I don't feel at like home in this world anymore – திரைப்பட அறிமுகம்

சமகால உலகசினிமா வினையின் எதிர்வினை

தங்களைச் சுற்றி நிகழும் மெளன வன்முறைகளோடு சிலர் ஒத்துப்போய் அதனோடு இணைந்து வாழப் பழகிக்கொள்கின்றனர். இன்னும் சிலர் அதை எதிர்த்துக் கேள்விகளும் கேட்க முடியாமல், தன் மனதிற்குள்ளேயே புலுங்கி, இந்த உலகத்திலிருந்து தன்னைப் பிரித்தெடுத்து அந்நியப்படுத்திக்கொள்கிறார்கள். காலம் செல்லச் செல்ல அவர்களுக்கு சக மனிதர்கள் மேலும், இந்த சமுதாயத்தின் மீதும் எவ்வித பற்றுதலும் அற்று, தனக்கான வேலைகளை மட்டும் செய்து பழகிக்கொள்ளக்கூடிய மனநிலைக்கும் வந்துவிடுகின்றனர். அத்தகைய மனிதர்களிடம் சென்று பேசிப்பார்த்தோமானல், தன்னைச் சுற்றி வாழ்பவர்களின் பொறுப்பற்ற தனமும், அக்கறையின்மையையும், இன்னொரு சக உயிரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அவர்களின் நடவடிக்கைகளும் தங்களை எந்தளவிற்குப் பாதித்திருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்வார்கள். நிச்சயம் அவர்கள் இந்த உலகோடு ஒட்டுதலை ஏற்படுத்திக்கொள்ள முயன்று தோற்றுப்போனவர்கள். 

Image result for i don't feel at home in this world anymore

சரி, அடுத்து பொறுப்பற்ற தன்மையோடு நடந்துகொள்கிற மனிதர்களிடம் சென்று பேசுவோமானால், அவர்களுக்கென்றும் ஒரு சில நியாயங்களை அவர்கள் பக்கம் வைத்திருக்கின்றனர். அது குறித்து அவர்கள் பேசுவார்கள். சாலையில் நீங்கள் நடந்துசென்றுகொண்டிருக்கும்பொழுது, உங்களை ஒருவர் இடித்துவிட்டு ‘மன்னிப்பு’ கூட கேட்காமல் அவசரமாக பேருந்தில் ஏறிச் செல்கின்றார் என்றால், அவரது செயல்கள் உங்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தும். இது ஒரு பிரச்சினை சார்ந்த ஒருபக்க பார்வை. சினிமா என்பது கலை. கலையானது நிச்சயம் ஒருபக்க பார்வையை மட்டும் பேசாது. அப்படியாக, அவசர அவசரமாக பேருந்தில் ஏறிச்செல்கிற மனிதர், அவ்விதம் நடந்துகொள்ள என்ன காரணம்? என்பதையும் அறிய முற்படுகிறது. 

Related image

மகொன் ப்ளெய்ரின் (macon blair), I don't feel at like home in this world anymore, 2017ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படம். காமெடி த்ரில்லர் வகையைச் சேர்ந்த கதைக்களத்தைக் கொண்டிருக்கிறது. கதை மிகவும் எளிமையானது. இப்படத்தின் இயக்குனர் திரைக்கதையின் திருப்புமுனை புள்ளிகள் அதன் சம்பவங்கள் என்பதைக் காட்டிலும், பிரதான கதாபாத்திரத்தினை எடுத்துக்கொண்டு, அந்தக் கதாபாத்திரம் சார்ந்த தொடர்புகளின் சிறுசிறு விபரங்களிலும் அதிகக் கவனம் செலுத்தி, அதைத் திரையில் படைக்கிறார். மையக்கதாபாத்திரமாக ரூத் கிம்கே வேடத்தில் நடித்திருப்பவர் மெலனி லின்ஸ்கி(Melanie Lynskey). படம் இப்பெண்ணைச் சுற்றித்தான் இயங்குகிறது. இவர் தனது சுற்றுப்புறச் சூழ்நிலையில் சந்திக்கிற பிரச்சினைகளை அடியொற்றித்தான் கதை நகர்கிறது. இப்படம் சன் டேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. 

உண்மையில், இது மக்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் அலட்சியம் மற்றும் வெளிப்படையான விரோதப்போக்கு பற்றிய ஒரு படம். இதில் ரூத் போன்ற சமூக ஒழுங்கைப் பின்பற்றுகிற மனிதர்கள் எவ்வாறு துன்பப்படுகிறார்கள், பிறர் செயல்களால் எவ்வாறு மனம் வருந்துகின்றனர், ஒவ்வொரு முறையும் இத்தகைய பிரச்சினைகளை அமைதியாக எதிர்கொண்டு பிற்பாடு ஒரு சூழ்நிலையில் அத்தகைய அநீதிகளைத் தட்டிக்கேட்கும் இடத்திற்கு எப்படிச் செல்கின்றனர். அதிக உடல்பலம் அற்ற நிலையில், அமைதியாக ஒதுங்கிப்போகிற, பிரச்சினைகளிலிருந்து விலகிச்செல்கிற இத்தகைய மனிதர்கள் ஒரு கட்டத்தில் திருப்பியடிக்கவும் செய்கின்றனர். ஒரு திரைப்படம் ஓர் கதாபாத்திரத்தின் வளர்ச்சிப் பரிணாமத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது அதன் விதிமுறைகளில் ஒன்றாக இருந்தால், நிச்சயம் இப்படம் அதைச் செய்திருக்கிறது. ஏனெனில், படத்தின் ஆரம்பத்தில் ரூத்தின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் பார்த்தவர்கள் அவள் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவளாகவும், தன்னைச் சூழ்ந்திருக்கிற பிரச்சினைகளைக் கூட பொறுத்துப்போகிறவளாகவுமே காட்சிப்படுத்தியிருக்கின்றனர். ஆனால், அவள் பிரச்சினைகளின் தீவிரத்தைப் பொறுத்து, அதற்கேற்ற எதிர்வினைகளையும் காட்டத்துவங்குகிறார்கள். தொடர்ச்சியான துரதிர்ஷ்டவசமான சம்பவங்களின் உச்சம்தான், இந்த முறிவு நிலைக்கு நகர்த்திச்செல்கிறது: அவள் பணிபுரியும் நர்சிங் ஹோமில் ஒரு பழைய இனவாதியைச் சமாளிக்க வேண்டும். டிராபிக்கில் நிற்கிறபொழுது, எவ்வித அக்கறையுமில்லாமல், சூழ்நிலை பற்றிய பொறுப்பு இல்லாமல், இரட்டைக் குழல் வழியாக நச்சுப்புகைகளை தாராளமாக வெளியிடுகிற வாகனத்தினால் எரிச்சலுறுகிறாள், அவள் பராமரித்து வருகிற வீட்டு முற்றத்தை நாய் ஒன்று மலம் கழிக்கும் இடமாகப் பயன்படுத்தி வருகிறது, அதற்கு நாய் மட்டுமே பொறுப்பு அல்ல, அதை நடைபயிற்சிக்கு உடன் அழைத்து வருகிற அதன் முதலாளியின் அக்கறையற்ற தன்மை என்பதால் கோபமடைகிறாள், ஓய்விற்காக மது அருந்தும் விடுதியில் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்பொழுது, அங்கு வரும் வாடிக்கையாளர் அவள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தைப் பார்த்து அதைக்குறித்து ஆர்வமாகப் பேசுகிறார். நல்லவேளை இப்படியாக ஒரு மனிதரும் இவ்வுலகில் இருக்கிறார் என்று அவள் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் நேரத்தில், அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதை அடுத்தடுத்து எப்படியெல்லாம் செல்லப்போகிறது, என மொத்தக் கதையையும் சொல்லிவிடுகிறார். ஸ்பாய்லர் போல, இது அமைந்துவிடுவதால், அதற்கடுத்து அப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை ரூத் இழக்கிறாள். இப்படியாக, பிறரது உணர்வுகளுக்கு மதிப்புகொடுக்காத சூழ்நிலைகளைத்தான் ரூத் அன்றாடம் சந்தித்து வருகிறாள். இதெல்லாம் சிறு சிறு பிரச்சினைகள் எனலாம். எனவேதான், இதனை ரூத் முடிந்தவரை அமைதியாகவே, தனக்குள் புலுங்கிக்கொண்டு கடந்துபோகிறாள். 

Image result for i don't feel at home in this world anymore

கதை நகர்விற்கு இத்தகைய சிறு பிரச்சினைகள் மட்டும் போதாதல்லவா? ஆம், திரைக்கதை அடுத்த தளத்திற்கு நகர்வதற்கு ஏற்ப, ரூத்தின் வீடு கொள்ளையடிக்கப்படுகிறது. அவளது மடிக்கணினி மற்றும் சில விலையுயர்ந்த பொருட்கள் திருடப்படுகின்றன. எனவே, காவல்துறையில் புகார் தெரிவிக்கிறாள். எப்படியும், காவலர்களால் இதனைக் கண்டுபிடிக்க முடியாது, தன் தொலைந்த பொருட்களைத்தேடித் தர முடியாது என்று நம்பிகையிழக்கும் நேரத்தில், பக்கத்து வீட்டு நண்பரொருவரின் உதவியுடன், தொலைந்த பொருட்களைத் தேடி தன் பயணத்தைத் துவங்குகிறாள். 

ரூத்தின் நண்பராக டோனி என்ற கதாபாத்திரத்தில் எலிஜா வுட் நடித்திருக்கிறார். இவரும் ஒரு சுவாரஸ்யமான ஆர்வக்கோளாறு கதாபாத்திரம்தான். ஆரம்பத்தில் தன் நாய், ரூத்தின் வீட்டு முற்றத்தை மலம் கழிக்கும் இடமாகப் பயன்படுத்தியிருப்பதை அறிந்து, அதைச் சுத்தப்படுத்திக்கொடுத்த பெருந்தன்மை கொண்டவர். ரூத்தின் வீடு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் கோபத்தை வெளிப்படுத்துகிறார். இது அண்டை வீட்டார் பலருள் இல்லாத குணாதிசயமாக இருக்கிறது. இதனால், ரூத் மற்றும் டோனி இருவரும் நண்பர்களாகின்றனர். டோனி ஹீரோயிசத்தன்மை மீது காதல் கொண்ட படபடப்பான மனிதனாக வருகிறார். 

எனவே, இங்கு தனக்குத் தொந்தரவு தருபவர்கள் என்று அவர்களை நாம் எதிர்நோக்காமல் இருக்கையில், அந்த எதிர் மனிதர்களின் மனநிலையை நம்மால் புரிந்துகொள்ளாமல் போய்விடுகிற சூழல் உள்ளது. கதையில் இதை உணர்த்தும் விதமாக மற்றொரு சம்பவமும் நடக்கிறது. அதாவது, தன் மடிக்கணினி எங்கு இருக்கிறது என்பதை, அது தரும் சிக்னல் வாயிலாக அறிந்துகொள்கிற ரூத், காவலர்களை உதவிக்கு அழைக்கிறார். ஆனால், இரவென்பதால் அவர்களிடமிருந்து தகுந்த ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தனியாகச் சென்று திருடர்களை எதிர்கொள்ள முடியுமா? என்ற குழப்பமும் இருக்கிறது. எனவே, ரூத், டோனியின் உதவியோடு அங்கு செல்கிறாள். நண்பர்கள் குழாம் சேர்ந்து அங்கு பார்ட்டி நடந்துகொண்டிருக்கிறது. இதை முதலில் பார்க்கும் நமக்கு, பார்ட்டி கொண்டாடுகிற நபர்கள் மோசமானவர்களாகவும், அவர்களே ரூத்தின் மடிக்கணினியைத் திருடியிருக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. டோனியும் அப்படியாகத்தான் நினைத்து, ஹீரோயிச மனநிலையில் அங்குள்ள நபர் ஒருவரை அடித்துவிடுகிறார். ரூத், மடிக்கணினி என்னுடையது என்று சொல்லி அதை எடுத்துவருகிறார். அப்போதுதான், அவர்கள் அந்தக் கணினியை விலை கொடுத்து வாங்கியதாகவும், அது திருடப்பட்ட பொருள் என்பது தெரியாது எனவும் தன் தவறுகளைக் கூறுகின்றனர். மேலும், தான் எங்கிருந்து அந்தக் கணினியை வாங்கினேன் என்பதற்கான முகவரியையும் தருகின்றனர். தனக்கு தொல்லைகள் வருவது உண்மைதான். ஆனால், அவர்களோடு பேசுகையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும், நாம் பார்வையிலேயே ஒருவரை எப்படித் தவறுதலாக எடைபோடுகிறோம்? ஒரு மனிதரைப் பார்த்த மாத்திரத்தில், அவரது தோற்றம் மற்றும் செய்கைகளை வைத்து, அவர் பற்றிய தவறான சிந்தனைகளை நம் மூளைக்குள் ஏற்றிக்கொண்டுவிடுகிறோம், என்பதைத் தெளிவுபடுத்துகிற காட்சியாக இது அமைகிறது. 

Related image

அடுத்து, ரூத்தின் பயணம் இத்தோடு நின்றுவிடுவதில்லை. கொள்ளையடித்த இடம் தேடிச் செல்கிறாள், அங்கு ஒரு இளைஞனை எப்படித் தன் பகடைக் காயாகப் பயன்படுத்தி, திருட்டுச் செயல்களில் ஈடுபட வைக்கின்றனர் என்பது தெரியவருகிறது. மேலும், கதையின் தனித்தன்மையாகக் கருதுவது, அந்த இளைஞனின் பெற்றோருடனும் ரூத் பேசுகிறாள். டோனியும் தானும் காவலர்கள் என்பதுபோல, அந்த இளைஞனைப் பற்றி பெற்றோரிடம் விசாரிக்கின்றனர். அவனுக்கான சூழ்நிலை என்பது இங்கு விவரிக்கப்படுகிறது. அதே இடத்திற்கு, ஒரு பணயக் கைதியாக ரூத் அழைத்துவரப் படுகிறாள். திரைக்கதையானது இதுவரையில் நகர்ந்துகொண்டிருந்த பாதையிலிருந்து மாறி வன்முறைகள் வெடிக்கின்றன. அந்த இளைஞனின் பெற்றோர்கள் ரூத்தின் கண் முன்னாலேயே கொல்லப்படுகின்றனர். டோனியும் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகிறான். தன்னை இத்தகைய சூழ்நிலைக்கு ஆளாக்கியவனை தனியொருத்தியாக அடர்ந்த வனாந்திரத்திற்குள் ரூத் எதிர்கொள்கிறாள். இதுவே படத்தின் க்ளைமேக்ஸாக அமைகிறது. 

An Oregon Made Film Wins Sundance Film Festival U.S. Grand Jury Prize

சுயாதீனத் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிற இப்படம், மகொன் ப்ளெய்ரின் முதல் முயற்சி. எந்த இடத்திலும் குறைந்த பட்ஜெட் செலவில் உருவாக்கப்பட்ட படம் என்ற தோற்றத்தைக் கொடுக்காத வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் மகொன் ப்ளெய்ர் ஏற்கனவே படஙளில் நடித்துக்கொண்டிருப்பவர், அடுத்து பல திரைக்கதைகளை வெற்றிகரமாக உருவாக்கிக் கொடுத்திருக்கிற அனுபவம்தான், இந்தப் படத்திலும் உதவியிருக்கிறது. சன் டேன்ஸ் திரைப்பட விழாவின் ஜூரி விருதினை இப்படம் பெற்றிருப்பது, இதற்குக் கிடைத்த நியாயமான அங்கீகாரமாகவே கருதமுடியும். 
கட்டுரை உதவி: rogerebert