ஹிட்ச்காக் & த்ரூபோ நேர்காணல்

த்ரூபோ: உங்களது தி ரிங் (The Ring) திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். இது ஒரு சஸ்பென்ஸ் படம் அல்ல. மேலும் இதில் குற்றப் பின்னணி கொண்ட பேசுபொருளும் இல்லை. இது, ஒரே பெண்ணைக் காதலிக்கும் இரண்டு குத்துச்சண்டை வீரர்களைப் பற்றிய கதை. எனக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும். 

Related image

ஹிட்ச்காக்: ஆம், உண்மையிலேயே அதுவொரு சுவாரஸ்யமான திரைப்படம். தி லாட்ஜருக்குப் பிறகு, தி ரிங்-தான் அடுத்த ஹிட்ச்காக் திரைப்படம் என்று கூறலாம். அதில் அனைத்து வகையான புதுமைகளும் இருந்தன, இப்படத்திற்கான வெள்ளோட்டக் (ப்ரீமியர்) காட்சியில், நான் படத்தில் பயன்படுத்தியிருந்த விரிவான மாண்டாஜ் காட்சிகள், படம் பார்த்தவர்களிடையே பரவலான கைதட்டலைப் பெற்றது என்பதை நினைவில் கொள்கிறேன். இது எனக்கு முதல்முறையாக நடந்தது. 

இன்று நாம் செய்யமுடியாத பல விஷயங்கள் அந்தப் படத்தில் இருந்தன. உதாரணமாக, குத்துச்சண்டை போட்டி முடிந்த அன்று மாலை ஒரு சிறிய விருந்து நிகழ்வு. நுரைகளுடன் ஷாம்பெயின் ஊற்றப்படுகிறது. கதாநாயகி சிறு மிடறு குடிப்பதற்காக அதை அவளிடம் தர நினைக்கின்றனர். பின்னர்தான் அவர் அங்கு இல்லை என்பதைக் கண்டுபிடிப்பார்கள்; அந்த பெண், வேறொரு ஆடவனுடன் வெளியே இருக்கிறாள். இப்போது ஷாம்பெயினின் நுரைகள் அடங்கி தட்டையான நிலைக்கு வருகிறது. அவனுக்கு இருந்த ஆரவாரமான மனது, நுரைகளுடன் கூடிய ஷாம்பெயினை ஒத்திருக்கிறது. அங்கு கதாநாயகி இல்லை என்பது தெரிந்தவுடன், அந்த ஆரவாரமான மனது அடங்கிவிடுகிறது. அதைத்தான் ஷாம்பெயினின் நுரைகள் அடங்குவதுடன் பொருத்திப் பார்க்கிறோம். அந்நாட்களில் நாங்கள் இதுபோன்ற காட்சித் தொடுதல்களில் முனைப்புடன் இருந்தோம், சில நேரங்களில் மிக நுட்பமான காட்சித் தொடுதல்கள், அவை பொதுமக்களால் கவனிக்கப்படாதபோதும் கூட, நாங்கள் அவ்வாறே செயல்பட்டோம். ஃபேர்கிரவுண்டில் (வெளி மைதானத்தில்) படம் துவங்குகிறது. கார்ல் பிரிசன் (Carl Brisson) ஏற்று நடித்த ஒரு குத்துச்சண்டை வீரர் கதாபாத்திரம், அவர் ஒன் ரவுண்ட் ஜாக் (One-Round Jack) என்று அழைக்கப்படுகிறார்.

Image result for ring movie hitchcock

த்ரூபோ: முதல் சுற்றிலேயே தனது எதிரிகளை வீழ்த்தியதால்?

