ஹிட்ச்காக்&த்ரூபோ – 3


ரயில் இப்போது அதன் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. கணக்கு வழக்குகளைக் கையாள எங்களிடம் யாரும் இல்லை, எனவே அவற்றை நானே கவனித்துக்கொள்ள வேண்டும். படம் இயக்குவதை விட, கணக்குகள் முக்கியமானது. நான் பணத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். நாங்கள் தூங்கும் பெட்டிகளில் இருந்தோம், ரயில் ஆஸ்ட்ரோ – இத்தாலிய எல்லையை அடையும்போது, விண்டிக்மிலியா எங்களிடம் ,”மிகவும் கவனமாக இருங்கள். நம்மிடம் கேமரா இருப்பதைச் சொல்லக்கூடாது. இல்லையெனில், அவர்கள் ஒவ்வொரு லென்ஸிற்கும் கட்டணம் வசூலிப்பார்கள்.” என்றார்.

”நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டேன்.


“ஜெர்மன் நிறுவனம் கேமராவை கள்ளத்தனமாய் கொண்டுசெல்லச் சொல்கிறது” என்று அவர் என்னிடம் கூறினார். கேமரா எங்கே என்று நான் அவரிடம் கேட்கும்போது, அது பங்கின் (தூங்குவதற்காகச் சுவரோடு இணைக்கப்பட்ட இடம்) கீழே இருப்பதாகக் கூறினார். உங்களுக்குத் தெரியும், நான் எப்போதுமே போலீஸ்காரர்களுக்குப் பயப்படுவேன், எனவே எனக்கு வியர்க்கத் துவங்கியது. இப்போது எங்கள் பொருட்களோடு, எக்ஸ்போஸ் செய்யப்படாத பத்தாயிரம் அடி படச்சுருள் இருப்பதும் யாருக்கும் தெரியப்படுத்திவிடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டது. சுங்க ஆட்கள் எங்கள் பெட்டிக்கு வருகிறார்கள். எனக்கு பெரிய சஸ்பென்ஸாக இருந்தது. அவர்கள் கேமராவைக் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் ஃப்லிம் (படச்சுருள்கள்) இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டார்கள். நாங்கள் அதை அவர்களுக்குத் தெரிவிக்கவில்லையாதலால், பறிமுதல் செய்தனர். எனவே, மறுநாள் காலையில் எந்தப் படச்சுருளும் இல்லாமல் ஜெனோவாவில் இறங்கினோம். அன்றைய நாள் முழுவதையும், சில அடி படச்சுருள் வாங்குவதற்காகச் செலவிட்டோம். திங்கட்கிழமை காலை, கோடக் (Kodak) நிறுவனத்திலிருந்து சில அடி ஃப்லிம் ஸ்டாக்குகளை வாங்குவதற்காக, நியூஸ் ரீல் நபரை மிலனுக்கு (Milan) அனுப்ப முடிவு செய்தேன். மற்றும், நான் இன்னும் வரவு செலவுக் கணக்குகளில் பிஸியாக இருக்கிறேன்: நாட்டுக்கு நாடு, பண மதிப்பில் வித்தியாசம் இருக்கும். லிராவிலிருந்து (lira / lire) மார்க்கிற்கு(marks), மார்க்கிலிருந்து பவுண்டிற்கு என கணக்குப் போட்டு, வரவு செலவுகளைக் குறித்துக்கொண்டிருந்தேன். இவையனைத்தும் குழப்பமானதாக இருந்தது. கேமராமேன், இருபது பவுண்டுகள் மதிப்புகொண்ட ஃப்லிம் ரோல்களுடன் மதியம் திரும்பினார். ஆனால், இப்போது, எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட பத்தாயிரம் அடி எக்ஸ்போஸ் செய்யப்படாத ஃப்லிம் ரோல்கள் எங்களிடம் வந்துவிட்டது, நான் அதற்குரிய அபராதத் தொகை செலுத்தி அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம். எனவே, நான் இருபது பவுண்டுகளை வீணடித்துவிட்டேன். எங்கள் சிறிய பட்ஜெட்டிற்கு அது மிகப்பெரிய தொகை!

