JOKER – மறுதலிப்பின் வலி

மனிதன் சமூக பிராணி. சக மனிதர்களின் அங்கீகாரமே, சமூக அங்கீகாரம். ஒவ்வொரு மனிதனும் தனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறான். உளவியல் ரீதியாக அவனது ஆளுமையை கட்டமைப்பதில் அதுவே பெரும் பங்கு வகிக்கிறது. தனக்கான அடையாளத்தை ஒரு தனி மனிதன் சக மனிதர்களாலான இச்சமூகத்தின் அங்கிகாரத்தைக் கொண்டே உருவாக்கிக் கொள்கிறான். மிகச் சில விதிவிலக்குகள் தவிர்த்து மெரும்பான்மையானோர் மேற்சொன்ன மாதிரிதான் இருக்கின்றனர் என்பதே எதார்த்தம். 


பொதுவாகவே எனக்கு டிசி, மார்வெல் வகையறா சினிமாக்கள் ஒத்து வராது. தனிப்பட்ட விதத்தில்,பொதுவாகவே அவற்றின் ஓர் ஊடிழையாக இருக்கும், அமெரிக்க மேன்மைவாத்த்தின் மீதான ஒவ்வாமை தான் அதற்கான காரணமாக இருக்கும் என தோன்றுகிறது. இருப்பினும் வெளியானது முதலே ஜோக்கர் குறித்த மிக நேர்மறையான பார்வைகளை, ஒத்த ரசனையுள்ள நட்பு வட்டத்தில் பரவலாக கேள்வியுற்ற போது பார்க்க வேண்டுமென்ற ஆவல் இயல்பாகவே மேலோங்கியது. நல்வாய்ப்பாக, நான் இருக்கும் ஊரிலேயே இருக்கிற ஒரே நல்ல திரையரங்கில், ஆங்கிலத்திலேயே படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பேட்மேன் கதாபாத்திரத்தின் வில்லன் ஜோக்கர். ஆர்த்தர் ஏன் ஜோக்கர் ஆனான் என்கிற முன்கதையை ஒரு உளவியல் திரில்லராக எடுத்துக் காட்டுவதே இப்படம். அன்பென்பது என்னவென்றே தனது பால்யகாலம் முதல் தெரியவே தெரியாத, வளர்ந்தும் தான் இருக்கும் சமூகத்தில் ஒரு சாமானியனுக்குக் கிடைக்கக் கூடிய மிக குறைந்தபட்ச மதிப்போ, அங்கீகாரமோ கிடைக்காத ஒருவனது உளவியல் எப்படிப்பட்டதாக இருக்கும்? அதிலும் இத்தனை அழுத்தங்களையும் தன் மீது திணிக்கும் சமூகத்தில் அவன் கனவு காண்கிற தனக்கான இடம் யாவரையும் சிரிக்க வைக்கிற ஸ்டாண்ட் அப் காமெடியன். போதாதென மிக சீரியசான சூழல்களில் சற்றும் பொருந்தாமல் அடக்க முடியாமல் சிரித்து வைக்கும் குறை வேறு கொண்டவன். இந்த உளவியல் முரண்கள் தான் இவனது கதையை நோக்கிய பார்வையாளனின் கவனத்தை ஈர்ப்பதில் முதன்மையானது. 


முதலில் ஜோக்கர் பாத்திரத்தின் அவலநிலை குறித்த அறிமுகம் செய்கிற காட்சிச் சரடுகள் வழமையானவை. மிக எளிதாக யூகிக்கக்கூடியதும், மிக அதிகமாக சினிமாக்களின் பார்த்து பழகியவையுமே. அவஎ ஜோக்கரின் அவல நிலையை பார்வையாளனுக்கு எடுத்துக் காட்டி அவன் மீதான இரக்கத்தையும், பரிதாபத்தையும் கோருவதற்காகவே திரைக்கதையில் எழுத்தப்பட்டுள்ளன என்பதன்றி சொல்லிட சிறப்பாக ஏதுமில்லை. ஆனால் தனது அசாத்தியமான நடிப்பால் ஒரு புதிய தளத்திற்கு இப்பாத்திரத்தை நகர்த்தி இருப்பது சந்தேகமின்றி Joaquin Phoenix தான். இப்படத்தின் வாயிலாக ’தி மாஸ்டர்’ திரைப்படத்தில் தனது பங்களிப்பையும் விஞ்சி, தனது நடிப்புலக பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறார்.


பொதுவாகவே உளவியல் ரீதியில் நுட்பமான ஒரு கதாபாத்திரத்தினை, அதன் நம்பகத்தன்மையை, பார்வையாளனை திருப்தி செய்யும் வகையில் எடுத்துச் செல்வது பெரிய கலை சவால். மேலும் பலரது நடிப்பின் வழியே திரையில் உலவிய, ரசிகனுக்கு மிக நன்கு அறிமுகமான, ஒரு பாத்திரத்தினை ஏற்று அதில் தனக்கான தனியடையாளத்தை பதிப்பதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. மிக குறிப்பாக காலஞ்சென்ற ஹீத் லெஜ்ஜர் உருவாக்கிக் காட்டி ரசிக மனதில் மிக ஆழமாக பதிந்து போன ஜோக்கருக்கு மேல் தன்னை நிறுவிக் கொள்வது நிச்சயம் எளிதானதல்ல. 

சக மனிதர்கள் தங்களது வன்மத்தையும், கொடூரங்களையும் அரங்கேற்றிக் கொள்ள தேர்ந்து கொள்ளும் ஒரு மலினமான மனித பொம்மையென வாழும் வாழ்க்கை ஜோக்கருடையது. எல்லோராலும் பரிகசிக்கப்படுகிற, உடனிருப்போரின் குறைந்தபட்ச அக்கறை கூட கிடைக்கப் பெறாத அவன், தான் வாழும் இந்த வாழ்க்கை முழுவதும் ஒருவரது கவனத்தை கூட ஈர்க்க வல்லதாக இல்லை என்பதையும், அதனாலேயே ஒரு வேளை தனது மரணமேனும் அவர்களது கவனத்தை ஈர்க்குமா என்ற சஞ்சலத்திலும் தவிப்பவன். எதிர்த்து நிற்கும் திராணியற்ற ஒரு சாமானியனை, ஒரு அப்பாவியை மனிதர்கள் தங்களது மனவக்கிரங்களை கொட்டுகிற, அதிகாரத்தை நிலைநிறுத்துகிற ஒரு களமாகக் காண்பது எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது. ஜோக்கர் அனுபவிக்கும் இடர்கள் நமக்கு அவனை பொம்மையெனக் கருதி தங்களது குரூரங்களை அரங்கேற்றும் மனிதர்களின் உளவியலையும் சேர்த்தே எடுத்துக் காட்டுகிறது. பல நேரங்களின் நாம் ஜோக்கரின் இடத்திலும், அதே வேளையில் கணிசமான சந்தர்ப்பங்களில் நாம் ஜோக்கரை பரிகசித்து கீழ்தரமாக நடத்திய வக்கிரர்களின் இடத்திலும் கூட இருந்திருப்பதை உணர்கிறோம். (திரையில் ஓடும் காட்சிகள் நம்முள் அப்படியான நினைவோட்டங்களை தான் கிளர்த்துகிறது. அதுவே இப்படத்திற்கும் பார்வையாளனுக்குமான உணர்வுப்பூர்வமான தொடர்பாக இருக்கிறது.) அந்த தருணம் நம்மைப் பயன்படுத்திக் கொண்டவர்களை எண்ணிப் பொருமுகின்ற மனதின் ஓர் ஓரத்தில் அதே போல நாம் வாழ்க்கையின் ஓட்டத்தில் பயன்படுத்திக் கொண்டவர்களின் முகங்களும் வந்து போகின்றன. இந்த உளவியற்பூர்வமான இணைப்பு தான் பார்வையாளனை தொந்தரவு செய்கிறது. 


இருப்பினும் சராசரி மனித மனம் நம்மை சுரண்டலுக்கு ஆளான ஜோக்கராகவே பாவிக்கும். கோதம் எனும் கற்பனை நகரம் டிசி காமிக்ஸின் பேட்மேன் கதைகளில் நாற்பதுகளிலேயே வந்து விட்டது (சரியாகச் சொன்னால் 1940 இல் பேட்மேன் கதைவரிசையின் நான்காவது கதையிலே தான் அறிமுகமானதாம் கோதம்). அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் அமைந்துள்ளதாக புனையபட்ட இக்கற்பனை நகரமே பேட்மேனின் வாழ்நகரம். குற்றங்களும், தீமைகளும் மலிந்து மிகும் போதெல்லாம் நகரத்தை மீட்டெடுக்க பேட்மேன் வருவதாக கதைகள் உருவாக்கப்படுகின்றன. ஒரு வகையில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் மனிதர்கள் முன் எப்போதுமில்லாத அளவிற்கு மன உளைச்சலில் இருந்தார்கள். நிச்சயமின்மையும், அவநம்பிக்கையுமே எங்கு காணினும் நிரம்பிக் கிடந்தது. போரின் கரிய மேகங்கள் நம்பிக்கைகளை விழுங்கியபடியே இருந்தது. இத்தகைய பின்னணியில் தான் நாம் பேட்மேன் உள்பட எல்லா காமிக்ஸ் நாயகர்களை வரவினை பொருத்திப் பார்க்க முடியும். மக்கள் உளவியலில் அமெரிக்க மேன்மைவாதத்தினை வலுவூட்டவும் அவை பயன்படுத்திக் கொள்ளப்பட்டன என்பதும் கவனத்திற்கு உரியது. 


படத்தின் துவக்கக் காட்சியிலேயே பதின்மர்களின் குரூர குறும்பிற்கு இரையாகும் ஆர்த்தரை நாம் காண்கிறோம். அதனை கேள்வியுற்ற அவனது சக கோமாளியன ரேண்டல் அவனது பாதுக்காப்பிற்கு இருக்கட்டுமென ஒரு துப்பாக்கியை தருகிறான். தயக்கத்துடன் அதனை பெற்றுக் கொள்ளும் ஆர்த்தர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்விக்க செல்கிறான். மிக தற்செயலாக மருத்துவமனையில் அவர்கள் முன்னிலையில் தனது உடைக்குள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி நழுவி விழ அது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதுவே இருந்த ஒரே வேலையையும் அவனிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறது.

தனது பிரச்சனைகளுக்கு இலவசமாக மனநல மருத்துவ ஆலோசனைகள் பெற்று வருகிற ஆர்த்தர், ஒரு கட்டத்தில் மானியங்கள் நிறுத்தப்பட்டதால் அதனையும் இழக்கிறான். வாழ்க்கையின் எல்லா திருப்பங்களிலும் வலியும், அடியுமே எஞ்சி நிற்க அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதலும் உறவும் அவனது தாய் மட்டுமே. பல நேரங்களில் சில விசயங்கள் தெரிந்து கொள்ளப்படாமலே இருப்பது எத்துணை நல்லது என தோன்றுகிறது, அவன் தனது தாயின் பழைய கதையைத் தெரிந்து கொள்கையில்.



துரத்த துரத்த ஓடிய ஆர்த்தர், ஒரு ரயிலடியில் இரவு நேர புகைவண்டிகுள் நிமிர்கிறான். தான் செய்தது கொலைகள் எனினும் அவனக்கு ஊடகங்கள் அக்கொலைகள் குறித்து கொள்கிற கவனம் ஏதோ தன் மீதான கவனமென பாவித்து மனதின் ஓரத்தில் புளகாங்கிதமடைகிறான். மேலும் அவனுக்கு அவனது அடுக்கத்திலேயே ஒரு பெண்ணும் தோழியென கிடைக்க, வரண்ட தனது வாழ்க்கையில் ஒரு துளி ஈரத்தை காண்பதாய் தோன்றுகிறது அவனுக்கு. 

