ஹிட்ச்காக் & த்ரூபோ - தொடர்-2

த்ரூபோ: மிஸ்டர் ஹிட்ச்காக், நீங்கள், ஆகஸ்ட் 13, 1899 இல் லண்டனில் பிறந்தீர்கள். உங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம், அது உண்மையான கதையா?

ஹிட்ச்காக்: ஆம், அது உண்மைதான். அப்போது எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். என் தந்தை ஒரு குறிப்புடன் என்னைக் காவல் நிலையத்திற்கு அனுப்பினார். அதைப்படித்த காவல்துறைத் தலைவர், ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு என்னைச் சிறையில் பூட்டிவிட்டு, “குறும்பு செய்யும் சிறுவர்களுக்கு நாங்கள் இப்படித்தான் செய்வோம்” என்று கூறினார்.

த்ரூபோ: நீங்கள் ஏன் தண்டிக்கப்பட்டீர்கள்?

ஹிட்ச்காக்: எனக்குச் சிறிதளவு கூட இதுகுறித்த ஐடியா(யோசனை) இல்லை, உண்மையில், என் தந்தை, தனது “மாசில்லாத (கரும்புள்ளியில்லாத) சிறிய ஆட்டுக்குட்டி” என்றுதான் என்னை அழைப்பார். அப்படியிருக்கையில், நான் என்ன தவறு செய்தேன் என்று என்னால் உண்மையில் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை.

த்ரூபோ: உங்கள் தந்தை மிகவும் கண்டிப்பானவர், என்று கேள்விப்பட்டேன்…

ஹிட்ச்காக்: அவர் ஒரு பதட்டமான மனிதர் என்று மட்டும் சொல்லலாம். வேறு என்ன சொல்லமுடியும்? சரி, என் குடும்பத்தினர் தியேட்டரை நேசித்தார்கள். அந்தக் காலத்தைக் குறித்து, நான் மீண்டும் நினைக்கையில், நாங்கள் விசித்திரமான சிறிய குழுவாக இருந்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், ஒரு நல்ல குழந்தை என்று என்னை அழைக்கிற இடத்தில்தான் நான் இருந்தேன். குடும்ப ஒன்றுகூடல் கூட்டங்களில், நான் ஒன்றும் பேசாமல் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்திருப்பேன். நான் இதை ஒரு நல்ல ஒப்பந்தமாகப் பார்த்தேன், உற்றுநோக்கினேன். நான் எப்போதுமே அப்படித்தான் இருக்கிறேன், ஆம், இன்னும் அப்படித்தான் இருக்கிறேன். நான் எப்போதும் இந்தப் பண்பிலேயே இருந்தேன் – எப்போதும் ஒரு விளையாட்டுத் தோழர் இருந்ததாக, என்னால் நினைவுகூற முடியவில்லை. நானே சொந்தமாக புதிய விளையாட்டுக்களைக் கண்டுபிடித்து, எனக்கு நானே விளையாடிக்கொள்வேன்.

நான் மிகவும் சிறுவயதிலேயே பள்ளியில் சேர்க்கப்பட்டேன். லண்டனில் உள்ள செயிண்ட் இக்னேஷியல் கல்லூரியின், ஜேசுட் பள்ளி. எங்களுடையது கத்தோலிக்கக் குடும்பம் மற்றும் இங்கிலாந்தில், இதுவொரு விசித்திரமானதாக, இயற்கைக்கு மாறானதாக பார்க்கப்பட்டது. என் வாழ்க்கை ஜேஸுட்ஸ்டுடன் (Jesuit -பள்ளியின் பெயர்) கழிந்த இந்தக் காலகட்டத்தில்தான், எனக்குள் ஒரு வலுவான பயம் வளர்ந்தது – தார்மீக (நீதிசார்ந்த / நல்ல நடத்தைக்குரிய) பயம் - எந்தவொரு கெட்டவிஷயத்திலும் ஈடுபடுவதில் உள்ள பயம், நான் எப்போதும் அதைத் தவிர்க்க முயற்சித்தேன். ஏன்? ஒருவேளை உடல்ரீதியான பயத்திலிருந்து., உடல்ரீதியான தண்டனைக்கு நான் பயந்தேன். அந்நாட்களில் அவர்கள் மிகவும் கடினமான ரப்பரால் செய்யப்பட்ட பிரம்புகளை, அடிப்பதற்காகப் பயன்படுத்தினர். ஜேஸுட்ஸில் இன்னும் அம்முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்புகிறேன். இது சாதாரணமாகச் செய்யப்படவில்லை, இது உங்களுக்கு முன்பே தெரியும்; இதுவொரு தீர்ப்பை நிறைவேற்றுவது போன்றது. வகுப்புகள் முடிந்ததும் ஃபாதரைப் பார்ப்பதற்காக அடியெடுத்து வைக்குமாறு, அவர்கள் சொல்வார்கள். பின்னர் அவர் உங்கள் பெயரை பதிவேட்டில் வலியுறுத்திப் பதித்திருப்பார், தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதற்கான அறிகுறியுடன், தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக நீங்கள் அந்த நாள் முழுவதும் காத்திருப்பீர்கள்.

த்ரூபோ: படிப்பில் நீங்கள் சராசரி மாணவராக இருந்தீர்கள் என்பதையும், உங்கள் ஒரே வலுவான புள்ளி புவியியல் பாடம்தான் என்பதையும் நான் படித்திருக்கிறேன்.