லொகேஷன் காட்சிகளின் படப்பிடிப்பிற்கு, எங்களிடம் அரிதாகவே போதுமான பணம் இருந்தது. செவ்வாய்க்கிழமை நண்பகலில் படகு, கப்பல்துறையிலிருந்து புறப்படவிருப்பதாக, அட்டவணையில் உள்ளது. இது லாயிட் பிரஸ்டினோ (Lloyd Prestino), தென் அமெரிக்காவிற்குச் செல்லும் ஒரு பெரிய கப்பல். துறைமுகத்திலிருந்து வெளியே செல்ல நாங்கள் ஒரு விசைப்படகை (அல்லது இழுவைப்படகு) வாடகைக்கு எடுக்க வேண்டும். நன்று, இறுதியாக எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. ஆனால், பத்து முப்பது மணிக்கு – விசைப்படகு செலுத்தியவருக்கு டிப்ஸ் (வெகுமதி) கொடுப்பதற்காக, என் பணப்பையை (wallet – சிறிய தோல்பை) வெளியே எடுக்கும்போது, அது காலியாக இருப்பதைக் கவனித்தேன். அதில் ஒரு செள (குறைந்த மதிப்புடைய பிரான்சு நாட்டு நாணய வகை) கூட இல்லை!

பத்தாயிரம் லியர் (lire) போய்விட்டது! நான் மீண்டும் ஹோட்டலுக்கு ஓடுகிறேன், படுக்கைக்கு அடியில், அறையின் மூலையில், என எல்லாயிடங்களிலும் தேடினேன். பணம் இருப்பதற்கான அடையாளமே இல்லை. நான் தூங்கும்போது யாரோ ஒருவர் என் அறைக்குள் நுழைந்திருக்க வேண்டும் என்று புகார் அளிக்க போலீஸிடம் சென்றேன். ”நான் எழுந்திருக்காதது நல்ல விஷயம், இல்லையேல் நான் கத்தியால் குத்தப்பட்டிருக்கலாம்” என்று நினைக்கிறேன். நான் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறேன், ஆனால் வேலை தொடர்ந்து நடக்க வேண்டும்.

எனது முதல் காட்சியை இயக்குகிற உற்சாகத்தில், பணம் இழந்ததையெல்லாம் மறந்துவிட்டேன். ஆனால், அன்றைய நாள் படப்பிடிப்பு முடிந்ததும், நான் மீண்டும் மிகவும் மனச்சோர்வடைவேன். பிறகு, ஒளிப்பதிவாளரிடமிருந்து பத்து பவுண்டுகளும், நடிகரிடமிருந்து பதினைந்து பவுண்டுகளும் கடன் வாங்கினேன். இருப்பினும், இது எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யாததால், எனது சம்பளத்திலிருந்து முன்பணம் தருமாறு வேண்டி, லண்டனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். மற்றொரு கடிதத்தை, மியூனிக்கில் உள்ள ஜெர்மன் நிறுவனத்திற்கு எழுதினேன். அதில், ”எனக்கு இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படலாம்” என்று எழுதியிருந்தேன். ஆனால், இந்தக் கோரிக்கையை, அவர்களுக்கு அனுப்ப எனக்குத் துணியவில்லை, ஏனென்றால், ஒருவேளை அவர்கள், “உங்களுக்கு இவ்வளவு சீக்கிரமே, அதிக பணம் தேவைப்படலாம் என்று எப்படித் தெரியும்?” என்று கேட்கக்கூடும். எனவே, கடிதத்தை லண்டனுக்கு மட்டுமே அனுப்பினேன்.

பின்னர் நாங்கள் ஹோட்டல் ப்ரிஸ்டலுக்குச் சென்றோம், அங்கு, ஷான் ரெமோவுக்குப் புறப்படும் முன்பு மதிய உணவு சாப்பிட வேண்டும். உணவுக்குப் பிறகு, நான் வெளியே தெருவிற்குச் சென்றேன். என் ஒளிப்பதிவாளர் விண்டிக்மிலியா, தன்னைக் கடலில் தூக்கியெறியும் சொந்த ஊர் (பூர்வீக) பெண்ணாக நடித்த ஜெர்மன் பெண்ணுடன் இருந்தார். அவர்களுடன் நியூஸ் ரீல் ஆபரேட்டரும் இருக்கிறார், அவர் இப்போது தனது வேலையை முடித்துவிட்டு, மியூனிக் திரும்ப உள்ளார். அவர்கள் மூவரும் அங்கே நின்று, தலையை ஒன்றாக வைத்துக்கொண்டு, எதையோ வலியுறுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களிடம் சென்று, “ஏதாவது தவறாக நடந்ததா?” என்று கேட்டேன். ”ஆம்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