அதுவும் பொய்க்கும் தருணங்களில் நாம் அவனது பிளவுபட்ட ஆளுமையை காண முடிகிறது. சமூகத்தின் இரக்கமற்ற வன்மம் தோய்ந்த அழுத்தம் மற்றும் வன்முறைக்கு ஆளாகும் ஆர்த்தர், ஒரு கட்டத்தில் வன்முறை செய்பவனாக மாற்றுவதை மாறத் துவங்கும் கதையின் போக்கு அழகாய் எடுத்துக் காட்டுகிறது. தான் நேசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது காணொளி ஒன்று காட்டப்படுகிறது. பொதுவெளியில் தன்னை ஒரு கேலிப்பொருளாக மட்டுமே மாற்றுகிறது அக்காணொளி எனப் புரிந்து கொள்ளும் கணத்தில் அதன் மகிழ்ச்சியும் நொடிகளிலேயே வடிந்து போகின்றது. உள்ளுக்குள் உடைகிறான் ஆர்த்தர். பின்னர், கெட்டதிலும் நல்லதென- தனது காணொளியை முன்வைத்து எள்ளப்பட்டாலும்- பல பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பு அவனைத் தேடி வருகிறது. ஆனால் அரிதினும் அரிதான அவ்வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறான் என்பதே அவனது உளவியலை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. 


அந்நிகழ்ச்சியில் அவன் நேரடி ஒளிபரப்பில் பேசுகிற விசயங்கள் ஊடகங்கள் தனி மனிதர்களை தங்களது நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும், பிரபல்யத்திற்காகவும் எப்படி சுரண்டுகின்றன என்பதை மையப்படுத்தியது. கதையில் முற்பகுதியில் ஒரு காட்சியில் தங்களை மறந்து தாயுடன் ஆர்த்தர் மெய்மறந்து அதெ நிகழ்ச்சியை காணும் போது Requiem for a Dream திரைப்படத்தின் காட்சி நினைவிற்கு வந்தது. மேற்சொன்ன காரணமே இவ்விரண்டு காட்சிகளுக்குள்ள பொது அம்சம் என்பதாலேயே அது நினைவில் எழுகிறது என்பதையும் சொல்ல வேண்டும். 


திரைக்கதையில் இதே தருணத்தில் கோதம் நகரில் பெருகி வருகின்ற குற்றங்களைக் கண்டும், வர்க்க இடைவெளிகள் பெரிதானதைக் கண்டும் சகிக்காத மக்கள் கூட்டம் ஜோக்கர் ஒப்பனையில் தங்களை மறைத்துக் கொண்டு அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சியை துவங்குகிறது. படத்தின் நிறைவுக் காட்சியில் அவனை தங்களது எதிர்ப்பின் வீர அடையாளமாக கொண்டாடி ஆர்ப்பரிக்கையில், ஒரு வாகனத்தின் மீது நின்று ஆடுகிற ஆர்த்தர் முழுமையான ஜோக்கராக தான் மாறி விட்டதை நமக்கு உணர்த்துகிறான். எதிர்க்கத் திராணியற்ற எளியவரை நசுக்கி தனது அதிகாரத்தை நிறுவிக் கொள்வது அடிப்படை மிருக குணம். மனிதனெனும் சமூக விலங்கிற்கு அது சிந்திக்கும் ஆற்றலோடு சேர்ந்து கொள்கையில், ஏனைய உயிர்களைக் காட்டிலும் இன்னும் மூர்க்கமாகவே வெளிப்படுகிறது. அடி சகித்த எளியன் பயப்படுகிற வரையில் மட்டுமே மற்றவனின் அகங்காரத்திற்கு தீனி கிடைக்கும். ஆனால் ஆர்த்தர்கள் ஜோக்கர்களாகிற பொழுது, இவ்வளவு நாட்கள் அவர்கள் நேரம் போக்கக் கிடைத்த கோமாளிகளாக இருக்கையில் பூசிய உதட்டுச் சாயத்தை கன்னங்கள் வரை இழுவியபடி திரும்பிச் சிரிக்கையில் அந்தப் புன்னகை ஒரு கோமாளியுனுடைதாக இருப்பதில்லை.