ஹிட்ச்காக்: ஆம். கூட்டத்தில், ஒரு ஆஸ்திரேலியர் இருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் இயன் ஹண்டர் (Ian Hunter) நடித்திருந்தார். கூடாரத்தின் முன்னாலிருந்த பார்கர், கூட்டத்தினரை உள்ளே செல்லும்படி வற்புறுத்துகிறார், அவர் ஒரு சிறிய அட்டை வைத்திருப்பார், போட்டி எப்படி முன்னேறுகிறது என்பதை, அவரது தோளுக்கு மேல் பார்த்து தெரிந்துகொள்ள முடியும். வெளியே நிற்கும் மக்களுக்கு, உள்ளே எத்தனையாவது சுற்று போய்க்கொண்டிருக்கிறது என்பதை அடையாளம் காட்ட கையில் ஒரு அட்டையை வைத்திருந்தார். இயன் ஹண்டர் உள்ளே செல்லும்வரை, தன்னார்வ குத்துச்சண்டையாளர்கள் கூடாரத்திற்குள் சென்று பின்னர் அவர்களின் தாடையைப் பிடித்தபடியே வெளியே வருவதைக் காட்டினோம். பின்னர் ஆஸ்திரேலியர் உள்ளே செல்கிறார். அவரைப் பார்த்து மக்கள் சில வினாடிகள் சிரித்தனர், அவனது அங்கியைத் தொங்கவிடுவது பற்றி கூட அவர்கள் கவலைப்படவில்லை. அவர் ஒருபோதும் ஒரு சுற்றுக்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டார் என்று நினைத்து அவர்கள் அதைக் கையிலேயே பிடித்திருந்தனர். போட்டி துவங்கியது மற்றும் ஒவ்வொரு வினாடியும் மாறுகிறபொழுது அடைகிற முக பாவனைகளின் வெளிப்பாட்டைக் காட்டினேன். பின்னர் போட்டியைப் பார்க்கும் பார்கரைக் காட்டினோம். முதல் சுற்றின் முடிவில், பார்கர் அடுத்த சுற்று எண்ணைக் குறிக்கும் அட்டையை வெளியே எடுத்தார், சுற்று ஒன்றைக் குறிக்கும் அட்டை பழையது, இழிவான நிலையில் இருந்தது. ஆனால், இரண்டாம் எண் அட்டை, இது பலநாட்கள் பயன்படுத்தாதது, புதிதாக இருந்தது, அது இரண்டாம் சுற்று என்பதை அடையாளப்படுத்தின, அந்த அட்டையை பார்கர் இப்போது உபயோகித்தார். இரண்டாம் சுற்று என்பதைக் குறிக்கும் அட்டையைப் பார்கர் இப்போது மக்களிடையே காண்பித்தார். இது புத்தம் புதிது! ஒன் ரவுண்ட் ஜாக் மிகவும் திறமையாகச் செயல்பட்டதால், அதற்குமுன்பு வரை இந்த இரண்டாம் சுற்று அட்டையைப் பயன்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு அமையவில்லை! இந்தக் காட்சித் தொடுதல்கள் பார்வையாளர்களால் கவனிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். 

Image result for the ring movie hitchcock

த்ரூபோ: அதுவொரு நல்ல காட்சிரீதியிலான தொடுதல். இதுபோன்று இன்னும் பல காட்சிரீதியிலான புதுமைகள் இப்படத்தில் இருந்தன. சுய பாவத்தைப் பற்றி அடிக்கடி குறிப்புகள் இருந்தன, கதை ஒரு முக்கோணக் காதல் கதை போன்று பயணிக்கிறது. மேலும், பாம்பு போன்ற வளையலை(காப்பு) நீங்கள் பல வழிகளில் குறியீடாகப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.*

*சாம்பியனான பிறகு, ஆஸ்திரேலிய வீரர், கதாநாயகியின்பால் காதலில் வீழ்கிறார். எனவே காதல் பரிசாக அவளுக்கு பாம்பு போன்ற வளையலைப் (காப்பினை) பரிசளிக்கிறார். அவர்கள் அரவணைத்துக்கொள்ளும்பொழுது, அந்தப் பெண் கையில் உள்ள வளையலை முழங்கைக்கு மேலே நகர்த்திவிடுகிறாள். அவளுடைய வருங்கால கணவன், ஜாக் காட்சிக்குள் வருகிறபொழுது, அந்தப் பெண் அவசரமாக வளையலை மணிக்கட்டிற்குக் கீழே இறக்கிவிடுகிறாள், அத்தோடு வளையலை மறு கையால் மறைக்கிறாள். ஜாக்கின் முன்னால் அவளைச் சங்கடப்படுத்த, ஆஸ்திரேலியர் வேண்டுமென்றே விடைபெறுவதற்கு முன், கைகுலுக்குவதற்காக கையை அந்தப் பெண்ணை நோக்கி நீட்டுகிறான். ஆனால், அந்தப் பெண் வளையலை மறைக்கும் நோக்கில், எவ்வித எதிர்வினையும் செய்யவில்லை. பதிலுக்குக் கை கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியருக்கு, தன் காதலி கைகொடுக்காமல் இருந்ததை ஜாக் கவனிக்கிறான். மேலும், ஜாக் இந்த நிராகரிப்பை, தன் காதலி தன்னிடம் விசுவாசமாக இருப்பதற்கான சான்றாக எடுத்துக்கொள்கிறான். 

மற்றொரு காட்சியில், ஜாக்கும், அந்தப் பெண்ணும் ஆற்றின் அருகே ஒன்றாக இருக்கும்பொழுது, அவள் தற்செயலாக அந்த வளையலைத் தண்ணீருக்குள் தவறவிட்டு விடுகிறாள். அதைக் கண்டுபிடித்து, மீட்டெடுத்தபிறகு, ’இந்த வளையல் உனக்கு எப்படிக் கிடைத்தது?’ என்பதற்கான விளக்கத்தை ஜாக் கேட்கிறான். ஆஸ்திரேலியர், அவர் தனது போட்டியாளருக்கு எதிராகச் சண்டையிட்டு வென்ற பணத்தைத் தனக்குத் தானே செலவழிக்க விரும்பாததால், இதை எனக்குக் கொடுத்தார், “எனவே, இது உண்மையில் என்னுடையது” என்று அந்தப் பெண் பதிலளிக்கிறாள். ஜாக் கூறுகையில், அவளிடமிருந்து வளையலை எடுத்து, ஒரு திருமண மோதிரம் போல, அதை அந்தப் பெண்ணின் விரலைச் சுற்றிக் கட்டுகிறார். 

படத்தில் இதுபோன்று வேறு பல வழிகளிலும், பாவப்பட்ட அந்த வளையல் படத்தின் கருப்பொருள் வழியாக அதன் பாதையில் இழைந்தோடுகிறது மற்றும் ஒரு பாம்பைப் போல தன்னைச் சுற்றித் திருகுகிறது. படத்தின் தலைப்பு ‘தி ரிங்’. என்பது குத்துச்சண்டை அரங்கம் மற்றும் திருமண மோதிரம் என இரண்டையும் குறிக்கும், இரட்டை அர்த்தத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
Image result for the ring movie hitchcock

ஹிட்ச்காக்: இந்த விஷயங்களையெல்லாம் விமர்சகர்கள் கவனித்துப் பேசினர், மேலும் இது வணிகரீதியான வெற்றியைப் பெறாத திரைப்படமாக இருந்தாலும், வணிக ஆதாயத்திற்கு மாறாக, விமர்சன பாராட்டு அடிப்படையில் முக்கியமான படம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. பிற்காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில கருத்துக்களை நான் அறிமுகப்படுத்திய படம் இது. உதாரணமாக, பரிசுக்காகச் சண்டையிடும் குத்துச்சண்டை வீரனது தொழில்வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் காட்ட, தெருவில் பெரிய சுவரொட்டிகளைக் காண்பித்தோம், சுவரொட்டியின் கீழ்பாகத்தில் அந்தக் குத்துச்சண்டை வீரனின் பெயர் இடம்பெற்றிருக்கும். இந்தச் சுவரொட்டிகளின் வாயிலாகவே, அவன் பெரிய வெற்றியாளன், குத்துச்சண்டையில் அதிகம் புகழ்பெற்றவன் போன்ற தகவல்கள் கடத்தப்பட்டுவிடுகின்றன. அவனது வளர்ச்சிக்கேற்ப சுவரொட்டியும் மாறுதலடைகிறது. கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என வெவ்வேறு பருவங்களைக் காண்பிக்கிறோம், மேலும் ஒவ்வொரு சுவரொட்டியிலும் பெயர் பெரியப் பெரிய எழுத்துகளில் அச்சிடப்படுகிறது. மாறிவரும் பருவங்களை விளக்குவதற்கு நான் மிகுந்த கவனம் செலுத்தினேன்: வசந்தகாலத்திற்கு பூக்கும் மரங்கள், குளிர்காலத்திற்கு பனி, மற்றும் பல. 

தொடரும்…

முந்தைய இதழ்களைப் படிக்க: