிடிப்பில் காட்சிகள் எப்படிப் படமாக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்துகொள்ளாமல் இருப்பது, ஒருவகையில் நல்லது.
இல்லையெனில், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர்கள் போன்றவர்களைப் போலவே, படத்தொகுப்பாளரான நீங்களும், பெரும்பான்மையான நேரங்களில் அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து, அதுசார்ந்தே சுற்றிக்கொண்டிருந்தால், கர்ப்ப காலம் (சூழ்கொண்டிருக்கும் பருவம்) மற்றும் பிரசவத்தின் சில தருணங்களில் அந்தக் குரூரமான நடைமுறைகளில் நீங்கள் சிக்கிக்கொள்ள நேரிடும். பின்னர் நீங்கள் அந்தத் தினசரி ஃபுட்டேஜ்களைப் பார்க்கும்பொழுது, உங்கள் மனதின் பார்வையில், அந்தச் சட்டகத்தின் விளிம்பைச் சுற்றிப் பார்த்து உங்களால் உதவ முடியாது – உண்மையில் அந்தக் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டதைத் தாண்டி, உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நீங்கள் எல்லாவற்றையும் கற்பனை செய்துபார்க்க வேண்டும்.

நீங்கள் படப்பிடிப்புத் தளங்களில் அந்தக் காட்சி எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நேரடியாகவேப் பார்த்துப் பழக்கப்பட்டிருந்தால், அதே காட்சி படத்தொகுப்பாளர் என்ற முறையில் உங்களிடம் வருகிறபொழுது, அந்தக் குறிப்பிட்ட காட்சி படம்பிடிக்கப்பட்ட எல்லைக்குள்ளிருந்து மட்டுமே சிந்திக்க நேரிடும். இன்னும் சில நேரங்களில் அந்தக் காட்சி மிகுந்த சிரமங்களுக்கு இடையிலும், மிகப்பெரிய இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும், பல பிரச்சினைகளைக் கடந்து படம்பிடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் கஷ்டப்பட்ட அளவிற்கு, அந்தக் காட்சி சிறந்தவொன்றாக பரிணமிக்காமலும் போயிருக்கலாம். நீங்கள் படப்பிடிப்புத் தளத்தில் இல்லாவிட்டால், இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, நீங்கள் அந்த ஃபுட்டேஜ்களை மட்டும் பார்த்து சிறந்த காட்சிகளை ஒருங்கிணைத்துப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். காட்சியின் ஒரு பரிமாணம் மட்டுமே கிடைக்கும். நல்வாய்ப்பாக, படத்தொகுப்பாளர் படப்பிடிப்புத் தளங்களில் இருக்கவேண்டியதில்லை என்பதால், படத்தொகுப்பின்பொழுது ஒரு காட்சி சார்ந்து, அந்தச் சட்டகத்தின் விளிம்பைத்தாண்டியும், உங்களால் கற்பனை செய்ய முடிகிறது.மேலும், படப்பிடிப்புக் காலம் என்பது கர்ப்பகாலம் போன்றது. படப்பிடிப்பு முடிந்து உடனே படத்தொகுப்பிற்கு வருவதென்பது, கர்ப்ப காலத்திற்கும் பிரசவத்திற்கும் போதிய கால இடைவெளி கொடுக்காமல் உடனே வருதல். படப்பிடிப்புத் தளத்தில் இருக்கவேண்டிய இயக்குனர்கள், அந்த கர்ப்பகாலப் பொழுதுகளை, அதாவது படப்பிடிப்புக் கால நினைவுகளை சுமந்தபடியே படத்தொகுப்பு அறைக்குள் நுழைவார்கள். இதனால், அவர்களுக்கு எது சரியான காட்சி போன்ற முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றங்கள் இருக்கும். அதுவே படத்தொகுப்பாளரான நீங்கள், படப்பிடிப்புத் தளத்தில் இல்லாத காரணத்தினால், அத்தகைய சிக்கல்களுக்குள் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை.

”அந்த ஷாட்டைப் பெற நாங்கள் நரக வேதனையடைந்தோம், மிகக் கடுமையாக வேலை செய்தோம், எனவே அது படத்தில் இடம்பெற வேண்டும்.” நீங்கள் (இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு இயக்குனராகயிருந்தால்), உங்களுக்குக் கிடைத்திருக்கிற ஷாட்கள்தான், உங்களுக்குத் தேவையான (வேண்டிய) ஷாட்கள் என்று உறுதியாக நம்பிக்கொள்கிறீர்கள், ஏனெனில், அந்த ஷாட்டைப் பெறுவதற்கு அதிக பணம், நேரம் மற்றும் தாங்கமுடியாத துன்ப உணர்வுகளைச் செலவழித்திருக்கிறீர்கள், எனவே, அந்தக் கோணத்திலிருந்து பார்த்து, உங்களை நீங்களே கட்டாயப்படுத்தி, அந்த ஷாட்களை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