ஹிட்ச்காக்: நான் வழக்கமாக உயர் மதிப்பெண் அடிப்படையில் நான்காவது அல்லது ஐந்தாவதாக இருப்பேன். முதல் இடத்தில் இருந்ததில்லை, இரண்டாம் இடத்திற்கு ஒன்று அல்லது இருமுறை வந்திருக்கிறேன், மற்றபடி பொதுவாக நான்காவது அல்லது ஐந்தாவது இடம்தான். எனவே, என் மனம் இங்கேயில்லை என்று கூறினர்.

த்ரூபோ: அந்நேரத்தில், ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பதுதான் உங்கள் லட்சியம் அல்லவா?

ஹிட்ச்காக்: ஆம், சிறுவர்களிடம் எப்போதுமே, அவர்கள் வளரும்போது “நீ என்னவாக வரவேண்டும்?” என்று கேட்கப்படுகிறது. நான் ஒருபோதும் ஒரு போலீஸ்காரராக இருக்க விரும்பவில்லை என்று என் கடனுக்குக் கூறப்பட வேண்டும். நான் ஒரு பொறியியலாளர் ஆக விரும்புகிறேன் என்று சொன்னபோது, என் பெற்றோர் அதனைத் தீவிரமாக எடுத்துக்கொண்டனர், பின்னர் அவர்கள் என்னை ஒரு சிறப்புப் பள்ளிக்கு அனுப்பினர், ஸ்கூல் ஆஃப் இஞ்ஜினியரிங் அண்ட் நேவிகேஷன், அங்கு நான் மெக்கானிக்கல், மின்சாரம், ஒலியியல் மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றைப் படித்தேன்.

த்ரூபோ: பின்னர் நீங்கள் அறிவியல் சாய்வைக் கொண்டிருந்தீர்களா?

ஹிட்ச்காக்: இருக்கலாம். பொறியியல் பற்றிய சில நடைமுறை அறிவை நான் பெற்றேன், ஆற்றல் மற்றும் இயக்க விதிகளின் கோட்பாடு மின்சார – கோட்பாட்டு மற்றும் செயல்முறையில். பின்னர் நான் வாழ்வதற்காக எதாவது செய்ய வேண்டியிருந்தது, எனவே, நான் ஹென்லி டெலிகிராஃப் (தந்தி) நிறுவனத்தில் வேலைக்குச் சென்றேன். அதேநேரத்தில் லண்டன் பல்கலைக்கழகத்தில் கலைப்படிப்பைப் படித்துக்கொண்டிருந்தேன். ஹென்லீயில் மின்சார தந்தி வடங்களில் நிபுணத்துவம் பெற்றேன். நான் பத்தொன்பதாவது வயதில் இருந்தபோது தொழில்நுட்ப மதிப்பீட்டாளராக ஆனேன்.

த்ரூபோ: அந்நேரத்தில் நீங்கள் மோஷன் பிக்சர்ஸ் (அசையும் படங்கள்) மீது ஆர்வம் கொண்டிருந்தீர்களா?

ஹிட்ச்காக்: ஆம், பல ஆண்டுகளாக. நான் படங்கள் மற்றும் மேடை நாடகங்கள் மீது மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன், பெரும்பாலும் வெளியான முதல் நாளே சென்றுவிடுவேன். பதினாறு வயதிலிருந்து திரைப்படப் பத்திரிக்கைகளைப் படித்தேன். அவை ரசிகர்களுக்கான அல்லது வேடிக்கையான பத்திரிக்கைகள் அல்ல, ஆனால் எப்போதும் தொழில்முறை மற்றும் வர்த்தக ஆவணங்களாக இருந்தன. இன்னும், நான் லண்டன் பல்கலைக்கழகத்தில் கலை பயின்றுகொண்டிருந்ததால், ஹென்லி என்னை விளம்பரத் துறைக்கு மாற்றியது, அங்கு எனக்கு வரைவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

த்ரூபோ: என்ன வகையான ஓவியங்கள்/ வரைபடங்கள்?

ஹிட்ச்காக்: மின்சார தந்திகளின் விளம்பரங்களுக்கான வடிவமைப்புகள். இந்த வேலைதான், சினிமாவை நோக்கிய என் முதல் படியாகும். இது களத்தில் இறங்க எனக்கு உதவியது.

த்ரூபோ: அந்த நேரத்தில் உங்களைக் கவர்ந்த சில படங்களைக் குறிப்பாக ஞாபகமூட்ட முடியுமா?

ஹிட்ச்காக்: நான் அடிக்கடி தியேட்டருக்குச் (நாடக அரங்கம்) சென்றிருந்தாலும், நான் திரைப்படங்களுக்கே முன்னுரிமை அளித்தேன், பிரிட்டிஷ் திரைப்படங்களை விட அமெரிக்கப் படங்களின்பால் அதிகமாக ஈர்க்கப்பட்டேன். சாப்ளின், கிரிஃபித், அனைத்து பாரமவுண்ட் (தயாரிப்பு நிறுவனம்) பிரபல சாகசக்காரர்களின் படங்கள், பஸ்டர் கீடன், டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், மேரி பிக்போர்டு மற்றும் யு.எஃப்.ஏவுக்கு முந்தைய நிறுவனமான டெக்லா – பயோஸ்கோப்பின் ஜெர்மன் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். முர்னாவ் அவர்களுக்காக வேலை செய்தார்.

த்ரூபோ: உங்களிடம் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு படத்தை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?

Figure 1 fritz lang

ஹிட்ச்காக்: டெக்லா - பயோஸ்கோப்பின் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாகிய Der milde Tad.