“அந்த பெண், அவளால் தண்ணீருக்குள் செல்ல முடியாது.” என்றனர். ”என்ன சொல்கிறீர்கள்? அவளால் தண்ணீருக்குள் செல்ல முடியாது?” என்று கேட்டேன். ”ஆமாம், அவளால் தண்ணீருக்குள் செல்ல முடியாது. உங்களுக்குத் தெரியும்……..” குழப்பமடைந்து, தடுமாறி, “இல்லை, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” - அங்கேயும், நடைபாதையிலும், மக்கள் முன்னும் பின்னுமாக நடந்துசெல்லும்போது, இரண்டு ஒளிப்பதிவாளர்களும், மாதவிடாய் பற்றி என்னிடம் கூறினார்கள். நான் அதுகுறித்து என் வாழ்க்கையில் கேள்விப்பட்டதேயில்லை! அவர்கள் மிக விரிவாகச் சொன்னார்கள், அவர்கள் சொல்வதை நான் மிகவும் கவனமாகக் கேட்டேன். அவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என்ற வழியில் செல்லும்போது, நான் குறுக்காக சில கேள்விகளுடன் உள் நுழைந்தேன். அந்தப் பெண்ணை எங்களோடு அழைத்து வந்ததில் நான் வீணடித்த பணம், அந்த லயர் மற்றும் மார்க்ஸ் (பண மதிப்புகள் / பணத்தின் பெயர்கள்) வீணானதைப் பற்றி மட்டுமே என்னால் சிந்திக்க முடிந்தது.

மிகவும் எரிச்சலடைந்த நான், முணுமுணுப்புடன், ”சரி, மூன்று நாட்களுக்கு முன்பே, மியூனிக்கில் அவள் இதைப்பற்றி ஏன் சொல்லவில்லை?” எப்படியிருந்தாலும், நாங்கள் அவளை ஒளிப்பதிவாளருடன் திருப்பி அனுப்பிவிட்டு, அலேசியோவுக்குச் (Alassio) சென்றோம். நாங்கள் வேறொரு பெண்ணைக் கண்டுபிடித்து நடிக்கவைத்து, இச்சூழலைக் கையாளமுடியும் என்று தோன்றியது. அப்படியாக ஒரு பெண் கிடைத்தார். ஆனால், அவர் குண்டாக இருந்ததால், நடிப்பவரால் அப்பெண்ணைத் தூக்கமுடியவில்லை. அப்பெண்ணை நீரிலிருந்து இழுத்துச் செல்கிற ஒவ்வொரு முயற்சியிலும், சிரிப்போடு அலறிக்கொண்டிருக்கும் நூறு பார்வையாளர்களின் மகிழ்ச்சிக்கு மேலும் விருந்து வைப்பதுபோல, அப்பெண்ணைத் தூக்கமுடியாமல் தூக்கி, கீழே தவறவிடுவார். கடைசியாக, நடிகர், அந்தப் பெண்ணை நீரிலிருந்து வெளியே கொண்டுவருவதில் வெற்றிபெற்று விட்டார். ஆனால், கொஞ்சம் வயதான பெண்மணி, அருகிலேயே சிப்பி ஓடுகளை அமைதியாகச் சேகரித்துக்கொண்டிருந்தார், பொழுதுபோக்காக நடப்பவர்கள் , நேராகக் கேமராவைப் பார்த்தபடி காட்சிக்குக் குறுக்குமறுக்குமாக நடந்துகொண்டிருந்தனர்!

அடுத்து, வில்லா டி எஸ்டே செல்லும் வழியில் ரயிலில் ஏறுகிறோம். ஹாலிவுட் நட்சத்திரமான விர்ஜீனியா வல்லி இப்போது வந்துவிட்டதால், நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். இது எனது முதல் படம் என்பதை அவருக்குத் தெரியப்படுத்த முடியாது.


எனது வருங்கால மனைவி அல்மாவிடம் (Alma Lucy Reville) நான் முதலில் சொன்னது, “உன்னிடம் பணம் இருக்கிறதா?”

”இல்லை!”

”ஆனால், உன்னிடம் போதுமானளவு இருக்கிறது” என்றெல்லாம், நான் சுட்டிக்காட்டினேன்.

”ஆம், ஆனால், அவர்(விர்ஜீனியா வல்லி) மற்றொரு நடிகையான கார்மெலிடா ஜெராக்டியையும் (Carmelita Geraghty) அழைத்துவந்திருந்தார். நான் அவர்களை ரு டி லா பைக்ஸில் (Rue de la Paix) உள்ள ஹோட்டல், வெஸ்ட்மின்ஸ்டருக்கு (Westminster) அழைத்துச்செல்ல முயற்சித்தேன், ஆனால், அவர்கள் கிளாரிட்ஜை (Claridge.) வலியுறுத்தினர்.” ஆகவே, என் கஷ்டங்களைப் பற்றி என் வருங்கால மனைவியிடம் சொன்னேன். இறுதியில், நாங்கள் படப்பிடிப்பைத் துவங்குகிறோம், எல்லாம் சரியாகவே நடந்தது.

அந்நாட்களில், நிச்சயமாக, நாங்கள் சூரிய ஒளியில் நிலவொளிக் காட்சிகளைப் படம்பிடித்தோம், பின்பு நீல நிற ஃப்லிம் பயன்படுத்தி, இரவில் நடக்கிற காட்சிபோன்ற தோற்றத்தைக் கொண்டுவந்தோம். ஒவ்வொரு ஷாட்டிற்குப் பிறகும், நான் என் வருங்கால மனைவியிடம் திரும்பி, “இது சரியாக இருந்ததா?” என்று கேட்பேன். எங்களுக்கு அதிக பணம் தேவை, என்று எடுத்துரைத்து மியூனிக்கிற்கு ஒரு தந்தி அனுப்பும் தைரியத்தை இப்போதுதான் நான் அடைகிறேன். இதற்கிடையில், என் சம்பளத்திற்கான முன்பணத்தை லண்டனிலிருந்து பெற்றுக்கொண்டேன். நடிகர் மிகவும் சராசரி, சக ஊழியராக இருப்பதால், தனது பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டார். ஏன் என்று நான் அவரிடம் கேட்கும்போது, அவர் ”தையற்காரர், சம்பளம் வேண்டுமென” வலியுறுத்துவதாக என்னிடம் கூறினார். இது உண்மையில்லை, உங்களுக்கே தெரியும்! மேலும் சஸ்பென்ஸ் தொடர்கிறது.


மியூனிக்கிலிருந்து கொஞ்சம் பணம் கிடைத்தது, ஆனால் ஹோட்டல் பில், மோட்டார் படகுகளின் வாடகை மற்றும், அனைத்து வகையான தற்செயல் சம்பவங்களினாலும் நான் இன்னும் அரிக்கப்படுகிறேன். நான் மியூனிக்கிற்குப் புறப்படுவதற்கு முந்தைய இரவில், மிகவும் பதட்டமாக இருந்தேன். இதோ பாருங்கள், இது எனது முதல் படம் என்பதை திரைப்பட நட்சத்திரம் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை என்பதனால் மட்டுமல்ல, நாங்கள் மிகவும் வறிய நிலையிலிருந்த படப்பிடிப்புக் குழு மற்றும், பணப்பற்றாக்குறையால் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்பதையும், அந்த நட்சத்திரம் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. எனவே, நான் ஒரு சராசரித்தனமான விஷயத்தைச் செய்கிறேன்.

கூடுதலாக ஒரு பெண்ணை அழைத்துவந்ததற்காக, மொத்த உண்மைகளையும் திசைதிருப்பி, என் வருங்கால மனைவி மீது முழு பழியையும் சுமத்துகிறேன். ”ஆகையால்”, “நீங்கள், அந்த நட்சத்திரத்திடமிருந்து இருநூறு டாலர்களைக் கடன் வாங்க வேண்டும்.” என்று சொல்கிறேன். அவள், நட்சத்திரத்திடம் சில கதைகளைச் சொல்லி, பணத்துடன் திரும்பி வந்தாள். ஹோட்டல் பில் செலுத்தவும், ஸ்லீப்பர் டிக்கெட் வாங்கவும் அந்தப் பணம் எங்களுக்கு உதவியது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச்சில் (Zurich) ரயில் மாறுவோம், மறுநாள் மியூனிக்கிற்கு வருவோம்.

இரண்டு அமெரிக்கப் பெண்களும் மிக உயரமான டிரங்குகளை (பெட்டிகளை) வைத்திருந்ததால், அதிகப்படியான சாமான்களை வைத்திருந்ததற்காக இரயில் நிலையத்தில் அவர்கள் என்னை பணம் (அபராதம்) செலுத்த வைத்தார்கள்! இப்போது எங்களிடம், கிட்டத்தட்ட கையிருப்பு பணம் முடிந்துவிட்டது. எப்போதும் அந்த மோசமான கணக்குகள் மூலமாக – நான் மீண்டும் எனது திட்டத்தைத் துவங்க வேண்டும்! மேலும் உங்களுக்குத் தெரிந்தபடி, நான் எப்போதும் என் வருங்கால மனைவியை அனைத்து மோசமான வேலைகளையும் செய்ய வைக்கிறேன். நான் அவளிடம் சென்று, இரண்டு அமெரிக்கர்களுக்கும், இரவு உணவு வேண்டுமா? என்று கேட்கச் சொன்னேன். இந்த வெளிநாட்டு ரயில்களில் தாங்கள் உணவைச் சாப்பிட மாட்டோம் என்று எங்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் பதிலளித்தார்கள்; அவர்கள் ஹோட்டலிலிருந்து சாண்ட்விட்ச்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், மீதமுள்ளவர்கள் இரவு உணவை உட்கொள்ள முடியும்.

நான் மீண்டும் என் கணக்கீடுகளுக்குச் சென்று, சுவிஸ் பிராங்குகளுக்கு லயரை மாற்றுவதில் ஒரு சில காசுகள் இழப்பு இருப்பதைக் கவனித்தேன். ரயில் தாமதமாகிவிட்டது, சூரிச்சில் ரயில் மாற வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு, நிலையத்திலிருந்து ரயில் வெளியேறுவதைக் காண்கிறோம்; இது எங்கள் ரயில்! இதன் பொருள் சூரிச்சில் நாம் ஒரு நாள் இரவைக் கழிக்க வேண்டும். ஆனால், மிகக்குறைந்த அளவே பணம் இருக்கிறது! அப்போதே ரயில் ,நிறுத்தத்திற்கு வருகிறது. இந்த சஸ்பென்ஸ், நான் தாங்கக்கூடியதை விட அதிகம். சுமை தூக்குபவர்கள் விரைந்து செல்கிறார்கள், ஆனால், நான் அவர்களை விலக்கிக்கொண்டு முன்னேறுகிறேன் – மிகவும் விலையுயர்ந்தது – என் பைகளை நானே இழுத்து சுமக்க ஆரம்பிக்கிறேன்.

உங்களுக்குத் தெரியும், சுவிஸ் ரயில்களில் சன்னல்களுக்கு பிரேம்கள் இருக்காது. சூட்கேஸ்களில் ஒன்றின் அடிப்பகுதி, ஒரு சன்னல் மீது மோதுகிறது, கண்ணாடி கீழே விழும் சப்தம் மிகவும் பலமாகக் கேட்கிறது, அப்படியொரு சத்தத்தை நான் என் வாழ்க்கையில் கேட்டதில்லை! ஒரு ரயில்வே அதிகாரி எங்களைப் பலமாகத் தடுத்து நிறுத்தி, எங்களிடம், “ மிஸ்டர், தயவு செய்து இந்த வழியில்” என்று அழைத்துச் சென்றனர்.

நான் ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன், உடைந்த சாளரம், முப்பத்தைந்து ஸ்விஸ் பிராங்குகள் செலவாகும் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. எனவே, அதற்காகப் பணம் செலுத்தியபிறகு, மியூனிக்கில் ஒரு பைசாவுடன் (ஒரு பென்னி) இறங்கினேன். இதுதான் என் முதல் லொகேஷன் ஷுட்டிங் அனுபவம்.

த்ரூபோ: இது மிக நல்ல கதை, உண்மையில், இது காட்சியைவிட மயிர்க்கூச்செறிகிறது. ஆனால், நான் ஆர்வமாக உள்ள ஒரு புள்ளியை இது எழுப்புகிறது. அந்த நேரத்தில் நீங்கள் பாலியல் விஷயங்களைப் பற்றி அறியாதவராகவும், அப்பாவியாகவும் இருந்ததாகக் கூறுகிறீர்கள். ஆனாலும், தி ப்ளெஷர் கார்டனில், பாட்ஸி மற்றும் ஜில் என்ற இரு பெண்கள், உண்மையில் ஒரு ஜோடியைப் பரிந்துரைக்கின்றனர், ஒருவர் பைஜாமா உடையணிந்திருக்கிறார், மற்றவர் நைட் கவுன் அணிந்திருக்கிறார். லாட்ஜரிலும் (The Lodger) இதே அனுமானம், இன்னும் வெளிப்படையானது, இளம் பொன்னிறமாக தலைமயிர் உடைய பெண், ஒரு ஆண் தன்மை தோற்றமளிக்கும் அழகியின் மடியில், வேலியிட்டு மறைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருப்பது காட்டப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் முதல் படங்களிலிருந்தே அசாதாரணத்தால் ஈர்க்கப்பட்டீர்கள் என்ற தனித்துவமான உணர்வு உள்ளது.

ஹிட்ச்காக்: ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம். ஆனால், அது மிகவும் ஆழமாகச் செல்லவில்லை; அது மேலோட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன். தி ப்ளெஷர் கார்டனில் இரண்டு பெண்களின் நடத்தை, 1924 இல் நான் பெர்லினில் உதவி இயக்குநராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தால் ஈர்க்கப்பட்டதால் அமைந்தது. மிகவும் மரியாதைக்குரிய பிரிட்டிஷ் குடும்பத்தினர் என்னையும் இயக்குனரையும் அவர்களுடன் வெளியே செல்ல அழைத்திருந்தனர். இக்குடும்பத்தில் உள்ள இளம் பெண் யு.எஃப். ஏ-வின் முதலாளிகளில் ஒருவரின் மகள். எனக்கு ஜெர்மன் வார்த்தைகள் புரியவில்லை. இரவு உணவிற்குப் பின், ஒரு நைட் க்ளப்பில், ஆண்கள் ஒருவருக்கொருவர் நடனமாடினோம். பெண் ஜோடிகளும் கூட அங்கு இருந்தனர். பின்னர், இரண்டு ஜெர்மன் பெண்கள், ஒருவர் பத்தொன்பது மற்றவர் சுமார் முப்பது வயது இருக்கலாம், எங்களைக் காரில் வைத்து வீட்டிற்கு காரை ஓட்டிச்செல்வதற்கு தானாகவே முன்வந்தனர். ஒரு ஹோட்டலின் முன்னால் கார் நின்றது, நாங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தினார்கள். ஹோட்டல் அறையில் அவர்கள் பல முன்மொழிவுகளைச் சொன்னார்கள், அதற்கு நான் ”நெய்ன், நெய்ன் (ஜெர்மன் மொழியில் ’இல்லை, இல்லை’ என்று பொருள்)” என்று உறுதியாக பதிலளித்தேன். பின்னர் எங்களிடம் பல காக்னாக்ஸ் (உயர்தர பிராந்தி) இருந்தது, இறுதியாக இரண்டு ஜெர்மன் பெண்களுக்கும் படுக்கை கிடைத்தது. எங்கள் பார்ட்டியில் இருந்த இளம்பெண், ஒரு மாணவியாக இருந்தாள், அவள் எதையும் தவறவிட்டுவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த கண்ணாடியை அணிந்தாள். இதுவொரு ஜெமிட்லிச் (இனிமையான மற்றும் மகிழ்ச்சியான) ஜெர்மன் குடும்பம், ஒரு நல்ல நோக்கத்திற்காகக் கூட்டப்பட்ட சமுதாயக் கூட்டம்.

த்ரூபோ: ஓஹோ…. எப்படியிருந்தாலும், தி ப்ளெஷர் கார்டனின் ஸ்டுடியோ வேலைகள் முற்றிலும் ஜெர்மனியில் படமாக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?

