வரலாறு.... கலாச்சாரம்.... சினிமா....


ஆஸ்திரேலிய மண்ணில் 1788-ம் ஆண்டு காப்டன் ஆர்தர் பிலிப் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடியை ஏற்றினார். அந்த சமயத்தில் அங்கு ஆஸ்திரேலிய பழங்குடியினர் (Aborigines) என அழைக்கப்படும் பூர்வ குடியினர் சுமார் 3 லட்சம் பேர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அங்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருபவர்கள். பிரிட்டனின் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து வந்த நூறு ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாட்டவரும் ஆஸ்திரேலியாவில் குடியேறத் தொடங்கினர். அரசாங்கம் அமைத்து ஆளத் தொடங்கினர். சட்டங்கள் பல இயற்றப்பட்டன. அவை ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு ஏற்கனவே இங்கு வாழ்ந்து வந்த பழங்குடியினரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தன.

பழங்குடியினருக்கெதிராக தொடர்ந்த அடக்குமுறைகளும் ஒடுக்குதல்களும் அவர்களை இத்தகைய அநீதியான நிலைமைகளுக்கெதிராக கிளர்ந்தெழ வைத்தது. 1938 ஜனவரி 26 அன்று பழங்குடியினரின் முதல் போராட்டம் வெடித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பின் 1967-ல் தான் கிட்டத்தட்ட 29ஆண்டுகளுக்குப் பின்னர் – அவர்களை ஆஸ்திரேலிய குடிமக்களாக அறிவித்து ஓட்டுரிமையையும் வழங்கியது., வெள்ளை ஆஸ்திரேலிய அரசு.
பல்வேறு மொழி, வரலாறு, கலாச்சாரம், கொண்ட- 500க்கும் மேற்பட்ட பழங்குடி சமூகங்கள் தற்போது அங்கு உள்ளன. ஆஸ்திரேலியாவின் தற்போதைய ஜனத்தொகையில் இவர்கள் 2 சதவீதமாக உள்ளனர்.

எழுபதுகளின் இறுதியின் அவர்களது வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தான் ஆஸ்திரேலியர்கள் மனதை ஆக்கிரமித்திருந்தது. புதிய விஷயங்களை கண்டுபிடிப்பதற்காக ஆவணங்களையும் புகைப்பட தொகுப்புகளையும் நூலகங்களையும் கிளறியபோது கறுப்பினத்தவர் வெள்ளையர் உறவு வெளிச்சத்துக்கு வந்தது. யுரேனிய சுரங்கங்களை பற்றி ஆராய்ந்தவர்களும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை ஆராய்ந்தவர்களும் கடைசியில் சந்தித்த கேள்வி நில உரிமை பற்றியதுதான். வெளிநாடுகளுடனான போர்கள் குறித்து ஆராய்ந்தவர்கள் அப்போர்களில் கறுப்பினத்தவரின் பெரிய பங்களிப்பை அறிய நேர்ந்தது. இந்த வரலாறுகள் ஏற்கனவே கறுப்பினத்தவருக்கு தெரிந்திருந்தாலும் காலனியாதிக்க வழி வந்த வெள்ளையர்களின் பார்வையில்தான் படாமல் போயிருந்தன.

இத்தகைய புதிய வரலாற்று உண்மைகளுக்குப் பின் திரைப்படங்களிலும் தொலைகாட்சியிலும் புதிய பிம்பங்கள் தோன்ற ஆரம்பித்தன. பழங்குடியினர் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள திரைப்படத்தை சிறந்ததொரு சாதனமாக கண்டு கொண்டதோடு மட்டுமல்லாமல் அதில் தங்களுக்கேயான புதிய பாணி ஒன்றையும் தோற்றுவித்தனர்.

சமீபத்தில் இந்தியாவிலுள்ள ஆறு நகரங்களில் இந்த பழங்குடியினர் படங்கள் காட்டப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ஆஸ்திரலிய தூதரகமும் பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவினர் ஆய்வகமும் (AIATSIS) –ம் சேர்ந்து நடத்தியது. இந்நிகழ்ச்சிக்காக மைக்கேல் லீயும் (இவர் இவ்வாய்வகத்தின் திரைப்பட ஆவணக்காப்பாளர் மட்டுமல்லாது பழங்குடியினரின் இறையாண்மைக்காக முழு மூச்சாக போராடி வருபவர்) மற்றும் லிஸ் மெக்நிவன் (இவர் ஒரு ஓவியர், கவிஞர் வீடியோ படத்தயாரிப்பாளர், இதற்கும் மேலாக இவரும் பழங்குடியினர் வழியில் வடமேற்கு குயின்ஸ் லாந்தில் பாரோ ஆற்றுப் பகுதியை சார்ந்த புஜித இன பெண்ணுமாவார்) சென்னைக்கு வந்திருந்தனர் இவர்களை தி.கல்யாணராமன் சந்தித்து உரையாடிதன் சில பகுதிகள்....

ஆஸ்திரேலியாவில் சட்டரீதியாகவும், நடைமுறையிலும், பழங்குடியினரின் நிலை தற்போது எப்படி உள்ளது?
லிஸ் மக்நிவன்: ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையான பழங்குடியினர் நிலமற்றவர்களே! வடக்கு பகுதியில் மட்டுமே அவர்களுக்கு சில உரிமைச்சட்டம் உள்ளது. இதுமட்டும் தான் இதுவரையில் பார்த்ததில் சிறந்த விஷயம். ஆனாலும் கூட இந்த நில உரிமை அடிப்படை உரிமை சட்டகத்தின் கீழ் வராததினால், அது எந்நேரமும் மாற்றப்படலாம். திருத்தப்படலாம். ஏன் தூக்கியெறியவும் படலாம். நாங்கள் வேண்டுவதெல்லாம் ஆஸ்திரேலியா முழுவதின் மேல் எங்களுக்கிருக்கும் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தான்! என்னை போன்ற சிலர், இந்த இறையாண்மை சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டியது குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதுதான் எங்கள் நிலங்கள் பற்றிய இன்றைய நிலை
கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், ஒரு துறையில் வல்லுநராகும் வாய்ப்புகள் இவையெல்லாம் எந்நிலையில் உள்ளது?