த்ரூபோ: அது ஃப்ரிட்ஸ் லாங்க் (Fritz Lang) இயக்கிய திரைப்படமல்லவா? அதன் பிரிட்டிஷ் தலைப்பு, Destiny என்று நம்புகிறேன்.

ஹிட்ச்காக்: நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அப்படத்தின் முன்னணிக் கதாபாத்திரம் (கதாநாயகன்) பெர்ன்ஹார்ட் கோய்ட்ஸ்கே (Bernhard Goetzke.) என்று ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.

த்ரூபோ: முர்னாவின் படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தனவா?

ஹிட்ச்காக்: ஆம், ஆனால் அவை பின்னர் வந்தன. 1923 அல்லது 1924ல் வந்தன.

த்ரூபோ: 1920களில் என்ன படங்கள் காட்டப்பட்டன?

ஹிட்ச்காக்: சரி, நான் மான்சியர் ப்ரின்ஸ் (Monsieur Prince) படத்தினை நினைவூட்டுகிறேன். இங்கிலாந்தில் இது விஃபிள்ஸ் (Whiffles) என்று அழைக்கப்பட்டது.

த்ரூபோ: “எல்லா இயக்குனர்களையும் போலவே, நானும் கிரிஃபித்தால் தாக்கம் பெற்றேன்.” என்ற மேற்கோளை நீங்கள் அடிக்கடி கூறியிருக்கிறீர்கள்.

ஹிட்ச்காக்: குறிப்பாக, இண்டோலரன்ஸ் (Intolerance) மற்றும் பர்த் ஆஃப் எ நேஷன் (The Birth of a Nation) ஆகியவற்றை நினைவில் கொள்கிறேன்.

த்ரூபோ: ஹென்லீயிலிருந்து ஒரு திரைப்பட நிறுவனத்திற்குச் சென்றது, எப்படி நடந்தது?

ஹிட்ச்காக்: பாரமவுண்டின் புகழ்பெற்ற பிளேயர்ஸ் லாஸ்கி என்ற அமெரிக்க நிறுவனம், லண்டனில் இஸ்லிங்டனில் (Islington) ஒரு கிளையைத் திறப்பதாக ஒரு வர்த்தக பத்திரிக்கையில் படித்தேன். அவர்கள் அங்கு ஸ்டுடியோக்களை உருவாக்கப் போகிறார்கள், மற்றும் அவர்கள் ஒரு தயாரிப்பு அட்டவணையையும் அறிவித்தனர். மற்றவற்றுடன், இன்னின்ன புத்தகத்திலிருந்து எடுக்கப்போகிற படங்கள். தலைப்புகள் எனக்கு நினைவில் இல்லை. ஹென்லீயில் பணிபுரியும்போது, நான் அந்தப் புத்தகத்தைப் படித்தேன், இறுதியில் தலைப்புகளை விளக்குவதற்கு உதவும் வகையில், பல வரைபடங்களை பின்னர் உருவாக்கினேன்.

த்ரூபோ: ”தலைப்புகள்” என்பதன் மூலம், மெளனத் திரைப்படங்களில் உரையாடலை உள்ளடக்கிய குறிப்புகள், படத்தின் இடையிடையே காட்டுப்படுமே, அதைச் சொல்கிறீர்களா?

ஹிட்ச்காக்: ஆம், அதுதான். அந்த நேரத்தில் அந்தத் தலைப்புகள் (குறிப்புகள்) வரைந்து விளக்கப்பட்டன. ஒவ்வொரு அட்டையிலும், உங்களிடம் கதை தலைப்பு, வசனம் மற்றும் ஒரு சிறிய வரைபடமும் (ஓவியம்) இருந்தது. இந்தக் கதை தலைப்புகளில் மிகவும் பிரபலமானது, ”விடியல் வந்தது”, “மறுநாள் காலை….” போன்றவையாக இருந்தன. உதாரணமாக, அந்த வரி வாசிக்கப்பட்டால்: ”இந்த நேரத்தில் ஜார்ஜ் மிக வேகமான வாழ்க்கையை நடத்திவந்தார்”, மிகவும் எளிமையாக, நான் அந்த வாக்கியத்திற்குக் கீழே, ஒவ்வொரு முனையிலும் ஒரு சுடருடன் ஒரு மெழுகுவர்த்தியை வரைவேன்,


த்ரூபோ: எனவே நீங்கள் இந்த முயற்சிகளை எடுத்து, பின்னர் உங்கள் படைப்புகளை சினிமாவில் பிரபல நபர்களிடம் சமர்ப்பித்தீர்களா?

ஹிட்ச்காக்: சரியாகச் சொன்னீர்கள். எனது வரைபடங்களை அவர்களுக்குக் காட்டினேன். அவர்கள் என்னை ஒருமுறையிலேயே வேலைக்கு வைத்தார்கள். பின்னர், நான் அந்த டைட்டில் (தலைப்பு) துறையின் தலைமைப் பொறுப்பாளராகவும் ஆனேன். நான் ஸ்டுடியோவின் எடிட்டோரியல் டிபார்ட்மெண்டிற்கு வேலைக்குச் சென்றேன். அந்தத் துறையின் தலைவருக்குக் கீழ் இரண்டு அமெரிக்க எழுத்தாளர்கள் இருந்தனர், மற்றும் ஒரு படம் (வரைபடம்/ஓவியம்) முடிந்ததும், எடிட்டோரியல் துறையின் தலைவர் தலைப்புகளை எழுதுவார், அல்லது அசல் ஸ்கிரிப்டில் உள்ளது போலவே, உடையாடலை மீண்டும் எழுதுவார். ஏனென்றால், அந்த நாட்களில் கதைசொல்லும் தலைப்புகள் மற்றும் பேசப்பட்ட தலைப்புகளின் உதவியோடு, ஒரு திரைக்கதையின் கருத்தை முற்றிலுமாக மாற்ற முடியும்.