அதேபோல, நீங்கள் விரும்பாத ஒன்றைப் படம்பிடிக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் படப்பிடிப்புத்தளங்களில் ஏற்படுவதுண்டு, அங்கு எல்லோருமே ஒருவிதமான மோசமான மனநிலையில் இருக்கும்பொழுது, நீங்கள் அந்த எதிர்ப்பின் கீழ் கூறுகிறீர்கள்: ”சரி, நானே இதைச் செய்கிறேன், இந்த காட்சியை நாம் க்ளோஸ் அப் ஷாட்டாக எடுப்போம், பின்பு அதைச்சுற்றிக் கட்டுவோம் (மறைத்துவிடுவோம்).” பின்னர், எடுத்த அந்த ஷாட்டை நீங்கள் பார்க்கும்பொழுது, ஒருவித வெறுக்கத்தக்க மனநிலையில் அந்தக் காட்சியைப் படம்பிடித்ததுதான் உங்கள் நினைவில் இருக்கும், ஒருவேளை அந்த ஷாட் நன்றாகவே வந்திருக்கலாம், அல்லது அந்த ஷாட்டை வேறு ஒரு சூழலுக்குப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கலாம், அல்லது தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக அந்த மனைநிலையிலிருந்து விடுபடாமல், அந்த ஷாட்டைப் படத்தில் பயன்படுத்தச்சொல்லலாம். அந்த ஷாட் எடுக்கப்பட்ட எதிர்ப்பு மனநிலையிலேயே நீங்கள் இருப்பதால், வேறுபட்ட சூழலுக்கு அது கொண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கு, நீங்கள் கண்மூடித்தனமான முடிவுகளில் இருப்பீர்கள்.

மறுபுறம், படத்தொகுப்பாளர், பார்வையாளர்களைப் போன்றே திரையில் இருப்பதை மட்டுமே பார்க்க முயற்சிக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு இயக்குனர் படப்பிடிப்புத் தளத்தில் கஷ்டப்பட்டது எல்லாம் ஒரு பொருட்டல்ல. திரையில் என்ன தோன்றுகிறது, அதிலிருந்து என்ன உணர்வு கிடைக்கிறது என்பதை மட்டுமே கவனிப்பார்கள். அதுபோலவே, படத்தொகுப்பாளரும் செயல்பட முயற்சிக்க வேண்டும். பார்வையாளர்கள் விரும்புவதுபோன்று, திரையில் என்ன தோன்றுகிறது என்பதை மட்டுமே படத்தொகுப்பாளர் பார்க்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே, பிம்பங்களை (ஷாட்களை/ காட்சிகளை) அவற்றின் உருவாக்கத்தின்பொழுது இருந்த சூழ்நிலையிலிருந்து விடுவிக்க முடியும். திரையில் கவனம் செலுத்துவதன்மூலம், இயக்குனர் உட்பட படப்பிடிப்புக் குழுவினர் எத்தகைய கொடுஞ்சூழலுக்கு மத்தியில் அந்த ஷாட்களை எடுத்திருந்தாலும், படத்தொகுப்பாளர், நம்பிக்கையுடன், உபயோகப்படுத்த வேண்டிய தருணங்களை (ஷாட்களை/ காட்சித்தருணங்களை) உபயோகிப்பார். அதேபோல, மிகப்பெரிய அளவிலான பணமும், பயங்கரமான வலியையும் செலவழித்திருந்தாலும், நிராகரிக்கப்பட வேண்டிய தருணங்கள் (ஷாட்கள்) நிராகரிக்கப்படும்,

ஒரு குறிப்பிட்ட வகையான புத்துணர்வை பாதுகாக்க நான் வலியுறுத்துவதாக நினைக்கிறேன். படப்பிடிப்பின் நிலைமைகளுக்குள் உங்களைப் பொருத்திக்கொள்ள தேவையின்றி அனுமதிக்காதீர்கள். என்ன நடக்கிறது என்பதைத் தொடர முயற்சியுங்கள் ஆனால், எதெல்லாம் சாத்தியம் என்று முடிந்தவரை அதைப்பற்றிய குறிப்பிட்ட அறிவைப் பெற முயலுங்கள், ஏனெனில், இறுதியில் பார்வையாளர்களுக்கு இது பற்றி எதுவுமே தெரியாது – மேலும் பார்வையாளர்களைப் பொறுத்தவரை நீங்கள்தான் பொது அதிகாரி. அல்லது ombudsman (ஒரு நிறுவனம் அல்லது அமைப்புக்கு எதிராக தனிநபர்களின் புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி, குறிப்பாக ஒரு பொதுஅதிகாரம்).

நிச்சயமாக, இயக்குனர், படப்பிடிப்புன்பொழுது நிகழ்ந்த எல்லாவற்றையும் நன்கு அறிந்தவர், எனவே அவர்தான் இந்த உபரி(மிகை, படப்பிடிப்பின் பொழுது நிகழ்ந்தவற்றை மனதிலேயே சுமந்திருக்கக்கூடியவர்), சட்டகத்திற்கு அப்பாற்பட்ட தகவல்களைப் பெறுவதற்கு மிகவும் சுமையாக இருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைவதற்கும், படத்தொகுப்பில் முதல் வெட்டு(கட்) முடிவடைவதற்கு முன்பும் என, இவ்விரு தருணங்களுக்கும் இடையிலான கால இடைவெளியில், இயக்குனருக்கு (மற்றும் அந்த திரைப்படத்திற்கும்)நிகழக்கூடிய மிகச்சிறந்த விஷயங்கள் என்னவென்றால், அவர் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு இரண்டு வார கால அளவிற்கு அவர் எங்காவது சென்று மறைந்துவிட வேண்டும் – மலைகளுக்கு மேல், அல்லது கடலுக்கு உள் அல்லது செவ்வாய் கிரகத்திற்கு வெளியே அல்லது வேறெங்காவது சென்று – இந்த உபரியை (படப்பிடிப்பின் பொழுது நிகழ்ந்தவற்றை மனதில் சுமந்திருப்பதை) வெளியேற்ற முயற்சிக்க வேண்டும்.


அவர் எங்கு சென்றாலும், அந்தத் திரைப்படத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத விஷயங்களைப் பற்றி மட்டுமே முடிந்தவரை சிந்திக்க முயற்சிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் நீங்கள் எங்கு சென்றாலும் படம் குறித்து எதையும் சிந்திக்கக்கூடாது. அப்படத்தின் இயக்குனராக இருக்கிற உங்களுக்கு இது கடினமான செயல்தான். ஆனால், படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்பிற்கு இடையே ஒரு வேலியை, ஒரு செல்லுலார் (மென் திரை) சுவரைஎழுப்புவது அவசியம். ஃப்ரெட் ஜின்னாமென் (Fred Zinnemann) படப்பிடிப்பு முடிந்தவுடன், ஆல்ப்ஸ் மலைச்சிகரங்களில் ஏறுவதற்காகச் சென்றுவிடுவார், அவர் அங்கு உயிருக்கு ஆபத்தான மலையேற்றங்களில், அத்தகு சூழலுக்கு மத்தியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். மாறாக, படத்தின் பிரச்சினைகளைப் பற்றி பகல் கனவு கண்டுகொண்டிருக்க மாட்டார்.

பின்னர், சிலவாரங்களுக்குப் பிறகு, அவர் ஆல்ப்ஸிலிருந்து இறங்கி, நிலத்திற்கு வருவார்; தனியாக, ஒரு இருள் அறையில் அமர்ந்துகொள்வார், வில் வடிவ விளக்கு எரியும், பின்பு அவர் தன் படத்தைப் பார்ப்பார். அவர் இன்னும் இயல்பாகவே, (ஒரு இயக்குனரால் படப்பிடிப்புக் காலத்தை முழுமையாக மறந்துவிட முடியாது என்றாலும்) அந்தப் பிம்பங்களைச் சட்டகத்தின் விளிம்பிற்கு அப்பாலிருந்து பார்ப்பார். அதுவே, அவர் படப்பிடிப்பு முடிந்து மறுகணமே, எவ்வித இடைவெளியும் இல்லாமல், நேராக படத்தொகுப்பிற்காகச் சென்றிருந்தால், எழும் குழப்பங்கள் இன்னும் மோசமானதாக இருந்திருக்கும், மேலும் அவர் படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்பு என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனைச் செயல்முறைகளை மாற்றமுடியாமல், ஒன்றோடொன்று கலந்திருக்கக்கூடும்.
இந்தத் தடையை இயக்குனர் எனும் முறையில், தனக்குத் தானே அமைத்துக்கொள்ள உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். இதனால் அவர் முதலில் படத்தைப் பார்க்கும்பொழுது, ”சரி, இந்தப் படத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று பாசாங்கு செய்யப்போகிறேன். இந்தக் காட்சிகள் சிறந்த படமாக உருவாக, அதற்குச் சில வேலைகளைச் செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும்?” என்ற நிலையிலிருந்து படத்தொகுப்பில் ஈடுபடத் துவங்குவார்.

எனவே, நீங்கள் விரும்புவதிலிருந்தும் (உங்களுக்கு வேண்டியவைகளிலிருந்தும்), உண்மையில் நீங்கள் காட்சிகளாகப் பெற்றவற்றிலிருந்தும், பிரித்துக்கொள்ள உங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறீர்கள், ஆனால் அதேவேளையில் படத்திற்கான உங்கள் தலையாய கனவுகளை (உயர்ந்த இலக்கு) ஒருபோதும் கைவிடாதீர்கள். ஆம், திரையில் உண்மையில்/யதார்த்தத்தில் இருப்பது என்ன? (காட்சியின் இயல்பான உண்மைத் தன்மை) என்பதைக் காண, முடிந்தவரை நீங்கள் கடினமாக முயற்சி செய்கிறீர்கள்.

- தொடரும்