லி.ம: இன்று பழங்குடியினரின் நிலை அதலபாதாளத்தில் உள்ளது. அவர்கள் ஆஸ்திரேலிய சமூகத்தில் உள்ள பிறரைப்போல கல்வியறிவு பெறுவதில்லை. மேலும் பழங்குடியினர்கள் மற்றெல்லாறையும் விட அதிக வேலை வாய்ப்பற்றவர்களாக உள்ளனர். இவர்கள் தான் உலகிலேயே அதிக சிறைப்படுத்தப்பட்ட இனமாக உள்ளனர்.


வேலைவாய்ப்புகளை பொறுத்த அளவில் பழங்குடியினர் கல்வியறிவு பெற்று, வெள்ளையர்களுக்கு சமமான பட்டங்களையும் பெற்றுவிட்டால் , அவர்களுக்கு சட்டப்படி இல்லையென்றாலும் நடைமுறையில் பாகுபாடு காட்டப்படுமா?

லி.ம: பழங்குடியினர் கல்வியறிவு பெற்றால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உண்டு. பிரச்சனை என்னவெனில் கடந்த பத்தாண்டுகளாகத்தான் அவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அக்கல்வியை கூட மிகக்குறைந்த சதவீத பழங்குடியினர் மட்டுமே பெறமுடிகிறது.

ஒரு பெண் என்கிற முறையில் பெண்களுக்கெதிரான பாரபட்சம் காண்பிக்கப்படுவதை நீங்கள் காண முடிகிறதா?
லி.ம: இந்த உலகம் முழுவதிலும் பெண்கள் பாரபட்சமாகத் தான் நடத்தப்படுகிறார்கள். காரணம் இது ஆண்களின் உலகம். பெண்களாகிய நாங்கள் இதில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். என் அபிப்ராயத்தில் பழங்குடிப் பெண்கள் அவர்கள் சமூகத்தில் அதிக வலிமையானவர்கள் இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குக் கூட பழங்குடி ஆண்கள் நிறைய ஆதரவு தருகிறார்கள்.

பழங்குடியினரின் பிரச்சனைகளை கவனிப்பதற்கென்று பிரத்யேக நிறுவனங்கள் ஏதும் உண்டா?
லி.ம: எண்பதுகளில் பழங்குடியினரின் அமைப்புகள் நிறைய தோன்றியதோடு அவர்கள் அரசாங்க பண உதவிக்காகவும் முயற்சித்தார்கள். பழங்குடியினருக்கான மருத்துவ உதவிகள், சட்டப் பணிகள், குழந்தை பராமரிப்பு பணிகள், வீட்டுவசதி பணிகள், தொடர்பு சாதன பணிகள், இப்படி இவைகள் மட்டுமில்லாமல், பழங்குடியினரே முன்வந்து நிறைய நிறுவனங்களையும் தோற்றுவித்தனர்.

சட்ட துறையை எடுத்துக் கொண்டால் பழங்குடிகள் நீதிபதிகளாக உள்ளனரா?

மைக்கேல் லீ: ஒரே ஒருவர் உள்ளார்

உச்ச நீதிமன்றத்திலா?
மைக்கேல் லீ: இல்லை நியூ செளத் வேல்ஸில் உள்ள மாஜிஸ்ட்ரேட்டு நீதிமன்றத்தில் தான்.

இப்படிப்பட்ட பாரபட்சமான சூழலில் நீங்கள் கடந்து வந்த திரைப்படத்துறை எப்படி உள்ளது?

மைக்கேல் லீ: திரைப்படத்துறையில் பாரபட்சம் என்பதே இல்லை. பழங்குடியினருகு ஆதரவு கொடுக்க வேண்டும் என மற்றவர்கள் தீர்மானிக்கும் முன்பே, இயக்குநர்கள் அதைச்செய்ய தொடங்கிவிட்டனர். இதற்குக்காரணம் பெண் நிலைவாதத்தில் அவர்களுக்கிருந்த ஈடுபாடும், இயக்குநரை மையமாக கொண்ட அல்லது ‘ஆதர்’ தியரியை மையமாக கொண்ட திரைப்பட வழிமுறைகளில் அவர்களுக்கிருந்த கருத்து வேறுபாடும்தான்!
சென்ற இரவு நீங்கள் பார்த்த “மை சர்வைவல் ஆஸ் அன் அபாரிஜின்” படம் முதன்முதலாக பழங்குடி ஒருவரால் 1972 இயக்கப்பட்டது. அந்த சமயத்தில் மார்த்தா அன்சாரா என்ற வெள்ளை பெண் ஒளிப்பதிவாளர் இருந்தார். அவர் பல சொந்த படங்களை இயக்கியதோடு, பழங்குடியினரின் தயாரிப்புகளிலும் பங்கெடுத்துக் கொண்டார். இதுதான் அப்போது சிட்னி பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவில் இருந்தவர்களின் நடைமுறையாக இருந்தது. அந்த கூட்டமைப்பு தற்போது இல்லை.

லி.ம: இந்தப்பழங்குடியினர் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் 2 சதவீதமாக இருப்பதால், திரைப்படத்தின் சக்தியை நன்கு அறிந்திருந்தார்கள். எனது மக்கள் தங்கள் குரல்களை கேட்பதற்கு, மக்கள் தொடர்பு சாதனங்கள் ஒரு வழியாக இருந்தன. நாங்கள் சிறுபான்மையாய் இருந்தாலும், தொலைக்காட்சியின் மூலம் எங்களால் தகவல்கள் பரிமாற முடிந்தால், ஏற்கனவே எங்கள் மேல் படிந்திருக்கும் தவறான பிம்பங்களை உடைக்க முடியும். ‘நாங்கள் உங்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை’ என ஆஸ்திரேலிய மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

மைக்கேல் லீ: உலகிலேயே நாங்கள் ஒருவர்தான் வர்த்தக தொலைக்கட்சி அனுமதி வாங்கி வைத்துள்ளவர்கள். அது மட்டுமல்லாமல் மிக உயர்ந்த தரத்தில் வீடியோ படங்களை எடுக்கும் மத்திய ஆஸ்திரேலிய பழங்குடியினர் தொடர்பு சாதனக் கழகம் உள்ளது. தேசிய ஒலிபரப்பாளர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் ஆகியவை பழங்குடியினரைப் பற்றி நிகழ்ச்சிகளை தயாரிக்க ஒரு தனிப்பிரிவு வைத்துள்ளது.
சிறப்பு ஒளிபரப்பு அமைப்பு, பழங்குடியினர் குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதோடு, இந்த ஆண்டு நான்கு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக , தலைமை நிர்வாகியாக ஒரு பழங்குடியினரை நியமித்துள்ளது.

லி.ம: இந்த ஆண்டு ஜனவரி 27-ல் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. பழங்குடியினர் தங்கள் எதிர்ப்பைக்காட்டும் விதமாக பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர். அப்போது குறைந்தது 5 வானொலி நிலையத்தார் அந்த மறியலை பதிவு செய்ததோடு, தங்கள் சொந்த சமூகத்தை சார்ந்தவர்கள் பேட்டியும் எடுத்தார்கள். அங்கே ABC பழங்குடியினர் பிரிவும் வந்திருந்தது. தேசிய ஒலிபரப்புத்துறையின் பழங்குடியினர் பிரிவு நடந்தவைகள் முழுவதையும் பதிவு செய்து கொண்டிருந்தது. வெளிநாட்டு மற்றும் வெள்ளையர்களின் நிறுவனங்களும் வந்திருந்தன. பழங்குடியினருக்காக ஏராளமான தொடர்பு சாதனங்கள் வந்துவிட்டதாக எனக்குள் நான்நினைத்துக் கொண்டேன். இந்தச் சாதனங்கள் மூலம் செய்தியானது நேரடியாக அவர்களைச் சென்றடைந்தது. அதே சமயம் வெள்ளையர்களின் தொடர்பு சாதனங்களும் கண்ணியமாகவே நடந்து கொண்டன.

எவ்வளவு பத்திரிகைகள் இம்மாதிரியான பழங்குடியினர் சார்ந்த பார்வை கொண்டது?

லி.ம: இப்போது கூரி மெயில், லாண்ட் ரைட் சியூஸ் என்ற இரு பத்திரிக்கைகள் இருக்கின்றன. கடந்த காலத்தில் இதுமாதிரியாக நிறைய பத்திரிகைகள் இருந்தன.
மைக்கேல் லீ: எலக்ட்ரானிக் தொடர்பு சாதனங்கள் வந்தபின் பழங்குடியினர் கதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஏனெனில் அவர்களது அடிப்படையில் வாய்மொழி சமுதாயமாதலால், எலக்ட்ரானிக் சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. அதுமட்டுமில்லாமல் நிறைய பழங்குடியினருக்கும் இன்னும் எழுத படிக்கக் கூட தெரியாது. எங்களுக்கு கல்வியறிவின்மை மிகவும் மோசமான பிரச்சனையாக நாடு முழுவதும் உள்ளது. மொத்தத்தில் பதினாறு சதவிகித பழங்குடியினர் கல்வியறிவு பெறாதவர்களே!

வெள்ளையர்களின் கல்வியறிவு எத்தனை சதவிதம்!

மைக்கேல் லீ: என்னால் உறுதியாக சொல்ல முடியாது எனினும் அது கணிசமான அளவு குறைவே! (கல்வியறிவுயற்றவர்கள்) ஏனெனில் 1950-ல் தொடங்கி சுமார் 40 சதவீத மக்கட்தொகை இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் தான்! இங்கே கூலியாட்களாக இருப்பதற்காகவே அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். ஆகவே இவர்கள் பெரும்பான்மையோர்க்கு ஆங்கில மொழி அறிவு குறைவு., பழங்குடியினரில், சிறந்த எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள், பத்திரிக்கையாசிரியர்கள் கவிஞர்களெல்லாம் இருக்கிறார்கள். (லிஸ்ஸை சுட்டிக்காட்டி புன்னகைக்கிறார்)

லி.ம.: 1988-ல் பெங்குவின் நிறுவனம் ‘இன்சைட் பிளாக் ஆஸ்திரேலியா’ என்ற புத்தகத்தை வெளியிட்டது. அதற்காக நாற்பது பழங்குடி கவிஞர்களை கண்டுபிடிப்பதற்கு, அதன் பதிப்பாசிரியரான கெவின் கில்பர்ட்டுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.

மை.லீ: தற்போது பழங்குடிகளின் கலாச்சாரத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முன்னெப்போதையும் விட அவர்களுக்கு அதிக வள ஆதாரங்கள் கிடைக்கின்றன. சென்ற ஆண்டு “பிரான் நியு டே” எனும் இசைநாடகம் பார்த்தோம். கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது ரசிக்க கூடியது என்பது ஆஸ்திரேலிய நாடகத்தில் அக்கறையுள்ள அனைவரின் கருத்தாக இருந்தது.

லி.ம: சமமாக நடத்தப்படுவதற்கும் சமமான மரியாதை பெறுவதற்கும் வெள்ளையர்களை போல இரண்டு மடங்கு நல்லவர்களாக இருந்தாக வேண்டும் என எனது குழந்தை பருவத்தில் சொல்லப்பட்டது அது இன்னும் சொல்லப்படுவதை கேட்கிறேன். அதனால்தான் பழங்குடியினரால் இவ்வளவு ஒடுக்கப்பட்ட நிலைமைகளிலும் இவ்வளவு தூரம் முன்னேற முடிகிறதை நாங்கள் பார்க்கிறோம். பழங்குடியினர் மத்தியில் இப்போது இருப்பது போல எந்த புதிய முனைப்புகளும் தோன்றாத காலகட்டத்திலிருந்து வந்த இவான் கூலகாங் விம்பிள்டனுக்கு சென்று வெற்றியும் பெற்றிருக்கிறார். வெற்றி பெறுவதற்கு மட்டுமல்ல டென்னிஸ் மைதானத்தில் கால் வைப்பதற்கே அவர் தனக்கெதிராக இருந்த அனைத்து தடைகளையும் முறியடித்திருக்க வேண்டும். என்னுடைய வளர்ச்சியை நானே பார்க்கும்போதும் இவான் கூலகாங் போன்றோரை பார்க்கும்போதும் அது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. என்னாலும் செய்யமுடியும் என்பதை அறியும்போது அது எனக்கொரு புதிய பலத்தை கொடுக்கிறது.

படத்தயாரிப்பு பற்றி கூறுகையில் நீங்கள் சிட்னி படத்தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு கூறியதோடு அவர்கள் படங்களை கேள்வி கேட்க தொடங்கினார்கள் என்று நேற்றைய நிகழ்ச்சியில் கூறினீர்கள். அது திரைப்படங்களின் வடிவம் குறித்தா, உள்ளடக்கம் குறித்தா?

மை.லீ: திரைப்படம் என்பது ஒரு சமூக சொல்லாடல்; திரைப்படத்தில் உருவம் உள்ளடக்கம் மற்றும் சமூகத்தில் அதன் பங்கு இவைகள் குறித்துத்தான் கேள்விகள் எழுப்பப்பட்டன. அமெரிக்காவை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கிய வியட்நாம் போரிலிருந்து நாங்கள் விடுபட்டுக் கொண்டிருந்த போதுதான் இவைகளும் வந்தது. இப்போரினால் நாங்கள் இருமடங்கு பாதிப்புக்குள்ளானோம். அமெரிக்காவை போல நாங்கள் அதை தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. ஒவ்வொரு இரவும் அதை பார்த்தார்கள். எங்களைப்பொறுத்தவரை எங்களிடமிருந்து அகற்றப்பட்டிருந்த யுத்தம் இது. நாங்களும் போராட வேண்டும் என்பதை நானும் என் போன்ற பெரும்பாலானோரும் நினைக்க கூட இல்லை. நான் இந்த போரை எதிர்த்தேன். அதனால் விட்லம் லேபர் அரசாங்கம் எனக்கு பொதுமன்னிப்பு வழங்கும் வரை இந்தியாவில் தான் வசித்தேன். இதற்கான தகவலாதாரங்கள் அடைக்கப்பட்டு விட்டதால் இந்த போரில் எங்களுடைய பங்கு குறித்து ஆராய வேண்டுமென்று வலுவான கோரிக்கை எழுந்தது.

ஆகவே நாங்கள் ஆஸ்திரேலிய சமூகத்தை பொதுவில் மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தோம். கடந்த காலத்தில் பிரிட்டன் தான் எங்கள் வீடாக தாய் நாடாக இருந்தது. ஆனால் அறுபதுகளில் என்னையும் சேர்த்து பெரும்பாலானோர் ஆசியாவிற்கு வந்தோம். ஐரோப்பிய மொழிகளை தவிர்த்துவிட்டு ஆசிய மொழிகளை கற்று கொண்டோம் ஆகவே எங்கள் போக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. பள்ளிகளில் சொலித்தரப்படும் எங்களது ‘வெள்ளை’ வரலாற்றை மறுத்து நாங்கள் எங்களுடைய சொந்த வரலாற்றை பரிசீலனை செய்தோம். சமூக ரீதியான அனைத்தையும் கேள்வி கேட்பதென்பது அந்த காலகட்டத்தின் பொதுவான அம்சமாயிருந்தது. சமூகமே இப்படி புரட்சிகரமாக இருந்ததால் அது திரைப்பட துறைக்குள் வெளிப்பட்டது.

எப்போது இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.?

மைக்கேல் லீ: 1972ல் லேபர் அரசு ஆட்சிக்கு வந்தபின்.

திரைப்படத்தின் வடிவத்தை கேள்விகுள்ளாக்குவது என்பதை சற்று விவரிக்க முடியுமா? இந்த கூட்டமைப்பு எடுத்த டாக்குமெண்டரி படங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பள்ளியை சேர்ந்தனவா?

மைக்கேல் லீ: நாங்கள் ஒரேயொரு பள்ளியைத் தான் பின்பற்றினோம். அது கிரியர்சன் பள்ளி, எங்களது டாக்குமெண்டரி படங்கள் ஜான் கிரியர்சன்னால் தான் தோற்றுவிக்கப்பட்டது. இது நேரடியான உரையாகும் தன்மை மிக்க நாட்டின் மேம்பாட்டை பேசும் படங்களாகும். ஆனால் இது சமூக பிரச்சனைகளை அசட்டை செய்தது. எனவே சமூக பிரச்சனைகள் மேல் அக்கறை கொள்ளும் ஒரு போக்கு திருப்பம் ஏற்பட்டது. இதனால் நோக்கம் மாறியது. படமெடுக்கும் முறைகள் மாறின. இதன்படி தனி நபர்கள் படமெடுக்காமல் குழுக்கள் படமெடுக்க ஆரம்பித்தன. குழுக்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. ஒரு படம் ஒரு குறிப்பிட்ட பழங்குடி சமூகத்தைப் பற்றியதெனில் அச்சமூகத்தினருக்கு அப்படத்தை இயக்குவதில் பங்கு கொடுக்கப்பட்டது. அப்படங்களில் அவர்களின் குரலே வெளிப்பட்டது. பழங்குடிகள் இதை செய்தனர் என யாரோ ஒருவர் வர்ணனை அளிக்கும் யுக்திகள் மாறின. என்ன நடக்கிறதென்பதை நேரடியாகவே பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் எங்கள் நிறுவனம் படமெடுக்க ஆரம்பித்தது. இம்மாதிரியான படங்கள் சிந்தனைகளை தூண்டிவிட்டன. படமெடுக்கும் முறையும் மறைத்து வைக்கப்படவில்லை. இத்தகைய மாறுதல்கள் ஆஸ்திரேலியா முழுவதும் பொதுவானதாகிவிட்டது. பட இயக்குநரே பெரும்பாலான சமயங்களில் ஒளிப்பதிவாளராகவும் இருப்பார். படமெடுக்கும் முறைகுறித்து யாரேனும் கருத்து தெரிவித்தால் அதுவும்படத்துடன் இணைக்கப்பட்டுவிடுகிறது. இதிலிருக்கும் அபாயம் என்ன வெனில் ஒரு சாதாரண படத்தை எடுத்துவிட்டு அதில் இதுபோல ஏதாவது பேசி சேர்த்துவிட்டு பின் அதை சிந்தனைக்குரிய சிறந்தபடம் என்பது போல காட்டி விடலாம் என்பதுதான். இதன் மூலம் நீங்களும் உங்களை சித்தாந்த ரீதியில் சரி என காண்பித்து கொள்ளவும் கூடும். எங்கள் நிறுவனத்திலிருந்து ’வெய்ட்டிங் பார்ஹாரி’, எனும்மிக நல்ல படமொன்றை உருவாக்கினோம். அது தனது சிந்தனையை தூண்டும் முறைக்காக உலகம் முழுவதும் பல விருதுகளைப் பெற்றது.

நாங்களாகவே எந்தவொரு படத்தையும் எடுப்பதில்லை. ஏதாவதொரு பழங்குடி சமூகம் தங்களுடைய பிரச்சனையை முன்வைத்து படமெடுக்கும்படி கேட்டுக்கொள்ளும் . அதன்பின் எங்கள் தயாரிப்பாளர்கள் தங்கள் காமிரா சகிதமாக அந்த பழங்குடி சமூகத்தினர் பகுதியில் ஒரு அல்லது ஒன்றரையாண்டுகள்அவர்களுடன் தங்கி வாழ்வார்கள். போகும்போது எந்த வித திரைக்கதையையும் அவர்கள் எடுத்துச் செல்வதில்லை. எங்களுடைய எந்த படத்திற்குமே இதுவரை ஸ்கிரிப்ட் எழுதப்பட்டதில்லை. திரைக்க்தை எழுதி படிப்படியாக படமெடுத்ததே இல்லை. அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று என்ன பார்த்தார்களோ அதையே படம் பிடித்தார்கள். திரும்பி வரும்போது சுமார் 40 மணி நேர படச்சுருளை கொண்டுவருவார்கள். பின் அதை எடிட் செய்து பல படங்களை உருவாக்குவார்கள். படத்தயரிப்பில் இது மிகவும் கடினமான பகுதியாகும்


அதாவது புரட்சிகரமான படத்தயாரிப்பானது ஈடுபாடான படத்தயாரிப்பாக மாறினவா?

மை.லீ: ஆமாம் இது ஈடுபாட்டு தன்மையுள்ள படத்தயாரிப்பாகி விட்டது. பின்னர் இதுவே டாக்குமெண்டரி படங்களுக்கான நெறியாகவும் ஆகிவிட்டது. ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் எல்லா டாக்குமெண்டரி படங்களிலும் நீங்கள் இந்த யுக்திகளைப் பார்க்கலாம். மேலும் பழங்குடியினர் தாங்களும் படத்தயாரிப்பில் பங்குபெற வேண்டும். அவர்கள் படங்களில் வெறும் பொருட்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை.
இதுவரை ஒரு மையமான சிக்கலையும் அதையொட்டிய சிறு சிறு பிரச்சனைகளையும் தீர்த்துக்கொண்டு உச்சத்தை நெருங்கி படத்தை முடிப்பதுதான் வழக்கமாக இருந்தது. இப்போது கைவிடப்பட்டுவிட்டது. படமானது வாழ்க்கை எப்படியிருக்கிறதோ அதை அப்படியே காட்டுகிறது. ஆகவே பெரும்பான்மையான சமயம் எந்த முடிவும் சொல்லப்படுவதில்லை. உங்களுக்காக முடிவுகளைச் சொல்வதும் அவர்கள் வேலையில்லை.
ஆக டாக்குமென்டரி படங்களின் உருவம் முற்றிலுமாக மாறியிருந்தால் உலகத்தில் டாக்குமெண்டரி படங்களுக்கான எல்லா விருதுகளையும் கொஞ்சகாலத்திற்கு வென்றுக்கொண்டிருந்தோம். டாக்குமெண்டரி பட இயக்கம். ஆஸ்திரேலியாவில் மிகவும் வலிமையான ஒன்று. நாங்கள் ஒருவிதமான திரைப்பட விநியோக முறையின் மூலம் இந்த டாக்குமெண்டரி படங்களை ஆஸ்திரேலியா முழுவதும் திரையிடுகிறோம். அது நிறைய லாபம் தருவதாகவும் உள்ளது. “லெளசி லிட்டில் சிக்ஸ்பென்ஸ்” எனும் டாக்குமெண்டரி படம்தான். முதன்முறையாக இம்மாதிரி படங்களில் அதிக லாபம் பெற்றுத்தந்ததோடு பல ஆண்டுகள் ஆன பின்னரும் தொடர்ந்து லாபம் ஈட்டித் தருகிறது.

பழங்குடியினர் தயாரித்த இப்படங்களைப் பற்றி வெள்ளைப் பார்வையாளர்களின் கருத்து என்ன?

மை.லீ: ABC யின் இயக்குநரான டேவிட் ஹில், “சாட்டிலைட் ட்ரீமிங்” எனும் படத்தில் வரும் பேட்டியில் இம்மாதிரியான படங்களை தார்மீக அடிப்படையில் ஒளிபரப்புவது ஒருபக்கமிருப்பினும் , இவை லாபகரமாகவும் இருக்கின்றன. வெள்ளை மக்கள் இவைகளை விரும்பிப் பார்க்கின்றனர். தொலைக்காட்சி நிலையங்களுக்கும் இதனால் மகிழ்ச்சியே.

லி.ம: நான் ஆஸ்திரேலியர்களையும் நினைத்துப்பார்க்கிறேன். அவர்களுக்கு பழங்குடியினர் தயாரித்து தரும் நிகழ்ச்சிகள் புத்துணர்வு ஊட்டுவதாகவும் மற்றவைகளிலிருந்து மாறுபட்டதாகவும் உள்ளது. ஐரோப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பதால் அவர்கள் எப்படி படமெடுக்கிறார்கள் எந்தவிதத்தில் படத்தொகுப்பு செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே பழங்குடியினர் தங்களுக்குயுரித்தான முறையில் படத்தை எடுக்கவும் படத்தொகுப்பு செய்யவும் தீர்மானித்தார்கள்.

மை.லீ: லாங் டேக்குகள் மூலம் அவர்கள் தொலைக்காட்சியில் வரும் வழக்கமான படப்பிடிப்பு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் ஜனரஞ்சகமான தொடர்பு சாதன அமைப்புகளில் பணிபுரியும் போது இப்படி செய்யமுடியாது,. அப்படி செய்யமுடியாது என சொல்லுகிறார்கள்.

லி.ம: எனக்கும் இது நடந்திருக்கிறது.

மை.லீ; நிறைய பழங்குடிகள் லாங்க் டேக்குகளை விரும்புகின்றார்கள். காரணம் ஒரு காட்சியைப் பார்க்கும் அதே நேரத்தில் அக்காட்சியின் பின்புலத்தையும் நன்கு கவனிக்க முடியும். ஒரு வெள்ளை இயக்குநர் இருந்தார். அவரது படங்களில் உள்ள லாங் டேக்குகளுக்காக அவரது சக ஊழியர்கள் அவரை விமர்சனம் செய்தாலும் பழங்குடியினரால் அவர் மிகவும் விரும்பப்படுகிறார்.

லி.ம: ஏனெனில் இதில் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி பின்புலமும் இருக்கிறது. ஒரு நபர் பேசிக்கொண்டிருக்கையில் அதற்கு தொடர்பான மற்றவர்களின் நடவடிக்கைகளை நீங்கள் பார்க்க முடியும்.

இது manipulation-களையும் வெகுவாக குறைத்துவிடும்.

மை.லீ: ஆம் சரிதான். இங்கே தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் சில பழங்குடி சமூகங்கள் உண்டு. திரைப்படங்களை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது அவர்கள் தார்கோவ்ஸ்கியையோ, பெலினியையோ, ஐசன்ஸ்டைனையோ குறித்து கேள்விபட்டது. கூட கிடையாது. அதுபற்றி அவர்களுக்கு அக்கறையும் கிடையாது. தங்களுடையதையல்லாமல் வேறு யாருடைய அளவு கோல்களையும் திருப்தி படுத்தவேண்டும் என சிறிதளவு கூட அவர்கள் நினைப்பதில்லை. அவர்கள் தங்களுடைய மொழியில் தங்கள் சமூகங்களுக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கிறார்கள். எப்போதாவது வேண்டுமெனில் மற்றவர்களுக்காக மொழிமாற்றம் செய்து ஒரு படத்தை வெளியிடுவார்கள்.

வெள்ளையர்கள் பற்றி பழங்குடிகள் ஏதாவது படம் எடுத்துள்ளனரா?

லி.ம: நான் ஒரு படம் எடுக்கப்போகிறேன். (சிரிக்கிறார்) இல்லை இன்னமும் இல்லை.

கதைப்படங்களை பழங்குடிகள் எடுப்பதில்லையா?

மை.லீ: இரண்டு பேர்களிடம் தான் பணம் இருக்கிறது. ட்ரேசி மோபாட் மற்றும் வைன் பார்க்கர் ஆகிய இவர்கள் தான் அந்த முதல் இருவர். இதில் ட்ரேசி எனும் பெண்மணி படத்தை எடுக்க துவங்கிவிட்டார். வைன் இப்போதுதான் பணத்தை பெற்றிருக்கிறார்.
லி.ம: திரைப்படத்துறையில் பணிபுரிவதால் இவர்கள் இருவரும் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் பெரும்பான்மையான பழங்குடிகள் வீடியோக்களில் தான் வேலை செய்கிறார்கள்.

கதைப்படங்களை எடுக்காததற்கு காரணம் பணப்பற்றாக்குறை தானா?

மை.லீ: ஆமாம் இந்தக்காலத்தில் பணம் புரட்டுவது என்பது ரொம்பவும் கடினம்.

திரைப்பட நடிகர்களில், பழங்குடி நடிகர் நடிகைகள் வெள்ளையர் படங்களில் நடிக்கிறார்களா?
மை.லீ: ஆமாம், ஆனால் அதிக அளவில் கறுப்பு நாடகாசிரியர்கள் தற்போது பழங்குடி மற்றும் வெள்ளை கதாபாத்திரங்களை கொண்ட நாடகங்களை எழுதுகிறார்கள். இந்த கறுப்பு நாடகாசிரியர்கள் வெள்ளை நாடகாசிரியர்களை விட அதிக வெற்றிகரமாக இருக்கிறார்கள்.

லி.ம: திரைப்படங்களில் இங்கு அதிகம் நடப்பதென்னவெனில் ஒரே நபர் திரும்ப திரும்ப எல்லாப்படங்களிலும் தோன்றுவதுதான்.

மை.லீ: லிடியா மில்லரையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் அவர் இரண்டு படங்களில் நடித்தார். அந்த இரண்டிலேயுமே அவர் ஒரு போலீஸ்காரரை காதலிப்பது போல கதை. நீங்கள் பழங்குடியாக இருக்கும் பட்சத்தில் இது சரியானதல்ல. ‘டிரைவிங்க் மிஸ் டெய்சியை’ எடுத்த புரூஸ் பெர்ஸ்போர்டினால் நடிக்க வைக்கப்பட்டவர்கள். அவர் எங்களுடைய புகழ்வாய்ந்த இயக்குநர். அவர் பழங்குடி நடிகர்களை. வைத்து ‘ஃப்ரிஞ் ட்வெல்லர்ஸ்’ எனும் படத்தை எடுத்தார். அது மிகவும் மோசமான படம் எனக்கு அந்த படம் பிடிக்கவேயில்லை. அதில் பழங்குடி நடிகர்கள் தவறாக உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.

லி.ம: ஃப்ரஞ் ட்வெல்லர்ஸ் குறித்து ஒரு டாக்குமெண்டரி படமும் உண்டு. நான் இரண்டையுமே பார்த்திருக்கிறேன். ஃபிரஞ் ட்வெல்லர்ஸ் திரைப்படத்தில் பழங்குடியினர் தங்கள் நிலங்களை கட்டுபடுத்த விரும்புவது குறித்தோ எதுவுமே இல்லை. ஆனால் டாக்குமெண்டரி படத்திலோ பழங்குடிகள் சரியான தண்ணீர் வசதிகள் கூட இல்லாமலிருப்பது காட்டப்பட்டது. அவர்கள் தண்ணீருக்காக ஒரு மைல் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் குடியிருப்புகளும் சிறப்பானவைகளாக இல்லை. ஆக திரைப்படம் நிறைய கற்பனைகளை கொண்டிருந்தது. டாக்குமெண்டரி படமோ பழங்குடியினரின் யதார்த்தமான நிலையை அவர்கள் வாழ்க்கை சூழலோடு வைத்துக்காட்டியது.

மை.லீ: இந்த படங்களுக்கு அடிப்படையான புத்தகம் எழுதப்பட்ட ஆண்டோ 1958, ஆனால் படமானது எண்பதுகளில் எடுக்கப்பட்டதால் வறுமையை அதன் ஆழத்தோடு சொல்லாமல் மேலோட்டமாக காட்டியது. இந்த திரைப்படத்தை எடுத்ததன் மூலம் அவர் பழங்குடிகளை முட்டாளாக உணரவைத்தார். அதில் நடித்த முன்னணி நடிகர்களை ஏன் இது போன்ற மோசமான படத்தில் நடித்தீர்கள் என கேட்டேன். அதற்கு அவர்கள் பெர்ஸ்போர்ட் சர்வதேச புகழ் வாய்ந்த இயக்குநர் அதனால்தான். அவர் இங்கு நேரிடையாக வந்து உங்களை வைத்தோ அல்லது நீங்கள் இல்லாமலோ ஒரு படம் எடுக்கப் போகிறேன். இதன்மூலம் கிடைக்க கூடிய சர்வதேச புகழ் மற்றும் பணம் இவைகளுக்காக நீங்கள் உங்களை கொஞ்சம் மாற்றிக் கொள்ளப்போகிறர்களா அல்லது நான் உங்களை மறந்து விடட்டுமா என கேட்டார். இதனால்தான் பல முன்னணி பழங்குடி நடிகர்கள் அதில் நடித்தனர். ஆனால் கொஞ்ச காலம் கழித்து இந்தப்படம் குறித்து வெட்கப்படுவார்கள் என நினைக்கிறேன்.

ஆகவே படம் எடுப்பதற்கான தார்மீக நெறிகள் குறித்த கேள்வியும் இங்கு வருகிறது.

மை.லீ: ஆமாம், ஆஸ்திரேலியாவில் இதை ஏற்படுத்தியவர்கள் பழங்குடிகளே தங்களை சித்தரிப்பதில் சரியான நெறிமுறைகள் கையாளப்படவேண்டும் என்கிற கோரிக்கையே பொதுவாக திரைப்படங்களில் தார்மீக நெறிகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இது வெள்ளையர்களால் ஏற்பட்ட ஒன்றல்ல.

ஆஸ்திரேலிய திரைப்படங்களின் தற்போதைய போக்குகள் குறித்து சொல்லுங்களேன்

மை.லீ: ஆஸ்திரேலிய திரைப்படங்களுக்கு பிரச்சனை உள்ளது. உலக திரைப்பட பொருளாதாரத்தைப் பொறுத்த அளவில் ஆஸ்திரேலிய திரைப்படங்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் அதிகம். மாற்று திரயரங்குகள் கலை இல்லங்கள் அனைத்துமே ஹாலிவுட் படங்களே. டெர்மினேட்டர் போன்ற படங்கள் இங்கு மிகவும் பிரபலமானது. அமெரிக்காவில் திரையிடப்பட்ட அடுத்த மாதமே அவைகள் இங்கு வந்துவிடுகின்றன. அவைகள் எங்களுக்கு விற்கப்படுவதற்கு முன்னரே அவை அமெரிக்காவில் ஓடி போதுமான பணத்தை சம்பாதித்து விடுவதால் அவர்களால் நாங்கள் ஒரு படமெடுப்பதற்கு ஆகும் செலவை விட குறைந்த விலைக்கு விற்க முடிகிறது. இந்த போக்கு இப்போது மாறுவதாக இல்லை. இது ஒருவிதத்தில் ஹாலிவுட்டின் ஊடுருவல்தான் . இதை மாற்றுவதற்காக நாங்கள் அமெரிக்க படங்களை போல் எடுக்கத் துவங்கினோம். ஆனால் ஒத்துவரவில்லை. ஆகவே தற்போதைய எங்கள் படங்கள் சின்ன விஷயங்கள் பற்றி உள்ளது. வாழ்க்கையின் சிறு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படங்களே ஆஸ்திரேலிய படங்கள் இனிமேல் வருங்காலத்தில் தேசிய காவியங்களுக்கு வாய்ப்பில்லை வாழ்க்கையின் சிறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களே, ஆஸ்திரேலிய திரைப்படங்களின் வருங்கால போக்குகளாக இருக்கும்.

ஆஸ்திரேலியாவில் எவ்வளவு படங்கள் தயாரிக்கப்படுகின்றன?
மை.லீ: இது தற்போது 6 மில்லியன் டாலர்கள் புழங்கும் ஒரு தொழிலாகும். ஆனால் பெரும்பான்மையான படங்கள் தொலைக்காட்சிக்காகவே தயாரிக்கப்படுகின்றன. திரைப்பட தயாரிப்பில் சமீபத்தில் ஒரு சரிவு ஏற்பட்ட தெனினும் தற்போது அது வளர்ச்சியடைய துவங்கியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளாகத்தான் திரைப்பட நிதியுதவி கழகம் இயங்கத் தொடங்கியுள்ளது. அதன் பயன்களை இப்போதுதான் காண துவங்கியுள்ளோம்.

இணை திரைப்பட அமைப்புகள் அங்கு உள்ளதா?

மை.லீ: ஆமாம், எல்லா நகரங்களிலும் எலக்ட்ரிக் ஷடோஸ் எனும் பெயரில் ரொனின் திரைப்பட கம்பெனி, கலை இல்லங்களை நடத்தி வருகிறது. அங்குதான் நாங்கள் ராயையும் தர்க்கோவ்ஸ்கியையும் பார்க்க முடிகிறது.

பிலிம் சொசைட்டிகளின் கூட்டமைப்பு உள்ளதா?
மை.லீ: ஆமாம், திரைப்பட சங்கங்களுக்கான தேசிய கூட்டமைப்பு ஒன்று உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒரு பிலிம் சொஸைட்டி உள்ளது. கான் பெராவில் இருபது பிலிம் சொஸைட்டிகள் உண்டு. இது தவிர்த்து தேசிய திரைப்பட வாடகை நிலையம் உள்ளது. அதில் சுமார் 60,000 படங்கள் உள்ளன. இவை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இலவசமாக படங்களைத் தருகின்றன.

கடைசியாக ஒரு கேள்வி. எங்கள் வாசகர்களுக்கு டெனிஸ் ஓ ரூர்க்கேயின் படங்கள் மிகவும் பரிச்சயமானவை. அவைகள் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

மை.லீ: ஆஸ்திரேலிய டாக்குமெண்டரி தயாரிப்பில் சுவாரஸ்யமான படத்தயாரிப்பாளர். அவரது ‘கனிபால் டூர்ஸ்’ எனக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் சமீபத்திய படமான ‘குட் உமன் ஆப் பாங்காக்’கை நான் இன்னமும் பார்க்கவில்லை. ஆஸ்திரேலியாவிலிருந்தும், உலகின்பிற நாடுகளிலிருந்தும் பெண்நிலைவாதிகள் மத்தியிலிருந்தும் இப்படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் இதுதான் அமெரிக்காவின் வெஸ்ட் கோஸ்ட் பகுதிகளில் வர்த்தகரீதியாக வெளியிடப்பட்ட முதல் டாக்குமெண்டரி படமாகும். இது நல்ல பணத்தையும் சம்பாதித்து தந்தது. டெனிஸ் ஒரு வியாபார இயக்குநர் என்பதில் சந்தேகமே வேண்டாம். தவிர விளம்பரம் அல்லது வேறு வழிகளில் தனது மதிப்பை நிலைநிறுத்த வேண்டிய ஒரு தொழிலில் உள்ளார். அவர் தனது படங்களோடு நின்று விடாமல் ஆஸ்திரேலிய திரைப்பட வரலாற்றில் தனக்கென்று ஒரு இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார். அது கிடைக்கவும் செய்யும். இது குறித்து எனக்கு சில பிரச்சனைகள் உண்டு.

இன்னமும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
மை.லீ: எங்களுக்கு ஒரு ஆரோக்கியமான திரைப்படத்தொழில் உள்ளது. அரசாங்கத்தின் நேரடி தலையீடோ உள்நாட்டு தணிக்கையோ கிடையாது. வெளியிலிருந்து வரும் ஆபாசம், வன்முறை ஆகியவைகளை அதிகமாகக் கொண்ட படங்கள் மட்டுமே தணிக்கைக்குட்படுத்தப்படுகின்றன.

மிக்க நன்றி!

சலனம் ஜீன் – ஜீலை 1992