த்ரூபோ: எப்படி?

ஹிட்ச்காக்: நடிகர் பேசுவதைப் போல நடிக்கிறார், பின்பு அந்த உரையாடல் தலைப்புகள் திரையில் தோன்றுகின்றன, அதில் நாம் விரும்பிய வார்த்தைகளை எழுதி, அது அந்த நடிகர், அவரது வாயால் பேசியதுபோல மாற்றியமைக்கலாம். பல மோசமான படங்கள் இந்த வழியால் தப்பித்துக்கொண்டது. உதாரணமாக, ஒரு டிராமா மோசமாக படமாக்கப்பட்டு, மற்றும் அது அபத்தமானதாகவும் இருந்தது என்றால், அவர்கள் நகைச்சுவை சார்ந்த தலைப்பு அட்டைகளை, கிடைத்த எல்லா வழிகளிலும் சொருகுவார்கள், இதனால், படம் பெருவெற்றி பெறும். ஏனெனில், இப்போது அது ஒரு நையாண்டித் (சமூகத்தில் உள்ள குறைகளை நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டும்) திரைப்படமாக மாறியதை, நீங்கள் பார்க்கலாம். இதன் வாயிலாக, ஒருவர் உண்மையிலேயே எதையும் செய்யமுடியும், படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை எடுத்து, படத்தின் துவக்கக்காட்சியாக வைக்கலாம். எதையும் செய்யலாம்.

Figure 2 பெட்டி காம்ப்சன் மற்றும் கிளைவ் ப்ரூக் வுமன் டு வுமன். வுமன் டு வுமனுக்காக ஹிட்ச்காக் உருவாக்கிய அரங்கம்.

த்ரூபோ: திரைப்பட உருவாக்கத்தின் உட்புறத்தையும் பார்ப்பதற்கு இது உங்களுக்கு வாய்ப்பளித்ததா?

ஹிட்ச்காக்: ஆம், அந்த நேரத்தில் பல அமெரிக்க எழுத்தாளர்களைச் சந்தித்தேன், ஸ்கிரிப்டை எவ்வாறு எழுதுவது என்று கற்றுக்கொண்டேன். சில நேரங்களில் ஒரு கூடுதல் காட்சி (ஆனால் நடிப்புக் காட்சி அல்லாத) தேவைப்படும்போது, அவர்கள் அதைப் படமாக்க என்னை அனுமதிப்பார்கள். இருப்பினும், இங்கிலாந்தின் பிரபல சாகசக்காரர்கள் (இயக்குனர்கள்) உருவாக்கிய படங்கள், அமெரிக்காவில் தோல்வியடைந்தன. எனவே, ஸ்டுடியோ, பிரிட்டிஷ் தயாரிப்பாளர்களுக்கான வாடகை ஸ்டுடியோவாக மாறியது. இதற்கிடையில், பத்திரிக்கை ஒன்றில், நான் ஒரு நாவலைப் படித்தேன், ஒரு பயிற்சியாக இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஸ்கிரிப்டை எழுதினேன், ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தச் சொத்துக்கான பிரத்யேக உலக உரிமைகள் இருப்பதை நான் அறிவேன், வெறுமனே இது ஒரு பயிற்சிக்காகத்தான் என்பதால், நான் அதைச் செய்தேன். பிரிட்டிஷ் நிறுவனங்கள், இஸ்லிங்டன் ஸ்டுடியோக்களை எடுத்துக்கொண்டபோது, வேலைக்காக நான் அவர்களை அணுகினேன் மற்றும் உதவி இயக்குநர் வேலையில் தரையிறங்கினேன்.

த்ரூபோ: மைக்கேல் பால்கோனுடன் (Michael BaIcon)?

ஹிட்ச்காக்: இல்லை, இன்னும் இல்லை. அதற்கு முன்பு Always Tell Your Wife என்ற படத்தில் பணிபுரிந்தேன். இதில் மிகவும் பிரபலமான லண்டன் நடிகர் சீமோர் ஹிக்ஸ் (Seymour Hicks) நடித்தார். ஒரு நாள் அவர் இயக்குனரிடம் சண்டையிட்டு, என்னிடம், “நீங்களும் நானும் இணைந்து, இந்த விஷயத்தை நாமே முடித்துவிடுவோம்” என்று கூறினார். எனவே, நான் அவருக்கு உதவி செய்தேன், நாங்கள் அந்தப் படத்தை முடித்தோம். இதற்கிடையில் மைக்கேல் பால்கோன் உருவாக்கிய நிறுவனம் ஸ்டுடியோவில் குத்தகைதாரராக ஆனது, இந்தப் புதிய துணிகர முயற்சியில், உதவி இயக்குநரானேன்.

விக்டர் சாவில் மற்றும் ஜான் ஃப்ரீட்மேன் ஆகியோருடன் பால்கன் அமைத்த நிறுவனம் அது. ஒரு நாடகத்தின் உரிமையை அவர்கள் வாங்கினர். இது வுமன் டு வுமன் (Woman to Woman) என்று அழைக்கப்பட்டது. பின்னர் அவர்கள், “இப்போது எங்களுக்கு ஒரு ஸ்கிரிப்ட் தேவை” என்று கூறினர். ”நான் இதை எழுத விரும்புகிறேன்” என்று அவர்களிடம் சொன்னேன். ”நீயா? நீ இதுவரை என்ன செய்திருக்கிறாய்?” என்றார்கள். “நான் உங்களுக்குச் சிலவற்றைக் காட்ட விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு நான் ஒரு பயிற்சிக்காக எழுதிய தழுவலை அவர்களுக்குக் காட்டினேன். அதில் அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டனர், எனக்கு வேலை கிடைத்தது. இதெல்லாம் 1922 இல் நடந்தது.

Figure 3 Number Thirteen, 1922

த்ரூபோ: ம்ம்ம்… உங்களுக்கு அப்போது இருபத்தி மூன்று வயது. ஆனால், அதற்கு முன்பு நம்பர் தெர்டீன் (Number Thirteen) என்ற சிறிய படத்தை நீங்கள் இயக்கினீர்களல்லவா?

ஹிட்ச்காக்: இரண்டு ரீலர். அது ஒருபோதும் முடிக்கப்படவில்லை.

த்ரூபோ: இது ஒரு ஆவணப்படமா?

ஹிட்ச்காக்: இல்லை. சாப்ளினுடன் பணிபுரிந்த ஒரு பெண் ஸ்டுடியோவில் வேலைசெய்து வந்தார். அந்த நாட்களில் சாப்ளினுடன் பணிபுரிந்த எவரும் சிறந்த Drawer- ஆக இருந்தனர். அவர் ஒரு கதையை எழுதியிருந்தார், எங்களுக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தது. படவேலைகளை ஆரம்பித்தோம். ஆனால், உண்மையில், இது மிகவும் நன்றாக இல்லை. இது ஒருபுறம் இருக்க, இந்தக் கட்டத்தில்தான் அமெரிக்கர்கள் தங்கள் ஸ்டுடியோக்களை மூடினர்.

த்ரூபோ: நான் வுமன் டு வுமனைப் (Woman to Woman) பார்த்ததில்லை. சொல்லப்போனால், அதன் கதைகூட எனக்குத் தெரியாது.

ஹிட்ச்காக்: நீங்கள் சொன்னதுபோல, அப்போது எனக்கு இருபத்திமூன்று வயது, நான் என் வாழ்க்கையில் வெளியே ஒரு பெண்ணுடன் இருந்ததில்லை. நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் குடித்ததில்லை. இந்தக் கதை லண்டனில் வெற்றிபெற்ற ஒரு நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியைப் பற்றியது. விடுப்பில், அவர் பாரிஸில் ஒரு நாட்டிய மங்கையுடன் உறவு வைத்துள்ளார், பின்னர் அவர் மீண்டும் முன்னால் செல்கிறார். அவர் குண்டு விழுந்த அதிர்ச்சியில், தன் நினைவை இழக்கிறார். அவர் இங்கிலாந்து திரும்பி சமூகப்பெண்ணை மணக்கிறார். பின்னர், நடன மங்கை ஒரு குழந்தையுடன் திரும்புகிறார். முரண்பாடு (மோதல்)…. கதை நடன மங்கையின் மரணத்துடன் முடிகிறது.

Figure 4 The White Shadow (1923)

த்ரூபோ: கிரஹாம் கட்ஸ் (Graham Cutts) அந்தப் படத்தை இயக்கியுள்ளார். நீங்கள் தழுவல் மற்றும் உரையாடலைச் செய்தீர்கள் மற்றும் உதவி இயக்குனராகவும் இருந்தீர்களல்லவா?

ஹிட்ச்காக்: அதை விட! என் நண்பர், கலை இயக்குனரால் படத்தில் வேலைசெய்ய முடியவில்லை. எனவே, நான் கலை இயக்குனராகவும் பணியாற்ற முன்வந்தேன். ஆகையால், நான் இதையெல்லாம் செய்து மேலும் தயாரிப்புக்கும் (புரொடக்‌ஷன்) உதவினேன். என் வருங்கால மனைவி ஆல்மா ரெவில்லே (Alma Reville) இப்படத்தின் படத்தொகுப்பாளராகவும், ஸ்கிரிப்ட் பெண்ணாகவும் (Script girl) இருந்தார். அந்த நாட்களில் ஸ்கிரிப்ட் பெண்ணும், படத்தொகுப்பாளரும் ஒரே நபராகவே இருந்தனர். அவர்தான், இரண்டையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இன்று, ஸ்கிரிப்ட் பெண், உங்களுக்குத் தெரிந்தபடி அதிகமான ஏடுகளை வைத்திருக்கிறார். அவள் ஒரு உண்மையான கணக்கெழுத்தாளர். அந்தப் படத்தில் பணிபுரியும்போதுதான், நான் முதன்முதலில் என் மனைவியைச் சந்தித்தேன். பின்னர் நான் பல படங்களுக்கு இந்தப் பல்வேறு செயல்பாடுகளைச் செய்தேன். இரண்டாவது தி வைட் ஷேடோ (The White Shadow), மூன்றாவது தி பேஷனேட் அட்வென்ச்ச்சர் (The Passionate Adventure), மற்றும் நான்காவது தி ப்ளாக்கார்ட் (The Blackguard). பின்னர் தி ப்ரூட்ஸ் ஃபால் (The Prude's Fall) இருந்தது.

த்ரூபோ: நீங்கள் இப்போது அவற்றை நினைவுபடுத்துகையில், அந்தப் படங்கள் அனைத்தும் ஒரேமாதிரியானவை என்று நீங்கள் கூறுவீர்களா? அல்லது உங்களுக்கு முன்னுரிமை இருக்கிறதா?

ஹிட்ச்காக்: அவற்றில், வுமன் டு வுமன் (Woman to Woman) சிறந்தது மற்றும் மிகவும் வெற்றிகரமான படம். இந்த வரிசையின் கடைசி படமான தி ப்ரூட்ஸ் ஃபால் (The Prude's Fall) உருவாக்கும்போது, இயக்குனர் தனது பெண் தோழியையும் லொகேஷனுக்கு அழைத்துவந்தார். நாங்கள் வெனிஷுக்குச் சென்றோம். இது அதிக செலவுள்ள விஷயம். இயக்குனரின் பெண் தோழி வெளிப்படையாகவே எந்த லொகேஷனையும் ஒப்புக்கொள்ளவில்லை, எனவே, நாங்கள் ஒரு காட்சியைக் கூட படமாக்காமல் ஸ்டுடியோவுக்கே திரும்பினோம். படம் முடிந்ததும், இயக்குனர் தயாரிப்பாளரிடம், ’அவனுக்கு இனி நான் தேவையில்லை’, என்றார். யூனிட்டில் யாரோ ஒருவர் ”அரசியல்”உடன் இருந்திருக்கலாம் என்று நான் எப்போதும் சந்தேகிக்கிறேன்.
த்ரூபோ: இந்தப் படங்களை முடித்துத் திரும்ப, எவ்வளவு காலம் ஆனது?

ஹிட்ச்காக்: ஒவ்வொன்றிற்கும் ஆறுவாரங்கள் எடுத்தது.
த்ரூபோ: நான், ஒருவரின் திறமை மிகக் குறைந்த தலைப்புகள் (இடைச்செருகல் கதைசொல்லி அட்டைகள்) தேவைப்படுகிற ஒரு படத்தை உருவாக்கும் திறனால் அளவிடப்படுகிறது என்று நினைக்கலாமா?

ஹிட்ச்காக்: மிகச்சரியாக.

த்ரூபோ: இன்னும், பல ஸ்கிரிப்டுகள் மேடை நாடகங்களிலிருந்து தழுவப்படவில்லையே?

ஹிட்ச்காக்: நான் ஒரு மெளனத் திரைப்படத்தை உருவாக்கினேன், தி ஃபார்மர்ஸ் வைஃப் (The Farmer's Wife), எல்லா உரையாடல்களையும் கொண்ட ஒரு நாடகம், ஆனால் தலைப்புகளைப் (உரையாடல் அட்டைகளை) பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சித்தோம், அதற்குப் பதிலாக, முடிந்தவரை சித்திர (படங்கள் கொண்ட) வெளிப்பாட்டைப் பயன்படுத்தினோம். எந்தத் தலைப்புகளும் (கதைசொல்லல் அட்டைகளும்) இல்லாமல், உருவாக்கப்பட்ட ஒரே படம் எமில் ஜானிங்க்ஸ் (Emil Jannings) நடித்த தி லாஸ்ட் லாஃப் (The Last Laugh) மட்டுமே என்று நினைக்கிறேன்.

த்ரூபோ: இது ஒரு சிறந்த படம், முர்னாவின் சிறந்த படைப்புகளில் ஒன்று.

Figure 5 The Last Laugh (F.W. Murnau, 1924)

ஹிட்ச்காக்: நான் யு.எஃப்.ஏ.வில் பணிபுரிந்தபோது, அவர்கள் அதை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். அந்தப் படத்தில் முர்னாவ், ஒரு வகையான எஸ்பெராண்டோ (உலக வழக்குக்கென உண்டாக்கப்பட்ட செயற்கை மொழி) மாதிரியிலான தொனியைப் பயன்படுத்தி, ஒரு உலகளாவிய மொழியை நிறுவ முயன்றார். அனைத்துத் தெரு அடையாளங்களும், சுவரொட்டிகளும், கடை அடையாளங்களும் இந்த செயற்கையான மொழியில் இருந்தன.

த்ரூபோ: நல்லது, எமில் ஜானிங்க்ஸின் வீட்டில் இருந்த சில அடையாளங்கள் (குறிகள்) ஜெர்மன் மொழியில் இருந்தன, ஆனால், கிராண்ட் ஹோட்டலில் இருந்தவை இந்த எஸ்பெராண்டோவில் இருந்தன. நீங்கள் படித்துக்கொண்டிருந்தபோது…. திரைப்பட உருவாக்கத்தின் தொழில்நுட்ப அம்சத்தில் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஹிட்ச்காக்: அமெரிக்கத் திரைப்படங்களின் போட்டோகிராஃபியின் மேன்மையை பிரிட்டிஷ் படங்களுடன் ஒப்பிடுகையில், பலவற்றை அறிந்துகொண்டேன். பதினெட்டு வயதில், ஒரு பொழுதுபோக்காக போட்டோகிராஃபி சார்ந்து படித்துக்கொண்டிருந்தேன். உதாரணமாக, பிரிட்டிஷ் படங்களில் பிம்பங்களை, அதன் பின்னணியிலிருந்து பிரிக்கமுடியாத அளவிற்குக் கலந்திருக்கிறபொழுது, அமெரிக்கர்கள் எப்போதுமே, பின்னொளிகளுடன் (Backlights) பிம்பங்களை, அதன் பின்னணிச்சூழலிலிருந்து பிரிக்க முயற்சிப்பதை நான் கவனித்தேன். பிரிவு இல்லையென்றால், நிவாரணமும் இல்லை.

த்ரூபோ: இது 1925-க்கு நம்மை அழைத்துச் செல்கிறது. தி ப்ரூட்ஸ் ஃபால் (The Prude's Fall) படப்பிடிப்பைத் தொடர்ந்து, நீங்கள் அவரது உதவியாளராகத் தொடர இயக்குனர் விரும்பவில்லை. மற்றும், நீங்கள் ஒரு இயக்குனராக வேண்டும் என்று மைக்கேல் பால்கன் அறிவுறுத்துகிறார்.

ஹிட்ச்காக்: பால்கன், “நீங்கள் ஒரு படத்தை எப்படி இயக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “இதைப்பற்றி ஒருபோதும் சிந்தித்ததில்லை” என்று பதிலளித்தேன். உண்மையில், நான் சிந்தித்ததில்லை. ஸ்கிரிப்டுகள் மற்றும் ஆர்ட் டைரக்‌ஷன் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்; ஒரு இயக்குனராக என்னை நான் நினைத்ததில்லை. போகட்டும், எப்படியிருந்தாலும், ஆங்கிலோ – ஜெர்மன் படத்திற்கான திட்டம் (புரொஜக்ட்) ஒன்று இருப்பதாக பால்கன் என்னிடம் கூறினார். ஸ்கிரிப்டுக்கு மற்றொரு எழுத்தாளர் நியமிக்கப்பட்டார், நான் மியூனிக் (Munich) சென்றேன். என் மனைவி, அல்மா, எனக்கு உதவியாளராக இருப்பார். அப்போது நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனாலும், நாங்கள் பாவத்தில் வாழவில்லை: நாங்கள் இன்னும் மிகவும் தூய்மையாக இருந்தோம்.

த்ரூபோ: ஆலிவர் சாண்டிஸின் (Oliver Sandys) நாவலில் இருந்து எடுக்கப்பட்டது தி ப்ளெஷர் கார்டன் (The Pleasure Garden). அதில் நிறைய ஆக்‌ஷன் * இருந்ததை, நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.

ஹிட்ச்காக்: மெலோட்ராமாடிக். ஆனால், அதில் பல சுவாரஸ்யமான காட்சிகள் இருந்தன. படப்பிடிப்பு பற்றி சிலவற்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஏனென்றால் அதுதான் நான் இயக்கிய முதல் படம், அது எனக்கு இயல்பானதாக (இயற்கையானதாக) இருந்தது, ஒருவேளை, எனக்கு நாடக உணர்வு இருந்ததால் இதெல்லாம் நடந்தது என்று நினைக்கிறேன். எனவே, சனிக்கிழமை மாலை எட்டு மணிக்கு, இருபது நிமிடங்கள் இருக்கும்போது, நான் மியூனிக் இரயில் நிலையத்தில், இத்தாலியில் லொகேஷன் ஷூட்டிங்கிற்குப் புறப்படத் தயாராக இருந்தேன். ஸ்டேஷனில், ரயில் கிளம்புவதற்காகக் காத்திருக்கிறேன். அப்போது நானே, என்னிடம் “இது உங்கள் முதல் படம்” என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.

இப்போதெல்லாம் நான் லொகேஷனை விட்டு வெளியேறும்போது, நூற்று நாற்பது பேர் கொண்ட குழுவுடன் செல்ல வேண்டும். ஆனால் அப்போது ஒரு முன்னணி மனிதர் மைல்ஸ் மாண்டர் (Miles Mander) மட்டுமே இருந்தார்; ஒளிப்பதிவாளர் பரோன் விண்டிக்மிலியா (Baron Vintigmilia); மற்றும் மூழ்கடிக்கப்பட்ட ஒரு சொந்த ஊர் பெண்ணாக நடிக்க வேண்டிய ஒரு இளம் பெண். ஒரு நியூஸ் ரீல் கேமராமேனும் இருந்தனர், ஏனென்றால் நாங்கள் ஜெனோவாவில் (Genoa) கப்பல் புறப்படும் காட்சியைப் படம்பிடிக்கப் போகிறோம். நாங்கள் ‘கப்பல் புறப்படும்’ காட்சியைக், கரையில் ஒரு கேமராவும், கப்பலில் உள்ள கப்பல்தளத்தில் மற்றொரு கேமராவையும் வைத்துப் படமாக்கப் போகிறோம்.

Figure 6 The Pleasure Garden, Alfred Hitchcock’s Very First Feature Film (1925)

நடிர்களை எடுப்பதற்கும் மற்றும் நியூஸ் ரீல் கேமராமேன், பிரியாவிடை பெறும்போது கையசைக்கும் கதாபாத்திரங்களைப் படம்பிடிக்கக் கப்பல்துறைக்குத் திரும்புவதற்கும், கப்பல், துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு, எங்களை உள்ளே அனுமதிக்கின்றனர். அடுத்த காட்சி ஷான் ரெமோவில் (San Remo) படமாக்கப்பட இருந்தது. இந்தக் காட்சியில் பூர்வீக (சொந்த ஊர்) பெண், தற்கொலை செய்துகொள்ள அலைந்துதிரியும் கடலுக்குச் செல்கிறாள். மற்றும் கதையின் வில்லனாக இருக்கும் லெவெட் (Levett), அந்தப் பெண்ணின் தலையை நீருக்கடியில் பிடித்துக்கொண்டு, வெளியேசென்று அவள், இறந்துவிட்டாள் என்பதை உறுதிப்படுத்த, அவசரப்படுகிறான். பிறகு, அந்த உடலை மீண்டும் கரைக்குக் கொண்டுவந்து, ”நான் அவளைக் காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்” என்று சொல்கிறான்.

பின்வரும் காட்சிகள் லேக் கோமோ(Lake Como)வில் வில்லா டி எஸ்டே (Villa d'Este) ஹோட்டலில் நடைபெறுகின்றன, தேனிலவு, ஏரியில் நடக்கிற அழகான காதல் காட்சிகள், அழகான ரொமான்ஸ் போன்ற இன்னும்பல…

அன்று மாலை மியூனிக்கில் உள்ள நடைமேடையில், என் மனைவியும் உடன் இருந்தார். நாங்கள் ஒருவருக்கொருவர் பேசுகிறோம். அவள் எங்களுடன் வரவில்லை, அவளுடைய வேலை – உங்களுக்குத் தெரியும், அவள் அவ்வளவு உயரமானவள்; வயது இருபத்தின் நான்கு, பின்னர் – செர்போர்க்கிற்குச் (Cherbourg) சென்று, ஹாலிவுட்டிலிருந்து வருகிற மிக முக்கியமான பெண்மணியை அழைத்து வரவேண்டும். அப்பெண்மணி விர்ஜினியா வல்லி (Virginia Valli), அந்நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரம், யுனிவர்சலின் மிகப்பெரிய - மற்றும் பாட்ஸி(Patsy)யில் நடித்தவர். என் வருங்கால மனைவி, அவரை செர்போர்க்கில் உள்ள அக்விடானியா(Aquitania)விலிருந்து அழைத்துக்கொண்டு, பாரிஸிக்குச் சென்று, அங்கே துணிமணி அடுக்குகளை வாங்கிக்கொண்டு, பின்னர் எங்களை வில்லா டி எஸ்டேவில் சந்திக்க வேண்டும். அவ்வளவுதான்.

இந்த ரயில் எட்டு மணிக்கு புறப்படவிருப்பதாக அட்டவணையிடப்பட்டுள்ளது. இப்போது எட்டு மணி ஆவதற்கு இரண்டு நிமிடங்கள் உள்ளன. மைல்ஸ் மந்தர் (Miles Mander) என்ற நடிகர், என்னிடம், ”ஓ., கடவுளே! நான் எனது மேக்கப் (ஒப்பனை) பெட்டியை டாக்ஸியிலேயே விட்டுவிட்டேன்” என்று கூறிவிட்டு ஓடினார்.
நான் அவருக்குப் பின் கத்தினேன், “நாங்கள் ஜெனோவாவில் உள்ள ஹோட்டல் பிரிஸ்டலில் இருப்போம். நாளை இரவு இரயிலைப் பிடியுங்கள், ஏனென்றால், நாம், செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பு நடத்தவிருக்கிறோம்.”

இது நடந்தது சனிக்கிழமை மாலை என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எனவே, நாங்கள் படப்பிடிப்பினைத் தயார்செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை காலை ஜெனோவாவில் இருக்க வேண்டும். இப்போது மணி எட்டு ஆகிறது, ஆனால் ரயில் இன்னும் புறப்படவில்லை. சில நிமிடங்கள் செல்கின்றன. நேரம்: எட்டு பத்து. ரயில் நகரத் துவங்கியது. திடீரென்று தடை(உட்புக விடாமல் தடுக்கும் சுவர்)யில் பெரிய வரிசை இருக்கிறது, மைல்ஸ் மந்தர் வாயிற்கதவின் மீது தாவிக்குதிப்பதை நான் பார்க்கிறேன், மூன்று ரயில்வே அதிகாரிகள் அவரை நடைமேடையிலிருந்து துரத்துகிறார்கள். அவர் தனது மேக்கப் பெட்டியை கண்டுபிடித்ததோடு, சூழ்நிலையைக் கையாண்டு, இரயிலின் கடைசிப் பெட்டிக்குள் தாவிவிட்டார். ஃப்லிம் டிராமாவின் முதல் சிறுபகுதி முடிந்துவிட்டது. ஆனால் இது ஆரம்பம் மட்டுமே!

-தொடரும்…

[இன்று ஹிட்ச்காக் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அவரது திரைப்படங்கள் சினிமாத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அதுவும் குறிப்பாக இயக்கம் சார்ந்த பிரிவுகளில் தேர்ச்சி பெற விரும்புபவர்களுக்குப் பாலபாடமாக இருக்கின்றன. ஆனால், அதே ஹிட்ச்காக் தனது முதல் படத்தை எடுக்கிறபொழுது, பட்ட இன்னல்கள், பணப்பிரச்சினைகள், அதை அவர் சமாளித்து வெற்றிகரமாகப் படப்பிடிப்பை முடித்த விதம், அவரது படத்தைப் போலவே சஸ்பென்ஸ் நிரம்பியதாக இருக்கிறது. பெரும்பாலானோர் முதல் படத்தில் சந்திக்கவிருக்கிற சிக்கல்களைத் தவிர்க்கவே, அதிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். ஆனால், சினிமாவில் பெரிய ஜாம்பவான்களாக மதிக்கப்படுகிறவர்கள் கூட, அவர்களது ஆரம்பகாலப் படங்களில் அத்தகைய நெருக்கடியைக் கடந்தே வந்திருக்கின்றனர், என்பது அப்பகுதிகளைப் படிக்கிறபொழுது தெரியவருகிறது. அத்தகைய சுவாரஸ்யமான பகுதியை பேசாமொழியின் அடுத்த இதழில் படிக்கக் காத்திருங்கள்…]