ஹிட்ச்காக்: ஆம். மியூனிக்கில். முடிக்கப்பட்ட படத்தை, படத்தைப் பார்ப்பதற்காக லண்டனில் இருந்து வந்த மைக்கேல் பால்கனிடம் காண்பித்தோம். படத்தின் முடிவில் ஒரு காட்சி இருந்தது, அதில் கனமான லெவெட், வெறித்தனத்துக்குப் (மனநிலை சரியாக இல்லாததால் வன்முறைபோல் செயல்படுகிற) போனார்: அவர் பாட்ஸியை, கொடுவாளால் (அல்லது வளைந்த பட்டாக்கத்தியால்) கொல்லப்போவதாக மிரட்டினார், மருத்துவர் துப்பாக்கியுடன் வருகிறார். நான் செய்தது என்னவென்றால், துப்பாக்கியால் முன்புறத்தில் (முன்னணியில்) ஒரு ஷாட் இருந்தது, நாங்கள் பைத்தியக்காரரையும் கதாநாயகியையும் பின்னணியில் வைத்தோம். மருத்துவர் தூரத்திலிருந்து சுடுகிறார், தோட்டா பைத்தியக்காரரைத் தாக்குகிறது. ஒரு கண அதிர்ச்சி அவரை நல்லறிவுக்குத் திருப்புகிறது. அவர் மருத்துவரிடம் திரும்பி, “ஓ, ஹலோ, டாக்டர்” என்று முற்றிலும் சாதாரணமான முறையில் சொல்லும்போது, காட்டுத்தனமான தோற்றம் அவரது முகத்திலிருந்து வெளியேறியிருக்கிறது. பின்னர், இரத்தப்போக்கு வந்துகொண்டிருப்பதைக் கவனித்த அவர், “ஓ” என்று கத்தியவாறு, சரிந்து, இறந்து விடுகிறார்.

இந்த அத்தியாயத்தினைக் காண்கிறபொழுது, ஜெர்மன் தயாரிப்பாளர்களில் ஒருவர், மிக முக்கியமான மனிதர், எழுந்து, ”இது சாத்தியமற்றது, இதுபோன்ற ஒரு காட்சியை நீங்கள் காட்டக் கூடாது,. இது நம்பமுடியாதது, மற்றும் இது மிகவும் கொடூரமானது” என்று கூறினார். திரையிடலின் முடிவில், மைக்கேல் பால்கன்,”ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தொழில்நுட்ப ரீதியாக இதுவொரு கண்டப்(continental) படம் போலத் தெரியவில்லை. இதுவொரு அமெரிக்கப் படம் போன்றிருக்கிறது.” என்றார்.
எப்படியிருந்தாலும், இதெல்லாம் ஒரு நல்ல பத்திரிக்கைச் செய்தியாகக் கிடைத்தது. லண்டன் டெய்லி எக்ஸ்பிரஸ் (The London Daily Express ) என்னை, “மாஸ்டர் மைண்ட் கொண்ட இளைஞன்” என்று விவரிக்கும் தலைப்பை பத்திரிக்கையில் ஓடவிட்டது.

த்ரூபோ: அடுத்த ஆண்டு உங்கள் இரண்டாவது படமான தி மவுண்டன் ஈகிள் (The Mountain Eagle) உருவாக்கினீர்கள். இது ஸ்டுடியோவிலும், டைரோலில் (Tyrol) உள்ள லொகேஷனிலும் படமாக்கப்பட்டது.

ஹிட்ச்காக்: இது மிகவும் மோசமான படம். தயாரிப்பாளர்கள் எப்போதும் அமெரிக்கச் சந்தையில் நுழைவதற்கு முயற்சித்து வந்தனர், எனவே அவர்கள் மற்றொரு திரைப்பட நட்சத்திரத்தை விரும்பினர். அடுத்து கிராமப்பள்ளி ஆசிரியரின் பங்கிற்கு, தீடா பாராவின் (Theda Bara) வாரிசான, நிதா தால்டியிடம்(Nita Taldi) என்னை அனுப்பினார்கள். அவள் அங்கே கேலிக்குரிய வகையில், விரல் நகங்களை வைத்திருந்தாள்.

த்ரூபோ: எனக்கு ஒரு காட்சி நினைவில் உள்ளது. கதை ஒரு அப்பாவி இளம் பள்ளி ஆசிரியரைப் பற்றியும், அவருக்குப் பிறகு ஒரு கடை மேலாளரைப் பற்றியதுமாக இருந்தது. அவள் ஒரு தனிமனிதனின் பாதுகாப்பின் கீழ், மலைகளில் தஞ்சம் அடைகிறாள். பின்னர் இறுதியில் திருமணம் செய்கிறாள். அது சரியா?

ஹிட்ச்காக்: நான் அதற்குப் பயப்படுகிறேன்.

⦁ தொடரும்…

இத்தொடரின் முந்தைய இதழை வாசிக்க: